ரா.பி.சேதுப்பிள்ளையின் ‘தமிழ் விருந்து’: பகுதி-1

-ரா.பி.சேதுப்பிள்ளை

முன்னுரை

‘சொல்லின் செல்வர்’ என்று அழைக்கப்படும் ரா.பி.சேதுப்பிள்ளை (1896- 1961), தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர் எனப் பன்முகம் கொண்ட படைப்பாளி.  தமிழ் இலக்கியத்தில் ஆழங்காற்பட்ட புலமை கொண்ட இவர் மேடைச் சொற்பொழிவிலும், கட்டுரை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். தமிழின் எழுத்து நடை வளர்ச்சியில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் கொண்டு வந்தவர் இவரே.

சேதுப்பிள்ளை திருநெல்வேலி அருகே ராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 2ஆம் நாள் பிறவிப்பெருமான் பிள்ளை – சொர்ணம்மாள் ஆகியோருக்கு மகவாகப் பிறந்தார்.  ஐந்தாண்டு நிரம்பிய சேது உள்ளூர்த் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து, தமிழ் நீதி நூல்களைக் கற்றார். ராசவல்லிபுரம் செப்பறைத் திருமடத் தலைவர் அருணாசல தேசிகரிடம் இவர் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களைக் கற்றார்.

 பின்னர் தனது தொடக்கக் கல்வியைப் பாளையங்கோட்டையில் தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும், இடைநிலை வகுப்பின் (இன்டர்மீடியட்) இரண்டாண்டுகளை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், இளங்கலை வகுப்பின் இரண்டாண்டுகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்றார்.

1936-இல் சென்னைப் பல்கலைக்கழகம் சேதுப்பிள்ளையை தமிழ்ப் பேராசிரியராக அமர்த்தியது. 25 ஆண்டுக் காலம் சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய சேதுப்பிள்ளை, தம் எழுத்தாலும் பேச்சாலும் தமிழுக்குப் பெருமையும் தமிழ் உரைநடைக்குச் சிறப்பையும் சேர்த்தார். அந்நாளில் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித் துறைத் தலைவராக பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பணியாற்றி வந்தார்.

வையாபுரிப்பிள்ளை தொகுத்து வந்த தமிழ்ப் பேரகராதிப் பணி நிறைவேற சேதுப்பிள்ளை துணை நின்றார். வையாபுரிப்பிள்ளையின் ஓய்வுக்குப்பின் இவர் தலைமைப் பதவியை ஏற்றார். அப்போது பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தினார். ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் துணைநின்று உதவினார். இவரின் முயற்சியினால், திராவிடப் பொதுச்சொற்கள், திராவிடப் பொதுப்பழமொழிகள் ஆகிய இரு நூல்களை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ என்னும் நூலுக்கு சாஹித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. கவியோகி சுத்தானந்த பாரதியார், ரா.பி.சேதுப்பிள்ளையை “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்று பாராட்டினார்.

அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத் தொடர் மூன்றையும் உரைநடைக்குள் கொண்டுவந்த சேதுப்பிள்ளையின் பேச்சாற்றலைப் பாராட்டித் தருமபுர ஆதீனம் 1950ஆம் ஆண்டு ‘சொல்லின் செல்வர்’ என்னும் விருதினை வழங்கியது. 

சேதுப்பிள்ளையின் நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று சோமலே பாராட்டுவார். இவர் தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னை பல்கலைக்கழகம் ‘முனைவர்’ பட்டம் வழங்கியது. சேதுப்பிள்ளை 1961 ஏப். 25இல் காலமானார். அவரது ’தமிழ் விருந்து’ நூல் இங்கு 4 பகுதிகளாக வெளியாகிறது.

நூல் விவரம்:

தமிழ் விருந்து
-ரா.பி.சேதுப்பிள்ளை, பி.ஏ., பி.எல்.
பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
முதற்பதிப்பு: 1945;  பதினைந்தாம் பதிப்பு: 2007
விலை: ரூ. 40-

$$$

முகவுரை

இலக்கியப் பசி இப்பொழுது தமிழ்நாட்டிற் பரவி வருகின்றது. பசி மிகுந்தவர் எளிய உணவையும் இனிய விருந்தாகக் கொள்வர். அந்த வகையில் வந்தது இத் ‘தமிழ் விருந்து’.

தமிழ்க் கலைகளின் தன்மை, தமிழ் இலக்கியத்தின் சீர்மை, தமிழ் மொழியின் செம்மை, தமிழரது வாழ்க்கையின் மேன்மை – இவை நான்கு கூறுகளாக இந் நூலிற் காணப்படும்.

சென்னையிலும், திருச்சிராப்பள்ளியிலும் உள்ள வானொலி நிலையத்தில் நான் பேசிய பதினெட்டுப் பேச்சுகள் இந் நூலிற் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றைச் சேர்த்துக் கொள்ள அனுமதி தந்த இரு நிலையத்தார்க்கும், இந் நூலை வெளியிடுவதற்கு அனுமதி யளித்த சென்னைப் பல்கலைக் கழகத்தார்க்கும் எனது நன்றி உரியதாகும்.

சென்னை, 9-9-’45.

– ரா.பி.சேதுப்பிள்ளை

$$$

உள்ளுறை

I.

1. கலையும் கற்பனையும்
2. புராதனப் போர் – படையெடுப்பு
3. போர்க்களங்கள்
4. ஆகாய விமானம்
5. வாழ்க்கையும் வைராக்கியமும்

II

6. புறநானூறு
7. சிலப்பதிகாரம்
8. மணிமேகலையும் மதுவிலக்கும்
9. நளவெண்பா
10. நகைச்சுவை

III

11. தமிழ் நாட்டாரும் அயல் நாட்டாரும்
12. தமிழ் மொழியும் பிற மொழியும் -தெலுங்கு |
13. தமிழ் மொழியும் பிற மொழியும் – மலையாளம்
14. தமிழ் மொழியும் பிற மொழியும் கன்னடம்
15. இலக்கணம் மொழியைப் பாதுகாக்கும் முறை

IV

16. தமிழ் இலக்கியத்திற் கண்ட அரசு
17. தமிழ் இலக்கியத்திற் கண்ட அமைச்சு ….
18. தமிழ் இலக்கியத்திற் கண்ட தூது
19. தமிழ் இலக்கியத்திற் கண்ட பக்தி
20. தமிழ் இலக்கியத்திற் கண்ட கடவுள்

(‘மணிமேகலையும் மதுவிலக்கும்’ என்பது சென்னை மதுவிலக்குச் சங்கத்தின் (The Hindu God Templars League) ஆண்டுவிழாவிற் செய்த சொற்பொழிவின் சுருக்கம்.)

$$$

தமிழ் விருந்து

1. கலையும் கற்பனையும்

கலைச் செல்வமே ஒரு நாட்டின் செல்வத்துள் எல்லாம் தலைசிறந்த செல்வம். அச் செல்வம் எண், எழுத்து என்னும் இருவகையில் அடங்கும். “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப” என்பது திருவள்ளுவர் வாக்கு. இவற்றுள் காவியம், ஓவியம் முதலிய கலைகள் கற்பனை நயத்தால் இன்பம் பயக்கும். கற்பனை, நாட்டின் தன்மைக்குத் தக்கவாறு அமையும். வெப்பம் மிகுந்த நாட்டில் வசிப்பவர்கள் குளிர்மையை விரும்புவர். தமிழ்நாடு பெரும்பாலும் வெப்பமுள்ள நாடு. நீர் நிறைந்த ஆறுகளையும், நிழல் அமைந்த சோலை களையும் காவிய உலகத்திற் காணும் பொழுது நம் உள்ளம் குளிர்கின்றது. குளிர்மையில் உள்ள ஆசையால் அன்றோ நீரைத் தண்ணீர் என்கிறோம்; அன்பை ஈரம் என்கின்றோம்; ஆண்டவன் சேவடியைத் திருவடி நிழல் என்கின்றோம்? திருவடி நிழலின் இனிமையை உணர்த்துகின்றார் திருநாவுக்கரசர்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே!

-என்பது தேவாரத் திருப்பாட்டு.

வெப்பத்தால் வாடி வருந்துவோர் குளிர்மையைக் கண்டு இன்புறுதல் போன்று, பிறவித் துன்பத்தால் வருந்துவோர் ஆண்டவன் திருவடியை அடைந்து மகிழும் பெற்றியைப் பெரியோர்கள் அழகாகப் பாடியுள்ளார்கள். ஆண்டவன் அளிக்கும் பேரின்பம், கோடையிலே இளைப்பாற்றும் குளிர் பூஞ்சோலை யாகவும், ஓடையிலே ஊறுகின்ற தெள்ளிய நீராகவும், மேடையிலே வீசுகின்ற மெல்லிய தென்றலாகவும் ஒரு தமிழ்க் கவிஞரது கற்பனையிலே காட்சி தருகின்றது :

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர்தருவே, தருநிழலே, நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீ ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே, சுகத்திலுறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா, பொதுவில்
ஆடுகின்ற அரசே, என் அலங்கல்அணிந் தருளே

-என்று பாடினார் இராமலிங்க அடிகளார்.

நீர்வளமும் நிலவளமும் உடைய தமிழ்நாட்டில் பண்டைக்கால முதல் பயிர்த்தொழிலே சிறந்த தொழிலாகக் கருதப்பட்டு வருகின்றது. முற்காலத் தமிழர், தொழுதுண்டு வாழ விரும்பினார் அல்லர்; உழுதுண்டு வாழவே விரும்பினார்கள்; ‘சீரைத் தேடின் ஏரைத் தேடு’ என்றார் ஒரு புலவர். ஏர்த்தொழில் இனிது நடைபெறுவதற்கு மழை இன்றியமையாதது. தாய் முகங் காணாப் பிள்ளையும், மழை முகங்காணாப் பயிரும் செழிப்படைவதில்லை. ஆகவே, தமிழ்நாட்டார் வானத்திலே தவழும் மேகத்தையே நோக்கி வாழ்ந்தார்கள். ஓங்கி உயர்ந்த மலைகளில் மழை மேகம் தவழக் கண்டால் தமிழர் உள்ளம் தழைக்கும்; கார்மேகத்தின் இடையே மின்னல் வீசக் கண்டால் அவர் உள்ளம் துள்ளி மகிழும். மழைக் குறிகளைக் கண்டு உழவர் அடையும் ஆனந்தக் களிப்பைத் தமிழ்ப் பாட்டிலே காணலாம்.

ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதேகுறி – மலை
யாளமின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே
நேற்றுமின்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே – கேணி
நீர்ப்படுசொ றித்தவளை கூப்பிடுகுதே
சேற்றுநண்டு சேற்றில்வளை ஏற்றடைக்குதே – மழை
தேடியொரு கோடிவானம் பாடி யாடுதே
போற்றுதிரு மாலழகர்க் கேற்றமாம் பண்ணைச் – சேரிப்
புள்ளிப்பள்ளர் ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வோமே”

-என்ற பாட்டு உழவர் உள்ளத்தைத் தெள்ளிதின் உணர்த்துகின்றது. வானத்திலே திரண்டு எழுந்து செல்லும் மழை மேகத்தை கார்மேகத்தைக் – கருணையின் வடிவமாகக் கண்டு தமிழ்நாட்டார் போற்றினார்கள்; கார்மேகமே உலகத்தைக் காக்கும் என்று கருதிக் கைதொழுதார்கள்; மன்னுயிரை யெல்லாம் காத்தருளும் தெய்வமாகிய திருமாலுக்கும் அவ் வண்ணத்தையே அமைத்தார்கள்; ‘கருமுகில் வண்ணன், என் கண்ணன்’ என்றார்கள். திருவேங்கடம் என்னும் திருப்பதி மலையில் அப் பெருமான் நின்றருளும் கோலத்தைக் கருமேகத்தின் வடிவாகவே காட்டுகின்றது சிலப்பதிகாரம்:

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவில் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையில் ஏந்திச்
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

-என்பது சிலப்பதிகாரச் சித்திரம். கருமேகத்தின் வண்ணம் அருமையான வண்ணமாக, அழகான வண்ணமாகத் தமிழ்நாட்டார்க்குத் தோன்றிற்று. அதனாலேயே அழகுடைய மேகத்தை அவர்கள் ‘எழிலி’ என்னும் சொல்லாற் குறித்தார்கள். எழில் என்பது அழகு. எழில் வாய்ந்த பொருள் எழிலியாகும். திருவள்ளுவர் எழிலி என்ற சொல்லை இனிது எடுத்து ஆள்கிறார்.

நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்கா தாகி விடின்

என்பது திருக்குறள். இக் குறளின் கருத்தும் கற்பனையும் நன்கு அறியத்தக்கதாகும். நெடுங்கடலில் நீர் அதிகமாக உண்டு. ஆயினும் அந் நீரில் ஒரு துளியேனும் தாகந் தீர்த்தற்கு உதவாது. அக் கடலில் உள்ள நீரைக் கருணை வாய்ந்த மேகம் கவர்கின்றது; மழையாக மாநிலத்தார்க்குத் தருகின்றது. இத்தகைய அருளுடைய கார் மேகத்தை  ‘எழிலி’ என்றார் திருவள்ளுவர். இக்குறளின் கருத்தைப் பிற்காலத்துப் புலவர் ஒருவரே விரித்துரைத்து விளக்கியுள்ளார் :

பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு
பிறர்க்குதவி ஆக்குபவர் பேறாம் – பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல் நீர் சென்று புயல்முகந்து
பொய்யாக் கொடுக்கும் பிறர்க்கு”

-என்றார் நன்னெறி ஆசிரியர்.

மலையிலே மழை பொழிந்து வெள்ளம் பொங்கி எழுகின்றது; அருவியாய் விழுகின்றது; ஆறாகப் பாய்கின்றது. ஆற்று நீர், கால்களிலும் ஏரிகளிலும் நிறைந்து பயிர் பச்சைகளையும் செடிகொடிகளையும் வளர்க்கின்றது. இளங் குழந்தையைப் பாலூட்டி வளர்க்கும் தாய்போல் பசும் பயிர்களை நீரூட்டி வளர்ப்பது நீதியாகும். ஆதலால், நதியைத் தாயாகவும், நிலத்தைக் குழந்தையாகவும் புலவர்கள் புனைந் துரைப்பாராயினர். சோழ நாட்டை ஊட்டி வளர்ப்பது காவேரியாறு. அந் நதியின் பெருமையாலேயே “சோழவள நாடு சோறுடைத்து” என்று கவிகள் புகழ் வாராயினர். செழுஞ் சோலைகளின் இடையே அழகுற நடந்து செல்லும் காவிரியாற்றைச் சிலப்பதிகாரம் இசைப்பாட்டால் வாழ்த்துகின்றது:

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி
ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி”

என்பது சிலப்பதிகாரத்தின் வாழ்த்து. இன்னும் பாண்டி நாட்டின் சிறந்த நதியாகிய வையையை “புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி” என்றும், “பொய்யாக் குலக்கொடி” என்றும் இளங்கோவடிகள் புகழ்ந்துரைத்தார். ஆற்றுப் பெருக்கற்ற காலத்தும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையையின் கருணை வாழ்த்துதற் குரியதன்றோ?

ஆற்று நீராலும் மழைநீராலும் உணவுப் பொருள்களை விளைவிக்கின்ற உழவரைத் தமிழ்நாடு பாராட்டி மகிழ்ந்தது. ‘உழவர் ஏரடிக்கும் சிறுகோலே அரசரது செங்கோலை நடத்துங்கோல்’ என்று பாடினார் கம்பர். இக் கருத்தை மனத்திற் கொண்டு, “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்” என்றார் பாரதியார்.

அக் காலத்தில் உழவருக்கு இருந்த பெருமை, திருவள்ளுவர் முதலாய தலைமைப் புலவர்கள் வழங்கியுள்ள கற்பனைகளாலும் விளங்கும். வில்லெடுத்துப் போர் செய்யும் வீரனை ‘வில்லேர் உழவன்’ என்றும் சொல்லாற்றல் வாய்ந்த கவிஞனைச் ‘சொல்லேர் உழவன்’ என்றும் குறித்தார் திருவள்ளுவர்.

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை”

-என்பது திருக்குறள். வேற்படை தாங்கிய வீரனை ‘அயில் உழவன்’ என்றார் சிந்தாமணி ஆசிரியர்; வாளேந்திய வீரனை ‘வாள் உழவன்’ என்றார்கள். எனவே, வீரரையும் புலவரையும் உழவராகக் கண்ட பெருமை பண்டைத் தமிழ் நாட்டுக்குரியது.

இயற்கையோடு கலந்து வாழ்ந்த தமிழரின் பெருமை சில கற்பனைகளால் சிறந்து விளங்குகின்றது. நல்ல நிறமும் நறுமணமும் உடைய மலர்கள் எக் காலத்தும் மாந்தர்க்கு இன்பம் தருவனவாகும். தமிழ் நாட்டார்க்குச் சிறப்பாக மலர்களில் மிகுந்த விருப்பம் இருந்ததாகத் தெரிகின்றது. பூக்களில் தலைமை வாய்ந்தது, தாமரை. இப் பூவைப் பாடாத கவிஞர் இல்லை. தண்ணீர் நிறைந்த குளம் முதலிய இடங்களில் தாமரை காணப்படும். தாமரையால் அழகு பெற்ற குளங்களின் கோலத்தைக் காவியங்களிற் காணலாம். காலைப் பொழுதில் தாமரை மலரும்; மாலைப் பொழுதிற் குவியும். இவ் வியற்கைக் காட்சியால் விளைந்த கற்பனைகள் பலவாகும். காலையில் கதிரவன் தோன்றும் பொழுது தாமரை இதழ் விரிந்து இன்புறுகின்றது. மாலையில் கதிரவன் மறையும் பொழுது இதழ் குவிந்து ஒடுங்குகின்றது. ஆதலால்,  ‘கதிரவன் காதலன்; தாமரை காதலி’ என்று கவிஞர் கற்பனை செய்வாராயினர். இக் கற்பனையின் பயனாகத் தாமரை நாயகன் என்னும் பெயர் சூரியனுக்கு அமைந்தது.

இன்னும், பூவின் பல பருவங்களைத் தமிழ் நூல்களிற் காணலாம். அரும்பு, முதற் பருவம்; முகை, அடுத்த பருவம்; போது, அதற்கடுத்த பருவம்; போது விரிந்த நிலையில் மலராகும். இந்நான்கு பருவங்களில் மூன்றைத் திருவள்ளுவர் ஒரு பாட்டிலே குறித்துள்ளார்.

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந் நோய்”

என்ற குறளில் அரும்பு, போது, மலர் என்னும் மூன்று பருவங்கள் முறையாகக் குறிக்கப்பட்டுள்ளன.

மென்மையும் அழகும் வாய்ந்த பூவிற்கு நிகராகப் பெண்களைக் கருதினர் தமிழ்நாட்டுக் கவிஞர். இதனாலேயே ‘பூவை’ என்னும் பெயர் பெண்ணுக்கு அமைவதாயிற்று. பூவிற்குப் பல பருவங்களை வகுத்தவாறு பெண்ணுக்கும் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை முதலிய பருவங்களைப் புலவர்கள் வகுத்தார்கள். இல் வாழ்க்கையே பெண்களுக்கு நல்வாழ்க்கை. அவ்வாழ்க்கையில் தலைப்படும்பொழுது பெண்மை மணக்கின்றது; சிறந்த இன்பம் பயக்கின்றது. ஆதலால், கல்யாணம் என்னும் மங்கலத்தை ‘மணம்’ என்று அறிந்தோர் கூறுவாராயினர். எனவே, பூவின் தன்மைக்கும் பெண்ணின் நீர்மைக்கும் உள்ள ஒற்றுமையாலேயே மணம் என்ற சொல் கல்யாணத்தைக் குறிப்பதாயிற்று.

இயற்கையான நிகழ்ச்சிகளில் சிறந்த உணர்ச்சி களைக் கற்பிக்கும் முறை கவிகளிடம் உண்டு. அயோத்தி மாநகரில் ஒரு தீமை நிகழ்ந்துவிட்டது. எல்லோர்க்கும் இனியவனாகிய இராமன் நாட்டை விட்டுக் காட்டுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. தலைமகன் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கைகேயி வற்புறுத்தினாள். மன்னவனாகிய தசரதன் கைகேயியின் கொடுமையைப் பொறுக்க மாட்டாது மண்மேல் மயங்கி விழுந்தான். இஃது இராப்பொழுதில் மாளிகையில் நிகழ்ந்தது. இந்தக் கொடுமையை அயோத்தியில் உள்ள கோழிகள் அறிந்தன; மனங் கலங்கின; ‘ஊரார் எல்லாம் இதை அறியாமல் உறங்குகின்றார்களே’ என்று ஏங்கின; துன்பம் பொறுக்கமாட்டாமல் இரு சிறகாலும் வயிற்றில் அறைந்து கொண்டன; ‘குய்யோ முறையோ’ என்று கூவி ஊராரையெல்லாம் அழைத்தன என்று கவிஞர் கூறுகின்றார் :

எண்த ருங்கடை சென்ற யாமம்
இயம்பு கின்ற ஏழையால்
வண்டு தங்கிய தொங்கல் மார்பன்
மயங்கி விம்மிய வாறெல்லாம்
கண்டு நெஞ்சு கலங்கி அஞ்சிறை
யான காமர் துணைக்கரம்
கொண்டு தம்வயி றெற்றி எற்றி
விளிப்ப போன்றன கோழியே”

-என்பது கம்பர் பாட்டு. விடியுமுன்னே சிறகடித்துக் கூவுகின்ற கோழியின் செய்கையில் சோகத்தை ஊட்டிக் காட்டினார் கவிஞர்.

