காந்தாரா: வனக் கடவுளின் முழக்கம்

-சந்திர பிரவீண்குமார், சுந்தர்ராஜ சோழன்

அண்டை மாநிலத்தில் கன்னடத்தில், குறைந்த செலவில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம், மிகக் குறுகிய நாட்களில் தேசிய அளவிலும், உலக அளவிலும் பாராட்டப்பட்டு பேசுபொருளாகி இருக்கிறது. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்பது போல, எந்த விளம்பரமும் இல்லாமலே, அதீத ஊடக வெளிச்சம் இல்லாமலே, இதைச் சாதித்திருக்கிறது, ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காந்தாரா’.

இதன் வெற்றியால் பிற மொழிகளிலும் எதிர்பார்க்கப்பட்டு, விரைவிலேயே மொழிமாற்றமும் செய்யப்பட்டு, தேசிய அளவிலான (பான் இந்தியா) படமாகி இருக்கிறது. தமிழ்த் திரையுலகின் ‘புள்ளிங்கோ’க்கள் பார்க்க வேண்டிய திரைப்படம்; பொன்னியின் செல்வன் எடுப்பதற்கு முன் இயக்குநர் மணிரத்னம் பார்த்திருக்க வேண்டிய திரைப்படம் இது. 

வழக்கமாக, நமது தளத்தில் திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆனால், சமகாலத் திரையுலகில் ஒரு பெரும் திசைமாற்றத்தை வெளிப்படுத்தும் கருவியாக உள்ளதால், இப்படம் குறித்த விமர்சனங்கள் இங்கு வெளியாகின்றன.

இளம் பத்திரிகையாளர் திரு. சந்திர. பிரவீண்குமாரும், சமூக ஊடக விமர்சகர் திரு. சுந்தர்ராஜ சோழனும் எழுதியுள்ள இரு மதிப்பீடுகள் முதலில் உள்ளன. அதைத் தொடர்ந்து, முகநூலில் இருந்து தேர்வு செய்யப்பட்ட, எழுவரின் மதிப்பீடுகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன…  

காந்தாரா: மண்ணின் மணம்

-சந்திர.பிரவீண்குமார்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் (அப்படிச் சொன்னால் மணிரத்னம் கோபித்துக் கொள்ளக் கூடும்; மன்னிக்கவும் PS-1 திரைப்படம்!) சர்ச்சையில் சிக்கியிருந்த திரையுலக ரசிகர்களுக்கு, முக்கியமாக வரலாற்றுப் படங்களை ரசிப்பவர்களுக்கு புதிய மருந்தாக வந்திருக்கிறது ‘காந்தாரா’.

இந்தத் திரைப்படம் கன்னடத்தில் வெளிவந்து, பிறகு மற்ற மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு நாடு முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் படத்தை ரசிக்க முடிந்தாலும், மொழிமாற்றம் செய்தது போதுமானதாக இல்லை என்றே நினைக்கிறேன். கன்னடம் தெரிந்திருந்தால் மட்டுமே சரிபார்க்க முடியும்.

அதே நேரத்தில், திரைப்படத்தில் கன்னட எழுத்துக்கள் வெளிவந்தாலும் உண்மையில் இது துளு மொழி பேசும் பழங்குடி சமூகத்தின் தெய்வம் பற்றியது என்கிறார்கள்.

1847-ஆம் ஆண்டிலிருந்து கதை துவங்குகிறது. நிம்மதியைத் தேடி அலையும் ஓர் அரசன் (ஜமீன்தார்), மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காட்டுக்குள் நுழைகிறான். அங்கு பழங்குடி சமூக மக்கள் வழிபடும் நடுகல் தெய்வத்தைப் பார்த்ததுமே நிம்மதியை அடைந்ததாக உணர்கிறான். அதனால் அந்தத் தெய்வத்தை தனது அரண்மனைக்கு எடுத்துச் சென்று அதற்கு மாற்றாக 500 ஏக்கர் நிலங்களை அவர்களுக்கு எழுதி வைக்கிறான் அரசன். இந்த நிலங்களைப் பிடுங்கினால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் என்ற தெய்வத்தின் எச்சரிக்கையையும் ஏற்றுக்கொள்கிறான்.

கதை 1970-ஆம் ஆண்டுக்கு நகர்கிறது. அரசனின் வழியில் வந்த ஒருவர், பழங்குடிகளுக்கு தனது முன்னோர் வழங்கிய நிலங்களுக்கு உரிமை கொண்டாடுகிறார். கோயில் திருவிழாவின் போது சாமியாடுபவரிடம் அவர் வாதிடுகிறார். சாமியாடுபவர் ஆவேசத்துடன் காட்டுப்பகுதிக்குள் சென்று மறைகிறார். நீதிமன்றத்தை அணுகிய அரசனின் வம்சாவளி, நீதிமன்ற வளாகத்திலேயே ரத்தம் கக்கி இறக்கிறார்.

கதை 1990-க்குப் பயணிக்கிறது. நீதிமன்றத்தில் இறந்தவரின் மகன் தற்போது ஜமீன்தார். அவர் தனது தந்தையைப் போலல்லாமல் பழங்குடி மக்களுடன் இணக்கமாகப் பழகுகிறார். சாமியாடியின் மகன் சிவாவுடன் நெருக்கமாக இருக்கிறார். சிவாவும் ஜமீன்தார் என்ன சொன்னாலும் செய்கிறான். வேட்டையாடுவது, நண்பர்களுடன் உல்லாசமாகத் திரிவது என்று பொழுதைப் போக்குகிறான். தனது முறைப்பெண் லீலா மீது காதல் கொள்கிறான்.

கதைக்குள் முரளிதர் என்ற வனத்துறை அதிகாரியும் நுழைகிறார். நேர்மையான அவர், வனங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் சொத்து என்றும், அதை ஆக்கிரமித்திருக்கும் பழங்குடி மக்கள் வெளியேற வேண்டும் என்றும் மிரட்டுகிறார். லீலா வனத்துறையில் சேர்ந்த அன்றே ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வனத்துறையின் நடவடிக்கையில் பழங்குடிகளின் நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் திருடப்படுவது தெரிய வருகிறது.

