-காம்கேர் கே. புவனேஸ்வரி

முன்னோடி பெண் தொழில் முனைவோரும், நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள எழுத்தாளருமான செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி, சென்னையில் உள்ள, மென்பொருள் தயாரிக்கும் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் இயக்குநருமாவார். அவர் எழுதி, காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் வெளியிட்டுள்ள ‘இலக்கில் கரையுங்கள்’ என்ற இ-புத்தகத்தில் (E-Book) இருந்து சில பகுதிகள் இங்கே நமக்காக...
நாம் தினமும் எத்தனையோ வேலைகளைச் செய்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமையும் இருக்கிறது. அந்தக் கடமையுடன்தான் நாளைத் தொடங்குகிறோம்.
கண் விழிப்பது, குளிப்பது, சமைப்பது, சாப்பிடுவது, வீட்டு வேலை செய்வது என அவரவர் வேலைகளை செய்வதில்தான் நாளின் தொடக்கத்தை ஆரம்பிக்கிறோம். அப்படிச் செய்யும் வேலைகள் ஒரே மாதிரியாக அன்றாடம் செய்யும் வழக்கமான பணிகளாக இருப்பதால்தான் வாழ்க்கையில் அலுப்பும் சலிப்பும் ஏற்படுகிறது. காலையில் கண் விழிக்கும்போதே இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாமே என்ற ஏக்கத்தை உண்டுசெய்கிறது.
இப்படி இல்லாமல் காலையில் எழுந்து நமக்கே நமக்கான ஒரு வேலையைச் செய்து நாளின் தொடக்கத்தை ஆரம்பிப்போமேயானால் அதுவே நம் அன்றைய தினத்தின் ஆகச் சிறந்த பிரார்த்தனையாக அமையப்பெறும்.
நமக்கே நமக்கான வேலை என்றால் என்ன? வீட்டில் நம் ஒவ்வொருவருக்கும் நமக்கான கடமைகள் உள்ளன. அவற்றைச் செய்ய ஆரம்பிப்பதற்கு முன் நமக்குப் பிடித்தமான வேலையைச் செய்வதுதான் நமக்கே நமக்கான வேலை. அது பத்திரிகைகள் படிப்பதாக இருக்கலாம். செய்தித்தாள் வாசிப்பதாக இருக்கலாம். தோட்டத்தில், மொட்டை மாடியில் வாக்கிங் செல்வதாக இருக்கலாம். செடி கொடிகள் இருந்தால் அதனைப் பார்த்து ரசிப்பதாக இருக்கலாம். அதற்கு தண்ணீர் ஊற்றி மானசீகமாக அவற்றுடன் பேசி மகிழ்வதாக இருக்கலாம். இப்படி ஏதோ ஒன்று.
நான் +2 படித்துக்கொண்டிருக்கும்போது எங்கள் ஆங்கில ஆசிரியர் எங்களிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.
‘காலையில் எழுந்ததும் நீங்கள் என்ன செய்வீர்கள்?’
சக மாணவிகள் ஒவ்வொருவரும் ஏதேதோ சொன்னார்கள். காபி குடிப்போம், டீ சாப்பிடுவோம், ஹோம் ஒர்க் செய்வோம், குளிப்போம்… இப்படி சாதாரண வேலைகளே அவை.
அதற்கு அவர், ‘இதெல்லாம் எல்லோரும் செய்வதுதானே… இதைத் தவிர வித்தியாசமாக யாரேனும் ஏதேனும் செய்கிறீர்களா?’ என்று கேட்டார்.
யாரிடம் இருந்தும் எந்த பதிலும் வரவில்லை.
அப்போது அவர் தான் காலையில் எழுந்ததும் தன் வீட்டுத் தோட்டத்தில் வாக்கிங் சென்றுகொண்டே செடி கொடிகளுடன் பேசுவதாகவும், தண்ணீர் ஊற்றுவதாகவும் சொன்னார். அதனால்தான் அவர் நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பதாகக் கூறினார்.
என் அம்மா தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை செய்தித்தாள் வாசிப்பது, பத்திரிகைகள் வாசிப்பதை பல வருடங்களாகவே வழக்கமாக வைத்துள்ளார்.
என் அப்பா காலையில் எழுந்ததும் வாக்கிங் செல்வார். வாக்கிங் செல்வதற்குக்கூட முகம் கழுவி, விபூதி இட்டுக்கொண்டு புத்துணர்வுடன்தான் கிளம்புவார்.
இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று. அதைத்தான் நான் அவரவர் மனதுக்குப் பிடித்த வேலை என்கிறேன்.
பிரார்த்தனை என்பது என்ன? கண் மூடி மனதை ஒருமுகப்படுத்தி ‘கடவுளே… இன்றைய தினம் நல்லபடியாக அமைய வேண்டும்’ என எண்ணுவதுதானே?