காலையிற் கூவும் கோழியின் குரல், கேட்போர் மனோபாவத்திற் கேற்றவாறு அமைகின்றது. முருக பக்தர் ஒருவர் கோழியின் குரலைக் கேட்கின்றார். கோழி முருகனுக்கு உகந்த பொருள்களுள் ஒன்று. அது முருகன் கொடியிலே நின்று கூவும் பெருமை வாய்ந்தது. ஆதலால், கோழியின் குரல் வெறுங் கூக்குரல் அன்று; தெய்வம் மணக்கும் குரல் என்று அவ் வடியார்க்குத் தோன்றுகிறது. ‘கொக்கறுகோ, கொக்கறுகோ’ என்று கூவும் கோழியின் கருத்தை அவர் விளக்குகின்றார். கொக்கு என்பது மாமரம். மாறுபட்ட சூரன் மாமரமாகி நின்றான். அவனை அறுத்தார் முருகப் பெருமான். ஆதலால், கொக்கறுத்த கோமானாகிய முருகனையே கோழி புகழ்ந்து போற்றுகின்றது என்று அப் பெரியார் கூறுகின்றார். ஆகவே, கலைகளில் உள்ள கற்பனை, நாட்டின் இயல்பிற்கும், கலைவாணரது மனோபாவத்திற்கும் ஏற்றவாறு அமையும் என்னும் உண்மை நன்கு விளங்குவதாகும்.

$$$

2. புராதனப் போர் – படையெடுப்பு

இக் காலத்தில் நடந்துவரும் பெரும் போரால் விளையும் எல்லையற்ற தொல்லையை அறியாதார் யாருமில்லை. உலகம் முழுவதையும் அலைத்துக் குலைத்து வருத்துகின்ற இப் போரின் கொடுமையைக் காண்பவர்கள் முற்காலத்தில் நிகழ்ந்த போர்களைக் குறித்து அறிந்து கொள்ள விரும்புதல் இயற்கையே யாகும்.

தமிழ்நாட்டில் முற்காலத்தில் நிகழ்ந்த பெரும் போர்கள் காவியங்களில் நன்றாக விரித்துரைக்கப்பட்டு இருக்கின்றன. பெரும்பாலும் ஆசையே போருக்கு அடிப்படையாகும். மன்னர் மனத்தில் எழுகின்ற ஆசைக்கோர் அளவில்லை என்று தாயுமான அடிகள் கூறிப்போந்தார்.

ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம்
கட்டி ஆளினும் கடல்மீதிலே
ஆணை செலவே நினைவர்

-என்று அப்பெரியார் அருளிய திருவாக்கின் உண்மை இக் காலத்தில் நடைபெறும் போரால் நன்கு விளங்குகின்ற தன்றோ?

ஆயினும், முற்காலப் போருக்கும் தற்காலப் போருக்கும் நிரம்ப வேற்றுமை உண்டு. ஓர் அரசன் படை மற்றோர் அரசன் படையைத் தாக்கி வீரம் விளைவிக்குமே யன்றி, குடிகள் எல்லோரையும் அழித்து நாட்டைச் சுடுகாடாக்குகின்ற கொடுமை நிகழ்ந்ததில்லை. பகைவர் நாட்டின்மீது படையெடுக்கும் மன்னர், போருக்கு ஆற்றாதவர்களைப் புறத்தே போக்குவார்கள்; போர்க்களத்தில் பச்சிளம் பாலகரைக் கொல்ல மாட்டார்கள்; முதியவர் மீதும் படைக்கலங்களைத் தொடுக்க மாட்டார்கள்; பயன் தருகின்ற பசுக்களை வதைக்க மாட்டார்கள்;  இஃது அறப்போர் முறை என்று புலவர்களால் போற்றப்படுகின்றது. பழந்தமிழ் நூல்களில் இவ் வுண்மையைக் காணலாம். மதுரை மாநகரில் கணவனைப் பறி கொடுத்த கண்ணகி அந் நகரத்தைச் சுட்டெரிக்க முற்பட்டாள். அப்பொழுது அவ் வீர பத்தினியின் முன்னே அக்கினி தேவன் தோன்றி, ‘யார் யாரை அழிக்க வேண்டும்?” என்று கேட்டான். அதற்குக் கண்ணகி, ‘பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி எனும் இவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்க’ என்று ஏவினாள்.

போர்க்களத்தில் அஞ்சாது நின்று அமர் விளைக்கும் வீரரை மறவர் என்று தமிழ்நாடு அழைத்தது. மறம் என்ற சொல்லுக்கு வீரம் என்பது பொருள். எனவே, மறவர் என்பர் வீரராவர். அவர்கள், மனத்திண்மையும் உடல் திண்மையும் உடையவராய், வில்லும், வாளும், வேலும் தாங்கி வெம்போர் புரிவார்கள்; போர்க் களத்தில் முகத்திலும் மார்பிலும் படுகின்ற வடுக்களை பொன்னினும் மணியினும் அருமையாகப் போற்றுவார்கள்; போரற்ற நாளெல்லாம் பயனற்ற நாளென்று கருதுவார்கள். இத்தகைய வீரர்கள் கொற்றவை என்னும் தெய்வத்தை வணங்கினார்கள். வெற்றி தரும் தெய்வமே கொற்றவையாகும். அத் தெய்வத்தின் அருள் பெற்று மறவர் போர் புரிந்தார்கள்.

தமிழ்நாட்டு மன்னர் போர் செய்யப் புறப்படும்போது நல்ல நாளும் பொழுதும் பார்ப்பது வழக்கம். அதனை ஆராய்ந்து சொல்வதற்குரிய அறிஞர்கள் எப்பொழுதும் அரசனைப் பிரியாமலிருப்பார்கள். அவர்கள் குறிப்பிடும் நற்பொழுதில் அரசன் தன் வாளையும் குடையையும் படையெடுக்கும் திசையில் பெயர்த்து வைப்பான். சோழ நாட்டையாண்ட கரிகால்வளவன் வடநாட்டின்மீது படையெடுக்கு முன்னமே நல்ல நாளும் பொழுதும் பார்த்து, வாளும் குடையும் வடதிசையில் பெயர்த்து வைத்தான் என்று சிலப்பதிகாரம் உணர்த்துகின்றது.

தமிழ் வேந்தர், பகைவரது நாட்டின்மீது படையெடுக்கும் பொழுது, சிறந்த பூமாலைகள் அணிந்திருப்பார்கள். நறுமணம் கமழ்கின்ற பூக்களை அணிந்து கொள்வதில் தமிழ் நாட்டாருக்கு என்றும் ஆசை அதிகமென்றே தோன்றுகின்றது. தமிழ்நாட்டு மூவேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர்கள் வெவ்வேறு மாலைகளை அடையாள மாலையாக அணிந்திருந்தார்கள். சேர மன்னனுக்குப் பனந்தோட்டு மாலையும், பாண்டியனுக்கு வேப்பம்பூ மாலையும், சோழ மன்னனுக்கு ஆத்தி மாலையும் அடையாள மாலைகள் என்று அறிகின்றோம். போருக்குப் புறப்படும் பொழுது, மன்னர், அவ்வடையாள மாலைகளைச் சிறப்பாக அணிந்திருப்பார்கள். இவ்வாறு அணிவதனால், படையெடுத்துவரும் மன்னர் இன்னாரென்பதை மாற்றார் நன்கு அறிந்துகொள்வர். இந்த அடையாள மாலையோடு வேறுவிதமான பூமாலைகளும் படையெடுக்கும் அரசர்கள் அணிவதுண்டு.

பகையரசன் நாட்டைக் கவர்ந்து கொள்ளும் கருத்தோடு படையெடுக்கும் அரசன் குறிஞ்சிப்பூ மாலை சூடியிருப்பான். மாற்றரசன் கோட்டையை வளைத்து முற்றுகை செய்யக் கருதிப் படையெடுக்கும் மன்னவன் உழிஞை மாலை அணிந்திருப்பான். வீரப்புகழை விரும்பிப் பிற மன்னர்மீது படையெடுக்கும் அரசன் தும்பைப்பூ மாலை தரித்திருப்பான். ஆகவே, மன்னர்கள் அணிந்திருக்கும் மாலைகளைக் கண்டு, அவர் மனத்திலமைந்த கருத்தை மாற்றரசர் நன்றாகத் தெரிந்துகொள்வார்கள். போர்க்களத்தில் வெற்றி பெறுகின்ற வேந்தர்கள் வாகை மாலை சூடுதல் வழக்கம்.

பகைவர் நாட்டின்மீது போர் தொடுக்கக் கருதும் அரசன் அதற்கு அறிகுறியாக அந்நாட்டிலுள்ள பசுக்களைக் கவர்ந்து தன் நாட்டிற்குக் கொண்டு வருவான். அதற்கு,  ‘ஆநிரை கவர்தல்’ என்று பெயர். பசுக்களைக் கவரச் செல்லும் மறவர் செக்கச் சிவந்த வெட்சிமாலை சூடியிருப்பார்கள்; இருட்டிலே சகுனம் பார்த்துச் சென்று பசுக்களைக் கவர்ந்து வருவார்கள். அப் பசுக்களுக்குரிய அரசன் அவற்றை மீட்பதற்குப் படையெடுத்து வரும்போது, இருதிறத்தார்க்கும் போர் நிகழும். இவ்வாறு பசுக்களைக் கவர்வதன் கருத்து யாது என்பதைச் சிறிது ஆராய்வோம். பசுக்களுக்குத் தீங்கு செய்யும் நோக்கம் மன்னர் மனத்திலிருந்ததாகத் தெரியவில்லை; கவர்ந்து வந்த பசுக்களை அவர் நன்கு பாதுகாத்ததாகவும் தெரிகின்றது. தொன்றுதொட்டு  தமிழ்நாட்டார் பசுக்களை மிக அன்புடன் போற்றி வந்துள்ளார்கள். மணிமேகலை என்னும் தமிழ்க் காவியத்தில் பசுக்கள் மீது சிறிதும் பகை கொள்ளலாகாது என்னும் கொள்கை நன்கு விளக்கப்பட்டிருக்கிறது. பசும்புல்லை மேய்ந்து, இனிய பாலைத் தந்து மக்கள் உடம்பை வளர்க்கின்ற பசுக்களை எப்பொழுதும் பாதுகாக்க வேண்டுமேயன்றி அவற்றைத் துன்புறுத்தல் ஆகாது என்பது அக் காவியத்தில் உணர்த்தப்படுகின்றது.

