நேரமில்லை போலும்! 

-கருவாபுரிச் சிறுவன்

செண்பகவல்லி அணை திட்டத்தை ஆதரித்து  ‘பொருள்புதிது’ தளம் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், இத்திட்டம் குறித்த புரிதல் தமிழக ஆட்சியாளர்களுக்கோ, அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய ஆர்வலர்களுக்கோ இல்லை போலும் என்று வருந்துகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. 

    (திருக்குறள்-737) 

வானத்தில் இருந்து பொழிக்கின்ற மழைநீர், பூமியில் இருந்து பெறக்கூடிய ஊற்று நீர் என இருநீர் வளமும், அதனை தவழச் செய்யும் வளமை வாய்ந்த மலைகளும், அதனிடையே ஓடும் ஆறுகளும், ஒரு நாட்டிற்குரிய வலிமையான பாதுகாப்பான உறுப்புகளாகும். இதனை ஆட்சியாளர்களிடம் எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க கற்றவர்களுக்கு நேரமில்லை போலும். 

எங்கள் பகுதியை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களுக்கு  குழந்தைப் பேறு இல்லாத காரணத்தால் ராமேஸ்வரம் சென்று வழிபாடு செய்தார்கள். அதன்பிறகு அவர்களுக்கு  இரட்டைக் குழந்தை பிறந்தது. அதன் ஞாபகர்த்தமாக  அவர்களுடைய பெயரில் ராம என்கிற திருநாமத்தையும் இணைத்து நாமகரணம் சூட்டினார்கள். 

மேலும், வரலாற்று அறிஞர்களான சதாசிவ பண்டாரத்தார், கே.வி. ராமன் மற்றும் பாண்டியர் வரலாற்றுப் பேராசிரியர்கள், அக்குழந்தைகள் நினைவாக ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரட்டைக் குளம் வெட்டி வைத்து நிலையான தர்மத்தை போற்றினர் என உறுதியுடன் சான்றளிக்கிறார்கள். 

பாரத தேசம் சுதந்திரம் வாங்கிய பிறகு தமிழ்நாட்டில் 36,370 குளங்களும், 6,95,898 கிணறுகளும் இருந்தன. அதே நேரத்தில் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் 2,417 குளங்களும், 63,423 கிணறுகளும் இருந்ததாக அரசு ஆவணம் தெரிவிக்கிறது. 

ஆனால்,  தற்போது குளங்கள், கிணறுகள் எத்தனை இருக்கின்றன என்பதை படிப்பவர்களின்  தங்களின் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.  

இரட்டைக் குளம் வெட்டக் காரணமாக இருந்த எங்கள் மன்னர் பிரானில் ஒருவராகிய அதிவீர ராமபாண்டியர், 

பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்
மெய் போலும்மே மெய் போலும்மே!
மெய்யுடை ஒருவன் சொல் மாட்டாமையால்
பொய் போலும்மே பொய் போலும்மே!

-என்ற  ‘நறுந்தொகை’ என்னும் வெற்றி வேட்கை வரிகளில் எழுதி இருக்கிறார். அந்தப் பாடலுக்குச் சான்றாக,  தென்காசி மாவட்டம், சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்த செண்பகவல்லி அணைக்கால்வாய் சீரமைப்பு விஷயத்தில்  செயல்படுகிறது,    கேரள அரசு. 

தமிழகத்தின் பக்கம் அதாவது நமது பக்கம் உண்மை இருந்தும், சரியான நேரத்தில் எடுத்துச் சொல்லி புரிய வைக்காததால்,  கேரளாவின் பொய்மை நீதிமன்றம் வரை சென்று  அரங்கேறியுள்ளது.

முன்னும் பின்னும் 

* கர்நாடகம் கபினி அணையை 1959இல் கட்டியது. அன்றைய தமிழக முதலமைச்சர் காமராஜர் அதைத் தடுக்கவில்லை.