நீங்கள் உங்களுக்கே உங்களுக்கான நேரத்தை விடியற்காலையில் ஒதுக்கி அந்த நேரத்தில் உங்கள் மனதுக்குப் பிடித்த ஒரு வேலையை செய்து நாளைத் தொடங்கிப் பாருங்கள். பிரார்த்தனை செய்வதற்கு நிகரான, ஏன் அதைவிட ஒருபடி மேலான பலனைப் பெற முடியும்.
இதனால்தான் சொல்கிறேன் ‘வேலையே பிரார்த்தனை’.
இப்படி பிடித்த வேலையுடன் நாளைத் தொடங்கி, அதை ஈடுபாட்டுடனும் செய்யும்போது மனநிறைவு பொங்கிப் பிரவாகமாக வழியும்; தியானமும் யோகாவும் செய்தால் கிடைக்கும் அமைதியையும் நிதானத்தையும் ஒருசேரப் பெற முடியும். அதுவே உடலுக்கும் மனதுக்கும், குதூகலத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். அந்த ஊக்கமே நாள் முழுவதும் நாம் செய்கின்ற எல்லாப் பணிகளையும் ஈடுபாட்டுடன் சந்தோஷமாகச் செய்ய வைக்கும்.
அது நாம் செய்யும் எல்லாப் பணிகளுக்கும் ஒரே முக்கியத்துவம் கொடுக்கும் பக்குவத்தை ஏற்படுத்தும். செய்கின்ற எல்லா வேலைகளையுமே முக்கியமானதாகக் கருதினால் எல்லாவற்றுக்குமே ஒரே மாதிரி முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தால், எல்லாவற்றையுமே ஈடுபாட்டுடன் செய்தால்… பிறகென்ன நாள் முழுவதும் தியானமும் யோகாவும் செய்வதைப் போலத்தான்.
முக்கியமான வேலைக்கும் முக்கியமில்லாத வேலைக்கும் வேறுபாட்டை உணர்ந்து, எதை முதலில் செய்வது என நாம் முன்னுரிமை கொடுக்கலாம். ஆனால் அந்தச் செயலைச் செய்யும்போது நாம் காட்டும் ஈடுபாட்டில் சமசரம் செய்துகொள்ளவே கூடாது. அதுதான் நான் சொல்ல வருவது.
ஜர்னலிசம் படிக்கும் ஒரு கல்லூரி மாணவி தன் ப்ராஜெக்ட்டுக்காக என்னை தொலைபேசி வாயிலாக சமீபத்தில் ஒரு பேட்டி எடுத்தார். அவர் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக நிதானமாக 20 நிமிடங்களுக்கும் மேல் பதில் சொல்லிக்கொண்டே வந்தேன். அவர் என்னிடம் நன்றி சொல்லிவிட்டு ‘நானும் என் கல்வி சார்ந்து பலரிடம் பேட்டி எடுத்துள்ளேன் மேடம், ஆனால் யாருமே வயதில் சிறியவளான எனக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து பேசியதே இல்லை… ஒரு வார்த்தை, இரண்டு வார்த்தைகளில் பேசி முடித்துவிடுவார்கள்…’ என்று நெகிழ்ச்சியாக சொன்னபோது நான் கூறிய ஒரே ஒரு விஷயம் இதுதான்.
‘நான் ஒரு வேலையை ஒப்புக்கொண்டு செய்ய ஆரம்பித்துவிட்டால் அதனால் பணம், புகழ், அங்கீகாரம் இதெல்லாம் வருகிறதோ வரவில்லையோ அதெல்லாம் இரண்டாம்பட்சமே. நான் செய்யும் அந்த வேலையில் நான் காட்டும் ஈடுபாடு என்பது எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் மரியாதை. யாரேனும் தம்மைத் தாமே மரியாதைக் குறைவாக நடத்துவார்களா? அத்துடன் நான் செய்யும் எல்லா வேலைகளுமே என்னைப் பொருத்த வரை அதிமுக்கியமானவை. முக்கியம், முக்கியமில்லை என்ற பாகுபாடே காட்டுவதில்லை. சமரசமும் செய்துகொள்வதில்லை.’
இதனால்தான் சொல்கிறேன் ‘ஈடுபாடே தியானம்’.
பிடித்த வேலையுடன் நாளைத் தொடங்குவோம். எல்லா வேலைகளுக்கும் ஒரே மாதிரியான முக்கியத்துவத்தைக் கொடுப்போம்.
இதைத்தான் ‘வேலையே பிரார்த்தனை, ஈடுபாடே தியானம்’ என்று சொல்கிறேன்.
நான் இப்படித்தான் செயல்படுகிறேன். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.
ஒரே வேலையை தொடர்ச்சியாகச் செய்ய வேண்டாமே!