விடுநில மருங்கில் படுபுல் ஆர்ந்து
இருநில மருங்கின் மக்கட் கெல்லாம்
பிறந்தநாள் தொட்டுச் சிறந்ததன் தீம்பால்
அறந்தரு நெஞ்சோடு அருள்சுரந் தூட்டும்”

அருமை வாய்ந்தது பசு; ஆதலால் அதனை ஆதரித்தல் வேண்டும் என்பது இந் நாட்டார் கருத்து. பகைவர் நாட்டுப் பசுக்களைக் கவர்ந்து வரும் செய்கையும் இக் கொள்கையையே அடிப்படையாகக் கொண்டதாகும். பகைவர் நாட்டில் போர் நிகழும் பொழுது அவ் விடத்தினின்றும் தப்பியோடக் கூடியவர்கள் ஓடி விடுவார்கள். பாதுகாப்பிடங்களை அடையக் கூடியவர்கள் அடைந்து விடுவார்கள். இவ்வாறு ஒவ்வொருவரும் உயிருக்காக உலைந்து ஓடும் பொழுது, பசுக்களை யார் பாதுகாப்பார்கள்? பசுக்கள் போர்க் களத்தில் அகப்பட்டு இறந்துவிடுமே என்று கருதி, அவற்றை முன்னமேயே வளைத்துக் கொண்டு வந்து மாற்றரசர் தம் நாட்டில் வைப்பார்களென்று அறிந்தோர் கூறுகின்றனர்.

இனி பண்டைக்காலத்தில் எவ்வாறு படை திரட்டப்பட்டது என்பதையும் சிறிது பார்ப்போம்: அரசன் போர் செய்யக் கருதியவுடன் அவனது போர்ப்பறை முழங்கும். அப் பறையின் ஓசை நாற்றிசையும் சென்று அதிரும். அவ் வோசையைக் கேட்ட போர் வீரர்கள் போர்க்கோலம் புனைந்து மிக்க ஆர்வத்தோடு புறப்படுவார்கள். வீரத்தாய்மார்கள் தம் பிள்ளைகளை ஆசி கூறி அனுப்புவார்கள். வீர மனைவியர் விருப்புடன் தம் காதலர்க்கு விடை கொடுப்பார்கள். நால்வகைச் சேனை பழந் தமிழ் நாட்டிலிருந்ததாகத் தெரிகின்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட் படை ஆகிய நான்கும் திரண்டெழுந்தவுடன் அரசன், படைத் தலைவரோடு சென்று அவற்றைப் பார்த்து மகிழ்வான்; வீரரது ஆரவாரத்தைக் கேட்டு அகம் களிப்பான்; தானும் அவர்களுடனிருந்து உணவருந்தி அவர்களுக்கு ஊக்கமளிப்பான். சேனை புறப்பட்டுச் செல்லும் வழியில் அரசனும் படைத் தலைவர்களும் தங்குதற்குரிய பாடிவீடுகள் அமைக்கப் பட்டிருக்கும். அங்கு அரசனும் வீரரும் அமர்ந்து இளைப்பாறும் பொழுது ஆடலும் பாடலும் நடைபெறும்.

இவ்வாறு பண்டையரசர்கள் படையெடுத்த மாட்சியை சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்க் காவியத்தில் சிறப்பாகக் காண்கிறோம். சேர நாட்டை யாண்ட செங்குட்டுவன் என்னும் மன்னவன் வடநாட்டின் மீது படையெடுத்த வரலாறு அக் காவியத்தில் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றது.

“வடநாட்டரசர் இருவர், தமிழ்நாட்டாரைப் பழித்துப் பேசினார்களென்று சேர மன்னவன் கேள்விப்பட்டான்; அளவிறந்த சீற்றம் கொண்டான்.  ‘அருந்தமிழ் அரசரின் ஆற்றலை யறியாது இகழ்ந்து பேசிய அரசரை அடக்கி வருவேன்’ என்று சபையில் சபதம் கூறினான். அந் நிலையில் மன்னன் கருத்தை அங்கிருந்த அமைச்சரும் பிறரும் நன்றாக அறிந்து கொண்டார்கள். நாளும் பொழுதும் நன்கு பார்த்துச் சொல்லும் வானநூல் அறிஞன் எழுந்தான்; ‘அரசே! வடநாட்டின்மீது படையெடுப்பதற்குப் பொருத்தமான நல்ல நேரம் இதுவே. இப்பொழுது புறப்பட்டால் மாற்றரசர் எல்லோரும் தோல்வியுற்று உன் பாதம் பணிவார்கள்’ என்று அறிவித்தான். அது கேட்ட மன்னவன், அப்பொழுதே தன் வெண்கொற்றக் குடையையும், நெடிய வாளையும் வடதிசையில் பெயர்த்து வைக்கப் பணித்தான்; படை திரட்டுமாறு படைத்தலைவர்க்கு ஆணையிட்டான்.

‘சேரன் தலைநகரமாகிய வஞ்சி மாநகரத்தில் போர்ப்பறை முழங்கிற்று. வீரர்கள் மகிழ்ந்து எழுந்து திரண்டார்கள். அரசன் வஞ்சிமாலை சூடி, பட்டத்து யானை மீதேறிப் போருக்குப் புறப்பட்டான். செல்லும் வழியில் அவன் வழிபடும் சிவன் கோயில் இருந்தது. அரசன் அக் கோயிலை வலம் வந்து வணங்கினான்; சிவன் அருளின் சின்னமாகப் பெற்ற பூமாலையைச் சிரத்தில் அணிந்து கொண்டான்; அப்பால் ஆடகமாடம் என்னும் திருக்கோயிலிற் பள்ளிகொண்ட பெருமானை வணங்கினான்; அங்கே பெற்ற பூமாலையைத் தோளுக்கு அணியாகக் கொண்ட சேரன் நால்வகைச் சேனையோடும் வஞ்சி மாநகரைவிட்டு வடதிசை நோக்கிச் சென்றான்; இடையிடையே சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த பாடி வீடுகளில் தங்கினான்; மலையும் நதியும் கடந்து பகைவர்கள் நாட்டை நண்ணினான்; பொங்கி யெழுந்த பகையரசர் சேனையைச் சிதற அடித்தான்; வாகை மாலை சூடினான்; தமிழரசரைப் பழித்துப் பேசிய சிற்றரசர் இருவரையும் சிறை செய்து சினம் தீர்ந்தான்’ என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.

இவ் வரலாற்றாலும் கரிகால் சோழனுடைய சரித்திரத்தாலும் தமிழ்நாட்டரசர்கள் போர்க்களத்தில் வீரப் புகழ்வாய்ந்து விளங்கினார்களென்ற செய்தி நன்றாகத் தெரிகின்றது. சோழ நாட்டுப் புலிக் கொடியைக் கரிகாற்சோழன் இமயமலையில் ஏற்றினான்; சேரநாட்டுச் செங்குட்டுவன் கற்பின் செல்வியாகிய கண்ணகிக்கு இமயமலையிற் சென்று சிலையெடுத்து வெற்றி வீரனாக மீண்டுவந்தான். இவ் வரசர்கள் தமிழ்நாட்டின் வீரப் புகழை விளக்கினார்கள். இவருக்குப் பின்னே வந்த கங்கை கொண்ட சோழன், குலோத்துங்கன் முதலாய மன்னர் நிகழ்த்திய அரும் பெரும் போர்களை தமிழ்ப் புலவர்கள் பாட்டாலும் உரையாலும் பாராட்டினார்கள். கலிங்க நாட்டின்மீது குலோத்துங்கன் சேனாதிபதியாகிய கருணாகரன் படையெடுத்து, அந் நாட்டு அரசனை வென்று, வாகை மாலை சூடிய வரலாறு கலிங்கத்துப் பரணியில் இலங்குகின்றது. இவ்வாறு முற்காலத் தமிழ் மன்னரும், இடைக்காலத் தமிழ் மன்னரும் போர் முகத்தில் காட்டிய வீரம் இக் காலத்தினருக்கு ஊக்கத்தையும்
ஆர்வத்தையும் ஊட்டுவதாகும்.

விண்ணை இடிக்கும் தலை இம யம் எனும்
வெற்பை யிடிக்கும் திறலுடையார் – சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத் ததமிழ்ப்
பார்த்திபர் நின்ற தமிழ்நாடு

என்று தமிழரது வீரத்தைப் பாடினார் பாரதியார். தமிழர்கள் என்றும் படைக்கு முந்துவர். இன்று நிகழ்ந்து வரும் பெரும் போரிலும் தமிழ்நாட்டு வீரர் பல்லாயிரவர் படையிற் சேர்ந்து, பாலைவனங்களிலும் காடுகளிலும் வீரப் போர் புரிந்து, தமிழ்நாட்டின் பழம் பெருமையை விளக்கி வருகின்றார்கள். பாரத நாட்டின் படைக்கரம் என்று கருதப்படுகின்ற பாஞ்சால நாட்டு வீரரினும் தமிழ் நாட்டு வீரர்கள் எவ்வாற்றானும் குறைந்தவர் அல்லர் என்பது காலம் செல்லச்செல்ல எல்லோர்க்கும் இனிது விளங்கும்.

$$$

3. போர்க்களங்கள்

இவ் வுலகத்தில் போர் இல்லாத இடமே இல்லை. காட்டிலே விலங்கொடு விலங்கு போராடுகின்றது. எளிய விலங்கை வலிய விலங்கு கொல்லுகின்றது. நீரிலே மீனோடு மீன் போராடுகின்றது. சிறிய மீன் பெரிய மீனுக்கு இரையாகின்றது. நாட்டிலே அரசும் அரசும் போராடுகின்றன; எளியவர் நாட்டை வலியவர் கவர்ந்து ஆளுகின்றனர். படை வலிமையுடைய நாடே சிறந்த நாடாக இன்று மதிக்கப்படுகின்றது.

