யோகா: பாரதியார் பார்வையில்…

-எஸ்.எஸ்.மகாதேவன்

புதுச்சேரிவாசியாக மகாகவி சுப்ரமணிய பாரதியார் இருந்த போது அவருக்கு அங்கே குள்ளச்சாமி என்று ஒரு சித்தர் சந்திப்பு வாய்க்கிறது. “அஷ்டாங்க யோக சித்தி பெற்றவர்” என்று அவரை வர்ணிக்கிறார் பாரதியார். குள்ளச்சாமியின் உபதேசமாக இப்படி ஒரு கவிதைப் பதிவும் இடுகிறார்:

“வாசியை நீ கும்பகத்தால் வலியக் கட்டி 

மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும் 

தேசுடைய பரிதி உரு கிணற்றின் உள்ளே 

தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்”. 

 யோகாவின் இறுதி இலக்கு எது என்று சொல்லாமல் சொல்கிறாரா பாரதியார்? “சலே வாதே சலம் சித்தம்” என்று ஹடயோக ப்ரதீபிகை சொல்கிறதல்லவா, மனம் ஸ்வாச கதியில் சதா சுற்றும் என்று? அதை சாந்தப்படுத்துவதற்காக சித்தர் வாக்காக பாரதியார்  ‘வாசியை கும்பகத்தால் வலியக் கட்ட’ச் சொல்கிறார். (பதஞ்சலி யோக சூத்ரத்தின் முதல் பாதத்தைத் தமிழாக்கிய பாரதியார் சொல்கிறார்; யாராவது மறுக்க முடியுமா?)

“சித்தத்தைக் கட்டி ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகிக்கு, காற்றில்லாத இடத்தில் அசைவின்றி நிற்கும் விளக்கை முன்னோர் உவமையாகக் காட்டினர்” என்று கீதையில் (அத்யாயம் ஆறு) கண்ணன் சொல்வதை அறிந்தவர்தான் பாரதியார்.

யோக சூத்ரத்தின் முதன்மையான உரையாசிரியரான வியாஸர்  “சித்தத்தினை வருத்திக்கொள்ளாமல் தவம் செய்யவேண்டும்” என்று குறிப்பிடுகிறார் (இரண்டாவது பாதத்தின் முதல் சூத்ரத்தின் உரையில்) அல்லவா, அதை உள்வாங்கிக் கொண்டவராக ஒரு எச்சரிக்கையும் விடுக்கிறார் பாரதி: 

மஹாலக்கம் என்ற பௌத்த நூல் சொல்கிறது:  ‘உடன்பிறந்தோரே! இரண்டு வித மிகையும் இல்லாது இருப்போனே விடுதலை பெறுவான். எப்போதும் காமாதி இன்பங்களை நாடுதல் ஒரு மிகை; உடம்பை மிதமிஞ்சி விரதம் முதலியவற்றால் வருந்தச் செய்தல் மற்றொரு மிகை. இந்த இரண்டு பாதைகளில் இருந்தும் வேறானது புத்த பகவான் கூறியது. அது அறிவைத் திறப்பது, தெளிவு தருவது, விடுதலைக்கும் ஞானத்துக்கும் நிறைவுக்கும் வழிகாட்டுவது’.

தான் எழுதிய ‘சந்திரிகையின் கதை’யில் ஒரு பாத்திரத்தின் கதியை பாரதி இப்படி சித்தரிக்கிறார்: “விசுவநாத சர்மாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. அவர் மிகச் சிறந்த ஞானியாயினும் யோகாப்யாஸத்தால் முக்தியடைவது சுலபமென்று கருதி மனதைப் பல வகைகளில் இடையறாமல் அடக்கி அடக்கி பலாத்காரஞ் செய்துகொண்டு வந்ததினின்றும், புத்தி கலங்கிவிட்டது”. சித்தவ்ருத்தி நிரோதம் ஸமாதிக்குத்தான் இட்டுச்செல்லும். ஸமாதி தான் மனவமைதி. ஆனால் அதனை சரியான விதத்தில் செய்தால் (பொறிகளின் மீது தனியரசாணை) நல்ல பலன். பலாத்காரஞ் செய்தால் பித்து தான் பிடிக்கும் என்று பாரதி இப்படித் தெளிவுபடுத்துகிறார்.

