உயிரின் ஒலி

-மகாகவி பாரதி

சில தினங்களுக்கு முன்பு கல்கத்தாவில் ஸ்ரீ ஜகதீச சந்திரவஸு, தமது  ‘வஸுமந்திரம்’ என்ற கூடத்தைப் பாரத மாதாவுக்குச் சமர்ப்பணம் செய்கையில்  ‘உயிரின் ஒலி’ என்ற மகுடமிட்டு ஒரு பிரசங்கம் செய்தார்.

அவருடைய கொள்கை எப்படியென்றால் :- நாம் ஜடபதார்த்தமாக நினைக்கும் உலோகாதிகளில் உயிர் நிறைந்திருக்கிறது; ஜந்துக்களைப்போலவே விருக்ஷாதிகளுக்கும் உணர்ச்சியிருக்கிறது. ஆகவே மண், செடி, ஜந்து, மனுஷ்யன் அத்தனைக்குள்ளும் ஒரே விதமான ப்ராண சக்தியிருக்கிறது. ‘இந்த உலகமே உயிர்க்கடல்’ என்பது அவரது சித்தாந்தம். அவர் பல நுட்பமான கருவிகள் செய்திருக்கிறார். ஹிந்து தேசத்துத் தொழிலாளிகளைக் கொண்டு அந்த ஸூஷ்மக் கருவிகளை எல்லாம் செய்து கொண்டார். அந்தக் கருவிகளின் நேர்த்தியைப் பார்த்து ஐரோப்பிய சாஸ்திரிகளும் யந்திரிகளும் ஆச்சரியப்படுகிறார்கள். அந்தக் கருவியின் உதவியால், ஒரு பூண்டின் கையில் ஒரு ஊசி எழுதுகோல் கொடுக்கிறார். ஒரு புகைபட்ட கண்ணாடியின் மேல் அந்த ஊசி எழுதுகிறது; அதாவது, கோடுகள் கீறுகிறது. அந்தக் கோடுகளினால் மேற்படி செடியின் உள்ள நிலையை, அதன் நாடியின் அசைவு தெரிவிக்கிறது.

செடிக்கு விஷத்தைக் கொடுத்தால் மூர்ச்சை போடுகிறது. மறுபடி, தெளிய மருந்து கொடுத்தால் தெளிகிறது. மதுபானம் செய்வித்தால் உண்டாட்டுக் கேளிகள் நடத்துகிறது. செடியின் சந்தோஷம், சோர்வு, வளர்ச்சி, சாவு ஆகிய எல்லா நிலைமைகளையும் கண்ணாடியிலே கீறிக் காட்டுவதைப் பார்க்கும்போது ‘செடியின் நாடியுணர்ச்சிகளுக்கும் இதர மனுஷ்ய மிருகாதி ஜந்துக்களின் நாடியுணர்ச்சிகளுக்கும் பேதமில்லை’ என்பது ருஜுவாகிறது.

இவ்விதமான அற்புத பரீக்ஷைகளினால் உலகத்தின் உயிரொலியை நமக்குத் தெரியும்படி செய்த மஹானாகிய மேற்படி ஜகதீச சந்திரவஸு நம்முடைய ஹிந்து மதத்தில் ஆழ்ந்த பக்தியடைவர் என்பது சொல்லாமலே விளங்கும். ஹிந்துக்களின் மேன்மையைப்பற்றி அவர் வார்த்தை சொல்லும்போது, அந்த வார்த்தைகளிலே மிகச் சிறந்ததொரு ஜீவநாதம் உண்டாகிறது. அந்த வார்த்தைகளைப் படிக்கும் போதே படிப்போரின் ஜீவசக்தி மிகுதிப்படுகிறது.

