புடவையும் சல்வார் கமீஸும் 

-திருநின்றவூர் ரவிகுமார் 

என் உடை, என் உரிமை - என்றெல்லாம் முழங்கும் பெண்ணியக் கூட்டம் ஒன்று நம்மூரில் உண்டு. அவர்களுக்காகவே, நமது நாட்டின் கலாச்சார உடையான புடவைக்கு சகோதர நாட்டில் ஏற்பட்ட சோதனையை இக்கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார், எழுத்தாளர் திரு. திருநின்றவூர் ரவிகுமார். நம் ஊரிலும் காட்சிகள் மாறி இருக்கின்றன; ஆனால் புடவை மீதான வெறுப்பாக இல்லாமல், மேற்கத்திய ஆடை மோகம் அதற்குக் காரணமாக இருக்கிறது. நாகரிகம் என்பதே சுழற்சி தானே?

உலக நாடுகள் ஒவ்வொன்றாக 2020-இல் பொது முடக்கத்தை அறிவித்தன; வழிகாட்டியது இந்தியா. வீட்டில் முடங்கிய மக்கள் பலவிதங்களில் தங்களை வெளிப்படுத்தத் தொடங்கினர். பாகிஸ்தானில் அதுபோன்றதொரு முயற்சியாக இன்ஸ்டாகிராமில் தொடங்கப்பட்டதே ‘பாகிஸ்தான் புடவை இன்ஸ்டாகிராம்’. பெண்கள் விதவிதமாக புடவை கட்டிக்கொண்டு படம் எடுத்து அதில் பதிந்தனர். இதில் என்ன விசேஷம் என்று தோன்றலாம். விஷயம் இருக்கிறது.

அண்மையில் கராச்சி நகரில் ஒரு விருந்துக்குச் செல்ல ஊடகவியலாளரும் நடிகையுமான ஹிரா நவாப் என்ற முப்பது வயது பெண் கரீம் காரில் (நம் ஊர் பாஸ்ட் ட்ராக் போன்ற வாடகை கார்) ஏறினார். கருப்பு நிறப் புடவை, கருப்பு நிற சோளியில் இருந்த அவரைப் பார்த்து டிரைவர், “நீ இந்துவா?“, ” என்று கேட்டார். இல்லையென்றார் ஹிரா நவாப். ”கிறிஸ்துவரா?” என்று கேட்டார் டிரைவர். இல்லை என்றதும் “ஊருக்குப் புதுசா, வெளியூரில் (வெளிநாட்டில்) இருந்து வந்திருக்கிறீர்களா?” என்று மேலும் கேட்டார். புடவை கட்டி இருப்பதைப் பார்த்துத் தான் இப்படிக் கேட்கிறார் என்று புரிந்து கொண்டதாக ஹிரா நவாப் கூறுகிறார்.

ஏறத்தாழ புடவை கட்டும் பழக்கமே இல்லாமல் போயிருக்கிறது பாகிஸ்தானில். இது ஆரம்பத்தில் இருந்தே இப்படியா என்றால், இல்லை. 1980க்குப் பிறகு தான் இந்த மாற்றம் வந்தது.

பிரிவினைக்கு முன், மேற்கு பாகிஸ்தானில் (இன்றைய பாகிஸ்தானில்) வங்க மொழி பேசும் பெண்களும் சௌராஷ்டிரா பெண்களும் புடவை கட்டுவார்கள். அவர்கள் செல்வந்தர்களாகவும், உயர்குடியினராகவும் இருந்ததால் ஆசிரியர்கள் (டீச்சர்கள்) எனப்பட்டனர். கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய பங்களாதேஷ்) எல்லோரும் புடவை கட்டுவார்கள். இந்தியாவிலிருந்து பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார், ஹைதராபாத் (ஆந்திரா) தில் இருந்து கராச்சி, சிந்து பகுதியில் குடியேறியவர்கள் புடவை கட்டுவார்கள். ஆண்கள் பைஜாமா அணிவார்கள். இவர்களை ‘மொஹஜீர்’  என்பார். இவர்கள் ஏழையாக இருந்ததாலும், இந்தியாவிலிருந்து வந்ததாலும், பைஜாமா, புடவை கட்டினார்கள். மற்றபடி புடவையை பாகிஸ்தானில் உயர் குடியினர் மட்டுமே அணிந்தனர்.

