பரப்பிவிடப்படும் ஒரு திராவிட ‘மாடல்’ பொய்!

 -அரவிந்தன் நீலகண்டன்

காந்தி டால்ஸ்டாயை கல்கத்தா விமான நிலையத்தில் சந்தித்துப் பேசிய போது டால்ஸ்டாயை ஆரத்தழுவிய மகாத்மா காந்தி கேட்கிறார்: “உங்கள் அகிம்சை கருத்துக்களை எங்கே பெறுகிறீர்கள்?”  டால்ஸ்டாய் பதிலளித்தாராம்: “உங்கள் தென்னாட்டில் திருவள்ளுவர் என்பவர் எழுதிய திருக்குறளிலிருந்துதான் பெற்றேன்”. இது உண்மையா? ஆராய்கிறார் திரு. அரவிந்தன் நீலகண்டன்…

அண்மையில் தமிழ்நாட்டில் அவிழ்த்து விடப்படும் பொய்களில் சிறப்பான ஒரு பொய் – டால்ஸ்டாய்/காந்தி/திருக்குறள். 

இதன் மலினமான பிரதி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியால் சொல்லப்பட்டது.  காந்தி டால்ஸ்டாயை கல்கத்தா விமான நிலையத்தில் சந்தித்துப் பேசிய போது டால்ஸ்டாயை ஆரத்தழுவிய மகாத்மா காந்தி கேட்கிறார்: “உங்கள் அகிம்சை கருத்துக்களை எங்கே பெறுகிறீர்கள்?”  டால்ஸ்டாய் பதிலளித்தாராம்: “உங்கள் தென்னாட்டில் திருவள்ளுவர் என்பவர் எழுதிய திருக்குறளிலிருந்துதான் பெற்றேன்”.

டால்ஸ்டாய் அமரரானது 1910 இல். கல்கத்தா விமானநிலையம் தன் சேவைகளைத் தொடங்கியது 1924இல்.

இந்த டால்ஸ்டாயின் அகிம்சை திருக்குறளிலிருந்து பெறப்பட்டதென காந்திஜியிடம் சொன்னார் எனும் பொய்யின்  மேம்பட்ட வடிவத்தை பாரதி கிருஷ்ணகுமார் எனும்  பேச்சாளரிடமும் காணலாம். அவர் உரை யூட்யூபில் உள்ளது. ஆனாலும் அதை அப்படியே எழுத்து வடிவில் தருகிறேன். 

