மகாகவி பாரதியின் இலக்கியங்கள் குறித்த ஆய்வு தமிழகத்தில் தனியே பாரதியியலாகவே வளர்ந்துள்ளது. பாரதியின் எழுத்துகளை செம்மைப்படுத்துதல், பதிப்பித்தல், அவரது படைப்புகளை வரிசைப்படுத்துதல், விடுபட்ட படைப்புகளைக் கண்டறிதல், அவற்றின் இலக்கியச் சுவையை எடுத்துரைத்தல், திறனாய்வு என, பல ஆய்வாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்; இன்றும் ஈடுபடுகின்றனர். இந்த ஆய்வாளர்களுள் அமரர் திரு. ம.ப.பெரியசாமி தூரன் முன்னோடியாவார்.
திரு தூரனின் ‘பாரதியும் உலகமும்’ என்ற இந்த நூல், பாரதியின் படைப்புகளில் அவரது உலகு தழுவிய பார்வையைத் தரிசித்து, அதனை தமிழ் மக்களுக்குத் தரும் ஓர் இனிய முயற்சி. வானதி பதிப்பகம் 1979இல் வெளியிட்ட இந்நூல் பாரதி அன்பர்கள் சுவைப்பதற்கான, தேர்ந்தெடுத்துக் கோர்த்த கனிகளாலான மணியாரம்.
போர்ச்சூழலில் உலகம் அச்சத்துடன் தவிக்கும் தற்போதைய அவல நிலையில், உலகையே அன்பால் அரவணைக்கும் பாரதீயப் பார்வையை முன்வைக்கும் பாரதியின் இந்தப் படைப்புகள் முக்கியமானவை; இன்றைய தருணத்தில் அனைவராலும் படிக்கப்பட வேண்டியவை.