அமெரிக்க தமிழ் மாநாட்டில் அண்ணாமலை: ஒரு பார்வை

-ஆதிசைவன் இரா.இராம்குமார்

’நாம் தலைவர்கள்’ அமைப்பின் தலைவர் திரு. அண்ணாமலை அண்மையில் அமெரிக்காவின் தமிழ்ச் சங்க மாநாட்டில் பேசியது விமர்சனத்துக்குள்ளானது. அதுகுறித்த நமது பார்வையை திரு. ஆதிசைவன் இரா.இராம்குமார் இங்கே எழுதுகிறார்…

சரியாக ஒரு மாதம் முன்பு திரு. அண்ணாமலை ஐ.பி.எஸ். தான் சார்ந்திருந்த பாஜக வில் இருந்து விலகுவது என முடிவு செய்து, தில்லியில் உள்ள முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து கண்ணியத்தோடு விடைபெறுகிறேன் என்று கூறி  ‘We the Leaders’ அமைப்பின் மூலம் இனி எனது அரசியல் பாதை சுயமாகத் தொடரும் என்று வலைதளம் வாயிலாக தனது நிலைப்பாட்டை மக்களிடம் தெரிவித்தார்.  “மாறுவோம் மாற்றுவோம்” என்ற முழக்கத்துடன் அவர் ஆரம்பித்த  ‘We the Leaders’ இயக்கத்தில் தற்போது வரை 19 லட்சம் பேர் உறுப்பினர்களாகியுள்ளதாக தகவல்.

“விதை இல்லாமல் விதைச்சல் இருக்கக் கூடாது” என்பதை அறிந்த அண்ணாமலை அக்கணக்கு 50 லட்சத்தைத் தொடும் போது தான் தனது இயக்கம் அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்றும், அதுவரை அது மக்கள் சேவை இயக்கமாகவும் அரசியல் பயிற்சிப் பட்டறையாகவும் இயங்கும் எனவும் அறிவித்திருந்தார். மேலும் தனது அரசியல் நிலைப்பாடானது ஜாதி, மதம் கடந்து அனைவுருக்குமானதாக இருக்கும் என்றும், தேசியக் கட்சிகளுக்கு இங்குள்ள மக்களின் மொழியினைப் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் கூறியிருந்தார்.

அவருடைய வெளியேற்றம் தமிழக அரசியலை திரும்பிப் பார்க்க வைத்தது என்பது உண்மை. குறிப்பாக தமிழக பாஜகவில் பெரும் சலசலப்பும் குழப்பமும் நிலவியது. அண்ணாமலைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் குரல் உயர்த்தினர்.  இன்னும் சிலர் பாஜகவில் இருந்து வெளியேறி அண்ணாமலைக்கு ஆதரவுக் கரம் நீட்டினர். இதன் காரணமாக அண்ணாமலையின் வருங்கால அரசியல் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று பலர் அவரவர் கருத்துக்களைக் கூறிய வண்ணம் இருக்கின்றனர்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அண்ணாமலை இவ்வளவு நாள்  பாஜகவில்  ‘துரந்தர்’ பட உளவாளி ஹம்சா அலி மசாரி கேரக்டராக இருந்தாரோ என்று தமிழக பாஜகவினரும், மத்திய பாஜக அனுப்பி வைத்த ஹம்சா அலி மசாரியாக அண்ணாமலை இருப்பாரோ என்று மாற்றுக் கட்சியினரும் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் ஒரு புதிய திருப்பம், வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தால் அமைந்தது. வட அமெரிக்காவில் இயங்கும் FeTNA என்ற அமைப்பு வருடந்தோறும் தமிழ் மாநாடு ஒன்றை நடத்தி வருகிறது. அம்மாநாட்டில் பேச அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இச்செய்தியை அறிந்த சில பத்திரிகைகள்  (குறிப்பாக தினமலர்) மற்றும் சமூக ஊடகங்கள்  “ஹிந்துத்துவ எதிர்ப்பு நிலைப்பாட்டை அண்ணாமலை கையில் எடுக்கிறாரா?”  என்று சந்தேகக் கேள்விகளை எழுப்பின. அதற்குக் காரணம், FeTNA அமைப்பின் கடந்த கால வரலாறுகள் மற்றும் நிகழ்வுகள். திராவிட, தமிழ் தேசிய, கம்யூனிச சிந்தனை கொண்டவர்களின் பிரிவினைவாத மேடையாகவே அது இருந்து வந்தது. இதன் காரணமாக மே 3ஆம் தேதி மாலை வட அமெரிக்க தமிழ் மாநாட்டில் அண்ணாமலையின் பேச்சு எப்படி இருக்கும் என்பது அனைவராலும் உற்றுநோக்கப்பட்ட ஒன்றாக மாறியது.

