-குரு.சிவகுமார்
‘விஜயபாரதம்’ வார இதழின் முன்னாள் ஆசிரியரான திரு. குரு.சிவகுமார், ஜோதிட வல்லுநரும் கூட. ஜோதிடத்தின் பெயரால் நடத்தப்படும் மோசடிகளை கடுமையாகக் கண்டிக்கும் இவர், ஜோதிடம், கணிதமும் வானியலும் அனுபவ ஞானமும் இணைந்த ஒரு கலை என்கிறார். விரைவில் நமது தளத்தில் ஜோதிடத் தொடர் (ஜோதிடப் பலன்கள் அல்ல) ஒன்றை எழுதவுள்ள இவரது அறிவுரைக் கட்டுரை இது.

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
மதுரை மங்கையர்க்கரசியார் அழைத்ததும் புறப்பட்ட திருஞானசம்பந்த நாயனாரை, ‘இன்றைய நாள் நல்ல நாள் இல்லை’ என்று அப்பரடிகள் எனும் திருநாவுக்கரச நாயனார் தடுத்தபோது, “இறைவன் என் உள்ளத்தே இருக்கும்போது, எல்லா நாள்களுமே நல்ல நாள்தான்” என்று அவர் பாடிய பாடல்கள்தான் கோளறு பதிகம்.
அதேபோல, சமணர்களின் சூழ்ச்சியால் பல தொல்லைகளுக்கு உள்ளான பெரியார் நாவுக்கரசர் உள்ளத்திலே ஈசன் இடம்பெற்றிருந்த காரணத்தால் துன்பங்கள் தொலைந்து போயின. சூளையில் மேவியபோதும், கல்லில் கட்டி கடலில் வீசியபோதும், விஷம் கொடுத்து மாய்க்க முயன்றபோதும், அவனருளாலே சதிகளை வென்றார் அவர்.
பிரகலாதன் உள்ளத்தே ஸ்ரீமந் நாராயணன் நிறைந்திருந்த காரணத்தால், பாலகனின் நாவினில் எப்போதும் திருமாலின் திருநாமமே உச்சரிக்கப்பட்டது. நாரத முனி வழிகாட்டியபடி, குழந்தை துருவனும் மஹாவிஷ்ணுவையே எண்ணி தவமியற்றி, தியானித்திருந்ததால், துருவ நட்சத்திரனானான். சாஸ்தாவின் அவதாரமான மணிகண்டனை துன்பங்கள் தொடர்ந்தபோதும், துணிவைத் துறக்காத சிறுவன் ஐயப்பன் எனும் இறைவனானான். பாரத மகான்கள் பலரும் பக்தியினாலேயே பாதகங்களிருந்து மீண்டனர்.
சித்தர்கள் பலரும் இகபோக சுகங்களை வெறுத்து உலாவியபோதும், சாதாரண மனிதர்களின் துன்பங்களை நீக்க சித்துகளைச் செய்துள்ளனர். ஞானிகள், முனிகள், ரிஷிகள் அனைவரும் ஜீவன்களின் முக்திக்காக பற்பல மந்திரங்களையும், மாந்திரீக தந்திரங்களையும் நோய் நீக்கும் மூலிகைகளையும் கண்டுணர்ந்து, சுயபரிசோதனை செய்து அளித்தனர். அவர்கள் தந்தவை அனைத்தையும் பரிபாஷையில் அமைத்தனர். பாமரர்களுக்காக பரிந்து எழுதிய பாக்கள் எல்லாம் சுலபமாய்ப் புரியாத வார்த்தைகளில் ஏன் படைத்தனர்?
மறைபொருளில் மறைந்திருந்தால் தான், மோசடிக்காரர்களின் அவை கையில் சிக்காமல் இருக்கும். நாயுருவிச் செடியை எடுத்து, நாய்வாயை கட்டுவதைப்போல, சக மனிதரைப் பழிவாங்க அரிய வித்தைகளைப் பயன்படுத்தக் கூடாது.
ஆலய பூஜை மட்டுமே அறிந்த அம்மன் கோயில் பூசாரி, குருவின் அடிபற்றி கற்றுக்கொண்ட மந்திரத்தை உச்சரித்தபடி, விஷநீக்கி வேப்பிலையைக் கொண்டு பூச்சிகளால் ஏற்பட்ட பிரச்னையை நீக்கிடுவார்.
