-எஸ்.எஸ். மகாதேவன்

நினைவு நாளா இது? திருநாள்!
இன்றைக்கு (2022 செப்டம்பர் 11 அன்று) கடைவீதியில் ஒன்றே முக்கால் ரூபாய்க்கு (ரூ. 1.75) என்ன கிடைக்கும் என்று யோசிக்கிறேன். 1960 இல் உடுமலைப்பேட்டையில் 10-வது வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் அண்ணன் எஸ்.எஸ். நாராயணன் சென்னையில் துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் உதவிப் பொறியாளர். அப்போது கல்கியில் தொடராக வந்து கொண்டிருந்தது நா.பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர். வாரந் தவறாமல் அதை எடுத்து பைண்ட் செய்து வைத்துக்கொண்டு படித்துக் கொண்டிருப்பேன். மொழி, நடையில் என் ஆர்வத்தைக் கவனித்த என் அண்ணன், தான் சொல்லிவிட்டுப் போயிருந்தபடி சென்னையிலிருந்து ஒரு புத்தகம் எனக்கு பரிசாக அனுப்பினார். அதன் விலைதான் ஒன்றே முக்கால் ரூபாய். அதன் மதிப்பு? அறுபத்திரண்டு ஆண்டுகள் ஆகின்றன, இன்னும் நான் கணக்குப் போட்டு முடிக்கவில்லை. மதிப்பு கூடிக்கொண்டே போகிறது.



‘மகாகவி பாரதியார் கவிதைகள்’ -வை. கோவிந்தனின் சக்தி காரியாலயம் வெளியிட்ட சக்தி மலிவுப் பதிப்பு வரிசையில் முதல் புத்தகம். அன்று தபாலில் என் கைக்குக் கிடைத்தது அதன் ஐந்தாவது பதிப்பு. புதையலே கிடைத்தது போல இருந்தது. நூல், பாரதி நினைவு நாளை ‘பாரதி திருநாள்‘”’ என்று குறிப்பிடுகிறது பார்த்தீர்களா? நிறைவாழ்வு வாழா விட்டாலும் பாரதியார் நிறைய வாழ்ந்திருக்கிறார் என்பதால் ‘அவரை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறோம்’ என்று காட்டிக் கொள்வது போல நினைவு நாள் அனுசரிப்பது பெரிய விஷயமில்லை. ஒரு நூறு ஆண்டுகளுக்கு சமமான வாழ்க்கை அவருடையது. வை.கோவிந்தன் அதை மனதில் கொண்டே அவரது நினைவு நாளை ‘பாரதி திருநாள்’ என்று அழைத்தார் போலிருக்கிறது.
சென்னையில் சில பாரதி பக்தர்களுக்கு அவருடைய ஜென்ம நட்சத்திரம் ஏனோ பிடித்துப் போய்விட்டது. மாதாமாதம் அந்த நட்சத்திரம் (மூலம்) வரும்போது ஒரு கூட்டம் நடத்துவார்கள். அது கவியரங்கமாகப் பரிமளிக்கும். அண்மையில் காலமான வில்லிவாக்கம் ‘பாரதி’ சுராஜ் அதில் ஒருவர். ஒரே ஒருமுறை அந்தக் கூட்டத்திற்கு நான் போயிருக்கிறேன்; தாம்பரத்தில் ஓர் அன்பரின் வீட்டில் நடந்தது. அப்போது நான் ‘தியாகபூமி’ வார இதழ் ஆசிரியர். ஏதோ ஒரு கவிதை படித்தேன். அதன் பிரதி கையில் இல்லாததால் அது கால கதி அடைந்துவிட்டது.