சிவாவுக்கும் அதிகாரிக்கும் மோதல் முற்றி, அவன் சிறைக்குச் செல்கிறான். இதற்கிடையில், சாமியாடியாக வாழ்ந்து வந்த சிவாவின் சித்தப்பா மகன் மர்மமான முறையில் கொல்லப்படுகிறான். கொலைக்கு சிவா பழி வாங்கினானா, ஜமீன்தார் உதவி புரிந்தாரா என்ற முடிச்சுகள் அவிழ்வதுதான் கிளைமாக்ஸ்!

இது பொழுதுபோக்குப் படமல்ல. கனமான கதைக்களம். ஆனால், முதலில் இருந்து கடைசி வரை சுவாரசியம் தட்டாமல் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. நாயகன் சிவா, அவனது தந்தை ஆகிய பாத்திரங்களையும் அவரே ஏற்றிருக்கிறார். வனத்துறை அதிகாரியாக நடித்த கிஷோரைத் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமில்லாத முகங்கள். ஆனால் அது தெரியாதபடி, காட்சியமைப்புகள் நம்மை பரவசத்தில் ஆழ்த்துகின்றன. ஏழு பாடல்கள். ‘வராக ரூபம்’  பாடல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

படத்தின் நகர்வுகளோடு தெய்வத்தின் பலத்திற்கு முன்னால் எப்பேற்பட்ட மனிதர்களும் சாமானியர்களே என்ற பாடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பழங்குடி மக்களின் சடங்குகளும் நம்பிக்கைகளும் அவர்களின் வாழ்வியலோடு கலந்தவை என்ற உண்மை வெளிப்படுகிறது. தெய்வங்களில் சிறு தெய்வம் – பெரு தெய்வம் என்ற பாகுபாடு இல்லை; எல்லா தெய்வங்களும் அதீத சக்தி நிறைந்தவையே என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் இடதுசாரி, ஜிஹாதிய சிந்தனைகள் பரவியிருந்த இந்தியத் திரையுலகம், தற்போது மண்ணின் தன்மையோடு மாறி வருவது பாராட்டுக்குரியது. நாத்திக நச்சுவாத திராவிடக் கருத்துக்களால் பீடிக்கப்பட்டிருக்கும் தமிழ்த் திரையுலகிலும் இந்த மாற்றங்கள் விரைவில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்ப்போம்.

$$$

காந்தாரா: எழுச்சியின் குறியீடு

-சுந்தர்ராஜ சோழன்

சிவராம் காரந்தின் ‘சோமனத்துடி’ ஒரு வீழ்ச்சியின் குறியீடு. ஆனால் ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ ஒரு எழுச்சியின் குறியீடு.

ஒரு சிறு நிலத்தைப் பெற்று உழவு செய்ய வேண்டுமென நினைக்கும் பண்ணையடிமை சோமனுக்குக் கிடைத்ததெல்லாம் தோல்வியுறு தருணங்கள் மட்டுமே. இதில் மதமாற்ற ஆசை காட்டப்படும் போதெல்லாம் அங்கே போனால் மட்டும் என்ன நடந்துவிட போகிறது? எல்லோருக்கும் நோவு வரும்,சாவு வரும் அதை இருந்தபடியே அனுபவிப்போம் என்று நினைக்கிறான் சோமன்.

இதைவிட பல நூற்றாண்டுகளாக வழிபட்ட ‘பஞ்சுருலி’ தெய்வத்தை விட்டுவிட்டு எப்படி மதம் மாறுவது? அதனுடைய கோபத்திற்கு யார் ஆளாவது என்ற எண்ணமே அவனை அமைதிகொள்ள வைக்கிறது.

‘பஞ்சுருலி’ தெய்வத்தின் மீது துளு மக்களுக்கு இருக்கும் ஆழமான பிடிப்பு என்னவென்பதை ‘சோமனத்துடி’ தொடங்கி ‘காந்தாரா’ வரை பார்க்கிறோம். பஞ்சுருலி என்ற வராஹ தெய்வம், இந்த நவீன ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்வதாகவே நான் புரிந்துகொள்கிறேன்.

தமிழில் ‘கர்ணன்’ என்ற திரைப்படம் தன் காழ்ப்பை நீக்கியிருந்தால், அதன் வன்மத்தை மட்டுப்படுத்தியிருந்தால், காந்தாராவின் உள்ளுறைச் செம்மையைப் பெற்றிருக்கும் என்று தோன்றுகிறது. கர்ணன் இந்த உலகத்தை எதிர்ப்பக்கம் நிறுத்தி தன்னைச் சார்ந்தவர்களை ஒரு பக்கம் நிறுத்துகிறது. ஆனால் ‘காந்தாரா’ தெய்வத்தையும், சகோதர சக்தியாக அரசையும் வர்ணித்து அதைத் தன் பக்கம் வைத்து, தீய சக்திகளின் துரோகத்தை எதிரே வைக்கிறது.

‘பஞ்சுருலி’ தன் மக்களுடைய தார்மிக சக்தி, அறத்தின் பெரு எழுச்சி. அது கண்களறியா நெருப்பு வேலியைப் போட்டு தன் மக்களைக் காக்கிறது. தன் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகத்தை அது வேரோடு அழிக்கிறது. அதற்கு ஊடகங்களாக தன் மக்களில் ஒருவனையே பயன்படுத்துகிறது.

இந்த இயற்கைக்கு ஒரு மொழி உள்ளது. அது நம்மோடு பேசுகிறது என்பதை காடுபட்டி சிவனும், வனத்துறை அதிகாரி முரளியும் உணர்ந்துகொள்ளும் தருணம் நிலத்திற்கும் அதிகாரத்திற்கும் வரும் இணக்கத்தைக் காட்டுகிறது.

யார் தங்களை ஆள வேண்டும், தங்களைப் பாதுகாக்க வேண்டுமென ‘பஞ்சுருலி’ தெய்வம் முடிவெடுக்கும் மாயத்தருணம் இறுதியில் வருகிறது.

இந்த மண்ணின் தெய்வங்களின் குரலைக் கேட்க விரும்பாத காலனித்துவப் பார்வை கொண்ட அரசுகளும், அதன் சட்டங்களும் இங்கே மக்களை ஆண்டால் நிம்மதி என்றும் கிடைக்காது. அந்தத் தெய்வங்களைப் புரிந்துகொள்ளும் அதிகாரத்துவமே, மக்களின் வாழ்வியல் அறத்தை உணர்ந்தது என போதிக்கிறது ‘காந்தாரா.  