எனினும் பாரதி யோகத்திற்குள் நம்மை அழைத்துச் செல்லாமல் விடுவதாயில்லை.  ‘வாழ்வனைத்துமே யோகம்’ என்பதை நாம் மறந்துவிடாமலிருக்க அவர் சொல்கிறார்: “யோகம் பண்ணு. எதன் பொருட்டெனில்,  ‘யோகமே செய்கையில் திறமையாவது’ என்று ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லுகிறார் (பாரதியார் பகவத் கீதைக்கு உரை எழுதியவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது). தொழிலுக்குத் தன்னைத் தகுதியுடையவனாகச் செய்து கொள்வதே யோகம் எனப்படும்”. பிழைப்புக்கு வழி தேடு, அதற்கு திறன் மேம்பாடு நாடு என்கிறாரா உலகாயதமாக?

அடுத்த கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார் பாரதியார்…. 

யோகமாவது சமத்துவம்.  ‘ஸமத்வம் யோக உச்யதே’ அதாவது, பிறிதொரு பொருளைக் கவனிக்குமிடத்து அப்போது மனத்தில் எவ்விதமான சஞ்சலமேனும் சலிப்பேனும் பயமேனும் இன்றி, அதை ஆழ்ந்து, மனம் முழுவதையும் அதனுடன் லயப்படுத்திக் கவனிப்பதாகிய பயிற்சி. நீ ஒரு பொருளுடன் உறவாடும்போது, உன் மனம் முழுதும் அப்பொருளின் வடிவாக மாறிவிட வேண்டும். அப்போதுதான் அந்தப் பொருளை நீ நன்றாக அறிந்தவனாவாய்.  ‘யோகஸ்த: குரு கர்மாணி’என்று கடவுள் சொல்லுகிறார்.  ‘யோகத்தில் நின்று தொழில்களைச் செய்’ என.

“யோகி தன் அறிவைக் கடவுளின் அறிவுபோல விசாலப்படுத்திக் கொள்ளுதல் இயலும். ஏனென்றால், ஊன்றிக் கவனிக்கும் வழக்கும் அவனுக்குத் தெளிவாக அர்த்தமாய் விடுகிறது. ஆதலால் அவனுடைய அறிவு தெய்வீகமான விசாலத் தன்மை பெற்று விளங்குகிறது. அவனுடைய அறிவுக்கு வரம்பே கிடையாது. எனவே, யோகி எங்கும் கடவுள் இருப்பதை காண்கிறான் (கீதைக்கு அவர் எழுதிய முன்னுரையிலிருந்து). 

ஜீவ சேவையே சிவ பூஜை ஆகிவிடுகிறது யோகிக்கு: “ஊருக்குழைத்திடல் யோகம்” என்று பாரதி இதை கவிதையாக்கிவிடுகிறார். “யோக ஸூத்ரங்களின் ஆசிரியராகிய பதஞ்ஜலி முனிவர், ‘வலிமைகளிலே மதியை நிறுத்தி ஸம்யமம் (ஆழ்ந்த தியானம்) செய்தால் யானையின் பலம் முதலியன கைகூடும்’ என்று சொல்லியிருப்பதை பாரதி இங்கே பொருத்தமாக சுட்டிக்காட்டுகிறார். யோகவல்லீ ஆசிரியரும் மக்களுக்கு யோகப் பயிற்சி அளிப்பதற்காக தன் வாழ்வை பரிபூரணமாக அர்ப்பணித்தவருமான ஸ்ரீ தி. கிருஷ்ணமாச்சார்யர் (1888 – 1989) சமஸ்கிருதத்தில் கவிதை இயற்றும் ஆற்றல் பெற்றது அவர் யோகநெறி நின்ற பலத்தால்தான் என்று சென்னை சமஸ்கிருதக் கல்லூரி பேராசிரியர் (ஓய்வு) ஸ்ரீ ஆர். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் ஆணித்தரமாகத் தெரிவிக்கிறார் (யோகவல்லீ தமிழ் நூல் முன்னுரையில்).