ஒரு சிலரைப் பார்த்திருப்போம். ஒரே வேலையை பல மணி நேரங்கள் செய்துகொண்டே இருப்பார்கள். அப்படிச் செய்யும்போது என்னதான் ஈடுபாட்டுடன் ஆர்வமாகச் செய்தாலும் மனம் சோர்வடையும். உடலுக்கும் அலுப்புத் தட்டி, ஓய்வு எடுக்குமாறு கைகளும் கால்களும் கெஞ்சும்.
இதன் காரணமாய், சாதாரணமாக அந்த வேலையை முடிக்க 24 மணி நேரம் ஆகும் என்றால் அவர்களுக்கு 48 மணி நேரம்கூட ஆகலாம். காரணம் ஒரே வேலையை தொடர்ச்சியாகச் செய்யும்போது ஏற்படும் அயற்சி, பணியின் வேகத்தைக் குறைக்கும்.
இதற்குப் பதிலாக எப்போது மனதுக்கு அலுப்பு ஏற்படுகிறதோ அப்போது சிறிய ‘ப்ரேக்’ எடுத்துக்கொண்டு வேறு வேலையில் கவனம் செலுத்திவிட்டு முகம் கழுவி புத்துணர்வுடன் மீண்டும் பழைய வேலையில் கவனம் செலுத்தினால் அந்த வேலை குறித்த நேரத்தில் முடியும்.
இதுதான் நாம் எடுத்துக்கொண்ட வேலையை சலிப்பில்லாமல் செய்ய உதவும் ‘லாஜிக்’.
சிறு வயதில் தேர்வுக்காகப் படிப்பதற்கு அளிக்கப்படும் விடுமுறை தினங்களில் நான் தொடர்ச்சியாக படித்துக்கொண்டே இருப்பேன். கணிதம் என்றால் பேப்பரில் போட்டுப் பார்ப்பேன். இதர சப்ஜெக்ட்டுகளை வாய்விட்டு நடந்துகொண்டே படிப்பேன். இதனால் கால்வலி ஏற்படும், தொண்டை வலிகூட எடுக்கும். கணிதம் போட்டுப் பார்த்துப் பார்த்து கைவிரல்களும் வலிக்க ஆரம்பிக்கும். இதன் தொடர்ச்சியாய் மனமும் சோர்வடையத் தொடங்கும்.
இதுபோல எப்போது என் உடலும் மனமும் சோர்வடையத் தொடங்குகிறதோ அப்போது ஃபேனை முழு வேகத்தில் வைத்து, அறையை இருட்டாக்கிக்கொண்டு கண்களை மூடி ஆழ்ந்து தூங்கிவிடுவேன். அலாரம் வைத்ததைப் போல சரியாக 15 நிமிடங்களில் விழிப்புத் தட்டும். 1 மணி நேரம் தூங்கிய புத்துணர்வு கிடைக்கும். என் உடலும் மனமும் முழுமையாக சார்ஜ் ஆகிவிட்ட சுறுசுறுப்பைக் கொடுக்கும். பிறகென்ன, முகம் கழுவி புத்துணர்வுடன் படிக்க ஆரம்பித்துவிடுவேன்.
அதுபோல கணிதத்தை 2 மணி நேரம் தொடர்ச்சியாக போட்டுப் பார்த்துக்கொண்டே இருந்தால் எளிமையான கணிதம் கூட ஏடாகூடமாகி தப்பும் தவறுமாக விடை கொடுக்கும் அளவுக்கு என் கவனம் சிதறும். அப்போது அந்த பாயின்ட்டில் கணிதம் பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு வேறு சப்ஜெக்ட் படிக்க ஆரம்பித்துவிடுவேன். அரை மணி நேரம் வேறு சப்ஜெக்ட் படித்துவிட்டு கணிதத்துக்கு மீண்டும் வந்தால் விடைகள் சுறுசுறு வேகத்தில் வந்துகொட்டும்.
இதே லாஜிக்கை என் நிறுவனத்தில் செயல்படுத்தலாம் என நினைத்து மதியம் சாப்பிட்ட பிறகு 20 நிமிடங்கள் கண் மூடி தூங்கிவிட்டு பணிகளைத் தொடரலாம் என்ற பழக்கத்தை அறிமுகப்படுத்தி, மதிய உணவு இடைவேளையை 20 நிமிடங்கள் அதிகரித்துக்கொடுத்தேன். ஒருசிலர் எங்கள் அலுவலக பூஜை அறையில் அந்த நேரத்தில் யோகா செய்வார்கள். ஒருசிலர் குட்டித்தூக்கம், இன்னும் ஒருசிலர் பத்திரிகைகள் வாசித்தல். இப்போதெல்லாம் பெரும்பாலும் மொபைலில்தான் மனதைக் குவிக்கிறார்கள். ஓய்வெடுக்க நேரம் கொடுத்தாலும் அதை சரியாகப் பயன்படுத்துவதில்லை. அந்தப் பொன்னான நேரத்தையும் மொபைலுக்கே தாரை வார்த்துக் கொடுத்து விடுகிறார்கள்.
