இன்றைய இந்தியாவின் முகங்கள் – 9

-திருநின்றவூர் ரவிகுமார்

9. அனைவரையும் கவர்ந்த அமுல் சிறுமி 

எல்லையில் ஊடுருவிய சீனா அடிவாங்கி, அதிர்ந்து பின்வாங்கியதை உலகம் கண்டு வியந்தது. ஆனால் தமிழக ஊடகங்கள் ‘ஐயய்யோ, அவ்வளவுதான், எல்லாத்துக்கும் காரணம் மோடிதான்’ என்று ஒப்பாரி வைத்தன. இதற்கு மாறாக ஒரு கூட்டுறவு நிறுவனம் வெளியிட்ட ‘சீன டிராகனே வெளியேறு’ என்று ஒரு சிறு படத்துடன் கூடிய டிவீட் (குறுந்தகவல்)  அதிர்வலையை ஏற்படுத்தியது. டிவிட்டர் நிறுவனம் அதைத் தடை செய்தது. அதற்காக டிவிட்டர் நிறுவனத்திற்கு எதிராக எழுந்த விமர்சனங்கள், எதிர்ப்பைக் கண்டு பின்வாங்கியது. அந்த டிவீட்டை வெளியிட்டது அமுல் கூட்டுறவு நிறுவனம். அந்த டிவீட் இதுதான்:

தேசியப் பத்திரிகைகளை வாசிக்கும் அனைவரும் தவறாமல் பார்க்கும் ஒரு விஷயம் மூன்றாம் பக்கத்தில் இருக்கும் அமுல் சிறுமி. அன்றைய தினத்தில் தேசத்தின் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி அவள் பேசுவாள். இது வர்த்தக விளம்பரம்தான். ஆனால் அனைவரையும் கவரக் கூடியது. இதற்காக கடந்த ஆண்டு சர்வதேச விளம்பர கழகம் (இன்டர்நேஷனல் அட்வர்டைசிங் அசோசியேஷன்) விருது வழங்கி கௌரவித்துள்ளது. இத்தனைக்கும் விளம்பரத்திற்காக அமுல் செலவிடுவது வருமானத்தில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு தான்.

அதேபோல கொரானா ஊரடங்குக் காலத்தில் எல்லாத் தொழில்களும் முடங்கியபோது அமுல் மட்டும் 17 சதவீதம் வளர்ச்சி கண்டது. மாதம் ஒரு புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யும் அமுல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காகச் செலவிடுவது வெகு சொற்பமே. ‘இதற்கு எதற்கு செலவு செய்ய வேண்டும். காதுகளையும் மனதையும் திறந்து வைத்துக் கொண்டாலே போதுமானது. பால் கொடுக்க வருகின்றவர்களும் வாங்க வருகின்றவர்களும் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சொல்வார்கள். அதைக் கேட்டு முன்னேற்றம் செய்ய வேண்டியதுதான்’, என்கிறார் அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக (எம்டி) இருக்கும் டாக்டர் ரூபேந்திர சிங் சோதி.

1948 ல் குஜராத்தில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில், அப்போதைய மாநில விவசாயத் துறை அமைச்சர் திரிபுவனதாஸ் படேல் முயற்சியால் துவங்கப்பட்டது, அமுல் நிறுவனம் என்ற கூட்டுறவு சங்கம். டாக்டர் வர்கீஸ் குரியன் அதன் முதல் எம்டி; அதன் வளர்ச்சிக்கு வித்திட்டவர்; மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தை மாநில அளவிலான கூட்டுறவு அமைப்புகளின் ஐக்கியமாக மாற்றியவர்; 1970களில் ‘வெண்மைப்புரட்சி’ என்ற பெயரில் நாடு முழுவதும் பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தவர். அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர், இப்போதுள்ள எம்டி-யான சோதி. தேசத்தின் பால்காரர் என்று டாக்டர் வர்கீஸ் குரியன் அழைக்கப்பட்டாலும், உண்மையில் மாடு வளர்த்து, பால் கறந்து விற்பவராக வாழ்க்கையைத் துவங்கியவர் சோதி தான்.