* ஹேரங்கி அணையை கர்நாடகம் 1964இல் கட்டியது. அன்றைய தமிழக  முதலமைச்சர் பக்தவத்சலம் அதைத் தடுக்கவில்லை. அவருடைய ஆட்சிக்காலத்திலேயே, 1965இல் சுவர்ணவதி அணையை  கர்நாடகம் கட்டியது. அதையும் தமிழக அரசு தடுக்கவில்லை.

* 6.3.1967 இல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த தி.மு.க. காலத்தில் 1968 இல் ஹேமாவதி அணையை கர்நாடகம் கட்டியது. ‘எத்தனை அணைகளை வேண்டுமானாலும் கர்நாடகம் கட்டிக் கொள்ளட்டும்! ஆனால் தமிழகத்திற்குத் தரவேண்டிய அளவு நீரை தந்தே ஆக வேண்டும்’ என்றார் அன்றைய முதலமைச்சர் .

 * 270 கோடி கனஅடி நீரைப் பங்கிட்டுத்தர, கர்நாடக அரசு 1974 இல் முன்வந்த போது, அப்போதைய தி.மு.க. அரசு அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடத் தவறியது.அதேபோல, மேலே கண்ட ஒப்பந்தத்தில் 1979இல் அ.தி.மு.க. ஆட்சியின் போது கையொப்பமிட எம்.ஜி.ஆர். தவறி விட்டார்.

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இப்படி போட்டியிட்டுக் கொண்டு தமிழக காவிரி பாசனப் பகுதியை பாலைவனமாக ஆக்கியது தான் நாம் கண்ட பயன். 

* இப்படி தொடர்ந்து காங்கிரஸ், தி.மு.க. ஆட்சிகளில் காவிரி நீர் உரிமையைக் கோட்டை விட்டுவிட்டு, அதாவது தும்பை விட்டுவிட்டு ஓடுகிற மாட்டின் வாலைப் பிடித்த  கதை போல, தி.மு.க. ஆட்சியும், அ.தி.மு.க ஆட்சியும் எந்தக் கட்டத்திலும் ஒன்றுபட்டு நின்று இந்திரா, ராஜீவ், பி.வி. நரசிம்ம ராவ் காலத்திலோ மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து தட்டிக் கேட்கவில்லை.

* 1989-1991 இல் அன்றைய பிரதமர்  வி.பி. சிங் அவர்களுக்கு தி.மு.க. அழுத்தம் கொடுத்து   ‘காவிரி நடுவர் மன்றம்’ அமைத்தது தான் உருப்படியான பணி. ஆனால், அதன் இறுதித் தீர்ப்பைக்கூட இந்திய அரசுப்பதிவு இதழில் (Government of India Gazettee) வெளியிட, 2011 வரை முயற்சிக்கவில்லை.

தற்போது அல்ல, பல காலமாகவே, அதாவது கர்நாடகம் 1962இல் இருந்தே மேகதாது அணை கட்டி மின்சார உற்பத்தி செய்வதே நோக்கம் என அறிவித்தது. ஆனால், அன்றைய தமிழக அரசின் கடும் எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசு அத்திட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால், இப்போது மேகதாது அணை கட்டுவதின் நோக்கம் பெங்களூர் நகர மக்களுக்குக் குடிநீர் வழங்குதல் என கர்நாடகம் கூறுகிறது. 

மாநில மக்களுக்குக் குடிநீர் என சொன்னால், மத்தியஅரசோ உச்சநீதிமன்றமோ அதைத் தடுக்காது என்ற சூழ்ச்சித் திட்டத்துடன் இவ்வாறு கர்நாடகம் கூறுகிறது.

“காவிரியில் ஆண்டுதோறும் 200 டி.எம்.சி. நீருக்குமேல் வீணாகக் கடலில் கலக்கிறது. அதைத் தடுக்கும் வகையில் தமிழகம் எதுவும் செய்யவில்லை. எனவே, அந்த நீர் வீணாவதைத் தடுக்கவே மேகதாது அணைத் திட்டம் கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளோம்” என கர்நாடகம் உச்சநீதிமன்றத்தில் வாதாடியது. 