நாம் கம்ப்யூட்டரில் ஃபோட்டோஷாப்பிலோ அல்லது அனிமேஷன் சாஃப்ட்வேர்களிலோ வேலை செய்துகொண்டிருக்கும்போது சில மணி நேரங்களில் நம் கம்ப்யூட்டரின் வேகம் குறைந்ததைப் போல தோன்றும். ஃபைல்களைத் திறப்பதற்கும் மூடுவதற்குமே நம் பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு நேரம் எடுத்துக்கொள்ளும்.
அந்தச் சமயத்தில் நாம் செய்துகொண்டிருக்கும் வேலைகளை ‘சேவ்’ செய்துவிட்டு கம்ப்யூட்டரை ‘ரீஸ்டார்ட்’ செய்து கொண்டு வேலைகளைத் தொடர்ந்தால் கம்ப்யூட்டர் சுறுசுறு வேகத்தில் இயல்பான வேகத்தில் வேலை செய்யத் தொடங்குவதைக் காணலாம்.
இயந்திரமானாலும், மனிதனானாலும் ஒரே வேலையை பலமணி நேரங்கள் தொடர்ச்சியாகச் செய்யும்போது வேலை செய்யும் வேகமும் திறனும் குறையும். சிறிய இடைவெளி விட்டு செய்துகொண்டிருக்கும் வேலையில் இருந்து முற்றிலும் வெளியே வந்து வேறு வேலையில் கவனம் செலுத்திவிட்டு மீண்டும் பழைய வேலைக்கே சென்றால் புத்துணர்வு கிடைக்கும். வேலைகளின் வேகமும் கூடும்.
‘நீங்கள் எப்படி நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்கிறீர்கள்?’
என்னிடம் எல்லோரும் அதிசயித்துக் கேட்கும் பல கேள்விகளுள் இதுவும் ஒன்று.
காலை 6 மணிக்கு அலுவலகம் சென்று நிர்வாகப் பணிகளைத் தொடங்கினால் இரவு வரை புத்துணர்வுடன் சுறுசுறுப்பாக நான் இயங்குவதற்கு மிக முக்கியக் காரணம் பல்வேறு வேலைகளை மாற்றிமாற்றிச் செய்வதுதான்.
எழுத்தில் தொடங்கும் எனது ஒரு நாளின் தொடக்கம் அனிமேஷன் படைப்புகளுக்காக ஓவியம், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ப்ராஜெக்ட் குறித்த உரையாடால்கள், சாஃப்ட்வேர் மற்றும் ஆப் தயாரிப்புக்கான லாஜிக்குகள், ஆடியோ- வீடியோ ரெகார்டிங்குகள், இடையிடையே மேடை நிகழ்ச்சிகளில் பேசுவதற்காக ஸ்கிரிப்ட் தயாரித்தல் என பலதரப்பட்ட பணிகளுடன் சுவாரஸ்யமான பணிச்சூழல். எல்லாமே தொழில்நுட்பம் சார்ந்ததுதான் என்றாலும் ‘கிரியேட்டிவிட்டி’யையும் ’லாஜிக்’கையும் மாறி மாறி பின்னிப் பிணைந்து செயல்படுத்துவதால் எல்லாவற்றையுமே உற்சாகமாகச் செய்ய முடிகிறது.
என் சொந்த நிறுவனம் என்பதால் வேலைப்பளு அதிகம்தான். ஆனால் அதை சுவாரஸ்யமாக்கி உற்சாகமாகப் பணி செய்வதால் பளு தெரிவதில்லை.
நான் வேலை வேலை என குறிப்பிடுவது அலுவலக வேலைகளை மட்டுமல்ல. வீட்டு வேலைகளிலும் இதே லாஜிக்கைப் பின்பற்ற முடியும். பொங்கலுக்காக வீட்டை ஒட்டடை அடித்து சுத்தம் செய்ய ஆரம்பிக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். ஒரே நாளில் வீடு முழுவதையும் சுத்தம் செய்தால் உடல் வலி கண்டுவிடும். அத்துடன் முழுமையாகவும் நேர்த்தியாகவும் சுத்தம் செய்ய இயலாது. ஒவ்வொரு பகுதியாக சுத்தம் செய்துகொண்டே வந்தால் வேலையை முடிக்க நான்கைந்து நாட்களோ ஒரு வாரமோ எடுத்துக்கொண்டாலும் ஒரு நாளில் 1 மணி நேரம் அந்த வேலைக்கு ஒதுக்கினால் போதும் அல்லவா? மேலும் வீடு முழுவதையும் நேர்த்தியாக சுத்தம் செய்ய முடியுமே.
இவ்வளவு விரிவாகச் சொன்னதை சுருக்கமாக நச்சென்று சொல்லட்டுமா?
‘பரபரப்புக்கு சுறுசுறுப்பு சேர்க்க இடையிடையே நாம் freeze ஆக வேண்டும்’ அவ்வளவுதான்.