“காந்தி டால்ஸ்டாய்க்கு கடிதம் எழுதினார். என்ன தெரியுமா எழுதினார்?  ‘உங்கள் புத்தகத்தைப் பார்த்து நான் வியக்கிறேன். உங்கள் புத்தகம் என்னை நல்வழிப்படுத்துகிறது. உங்கள் புத்தகம் என்னைத் தூய்மையாக்குகிறது. உங்கள் புத்தகங்களில் சொல்லப்பட்டிருக்கிற உன்னதமான அறக் கருத்துக்களை, நீதி பேசும் செய்திகளை, சிந்தனைகளை நீங்கள் எங்கே இருந்து பெறுகிறீர்கள்? அது நீங்களாகவே எழுதுகிறீர்களா? அல்லது வேறு எங்கேனும் படித்ததா? என்று நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்’ என்று கடிதம் எழுதியதோடு நிற்கவில்லை. தன் வருமானத்தில் காந்தி தென்னாப்பிரிக்காவில் தான் வாங்கிய இடத்துக்கு டால்ஸ்டாயின் பெயரை வைத்தார். அதற்கு டால்ஸ்டாய் பண்ணை என்று பெயர் வைத்தார். அதையும் கடிதத்தில் எழுதினார்.  ‘நான் வாங்கிய இடத்துக்கு உங்கள் பெயரை வைத்திருக்கிறேன். ஒரு முறை நீங்கள் வந்து என்னை சிறப்பிக்க வேண்டும். உங்கள் புத்தகங்களுக்கான நீதிக் கருத்துக்களை எங்கே இருந்து பெறுகிறீர்கள்?’ இதுதான் கடிதத்தின் சாரம். நான்கு வாரங்களுக்குப் பிறகு டால்ஸ்டாய் பதிலெழுதினார். அந்தக் காலத்தில் மொபைல், இன்டர்நெட், ஜி-மெயில் எதுவும் இல்லாத கடிதங்களும், கடிதங்கள் எப்போது போய்ச் சேருமென்றும் நம்ப முடியாத காலத்தில், காந்தி தான் படித்ததற்கு பிறகு ஒரு கடிதம் டால்ஸ்டாய்க்கு எழுதினார்.  சில மாதங்களுக்குப் பிறகு டால்ஸ்டாய் பதிலெழுதினார். என்ன பதிலெழுதினார்?  ‘உங்கள் இடத்துக்கு என் பெயரை வைத்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன். முதல் வார்த்தை. என் வயது காரணமாக நான் தென்னாப்பிரிக்காவுக்கு வர முடியாது. நான் உங்களை வாழ்த்துகிறேன். மூன்றாவது. என் நாவல்களில் என் கதைகளில் காணப்படும் அறக் கருத்துக்களை எங்கேயிருந்து பெறுகிறேன் என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். மிஸ்டர் காந்தி நீங்கள் பிறந்த இந்தியாவின் தென்பகுதியிலிருந்து எழுதப்பட்ட ஒரு புத்தகம் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஜெர்மன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட அந்தப் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டுதான் என் நாவல்களின் அறக்கருத்துக்களை நான் எழுதுகிறேன். மிஸ்டர் காந்தி அந்த புத்தகத்தின் பெயர் திருக்குறள்’ என்று எழுதினார் டால்ஸ்டாய்.”

இது முந்தைய பொய்யை விட கச்சிதமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  காந்தி ’டால்ஸ்டாய் பண்ணை’யைக் குறித்து டால்ஸ்டாய்க்கு எழுதினார்தான்.  டால்ஸ்டாயும் பதிலெழுதினார்தான்.  ஆனால் அதில் காந்தி ‘உங்கள் அறக்கருத்துக்களை எங்கிருந்து பெறுகிறீர்கள்?’ என கேட்கவுமில்லை.  டால்ஸ்டாய் திருக்குறள் குறித்து எழுதவுமில்லை. 

டால்ஸ்டாய் பண்ணை காந்திஜி அவரது உழைப்பால்  வாங்கியதுமில்லை. காந்திஜியின் ஆத்மார்த்தத் தோழரான ஹெர்மான் காலென்பாக் (Hermann Kallenbach) என்பார் வாங்கி அந்தப் பண்ணையை காந்திஜிக்கு அளித்தார். அவரது சத்தியாகிரக இயக்கத்துக்காக.  காந்திஜியுடன் ஆலோசனை செய்து அதற்கு  ‘டால்ஸ்டாய்  பண்ணை’ என பெயரிடப்பட்டது. இது நடந்தது மே 1910. இது குறித்து காந்தி டால்ஸ்டாய்க்கு எழுதினார். இது ஆகஸ்ட் 15, 1910.  காந்தி அவரது கடிதத்தில் டால்ஸாயிடம் கேட்பது அவரது ‘ஹிந்த் ஸ்வராஜ்யம்’ என்கிற நூல் குறித்த விரிவான விமர்சனக் கட்டுரையையே.  மேலும் அவரது ‘என் ஒப்புதல்’ எனும் நூலே வேறெந்த நூலைக் காட்டிலும் தனது தோழரான காலென்பாக்கிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய நூல் என்றும் சொல்கிறார். உங்கள் அறக்கருத்துக்களை எங்கே பெறுகிறீர்கள் என்றெல்லாம் கேட்கவில்லை அவர். 

