-பத்மன்

கொன்றைவேந்தன்- 81
வளவன் ஆயினும் அளவறிந்து அழித்துண்
விளக்கம்:
செல்வ வளமை மிகுதியாக உடையவனாக இருந்தாலும், தகுந்த அளவை அறிந்துகொண்டு அதற்கேற்ப செலவழித்து அனுபவிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் ஔவையார்.
வளவன் என்ற சொல் நீர் வளத்தால் நெல் வளம் மிகுந்த சோழநாட்டு அரசனைக் குறிக்கும் சிறப்புச் சொல். அதேநேரத்தில் விளைச்சல் அதிகமுள்ள வேளாளன், செல்வ வளமுடையவன் என்பதே இதன் உட்பொருள்.
அனைத்து ஆக்கமும் அழிவின் மேலேயே கட்டமைக்கப்படுகின்றன. இந்தப் பிரபஞ்சமே அழிவில் இருந்து தொடங்கி, மீண்டும் மீண்டும் அழிந்து ஆகுவதே.
அதேபோல எந்த ஒன்றைப் பெறுவதற்கும் நாம் அதற்குரிய நேரம், பொருள் ஆகியவற்றைச் செலவழிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக பொருள் அதாவது பணத்தைச் செலவழித்தல் சுகபோகத்துக்கு அவசியமாகிறது. இந்நிலையில் வரவறிந்து செலவழித்தல் மிக முக்கியம்.
‘குந்தித் தின்றால் குன்றும் மாயும்’ என்பது பழமொழி. அதாவது, மலையளவு செல்வம் இருந்தாலும் வரவை அதிகரிக்காமல் தின்றுகொண்டே இருந்தால், அனுபவித்துக்கொண்டே இருந்தால் மலையளவு செல்வமும் மறைந்து போகும்.
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கும் நெறி
-என்றுரைக்கிறது திருக்குறள் (477). செயலாற்றும்போது அதற்குரிய அளவை அறிந்து செலவழிப்பதே, பொருளின் மதிப்பை உணர்ந்து செலவு செய்யும் நெறிமுறையாகும் என்கிறார் திருவள்ளுவர்.
பிறிதோர் இடத்தில் வரவு குறைவாக இருந்தாலும் செலவை அதற்குள் சுருக்கிக் கொள் என்பதை,
ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை போகா றகலாக் கடை
-என்று பகர்ந்துள்ளார் திருவள்ளுவர் (திருக்குறள்- 478).
இந்நிலையில் எளியோர் மட்டும்தான் செலவைச் சுருக்க வேண்டும் என்பதல்ல, செல்வ வளமுடையவனும் அளவறிந்து செலவழித்தல் அவசியம் என்பதை அறிவுறுத்துகிறார் ஔவையார்.
கண்மூடித்தனமாகச் செலவழித்தல் அழிவுக்கு வழிவகுத்துவிடும். எந்த அனுபவித்தலுக்கும் அதற்கான செலவழித்தலுக்கும் ஓர் அளவு, வரம்பு உண்டு. அந்த எல்லையை மீறாதே என எச்சரிக்கிறார் ஔவையார். உண் என்பது இங்கே சாப்பிடுவதை மட்டும் குறிக்கவில்லை, இதர எல்லா வகை துய்ப்புகளையும் சுட்டுகிறது.
ஆகையால் தேவையை, அதன் அளவை நாம் முதலில் நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும். அந்த அளவுக்கு உட்பட்டே அதற்கான செலவும் இருக்க வேண்டும், அனுபவிப்பும் இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருந்தாலும் இந்த அளவை மீறிச் செல்லக் கூடாது.
இதனைத்தான் ‘வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண்’ என நயம்பட நவின்றுள்ளார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 82
வானம் சுருங்கின் தானம் சுருங்கும்
விளக்கம்:
வானம் பொழியும் மழையின் அளவு குறைந்து போனால், அதன் தொடர் விளைவாக தான தருமங்கள் உள்ளிட்ட நற்செயல்களும் குறைந்து போய்விடும் என்கிறார் ஔவையார்.