மன ஆரோக்கியம் பற்றி அக்கறையோடு நமக்கு எடுத்துச் சொன்ன பாரதி, உயர்ந்த நோக்கத்திற்காகப் பாடுபட நமக்கு உடல் ஆரோக்கியம் தேவை என்பது பற்றி நிறைய பேசுகிறார். பாருங்களேன்:

  • “கட்டுறுதி உள்ள உடல், கண்ணிலே நல்ல குணம்” வாய்ந்தவனாகக் கண்ணன் காணப்பட்டதால் அவனை வேலைக்காரனாக சேர்த்துக் கொண்டாராம் பாரதி!
  • அவரே பராசக்தியிடம் கேட்டது என்ன? “விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல்”.
  • ‘யோக சித்தி’ என்ற வகையில் பாரதி காளியிடம் கேட்பது வேறு ஒன்றும் இல்லை, உடல் பலம் தான். இதோ: “தோளை வலிவுடைய தாக்கி / உடல் சோர்வும் பிணி பலவும் போக்கி / அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறா உடலுறுதி“தான்!
  • பொய்க்கும் கலியைக் கொன்று மெய்க்கும் கிருத யுகம் கொணர்வதற்குக் கூட அவர் பிள்ளையாரிடம் கேட்பது “உடலை இரும்புக்கு இணையாக்கு” என்றுதான்!!

பாரதியாருடன் இந்த விஷயத்தில் ஒத்துப்போகிறது “சரீரமாத்யம் கலு தர்ம ஸாதனம்?” என்று கேட்கும் குமாரஸம்பவம். தமிழில் திருமூலர் அருளிய யோக சாஸ்திர நூலான திருமந்திரம் கூட “உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்றுதானே அங்கீகார முத்திரை பதித்தது?

இவ்வளவெல்லாம் கேட்டாரே பாரதி, கேட்டது கிடைக்கவில்லை என்றால்? “யோகத் திருத்தி விடு, அல்லால் எந்தன் ஊனைச் சிதைத்துவிடு” என்கிறார் திட்டவட்டமாக. “தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம்” என்பதும் அவருக்குத் தெரியாததல்ல; பராசக்தியிடம் அவருக்கு அவ்வளவு செல்லம்!

அது சரி. நாம் மிரண்டு போகாமலிருக்க, யோகாவை நம் வீட்டு வரவேற்பறைக்குக் கொண்டு வருகிறார் பாரதி: “சரத் காலத் துடக்கத்திலே பேரருளைக் கண்டு விசேஷ விழா நடத்துகிறோம்.  ‘தவம், கல்வி, தெய்வத்தைச் சரண் புகுதல் இம்மூன்றும் கர்மயோகம்’ (கிரியாயோகம்) என்று பதஞ்ஜலி முனிவர் சொல்கிறார். லௌகிகக் கவலைகளாலே இம்மூன்று தொழிலையும் எப்போதும் செய்துகொண்டிருக்க முடியாமல் தடுக்கப்படும் சாமானிய ஜனங்கள் நவராத்திரி ஒன்பது நாள் இரவும் பகலும் மேற்கூறிய மூவகை நெறியில் நிலைபெறும் வண்ணமான விதிகள் ஆகமங்களிலே கூறப்பட்டன.” ( ‘தத்துவம்- நவராத்திரி’ கட்டுரையில்).

அதற்கு அடுத்த படி என பாரதி பரிந்துரைப்பது இது: 

பாரத தேசத்தில் ஒவ்வொருவனுக்கும் தற்காலத்தில் நல்ல தியானம், உணவைக் காட்டிலும் இன்றியமையாதது. சோற்றை விட்டாலும் விடு. ஒரு தனியிடத்தே போய் இருந்து உயர்ந்த சிந்தனைகள், அமைதி கொடுக்கக்கூடிய சிந்தனைகள், பலம் தரக்கூடிய சிந்தனைகள், துணிவும் உறுதியும் தரக்கூடிய சிந்தனைகள், இவற்றால் அறிவை நிரப்பிக் கொண்டு தியானம் செய்வதை ஒரு நாளேனும் தவற விடாதே.

கரைநெடுகப் புரண்டு வரும் அலை கடலுக்குள் போகிறதே என்று பார்த்தால் முழு வீச்சுடன் மறுபடி ஆர்ப்பரித்து வந்து கரையை நனைத்துப் போகிறது – பாரதி யோகா குறித்து மேலே வெளியிட்டுள்ள சிந்தனை அலைகள் போல!

சரி, எங்கெல்லாம் பாரதி யோகாவை தொட்டுச் சென்றிருக்கிறார் என்று குழந்தைத்தனமாக துருவினால், அந்த மாமனிதனின் ஆழமும் ஆளுமையும் நம்மைத் திகைக்கச் செய்கின்றன. பாரதியின் இந்தக் கவிதை வரிகளையும்தான் பாருங்களேன்: 

வையகம் காப்பவரேனும் – சிறு 

வாழைப் பழக்கடை வைப்பவரேனும்

பொய்யகலத் தொழில் செய்தே -புவி 

போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.