இருபது நிமிடம் பேசிய அவ்வுரையில் அவர் பல விஷயங்களை முன்னெடுத்துப் பேசினார். குறிப்பாக தமிழ் மொழி, தமிழர் அறம், பண்பாடு மற்றும் உலகத் தமிழர் ஒற்றுமை ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த உரை, தமிழ் உணர்வையும் பொறுப்புணர்வையும் ஒருங்கே உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு, மேற்சொன்ன கருத்துக்கள் யாவும் நீண்டகாலப் பலனை அடைய கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் சமூகப் பங்களிப்பை மையமாகக் கொண்ட செயல்திட்டங்கள் அவசியம் என்பதை வலியுறுத்திப் பேசினார். 

இருந்தாலும் கூட அண்ணாமலையின் இந்தப் பேச்சு, சில பல இடங்களில் முழுங்கியும் முழுங்காமலும் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் இருந்தது. இதற்குக் காரணம், சிந்தனையில் அதாவது சித்தாந்தத்தில் ஏற்பட்ட குழப்பம் என்றே தோன்றுகிறது.

அவரது மாநாட்டு உரையினை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்க்கலாம்.

முதலாவதாக, அத்தமிழ் மாநாட்டின் நிர்வாகத்தினர், விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் குழுவினர்கள் ஆகியோரை வரவேற்று அவர்களின் கடந்த காலச் செயல்பாடுகள் போன்றவற்றை நினைவுகூர்ந்து பாராட்டும் சம்பிரதாயப் பேச்சுக்கள் இடம் பெற்றிருந்தன.

சமயோசிதமான பாடல்:

அடுத்ததாக,  இம்மாநாட்டில் அவர் கலந்து கொள்வதற்காக எழுந்த எதிர்ப்பினைப் பதிவு செய்தார். அதில் தமிழ்நாட்டில் உள்ள பிரபல பத்திரிகை ஒன்று வெளியிட்ட “ஹிந்துத்துவ எதிர்ப்பு நிலைப்பாட்டை அண்ணாமலை கையில் எடுக்கிறாரா?” என்ற செய்தியை சுட்டிக்காட்டியும்,  ‘அண்ணாமலையை FeTNA மாநாட்டில் பேச அழைப்பு விடுக்கலாமா? வேண்டாமா?’ என்ற இருவேறு குரல்கள் FeTNA அமைப்பு உறுப்பினர்கள் மத்தியில் எழுந்ததைப் பற்றியும் கூறி,_  அத்தகைய கேள்விகளுக்கு தனது பதிலுரையாக கம்ப ராமாயணம் யுத்த காண்டத்தில் உள்ள ஒரு பாடலை அவர் மேற்கோள் காட்டினார்.

அப்பாடலின் வரிகள்:

ஒன்றே என்னின் ஒன்றே ஆம்;
பல என்று உரைக்கின், பலவே ஆம்;
அன்றே என்னின், அன்றேயாம்;
ஆமே என்றுரைக்கின், ஆமே ஆம்;
இன்றே என்னின், இன்றேயாம்;
 உளது என்றுரைக்கின், உளதேயாம்;
நன்றே, நம்பி குடிவாழ்க்கை!
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!

     (கம்ப ராமாயணம் - கடல்காண் படலம்- கடவுள் வாழ்த்துப் பாடல்)

பொருள்: கடவுள் ஒன்று என்றால் ஒன்று, பல என்றால் பல, தன்மை இல்லாதது என்றால் அப்படித்தான், தன்மை உள்ளது என்றால் அதுவும் சரிதான், இல்லை என்றால் இல்லைதான், உள்ளது என்றால் உள்ளது, நம்பிக்கை தான் வாழ்க்கை என்று  முடிக்கிறார் கம்பர்.