மண்ணுயிர்கள் வாழ்வதற்கு வான்மழை அவசியம். மழைநீரே ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளின் இருப்பாகவும், நிலத்தடி நீராகவும் மாறி, நம் குடிநீர்த் தேவையையும் விவசாயத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. வயல் விளைச்சலுக்கு மழை இன்றியமையாதது. தொழில் வளர்ச்சிக்குக் கூட நீர்தேவை. ஆக பல வழிகளிலும் வானத்தின் கருணை வேண்டியிருக்கிறது.
இத்தகைய சூழலில் வானம் சுருங்கிவிட்டால்? அதாவது மழையின் அளவு குறைந்துவிட்டால்? விவசாயம் குறையும், தொழில்கள் நசியும். உணவுப் பஞ்சமும், குடிநீர்த் தட்டுப்பாடும் தலைவிரித்தாடும். சமூகத்தில் அமைதி குலைந்து, மலியும். அந்நிலையில் பிறர் பசியை, வறுமையை, பிணியைப் போக்கும் தானம் உள்ளிட்ட நற்செயல்களை மேற்கொள்ள பலரும் முன்வர மாட்டார். அதற்கு வாய்ப்பும் இல்லை.
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
-என்று கூறியுள்ளார் திருவள்ளுவர் (திருக்குறள்- 18). வானம் மழை பொழியாது வறண்டு போனால், மக்களின் சுபிட்சம் கெட்டுப் போகுமாதலால் வானில் வாழும் தெய்வங்களுக்கே சிறப்பான பூஜை, திருவிழாக்களை மக்கள் செய்யாது விட்டுவிடுவார்கள் – என்கிறார் திருவள்ளுவர். அப்படியிருக்க மழை சுருங்கின் சகமனிதருக்கு உதவும் கருணை, மனிதரிடம் எப்படி சுரக்கும்? அதுவும் சுருங்கிவிடும்.
இருப்பினும் எந்நிலையிலும் விடாது நன்மை செய்யும் ஒருசிலர் இருக்கத்தான் செய்வர். அவர்களுக்காவே மழை சிறிதேனும் பெய்யும். அதனால்தான் மழைக்கும் சரி, தானத்துக்கும் சரி, சுருங்கும் என்ற சொல்லை ஔவையார் பயன்படுத்தியுள்ளார்.
ஆக தானம் போன்றவை சிறக்க வானமும் நன்கு கண்திறக்க வேண்டும். இல்லையேல் அவை குறையும். இதனைத்தான் ‘வானம் சுருங்கின் தானம்’ சுருங்கும்’ என்று உரைத்துள்ளார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 83
விருந்து இல்லோர்க்கில்லை பொருந்திய ஒழுக்கம்
விளக்கம்:
விருந்தினரை உபசரித்து அறியாத இல்லத்தாருக்குத் தேவையான ஒழுக்கம் இருக்காது என்கிறார் ஔவையார்.
இதைப் பார்த்ததும் இக்காலத்தவர்களான நமக்குத் தலை சுற்றும். விருந்து என்றால் நல்ல சாப்பாடு. அதைக் கொடுக்காவிட்டால் நம்மிடையே ஒழுக்கம் இருக்காதா? விருந்து என்ற பெயரில் வீடுகளிலும் விடுதிகளிலும் அடிக்கும் லூட்டிகளில் தானே ஒழுக்கக் கேடு மலிந்து கிடக்கிறது! அப்படியிருக்க, விருந்து அளிக்காதது ஒழுக்கமின்மையா? எனக் குமுற வேண்டாம். விருந்து என்ற சொல்லுக்கான பொருளை நாம் புரிந்து கொண்டுள்ள லட்சணம் இது.
விருந்து என்றால் நல்ல சாப்பாடு, வீட்டுக்கு வரும் உறவினர்கள் என்று நாம் தற்போது பொருள் கொள்கிறோம். விருந்து என்பதில் உணவு பரிமாறல் உண்டு. ஆனால் உறவினர்களுக்கு உணவளித்தல் என்று அதற்குப் பொருள் அல்ல! பிறகு?