அவர் சொல்லுகிறார்:-   “ஸாதாரணக் கருவிகளால் மஹத்தான காரியங்களை நிறைவேற்றிய மஹான்களின் ஸந்ததியிலே நாம் பிறந்திருக்கிறோம். ……… ஒருவன் ஒரு பெருங்காரியத்தில் முழுதும் தன்னை ஈடுபடுத்தினால், அடைத்திருந்த கதவுகள் திறக்கும். அஸாத்யமாகத் தோன்றுவது அவனுக்கு ஸாத்யமாகும்; உண்மை தேடுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவன் சிற்றின்பங்களை விரும்பலாகாது. லாப நஷ்டங்களையும் வெற்றி தோல்விகளையும் ஒன்று போலக் கருதி அவன் தனது ஜீவனை உண்மைக்கு நைவேத்யமாக விடவேண்டும். பாரததேசம் இப்போது வென்று காப்பாற்ற வேண்டிய வஸ்து யாது? சிறியதும் வரம்புற்றதுமாகிய ஒரு பொருளினால் பாரத மாதா திருப்தியடைவாளா? இவளுடைய அற்புதமான பூர்வ சரித்திரத்தையும் பூர்வ சாஸ்திரங்களையும் செயல்களையும் யோசிக்கும் போது, தாழ்ந்த தரமுள்ளதும் சில நாள் நிற்கிறதுமான லாபமொன்றை இவள் விரும்ப மாட்டாளென்பது தெரியும்.

 “இப்போது நம்முடைய கண்முன்னே இரண்டு விதமான தர்மங்கள் காணப்படுகின்றன.

  “முதலாவது, (ஐரோப்பியரைப்போல நாமும்) படிப்பின் பரவுதலாலும், நகரத்தானுக்குரிய கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதாலும், கைத்தொழில், வியாபார சம்பந்தமான பலவித முயற்சிகளாலும் பாரத நாட்டை வலிமையுடைய நாடாகச் செய்ய வேண்டும். இவையெல்லாம் தேசக்கடமையின் முக்கியாம்சங்கள். இவற்றைப் புறக்கணித்தால் நமது ஜீவனுக்கே ஆபத்து நேரிடும். வாழ்க்கையிலே ஐயமும் அவனவன் தன் தன் அவாவைத் திருப்தி செய்து கொள்ளும் வழியும் வேண்டிப்பாடுபட்டால், அதிலிருந்தே மேற்கூறிய லெளகிக தர்மத்திற்கு தூண்டுதல் உண்டாகும். இரண்டாவது, ஆத்ம தர்மம். க்ஷணமாயிருக்கும் இன்பங்களை மாத்திரம் கருதாமல், மனுஷ்ய வாழ்க்கையின் அத்யுந்நதமான நோக்கத்தை நாடி உழைத்தவர்கள் நமது நாட்டில் எக்காலத்திலும் மாறாமல் இருந்து வருகிறார்கள்.’’

ஆத்ம தர்மமாவது யாதென்றால், ஸ்ரீ வஸு சொல்லுகிறார்:- “மனுஷ்ய ஜாதியின் பரம க்ஷேமத்திற்காக ஒருவன் தன்னைத் துறந்து விடுதல்” என்று. வந்தே மாதரம். இந்தத் தர்மத்தை எக்காலத்திலும் இடைவிடாமல் ஒரு சிலரேனும் ஆதரவு செய்து வந்தமையாலேதான் – அஸ்ஸிரியா தேசத்திலும் நீல நதிக்கரையிலும் தலைதூக்கி நின்ற பெரிய ஜாதிகள் அழிந்து போயின – நாம் அழியாமல் என்றும் இளமை கொண்டிருக்கிறோம். கால வெள்ளத்தில் வரும் மாறுதல்களுக்கெல்லாம் மாறாமல், தான் அவற்றைக் தனதாக்கிக்கொண்டு வாழும் திறமை நமது நாட்டிற்கு இருக்கிறது. வந்தே மாதரம்.

இதுவே உயிரின் ஒலி. ஹிந்துஸ்தானத்தை வணங்குகிறேன். ஹிந்து தர்மத்தைப் போற்றுகிறேன். லோக நன்மைக்காக என்னை மறந்து என்னை இரை கொடுப்பேன்.