இவ்வாறு அப்பாடலைக் கூறி, அதன் பொருளையும் விரித்து விளக்கிய அண்ணாமலை,  FeTNA அமைப்பும் இப்பாடலுக்கு ஏற்ப ஜாதி, மதம் கடந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

இதன்மூலம், கடவுள் நம்பிக்கையாளர்களோ அல்லது நம்பிக்கையற்றவர்களோ, ஹிந்து மத சிந்தனையாளர்களோ அல்லது வேற்று மதத்தினரோ என எவராக இருந்தாலும், ஜாதி, மதம் கடந்து தமிழ் மொழி என வரும் பட்சத்தில் கருத்தியல் வேற்றுமை பாராட்டாமல்  அனைவருக்குமான அமைப்பாக FeTNA செயல்பட வேண்டும் என்பது அவரின் எண்ணம் மற்றும் கோரிக்கையாக இருந்தது. 

ஆனால் மேற்கண்ட கம்ப ராமாயணச் செய்யுளில் இருந்து தமிழ் நாட்டு பத்திரிகையின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் எதுவும் சொல்லவில்லை. இதில் அவரது பேச்சு ஒன்றைத் தொட்டும் இன்னொன்றை தொடாமலும் இருந்தது. ஒருவேளை மறைமுகச் செய்தி அதில் இருக்க வாய்ப்பு உண்டு என்ற நோக்கில் அவரது பதிலை ஆராய்ந்து பார்த்தால், ஒரு விஷயம் புலப்படுகிறது. அதாவது  ‘ஹிந்துத்துவ நிலைப்பாட்டிற்கு எதிராக அண்ணாமலை இருக்கிறாரா?’ என்ற கேள்விக்கு நீங்கள் ‘ஆம்’ என்று நினைத்தால் ‘ஆம்’. நீங்கள் ‘இல்லை’ என்று நினைத்தால் ‘இல்லை’. மொத்தத்தில் நம்பிக்கை தான் வாழ்க்கை என்று முடிக்கிறார். இது அவரின் சமயோசிதமான, மறைமுகக் குறிப்பு என்றே எண்ணத் தோன்றுகிறது.

இந்தக் குழப்பம் ஏனோ?

அடுத்ததாக,  தென்னாப்பிரிக்காவில் சென்சஸ் எடுக்கும் போது உள்ள படிவத்தில் நீங்கள் ஹிந்துவா? அல்லது தமிழரா? என்று கேட்கும் போது பலர் தங்களை தமிழர் என்று குறிப்பிடுகின்றார்கள் என்று அங்குள்ள பலர் அண்ணாமலையிடம் கூறியதாகவும், தமிழர் என்று தங்களைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக ஹிந்து என்று குறிப்பிட வேண்டும் என்று அங்குள்ளவர்கள் கூறியதாகவும் குறிப்பிட்டு, தமிழர்கள் யாரும் தங்களை ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற சிறு வட்டத்தில் சுருக்கிக் கொள்ளக் கூடாது என்று அவர் பேசியது வியப்பு மேலிட வைத்தது.

ஹிந்து என்பது தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தின் பெயரையும், தமிழ் என்பது தாங்கள் சார்ந்திருக்கும் மொழியின் பெயரையும் அடையாளப்படுத்துகின்றன. ஆனால் இந்த விஷயத்தில் அவரது பேச்சு குழம்பிய சிந்தனையைக்  கொண்டதாக இருந்தது. அடிப்படைப்  புரிந்துணர்வு கூட இல்லையோ என்று எண்ணச் செய்தது. ஒருவேளை அப்படிவத்தில் ஹிந்து என்பது ஹிந்துஸ்தானியா என்பதை அறியக் கேட்டிருக்கலாம், அல்லது எந்த மதப் பிரிவினர் என்பதற்காக இருந்திருக்கலாம். அதேபோன்று தமிழரா? என்ற கேள்வியானது, புலம் பெயர்ந்த தமிழர்களா? என்பதை அறிந்து கொள்வதற்காகவோ அல்லது தாய்மொழி என்னவென்று தெரிந்து கொள்வதற்காகவோ கேட்கப்பட்டிருக்கலாம். 