முற்காலத்தில் தமிழ்நாட்டில் மலிந்திருந்தார்கள். அன்னார்,

உச்சி மீது வான் இடிந்து
வீழு கின்ற போதினும்
அச்ச மில்லை அச்ச மில்லை
அக்ச மென்ப தில்லையே”

என்று பாடிக்கொண்டு போர்க்களம் செல்லும் பான்மையாளர். ஆண்களும் பெண்களும் வீரம் வாய்ந்து விளங்கினார்கள். இத்தகைய மறக்குடியில் தோன்றினாள், ஒரு மங்கை; தன் மனப்பான்மைக்கேற்ற வீரன் ஒருவனை மணந்து ஒரு வீரக்குழந்தையைப் பெற்றாள். அவள் தமையனும் ஒரு தீரன். இவர்கள் ஒரு குடும்பமாக இன்புற்று வாழ்ந்து வருகையில் நாட்டிலே பெரும் போர் மூண்டது. போர் முழக்கம் கேட்டபோது அம் மங்கையின் தமையன் போர்க்கோலம் பூண்டு அமர்க்களம் போந்தான்; கண்டோர் வியக்கக் கடும்போர் புரிந்தான்; மாலைப் பொழுதில் மார்பிலே அடிபட்டு இறந்தான். மறுநாட்காலையில் போர்ப்பறை மீண்டும் வீரரைப் போருக்கு அழைத்தது. உடனே, அம் மங்கையின் கணவன் போருக்குக் கிளம்பினான்; அமர்க்களம் புகுந்து அரும்போர் புரிந்தான்; செருக் களத்தில் உயிர் கொடுத்துப் புகழ்கொண்டான். பொழுது விடிந்தது. மறுபடியும் போர்ப்பறை முழங்கிற்று. மங்கை எழுந்தாள்; தன் குழந்தையை அழைத்தாள்; அவன் தலையில் எண்ணெய் தடவிச் சீவினாள்; வெளுத்து வைத்திருந்த ஆடையை விரித்து உடுத்தினாள்; வேலாயுதத்தைக் கையிலே கொடுத்து இளம் பாலனைப் போர்க்களத்திற்கு அனுப்பினாள். முதல் நாள் தமையன் இறந்தான் என்றும் தளராது, மறுநாள் கணவன் இறந்தான் என்றும் கலங்காது, தன் குடும்பத்திற்கு ஒரு மைந்தனே உள்ளான் என்றும் உணராது, இளம்பாலனைப் போருக்கு அனுப்பிய பெண்மணியின் வீரத்தை மாசாத்தியார் என்னும் பெண் புலவர் பாராட்டிப் பாடியுள்ளார்.

மற்றொரு வீரத்தாய் போர்க்களத்தில் தன் மகன் பகைவர்க்குப் புறங்காட்டி ஓடினான் என்று கேள்வியுற்றாள்; பொங்கி எழுந்தாள்; கொடிய வாளைக் கையிலே எடுத்தாள்; “என் மகன் போர்க் களத்தில் புறங்காட்டி ஓடினான் என்பது உண்மையானால், அப் பேடிக்குப் பாலூட்டிய மார்பை இவ் வாளால் அறுப்பேன்” என்று வஞ்சினம் கூறிப் போர்க் களம் புகுந்தாள்; அங்கே பிணங்களிடையே நடந்து சென்று தன் மகனது உடலைக் கண்டாள்; முகத்திலும் மார்பிலும் அடியுண்டு சிதைந்து கிடந்த அவ்வுடலைக் கண்ட நிலையில் அவனைப் பெற்றபோது அடைந்த இன்பத்தினும் பெரியதோர் இன்பம் உற்றாள்.

இனி, மற்றொரு போர்க்களத்தைக் காண்போம். கலிங்கம் என்னும் நாட்டின் மீது கருணாகரத் தொண்டைமான் படையெடுத்தான். ஆண்மை நிறைந்த வீரர்கள் அணியணியாகத் திரண்டு எழுந்தார்கள். போர்ப்பறை கேட்டுப் பொங்கி எழுந்த வீரன் ஒருவன், போர்க்கோலம் புனைந்து, தன் காதல் மனையாளிடம் விடைபெறச் சென்றான். வீரக்கோலத்தில் தன் கணவனைக் கண்ட மங்கை அவ்வழகைக் கண்ணால் பருகிக் களிப்புற்றாள்; தலைவனது பரந்த மார்பினைப் பார்த்தாள், நிமிர்ந்த தோள்களை நோக்கினாள்; அத் தோளில் அமைந்த வாளின் ஒளியைக் கண்டாள்; அளவிறந்த இன்பமும் பெருமையும் அடைந்து வீரக் கணவனுக்கு விடைகொடுத்து அனுப்பினாள்.

போர்க்களம் போந்த காதலன் மாற்றாரை வென்று விரைவில் வருவான் என்று அவன் சென்ற வழிமேல் விழிவைத்துக் காதலி காத்திருந்தாள். வீரன் மீண்டு வருவதாகக் குறித்திருந்த நாளில் வரவில்லை. மேல் ஒரு நாள் சென்றது. சில நாள் சென்றன. மனத்துயரம் பொறுக்கமாட்டாத மங்கை போர்க்களத்தை நோக்கிப் புறப்பட்டாள். அங்கே கால்மாடு தலைமாடாக வீரர்கள் சாய்ந்து கிடந்தார்கள். அவர் உடம்பினின்று பாய்ந்த குருதி ஆறாக ஓடிற்று. முகத்திலும் தோளிலும் பசும்புண் பட்டுக் கிடந்தார் சிலர். மடிந்த வாயினராய் மாண்டு கிடந்தார் சிலர். இவ்வாறு விழுந்து கிடந்த வீரருள்ளே அம் மங்கை தன் கணவனைக் காணாது மயங்கினாள். அவன் என்னாயினன் என்று கேட்டறிவதற்கு அமர்க்களத்தில் யாருமில்லை. அந் நிலையில் வீரர் வணங்கும் தெய்வமாகிய பைரவியை வினவலுற்றாள்.

பொருதடக்கை வாள்எங்கே? மணிமார் பெங்கே?
போர் முகத்தில் எவர்வரினும் புறங்கொ டாத
பருவயிரத் தோள் எங்கே? எங்கே? என்று
பைரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்!

“ஐயோ! தெய்வமே! என் கணவனுடைய வலிமை சான்ற கை எங்கே? அக் கையிலமைந்த வாள் எங்கே? மாற்றார்க்கும் புறங்கொடாத மணி மார்பு எங்கே? எங்கே?” என்று மங்கை பைரவியைக் கேட்கின்றாள்.

இனிக் கடைசியாக நூற்றாண்டுகளுக்கு முன்னே தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு வீரத் தியாகத்தைக் காண்போம்: பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரன் சேனைக்கும் மற்றொரு சேனைக்கும் பெரும்போர் நடந்தது. பாளையக்காரன் தம்பியாகிய ஊமைத்துரை என்பவன் அச் சேனையை எதிர்த்துப் போர் செய்தான். பகல் முழுவதும் போர் நிகழ்ந்தது. அந்திமாலை வந்தடைந்தபோது மாற்றார் சேனை வெற்றிபெற்று மீண்டது. பாளையக்காரன் சேனையில் பலர் விழுந்து கிடந்தார்கள். பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து போர்புரியச் சென்றிருந்த வீரன் ஒருவன் திரும்பிவரக் காணாத அவன் தாய் இருட்டிலே மகனைத் தேடப் புறப்பட்டாள்; போர்க்களத்தில் கிடந்த பிணங்களை ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்தாள்; நெடுநேரம் தேடித் திரிந்து தன் மகனைக் கண்டாள். அவன் கொடுங் காயமடைந்து குற்றுயிராய்க் கிடந்தான். உயிரோடு தன் மகனைக் காணும் பேறு பெற்ற வீரத்தாய் மனங் குளிர்ந்து அவனை வீட்டுக்கு எடுத்துச்செல்ல விரும்பினாள். அப்போது அவ்வீரன், “தாயே! என்னை எடுத்துச் செல்வதனால் யாது பயன்? நம் படைத் தலைவராகிய ஊமைத்துரை, அதோ குற்றுயிராய்க் கிடக்கின்றார். அவரை எடுத்துக் கொண்டு போ. அவர் பிழைத்தால் நம் எல்லோருக்கும் நலமாகும்” என்று உருக்கமாக வேண்டினான். அவ்வுரை கேட்ட தாய் மனம் உருகினாள்; தன் மகனது அரும் பெரும் தியாகத்தை மெச்சினாள்; அவன் விரும்பியவாறே ஊமைத்துரையைக் கண்டு எடுத்துச் சென்று காப்பாற்றினாள்.

தனக்கென வந்த தண்ணீரைத் தன்னிலும் தாகமுடைய ஒரு போர் வீரனுக்கு அளித்து அழியாப் புகழ் பெற்றான் ஓர் ஆங்கிலவீரன். அவ்வண்ணமே, தன்னுயிர் காக்க வந்த தாயைத் தலைவனிடம் அனுப்பி, அவனுயிரைக் காத்து, தன்னுயிர் துறந்த தமிழ் வீரன் தியாகமும் வியக்கத் தக்கதன்றோ? இத்தகைய வீரரைப் போற்றாதார் யாரே?

$$$

4. ஆகாய விமானம்

பழங்காலத்தில் தரையிலே போர் நிகழ்ந்தது. இடைக் காலத்தில் தரையிலும் தண்ணீரிலும் போர் நடந்தது. இக் காலத்தில் ஆகாயமும் அமர்க்கள மாயிற்று; கருங்கடலில் நீந்திச் செல்லும் மீன்கள் போல நீலவானத்தில் விமானங்கள் பறந்து செல்கின்றன. அந் நாள் கதைகளிற் கேட்ட செய்திகள் எல்லாம் இந் நாளில் நம் கண்ணெதிரே நிகழ்கின்றன.

பறக்கும் கோட்டைகளைக் குறித்து ஒரு பழந்தமிழ்க் கவிஞர் பாடியுள்ளார். ஆகாயத்தில் இயங்கிய அக் கோட்டை தூங்கெயில் என்று பெயர் பெற்றிருந்தது; பறக்கும் கோட்டையில் உள்ளேயிருந்து பகைவன் நாடு நகரங்களைப் பாழாக்கினான். அப் பொல்லாப் பகைவனை ஒரு சோழ மன்னன் வென்றான்; அவன் ஊர்ந்து சென்ற ஆகாயக் கோட்டையை ஒரு படைக் கலத்தால் அடித்து ஒழித்தான். அவ் வீரனைத் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் என்று தமிழ்நாடு போற்றிப் புகழ்ந்தது. அம் மன்னன் கையாண்ட படைக்கலம் இன்னதென்பது இப்பொழுது தெரியவில்லை.