அதன் விளைவாக உச்ச நீதிமன்றம் தமிழகத்தின் நலன்களுக்கு முற்றிலும் எதிராக “பொது மேற்பார்வைக் குழுவின் கட்டுப்பாட்டிலும், தமிழகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் கர்நாடக அரசு புதிய அணை கட்டிக்கொள்ளலாம், அணைப் பராமரிப்பு, நீர்த் திறப்பு உள்ளிட்டவற்றை பொது மேற்பார்வைக் குழுவே செய்யலாம்” என உச்சநீதிமன்றம் 17-8-2017 அன்று கருத்துத் தெரிவித்தது.

மேலும், 1961இல் தமிழக எல்லைக்குள் ஒகேனக்கல் அருகே தமிழகம் கட்ட இருந்த அணைகளை கடுமையாக எதிர்த்து, அவற்றுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்ததால்  அந்த அணைகளை தமிழகம் கட்டாமல் நிறுத்தி வைத்தது. நீதிமன்றங்களின் உத்தரவுகளுக்கும், மத்திய அரசின் ஆணைகளுக்கும் மதிப்பளித்து நடப்பது தமிழக அரசு என்பதை சொல்ல தவறுவது  ஏனோ? 

இக்கருத்தை நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தெரிவித்து   காவிரிப் பிரச்சினையின் கடந்த கால வரலாற்றினையும், தமிழக ஆட்சியாளர்களின் பெருந்தன்மைகளையும் சரிவர எடுத்துச் சொல்லி நிலைநிறுத்த தமிழகம் சார்பாக வாதாடியவர்கள் தவறி விட்டார்கள் என்பதே உண்மை. 

உண்மை நிலவரம் 

நீர்வளம் அதிகமாக உள்ள மாநிலம் கேரளா. இங்குள்ள ஆறுகளிலிருந்து 2,500 டி.எம்.சி.க்கு  அதிகமான நீர்வளம் கிடைக்கிறது. ஆனால், அம்மாநிலத்தில் பாசனம், குடிநீர் போன்றவற்றுக்கு 500 டி.எம்.சி. மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 

அதற்குமேல் பயன்படுத்த அங்கு நிலவளம் இல்லை. எனவே 2,000 டி.எம்.சி.க்கு மேற்பட்ட நீர் கடலில் பாய்ந்து வீணாகிறது.  கேரளாவில் இருந்து  அரபிக்கடலுக்குச் சென்று வீணாகும் நீரில் 10இல் ஒரு பங்கான 200 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்குத் திருப்பிவிடுங்கள் என்றும் கூட தமிழக விவசாயிகள் கேட்கவில்லை. 

தற்போதுள்ள மத்திய, மாநில சட்ட திட்டங்களை மதித்து அதன்படி நடக்க தென்தமிழகத்திற்குச் சொந்தமான செண்பகவல்லிக் கால்வாயை சீரமைத்துக் கொள்ள ஒத்துழைப்பு கொடுங்கள் என்று மட்டுமே  இப்பகுதி விவசாயப்பெருமக்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். 

இதனால் தென் தமிழகத்தின் வறட்சிப் பகுதிகளான தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் வாழும் மக்கள் வளம் பெறுவார்கள்.  மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினை தீரும்.  

சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்ததும், அதன்பிறகும்  இருந்த  நடைமுறை  என்பதை ஏன் நீதிமன்றத்தின் கவனத்திற்கோ, மத்திய அரசின் கவனத்திற்கோ, காவிரி மேலாண்மைக் குழுவின் கவனத்திற்கோ, நதிநீர்த் தீர்ப்பாயத்தின் கவனத்திற்கோ  கொண்டு போகாமல் தமிழக அரசு தவறவிட்டு விட்டது? இதுதான் புரியவில்லை.

வேண்டும் புரிதல்

தமிழகத்தில் அமைந்துள்ள நெய்வேலி நிலச்சுரங்கத்தில் தமிழகத் தொழிலாளர்களால் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் இருபது சதவீதம் கேரளத்திற்கு வழங்கப்படுகிறது. “எங்கள் மண்ணில் கிடைக்கும் நிலக்கரியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் ஐந்தில் ஒரு பங்கினை கேரளத்திற்கு வழங்குவது அநீதியாகும்” என ஒரு போதும்  தமிழர்கள் பேசியதில்லை. 