நான் செய்கின்ற எல்லாப் பணிகளிலும் இதே லாஜிக்கைத்தான் பின்பற்றுகிறேன். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.
குறுகிய காலத் திட்டங்களை தீட்டுங்கள்!
என்னிடம் பணிபுரிந்த, அலுவலகத்தை சுத்தம் செய்யும் பணிப்பெண்ணிடம் ஒருமுறை, ‘உனக்கான மிகப் பெரிய ஆசை என்ன?’ என்று பொதுவாகக் கேட்டேன்.
‘வாழ்க்கையில் ஒரு முறையாவது நயாகரா அருவியப் பார்த்துடணும்மா’ என்றார்.
எனக்கு வியப்பு. அவர் நம் நாட்டில் உள்ள குற்றால அருவியையாவது நேரில் சென்று பார்த்திருப்பாரா என்று ஆச்சர்யம். அதையும் அவரிடமே கேட்டேன்.
அதற்கு அவர் சொன்ன பதிலில் மேலும் வியந்தேன்.
‘இல்லம்மா, வூட்டு வேலைக்காக தெனம் காலைல நாலு வூடு, மாலைல நாலு வூடு… பத்துப் பாத்திரம் தொலக்கி துணி தொவைத்து… இப்புட்டுத்தான் என் உலகம்… குடிகார புருஷன மேய்க்கிறதே பெரும்பாடு… இதுல நான் எங்கே குத்தால அருவிக்கெல்லாம் போறது?…’
‘அப்புறம் எந்த நம்பிக்கையில் நயாகரா அருவியை ஒருமுறையாவது பார்த்துடணும்னு சொல்றீங்க?’ என்றேன்.
‘கற்பனைக்கு காசா பணமாம்மா, ஆசையத்தான் வச்சுப்போம், அத பெருசா வச்சுப்பமேன்னுதான் நயாகரா அருவிய பார்க்கணும்னு வச்சிருக்கேன்…’ என்றாரே பார்க்கலாம்.
இப்படியான நேர்மறை எண்ணம் சிறந்ததுதான். ஆனால் அது எந்த விதத்திலும் நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் போவதில்லை என்பதே நிதர்சனம்.
எல்லோரும் நீண்ட காலத் திட்டத்தை உருவாக்குங்கள் என்றுதான் சொல்வார்கள். என்னைப் பொருத்தவரை குறுகியகாலத் திட்டத்தை உருவாக்குங்கள் என்றே சொல்வேன்.
ஐ.டி. நிறுவன நேர்காணல்களில் ‘அடுத்த ஐந்தாண்டுகளில் உங்கள் இலக்கு என்ன?’ என்ற கேள்வி நிச்சயம் உண்டு.
யாரும் நம்மிடம் கேட்கவில்லை என்றாலும் நம் ஒவ்வொருவருக்குள்ளேயுமே வெளியில் சொல்லாமல் மனதுக்குள் புதைத்துக்கொண்ட நீண்ட காலத் திட்டங்கள் நிறைய இருக்கும். அடுத்த ஐந்தாண்டுகளில் இருப்பதிலேயே விலை உயர்ந்த கார் வாங்க வேண்டும், அப்பார்ட்மென்ட் இல்லாமல் தனி பங்களா ஒன்று கட்ட வேண்டும், வருடத்துக்கு ஒருமுறை வெளிநாடு செல்ல வேண்டும் என்றெல்லாம் கனவுகளின் பட்டியல் நீளும்; அவரவர்களின் உள்ளக்கிடங்கைப் பொருத்து.
இவை நிறைவேறாத போது வாழ்க்கையில் விரக்தி உண்டாகும். அதிர்ஷ்டமே இல்லாதவன்(ள்) நான் என்ற தாழ்வு மனப்பான்பை உண்டாகும். பிறர் மீது பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் தலை தூக்கும்.
காரணம் நாம் தீட்டிய நீண்டகாலத் திட்டம், அந்த காலகட்டத்துக்குள் நிறைவேறாத ஏக்கம். அதன் வெளிப்பாடே இவை.
இப்படி இல்லாமல் இன்று இதற்கு பிள்ளையார் சுழி போட்டுவிட வேண்டும், அடுத்த வாரம் இதைத் தொடங்கிவிட வேண்டும், ஒரு மாதத்தில் அதை முடித்துவிட வேண்டும், ஆறு மாதத்துக்குள் இதற்கு செயல்வடிவம் கொடுத்துவிட வேண்டும், அடுத்த வருடத்துக்குள் நினைத்ததை சாதித்துக் காட்ட வேண்டும் என்றெல்லாம் குறுகியகாலத் திட்டங்களை உருவாக்குவதன் மூலம் அதைச் செய்வதற்கான உத்வேகம் நமக்குள் உண்டாகும். ஒவ்வொன்றாக முடித்துக்கொண்டே வரும்போது மனநிறைவு கிடைக்கும். நிறைய விஷயங்களை சிறப்பாகவே செய்து முடிக்க முடியும்.