மற்றோர் அரசன் ஒரு பெரிய நாட்டை ஆண்டு வந்தான். தரையில் போர் செய்வதற்கு நால்வகைச் சேனையும் அவனிடம் நன்கு அமைந்திருந்தன. ஆயினும், விண்ணிலே பறந்து செல்வதற்கு விமானம் ஒன்று செய்ய அவன் பணித்தான். அவன் விரும்பியவாறு ஆகாய விமானம் ஒன்று ஏழுநாளில் ஆக்கப்பட்டது. நல்லரக்கும், மெழுகும், பல்கிழியும், பயினும் கொண்டு பாங்குறச் செய்யப்பட்ட ஆகாய விமானம் மயில் வடிவத்தில் அமைந்திருந்தது. அவ் விமானத்தின் அழகு மன்னவன் மனத்தைக் கவர்ந்தது. விமானத்தை இயக்கும் பொறி வியக்கத் தக்கதாய் இருந்தது. அப் பொறியை வலப்பக்கத்தில் கை விரலால் மெல்ல அசைத்தால் விமானம் எழுந்து மேலே பறக்கும்; மேக மண்டலத்திற்கு மேலாகச் செல்லும். அப் பொறியை இடப்பக்கத்தில் அசைத்தால் விமானம் கீழே இறங்கிக் கால் குவித்துத் தரையிலே தங்கும்.

இத் தகைய மயில் விமானத்தை அம் மன்னன் முதலில் தன் மாளிகைப் பூந்தோட்டத்திலே இயக்கிப் பழகினான்; எளிதாக அவ் வானவூர்தி இயங்கும் தன்மையை அறிந்து, தன் காதல் மனைவிக்கும் அதை இயக்கும் முறையைக் கற்பித்தான். விமானத்தை முறுக்கி மேலே பறக்கவும், எளிதாக இறக்கவும் கற்றுக்கொண்ட அரசமாதேவி மாளிகையைச் சூழ்ந்த இடங்களிலும் பூங்கா வனத்திலும் அதன் மீது ஏறிச் சுற்றி இன்புற்றிருந்தாள்.

மாறுபட்ட அரசை யெல்லாம் முரித்து அழித்த மன்னவன், போர் ஒடுங்கியதென்று கவலை தீர்ந்தான்; அரசாங்க வேலைகளைத் தன் அமைச்சனிடம் ஒப்புவித்தான்; அவ்வமைச்சனை,

எனக்குயிர் என்னப் பட்டான் என்னலாற் பிறரை இல்லான்
முனைத்திறன் முருக்கி முன்னே மொய்யமர் பலவும் வென்றான்”

என்று புகழ்ந்தான். அமைச்சனிடம் அரசாங்க பாரத்தை இறக்கிய பின்பு அளவிலா மகிழ்ச்சியடைந்து அரசன் இன்ப நுகர்ச்சியில் ஈடுபட்டான்.

அரசியலை ஏற்றுக்கொண்ட அமைச்சன் ஒரு நயவஞ்சகன்; உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவன்; தேனினும் இனிய சொற்களால் மன்னனது மாசற்ற மனத்தைக் கவர்ந்து வசப்படுத்தியவன்; அரசாங்க வேலைகளில் அரசன் சிறிதும் தலையிடுவதில்லை என்பதை அறிந்துகொண்டு மெல்ல சூழ்ச்சி செய்யத் தொடங்கினான்; நால்வகைப் படைகளுக்கும் வேண்டுவன கொடுத்து அவற்றை வளைத்துக் கொண்டான்; அரசனிடம் அன்பு கொண்ட குடிகளிற் பலரை நால்வகை உபாயங்களால் வசப்படுத்தினான்; அரசனையும் சிறை பிடிப்பதற்குக் காலம் பார்த் திருந்தான்.

ஒருநாள் காலையில் அரண்மனையைச் சுற்றிப் பெரிய ஆரவாரம் உண்டாயிற்று. படைகளின் முழக்கம் கடலொலிபோல் எழுந்தது. மாளிகையைச் சேனை சூழ்ந்து கொண்டது என்று மன்னன் அறிந்தான்; அமைச்சன் மோசம் செய்தான் என்று உணர்ந்தான். ஆயினும், சிறிதும் கலக்கம் கொள்ளாது கருவுற்றிருந்த தன் மனையாளிடம் போந்து, “மாசறு பொன்னே! நான் மதி மோசம் போனேன். அமைச்சனாகிய வஞ்சகன் என் படைகளை வசப்படுத்திக் கொண்டான்; என்னையே தாக்கத் துணிந்து சேனைகளுடன் மாளிகையை வளைத்துள்ளான். ஆயினும், என்? காகமானது கோடி கூடினும் ஒரு கல்லின் முன்னெதிர் நிற்குமோ? நெஞ்சார வஞ்சகம் செய்த பாவியின் படைகளைப் பஞ்சாக நான் பறக்கடிப்பேன். எனினும், கடும் போர்க்களத்தைக் கண்டால் நீ கலங்குவாய். ஆதலால், மயில் விமானத்தின் மீதேறி நீ வெளியே பறந்து செல். நன்றி கெட்ட இந் நாய்களை நான் கொன்று குவித்த பின்னர் உன் இருப்பிடம் நாடி அழைத்துக் கொள்வேன்” என்று கூறினான்.

நாயகன் சொல்லிய சொல் நங்கையின் செவிகளைச் சுட்டது; அவள் மனத்தை அறுத்தது. ”ஐயோ! தெய்வமே! நான் என் செய்வேன்! என் மேல் வைத்த காதலாலன்றோ என் கணவன் இந்நிலை அடைந்தார்? பாவியேன் பொல்லாத கனவொன்று கண்டேனே! அக் கனவும் நனவாயிற்றே! அரசரே! யாரும் துணையற்ற உம்மை நான் எவ்வாறு விட்டுப் பிரிவேன். நானும் உம்முடன் இருந்து ஒல்லும் வகையால் உதவி செய்வேன். உயிரைப் பிரிந்து உடல் பறந்து செல்லுமோ?” என்று அவள் உருக்கமாகக் கேட்டாள்.

போர்க்களம் செல்வதற்குப் பரபரப்புற்ற இளஞ் சிங்கம் போன்ற மன்னவன், மயங்கி நின்ற மங்கையை நோக்கி, “எல்லாம் அறிந்த நீ இவ்வாறு கலங்கலாமோ? மெல்லியல் வாய்ந்த மாதரைப் போர்க்களத்திற்கு வெளியே அனுப்பிய பின்னன்றோ அறப்போர் வீரர் படைக்கலம் எடுத்து மாற்றாரை நோக்கிச் செல்வர்? கருவுற்ற உன்னை அருகே வைத்துக்கொண்டு கடும் போர் புரிய என்னால் இயலுமோ? இதோ, மயில் விமானம் வந்துவிட்டது! ஏறிக்கொள்!” என்று சொல்லி மங்கையை விமானத்தில் ஏற்றினான்.

இருதலைக் கொள்ளியின் இடைப்பட்ட எறும்பு போல் இடருற்ற மங்கை, விமானத்தில் ஏறியிருந்து வெதும்பிய மனத்தோடும் நடுங்கிய கரத்தோடும் அதனை இயக்கத் தொடங்கினாள். விமானம் பறந்து எழுந்து சென்றது. நொடிப்பொழுது அம்மயிலை அரசன் நோக்கி நின்றான்; கண்ணில் விழுந்த கண்ணீரைத் துடைத்துவிட்டுப் போர்க் கோலம் புனைந்து பொங்கி எழுந்தான்; கொடிய வாளை வீசிக் கொண்டு மாளிகையின் புறத்தே நின்ற சேனையின் மீது பாய்ந்தான். அவன் சென்ற இடமெல்லாம் சேனை சின்னபின்னமாயிற்று. பரந்த படையின் நடுவே ஒரு பெரிய வேழத்தின்மீது வஞ்சகனாகிய அமைச்சன் அமர்ந்திருக்க அவன் கண்டான்; உடனே வாய் மடித்து வாளோச்சி அவ்விடம் நோக்கிப் பாய்ந்தான். குருதியாறுகளைக் கடந்து விரைந்தான். பகைவர் விடுத்த அம்புகள் அவன் மேனியிற் பாய்ந்தன. அவர் எறிந்த படைக்கலங்கள் அவன் உடலை அறுத்தன. நெடும் பொழுது அங்குமிங்கும் பாய்ந்து அவன் கடும்போர் விளைவித்தான்; இறுதியில் கை சோர்ந்து மெய்சோர்ந்து விழுந்தான்; உயிர் துறந்தான்.

அமர்க்களத்தில் விழுப்புண் பட்டு இறந்த அரசனைக் கண்டு சான்றோர் மயங்கினர். மறவரும் இரங்கினர். கோளரியைக் குறுநரி வென்றாற்போல அரசனை வென்று நாடாளும் உரிமை பெற்றான் அமைச்சன்; தானே இனி அரசன் என்று நகரமெங்கும் பறையறிவித்தான்.

மயிலேறிப் போந்த மங்கையின் கைவிரல்கள் இயங்கும் பொறியில் இருந்தனவாயினும் அவள் மனம் போர்க்களத்தையே நாடியது. ஆதலால், விமானம் மெல்ல ஊர்ந்தது. ஒரு காட்டின் மீது சென்று கொண்டிருக்கையில் வெற்றி முரசத்தின் ஒலி மங்கையின் செவியில் விழுந்தது; வஞ்சகனாகிய அமைச்சன் வெற்றி பெற்றானே என்று அவள் திடுக்கிட்டாள். அந் நிலையில் அவள் மனம் துளங்கிற்று; கண் இருண்டது. பொறியினை இயக்கிய கால் இடப் பக்கமாகச் சோர்ந்தது. விமானம் கீழ் நோக்கிச் சென்று ஒரு சுடுகாட்டில் விழுந்தது. பிணப்புகை மலிந்த மயானத்தில் அகப்பட்ட மங்கை அன்றிலம்பேடை போல அரற்றினாள்; அழுது சோர்ந்தாள்.

விமானம் விழுந்த அதிர்ச்சியால் அம் மயானத்தில் அரசமாதேவி ஒரு குழந்தையை ஈன்றாள். இள ஞாயிறுபோல விளங்கிய அம் மகவைக் கண்ட போது அவள் மனத்திலிருந்து வருத்தம் சிறிது மறைந்தது. ஆயினும், மகனைக் கூர்ந்து நோக்க நோக்க அவள் கண்களில் கண்ணீர் சுரந்தது; “எங்கோ பிறத்தற்குரிய மைந்தன் இங்கே பிறந்தான்!” என்று எண்ணி எண்ணி ஏங்கினாள்.