ஒருக்கால் படிவத்தில் தெளிவு இல்லையெனில், அதில் திருத்தம் செய்ய தென்னாப்பிரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து மாற்றம் செய்திருக்க வேண்டும். ஆகவே தென்னாப்பிரிக்க சென்சஸ் படிவத்தில் உள்ள கேள்வியே குழப்பத்தை விளைவிப்பது மட்டுமல்லாமல், அடிப்படையிலும் தவறு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஏனெனில், இதே வகையில் நீங்கள் ஒரு இஸ்லாமியரிடம் சென்று நீங்கள் தமிழரா? அல்லது இஸ்லாமியரா? எனக் கேட்டால் சந்தேகமே இல்லாமல்  ‘நான் இஸ்லாமியர்’ என்ற பதிலே வரும். அதே கேள்வியை கிறிஸ்தவரிடம் சென்று கேட்டால்  ‘நான் ஒரு கிறிஸ்தவன்’ என்ற பதிலே துளியளவும் யோசனையின்றி வரும்.  அப்படியிருக்க ஹிந்துக்கள் மட்டும் இளிச்சவாயர்களா?  

தமிழ்ப் பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம், அறநூல்கள் கூறும் விஷயங்கள் என அனைத்தின் மீதும் நம்பிக்கை வைத்து ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் கடைபிடித்து வருபவர்கள் மதத்தால் ஹிந்துக்கள் அல்லவா? மதத்தால் ஒருவன் மாறிவிட்டால் அவன் இதே கலாச்சாரத்தை, பண்பாட்டைக் கடைபிடிக்காமல் விட்டுவிடுவது மட்டுமல்லாமல்,  ஏளனம் வேறு செய்கிறானே, இவற்றையெல்லாம் அண்ணாமலை பார்த்ததில்லையா, அறிந்ததில்லையா?

இதனால் தான் சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்: “ஒருவன் மதம் மாறினால் உன் மதத்தில் இருந்து ஒருவன் குறைகிறான் என்று அர்த்தமில்லை; உனக்கு எதிரி ஒருவன் அதிகம் ஆகிறான் என்பதைப் புரிந்துகொள்” என்றார். ஆகவே அண்ணாமலையின் இந்தப் பேச்சு  அரசியலுக்காக, தனது நிமிர்வைக் குறுக்கி குறைத்துக் கொள்கிறார் என்றே தோன்றுகிறது.

இதே சூழ்ச்சி அரசியலைத் தானே, இத்தனைக் காலம் நாம் திராவிட அரசியலில் பார்த்து வந்தோம்? தனது சுயலாபத்திற்காக அண்ணாமலை தனது போக்கினை மாற்றுவது அவர் மீதுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. மாற்றிப் பேசும் கலையில் தேர்ச்சி பெற்றவராக ஆகிவிட்டார் என்றே தோன்றுகிறது. ஒருவேளை தமிழக அரசியலுக்கு இந்தத் தகுதியே போதும் என்று நினைத்துவிட்டார் போலும்.

தேச ஒற்றுமை ஏற்பட வேண்டுமானால் மொழிப் பிரிவுகளை ஏற்படுத்தக் கூடாது என்பது பாரதியின் கூற்று. பாரத வாசிகள் அனைவரையும் பாரதீயர்கள் என்று அழைத்ததோடு மட்டுமின்றி “சேதமில்லா ஹிந்துஸ்தானம் இதை தெய்வம் என்று கும்பிடடி பாப்பா!” என்றும் மகாகவி பாரதி பாடியிருக்கிறார். ஆகையால் தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது ஹிந்துஸ்தானத்தில் வாழும் அனைத்து மக்களையும் ஹிந்து என்ற ஒற்றைக் குடைக்குள் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறது

“வழிபடு தெய்வம் பலவானாலும் அனைவருமே ஹிந்து”  என்றும்,  “பேசும் மொழிகள் பலவானாலும் யாதும் அவள் மொழியே” என்றும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பாடப்படுகிறது; கடைப்பிடிக்கப்படுகிறது. பாரதியும் கூட இதே கருத்தமைய  “செப்பு மொழி பதினெட்டுடையாள், எனிற் சிந்தனை ஒன்றுடையாள்” என்று பாடியிருக்கிறார்.