இன்று, இந்த வாரம், இந்த மாதம், அடுத்த ஆறுமாதத்துக்குள், அடுத்த ஒரு வருடத்துக்குள் என குட்டிக் குட்டியாக குறுகியகாலத் திட்டங்களை தீட்டுவதன் மூலம் நாம் நினைத்ததை சாதிப்பதற்கான வழிமுறைகளும் பாதைகளும், முயற்சிகளும், முன்னெடுப்புகளும் நமக்கு வசப்படும். நாம் எடுத்துக்கொண்ட இலக்கில் தேவைப்பட்டால் நம் சூழலுக்கும், சாத்தியக்கூறுகளுக்கும் ஏற்ப மாற்றங்களையும் செய்துகொள்ளலாம். தவறில்லை.
இப்படி குறுகியகாலத் திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றிகொண்டே வந்தால் ஒருகட்டத்தில் அவை பிரமாண்ட வளர்ச்சிக்கு வழிகாட்டும்.
என்னிடம் பேட்டி எடுப்பவர்கள் ‘உங்கள் எதிர்கால திட்டம் என்ன?’ என்று தவறாமல் கேட்பார்கள்.
பொதுவாக என் இடத்தில் இருக்கும் யாராக இருந்தாலும் ‘எங்கள் நிறுவனம் எதிர்காலத்தில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் சாஃப்ட்வேர் நிறுவனமாக உருவாகிவிட வேண்டும்…’ என்றுதான் சொல்லி இருப்பார்கள்.
ஆனால் என் பதிலும் பார்வையும் வேறு.
கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலைப் பட்டம் பெறுவது என்பது என் சிறு வயது கனவெல்லாம் கிடையாது. ஏனெனில் நான் வளர்ந்து +2 முடித்த பிறகுதான் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடதிட்டமாகவே வந்தது. இருப்பதிலேயே நல்ல கோர்ஸில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்பது என் பெற்றோரின் ஆசை. அதுவே என் விருப்பமும். எனவே கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். அதிலும் இரட்டைப் பட்டம் பெற்றேன்.
அதுபோல நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்பது என் குறிக்கோளாக இல்லை. படித்து முடித்து வெளியில் வந்தபோது என்னைச் சுற்றிய இயங்கி வந்த இந்தச் சமுதாயத்தில் தொழில்நுட்பம் குறித்த போதிய விழிப்புணர்ச்சி இல்லாமல் இருந்தது. நான் படித்த படிப்பை என் வேலைக்காக எப்படி மாற்றலாம் என யோசித்தபோது உருவானதே ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ என்ற நிறுவனம். என் நிறுவனத்தின் மூலம் நானும் உயர்ந்து என்னைச் சார்ந்த சமுதாயத்தில் உள்ளவர்களையும் உயர்த்தினேன். இப்போதுவரை அப்படியே தொடர்கிறது.
இப்படியாக நான் அவ்வப்பொழுது அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்ப என் நிறுவனத்தின் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றைச் செய்துகொண்டிருக்கிறேன்.
அதன் பலன், தொழில்நுட்ப உலகில் எங்கள் காம்கேர் சாஃப்வேரின் தயாரிப்புகளும், அது சார்ந்து நான் எழுதும் புத்தகங்களும் உலக அளவில் பேசப்படுகின்றன. இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்பது இறைசெயல். நான் ஒரு கருவி அவ்வளவே.
இன்னொரு முக்கியமான விஷயம்.
1992-ல் நான் சொந்தமாக சாஃப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கினேன். அப்போது நம் நாட்டில் ஐடி நிறுவனங்களே ஒன்றிரண்டுதான் இருந்தன. நம் நாட்டில் சொந்தமாக சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கிய முதல் பெண் நான்தான். அதற்கான விருதுகள் கூட அந்த காலகட்டத்தில் எனக்குக் கிடைத்தன.
இதையெல்லாம் எதிர்பார்த்து நீண்டகாலத் திட்டம் எல்லாம் தீட்டவில்லை நான். படிப்பையும் உழைப்பையும் திறமையையும் போட்டு நிறுவனம் தொடங்கினேன். குறிக்கோள்களையும் திட்டங்களையும் குறுகியகால வரையறைக்குள் அடக்கினேன். ஒவ்வொன்றாக முடித்து அடுத்தடுத்து குறிக்கோள்களையும் திட்டங்களையும் வரையறை செய்கிறேன்.
இந்த செயல்முறை எனக்கு இன்றுவரை கைகொடுக்கிறது.
என்னைப் பொருத்த வரை பெரிய வட்டம் போட்டுவிட்டு அதற்குள் சிறிய வட்டங்களைப் போட்டு அந்த வட்டத்தை நிரப்ப முடியாமல் திணறுவதைவிட சிறிய சிறிய வட்டங்களைப் போட்டுக்கொண்டே வந்தால் பிரமாண்ட வட்டம் தானாகவே உருவாகிவிடும் என்பதுதான் என் லாஜிக்.