விருந்து என்பதற்கு புதுமை எனப் பொருள். நமக்கு முன்பின் அறிமுகமில்லாத புதியவர்களே விருந்தினர் என அக்காலத்தில் கருதப்பட்டனர். நம்மால் இயன்ற அறுசுவை உணவை இப்புதியவர்களுக்கு வழங்கி உபசரித்தலே விருந்தோம்பல்.
திருமணம் போன்ற தினங்களில், உறவினர்கள், நண்பர்கள் ஆகிய உறவுமுறைகளுக்கு முறை செய்வதல்ல விருந்து. முன்பின் தெரியாத வெளிநபர்களுக்கு முகஞ்சுழிக்காமல், சிறந்த உணவளித்துப் பசியாற்றி உபசரிப்பதே விருந்து.
இல்லறத்தாரின் ஐந்து கடமைகளில், தென்புலத்தார் (பித்ருக்கள்), தெய்வம் என்ற வரிசையில் திருவள்ளுவர் மூன்றாவதாகக் குறிப்பிடும் விருந்து என்பது இத்தகைய புதியவர்களையே. நாலாவதாகக் குறிப்பிடும் ஒக்கல் உறவினர்கள், நண்பர்களையும்; ஐந்தாவதான தான் என்பது தம் குடும்பத்தாரையும் குறிக்கிறது.
உபசரிக்க வேண்டிய கடமைகளில் முன்னோர், தெய்வம் ஆகியவற்றுக்கு அடுத்தநிலையில் விருந்தாக இருப்போர் வழிப்போக்கர்களான, முன்பின் அறிமுகமில்லாத புதியவர்களே.
இதைத்தான் ‘அதிதி தேவோ பவ’ என்று பெரியோர்கள் உரைத்துள்ளனர். விருந்தினர்களைத் தெய்வமாய்க் கருது என்பது இதன் பொருள்.
திதி என்றால் நாள். பிரதமை, துவிதியை முதல் அமாவாசை, பௌர்ணமி வரையாக கிருஷ்ணபட்சம், சுக்லபட்சம் என இரு 15 தினங்களாக இத் திதிகள் குறிக்கப்படும். அதிதி என்றால், இதுபோன்ற நாள், கிழமையற்ற எனப் பொருள். குறிப்பிட்ட தினத்தில்தான் வருவார்கள் என்று குறிப்பிட இயலாமல், எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய புதியவர்களே அதிதிகள். அவர்களைத்தான் ‘விருந்து’ என்கிறது நம் பைந்தமிழ்.
ஆக, தமிழகம் உட்பட பாரதம் முழுவதிலுமே விருந்தினர்களை உபசரித்துப் பசியாற்றும் பண்பாடு உண்டு.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் ஹோட்டல்கள் எனப்படும் பணத்துக்கு உணவை விற்கும் கடைகள் கிடையாது. பணம் வாங்கிக்கொண்டு தங்கிக்கொள்ள இடமளிக்கும் விடுதிகள், லாட்ஜுகளும் கிடையாது. விலையின்றி உணவும், தங்க இடமும் கொடுக்கும் சத்திரங்கள்தான் உண்டு. அதுமட்டுமல்ல, புனித யாத்திரையாகவும் இதர பயணத்துக்காகவும் வரும் வெளியாட்களுக்கு, தெரியாதவர்கள் இல்லங்களிலும் உபசரிப்புக் கிடைக்கும்.
வரும் விருந்தினர் அமர்ந்து ஓய்வெடுக்கவே வீடுகளில் பெரிய திண்ணைகள் கட்டப்பட்டன. நம்மை யாரென்று கேட்காமலேயே திண்ணையில் அமர்வோருக்கு பெரிய குவளையில் பாலோ, மோரோ வழங்கும் வழக்கம், நமது கிராமங்களில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும்கூட இது வழக்கத்தில் இருந்தது. சோத்துக்கடைகளை அப்போதும் பாவமாகக் கருதினர். தண்ணீர் விலைபொருளாக இருக்கவில்லை.