பஞ்சாப் பகுதியில் பொதுவாகவே பெண்கள் சல்வார் கமீஸ் அணிந்து மேலே துப்பட்டா போட்டிருப்பார்கள். திருமணத்திற்கு மட்டுமே மணமகன் வீட்டார் மணமகளுக்குப் பரிசாக புடவை அளிப்பார்கள். வடமேற்கு மாகாணங்களில் பழங்குடியினர் பகுதிகளில் (கைபர்  பக்துன்காவா பகுதி) பெண்கள் புடவை கட்டுவதில்லை; சல்வார் கமிஸ் தான். திருமணத்தின் போது மட்டுமே புடவை.

பிரிவினைக்குப் பின், கிழக்கு பாகிஸ்தான் (பங்களாதேஷ்) நாகரிகத்தில் உயர்வாக கருதப்பட்டது. அங்கு வேலைக்குப் போகும் பெண்கள் மட்டுமல்ல, வீட்டில் இருக்கும் பெண்களும் புடவை தான் கட்டுகிறார்கள் என்று பாகிஸ்தான் செய்தித்தாள்களிலும் பின்னர் தொலைக்காட்சிகளிலும்  காட்டினார்கள். அதை மேற்கு பாகிஸ்தானில் உயர்வான விஷயமாகப் பரப்பினார்கள். 

லாகூரில் புகழ்பெற்ற போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் சைதீ, “திருமணம், பிறந்த நாள் போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளை புடவை அணிந்துகொண்டு பெண்கள் புகைப்படம் எடுப்பது வழக்கமாக இருந்தது“,” என்கிறார். முகமது அலி ஜின்னாவின் சகோதரியும், பாகிஸ்தானில் முதல் பிரதமரான லியாகத் அலி கானின் மனைவியுமான ரெஹனா புடவை அணிந்துதான் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.

பாகிஸ்தானில் புகழ்பெற்ற ‘மிரர்’ பத்திரிக்கையின் பெண்கள் பகுதியில், “இந்த விருந்தில் கலந்துகொண்ட திருமதி குஜில்பாஷ் அண்மையில் கராச்சி சென்று வந்தார்கள். அங்கு வாங்கிய அடர் நீலப் புடவையில் அட்டகாசமாக இருந்தார்கள். திருமதி கர்மானி தென்னிந்திய பட்டுப்புடவையில் மிளிர்ந்தார்” என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளது. கிழக்கு பாகிஸ்தானில் ‘பொதுவானது’ என்றும் மேற்கு பாகிஸ்தானில் ‘அந்தஸ்து’ என்றும் பார்க்கப்பட்டது புடவை.

இதெல்லாம் 1971 பங்களாதேஷ் பிரிவினைக்குப் பிறகு மாறிவிட்டது.

அதன் பிறகு பாகிஸ்தானியர்களுக்கு அந்தப் பண்பாடு, மொழி, புடவை கூட பிடிக்காமல் போனது. அதை ஒழிக்கத் தொடங்கினர். இதை, தூய்மைக்கும் தூய்மையற்றதுக்கும் இடையேயான போர் என்று பாகிஸ்தானிய ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாக ‘சண்டே டைம்ஸ் ஆஃப் லண்டன்’ பத்திரிகை செய்தியாளர் ஆண்டனி பதிவு செய்துள்ளார்.

புடவை கட்டிய வங்கப் பெண்கள் துப்பாக்கி தூக்கிக்கொண்டு நடப்பது போன்ற புகைப்படங்கள் வெளிவந்தன. புடவை விடுதலை வேட்கையின், சுதந்திரத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. அதனால் 1971 போருக்கு முன் ஆயிரக்கணக்கான கிழக்கு பாகிஸ்தான் பெண்களை வன்புணர்ச்சி செய்தது பாகிஸ்தான் ராணுவம். ”கைப்பற்றிய பெண்களை புடவை இல்லாமல் அடைத்து வைத்தார்கள். வேண்டிய போது (காம) கொட்டகைக்குப் போய் புணர்ந்தார்கள் ”என்று நீலிமா இப்ராஹிம் எழுதியுள்ள ‘போர்க்கால நாயகி’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1977-இல் ஜெனரல் ஜியா- உல் – ஹக்  ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். 1988 -இல் விமான விபத்தில் மரணம் அடைந்தார். ஆனால் ஆட்சியில் இருந்த பத்தாண்டுகளில் அவர் பாகிஸ்தானில் இஸ்லாமிய மயமாக்கலை தீவிரப் படுத்தினார்.