பாகிஸ்தான் எல்லையோரக் கிராமமொன்றில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த சோதி, போரின் காரணமாக தில்லிக்கு குடிபெயர்ந்தவர்களில் ஒருவர். வரட்டி அடுப்பில் சுண்ட சுண்டக் காய்ச்சிய பாலைக் குடித்த நிலை மாறி, டில்லிக்கு வந்தபிறகு எவர்சில்வர் பாத்திரத்தில் பால் வாங்கிய நிலையை நினைவுகூரும் இவர், பின்னர் அதுவும் மாறி இரண்டு கி.மீ. நடந்து போய் வரிசையில் நின்று பால் வாங்கியதையும் அதுவும் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது என்பதையும் நினைவு கூர்கிறார். இவர் இன்று உலக பால் உற்பத்தி ஃபெடரேஷனின்  இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். பால் உற்பத்தி, பாதுகாப்பு, விநியோகம், மதிப்புக் கூட்டுதல், விற்பனை என அடிமட்டத்திலிருந்து அனைத்தையும் அனுபவத்தில் அறிந்தவர் இவர்.

வேளாண் பொறியியலில் முதுகலைப் பட்டதாரியான இவர் ஆமதாபாத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ரூரல் மேனேஜ்மென்டில் சேர்ந்து மேற்படிப்பை மேற்கொண்டார். டாக்டர் வர்கீஸ் குரியன் அதன் நிர்வாகி. இவருக்கு மாதம் ரூபாய் 800 நல்கை வழங்கினார். பட்ட மேற்படிப்பு முடிந்த பிறகு தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் வேலைக்கு சேர ஆசைப்பட்ட போதிலும் வேலை கிடைத்தது என்னவோ அமுல் நிறுவனத்தில்தான். அதுவும் விற்பனைப் பிரிவில். 13-15 ஆண்டுகள்  ஊர் ஊராக விற்பனையாளராகச் சென்றவர் சோதி. அதன்பின் தலைமையகத்தில் விற்பனைப் பிரிவில் அதிகாரியாக 20-23 ஆண்டுகள் பணிபுரிந்தார். “என் வாழ்க்கை திட்டமிட்டு வந்ததல்ல, விதி வகுத்த வழியில் வந்தது” என்று சொல்லி சிரிக்கிறார் அமுல் எம்டி-யான இந்த சர்தார்ஜி.

“நான் அமுல் நிறுவனத்தில் சேரும்போது அதன் ஆண்டு வருமானம் ரூ. 121 கோடி. நாள்தோறும் 12 லட்சம் லிட்டர் பால் சேகரித்தோம். கடந்த ஆண்டு வருமானம் ரூ. 55,000 கோடி. நாள்தோறும் 250 லட்சம் லிட்டர் பால் சேகரிக்கிறோம். ஆரம்பத்தில் அமுல் நிறுவனம் வடபாரதத்தில் வோல்டாஸ் நிறுவனம் மூலமாகவும் தென்னகத்தில் ஸ்பென்சர் கம்பெனி மூலமாகவும் விற்பனை செய்தது. இதை மாற்ற நாங்கள் சிரமப்பட்டோம். இதை மாற்றி நேரடி விற்பனையில் ஈடுபட்டது கஷ்டமாக இருந்தாலும் அது பெரிய மாற்றத்துக்கு வித்திட்டது” என்கிறார் சோதி.

இன்று இந்தியா என்றால் அமுல் என்றாலும் கூட, இந்தியா முழுக்கவும் அவர்கள் மட்டுமே இல்லை. தமிழகத்தில் ஆவின், கர்நாடகாவில் நந்தினி, பிகாரில் சுதா, ராஜஸ்தானில் சரஸ், பஞ்சாபில் வெர்கா என்று மாநில அளவிலான பால் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இத்துடன் சர்வதேச நிறுவனங்களும் (கிளாஸ்கோ, நெஸ்லே போன்றவை) இந்தியாவில் உள்ளன. இதில் அமுலின் இடம் எது?

“நாங்கள் தேசிய அளவில் மிகப்பெரிய இந்திய நிறுவனம். மாநில அளவிலான நிறுவனங்கள் எங்கள் போட்டியாளர்கள் அல்ல. மாறாக, பெரிய அண்ணன் என்ற வகையில் அவர்களுக்கு உதவுவதும் ஆலோசனைகளைக் கொடுப்பதும், தேவைப்பட்டால் அவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவதும் எங்கள் வழக்கம். சர்வதேச அளவில் 16 இடத்தில் அமுல் இருக்கிறது. இது ஆண்டு வருமானத்தை மட்டுமே கருத்தில் கொண்ட கணக்கீட்டு வரிசை. எங்களுக்கு முன்னால் இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் முக்கியமான வேறுபாடு, நாங்கள் இந்தியாவில் மட்டுமே செயல்படுபவர்கள்….