இதுதான் ஜீவசக்தியின் சாந்தி வசனம். தர்மம், ஐரோப்பியருக்குத் தெரியாது. அதை நாம் ஐரோப்பியருக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும். அவர்களுடைய முயற்சிகளை நாம் கற்றுக்கொண்டு பிறகுதான் அவர்களுக்கு நாம் உபாத்யாயராகலாம்.

ஐரோப்பாவின் தொழில்நுட்பங்களை நாம் பயிற்சி செய்தல் எளிதென்பது ஸ்ரீமான் வஸுவின் சரிதையிலே நன்கு விளங்கும். நம்முடைய சாந்தி தர்மத்தை ஐரோப்பியர் தெரிந்து கொள்வதால், அவர்களுக்கு விளையக்கூடிய நன்மையோ மிக மிகப் பெரியது.

ஸ்ரீமான் ஜகதீச சந்திரவஸு சொல்லுகிறார்:- “தன்னை அடக்கியாளும் சக்தியில்லாமையால் மனுஷ்ய நாகரீகமானது சேதப் படுகுழியின் கரையில் நடுங்கிக் கொண்டு நிற்கிறது. ஸர்வ நாசத்திலே கொண்டு சேர்ப்பதாகிய இந்த வெறி கொண்ட வேகத்திலிருந்து மனிதனைக் காப்பாற்ற மற்றொரு தர்மம் வேண்டும்; அதாவது, நம்முடைய ஹிந்து தர்மம். ஏனென்றால்,  ஆத்ம த்யாகம் தனக்குத் தனக்கென்ற அவாவினால் உண்டாகாது. எல்லாச் சிறுமைகளையும் அழித்துப் பிறர் நஷ்டமெல்லாம் தனக்கு லாபமென்று கருதும் அஞ்ஞானத்தை வேரறுப்பதால் விளையும்” என்கிறார்.

முன்னொரு முறை சில வருஷங்களின் முன்பு ஜகதீச சந்திரர் சொல்லிய வாக்கிய மொன்றையும் இங்கு மொழிபெயர்த்துக் காட்டுதல் பொருந்தும். லண்டன் நகரத்தில்  ‘ராயல் ஸொஸைடி’ என்ற பெரிய சாஸ்திர சங்கத்தார் முன்பு செய்த ப்ரசங்க மொன்றிலே அவர் சொன்னார்:-  “ஸ்வலி கீதங்களில் பேசாத ஸாக்ஷ்யத்தை நான் பார்த்தேன். எல்லாப் பொருளையும் தன்னுள்ளே கொண்ட ஏகவஸ்துவின் கலை ஒன்றை அங்கு கண்டேன். ஒளியின் சிறுதிரைகளுக்கிடையே தத்தளிக்கிற துரும்பும், பூமியின் மேலே பொதிந்து கிடக்கும் உயிர்களும், நமது தலை மேலே சுடர் வீசும் ஞாயிறும் – எல்லாம் ஒன்று. இதைக்கண்ட பொழுதே, மூவாயிர வருஷங்களுக்கு முன்பு என் முன்னோர் கங்கைக் கரையில் முழங்கின வாக்கியத்திற்குச் சற்றே பொருள் விளங்கலாயிற்று.  ‘இந்த ஜகத்தின் பேத ரூபங்களில் ஒன்று காண்பார் எவரோ அவரே உண்மை காண்பார், பிறர் அல்லர், பிறர் அல்லர்’ இது தான் ஜீவஒலி, வாயுபகவானுடைய ஸ்ரீமுக வாக்யம். எல்லாவற்றிலும் ஒருயிரே அசைகிறது. அதை அறிந்தால் பயமில்லை; பயம் தீர்ந்தால் சாவில்லை அமிர்தம் ஸதா”.

-சுதேசமித்திரன் (26 டிசம்பர் 1917)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s