40-50 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாறெனில், சில பல நூற்றாண்டுகளுக்கு முன், புதியவர்களான விருந்தினரை உபசரிப்பது புண்ணியச் செயலாகவே மதிக்கப்பட்டது.
ஆகையால், அத்தகைய விருந்தினர் ஒருவரது இல்லத்துக்கு வரவில்லை என்றால் அவர்களிடம் நற்பண்பு இருக்காது என்று அர்த்தம். நற்பண்பு இல்லாதோர் எப்படி ஒழுக்கத்தைப் பேணுவார்கள்?
ஆகையால்தான் ‘விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்’ என்றுரைத்துள்ளார் அறத்தை வலியுறுத்தும் அக்காலத் தமிழ்ப் புலவரான ஔவை மூதாட்டி.
$$$
கொன்றைவேந்தன்- 84
வீரன் கேண்மை கூரம்பாகும்
விளக்கம்:
வீரனுடன் நட்புக் கொண்டிருப்பது கூர்மையான அம்பை கையில் வைத்திருப்பதற்கு ஒப்பாகும் என்கிறார் ஔவையார்.
வீரன் என்பது வீரமுடையவன் என்பதைப் பொதுவாகக் குறித்தாலும் படைவீரன், ராணுவ வீரன், காவலன், பாதுகாவல் பணி செய்வோன் என்பதைச் சிறப்பாகக் குறிக்கிறது.
கேண்மை என்றால் நட்பு என்று பொருள். உறவு, இரக்கம், (நடைமுறையில் உள்ள) வழக்கம் ஆகிய பொருள்களும் உள்ளன. நட்பு, உறவு ஆகிய பொருள்களே இவ்விடத்தில் பொருந்தும்.
அம்பு என்பது இங்கே ஆயுதத்தைக் குறிப்பிடுகிறது. கூர் அம்பு என்பது இருவேறு பொருள்களைத் தாங்கி நிற்கிறது. கூர்மையான ஆயுதத்தைக் கையில் தாங்கி இருப்பது நமக்கு பலத்தைத் தருகிறது. அதேநேரத்தில் எச்சரிக்கையாகக் கையாளாவிட்டால் அது நம் கைகளையே பதம் பார்த்துவிடும்.
அதேபோல்தான் வீரனுடைய நட்பும் நமக்கு பலமாக அமைந்து நம்மைப் பாதுகாக்கிறது. அதேநேரத்தில் வீரனின் நட்பால் நமக்கு ஆபத்துகளும் ஏற்பட்டுவிடும். வீரர்கள் பொதுவாக முரட்டுத்தனமாக இருப்பதால் அவர்களோடு நெருக்கமாகப் பழகும்போது அவர்களது முன்கோபத்துக்கு சிலசமயம் நாம் ஆளாக நேரிடும். மேலும் வீரர்களுக்குப் பல எதிரிகளும் இருப்பர். வீரனுக்கு நண்பர் என்பதால் அவர்கள் நம்மையும் எதிரியாகக் கருதி தாக்கக் கூடும்.
இல்லையேல் நாமேகூட வீரன்தான் நம் நண்பனாயிற்றே என்று தேவையில்லாத திமிருடன் நடந்துகொண்டு பிறரது பகையைச் சம்பாதித்துக் கொள்ள நேரிடலாம்.
ஆகையால் இருமுனைக் கூர் ஆயுதமான வீரனது நட்பை லாவகமாகக் கையாள வேண்டும்.
