ஒரு பிரமுகர்

-ஜெயகாந்தன்

கட்டெறும்பை கதாநாயகனாகக் கொண்ட இந்தச் சிறுகதை ஒரு நையாண்டிக் கதை என்பது கதையின் தலைப்பைப் பார்க்கும்போதே தெரிந்திருக்கும். நேரடிக் கதை சொல்வதில் மட்டுமல்ல, உருவகக் கதையிலும் ஜெயகாந்தன் தனது சமூகப் பார்வையை முன்வைக்கிறார்...

அது ஒரு கிராமத்துச் சாலை! அந்தச் சாலையிலே ஒரு பாழ் மண்டபம். பாழ் மண்டபத்துக்கு எதிரே ஒரு வேல மரம். அந்த வேலமரத்தின் தயவில் அதைப் பற்றிப் படர்ந்திருக்கிறது ஏதோ ஒரு காட்டுக்கொடி. காட்டுக்கொடி தண்டு முற்றி தலை கிழடு தட்டிவிட்டதால் ஒரு பழுப்பு இலை மட்டும் உதிராமல் பூமியை நோக்கி வரம் கேட்கிறது. தண்டின் வேர்ப் பகுதியை ஒட்டி வேல மரத்தில் ஒரு பொந்து. பொந்து வாயிலில் பழுப்பு இலைக்கு நேர்க் கீழே ஒரு சிறு மண்ணுருண்டை!…

மீசையை நீவி விட்டுக்கொண்டு கம்பீரமான ஆகிருதியுடன் வெளியே வந்தது ஒரு பெரிய கட்டெறும்பு!

“உலகத்தைப் பார்த்து ரொம்ப நாளாச்சு…” என்று முனகிக்கொண்டே ஏகாந்தமான வனத்தில் தன்னிச்சையுடன் திரியும் ஒரு சிங்கத்தைப்போல் தலையை ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குத் திருப்பி உலகத்தை நோட்டம் விட்டது எறும்பு!

அவசர அவசரமாய் அதன் எதிரே வந்தது ஒரு சிற்றெறும்பு.

“என்னடா பயலே சௌக்கியமா?” என்று கர்ஜனை புரியும் தோரணையில் சிற்றெறும்பைப் பார்த்துக் குசலம் பேசியது கட்டெறும்பு!

கேட்ட கேள்விக்குப் பதில்கூட சொல்ல முடியாமல் நடுநடுங்கிப் போய். வந்த வழியைப் பார்த்துக்கொண்டு ஓட்டம் பிடித்தது சிற்றெறும்பு.

“உடம்பில் பயமிருக்கிறதா? பிழைத்துக்கொள்வாய் போ!” என்று முனகிக் கொண்டே மறுபடியும் மீசையை நீவி விட்டுக்கொண்ட கட்டெறும்பு. எழுந்து நின்று. உலகத்தைப் பார்க்கத் தலையை நிமிர்த்தும்போது…

“இதென்ன குறுக்கே என்னவோ மறைக்கிறதே…”

“ஓ… இந்த மலைதானா?” இரண்டடி முன் நகர்ந்து வந்து மண்ணுருண்டையின்மேல் தனது முன் கையை வைத்துக் கொண்டு தலை நிமிர்ந்து, சந்தையிலிருந்து திரும்பி வரும் மனிதர்களைப் பார்த்தது.

கதாயுதத்தைப் பூமியில் ஊன்றிக்கொண்டு நிற்கும் பீமசேனனைப் பற்றி அதற்குத் தெரியுமோ என்னவோ? அதன் பாவனை அப்படித்தான் இருந்தது.

“யாரது. மனுசப்பசங்களா? சுத்த சோம்பேறிகள்…”

திடீரென்று அதற்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. உலகில் மனுசப்பசங்க ஜாஸ்தியா? நம்ம எறும்புக்கூட்டம் ஜாஸ்தியா?

யோசித்து யோசித்துப் பார்த்தது. அந்தக் கணக்கு அதற்குச் சரி வரவில்லை. ‘அவர்களில் யாரையாவது கூப்பிட்டுக் கேட்டால் என்ன? அதுவும் சரிதான்.

மண்ணுருண்டைக்குப் பின்னே நின்று. தலையை நீட்டி இரண்டு கைகளையும் உயர்த்திக்கொண்டு கடுகு பிளந்தன்ன வாயைத் திறந்து “ஏ. மனுசப் பயல்களா…உங்களில் ஒருவன் இங்கே வாருங்கள் என்ற கர்ஜனை புரிந்தது.

அவ்வளவுதான்! சாலையில் போய்க் கொண்டிருந்த மனிதர்கள் எல்லாம் சிதறி ஓடினர்… பாழ் மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.

