-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
28. எல்லாமே இங்கேதான்
.
ஸாரூப்யம் தவ பூஜனே சிவ மஹாதேவேதி ஸங்கீர்த்தனே
ஸாமீப்யம் சிவபக்தி துர்யஜனதா ஸாங்கத்ய ஸம்பாஷணே/
ஸாலோக்யம் ச சராசராத்மக தனு-த்யானே பவானிபதே
ஸாயுஜ்யம் மம ஸித்தி மத்ர பவதி ஸ்வாமின் க்ருதார்த்தோஸ்ம்யஹம்//
.
சாரூபம் நின்பூசை சிவனேநின் பாடல்கள்
சாமீபம் சிவபக்தி மேலிட்டார் உரையாடல்
சாலோகம் யாவுமான நின்தோற்றம் கருதுவதே
சாயுச்சம் இங்கேயே எல்லாமே அடைந்தேனே.
.
ஆண்டவன் ஏதோ ஓரிடத்தில் இருந்துகொண்டு நம்மை ஆண்டு கொண்டிருக்கவில்லை. நம்முடனேதான் இருக்கிறார், நமக்குள்ளேயும் இருக்கிறார். அவரைச் சரியாகப் புரிந்துகொண்டு வழிபட்டால், நல் வழிபாட்டால் நமக்கு முக்தி இங்கேயே கிடைத்துவிடும். முக்தியை நான்கு வகையாகக் கூறுவார்கள். அவை: சாரூபம், சாமீபம், சாலோகம், சாயுச்சம் (சாயுஜ்ஜம்). இவை அனைத்தும் எங்கோ இல்லை. இங்கேயேதான். எப்படி?
விபூதி, ருத்திராட்சம் தரித்து, சிவோஹம் என தன்னையே சிவனாக பாவித்துக் கொண்டு சிவபூசை செய்தால் நாமும் அவராகிவிடும் சாரூபம் கிட்டுகிறது. சிவபெருமானைப் புகழ்ந்துபாடும் கீர்த்தனைகள், பாடல்களை இசைத்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்தால் அவர் அருகிலேயே வீற்றிருக்கும் அனுபவமான சாமீபம் கிடைத்துவிடுகிறது. சிவபக்தி மிகுந்த அடியார்களுடன் உரையாடும்போது சிவலோகத்திலே இருக்கின்ற நிறைவு கிடைக்கப் பெறுகிறது. சிவனின் வடிவத்தை மனத்தில் நினைத்தாலே போதும், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் சிவபெருமானோடு தியானத்தில் ஐக்கியமாகும் சாயுச்ச முக்தி பலிதமாகிவிடுகிறது.
ஆகையால் எங்கேயோ தேடி அலைந்து கொண்டிருக்காமல், உள்ளத்தை சிவபெருமானுக்குக் காணிக்கையாக்கி, அவரது நினைப்பிலே தோய்ந்து இங்கேயே ஜீவன் முக்தியை, அமர நிலையை எய்திவிடலாம். மகாகவி பாரதியார், “மண்ணில் வானம் காணலாம்”, “எல்லோரும் அமரநிலை எய்தலாம்” என்றெல்லாம் கூறியதன் பொருள் இதுவே.
$$$