ஆரம்பத்தில் பெண்கள் தலையை மூடி முக்காடிட வேண்டும் என்று துவங்கியது. பாகிஸ்தான் தொலைக்காட்சியில் பிரபல செய்தி வாசிப்பாளர் மேதாப் ரிஷிதினி சானா முக்காடிட்டுதான் திரையில் தோன்ற வேண்டும் என ஜனாதிபதி மாளிகையில் இருந்து தொலைக்காட்சி இயக்குனருக்கு உத்தரவு வந்தது. சானா அதை ஏற்க மறுத்து வேலையை விட்டுவிட்டார். தொலைக்காட்சியில் மொத்த நேரத்தில் 25 சதவீதம் மட்டுமே பெண்கள் வர வேண்டும். அதற்கு மேல் கூடாது என்பது அடுத்த உத்தரவு. பள்ளி, கல்லூரி மாணவிகள் தலையை மூட வேண்டும் என்பது நடைமுறைக்கு வந்தது.

பெண்கள் புடவை அணியக் கூடாது; அது இஸ்லாத்துக்கு விரோதம்; பதிலாக சல்வார் கமிஸ் தான் அணிய வேண்டும் என்றார்கள். பிரதமர் ஜுல்பிஹர் அலி புட்டோ-வின் மனைவி நசரத் புட்டோ ஒரு பத்திரிகையாளருக்கு அளித்த நேர்காணலில், “நாங்கள் காலை காட்ட மாட்டோம். (கழுத்து பகுதியில் கை வைத்து) இங்கே கொஞ்சம், (இடுப்பு பகுதியில் கை வைத்து) இங்கே கொஞ்சம் காட்டுவோம். ஆனால் காலைக் காட்ட மாட்டோம். அதனால்தான் பாகிஸ்தானில் (மேற்கத்திய உடையான) மினி ஸ்கர்ட் இல்லை” என்று சொல்லி உள்ளார். அப்படிப்பட்டவர் ஜியா காலத்தில் பொதுவெளியில் புடவையில் வரவில்லை. அவரது மகள் பெனாசிர் புட்டோ (பின்னாளில் பிரதமர்) புடவை கட்டி யாரும் பார்த்ததே இல்லை; சல்வார் கமீஸ் தான் இறுதிவரை.

ராணுவத்தில் செவிலியர்களாக இருந்தவர்கள் அப்போது புடவை கட்டிக் கொண்டிருந்தார்கள். எது மதத்தின் அடையாளம், எது தேசத்தின் அடையாளம் என்ற குழப்பம் அவர்களுக்கு ஏற்பட்டது. அவர்கள் ஆரம்பத்தில் அந்த உத்தரவை எதிர்த்து கேள்வி எழுப்பினார்கள்.

அதுவரை புடவை கட்டுதல், தலையில் பூச் சூடுதல், பொட்டு வைத்தல் ஆகியவை கலாச்சார அடையாளமாக இருந்தன. “புடவை கட்டிக் கொண்டால் நீ இந்துவாக ஆகிவிடுவாயா?” என்று காட்டமாக கேள்வி எழுப்புகிறார் கராச்சியில் ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் இருக்கும் ருமானா ஹூசைன். பொட்டு வைப்பது (இஸ்லாமிய) மதத்துக்கு எதிரானது அல்ல என்கிறார் இவர். “மொஹஜீர்களின் மொழியான உருதுவை ஏற்றுக் கொள்ளும் போது புடவையை ஏன் மறுக்கிறீர்கள்?” என்றும் கேட்கிறார் ருமானா ஹூசைன்.

ஆனால் நிறைய மாறிவிட்டது. பாகிஸ்தான் தொலைக்காட்சியில் பிரபலமான சமையல் கலைஞர் சுபைதா தாரிக். அவர் 2019-இல் காலமானபோது அவரிடம் 1400 புடவைகள் வைத்திருந்தார் என்றும், கடைசிக் காலம் வரை புடவை தான் கட்டிக் கொண்டிருந்தார் என்றும் அவரது அஞ்சலிக் குறிப்பு கூறுகிறது. புடவை வைத்திருப்பது புகழுக்கு விசேஷக் காரணம் ஆகிவிட்டது.