காந்தாராவில் அந்த மன்னன் பஞ்சுருலியிடம் கேட்டுப் பெறும் நிம்மதியை நம்மாலும் அடைய முடிகிறது. இதை திரையில்  சாத்தியப்படுத்திய விதத்தைப் பார்க்கும் போதுதான் அதில் இருக்கும் தெய்வத்தன்மையை உணர முடிகிறது. படத்தின் இறுதிக்காட்சிகளை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.

இந்த நிலத்தின் மீதான அதிகாரம், செல்வத்தின் மீதான தன் ராஜ்ஜிய இருப்பு ஆகிய இவற்றில் இல்லை தன்னுடைய ‘நிம்மதி’ என்று தேடி அலைந்து, ‘தாயைப் போன்ற அரவணைப்பையும், தாய்மாமனைப் போன்ற பாதுகாப்பையும்’ தரும் தெய்வமான பஞ்சுருலியின் முன்னால் தன் வீரவாளை சரண் செய்யும் அரசன் இன்னும் கண் முன்னரே நிற்கிறான்.

எதை வேண்டுமானாலும் தருகிறேன், இந்தத் தெய்வத்தை என்னிடம் கொடுத்துவிடுங்கள் என்கிறான் அரசன். எதை இழந்தாலும், தங்களுடைய வேரான நம்பிக்கைகளை இழக்க விரும்பாத மக்கள் ‘பஞ்சுர்லி’ தெய்வத்தைக் கொடுத்தால் நாங்கள் வாழ்வதிலேயே அர்த்தம் இல்லை என்கிறார்கள்.

மக்களுக்கு வனத்தைக் கொடுத்து, வாழையடி வாழையாக தன் குலம் தழைக்க ‘பஞ்சுருலி’ தெய்வத்தை தன் நாட்டிற்கு அழைத்துச் செல்லும் மன்னன், பாரதத்தின் பெருமரபிற்கு அடையாளமாக நிற்கிறான்.

இங்கே பேரரசர்கள் தோன்றினார்கள், சிற்றரசர்கள், குறுநிலத் தலைவர்கள் என கடற்கரை மணலை விட அதிக எண்ணிக்கையில்   வந்து கொண்டேதான் இருந்தார்கள்.

கடல்சூழ்ந்த இப்பேருலகில் பாரதம் ஒரு புண்ணிய பூமி. அந்த அடைதற்கரிய பெருமை செல்வத்தாலோ, வீரத்தினாலோ நிலைத்த பதமல்ல. பாரதத்தின் வேர் வீடுபேற்றினைச் சிந்திக்கும் தர்மத்தில் ஒளிந்துள்ளது. அந்த தர்மம் இங்கே உயிர்களுக்குள் செந்தழல் போல வந்தெழுந்தபடியே உள்ளது.

சங்கப்பாடலான புறநானூற்றில் மூவேந்தரும் ஒருங்கே அமர்ந்திருக்கும் காட்சி ஒன்று ஔவையார் பாடலில் வெளிப்படும்.  ‘எது நித்தியமாக உங்ளோடு வருவது’ என ஔவை அவர்களுக்கு அறிவுரை கூறும் பாடலாக அது அமைந்திருக்கும். பரந்து விரிந்த தேசமோ, வென்று கருவூலம் சேர்த்த செல்வமோ துணை வராது. உங்களுடைய தர்மமும், நீங்கள் செய்த நல்வினையும் மட்டுமேதான் துணை வரும் என்று அவர்களுக்கு தன் போதனையைத் தருகிறார்.

பாரதத்தின் எல்லா மூலையிலும் இந்தக் குரல் எல்லாக் காலத்திலும் ஒலித்தபடியேதான்  உள்ளது.மேகத்திற்குள் நீரைப் போல மாறாத பேரரறம் ஒன்று இந்நிலத்தில் வியாபித்து நிற்கிறது. எல்லாவற்றிற்கும் ஆதியாய் அறிவித்துணர முடியாத அந்த அறமே நம்மை இயக்குகிறது.

பொருளியலால் வாழ்வை அணுக விரும்பாத அல்லது அதை உதறுவதைப் பெருமையாக நினைப்பதை போதிக்கும் தத்துவம் இங்கேதான் உள்ளது.

‘காந்தாரா’  படத்தைப் பார்த்து முடித்த பிறகு இப்போது வரை மனதில் மகாகவி பாரதி சொன்ன வரிகள்தான் வந்து விம்முகிறது..

 “தெய்வம் ஹிந்துக்களின் மேல் கடைக்கண் செலுத்திவிட்டது. நாம் கும்பிடும் சிலைகளெல்லாம் வெறும் கல்லும், செப்புமல்ல. மனிதர்களாலே சீர்படுத்த முடியாதபடி அத்தனை கெட்ட நிலையில் ஹிந்துக்கள் வீழ்ந்த சமயத்தில், மேற்படி தெய்வங்கள் காப்பாற்றக் கருதி முற்பட்டு நிற்கின்றன. நமக்குள்ளே மகா ஞானிகளும், சித்த புருஷர்களும் அவதரித்து விளங்குகிறார்கள். ஹிந்துக்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. இதனை எல்லோரும் தெரிந்து நடக்க வேண்டும்”.

$$$

சில முகநூல் பதிவுகள்:

1. காந்தாரா: தொன்மங்களின் இழை

-ஜெயகுமார் ஸ்ரீநிவாசன்

‘காந்தார’ எனில் மர்மமான காடு என மொழிபெயர்க்கலாம். ரிஷப் ஷெட்டியின் இயக்கம், நடிப்பில் வெளிவந்துள்,ள இரண்டரை மணி நேரம் நம்மை முழுமையாக உள்ளிழுத்துக் கொள்ளும் ஒரு அட்டகாசமான திரைப்படம். 

முழுக்கதையும் காட்டிலேயே நடக்கிறது. வனவாசிகளே கதையின் நாயகர்கள். 