ஆகவே ஹிந்து என்பது ஒரு மதம் மட்டுமல்ல, அது இந்த தேசத்தில் வாழும் மக்கள் கூட்டத்தின் பெயர்; இந்த தேசத்தின் இறையாண்மையின் பெயர். நமது தர்மத்தின் பெயர். எனவே,  ஹிந்து என்ற பெயரை ஒரு மத வழிபாட்டிற்குள் சுருக்கிக் கொள்ளக் கூடாது என்பது திண்ணம்.

அறத்தின் வழி வாழ்தல்:

அதற்கடுத்ததாக,  ‘கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி’ எழுதின ஒரு புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டினார் அண்ணாமலை…

அந்தப் பாடல் வரிகள்:

உண்டால் அம்ம, இவ் உலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதுஆயினும், 'இனிது' எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகி,
தமக்கு என முயலா நோன் தாள்,
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே.

      (புறநானூறு – 182).

இப்பாடலின் பொருள்:

இந்திரலோகத்து அமிழ்தமே கிடைத்தாலும், அதனைத் தனித்து உண்ண மாட்டார்கள்; பிறரிடம் வெறுப்புக் கொள்ள மாட்டார்கள்; சோம்பல் இல்லாதவர்கள்; நல்லோர் அஞ்சும் தீமைகளுக்குத் தாமும் அஞ்சுவார்கள்; புகழ் கிடைக்கும் என்றால் தம் உயிரையும் தருவார்கள்; பழி வந்து சேரும் என்றால் உலகம் முழுவதையும் தருவதாகக் கூறினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய உயர்ந்த  பண்புகளைக் கொண்டு, ‘தமக்காக உழைக்காமல் பிறருக்காக உழைக்கும் உத்தமர்கள்’ இருப்பதால்தான் இந்த உலகம் நிலைத்திருக்கிறது.

என இப்பாடலையும் இதன் பொருளையும் கூறி தமிழ் மக்கள் மனிதநேயத்தோடு அறவழி சார்ந்து உயர்ந்த பண்பாளர்களாய் விளங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே இதுபோன்ற உயர்ந்த கருத்துக்களை,  அறத்தை வலியுறுத்திக் கூறிய மண்ணில் நாம் பிறந்திருக்கிறோம். மதங்கள் அனைத்தும் தற்போது தோன்றியவை  கிறிஸ்தவ மதம் இரண்டாம் நூற்றாண்டிலும் இஸ்லாம் மதம் ஏழாம் நூற்றாண்டிலும் ஆறாம் நூற்றாண்டில் புத்த மதமும் உண்டாகின என்றும், ஆகவே இந்த மத அடையாளங்களைக் கடந்து அறத்தின் வழி நாம் வாழ்வது மட்டுமல்லாமல் நமது சந்ததிக்களுக்கும் இதை சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றும் பேசினார்.

மேற்கூறிய புறநானூற்றுக் கருத்துக்களை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லி நெறிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். காரணம் தனக்கு தனக்கு என்று லாபநோக்கோடு அலையும் தன்மை, இன வெறுப்பு, மொழி வெறுப்பு, வெறுப்பு அரசியல் போன்ற போக்குகள்,  பொறுப்பற்ற குணம்,  முயற்சியில் நம்பிக்கை இழப்பது, பொறுமையற்ற தன்மை, எதைச் செய்தாவது எப்படிச் செய்தாவது தான் விரும்பியதை அடைதல், நல்லதில் நம்பிக்கை இழத்தல், தீமைகளை விரும்பிச் செய்தல், சோம்பல் குணம், தர்ம நியாயத்தைப் பற்றி சிறிதும் கவலையின்றி லாப நோக்கையே கருதி வாழுதல், இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நிலை மாறி எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று போக்கு, எதிலும் மெத்தனம் போன்ற குணங்களுடன், நல்லோர்களைக் கண்டு நகைப்பதுடன் பிழைக்கத் தெரியாதவர்கள் எனத் தூற்றும் சமுதாயமாக நாம் மாறி வரும் சூழலில், இதிலிருந்து நம்மையும் நமது சமுதாயத்தையும் மீட்டெடுக்க இது போன்ற உயரிய கருத்துக்களை, அறம் சார்ந்த வாழ்க்கையில் உள்ள நிரந்தர உண்மையைக் கற்றுத் தர வேண்டியது என்பது மிக மிக அவசியம். தேவை மற்றும் கட்டாயமும் கூட. ஆகையால் இதை பாராட்டாமல் இருக்க முடியாது.