“அதுமட்டுமன்றி நாங்கள் கையாளும் பாலின் அளவை ஒப்பிடும்போது உலகில் 11 இடத்தில் இருக்கிறோம். அண்மையில் அமுலின் நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய சாக்லேட் தயாரிப்பு மையத்தைத் துவக்கி வைத்த பிரதமர் மோடி உலக அளவில் பால் வளத் துறையில் அமுல் மூன்றாவதான இடத்துக்கு வர வேண்டும் என்றார். அந்த இலக்கை நாங்கள் 2025க்குள் அடைய முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்” என்கிறார் சோதி.

விற்பனை குறித்து அமுலின் அணுகுமுறை என்ன என்பதை தெளிவாகக் கூறுகிறார் இவர். முதலாவதாக, பால் உணவின் ஒரு பகுதியாக வேண்டும். 09.06.22 இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக் கட்டுரையை (சோயா பாலில் எதிர்பார்த்த சத்தில்லை) மேற்கோள் காட்டும் சோதி, உணவு ஊட்டச்சத்து உள்ளதாக இருக்க வேண்டும் என்கிறார். இரண்டாவதாக, அது வாங்கக்கூடிய விலையில் இருக்க வேண்டும். முத்தாய்ப்பாக அது அருகில் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்கிறார்.

அமுலின் வெற்றிக்குக் காரணம் என்ன என்றபோது, ”லாப நோக்கமற்ற இந்நிறுவனத்தின் வெற்றிக்குக் காரணம் குழுச் செயல்பாடும்  வாடிக்கையாளர் நம்பிக்கையும்” என்கிறார் சோதி. எங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்வதாக தயாரிப்புகளும் சேவையும் உள்ளன என்கிறார்.  ’லாப நோக்கமற்ற என்றால் என்ன?’ கேள்விக்கு, “உலக நாடுகளில் பால் உற்பத்தியாளர்களுக்கு நிறுவனங்கள் கொடுப்பது 35 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் தான். ஆனால் அமுல் உற்பத்தியாளர்களுக்கு கொடுப்பது 80 சதவீதம். எனவே எங்களிடம் விற்பனை செய்ய உற்பத்தியாளர்கள் (36 லட்சம் பேர்கள்) விரும்புகிறார்கள். மற்ற சர்வதேச  நிறுவனங்கள் லாப நோக்கம் கொண்டவை. அமுல் அப்படி அல்ல” என்று விளக்குகிறார்.

இவருக்கு அரசின் மீது வருத்தம் உள்ளது. “விவசாயத் துறைக்கு அரசு அளிக்கும் முக்கியத்துவம் அதைச் சார்ந்த கால்நடை, பால்வளத் துறைக்கு அளிப்பதில்லை. விவசாயிகளுக்கு வருமான வரி கிடையாது. ஆனால் பால் உற்பத்தியாளர்கள் வருமான வரி கட்ட வேண்டி உள்ளது. அதுவும் பால் பொருளான நெய்க்கு 12 சதவீதம் வரி செலுத்த வேண்டி உள்ளது. இது மிக அதிகம்….

“முதலீடு செய்த தொகைக்கு இருமடங்கு லாபம் தரக்கூடிய இத்துறையில் அரசு உரிய முதலீடு செய்வதில்லை. மானியங்களும் பயிர்த் தொழிலுக்கு அளிக்கப்படுகிறது; இதற்கு அளிக்கப்படுவதில்லை. இத்தனைக்கும் இத்துறையில் வெறும் 5 % முதலீட்டிற்கு 30 % பயனளிக்கக் கூடியதாக இருக்கிறது” என்று துறை சார்ந்த எதிர்பார்ப்புகளையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகிறார் சோதி.

உலக பால் உற்பத்தியாளர்கள் ஃபெடரேஷன் என்பது அரசு சாராத சர்வதேச அமைப்பு.  அதில் பல்வேறு நாடுகளின் அரசு அதிகாரிகள் தான் இயக்குனர்களாக நியமிப்பார்கள். இது நடைமுறையில் சரியானது என்பதைப் புரிந்து கொண்டால் திரு. ரூபேந்திர சிங் சோதி அதன் இயக்குநராக ஆனதன் சிறப்புப் புரியும். இந்த ஆண்டு அந்த ஃபெடரேஷனின் கூட்டம் இந்தியாவில் நடைபெற உள்ளது.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s