ஒரு வன தெய்வத்திற்கு  ஒரு ராஜாவின் வாக்கும், அவரின் சந்ததியினர் அதை மறுதலிக்கையில் தெய்வம் தன்னை நம்பியவர்களைக் காப்பதுமான தெய்வீகத் தொன்மக் கதை. அதை எடுத்திருக்கும் விதத்தில் கலக்கியிருக்கிறார்கள். 

கம்பாலா,  பூத கோலா என்ற பாரம்பரிய கலைகளுடன் கதை ஆரம்பிக்கிறது. மலையாள தெய்யாட்டம் போன்றதொரு ஆட்டத்தில் தெய்வம் வந்திறங்கி தன்னை அண்டியவர்களைக் காக்க வாக்களிப்பதுடன் தன்னை ஆராதிக்கும் குடும்பத்தினரின் குறைகளைக் கேட்பதுமாக கதை தொடர்கிறது. 

மனசாந்தியும், உறக்கமுமில்லாமல் இருக்கும் ஒர் அரசன் மனசாந்தியை தேடிச்செல்ல, அடர்ந்த காட்டில் இருக்கும் ஓரிடத்தில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அவன் உணர்கிறான். அங்கு அந்த வனமக்கள் பூசிக்கும் ஒரு தெய்வம் இருக்கிறது. அந்தத் தெய்வத்தை தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்பும் அரசனுக்கு தெய்வம் ஒரு கட்டளை விதிக்கிறது. தனது குரல் ஒலிக்கும் தூரம் வரையிலான இடத்தை தன்னை நம்பி வாழும் மக்களுக்கு என்றென்றைக்குமாகத் தர வேண்டும் என. அதை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு தன்னுடன் தெய்வத்தை அழைத்துச் செல்கிறான் அரசன்.

காலம் ஓடுகிறது. புதிய தலைமுறைகளுக்கு இந்த நம்பிக்கை மூட நம்பிக்கையாகப் படுகிறது; கொடுத்த நிலத்தை மீண்டும் பெற முயல்கிறது. இறுதியில் என்ன ஆக வேண்டுமோ அப்படியே ஆகிறது. 

நாட்டுப்புறக் கதையை சினிமாவாக்க எவ்வளவு உழைப்பு தேவைப்படும்! அதை மிக சிரத்தையாகச் செய்திருக்கிறார்கள். 

கன்னடப் படமாக இருப்பினும்,  வசனங்கள் அவ்வளவாகப் புரியாவிட்டாலும் திரைக்கதை நம்மை படத்துடன் ஒன்ற வைப்பதுடன், மொழி தெரிந்த ஒரு படத்தைப் பார்ககும் உணர்வினைத் தந்துவிடுகிறது. 

படமாக்கலும், நாட்டுப்புறத் தெய்வத்தின் நடனமும்,  இறுதி 15 நிமிடங்களும் படத்தின் உச்சம்.  அதைப் புல்லரிக்காமல் பார்ப்பது கடினம். 

பல பத்தாண்டுகளுக்குப் பின்னர் காணும் கன்னடப் படம். பயந்துகொண்டே தான் சென்றேன். ஆனால் கவர்ந்துவிட்டார்கள். 

படத்தின் நாயகனின் நடிப்பு அட்டகாசம். கடைசி 15  நிமிடங்களுக்காக தன்னை படம் முழுக்கத் தயார் செய்திருக்கிறார் இயக்குநர். தனது முழுத்திறனையும் காண்பித்திருக்கிறார். 

நம் தொன்மங்களைப் பாதுகாக்க நமக்கு நினைவூட்டியதாகத்தான் இந்தப் படத்தை நான் பார்க்கிறேன். 

நாட்டார் கதைகளைக் காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு அதை நம்மிடமிருந்து பிரிக்க நினைக்கும் மதமாற்றக் கூட்டத்தின் சதி புரியாமல் இருக்கும் நம் மக்களுக்கு இது ஒரு திறப்பை உண்டாக்கும் என நம்புகிறேன்.  நமது கிராமக் கடவுளர்களுடன், குல தெய்வங்களுடன் இதை நமது மனம் இணைத்துப் பார்க்கும். 

தொய்வில்லா திரைக்கதையுடன், அருமையான ஒளிப்பதிவுடன் ஒரு நல்ல நாட்டுப்புறக்கதையொன்று திரைப்படமாகி இருக்கிறது. இசையைக் குறித்து தனியாகச் சொல்லும் அளவு என்னை கவரவல்லை என்றே சொல்வேன். அவசியம் தியேட்டரில் சென்று பாருங்கள்,  காட்டின் அழகையும் கதையின் அழகையும் முழுதாய்க் காணலாம்.

$$$

2. காந்தாரா: பேராச்சரியம்

-ஓகை. நடராஜன்

நேற்று காந்தாரா திரைப்படம் தமிழில் பார்த்தேன். அதை திரைப்படம் என்று சொல்வதை விட ஓர் அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும். படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் நம்மால் படத்தில் ஒன்ற முடியாமல் பல லாஜிக் ஓட்டைகள் அலைக்கழித்தாலும், அதன் பிறகு சற்று நேரத்தில், ஒரு கருந்துளை எல்லாவற்றையும் தன்னில் இழுத்துக் கொள்வது போல படம் நம்மை அதனுள் இழுத்துக் கொள்கிறது. அதன் பிறகு நாம் படத்தின் ஒரு பாத்திரமாக அந்த களத்தில் நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற உணர்வு வருகிறது. அவ்வளவுதான், படம் முடியும் வரை நாம் நாமாக இல்லாமல் படத்தின் பகுதியாக இருக்கிறோம்.

மிகக் குறைந்த செலவில், வெறும் ரூ. 16 கோடி பட்ஜெட்டில் ஒரு அற்புதத்தை நிகழ்த்தி இருக்கிறார்கள். 

இந்தியாவின் ஆன்மா சுரண்டப்படும் போது சிலிர்த்தெழும் உணர்வுகளைப் படமாக பிடித்தால் என்னவோ அதுவே இந்தப் படம்.