டால்ஸ்டாய் செப்டம்பர் 7 ஆம் தேதி பதிலெழுதினார். அதே ஆண்டு நவம்பரில் டால்ஸ்டாய் அமரரானார். அந்த கடைசிக் கடிதத்தில் டால்ஸ்டாய் குறள் குறித்து எதுவுமே எழுதவில்லை. அதில் அவர் மிக அதிகம் பேசுவது கிறிஸ்தவம் அன்பின் மதம் என்றும், கிறிஸ்தவத்திலேயே அன்பு மிக தெளிவாக வலியுறுத்தப்படுகிறது என்றும் எழுதுகிறார். 

டால்ஸ்டாயின் இந்த கிறிஸ்தவ மேன்மை [நிறுவன கிறிஸ்தவ மத மேன்மை அல்ல, கிறிஸ்தவத்தில் அன்பின் மேன்மை] எந்த அளவு காந்திஜியைப் பாதித்தது? டால்ஸ்டாய் பண்ணையில் ஏகாதசி விரதம் கடைபிடிக்கப்பட்டது.  அங்கே சைவ உணவு கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால் அங்கே இருந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய சத்தியாகிரகிகள் அவர்களாகவே சைவ உணவை ஏற்றுக்கொண்டனர்.  

டால்ஸ்டாயின் நூல்களில் காந்திஜி மீது மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நூல் ‘இறைவனின் அரசு உங்களுக்குள் இருக்கிறது’ (The Kingdom of God is Within You) என்பதுதான். 

டால்ஸ்டாய் திருக்குறள் குறித்து எழுதவே இல்லையா? எழுதியிருக்கிறார். என்ன எழுதியிருக்கிறார்? எப்போது? என்ன பின்னணியில் எழுதியிருக்கிறார்?

அவர் திருக்குறளை எழுதியது காந்திஜிக்கு எழுதிய கடிதத்தில் அல்ல . ‘ஹிந்துவுக்கு ஒரு கடிதம்’ டால்ஸ்டாயால் அமெரிக்காவில் வாழ்ந்த தாரக நாத வஸு எனும் புரட்சியாளருக்கு அனுப்பப்பட்டது. தாரக நாதரோ தீவிரவாதி. ஆனால் டால்ஸ்டாய் வலியுறுத்தியதோ பரிபூரண அகிம்சையை. 1908 இல் டால்ஸ்டாய் இக்கடிதத்தை எழுதியிருந்தார்.  அதை தாரக நாதர்  தமது புரட்சிகர ‘சுதந்திர ஹிந்துஸ்தானம்’ (Free Hindustan) இதழில் வெளியிட்டிருந்தார். டால்ஸ்டாயின் இந்தக் கடிதம் காந்திஜியைக் கவர்ந்தது. அப்போது அவர் இங்கிலாந்தில் இருந்தார்.  டால்ஸ்டாயின் இந்தக் கடிதம் காந்திக்கு முன்பாகவே பரவலாக இந்தியர்களிடையே மிகவும் பரவலானது.  அதில் ஒரு பிரதியே காந்தியிடம் வந்தது.  

கிறிஸ்தவத்திலேயே அன்பு மிக தெளிவாக வெளிப்படுகிறது என்பதில் டால்ஸ்டாய்க்கு ஐயமில்லை என்ற போதிலும், அதே அன்பு ஹிந்து வேதங்களிலும் கிருஷ்ணரின் வார்த்தைகளிலும் ‘ஹிந்து குறளிலும்’ -ஆம் அப்படித்தான் திருக்குறளை டால்ஸ்டாய் குறிப்பிடுகிறார் – ஹிந்து குறள் என்று- வெளிப்படுகிறது என்பது டால்ஸ்டாயின் வாதம்.