அதேபோன்று, மதங்கள் (கிறிஸ்தவ/ புத்த/ இஸ்லாம்) அனைத்தும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தான் உருவாகின. அதற்கு முன்னமே தோன்றியது நமது அறம் மற்றும் அறம் சார்ந்த வாழ்வு. அப்பேர்ப்பட்ட குடியில் நாம் பிறந்திருக்கிறோம் என்று பெருமிதம் கொள்ள வேண்டும் என்றும் பேசியது பாராட்டிற்குரியது. காரணம் கிறிஸ்தவ, புத்த, இஸ்லாம் மதங்களின் தோற்றத்தை பற்றி மட்டும் பேசிய அவர், இந்த மத அடையாளங்களைக் கடந்து அறத்தின் வழி நாம் வாழ்வது மட்டுமல்லாமல் நமது சந்ததிக்களுக்கும் இதை சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றார்.

அதாவது, என்று தோன்றியது என்றே தெரியாத நமது (ஹிந்து சநாதன தர்மமாகிய) அறவாழ்வு ஒன்றே நம்முடையது. அதுவே நமது சொத்து. அதுவே நமது பெருமை. ஆகவே அதில் நாம் பெருமிதம் கொள்வோம் என்ற விதத்தில் அவரது பேச்சின் உட்கருத்தை எடுத்துக் கொள்ளலாமோ? திரு. அண்ணாமலை தான் மீண்டும் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்.  

அறிவுடையவனுக்கே உரிய மரியாதை:

அடுத்ததாக புறநானூற்றுப் பாடலில் இருந்து இன்னொரு உதாரணத்தைக் காட்டினார்.  ‘ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்’ என்ற பாண்டிய மன்னன் பாடிய பாடல் அது. அந்தப் பாடல்:

...ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்,
'மூத்தோன் வருக' என்னாது, அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.

     (புறநானூறு- 183)

இப்பாடலின் விளக்கம்:

ஒரே குடியில் பிறந்த பலரில் மூத்தவனை வருக என அழைக்காமல், அவர்களில் அறிவுடையவன் வழியில் அரசாட்சியும் நடைபெறும். பிறப்பால் நான்கு பிரிவுகள் உண்டு.  அவற்றில் கீழ்க்குலத்தில் பிறந்த ஒருவன் கற்றிருந்தால் மேல்குலத்தில் பிறந்தவனும் அவனிடம் அடக்கமாவான். 

-என்று அவர் விரித்துக் கூறினார். இதிலிருந்து அவர் உள்ளக் கருத்தை அறிய முயலும் போது ஒரு விஷயம் தெளிவுபடத் தெரிகிறது. இப்பாடலின் மூலம் அவர் இரண்டு விஷயங்களைப் பதிய வைக்கிறார்.

அதாவது, சமுதாயத்தில் கல்வி கற்றவனுக்கே அறிவுடையவனுக்கே உரிய மரியாதை கொடுக்கப்படும் என்பதனால், அனைவரும் கல்வியில் சிறந்தவர்களாக அறிவுடையோர்களாக விளங்க வேண்டும் என்ற ஒரு விஷயம் முதலாவது. இன்னொன்று, நமது முன்னோர்கள் நாடாள தகுதியாக கற்றறிந்தவர்களையும் அறிவிற் சிறந்தவர்களையும் தான் முன்னுதாரணமாகக் காட்டுவதால் தற்போதுள்ள மக்கள் இதனைப் புரிந்து கொண்டு  கற்றவர்களையும் அறிவுடையோர்களையுமே நாடாளத் தேர்வு செய்ய வேண்டும் என்ற விஷயத்தையும் குறிப்பால் உணர்த்தியுள்ளார்.  இதன்மூலம்  கற்றறிந்தவனாகிய தன்னை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கைக் கருத்தும் அவரது பேச்சில் வெளிப்பட்டது.