நீங்களும் இப்படி சிந்தித்துப்பாருங்களேன்!
கூடுதல் சுமை ஆளுமை குணத்தை வளர்த்தெடுக்கும்!
பொதுவாக அலுவலகத்தில் தான் உண்டு, தன் வேலை உண்டு என தன் பணிகளை செவ்வனே செய்து வரும் பணியாளர்களைவி,ட வேலையில் மட்டுமில்லாமல் அலுவலகம் சார்ந்த மற்ற சில பணிகளை தாங்களாகவே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்பவர்களை மேலிடத்துக்கு மட்டும் இல்லாமல் அவர்கள் பணி செய்யும் குழுவில் இருப்பவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.
காரணம், அவர்கள் தைரியசாலிகள், பிரச்னைகளை எளிதாகப் புரிந்துகொள்வார்கள், ஏதேனும் ஆலோசனை என்றால் இவர்களிடம் கேட்கலாம் என்ற பிம்பம் அவர்கள் மீது தானாகவே உருவாக ஆரம்பித்துவிடும்.
மற்றவர்கள் தங்கள் பணிகளை மட்டும் செய்யும்போது இவர்கள் பல்வேறு வேலைகளை தங்கள் விருப்பத்துக்காக கூடுதலாக செய்வதால் ‘ரொம்ப நல்லவர்கள்’ என்ற அபிப்பிராயமும் உண்டாகும்.
இப்படிச் செய்பவர்களுக்கு ‘ஜால்ரா அடிப்பவர்கள்’, ‘சோப்பு போடுபவர்கள்’ என பொறாமையிலும் வயிற்றெரிச்சலிலும் ஒருசிலர் பட்டம் கொடுத்தாலும், பெரும்பாலும் இவர்கள் பிறர் கவனத்தை ஈர்ப்பவர்களாகவே இருப்பார்கள்.
காரணம், பொறுப்பை தாங்களாகவே ஏற்றுக்கொண்டு செயல்படுவதால் உண்டாகும் தலைமைப் பண்பு. அதன் காரணமாய் உடலுக்குள்ளும் மனதுக்குள்ளும் தானாகவே ஒட்டிக்கொள்ளும் ஒரு கம்பீரம். இதற்குப் பிரதிபலன்களை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்றாலும் தகுந்த வெகுமதிகள் அவ்வப்பொழுது மதிப்பு, மரியாதையில், அங்கீகாரம் என வெவ்வேறு வழிகளில் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
எங்கள் நிறுவனத்தில் பயிற்சிப் பணியில் இரண்டு பேர் ஒரே நாளில் சேர்ந்தார்கள். அவர்களுடையது அனிமேஷன் பணி.
முதலாமானவர், நாங்கள் கற்றுக்கொடுப்பதை மட்டும் கற்றுக்கொள்ளாமல் மற்ற ப்ராஜெக்ட்டுகளுக்குத் தேவையானதை ஸ்கேன் செய்துகொடுத்தல், அனிமேஷன் படைப்புகளைத் திரையிட்டு ‘குவாலிட்டி செக்’ செய்யும்போது உடன் அமர்ந்து அதை துல்லியமாகக் கவனித்தல், எங்கள் கண்களில் படாத சில தவறுகளை குறிப்பெடுத்துக் கொடுத்தல், ஆடியோ- வீடியோ ரெகார்டிங்குகளின் போது உடனிருந்து உதவுதல் என தானாகவே முன்வந்து எல்லாவற்றிலும் தன் பங்களிப்பைச் செய்ய ஆரம்பித்தார்.
இரண்டாமானவரோ, தான் உண்டு தன் பணி உண்டு என என்ன சொல்லிக் கொடுக்கிறோமோ அதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.
பொறுப்புகளை தானாகவே முன்வந்து சுமந்தவர், பணி சார்ந்த வேலைகளை நிறையக் கற்றுக்கொண்டார். எங்கள் நிறுவனத்தில் அனிமேஷன் பிரிவில் தவிர்க்கவே முடியாத ஒரு நபரானார். சில காலங்கள் பணி புரிந்து பின்னர் வெளிநாட்டில் அனிமேஷன் குறித்த படிப்பு படிப்பதற்காக முறையாக எங்களிடம் அனுமதி பெற்று பணியில் இருந்து விலகினார்.
அவர் சென்ற பிறகு அந்த இடத்தை நிரப்புவதற்காக நாங்கள் தேர்ந்தெடுத்தவர்கள் பணியில் திறமை பெற்றவர்களாக இருந்தாலும் ஆளுமை குணத்தில் அத்தனை திறமைசாலிகளாக இருக்கவில்லை. அப்படியான ஒரு நபரைத் தேர்ந்தெடுக்க சில காலங்கள் ஆனது எங்களுக்கு.