கர்நாடக மாநிலத்தில்  துளு பேசும் ஒரு வனப்பகுதியின் ஒரு சிறு நடப்பு இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. படம் எடுத்தவர்கள் கூட இது கர்நாடகவுக்கு உள்ளான படம் மட்டுமே என்று நினைத்துத் தான் எடுத்திருக்கிறார்கள். ஆனால் படம் வெளிவந்த உடனேயே பல மொழி திரைத்துறையிடமிருந்து இது தங்கள் மொழியில் வரவேண்டும் என்று சொல்ல,  படத்தயாரிப்பாளர்கள் உடனே பல மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு, அது இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

 இது ஒரு பேராச்சரியம். பெரும் அதிசயம். 

கர்நாடகாவுக்கு உள்ளேயும் கூட, மற்ற எல்லா மாநிலங்களுக்கும் வெளிப்படையாக நேரிடையான வழக்கம் இல்லாத விஷயமாகத் தெரியும் ஒரு நடப்பு, இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது என்றால், அதுதான் இந்திய ஆன்மாவின் வெளிப்பாடு. இந்திய ஆன்மா இந்து என்பதன் வெளிப்பாடு.

$$$

3. காந்தாரா: தர்ம தேவனின் எக்காளம்

-சித்தார்த் பாரிவள்ளல்

உணர்வுச் செறிவை ஏற்படுத்துவது எனும் இலக்கை இயம்புவதே இலக்கியத்தின் இலக்கு எனில், சர்வ நிச்சயமாக ‘காந்தாரா’ திரைப்படம் ஓர் இலக்கியமே. அதிலும் குறிப்பாக கடைசி இருபது நிமிடங்கள் தெய்வ சாந்நித்யத்தை உணரச் செய்து, மெய் சிலிர்க்கச் செய்து விட்டது. 

முதல் பாதியில்  வழக்கமான ஜனரஞ்சக சினிமாவின் போதாமைகளுடன்  இருப்பது போல கொஞ்சம் தோற்றம் தந்தாலும், கடைசியில் நம்மை அரட்டி எடுத்து விடுகிறது,  ‘காந்தாரா’.

இந்த திரைப்படத்தின் பேசுபொருள் தெய்வம் மட்டுமல்ல,  சர்வ நிச்சயமாக வேறு ஒன்று. 

அரவிந்தன் நீலகண்டன் இரண்டு மாதங்கள் முன்பு எழுதியதாவது:

இப்போது செயல்படும் காவல்துறை எனும் அமைப்பினை பிரிட்டிஷ்காரர்களால் தங்கள் சுயலாப காரணங்களுக்காக பிற காலனி தேசங்களில்  செய்ததைப் போல நம் நாட்டிலும் அறிமுகம் செய்திருந்தாலும். அந்த அமைப்பு சுதந்திரத்துக்குப் பின் பிற காலனி தேசங்களில் இருப்பது போல இந்தியாவில் இல்லை. பிற காலனி தேசங்களில் காவல் அமைப்பு  மலிந்துபோய்  காட்டாட்சி செய்யும் கடுங்குணங்களுடன் தொடர்கிறார்கள். அந்த அளவுக்கு இல்லாமல், பல சமயங்களில்  நம் நாட்டில் அந்தக் காவல் அமைப்பில் பல நல்லவர்கள் நம் கலாச்சார விழுமியங்கள் மீது மரியாதை கொண்டிருப்பது  இருப்பதை நாம் பல சமயங்களில் அறிகிறோம். மேலும் நம் பெரும்பான்மை சமுதாயமும் கோயில்கள் சமைத்து  பல கிராம நகரங்களிலும் காவல் துறையினரை அவர் தம் காக்கி உடுப்புடன்  நம் கலாச்சார காவல் தெய்வங்களின் பரிவார தேவதைகள் போல  வழிபடுகின்றனர்.

                   -ஸ்வராஜ்யா கட்டுரை

நம் மண்ணை, சமூகத்தைக் காத்தல் என்பது பண்பாட்டு விழுமியங்களை ஒழுகி, கலாச்சாரப் புரிதலுடன் நம் நாட்டுக் காவல் துறை செயல்படுவது  என்பதே. அதுவே அந்த அரசு அமைப்பு தன்னை தகவமைத்துக் கொள்ளத் தேவையானது என்னும் கருத்து தான் இந்தப் படத்தின் மையச் சரடு. 

நாயகி லீலா வனத்துறை காவலர் பயிற்சி பெற்று பணியில் சேர்ந்த நாளில் தம் கிராமத்துக்கு எதிரான நிலையை அவள் எடுக்க நேர்ந்தாலும், தனது மண்ணின் மீது அவளுக்கு இருக்கும் பிடிப்பு; கிஷோர் நடித்துள்ள வனத்துறை அதிகாரியின் பாத்திரத்தின் மூர்க்கம் மற்றும் மன மாற்றம்; அதனைப் புரிந்துகொண்ட நாயகன் சிவா அந்த வனக் காவல் அதிகாரியிடம்  “எனக்கு ஏதாவது நேர்ந்தால்  பின் நீங்கள் தான் என் மக்களுக்கு காவல்” எனக் கூறுவது;  வனத்துறை காவலர்கள் இறுதிச் சண்டையில் தெய்வத்தின் பரிவாரத்தைப் போல தீமைக்கு எதிராக நின்று சமர் செய்வது; அதன் பின் தெய்வம் பூத கோலத்தில்,  காவல் துறை அதிகாரிகளுக்கு ஆதுரமாய் ஆசி வழங்கிச் செல்வது –  என படம் முழுவதும் இக்கருத்து, கண்ணுக்குத் தெரியாத வராஹ வாகனம் ஏறிவரும் குளிகா தெய்வத்தைப் போலவே நீக்கமற நிரவி நிற்கிறது. 

இந்தப் படத்தின் ரிஷப் ஷெட்டியும், கே.ஜி.எஃப். படத்தின் யாஷ் போன்றவர்களின்  கன்னட சினிமாக்கள் கன்னாபின்னா என வெற்றி பெறுவதையும், அவர்கள் நமக்கு எல்லாம் புரியும்படி தமிழிலும், பணிவாகப் பேசுவதையும் பார்க்கும்போது, தறிகெட்டு நிற்கும் நமது தமிழ் சினிமாவின் எதிர்காலம் குறித்து கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.