“மகனே ! அரண்மனையில் இன்னிசை வாத்தியம் முழங்க, அழகிய மாதர் அருநடம் புரிய, பாவலர் பல்லாண்டிசைக்க, அணி விளக்குகள் ஒளிபரப்ப, மெல்லிய பட்டு மெத்தையிலே நீ பிறத்தற்குரியவன் அல்லனோ?

வெவ்வாய் ஓரி முழவாக விளிந்தார் ஈமம் விளக்காக
ஒவ்வாச் சுடுகாட் டுயர் அரங்கில் நிழல் போல் நுடங்கிப் பேயாட
எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட
இவ்வா றாகிப் பிறப்பதோ இதுவோ மன்னற் கியல்வேந்தே

“என் கண்மணி ! இம் முதுகாட்டிலே நரி ஊளை யிடுகின்றது; பிணத்தைச் சுடும் நெருப்பு கொழுந்து விட்டெரிகின்றது. கோரமான பேய் கொக்கரித் தாடு கின்றது. சுடுகாட்டைச் சூழ்ந்து கூகை குழறுகின்றது. மன்னன் மைந்தனாகிய நீ பிறந்தவாறு இதுவோ?” என்று அவள் அழுது சோர்ந்தாள். இங்ஙனம் சுடுகாட்டிற் பிறந்த மைந்தன் சீவகன் என்னும் பெயர் பெற்றுச் சிந்தாமணியின் தலைவனாயினான்.

$$$

5. வாழ்க்கையும் வைராக்கியமும்

வைராக்கியம் என்ற சொல்லைக் கேட்டவுடனே தமிழ்நாட்டில் வழங்கும் இரண்டொரு வாசகம் நம் நினைவிற்கு வருகின்றது; ஒன்று, புராண வைராக்கியம்; மற்றொன்று, மயான வைராக்கியம். இவ்விரண்டையும் சிறிது பார்ப்போம். ஓரிடத்தில் கம்பராமாயணக் கதை நடக்கிறது. இராமனைக் காட்டுக்குப் போகும்படி கட்டளையிடுகிறாள் கைகேயி. ‘கோசல நாட்டுச் செல்வம் எல்லாம் இனிப் பரதனுக்கே உரியது. இது மன்னவன் ஆணை’ என்று பேசுகின்றாள். அது கேட்ட இராமன் அகமலர்ந்து கைகுவித்து,

மன்னவன் பணியன் றாகில் நும்பணி மறுப்ப னோஎன்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்றோ?
என்னினி உறுதி அப்பால் இப்பணி தலைமேற் கொண்டேன்
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்”

என்று காட்டை நோக்கிப் புறப்படுகிறான். இந்தப் பாட்டைக் கேட்கின்றான் ஒருவன். அவனுக்கும் அவன் தம்பிக்கும் ஒரு சொத்தைக் குறித்து நீதி மன்றத்தில் நெடுவழக்கு நடக்கின்றது. பாட்டைக் கேட்ட நிலையில், அவன் எண்ணுகின்றான்: “இராமனே உத்தமன்;  தான் வேறு, தம்பி வேறு என்ற எண்ணம் அற்றவன்; எவ்வளவு பெருந்தன்மையோடு பரதன் பெற்ற செல்வம் நான் பெற்ற செல்வமன்றோ என்று பேசுகின்றான். நான் மட்டும் என் தம்பியின் மீது ஏன் வழக்கை நடத்த வேண்டும்? அந்தச் சொத்தை என் தம்பி ஆண்டால் என்ன, நான் ஆண்டால் என்ன?” என்று எண்ணிக் கொண்டு வீட்டிற்கு வருகின்றான்; பசி தீர உண்கின்றான்; உறங்குகின்றான்; உறக்கத்திலே வைராக்கியம் உலைந்து விடுகிறது. மறுநாட் காலையில் அவன் வக்கீல் வீட்டுக்குப் போகிறான். வழக்கு முறையாக நடக்கிறது. இதுதான் புராண வைராக்கியம்.

மற்றொரு வைராக்கியத்தைப் பார்ப்போம். ஒருவன் திடீர் என்று இறந்துவிடுகின்றான். உற்றார் உறவினர் எல்லோரும் வருகின்றார்கள்; கண்ணீர் சொரிகின்றார்கள். இறந்த உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்கின்றார்கள். ஈமத்தில் ஏற்றுகின்றார்கள். நெருப்பை மூட்டுகின்றார்கள். அப்பொழுது ஒருவன் நினைக்கிறான். ‘என்ன உலக வாழ்க்கை! நேற்று இருந்தான், இன்று போய்விட்டான். எனக்கும் இப்படித் தானே ஆகும்! ஆதலால், காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும்,

கனியேனும் வறிய செங் காயேனும்
உதிர்சருகு கந்தமூ லங்களேனும்
கனல்வாதை வந்தெய்தின் அள்ளிப்பு
சித்து நான் கண்மூடி மௌனியாகித்
தனியே இருப்பதற் கெண்ணினேன்
எண்ணமிது சாமிநீ அறியாததோ
சர்வபரி பூரண கண்டதத் துவமான
சச்சிதா னந்த சிவமே

என்று அவன் பாடுகின்றான். மயானத்திலிருந்து திரும்பி வருகின்றான். மனத்தில் எழுந்த வைராக்கியம் மாயமாய்ப் பறந்து போகின்றது. இதுதான் மயான வைராக்கியம்.

மனத்திண்மையே வைராக்கியமாகும்; மனத்திண்மை யற்றவர்கள் ஒரு கொள்கையில் நிலைத்து நிற்க மாட்டார்கள். மன உறுதியுடையவர்கள் மலைபோல் உலையாது நிற்பார்கள். அவர், மெய் வருத்தம் பாரார்; பசி நோக்கார்; அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார். மனவுறுதி கொண்டு அறநெறியில் நிற்கும் மாந்தரை இவ்வுலகம் போற்றும். “அரிச்சந்திரன், வாய்மை என்னும் சத்திய நெறியில் வழுவாது நின்றான்; பலவகையான சோதனைக்கு உட்பட்டான்; பதியிழந்தான்; பாலனை இழந்தான்; படைத்த நிதி இழந்தான்; இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக எல்லா வற்றையும் இழந்து, ஈனத்தொழில் புரியும் காலத்தும் சத்தியத்தை விடாது பற்றி நின்றான்; தன்னைச் சோதித்த முனிவரை நோக்கி,

பதியி ழந்தனம், பாலனை யிழந்தனம், படைத்த
நிதியி ழந்தனம், இனிநமக் குளதென நினைக்கும்
கதியி ழக்கினும் கட்டுரை இழக்கிலேன்”

என்றான். அது கேட்ட முனிவன், “மதியிழந்து, வாயிழந்து, மானமும் இழந்து சென்றான்” என்று அரிச்சந்திரன் சரித்திரம் கூறுகிறது.

இனி மனிதர்க்குரிய குணங்களிற் சிறந்தது பொறுமை என்பர். ‘உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கும் சினத்தைக் காத்துக்கொள்ளும் குணமே குணம்’ என்றார் ஒரு கவிஞர். வெம்மை விளைப்பது கோபம்; செம்மை விளைவிப்பது பொறுமை. இத்தகைய பொறுமை மன உறுதியாலே வரும். பொறுமையின் தன்மையைத் தம் வாழ்க்கையிலே பொருந்தக் காட்டினார் ஏசுநாதர். தீயவர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு சீறினார்கள்; கழியால் அடித்தார்கள்; காறியுமிழ்ந்தார்கள்; முள்முடியைத் தலையிலே வைத்து அழுத்தினார்கள்; கையிலே நெடுஞ்சிலுவையைக் கொடுத்து வீதியின் வழியாக நடத்திச் சென்றார்கள். ஏசுநாதர் திருமுகம் சோர்ந்தது; நாவுலர்ந்தது; கண் குழிந்தது. இத்தகைய இளைத்த மேனியில் கயவர்கள் இருப்பாணியை அறைந்தார்கள். அப் பெருந் துயரத்தைப் பொறுத்தார் ஏசுநாதர்; சிலுவையில் அறைந்து துன்புறுத்தியவர் மீது இரக்கமும் கொண்டார்; இறைவனை நோக்கி, ‘எந்தையே! இவர் அறியாமல் செய்கின்றார்கள். இவர் பிழையை மன்னிக்க வேண்டும்’ என்று பிரார்த்தித்தார். இத்தகைய இரும் பொறையையும், பெருங் கருணையையும் அழகாகப் பாடினார், கிறிஸ்தவக் கம்பர் என்று புகழப்படுகின்ற கிருஷ்ணபிள்ளை.

தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்திப்
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்துஎந்தாய்
இன்னதென அறிகில்லார் தாம் செய்வ திவர்பிழையை
மன்னியும் என்று எழிற்கனிவாய் மலர்ந்தார்நம் அருள்வள்ளல்”

என்ற பாட்டில் ‘தின்மை செய்தார்க்கும் நன்மை செய்த ஏசுநாதரை அருள் வள்ளல்’ என்று கவிஞர் போற்றி யிருப்பது பொருத்த முடையதன்றோ?

அரிச்சந்திரனும் ஏசுநாதரும் அறநெறியிலே வைராக்கியம் பூண்டவர்கள். இதற்கு மாறாகத் தவறான வழியிலே தலைப்பட்டு, விடாக்கண்டராக நின்றாரும் உண்டு. கற்பின் செல்வியாகிய சீதையைக் கவர்ந்து சென்று சிறையில் வைத்தான் இராவணன். சீதையை மீட்பதற்காக இராமன் இலங்கையின் மீது படை யெடுத்தான்; பெரும் போர் மூண்டது. இராவணன் மைந்தனாகிய இந்திரசித்தன் இலங்கையில் நிகரற்ற வீரன். அவன் வென்று வருவான் என்று எண்ணி இறுமாந்திருந்தான் இராவணன் – போர்க்களத்தில் பகைவரது திறத்தை நன்றாகத் தெரிந்த இந்திரசித்தன் இராவணன் மாளிகையை அடைந்து, மன்னனைத் தொழுது, ‘ஐயனே, இன்று நடந்த போரில் நான் அரிய பெரிய படைக்கலங்களையெல்லாம் விடுத்தேன். அவை பகைவர் மீது செல்லவில்லை. ஆதலால், போருக்கு அஞ்சி இங்கு வந்துவிட்டேன் என்று கருதிவிடலாகாது. உன்பால் வைத்த ஆசையால் ஒன்று சொல்லக் கருதி வந்தேன். சிறைப்படுத்திய சீதையை விட்டுவிட்டால், நாம் சீரும் சிறப்பும் சிதையாமல் வாழலாம். பகைவர் சீற்றம் தீர்வர். நம் நாட்டைவிட்டு நீங்குவர். பகையும் போரும் இன்றி நீ பண்புற்று வாழ்வாய். உன்பால் வைத்த அன்பினால் இதைச் சொன்னேன்’ என்றான்.