நெய்வேலி மின்சாரத்தை தமிழகம் நிறுத்தினால் கேரளாவில் இயங்கும் தொழிற்சாலைகள் இயங்காது. ஆனால்,  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனக் கருதும் மனிதநேயம் மிக்க நிலைப்பாட்டில் தமிழக மக்கள் இருப்பதால் தான் இன்று வரை மனதால் கூட அத்தீச்செயலை சிந்தித்ததில்லை. இது கேரள அரசிற்கு தெரியவில்லை போலும். 

நிறைவாக, 

செண்பகவல்லி அணைக் கண்மதகு கால்வாய் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திற்கு முன்பிருந்தே சிவகிரி ஜமீன்தார் மற்றும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பெருந்தன்மையால் உருவாக்கப்பட்டதாகும்.  ஆனால், கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாக ஒரு மாயத் தோற்றத்தை உண்டு பண்ணி வைத்துள்ளார்கள், இதுவரை தமிழகம் கேரளாவை ஆண்ட ஆட்சியாளர்கள். 

இங்கு புதிய கால்வாயைக் கட்டுமாறு யாரும் சொல்லவில்லை. ஏற்கனவே, உடைந்த கால்வாயை சீரமைப்புச் செய்ய  தார்மிக அனுமதியை மட்டும் வழங்க வேண்டும் என்தே, தமிழக அரசிடம் பல ஆண்டுகளாக  இப்பகுதியில் உள்ள விவசாயிகள் வைக்கும் வேண்டுகோள்.

இந்தக் கால்வாயையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள கேரளா திட்டமிட்டு, தொடர்ந்து சூழ்ச்சி செய்து வருகிறது.  கேரளத்தை யார் ஆண்டாலும், கம்யூனிஸ்டு கட்சியோ, காங்கிரஸோ யார் ஆண்டாலும், செண்பகவல்லி அணை விஷயத்தில் தமிழகத்துக்கு தீமையே செய்து வருகின்றன! எனவே, பெருந்தன்மை இல்லாத கேரள அரசின் திட்டங்களுக்கு மத்தியஅரசும், மத்திய நீர் மேலாண்மை ஆணையமும் இரையாகி விடக்  கூடாது. தேசிய ஒருமைப்பாட்டிற்கு   உலை வைக்கும் உன்மத்தர்களின் செயல்பாடுகளை  இரு மாநில ஆட்சியாளர்களுக்கும் புரிய வைப்பது சமூகச் செயற்பாட்டாளர்களின் முக்கிய கடமையும் பொறுப்புமாகும்.

செண்பகவல்லி அணைக் கால்வாய் விஷயத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்களும் பேதமின்றியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தலைநகர் சென்று குடியரசுத்தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய நீர்வளத் துறை அமைச்சர், பத்திரிகையாளர்கள் ஆகியோரைச் சந்தித்து,  இதிலுள்ள மெய்யையும் பொய்யையும் ரத்தினச் சுருக்கமாக அவரவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துச் சொல்லி, உடனடியாக அணைக்கால்வாயை சீர்திருத்தப் பணி நடைபெற  ஒப்புதல் பெற வேண்டும் என்பதே இப்பகுதிவாழ் மக்களின் நீண்ட கால கோரிக்கை.

இந்த நிலைமைக்குக் காரணம் ஒருவருக்கொருவர்   ஒற்றுமை இல்லாதது தான் என்பதை உணர்ந்து செண்பகவல்லி கால்வாய் சீரமைப்புப் பணியில்  செயல்பட மக்களும், சமூக  ஆர்வலர்களும்  முன் வர வேண்டும்.

வாழ்க பாரதம்! வாழ்க மணித்திருநாடு! 

ஜெய்ஹிந்த்!

$$$

Leave a comment