மாந்திரீகம் கற்றவர்கள் மயக்கும் தந்திரங்களைக் கொண்டு மாபாதகங்களைச் செய்துவருவதை இன்றும் நாம் கண்டு வருகிறோம். ஜோதிடர் என்ற போர்வையில் புகுந்துகொண்டு, மாயாஜாலம் புரியும் மந்திரவாதிகளிடம் சென்று, புதையலைத் தேடுவதும், நரபலி தருவதும், மாற்றான் மனைவியை அடைய வசிய மை பெறுவதும் நடைபெற்று வருவதை தினமும் பார்க்கிறோம்.
காரணம் ஆசை; பேராசை. இவர்களிடம் பணத்தை இழந்தவர்கள் பலபேர். பத்தினி மனைவியைப் பரிதவிக்க விட்டவர்கள், பெற்ற பிள்ளைகளைக் கொன்றொழித்தவர்கள் எத்தனையோ பேர். இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும்.
உண்மையான ஜோதிடம் என்பது, வரும் முன் காப்பது; நமது வாழ்வின் நிலையை அறிந்து அதற்கேற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்ள உதவுவது தான்.
காலம் அறிந்து நல் வேளையில் பணி தொடங்க விரும்புகிற நல்ல மனிதர்களே!
அப்பர் பெருமான் முதல் தொடர்ந்து வரும் பாகவத பக்தர்கள் அனைவரும் துன்பத்தை ஏற்றவர்கள். மணிகண்டனும் மனிதனாக அவதரித்தவன் தானே? துயருறும்போதும் பக்தியை அவர்கள் விடவில்லை; தெய்வத்தை இகழவில்லை; வெறுக்கவில்லை. உன்னைப் போய் நம்பினேனே என்று அரற்றவில்லை. நாம் அப்படியா?
இக்கருத்தில் பலருக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். விமர்சனமும் செய்யலாம். கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. சனாதன தர்மத்தில் கருத்துச் சுதந்திரத்திற்கு இடம் உண்டு. இங்கு நாத்திகத்திற்கும் ஆதரவு உண்டு.
உங்களின் சுய ஜாதகத்தில் உள்ள கிரஹங்கள் அமைந்தது குறித்து கவலைப்படாதீர்கள். அது முன்வினைப்பயனின் வரைபடம். நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்பதும், ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்பதும் மூத்தோர் தந்த அனுபவ முதுமொழி.
இக்கட்டுரையின் தொடக்கத்தில், கோளறு பதிகத்தின் முதல் பதிகத்தைப் படித்திருப்பீர்கள். ஈசனிடம் கொண்ட பக்தியால், கோள்களால் தனக்கு துன்பம் நேராது என்பது நம்பிக்கையுடன் பாடுகிறார் ஞானசம்பந்தர்.
வைணவ திருத்தலங்களில் நவகிரஹங்கள் சந்நிதி இருக்காது. இதர ஆலயங்களில் சிறிய அளவிலாவது அவர்கள் அருள்பாலிப்பார்கள். தன் உலக சுகத்திற்காக வேண்டுவதே பெரும்பாலானவர்களின் பக்தி. பிறர்நலன் கருதி, பொதுநலன் கருதி, பகைவரின் நலனுக்காகவும் பக்தி செலுத்தும் பக்தர்கள் இறைஞ்சினால் கோள்களின் தீய தாக்கம் குறையும். வினைப்பயனை மாற்ற முடியாது; ஆனால் குறைக்க முடியும்.
ஒரு காரியம், சாதகமாக ஆகவில்லை என்றால், பொறுமை காத்தோமா? எங்கும் நிறைந்த பரப்ரும்மம் ஒன்றே என்ற தத்துவம் அறிந்தோமா?
தோளில் கைபோட்டு அழைத்துச் சென்றவன் மண்டியிடவைத்து, மன்னிப்பு கேட்க வைத்ததும், நெற்றியில் அணிந்ததை அழித்து வெற்றிடமாய் ஆக்கியதும் நம்மில் சிலர்தானே? அங்கு போய்ச் சேர்ந்தவர்களும் இதே கதியில்தான் உலவுகிறார்கள் என்பதையாவது உணர்ந்தோமா?