கிருஷ்ணரின் வார்த்தைகளாக இரு மேற்கோள்களை டால்ஸ்டாய் கொடுக்கிறார். பின்னர் திருக்குறளை ‘ஹிந்து குறள்’ எனும் பெயரில் குறிப்பிட்டு அதிலிருந்து ஆறு குறள்களை அளிக்கிறார். அவை ’இன்னா செய்யாமை’ அதிகாரத்தில் உள்ளவை:

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசற்றார் கோள். 

கறுத்து இன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்த பின்
உய்யா விழுமந் தரும். 

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயஞ் செய்து விடல்.

அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
தந்நோய் போல் போற்றாக் கடை.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.

இந்தக் கடிதம் குறித்தே காந்திஜி டால்ஸ்டாய்க்கு கடிதம் எழுதினார்.  அதன் ஆதாரத்தன்மையை இக்கடிதத்தில் காந்தி உறுதி செய்கிறார். குறிப்பாக கிருஷ்ணர் சொன்னதாகச் சொன்ன கருத்துக்கள் எங்கிருந்து பெறப்பட்டவை அவற்றின் சான்றாதாரங்களை கேட்கிறார்:  “…இந்தக் குறிப்பிட்ட கடிதத்தில் (ஒரு  ஹிந்துவுக்கு கடிதம்) நீங்கள் பெரும்பாலும் கிருஷ்ணர் கூறியவையாக மேற்கோள் காட்டி அதற்கான சான்றுகளை அளித்துள்ளீர்கள். அந்த மேற்கோள்கள் எடுக்கப்பட்ட நூலின் பெயரை எனக்கு அளித்தால் நன்றியுடையவனாவேன்.” மறுபிறப்பை டால்ஸ்டாய் மறுப்பதை மென்மையாக மறுதலிக்கிறார். 

உங்கள் நாவல்களில் அறக்கருத்துக்களை எங்கிருந்து எடுக்கிறீர்கள்? அவை உங்களுடையதா அல்லது மண்டபத்தில் யாராவது எழுதி கொடுத்ததா என்றெல்லாம் அவர் கேட்கவில்லை. திருக்குறளின் ஜெர்மானிய மொழி பெயர்ப்பைக் கையில் வைத்துக் கொண்டுதான் அதன் அடிப்படையில்தான் நான் என் நாவல்களையும் கட்டுரைகளையும் கடிதங்களையும் எழுதுகிறேன் என்று டால்ஸ்டாயும் சொல்லவில்லை. காந்திஜி கேட்ட சான்றாதாரங்கள் குறித்து டால்ஸ்டாய் கூறியது –  “கிருஷ்ணர் குறித்த நூலின் பெயர் உங்களுக்கு மாஸ்கோவிலிருந்து தெரிவிக்கப்படும்.” 

1909 ஆம் ஆண்டு டால்ஸ்டாயின் ஹிந்துவுக்கான கடிதம் வெளியிடப்படும் போது காந்திஜி எழுதிய அறிமுகக் கட்டுரையுடன் வெளியிடப்படுகிறது.  

இத்தனையிலும் உண்மையில் சாத்தியமான ஒரு விஷயம்,  காந்திஜிக்கு திருக்குறள் மீதான ஆர்வம் ஏற்பட டால்ஸ்டாயின் இந்த ’ஹிந்துவுக்கு எழுதிய கடிதம்’ என்பது இருந்திருக்கிறது என்பதுதான். அந்த ஆறு குறள்களின் மொழிபெயர்ப்பின் மூலம்.     

உண்மை இப்படி இருக்க எப்படிப்பட்ட பொய்களை அவிழ்த்துவிட முடிகிறது  இந்த மேடைப் பேச்சாளர்களால்! எப்படிப்பட்ட பொய்யான வரலாறுகளை சமைக்க முடிகிறது! திருக்குறளின் ஹிந்து அடையாளம் ஆழமானது, அழுத்தமானது. அழிவற்றது. அதாவது சனாதனமானது. 

