-எஸ்.வையாபுரிப் பிள்ளை

10. பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்து
தொல்காப்பியப் புறத்திணையியலிலே ‘அமரர் கண்முடியும் அறுவகை யானும்’ என்று தொடங்கும் 26-ம் சூத்திரத்தின் உரையிலே நச்சினார்க்கினியர்,
எரியெள்ளு வன்ன நிறத்தன் விரியீணர்க்
கொன்றையம் பைந்தா ரகலத்தன் பொன்றார்
எயிலெரி யூட்டிய வில்லன் பயிலிருட்
காடமர்ந் தாடிய ஆடலன் நீடிப்
புறம்புதை தாழ்ந்த சடையன் குறங்கறைந்து
வெண்மணி யார்க்கும் விழவினன் நுண்ணூற்
சிரந்தை யிரட்டும் விரலன் இரண்டுருவாய்
ஈரணி பெற்ற எழிற்றகையன் நேரும்
இளம்பிறை சேர்ந்த நுதலன் களங்களி
மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன் தேறிய
சூலம் பிடித்த சுடர்ப்படைக்
காலக் கடவுட் குயர்கமா வலனே.
என்ற அழகிய செய்யுளைத் தந்து ‘இது கடவுள் வாழ்த்து’ எனக் காட்டியிருகின்றார். எந்நூலுக்குரிய கடவுள் வாழ்த்தென்பது ஆராயத்தக்கது.
கடவுள் வாழ்த்தெனப் பொதுப்படக் கூறுதலால், உரைகாரர்களால் எடுத்தாளப்படும் பெருந்தகுதி வாய்ந்ததும் பண்டைகாலத்துச் சான்றோர்கள் இயற்றியதுமான ஒரு நூலினைச் சார்ந்ததே இச்செய்யுள் என்பது பெறப்படும். இவ்வியல்புகள் வாய்ந்தவற்றிற் சிறந்தன எட்டுத்தொகை நூல்களும் கீழ்க்கணக்கு நூல்களுமாமென்பது தெளிவு. நச்சினார்க்கினியரும் இந்நூல்களையே கருத்திற் கொண்டுள்ளா ரென்பது ‘இது கடவுள்வாழ்த்து’ என்பதனைத் தொடர்ந்து ‘தொகைகளினுங் கீழ்க் கணக்கினும் உள்ள கடவுள் வாழ்த்தெல்லாம் இதன்கண் அடக்குக என்று எழுதிச் செல்லுதலான் அறியப்படும். தொகை நூல்களுள் ஒரு நூலின்கணிருந்து கடவுள் வாழ்த்துச் செய்யுளை எடுத்துக்காட்டி, அவற்றுள் அடங்கிய பிற நூல்களைக் குறித்து மேலை வாக்கியம் எழுந்ததெனக் கொள்ளுதல் பொருத்த முடைத்தாம்.
‘எரியெள்ளு வன்ன’ என்ற செய்யுள் கீழ்க்கணக்கு நூல்களைச் சார்ந்ததெனல் சாலாது; அவை பெரும்பான்மை வெண்பாவினாலும் சிறுபான்மை வெண்செந்துறையாலும் இயன்றுள்ளன வாகலின். அன்றியும் அந்நூல்களனைத்தும் நமக்கு அகப்பட்டுள்ளன; அவற்றில் மேலைச் செய்யுள் போன்றன இடம்பெறுதற்குச் சிறிதும் இயைபில்லை யென்பது அவற்றை நோக்கின மாத்திரையில் அறியக் கிடக்கின்றது. எனவே, இச் செய்யுள் தொகை நூல்களுள் ஒன்றனைச் சார்ந்ததாகல் வேண்டு மென்பது வெளிப்படை. தொகை நூல்களுள் எதனைச் சார்ந்தது? தொகை நூல்கள் எட்டு என்பது யாவரும் அறிவர். அவை இன்னவென்பது,
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தா ரேத்துங் கலியே அகம்புறமென்
றித்திறத்த எட்டுத் தொகை.
என்னும் செய்யுளால் உணரலாகும். இந்நூல்கள் அகவல், கலிப்பா, பரிபாடல் என்ற மூவகைப் பாக்களால் அமைந்தன. கலிப்பாவினாலியன்ற கலித்தொகையையும் பரிபாடலாலியன்ற பரிபாடலையும் ‘எரியெள்ளு வன்ன’ என்பது சார்ந்த தன்றென்பது வெளிப்படை. அகவலால் இயன்ற ஏனை ஆறு நூல்களுள் ஒன்றனை இது சார்ந்ததாகல் வேண்டும்.
இவ் ஆறு நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகம், புறம் என்ற ஐந்தன் கடவுள் வாழ்த்துகளும் அவ்வந்நூலின் தொடக்கத்தில் காணப்படுகின்றன. பதிற்றுப்பத்து என்ற தொகை நூலிற்குரிய கடவுள் வாழ்த்துச்செய்யுளே நமக்கு அகப்படவில்லை. இச்செய்யுள் இதுவரையில் அகப்படாத முதற்பத்துடன் மறைந்து விட்டது போலும்.
‘எரியெள்ளு வன்ன’ என்பது பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்தாக இருத்தல் கூடுமா? அங்ஙனமாயின், அகவலோசை பிழைபடாதா?
$$$