அம் மொழி கேட்ட இராவணன், சிந்தை கலங்கிச் சீற்றம் தலைக்கொண்டான். எதிரே நின்ற இந்திரசித்தை நோக்கி, ‘பேதையே! நீ அறியாமற் பேசினாய். உன்னை நம்பி இருக்கின்றேன் என்று எண்ணினாயா? என் தோள்வலியை நம்பியே சீதையை எடுத்து வந்தேன். எடுத்து வந்த மங்கையைக் கொடுத்துவிடுதல் ஈனமன்றோ? மானமே உயிரினும் பெரிது; வீரப் புகழே வாழ்வினும் விரும்பத் தக்கது.

வென்றிலன் என்ற போதும் வேதமுள் ளளவும் யானும்
நின்றுள னன்றோ மற்றவ் விராமன்பேர் நிற்கு மாயின்
பொன்றுதல் ஒருகா லத்தும் தவிருமோ, பொதுமைத் தன்றோ
இன்றுளார் நாளை மாள்வார் புகழுக்கும் இறுதியுண்டோ

-என்று சினந்து பேசினான். அதுகேட்ட இந்திரசித்தன் குன்று முட்டிய குருவிபோல் மீண்டும் போர்க்களம் போந்தான்; அரும்போர் புரிந்து ஆவி துறந்தான். இறுதியில் இராவணனும் போர் புரிந்து மாண்டான்.

தமிழ்நாட்டில் வழங்கும் மற்றொரு சரித்திரமும் தவறான வைராக்கியத்தால் வரும் கேட்டைக் காட்டுகின்றது. சூரன் என்பவன் ஒரு பேரரசன்! வீர மகேந்திரம் என்னும் நகரில் அரசு வீற்றிருந்தான்; வானவர் நாட்டின்மீது படையெடுத்து, இந்திரன் மகனாகிய சயந்தனையும் தேவரையும் பிடித்துச் சிறை வைத்தான். அவர்களை விடுவிப்பதற்காக முருகன் படை எழுந்தது. சூரன் மகனாகிய பானுகோபன் அச் சேனையை எதிர்த்தான்; வீரவேல் கொண்டு போர் புரியும் முருகனை ஒரு நாளும் வெல்ல முடியாது என்று நன்றாக உணர்ந்தான்; சூரனிடம் சென்று, ‘அரசே ! இன்று மாற்றார்மீது மாயப் படையை ஏவினேன். அதனினும் சிறந்த படைக்கலம் என்னிடம் இல்லை. அம்மாயப் படையும் பயனற்றுப் போயிற்று. நீ நெடுங்காலம் வாழவேண்டும்; அரசாள வேண்டும் என்பது ஆசை. அவ்வாசையால் ஒன்று கூறுகின்றேன்; வானவரை நீ சிறையினின்றும் விட்டுவிட்டால் படையெடுத்து வந்த முருகன் நம் நாட்டைவிட்டு அகல்வான்; சீற்றம் தீர்வான். உன் அரசு நீடூழி வாழும்’ என்றான்.

அவ் வுரை கேட்ட சூரன் பொங்கி எழுந்தான், ‘மைந்தா! என் முன்னின்று என்ன பேசினாய்? வானவரை விட்டே னென்றால் என்னை யார் மதிப்பார்? இவ் வுலக வாழ்க்கை நிலையற்றதென்பதை நீ அறியாயோ? இளமையும் செல்வமும் வீரமும் இனைய பிறவும் அழிந்தே தீரும். அழியாமல் நிற்பது புகழ் ஒன்றே. ஆதலால், என் ஆவி கொடுத்து அரும்புகழ் பெறுவேனே யன்றி, வானவரை விடுவித்து வசையினுக்கு ஆளாகி வாழ மாட்டேன்.

இறந்திட வரினும் அல்லால் இடுக்கண்ஒன் றுறினும் தம்பால்
பிறந்திடும் மானம் தன்னை விடுவரோ பெரியர் ஆனோர்
சிறந்திடும் இரண்டு நாளைச் செல்வத்தை விரும்பி யானும்
துறந்திடேன் பிடித்த கொள்கை, சூரன்என் றொருபேர் பெற்றேன்

என்று எரிந்து பேசினான். அது கேட்ட பானுகோபன் அமர்க்களம் போந்து, வீரப்போர் புரிந்து ஆவி துறந்தான். பின்னர்ச் சூரனும் போர் செய்து மாண்டான். அரக்கர் தலைவனாகிய இராவணனும், அசுரர் தலைவனாகிய சூரனும் தவறான வழியில் சென்றார்கள். ‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா’ என்றபடி விடாக்கண்டராய் நின்றார்கள்; வீழ்ந்து ஒழிந்தார்கள்.

இனி, மத வைராக்கியம் என்பது ஒன்றுண்டு. இவ் வுலகப் பொருள்களில் ஆசையற்று, கடவுளையே நினைந்து கசிந்து நிற்கும் நிலையே அது. திருவாசகத்தில் மாணிக்கவாசகர் இவ் வைராக்கியத்தின் தன்மையை விளக்கியருளினார்.

கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினதடி யாரொடல் லால் நர கம்புகினும்
எள்ளேன் திருவரு ளாலே இருக்கப்பெறின் இறைவா
உள்ளேன் பிற தெய்வம் உன்னையல் லால்எங்கள் உத்தமனே”

என்பது ஓர் அருமைத் திருவாசகம். இத்தகைய வைராக்கியத்தைத் தம் வாழ்க்கையிலே காட்டிய பக்தர் பலராவர். “ஸ்ரீவில்லிபுத்தூரில் கோதை என்னும் ஆண்டாள் தோன்றினாள். இளமையிலேயே அவள் பெருமாளிடம் பேரன்பு செலுத்தினாள்; அவர் திருமேனியைக் கண்டு காதலித்தாள்; அவர் திருநாமங் களைக் கேட்டுச் செவிகுளிர்ந்தாள்; அவர் திருப்புகழைப் பாடிப் பாடிப் பரவசமுற்றாள். அவள் மங்கைப் பருவமுற்ற போது பெற்றோர் மணம் பேசத் தொடங்கினார்கள். அதை யறிந்த மங்கை, ‘மனிதன் எவனையும் நான் மணக்க மாட்டேன்; மணிவண்ணனாகிய பெருமாளையே மணப்பேன்’ என்றாள். இந்த மனத் திண்மையைக் கண்டு யாவரும் வியப்பும் திகைப்பும் உற்றார்கள். ஆயினும் அவளன்பின் திறத்தினை அறிந்த திருவரங்கப் பெருமாள் அவளை ஏற்றுப் பேரருள் இன்பமளித்தார்” என்று குருபரம்பரை என்னும் வரலாறு கூறுகிறது.

இனி, சிவத் தொண்டர்களில் ஒருவராகிய திருநாவுக்கரசர் கொண்ட வைராக்கியத்தைச் சிறிது பார்ப்போம். தமிழ்நாட்டிலுள்ள சிவப்பதிகளை யெல்லாம் கண்டு வணங்கிய திருநாவுக்கரசர், கைலாச மலையில் சிவபெருமான் வீற்றிருக்கும் கோலத்தைக் காண ஆசைப்பட்டார். எழுபது வயதிற்கு மேற்பட்ட முதுமைப் பருவத்தில் வடதிசையை நோக்கி நடந்தார்; காசியை அடைந்து கங்கையையும் விசுவநாதரையும் கைதொழுதார்; வெள்ளி மாமலையை நோக்கி உள்ளம் மகிழ்ந்து நடந்தார்; இரவு பகலாக ஊண் உறக்கமின்றி நடந்து நடந்து, கால் இரண்டும் தேய்ந்தார்; கைகளால் நடக்கத் தொடங்கினார். கையும் தேய்ந்தார்; உடம்பினால் உருண்டு உருண்டு சென்றார்; உடம்பும் தேய்ந்தார்; நகர்வதற்கு முடியாமல் வழியிலே தங்கினார். அப்போது அவ் வழியாக முனிவர் ஒருவர் வந்தார்; திருநாவுக்கரசரைக் கண்டு இரக்கங் கொண்டு, ‘நீர் இங்கே எதற்காக வந்தீர்?’ என்றார். ‘முனிவரே! கைலாசநாதனைக் கண்டு கும்பிடும் காதலால் வந்தேன்’ என்று திருநாவுக்கரசர் மறுமொழி தந்தார். அது கேட்ட முனிவர், ‘கைலாச மலையாவது, நீர் காண்பதாவது; வானவரும் காண முடியாத அம்மலையை மானுடராகிய நீரோ காண வல்லீர்? வந்த வழியே சென்று சொந்த ஊரைச் சேரும்’ என்றார். முனிவர் சொன்ன சொற்களால் நாவுக்கரசர் சிறிதும் மனம் தளரவில்லை; தம் மனவுறுதியைத் திறமாக எடுத்துரைத்தார்.

ஆளும் நாயகன் கயிலையில் இருக்கைகண்ட ல்லால்
மாளும் இவ்வுடல் கொண்டு ளேன்என மறுத்தார்

முனிவராக வந்த சிவபெருமான் திருநாவுக்கரசரது வைராக்கியத்தைக் கண்டு மகிழ்ந்து, ‘கைலாசக் கோலத்தைக் காட்டியருளினார்’ என்று பெரிய புராணம் கூறுகின்றது.

சமய வைராக்கியம் போலவே சமுதாய வைராக்கியமும் உண்டு. தாழ்ந்தோரை உயர்த்துவோம் என்றும், தாய்மொழிக்குத் தொண்டு செய்வோம் என்றும், நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்போம் என்றும் உறுதி கொண்டவர்கள் உயர்ந்தவர்களல்லரோ? இத்தகைய வைராக்கியம் பூண்டவர்கள் பிறர் தூற்றினால் வருந்த மாட்டார்கள்; போற்றினால் மகிழவும் மாட்டார்கள். நயத்தினாலேனும் பயத்தினாலேனும் அவர் மன உறுதியை மாற்ற முடியாது. அவர்களே நினைத்ததை முடிக்கும் நீர்மையாளர் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்” என்பது திருக்குறள்.

(தொடர்கிறது)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s