டால்ஸ்டாய் – காந்திஜி கடிதங்களை ஒவ்வொரு இந்துவும், இந்தியனும் தமிழனும் படிக்க வேண்டும்.  டால்ஸ்டாயின் நிலைப்பாட்டின் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. வெறுப்பும் இகழ்ச்சியும் கிடையாது.  காந்திஜி டால்ஸ்டாயை உள்வாங்கிக் கொண்டார். டால்ஸ்டாயின் கிறிஸ்தவ மறைஞானமே காந்தியின் கீதை குறித்த பார்வையில் வெளிப்படுவதாக ஸ்ரீ அரவிந்தர் சொல்வார். 

ஸ்ரீ அரவிந்தர் வார்த்தைகளைப் பயன்படுத்தி ‘காந்திஜி சொன்னது கிறிஸ்தவமே, அதற்கும் இந்து தர்மத்துக்கும் தொடர்பே இல்லை’ என இணைய இந்துத்துவர்கள் கூறுவதுண்டு. ஆனால் அதே ஸ்ரீ அரவிந்தர் தமது ஈஸாவாஸ்ய உபநிடத உரையில் ‘கிறிஸ்தவ மாண்பான தூய்மையும் பாகனீய மாண்பான தாங்கும் சக்தியும் வேதாந்த ஒழுக்கத்தின் வெகு வேரிலேயே உள்ளன’ என்கிறார். இதை வாசித்ததும் கடுமையாக ஸ்ரீ அரவிந்தரையும் விளாச ஆரம்பித்துவிடுவர் நம் வெறுப்பு வளர்ப்புவாதிகள். பின்னரும் சொல்கிறார் ஸ்ரீ அரவிந்தர் “கிறிஸ்தவ மாண்பான பரோபகாரமும் பாகனீய மாண்பான நீதியும் வேதாந்த ஒழுக்கத்தின் உயிரும் உயிரோட்டமும் ஆகும்.” முழுமையாக அந்த உபநிடத உரையை வாசித்தீர்களென்றால், கிறிஸ்தவத்தின் அன்பு கோட்பாட்டின் உயர்வையும் அதன் போதாமையையும் அந்த போதாமை அனைத்தும் ஒன்றின் விகசிப்பே எனும் ஞானத்தை நிறுவன கிறிஸ்தவம் மறுத்ததால் அல்லது அதைக் குறித்த கிறிஸ்தவ சமயத்தின் அறியாமையால் ஏற்படுவது என்பதை விளக்கியிருப்பது தெரியும். 

எனவேதான் மீண்டும் மீண்டும் நல்ல ஹிந்துவாகிட, நீங்கள் காந்திஜியை வாசிக்க வேண்டும். விவேகானந்த சுவாமியை, ரவீந்திர நாதரை , பாரதி எனும் மகாகவியை வாசிக்க வேண்டும். உங்களுக்கு அங்குமிங்கும் பிடித்த வார்த்தைகளை மட்டுமல்ல. அல்லது காந்திஜி விஷயத்தில் நீங்கள் செய்வது போல அவரைத் தாக்குவதற்காக மட்டுமே என்று தேர்ந்தெடுத்து வாசிக்காமல் முழுமையாக வாசியுங்கள் என்று சொல்கிறேன்.  அந்த சூழலோடு உணர்ந்து வாசியுங்கள்.

அப்போதுதான், அப்போது மட்டும்தான், உங்கள் ஹிந்து பாரம்பரியம் உங்கள் சநாதன பாரம்பரியம் எத்தனை மகத்தானது என்பது புரியும்.  அந்த அறிவு அளிக்கும் உள்ளார்ந்த வலிமையை  எந்த வெறுப்பும் உங்களுக்குத் தராது.    

காந்திஜிக்கும் டால்ஸ்டாய்க்குமான கடிதங்களை காந்திய பிரசுரமான நவஜீவன் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் கிடைக்கிறது. எளிய கூகுள் தேடல் மூலம் நீங்கள் தரவிறக்கிவிடலாம். 

$$$

Leave a comment