மேலோட்டமாக நேர்மையை உபதேசிப்பது போலத் தோன்றலாம். ஆனால் அஷ்ட அங்கத்தில் யமம் எனும் பயிற்சியின் சத்யம், அஸ்தேயம் என்ற முதல் இரண்டு படிநிலைகளை அல்லவா இது வலியுறுத்துகிறது!

“பக்தி யுடையார் காரியத்தில் பதறார் / மிகுந்த பொறுமையுடன் / வித்து முளைக்கும் தன்மை போல் / மெல்லச் செய்து பயனடைவார்” என்ற அவரது கவிதை வரி சொல்ல வருவது என்ன? “யோகமாவது சமத்துவம்” என்று அவரே கீதையைக் காட்டிப் பேசியிருக்கிறரே? கூடவே “போருக்கு நின்றிடும் போதும் – உளம் / பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானம்” என்றது? பாரதியேதான்!

சாந்த சித்தம் அவருக்கு ஏன் மிக முக்கியமாகப் படுகிறது? அவரது வாழ்நாள் முழுதும் தேசம் சுதந்திரப் போராட்டத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தது. தேவையான வியூகம் வகுக்கக் கூட பதறாமல் மனம் சிதறாமல் எல்லா அம்சங்களையும் பரிசீலிக்க தேவையான இந்த மனத் தகுதியை அன்றைய காலகட்டத்தில் அவரால் யாரிடமும் பார்க்க முடியவில்லை என்பதாலோ என்னவோ திடீரென விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ் கூறுவதாக “நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்” என்று ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார் பாரதி! “சதமானம் பவது” என்று தொடங்குகிற ஆசீர்வாத மந்திரத்தில் “சதேந்த்ரியம்” என்று ஒரு சொல் வரும்.  ‘உள்ளது 10 இந்திரியங்கள் தானே, 100 இந்திரியங்கள் என்பது எப்படி?’ வேதம் தைத்ரீய பிராமணத்தில் ஒவ்வொரு இந்திரியத்திற்கும் ஆதாரமாக பத்து நாடிகள் உண்டு என்று கணக்கு சொல்கிறது. ஆக 100 நாடிகள். இவை நம்மைப் பராமரிக்கின்றன. அவற்றில் கோளாறு ஏற்பட்டால் மரணம் என்று போஸ் வாய்மொழியாக பாரதி தெரிவிக்கிறார் போலிருக்கிறது.

அடிமைப்பட்டிருந்த பாரத நாட்டில் மக்களுக்கு தன்னுடைய கவிதை / கட்டுரை / ஊடகப் பணி போன்ற எத்தனையோ வழிகளில் சுதந்திர வேட்கை ஊட்டியபடியே வாழ்ந்து மறைந்த (1882 – 1921) பாரதியாரைத்தான் பொதுவாக எல்லோருக்கும் தெரிகிறது. ரிஷி முனிவர்கள் மனிதகுலத்திற்குக் கண்டு சொன்ன யோக சாஸ்திரம் போன்ற எத்தனையோ விஷயங்களை எளிய நடையில் போகிறபோக்கில் பொதிந்து கொடுத்துவிட்டு போயிருக்கிற பாரதியாரை பல பேருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. 

இதுபோல பொதுப் பணி புரிந்து கொண்டு நூறு ஆண்டுகள் வாழ்ந்து விட வேண்டும் என்பது பாரதியின் ஆசை. “ஈரோட்டில்தான் பாரதியார் வழங்கிய கடைசி பொதுக்கூட்ட சொற்பொழிவு. ‘சாகாமலிருக்க வழி சொல்லித் தருகிறேன்’ என்பது மட்டுமே அன்று அவர் சொன்ன விஷயம்” என்கிறார் ச.து.சு யோகியார். 

ஆனால் பாரதியாருக்கு 39 ஆண்டுகள் தான் பூவுலக வாசம் என்பது காலனின் கணக்கு. அந்த அளவுதான் பாரதி வாயிலாக பாரதத்தின் ஞான மரபு பெற கொடுத்து வைத்திருக்கிறது நமக்கு!

$$$

One thought on “யோகா: பாரதியார் பார்வையில்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s