ஆளுமை என்பது இப்படி இருக்க வேண்டும். நாம் இருக்கும் இடத்தில், நாம் இயங்கும் தளத்தில் நம் பணிகள் மட்டுமில்லாமல் நம் குணங்களும் அது சார்ந்த செயல்பாடுகளும் பேசப்பட வேண்டும். நாம் அந்த இடத்தை விட்டு வந்தாலும் அந்த இடம் நம் நினைவுகளை அவர்களுக்குக் கிளறியபடி இருக்க வேண்டும்.
இரண்டாமானவரோ அனிமேஷன் துறையில் பணிக்கு சில காலங்கள் முயற்சித்துவிட்டு ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தில் புத்தகம் லே-அவுட் செய்துகொடுக்கும் பணியில் இருக்கிறார்.
அலுவலகத்தில் மட்டுமல்ல, வீட்டில், சமுதாயத்தில் இப்படி எல்லா இடங்களிலுமே பொறுப்பைக் கூடுதலாக சுமப்பவர்களுக்குத்தான் வெகுமானம் கூடுதலாகக் கிடைக்கும். வெகுமானம் என நான் சொல்வது மரியாதை, அங்கீகாரம் இத்யாதி இத்யாதி. இவை அனைத்துமே பணத்தைத் தாண்டிய பெருவிஷயங்கள்.
எங்கள் வீட்டுக்கு எதிர் குடியிருப்பில் குடி இருப்பவர்கள் நல்ல வசதியானவர்கள். மனைவி அரசாங்க வேலையில். கணவன் பிசினஸ். விடியற்காலையில் கணவன் எழுந்து வாசல் பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போடுவார். அது அதிசயம் அல்ல. நிறையப் பேர் செய்கிறார்கள்.
அந்தக் குடியிருப்புக்கு ஒருபுறம் காலி மனை. மறுபக்கம் ஒரு ஆடம்பர கலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை.
அவர் தன் குடியிருப்பின் வாசலை மட்டும் அல்ல, அக்கம் பக்கம் முழுவதும் சுத்தம் செய்வார். வீடுகளில் குப்பையை அள்ளுவதைப் போல தெருவிலும், பெரிய பையில் பெருக்கும் குப்பைகளை அள்ளி தெருமுனையில் உள்ள குப்பைத் தொட்டியில் கொண்டுசென்று போடுவார்.
இதனால் அந்த வீட்டு வாசல் பெரிய வட்டவடிமாக ஆர்ச் போல சுத்தம் செய்யப்பட்டு வெகு அம்சமாக ஜொலிக்கும்.
அத்துடன் எங்கள் தெருவில் இருக்கும் டிரான்ஸ்ஃபார்மரின் கீழ் குப்பைகளை வைத்துவிட்டு கண்டுகொள்ளாமல் நகரும் ஒருசில வீட்டினர் அவர் கண்களில் பட்டுவிட்டால் ‘இரண்டு அடி நடந்தால் குப்பைத் தொட்டி இருக்கிறதல்லவா, அங்கு சென்று போடலாம் அல்லவா?’ என்று அன்பாகத்தான் சொல்வார். ஆனால் அதில் ஒரு ஆளுமை இருக்கும்.

இப்படி தவறுகள் சின்னதோ பெரியதோ, அவற்றைக் கண்டும் காணாமல் போகாமல் அதை நாசூக்காக எடுத்துச் சொல்லுதல் கூட ஒருவித ஆளுமைதான். இதனால் சொல்பவர்களுக்கு ஆரம்பத்தில் மனதுக்குள் அர்ச்சனை விழுந்தாலும் நாளடைவில் ‘அந்தத் தவறை செய்யக் கூடாது, அந்த மனுஷன் பார்த்தால் போச்சு’ என்ற சிறிய உந்துதல் ஏற்படும். மாற்றங்கள் இப்படித்தான் சின்னச் சின்ன அளவில் உண்டாகும்.
கூடுதல் பொறுப்பை தானாக விரும்பி சுமப்பவர்களுக்கு ஏமாளிகள், பிழைக்கத் தெரியாதவர்கள், அசடுகள் போன்ற பட்டங்கள் சுலபமாகக் கிடைக்கலாம். ஆனால் உண்மையில் அவர்களிடம் இருப்பது ஆகச் சிறந்த தலைமைப் பண்பு.
அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களை நம்பி பின்தொடர்பவர்கள் தானாகவே உருவாவார்கள்.
நீங்களும் உன்னிப்பாகக் கவனித்துப் பாருங்களேன். நீங்கள் இதுநாள் வரை ஏமாளிகள், அசடுகள், பிழைக்கத் தெரியாதவர்கள் என நினைத்திருந்தவர்களின் தலையைச் சுற்றி ஒளி வட்டம் தெரிவதை உணர்வீர்கள்.
வேலையே பிரார்த்தனை, ஈடுபாடே தியானம்!
$$$
One thought on “வேலையே பிரார்த்தனை, ஈடுபாடே தியானம்!”