குளிருக்கு இதமாகத் தீமூட்டி குளிர் காய்வோர் எப்படிச் சரியான தொலைவில் அமர்ந்து குளிர் காய்வார்களோ, அதேபோல வீரனுடன் தேவையான இடைவெளியைப் பேணியபடி நட்புப் பூண வேண்டும். அதாவது, குளிர் காய்வோர் நெருப்புக்கு மிக அருகே சென்றால் சுட்டுவிடும். மிகத் தள்ளி அமர்ந்தாலோ நெருப்பின் சூடு உறைக்காததால் பயனிருக்காது. ஆகையால் இதமான சூடு கொடுத்தாலும் நம்மைச் சுட்டுவிடாத சரியான தொலைவில் அமர்ந்து குளிர்காய வேண்டும். அதேபோல கூர் அம்பாகத் திகழும் வீரனுடனான நட்பையும் நமக்குப் பாதிப்பு ஏற்படுத்திவிடாதபடி எச்சரிக்கையாகவும், நமக்குப் பாதுகாப்புத் தரும் வகையில் ஏற்றமாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதனைத்தான் ‘வீரன் கேண்மை கூர் அம்பாகும்’ என்று அறிவுறுத்தியுள்ளார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 85
உரவோர் என்கை இரவாது இருத்தல்
விளக்கம்:
வலிமை உடையவர் என்பதற்கு அடையாளம், யாரிடமும் போய் யாசகம் கேட்காமல் இருத்தலே ஆகும் என்கிறார் ஔவையார்.
உரம் என்பதற்கு வலிமை, திடம், திண்மை, ஊக்கம் என்று பொருள். விளைச்சலுக்கான வலிமையை மண்ணுக்குத் தரும் ஊட்டச்சத்துப் பொருளுக்கு உரம் என அதனாலேயே பெயர் வந்தது. நெஞ்சத் துணிவு, மன வலிமைக்கும் உரம் என்றே பெயர். அவ்வகையில் உரவோர் என்பது மன உறுதி பெற்றவர், வலிமை உடையவர், வல்லமையாளர், துன்பங்களுக்குத் துவண்டு விடாமல் ஊக்கத்தோடு முயற்சி செய்பவர் எனப் பொருள் அமைகிறது.
இரத்தல் என்றால் பிச்சை எடுத்தல், யாசகம் கேட்டல் எனப் பொருள். பொது நன்மைக்காக தானம் பெறுதல் வேறு. பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்துவது, பிறர் தயவை எதிர்பார்த்து வாழ்தல் என்பது வேறு. இரத்தல் என்பது பிச்சை ஏற்றலையே குறிக்கிறது.
ஈதல் எனப்படும் பிறருக்குப் பொருள் வழங்குதல் என்பது எவ்வளவு சிறப்பானதோ அதே அளவுக்குப் பிறரிடம் பொருளை பிச்சை வாங்கி உண்ணுதல் இழிவானது.
மன உறுதி உடையவர்கள், முயற்சி உடையோர், ஊக்கமுடையோர், திறனுடையோர் ஒருபோதும் பிறரிடம் கையேந்த மாட்டார்கள். இதனைத்தான் ‘உரவோர் என்கை இரவாது இருத்தல்’ என்று மொழிந்துள்ளார் ஔவையார்.
இதை வேறு கோணத்திலும் பார்க்கலாம். ஒருவருக்கு இறை நம்பிக்கையாலும், அறத்தைப் பின்பற்றுவதாலுமே உண்மையான உரம், எதற்கும் கலங்காத துணிவு கிடைக்கப் பெறுகிறது. அத்தகைய உரவோர், எனக்கு இது வேண்டும் எனப் பிறரிடம் மட்டுமல்ல, இறைவனிடம் கூட யாசிக்க மாட்டார்கள். அவர்களது இறை நம்பிக்கையும், உறுதியான பக்தியும் ‘எல்லாம் இறைவன் செயல்’ என்றிருக்கக்கூடிய திடச்சித்தத்தைத் தந்துவிடும். அத்தகைய பக்திமான்கள் இது வேண்டும், அது வேண்டும் என்று யாசிக்காமல் திட சங்கல்பத்தோடு கிடைப்பதில் திருப்தியாக இருப்பார்கள்.
ஆகையால் தன்னம்பிக்கையாலும் இறை நம்பிக்கையாலும் வலிமை பெற்றுத் திகழ்பவர்கள் எதையும் இரந்து பெறுவதில்லை. இதனைத்தான் ‘உரவோர் என்கை இரவாது இருத்தல்’ என மொழிந்துள்ளார் ஔவையார்.
$$$
.
2 thoughts on “கொன்றைவேந்தன் (81-85)”