“அடேடே. என்னைக் கண்டு உங்களுக்கு இவ்வளவு பயமா? அட கோழைப் பயல்களா?…” என்று கைகளைத் தட்டி ஆரவாரித்துக் கொண்டு மண்ணுருண்டையைச் சுற்றிச் சுற்றி ஓடி வந்தது கட்டெறும்பு.

“என்ன இது. இந்த வெய்ய காலத்திலே திடீர்னு மழை புடிச்சிக்கிடுத்தே?”

“கோடைமழை அப்படித்தான்”.

“பாழ் மண்டபத்திலிருந்த மனிதர்கள் பேசிக் கொண்ட வார்த்தைகள் எறும்புக்குக் கேட்டது. மழையா? என்று அதிசயித்தது எறும்பு.”

“இது என்னடா. சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்கே…மழையாமில்லே. நான் கூட வெளியேதானே நிக்கறேன்; வானம் என்னமோ இருட்டி இருக்குங்கறது வாஸ்தவம்தான். அதுக்குள்ளே இவ்வளவு பயமா? சுத்தப் பயந்தாங்கொள்ளிப் பசங்க. மழையாம் மழை!” என்று அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டு குதித்தது எறும்பு…

“இந்த மனுசங்களே இப்படித்தான்; ஒண்ணுமில்லாததுக்கு எல்லாம் பிரமாதப்படுத்துவாங்க” என்று மனிதர்களை நினைத்து வியந்து கொண்டிருக்கையில் வானம் பளீரென ஒளிவிட்டுப் பிரகாசித்தது.

பாழ் மண்டபத்தில் ஒதுங்கிய மனிதர்கள் நடையைக் கட்டினர். எறும்பின் கேலிச் சிரிப்பு அவர்கள் காதில் விழவில்லை.

சற்று நேரத்தில். பூமியில் படிந்த நீர்த்திவலைகளிலிருந்து ஆவி கிளம்பியது. உஷ்ணம் தகித்தது.
மற்றொரு கூட்டம் சாலையில் நடந்து கொண்டிருந்தது!

“உஸ்… அப்பா என்ன புழுக்கம்!” என்று ஒருவன் விசிறிக் கொண்டான்.

வேலமரத்தில் படர்ந்திருந்த கொடியிலுள்ள பழுப்பு இலையில் படிந்திருந்த நீர்த் துளிகள் ஒன்றொன்றாய் உருண்டு நடுக்காம்பில் சேர்ந்து பெரிய முத்தாய்த் திரண்டது… திரண்ட முத்து மெள்ள மெள்ள உருண்டது…

கீழே இருந்த மண்ணுருண்டையின் மீது ஆரோகணித்திருந்த கட்டெறும்பின் தலையில் விழுந்த நீர் முத்தைத் தொடர்ந்து பழுப்பு இலையும் உதிர்ந்து மண்ணுருண்டையின் மீது விழுந்தது.

“ஐயோ… பிரளயம்…. பிரளயம்…… வானம் இடிந்து விழுந்து விட்டதே….” என்று கதறியவாறு பழுப்பு இலையை நீக்கிக்கொண்டு வெளியே வந்த கட்டெறும்பு மண்ணுருண்டை கரைந்திருப்பதைக் கண்டு கூக்குரலிட்டது.

“அடே மனிதர்களே. பிழைத்துப் போங்கள்… சீக்கிரம் ஓடுங்கள். பிரளயம் வந்து விட்டது…. ஓடுங்களடா ஓடுங்கள்…” என்று அலறியவாறு என்ன செய்வது என்று தெரியாமல் பரபரத்து முன்னும் பின்னும் ஓடியது!

“அப்பா என்ன உஷ்ணம்” என்று மேல் துண்டை வீசிக்கொண்டு ஒருவன் மரத்தடியில் ஒதுங்கினான்.

அட பைத்தியக்கார மனிதர்களே! ஒன்றுமில்லாததற்கெல்லாம் உலகமே புரண்டு விட்டதாக ஓடுகிறீர்களே – இப்பொழுது பேராபத்து விளைந்துவிட்ட சமயத்தில் முட்டாள் தனமாக நடந்து கொள்கிறீர்களே… சீசீ… உங்கள் முகத்தில் விழிக்கக் கூட வெட்கமாயிருக்கிறது. நான் இப்பொழுது எப்படி என்னைப் பாதுகாத்துக் கொள்ளுவேன்? பிரளயம் வந்துவிடும் போலிருக்கிறதே… என்று கூவியவாறு விழுந்தடித்து ஓடி, தனது பொந்துக்குள் போய்ப் புகுந்துகொண்டது கட்டெறும்பு!

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s