தெய்வம் என்பதே ஜனநாயகமானது, மக்களுக்கானது, மக்களைக் காப்பவரை தம் பரிவாரமாகக் கொண்டது என்பதை மண்ணின் மணத்துடன் அழுத்தமாக  பதிவு செய்துள்ள  ‘காந்தாரா’ – தர்ம தேவனின் எக்காளம்.

$$$

4. காந்தாரா: மக்களின் நம்பிக்கை

-இரா.ராஜகோபாலன்

காணும் ஒவ்வொன்றிலும் இறைவனைக் காணுதல் நமக்குச் சொல்லித் தரப்பட்ட மரபு. அதனால் தான் காடு, மழை, மலை, இயற்கை, ஆழி, மிருகங்கள், தாவரங்கள் என அனைத்திலும் இறைவனைப் படைத்தான் நம் முன்னோன். ஊர்த் திருவிழா, அதில் சடங்கு, பூஜை, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, கெடா வெட்டு, சேவல் சண்டை,  சாமி ஆட்டம், குறி சொல்லுதல் – இதெல்லாம் நம் ஆதிகாலத்து கலாச்சார நீட்சிகள். அந்தந்த ஊரில் காவல் தெய்வங்கள், சிறு தெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள் என வழிபாடு நடக்கும்; அதற்கான ஒரு காரண காரியம் இருக்கும். இது நம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உண்டு. வெவ்வேறு பெயர்களில் மாறுபடும் அவ்வளவே.

இதேபோல துளுநாடு எனப்படும் மங்களூரை ஒட்டிய கர்நாடகம் வாழ் ஒருசார் மக்களின் தெய்வம் பஞ்சுருலி, அதை நம்பி வாழும் மக்கள் அவர்களின் காந்தாரா காடு,  அதனையொட்டிய‌ வாழ்க்கை என அதகளம் செய்து சொல்லி இருக்கும் படம் காந்தாரா.

படத்தைப் பற்றிச் சொல்வதற்கு முன், படத்தின் இயக்குனர்- நாயகன் ரிஷப் ஷெட்டியின் நேர்காணலை கொஞ்சம் பார்த்தேன். அதில் அவர் சொன்ன சில பதில்கள் வருமாறு:

கே: இந்த படம் எப்படி Pan Indian audience, International audience பலதரப்பட்ட மக்கள் ரசிப்பார்கள் என நினைத்தீர்களா?

ரிஷப்:  அப்படி எல்லாம் இல்லை சார். நம்ம கதைகளில் தான் எல்லாமே இருக்கு. The more regional is the more Pan Indian or International.

கே: இந்தப் படத்தில் சாமி வந்து ஆடும்போது ஒரு விசித்திரமான சவுண்ட் வரும்படி காட்சிகள் இருக்கு. அதைச் செய்து காட்ட முடியுமா? (கொஞ்சம் நக்கலாக)

ரிஷப்: சார் அது இன்னமும் ஒரு சார்பு மக்களோட தெய்வம் சம்பந்தப்பட்ட விசயம்.. எக்காரணத்தைக் கொண்டும் நம்பிக்கையைப் பழிக்கக் கூடாது.

கே: நிறைய இந்துத்வா படங்கள் வருகிறது.. நீங்களும் அப்படி ஒரு படம் தான் எடுத்து இருக்கீங்க... இதுக்கு என்ன பதில்? (வழக்கம் போல இதிலும் அரசியலை நுழைக்க முயற்சி செய்யும் கூட்டம்!)

ரிஷப்: நீங்கள் சொல்வதெல்லாம் எனக்குத் தெரியாது. அதுக்கு நீங்க என்ன வேண்டுமானாலும் பெயர் வைத்துக் கொள்ளலாம். நான் என் மண் சார்ந்த மண்ணின் மக்களின் நம்பிக்கை சார்ந்த படம் எடுத்து இருக்கிறேன்.

இந்த பதில்களை இங்கே தரக் காரணம்,  எவ்வளவு தெளிவாக அறம் தொட்டு இந்தப் படைப்பை ரிஷப் தந்துள்ளார் என்கிற முன்னோட்டத்தைச் சொல்லவே. அவரது பதில்கள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

1840-களில் தொடங்குகிறது படம். எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லாத ஒரு ராஜா, எங்கு தேடியும் கடைசியாக ஒரு கிராமத்து மக்கள் வழிபடும் பஞ்சுருலி எனப்படும் தெய்வத்தைப் பார்த்து பரவசம் அடைகிறார் (இது விஷ்ணுவின் வராக அவதார வடிவம்)  அந்த தெய்வம் தனக்கு வேண்டும் என கிராம மக்களிடம் கேட்க, கிராம மக்கள் மறுக்க, அப்போது தெய்வம் அங்கே இருக்கும் மனிதரின் மீது இறங்கி (சன்னதம்) “என் குரல் கேட்கும் இடம் வரை உள்ள நிலத்தை இந்த மக்களுக்கு எழுதித் தர சம்மதமா?” என ராஜாவைக் கேட்க, சம்மதம் தெரிவித்து அப்படியே செய்கிறார் ராஜா! அதேசமயம், தெய்வத்தின் ஒரு எச்சரிக்கை, “இது எந்தக் காலமாவது தடைப்பட்டால் விளைவுகளை உன் சந்ததி சந்நிக்க நேரிடும்” என்பதே.

1970களில்  ‘பூத கோலா’ எனப்படும் ஒருவித நம்மூர் மயானக் கொள்ளை சாமி ஆட்டம் போன்ற ஒரு ஆட்டத்தின் மீது, சாமி வந்து ஆடும் நபரிடம் ராஜாவின் சந்ததி ஒருவர் என் நிலத்தைத் திருப்பிக் கொடு என கேட்க, நீ சாமி இல்லை என நக்கல் அடிக்க, சாமி ஆடுபவர் ஆக்ரோஷமாய் கத்திக்கொண்டே காட்டில் மறைந்து விடுகிறார்…. விரைவில் கேள்வி கேட்ட ராஜாவின் சந்ததி ஆளும் ரத்த வாந்தி எடுத்து இறக்கிறார்…

என்ன கதையைச் சொல்லி விட்டீர்களே என கோபப்படாதீர்கள். இது படத்தின் ஆரம்பம் மட்டுமே. இப்படி டாப் கியரில் தொடங்குகிறது படம். நம்மையும் கட்டிப் போட்டுவிடுகிறார்கள்.