இது ஏதோ ஜெனரல் ஜியா காலத்து மனப்பான்மை அல்ல. கிரிக்கெட் வீரரும் (முன்னாள்) பிரதமராகவும் இருந்த இம்ரான் கான் தனது (முன்னாள்) மனைவியான ஜெமியா-விடம் (அவர் பாகிஸ்தானியர் அல்ல. வெளிநாட்டுக்காரர்) “மேற்கத்திய உடையில் இருப்பதைவிட சல்வார் கமீஸில்தான் அழகாக இருக்கிறாய்” என்று கூறியதாக நேர்காணலில் சொல்லியுள்ளார். அதே நேர்காணலில், பாகிஸ்தானில் விவாகரத்து அதிகரிப்பதற்கு பாலிவுட் (இந்திய) சினிமாக்கள் தான் காரணம் என்றும் சாடி உள்ளார். ஜியா மனப்பான்மை இன்றும் தொடர்கிறது.

கல்வியாளரான அலியா இக்பால் நக்வி, “என் பாட்டி, அம்மா கூட புடவை கட்டிக்கொண்டு வெளியே சென்று உள்ளதைப் பார்த்திருக்கிறேன். நான் இளம் பெண்ணாக இருந்த காலத்தில் அதெல்லாம் மாறிவிட்டது. இப்பொழுது எல்லா இடத்திற்கும் புடவையில் போக முடியாது” என்கிறார்.

பாகிஸ்தானில் இன்று மலிவு விலையில் உள்ள பாலியஸ்டர், வாயில், காட்டன் புடவைகள் தயாரிப்பது இல்லை; பங்களாதேஷ், இலங்கை, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதற்கு வரி மட்டுமல்ல, வழியும் (அதிகாரிகளுக்கு லஞ்சம்) கடினமாக இருப்பதால் பல கடைகள் மூடப்பட்டு விட்டன.

தரம் உயர்ந்த புடவைகள் பெருநகரங்களில் ஓரிரு இடங்களில் கிடைக்கின்றன. ஆனால் இந்துக்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் தரக் குறைவான, மலிவான புடவைகள் மட்டுமே சில கடைகளில் விற்கப்படுகின்றன. காரணம், இந்துக்களின் வறிய பொருளாதார நிலை. புடவையின் குறைந்தபட்ச விலை ரூபாய் ஆயிரம். 1992 அயோத்யா சம்பவத்திற்குப் பிறகு இந்துக்களும் தங்களை மறைத்துக் கொள்ள சல்வார் கமீஸுக்கு மாறி விட்டார்கள் என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

சபா இம்தியாஸ் என்று எழுத்தாளர், “நான் வெளிநாட்டில் சில ஆண்டுகள் இருந்ததால் என்னிடம் ஓரிரு புடவைகளே இருந்தன. நான் சிறுபான்மையினரான இந்துப் பெண் அல்ல. என்றாலும் புடவை கட்டிக் கொண்டு செல்லும்போது என்னை எல்லோரும் வெறித்துப் பார்ப்பார்கள். அவர்கள் நான் எதை அணிந்தாலும் வெறித்துத் தான் பார்ப்பார்கள் என்று மனதை சமாதானப்படுத்திக் கொள்வேன். புடவை கட்டிக் கொள்வது சுலபம். வசதியும் கூட. அது மட்டுமல்ல எடை கூடி உடல் பருத்தாலும் பிரச்சனை இல்லை“, ” என்கிறார்.

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது என் பெண் வந்து, “அப்பா தீபாவளிக்கு பட்டுப்புடவை வாங்கித் தருகிறாயா?” என்கிறாள். குரல் அவளுடையது. ஆனால் பின்னால் இருப்பது அவளது அம்மா. மகளைப் பார்த்து முறுவலித்தேன். புத்தியோ இந்த ஆண்டு போனஸ் புடவையிலேயே போய்விடும் என்று சொல்லியது.

$$$

One thought on “புடவையும் சல்வார் கமீஸும் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s