பிஞ்சு பழமாகும் முன்னே பழுத்தால் அதை வெம்பிப் போனதாகச் சொல்வார்கள். காலமும் நேரமும் கனிந்து வந்தால்தான் காரியம் பலன்தரும்.
அவதார புருஷர்களான ஸ்ரீராமனும் ஸ்ரீ கிருஷ்ணனும் வாழ்வில் துன்பப்பட்டனர்; போராடினர்; வார்த்தைகளாலே ஏசிய பேச்சுகளை ஏற்று காத்திருந்தனர். கிரஹங்கள் சாதகமாக வந்த பின்னரே ஜராசந்தனை மாய்த்தான் பகவான் கண்ணன். அகத்திய மாமுனி ராமனுக்கு அளித்த மந்திரங்களால் தானே அசுரன் மரணித்தான்?
பராக்கரமசாலிகளான பஞ்ச பாண்டவர்களும் பதிவிரதை திரௌபதியும் தர்மத்தைக் கைவிடாமல் கிருஷ்ண பக்தியை விடாமல் பின்பற்றினர். நிறைவில் வெற்றி கிடைத்தது.
நீங்கள் அனைவரும் குடும்பத்தினர் மீது பாசம் கொண்டவர்கள். வாரிசுகளின் மீது வாஞ்சை உடையவர்கள். சமூகத்தின் மீது அக்கறையானவர்கள். நேர்மையானவர்கள். உழைப்பின் மகிமை அறிந்தவர்கள். நீங்கள் பாத்திரம் அறிந்து ஜோதிடம் கேளுங்கள். நல்ல நாள், நேரம் அறிய கற்றுக் கொள்ளுங்கள். நாள்காட்டிலேயே நல்ல நாள், நேரம் காணலாம். தினமும் பஞ்சாங்கம் புரட்டினாலே ஜோதிடம் புரிந்துவிடும். சந்தேகம் வந்தால் தேடி விடை காண முடியும்.
எப்போதேனும், ஸ்பெஷலிஸ்ட் தேவை எனில், மருத்துவ அறிஞர்களிடம் ஆலோசனை பெறுவதைப் போல ‘சிறந்த’ ஜோதிடரிடம் சென்று அறிவுரை கேளுங்கள். நேரம் கொடுக்க இயலாத ‘பிஸி’ யானவர்களை தவிர்த்துவிடுங்கள். குடும்ப வழக்கறிஞர், குடும்ப ஆடிட்டர், குடும்ப மருத்துவர் போன்று, உங்களுக்கென்று, உங்கள் சுற்றத்துக்கென்று, உங்கள் பந்தங்களுக்கென்று ஒரு பாரம்பரியம் மிக்க, தர்மத்தைப் போதிக்கும் ஜோதிடரை அமைத்துக்கொள்ளுங்கள்.

குல தெய்வ வழிபாட்டை வருடம் இருமுறை குடும்பத்துடன் செய்திடுங்கள். ஜோதிடர் கூறும் வழிபாட்டை ஆடம்பரமின்றிச் செய்திடுங்கள். வசதியற்றவர்களுக்கு சிறிய அளவாவது உதவிடுங்கள். பெண்மணிகளைக் குறித்து புறம் பேசாதீர்கள். முடிந்தபோதெல்லாம் வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்திடுங்கள்.
நன்னெறிகளைக் கற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு நமது கலாசாரத்தையும் பண்புகளையும் கற்றுக் கொடுங்கள். இறைவன் கருணை வடிவானவன். அவனிடம் பக்தி செலுத்துங்கள்.
பிரச்னையை பிறரிடம் கூறிப் புலம்பாதீர்கள். கஷ்டங்களைத் தாங்கும் பலம் கொடு என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்லுங்கள்.
ஜோதிடம் வழிகாட்டி மட்டுமே என்பதை உணருங்கள். அது அக இருள் நீக்கும் அறிவொளி தீபம். தூய கணிதமும் நமது முன்னோரின் அனுபவ ஞானமும் இணைந்த பெரும் கலை அது.
$$$
One thought on “அக இருள் நீக்கும் ஜோதிடக் கலை”