இலங்கைத் தமிழர் நலன்:

அடுத்ததாக, இலங்கைத் தமிழர்கள் பல நாடுகளில் இன்றும் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் நான்கு லட்சம் பேரும் இந்தியாவில் தொன்னூறாயிரம் பேரும் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது நாட்டு சுதந்திர தினத்தைக் கூட கொண்டாட முடியாத நிலையில் இருக்கின்றனர் என்றும், அவர்களுக்காக, தான் ஏற்கனவே சார்ந்திருந்த (பாஜக) கட்சி மூலமாக பல நற்காரியங்களைச்  செய்து வந்தேன். இன்னும் அதை நான் தொடர்ந்து செய்வேன் என்றும் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி இதற்கான முன்னெடுப்பை FeTNA அமைப்பும் தீவிரமாக செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

மேலும்  “கடாரம் கொண்டானாகிய ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டினைக் கொண்டாடும் நாம், அவர் எவ்வாறு கடல் கடந்து சென்று தனது ஆட்சி நிர்வாகத் திறனை வெளிப்படுத்தினாரோ அவ்வாறே அமெரிக்க வாழ் தமிழ் மக்களாகிய உங்களையும் நான் பார்க்கிறேன். ஆகையால் நீங்கள் இங்கிருந்து கொண்டு தமிழ்நாட்டில் தகுதியுள்ள ஒரு சாதாரண மாணவ மாணவிகளின் கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் உதவிகரமாக இருக்க வேண்டும். விவசாயிகளின் சந்தைப்படுத்தலை ஊக்குவிக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

பிறகு அமெரிக்காவில் வாழும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினர் தமிழைக் கற்றறிய வேண்டும் என்றும், பலநாடுகளுக்கு சென்ற தமிழர்கள் முன்னோடிகளாக இருந்து வருவதால் வாய்ப்புகள் ஏற்படும்  பட்சத்தில், அவர்கள் இந்தியாவுக்கு திரும்பிவர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

குறிப்பாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கடந்த ஆண்டு FeTNA அமைப்பு அமெரிக்காவில் வைத்து சந்தித்து வரவேற்றிருந்தது சிறப்புமிக்க செயல் எனவும், தான் நரேந்திர மோடி மீது பெரும் மதிப்பும் அன்பும் வைத்திருப்பதற்கு காரணம், தமிழ் மண்ணில் பிறக்காத தமிழனாக அவர் வாழ்ந்து வருகிறார் என்பதுவும், கடந்த கால தேர்தல் அறிக்கையில் தான் சார்ந்திருந்த அந்தக் கட்சியில் இருந்து உலகம் முழுவதும் தமிழ் இருக்கை அமைத்து தரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதைப் பற்றியும் அவர் கூறினார். 

ஆகவே அறமும் தமிழும் எங்கெல்லாம் இருக்கிறதோ அது தான் எனது தாயகம் எனவும், FeTNA அமைப்பும் கூட கட்சி மற்றும் சித்தாந்தங்களைத் தாண்டி தமிழுக்கு ஆதரவாக யாரெல்லாம் இருக்கின்றார்களோ அவர்களுக்கெல்லாம் துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உரையின் இறுதியில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் கூறிய  ‘வாழ்க நிரந்தரம்; வாழ்க தமிழ் மொழி!’ என்ற வாசகத்தோடு நிறைவு செய்தார். 

கருத்து முரண் மட்டுமே கவலைக்குரியது!

மேற்கண்ட அவரது உரையில் சில விஷயங்களில் கருத்து முரண் தோன்றுகிறது. குறிப்பாக  ‘தமிழ் வேறு, ஹிந்து வேறு’ என்ற தொணியில் அவர் பேச்சு அமைந்தது வருத்தத்திற்குரியது. ஒருவேளை ஓட்டு அரசியலுக்காக அவர் அவ்வாறு மாறிவிட்டாரோ என்று எண்ணச் செய்கிறது

‘பூத்தாலும் காயாத மரம் உள்ளது போல’சில பேதைகளுக்கு எவ்வளவு உரைத்தாலும் (தமிழ் மொழிப் பற்று/தமிழர் அறம்) உணர்வு தோன்றாது. ஆகவே சிறுபான்மை மக்களை திருப்தி செய்ய முயல்வது என்பது வீண் முயற்சி மட்டுமல்ல…. தனது நேர்கொண்ட பார்வையையும் கோணலாக்குவது போல அமைந்துவிடும். 

‘நின்னடை யானே நடவத்தா நின்னடை நின்னின் றறிகிற்பார் இல்’ (பழமொழி நானூறு- 288). அதாவது தத்தம் இயல்பின் படி நடப்பது தான் சிறப்பு என்பதை திரு. அண்ணாமலை  உணர வேண்டும்.