அதன்பிறகு 1990களில் படம் தொடங்குகிறது.  எந்த ஒரு இடத்திலும் பெரிதாக போரடிக்காமல் செல்கிறது.  கம்பாலா (எருமை பந்தயம்) வீரனாக, பூத கோலா ஆட்டம் ஆடும் பரம்பரை நபராக அறிமுகம் ஆகும் கதாநாயகன் ரிஷப் அவ்வளவு கச்சிதம். படத்தின் தூண் படத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இவர் தான்.

அவருக்கு எதிராக District Forest Officer ஆக கிஷோர். ஊர்த் தலைவராக அச்யுத் குமார். இருவரும் கனகச்சிதமாகப் பொருந்தும் பாத்திரங்கள். பெரிய திருப்பம் இல்லாத, தெளிவான திரைக்கதையில் நம்மைக் கட்டிப் போடுவது, கதை நகரும் தளமும், அது தரும் காட்சிகளும்.

ஒளிப்பதிவுக்கு தனியாக விருதினை எடுத்து வைப்பார்கள் எனக் கருதுகிறேன். காட்டின் அழகும், அது தரும் மிரட்டலும் ஒருசேர நமக்கு கடத்தப்படுகின்றன. எப்படி லைட்டிங் வைத்தார்கள்? மிரட்சி மாறாமல் நம்மையும் காட்டுக்குள் அலைய வைத்தது போல உணர்வு.

அடுத்ததாக background score மற்றும் sound effects . பூத கோலா காட்சிகளாகட்டும்… காட்டில் இருக்கும் அமானுஷ்யங்கள், கம்பாலா காட்சிகள், க்ளைமேக்ஸ் எல்லாவற்றிலும் மிரட்டுகிறார்கள்.

காடு – ஆதிகுடிகள்- அரசு  அதிகாரிகள் – ஜமீன்தார்கள் என்ற நான்குமுனைக் கதையில் மெல்லிய நகைச்சுவை ஆங்காங்கே சொருகியதற்கும் பாராட்டுகள்.

இருந்தாலும் சில முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள், சில இரட்டை அர்த்த வசனங்கள் ‘இந்த’ படத்துக்கு தேவையில்லை என்று எனக்கு தோன்றியது… படத்தின் மைனஸ் என்றுகூட சொல்வேன்.

முதல் இருபது நிமிடங்கள் உங்களை வசீகரித்து ஆவலைத் தூண்ட, கடைசி இருபது நிமிடங்கள் உங்களை மிரட்டி விடுகிறது  காந்தாரா திரைப்படம். இறுதியில் ஒரு முக்கிய காட்சியில் உடல் சிலிர்த்துப் போவது உறுதி.  வெளியே வந்தபின்னும், அந்த சத்தம் உங்கள் வீட்டு வரைக்கும் உடன் வருகிறது.

பாகுபலி தந்த வெற்றி வழிகாட்டி, நமக்கு பொன்னியின் செல்வன் வந்தது போல, இந்தப் படத்தின் வெற்றி நம்மூரிலும் இருக்கும் ஆயிரமாயிரம்  நாட்டார் கதைகள், சிறு தெய்வங்கள், மண் சார்ந்த கதைகளையும் தோண்டி எடுத்து படைப்புகளாக காட்சிப்படுத்த உந்துதலாக இருக்கும்.

$$$

5. காந்தாரா: தமிழ்ப் படங்கள் மாறுமா?

-பி.பிரகாஷ், கோவை

மைசூர் நண்பர் அழைத்து ‘காந்தாரா’ படத்தைப் பார்த்து விட்டாயா? என்றார்.  வெறும் ரூ. 16 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் சக்கைப் போடு போடுகிறதாம். கோடிக்கணக்கில் விளம்பரம் கொடுத்து பில்டப் கொடுக்காமலேயே நூறு கோடி வசூலைக் கடந்து விட்டதாம்.

இந்தத் திரைப்படம் பாரதத்தின் ஆன்மிகப் பிணைப்பை,  துளு நாட்டின் காட்டில் வாழும் மக்களின் வழியாகப் பிரதிபலிக்கிறது.  தெய்வத்தோடு பின்னிப் பிணைந்து மக்கள் வாழும் வாழ்வியலை மிகச் சிறப்பாக முன்னிறுத்துகிறது. வசதிகள் எனும் பெயரில் பொருள் சார்ந்த ஒரு இயந்திரச் சிறையில், நகரங்கள் எனும் நரகங்களில் அடைப்பட்டிருக்கும் நம் கோர முகத்தை நமக்கு உணர்த்துகிறது.

தற்போது தொட்டதெற்கெல்லாம் ‘கம்ப்யூட்டர்  கிராஃபிக்ஸ்’ எனத் திரியும் இயக்குநர்கள் மத்தியில், மிகக் குறைந்த கிராஃபிக்ஸ் மட்டுமே பயன்படுத்தப்பட்டு, நம் பழங்குடி மூதாதையரின் வாழ்வியலை இத்திரைப்படம் அச்சு அசலாக அப்படியே வெளிப்படுத்துகிறது. இயக்குநர் ‘ரிஷப் ஷெட்டி’,  அற்புதமாக நடித்துள்ள படக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

***

நண்பரிடம் காந்தாரா படம் குறித்து குறிப்பிட்டுப் பாருங்கள் என்றேன், அவரோ விடாப்பிடியாக நானும் வந்தேயாக வேண்டும் என மீண்டும் இழுத்துச் சென்று விட்டார்.

பலருக்கு இந்தப் படத்தில் அப்படி என்ன உள்ளது  என்றுகூடத் தோன்றலாம்.  ஆனால் உலக சரித்திரத்தை சிறிதளவு அறிந்தவன் என்கிற வகையில், அந்தக் கள்ளம் கபடமற்ற வனவாசிகள், சனாதன தர்மம் உட்பட உலகம் முழுவதும் இருந்த/ இருக்கும் இயற்கை வழிபாடுகளின் வடிவமாகவும், அந்த ராஜாவின் வாரிசுகள் தெய்வீக வழிபாடுகளை ஏளனம் செய்யும் ஆப்ரகாமிய மதங்கள், திராவிடக் கூட்டங்களின் வடிவமாகவுமே அடியேனுக்குத் தோன்றியது.

