சுமார் மூன்று மணிக்கு வண்டி, பார்டேகோப் என்ற இடத்திற்குப் போய்ச் சேர்ந்தது. இப்பொழுது, தலைவர் நான் உட்கார்ந்திருந்த இடத்தில், தாம் உட்கார்ந்து கொள்ள விரும்பினார். சுருட்டுப் பிடிக்க விரும்பியதோடு, கொஞ்சம் காற்றோட்டமாக இருக்கவும் அவர் விரும்பியிருக்கக் கூடும். ஆகவே, வண்டியோட்டியிடமிருந்து ஓர் அழுக்குக் கோணித் துண்டை எடுத்து, வண்டியில் ஏறும் கால்படி மீது அதை விரித்தார். பிறகு என்னைப் பார்த்து “சாமி இதன் மீது நீர் உட்காரும். வண்டியோட்டியின் பக்கத்தில் நான் உட்கார வேண்டும்” என்றார். இந்த அவமதிப்பை என்னால் சகிக்க முடியவில்லை. “என்னை உள்ளே உட்கார வைக்க வேண்டியிருந்தும் நீர்தான் என்னை இங்கே உட்கார வைத்தீர். அந்த அவமதிப்பையும் சகித்துக் கொண்டேன். இப்பொழுது நீர் வெளியே உட்கார்ந்து சுருட்டுப் பிடிக்க விரும்புவதற்காக என்னை உமது காலடியில் உட்காரச் சொல்கிறீர். அப்படி உட்கார மாட்டேன். ஆனால், உள்ளே வேண்டுமானால் உட்காரத் தயார்” என்று பயந்து கொண்டும் நடுங்கிக் கொண்டும் கூறினேன்.
இவ்விதம் நான் தட்டுத் தடுமாறிச் சொல்லிக்கொண்டிருந்த போதே அவர் என்னிடம் வந்து, என் கன்னங்களில் ஓங்கி அறையத் தொடங்கினார். என் கையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளவும் முயன்றார். வண்டியின் பித்தளைக் கம்பிகளை நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். மணிக்கட்டுகளின் எலும்புகள் முறிந்தாலும் பிடியை மாத்திரம் விடுவதில்லை என்று உறுதிகொண்டேன். அவர் என்னைத் திட்டி, இழுத்து அடிப்பதும் நான் சும்மா இருப்பதுமாகிய அக் காட்சியைப் பிரயாணிகள் பார்த்துக் கொண்டிருந்தனர். அவரோ பலசாலி, நானோ பலவீனமாவன். பிரயாணிகளில் சிலருக்கு இரக்கம் உண்டாயிற்று.
....