இனிமை தரும் நாற்பது – 11

-தஞ்சை வெ.கோபாலன்

'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 11...


11. இரந்து வாழாமை இனிது


கிராமத்தில் எந்தச் சொத்தும் பந்தமும் இல்லாமல் வாழ்ந்து வந்தான் ஒருவன். அன்றாடம் உணவுக்கே பிறரிடம் கையேந்தும் நிலைமை. அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் இவனுக்கு யார் தினந்தோறும் உணவளிப்பர்? வேறு வழியின்றி ஊர் ஊராகப் போய் அங்கெல்லாம் கைநீட்டி பிச்சை வாங்கி உண்டு கொண்டிருந்தான். ஒரு நாள் இவன் தன்னுடைய கேவலமான பிழைப்பை எண்ணி வருந்தினான். இப்படி பல ஊர்களுக்கும் சென்று யாசகம் வாங்கி உண்ணும் நிலை இல்லாதிருந்தால் எத்தனை இன்பமாக இருக்கும்? ஆம் பல இடங்களுக்கும் சென்று இரந்து வாழாமை இனிமை தரும் என்கிறது பாடல்.

ஒரு தமிழ்ப் பாடல், அதற்கு நேரடியாக பொருள் கொள்ளும்படியாக எளிமையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் ஒரு வக்கிர புத்திக்காரன் நேரடியாகப் புரியக்கூடிய அந்தப் பொருள் தவறு என்றும், அந்தப் பாடலில் வரும் சொற்களுக்கு மறைவாக வேறொரு பொருள் உண்டு எனவும், சரியான பொருளுக்கு நேர் எதிரான கற்பனையான ஒரு பொருளைக் கற்பித்துப் பேசி வந்தான். அப்படிச் செய்தது அவனுடைய வக்கிர புத்தியைத்தான் காண்பிக்குமே தவிர புலமையை அல்ல என்பது ஏனையோர் கருத்து. தவறான வழியில் ஒரு சொல்லிற்கு பொருள் கொள்ளாத அறிவின் நுட்பமே இனிமை பயக்கும் என்கிறது பாடல். 

பசி வந்தால் ஏற்கக்கூடிய தகுதி உள்ளவர்கள் கையால் உணவு வாங்கி உண்ணலே சிறந்தது. அப்படியில்லாமல் எந்தத் தகுதியும் அற்ற ஒருவனிடம், தகாத செய்கைகளால் மக்களால் வெறுக்கப்படும் ஒருவனிடம் கையேந்தி அவன் கொடுக்கும் உணவை, உயிர் போவதாக இருந்தாலும் வாங்கி உண்ணாமை இனிமை தரும். அப்படி மறுப்பதைப் போல சிறப்புடைய செயல் வேறு இல்லை என்கிறது இந்தப் பாடல்.


அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே
குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே
உயிர்சென்று தான்படினும் உண்ணார் கைத் துண்ணாப்
பெருமை போற் பீடுடையது இல்.


அதர் = வழி. குதர் = தவறான வழி.

(தொடர்கிறது)

$$$

Leave a comment