தெய்வம் என்பது சத்தியமானது.  தெய்வபலம் என்பது எல்லாவற்றையும் விட மேலானது. தெய்வீகமே இந்த மண்ணின் ஆதாரம் என நினைக்கும் ஒவ்வொருவரையும் இந்த திரைப்படம் வசீகரிக்கும். 

படம் பார்த்து விட்டு வெளிவரும் போது, இரண்டாவது முறை என்பதையும் மீறி, அந்த இறுதிக் காட்சிகளில் அடியேனின் கண்களில் படிந்திருந்த ஈரம் இன்னும் கூட காய்ந்திருக்கவில்லை.  பக்கத்து தியேட்டரில் பொன்னியின் செல்வன் பதாகையின் பில்டப்பைப் பார்த்து,  “இப்படியெல்லாம் படம் தமிழில் எப்போது எடுக்கப் போகிறீர்கள் பாவாடைப் பதர்களே?” என மனதில் தோன்றியது.

நீங்கள் தவிர்க்காமல் பார்க்க வேண்டிய படம்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!

$$$

6. காந்தாரா: புதிரான காடு

-சி.பி.விவேக்

 “விவேக் இது உங்க படம். மறக்காம தியேட்டர்ல கன்னடத்துலயே பாருங்க”  -என  தோழர் சொன்னதும், கன்னடப் படம் எப்படி என்  படமாக இருக்க முடியும் என்ற சிந்தனையில் ட்ரைலர் கூட பார்க்காது, பெரும் எதிர்பார்ப்புடன் படத்தைக் காணச் சென்றேன். படம் முடித்து வெளியே வரும் போது சிலிர்த்து, தேகத்தில் முடியெல்லாம் எழுந்து நின்றது. கண்கள் குளமாகி எனக்குள்ளே கூறிக்கொண்டேன்: ஆம் இது என்னோட படம் தான்.

நாட்டார் குல வழிபாடு எனும் மண்ணின் சாமிகளை மறந்துபோய், நமக்கு கொஞ்சமும் ஒட்டாத மரபுகளைக் கொண்டாடும் இந்திய சமூகத்தில் ஒரு Pan Indian படமாக பழங்குடிகளின் சாமிகளையும், அவர் தம் சக்திகளையும், சாமியாடுபவர்களின் வாழ்வியலையும், நிலத்திற்கான போராட்டத்தையும், சாதி ஏற்றத் தாழ்வுகளையும் ஒருசேரக் காட்டி ,ஆஸ்கார் தரத்திற்கு உயர்ந்து நிற்கிறது காந்தாரா. 

“உனக்கு நிம்மதி கொடுக்கிறேன், உன்னுடனே வந்துவிடுகிறேன். ஆனால் நான் கத்தும்போது என் குரல் கேட்கும் திசையளவு நிலத்தை என் மக்களுக்கு கொடு” என ராஜாவிடம் கேட்ட ஒரு தெய்வம், பின்னர் அந்த நிலம் பிடுங்கப்படும்போது என்ன செய்தது என்பதை தத்ரூபமாகச் சொல்லி இருக்கிறார்கள்.

காட்டு விலங்குகளை தெய்வமாக வழிபடும் வட கேரள, தென் கன்னடப் பழங்குடி மக்களின் வாழ்வியலை உரித்துக் காட்டியுள்ளது காந்தாரா. காந்தாரா எனும் சொல்லுக்கு புதிர் நிறைந்த காடு என அர்த்தம். அந்தப் புதிர்களை தியேட்டரில் கன்னடத்திலேயே காண பரிந்துரைக்கிறேன்.

13 வருடங்களுக்கு மேல் சாமியாடும் வழக்கம் கொண்ட என்னால் படத்தோடு ஆத்மரீதியாக ஒன்ற முடிவது போல, ஒவ்வொருவருக்கும் ஒரு  ‘கனெக்ட்’ கொடுக்கிறது காந்தாரா. கிளைமாக்ஸில் பார்ப்போரின் கைகள் கரவொலி எழுப்பாமல், திரையில் வரும் சாமியை வணங்கி நிற்கின்றன.

சாமி உண்டு, சாமி உண்டு என ஓங்கி முழங்கும்  காந்தாரா படக்குழுவினர் இந்திய சினிமாவின் பெருமிதம்.

$$$

7. காந்தாரா: பேரனுபவம்

-அ.பார்த்திபன், திருப்பூர்

காந்தாரா திரைப்படம் பார்த்தது ஒரு மறக்க முடியாத அனுபவம். படம் மிரட்டி இருக்கிறது. சனாதன தர்ம நம்பிக்கைகளை கிண்டல் அடிக்கும் தமிழ் திரை உலகத்திற்கு இந்தப் படம் ஒரு செருப்படி!

இறுதிக் காட்சியில் கதாநாயகன் சன்னதம் கொண்டு நடனமாடுகையில் உண்மையிலேயே என் உடம்பு துள்ளி அதிர்ந்தது! தலை நடுநடுங்கியது! கால் தரை தொட மறுத்தது! என்னால் சுதாரிக்க முடியவில்லை. எழுந்து ஆக்ரோஷமாகக் கத்தி விடுவேனோ என்ற எண்ணம் ஏற்பட்டது! கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வந்துகொண்டே இருந்தது! வாய் காற்றை ஊதி ஊதித் தள்ளியது!

கரகாட்டக்காரன் திரைப்படம் வந்தபோது இறுதிக் காட்சியில் பெண்கள் சாமியாடுவதை நான் பார்த்திருக்கிறேன்.ஒருவாறு என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். அரங்கை விட்டு வெளியே வந்து தியேட்டரில் உள்ள ரெஸ்ட்ரூம் சென்று அங்குள்ள பெரிய நிலைக் கண்ணாடியில் எனது உருவத்தைப் பார்த்தேன். கண்களின் ரத்த நாளங்கள் செக்கச் சிவந்திருந்தன.

பேரனுபவம்.

$$$

One thought on “காந்தாரா: வனக் கடவுளின் முழக்கம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s