நான் தொலைத்த எனது இன்னொரு கவிதையின் முதல் இரண்டு வரிகள் ஞாபகம் இருக்கிறது: “வித்யாவதி தேவி வீர பகத்சிங் தாய்க்கு வித்யார்த்தி பரிஷத்தார்…” ஆம், பகத்சிங்கின் தாய் தான். பெயர் வித்யாவதி தேவி. பஞ்சாபிலிருந்து பெங்களூர் செல்லும் வழியில் சென்னையில் (1980களின் தொடக்கத்தில்) ஒரு நாள் தங்கினார். (சந்திரசேகர ஆசாத் என்ற அஞ்சா நெஞ்சனின் வாழ்க்கை வரலாற்று நூல் கன்னடத்தில் ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் முயற்சியால் பதிப்பிக்கப்பட்டு வெளியீட்டு விழா நடைபெற்றது; அதில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டு அம்மையார் பெங்களூர் போய்க் கொண்டிருந்தார்).
அப்போது அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் இளைஞர்கள், எழும்பூர்- சிந்து சதன் அரங்கில் அவருக்கு ஒரு பொது வரவேற்பு அளித்தார்கள். சென்னையின் ஒரு பகுதியின் ஆர்.எஸ்.எஸ். சங்கசாலக்காக (தலைவராக) இருந்த ஹர்பகவான்தாஸ் அரோரா, வித்யாவதி அம்மையாரை வரவேற்று பகத்சிங்கின் தியாகத்தை நினைவுகூர்ந்து, ஹிந்தியில் ஒரு வாழ்த்து மடல் படித்தளித்தார். அந்த நிகழ்ச்சியில் தமிழில் நான் படித்தளித்த கவிதையின் முதல் வரிதான் மேலே நீங்கள் கண்டது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியின் நடுவில் சிறியதாக, இனிமையாக ஒரு பரபரப்பு. வெள்ளை வெளேர் குர்தா பைஜாமா அணிந்து மேடை ஏறினார் திரைப்பட நட்சத்திரம் சிவாஜி கணேசன். பகத்சிங்கின் தாயாரைப் பணிந்து வணங்கினார். அந்த மாவீரனின் வீரத் தியாக வரலாற்றை திரைப்படமாக்குவேன் என்று அறிவித்தார்; பிறகு விடைபெற்றார். அதோடு சரி.
இன்னொரு பிரபலமும் இதுபோல போகிறபோக்கில் ஒரு நிகழ்ச்சியில் பிரவேசித்து சிறிய, இனிய பரபரப்பு ஏற்படுத்தியது உண்டு. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். ஆழ்வார்பேட்டை, டிடிகே சாலையில் ஒரு பள்ளி வளாகத்தில் சமஸ்கிருத பாரதி அமைப்பினரின் மூன்று நாள் பகவத்கீதை முகாம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக காலையில் சிற்றுண்டிக்கு பிறகு சமஸ்கிருத சம்பாஷணை பயிற்சி நடைபெறும். சம்பவ தினத்தன்று என் மூத்த மகன் ஸ்ரீராமன் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். ” மம நாம ஸ்ரீராம்” (என் பெயர் ஸ்ரீராம்) “பவதஹ நாம கிம்?” (உங்கள் பெயர் என்ன?) என்று கேட்டு பரஸ்பர அறிமுகம் தொடங்கி மொழியை அறிமுகம் செய்யும் சமஸ்கிருத பாரதியின் உத்தி அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது. அந்த வழியே நடைபயிற்சிக்கு சென்று கொண்டிருந்த ’துக்ளக்’ ஆசிரியர் சோ ராமசாமி தாமாக அந்த வகுப்பில் பிரவேசித்தார். வகுப்பில் இருந்த 200 பேர் முகத்திலும் ஒரு மலர்ச்சி. “மம நாம ஸ்ரீராம், பவதஹ நாம கிம்?” என்று சோவை நோக்கியும் ஸ்ரீராமன் தன் அஸ்திரத்தை ஏவினார். லாகவமாக அதைக் கையாண்ட சோ, “மம நாம ஏகாக்ஷரம்!” (என் பெயர் ஓர் எழுத்து) என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.



நிற்க. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வை. கோவிந்தனின் ’மகாகவி பாரதியார் கவிதைகள்’ நூல் என் கைவசமே. அந்த சகவாச புண்ணியத்தால் பாரதியை நான் அவ்வப்போது எட்டிப் பார்த்து நுனிப்புல் மேய்ந்ததில் அவரைப் பற்றிய சங்கதிகள் சிலபல என் உள்ளத்தில் சேர்ந்தன. எனது இளைய மகன் முனைவர் ஜயராமன் மகாதேவன் சர்வதேசப் புகழ் பெற்ற கிருஷ்ணமாச்சார்யா யோக மந்திரத்தில் நூல் ஆராய்ச்சிப் பிரிவு இயக்குனராகப் பணியாற்றியபோது அந்த சங்கதிகளை கவிழ்த்துக் கொட்டி காட்சிப்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ’தரிசனம்’ என்ற அந்த நிறுவனத்தாரின் அரையாண்டு இதழில் வெளியிட பாரதியாரையும் யோகாவையும் இணைத்து ஒரு கட்டுரை எழுதித் தரச் சொன்னார்கள். எழுதிக் கொடுத்தேன். (*அக்கட்டுரை நமது தளத்தில் ஏற்கனவே வெளியாகி உள்ளது. அதன் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது).
அந்த இதழில் கட்டுரையின் இறுதியில் எழுதியவர் அறிமுகத்தில் ‘அறுபது ஆண்டுகளாக பாரதியில் தோய்ந்தவர்’ என்ற வரி என்னை வர்ணித்திருந்தது! ‘பொருள் புதிது’ இணையதளம் கொல்லன் தெரு; கொல்லன் தெருவில் ஊசி விற்பது அதிகப்பிரசங்கித்தனம் என்று எனக்கு தெரியும். ஆனாலும் …!
$$$
- *காண்க: யோகா: பாரதியார் பார்வையில்…
$$$