 “தன்னைச் சேர்ந்தவர்கள் புலம்புமாறு விட்டுவிட்டு தனியே ஒரு பாதையில் செல்ல வேண்டாம்; பெரியோர்கள் காட்டிய வழியை விட்டுவிட்டு வேறோர் பாதையைத் தேர்வு செய்ய வேண்டாம்; தான் செய்த உயர்ந்த நுட்பமான நல்ல செயல்களை மீண்டும் எண்ணிப் பார்க்க வேண்டும்” என்று முன்றுரையரையனார் பழமொழி நானூற்றில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே திரு. அண்ணாமலை பெரியோர்கள் காட்டிய வழியில், பெரியோர்கள் சொன்ன வழியில் செல்ல வேண்டும் என்பதே நலம்விரும்பிகளின் விருப்பம். 

அதேபோல தமிழக பாஜகவினர் சில யதார்த்த உண்மைகளைப் புரிந்து கொள்வது அவசியம். எல்லா உறவுகளும், கூட்டுப் பயணங்களும் ஒரே வடிவில் தொடர வேண்டிய அவசியமில்லை. ஆகவே இன்று பிரிந்தாலும், நாளை மீண்டும் இணைந்து செயல்பட வாய்ப்பு இருக்கலாம். அதனால் மரியாதைக் குறைவான வார்த்தைகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.   ‘கல் தேயும்; ஆனால் சொல் தேயாது’ என்பதை மறக்கக் கூடாது. அது தங்கள் கட்சியையே மேலும் சிறுமைப்படுத்தும் என்பதை பாஜக ஆதரவாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதற்காக எதுவும் பேசக் கூடாது என்பது அல்ல. கொள்கை அல்லது செயல்முறை வேறுபாடுகளைப் பேசலாம்; ஆனால் தனி நபரை இழிவுபடுத்துவது  கட்சியின் நம்பகத்தன்மையை பாதிக்கலாம். வருபவரை வரவேற்பதும்; போகிறவர்களை வாழ்த்துவதுமே உயர்ந்த முதிர்ச்சிப் பண்பு.

தற்போது சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எதிர்காலத்தில் இணைந்து செயல்பட வாய்ப்பு இருக்கலாம். ஆகவே இவையனைத்தையும் உணர்ந்து தமிழக பாஜக தலைவர்கள் செயல்பட வேண்டும். ஆனால் சில தமிழக பாஜக தலைவர்கள் பேசுவது, ஒருக்காலும் அண்ணாமலை மீண்டும் தங்கள் கட்சியில் இணைந்து விடக் கூடாது என்ற விதத்திலே அமைவது போலத் தெரிகிறது.

எது எவ்வாறாயினும், ஒருவரின் பிரிவால் நமது தேசியப் பணியும் உயர்ந்த நோக்கமும் நின்றுவிடக் கூடாது. புதியவர்களை உருவாக்கி, புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் முன்பு இருந்ததை விட கூடுதல் வேகத்தில் பாஜக செயல்பட வேண்டும். 

இறுதியாக, தேசியக் கட்சிக்கு தமிழ் மக்களின் மொழியினைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று அண்ணாமலை கூறியது, இந்த  ‘தமிழ் ஹிந்து’ என்கிற பெயரளவிலான சித்தாந்தத்தைத் தான் என்பதை உணர முடிகிறது.  இங்கு ஹிந்து என்ற உணர்வை விட தமிழ் என்ற உணர்வே கிரியாயூக்கியாக  செயல்படும் என்று அவர் நம்புகிறார். 

மற்றபடி அவர் பேசும்  ‘என்றும் உள்ள தமிழர் அறம்’  என்பது சநாதன தர்மமே  என்றுதான் தோன்றுகிறது.  மேலும் அவர், தான் சார்ந்திருந்த கட்சிக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் தான் என்றும் நன்றிக்கடன் பெற்றிருப்பதாக அடிக்கடி சொல்லி வருவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே, அவர் பாஜகவிற்குள் இருந்த சீக்ரெட் ஏஜென்ட்டோ,  பாஜகவால் அனுப்பப்பட்ட ஹம்சா அலி மசாரியோ அல்ல என்பது மட்டும் தெளிவு. 

$$$

Leave a comment