உள்ளொளி -திரு.வி.க. (பகுதி- 1)

தொன்மையான தமிழ்மொழியில் உரைநடை செம்மை வடிவம் பெற்றது சென்ற நூற்றாண்டில்தான். பதிப்பாசிரியர்களின் இலக்கிய உரைகளில் நமது உரைநடை துவங்கினாலும், வள்ளலாரிடம் தான் நமது உரைநடை எழில் கொள்ளத் துவங்கியது என்பது ஆய்வாளர்கள் கூற்று. சென்ற இரு நூற்றாண்டுகளில் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, ஆறுமுக நாவலர், உ.வே.சாமிநாத ஐயர், ராகவ ஐயங்கார், மறைமலை அடிகள், பரிதிமாற் கலைஞர், மகாகவி பாரதி, திரு.வி.க, கல்கி, கி.வா.ஜ., மு.வ., முதலானோர் அதனை மேம்படுத்தினர். தமிழ் உரைநடையில் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒருவகை நடை உண்டு. தமிழ் உரைநடை வரலாற்றில் திரு.வி.க. அவர்களின் எழுத்து தெள்ளுதமிழ் நடை அற்புதமானது. தவிர, திரு.வி.க.வின் நடை கருத்துச் செறிவானது. நாகரிகமான தர்க்கங்களுடன், இனிய சொற்களுடன், தெளிவான ஆற்றோட்ட நடையில் அவர் எழுதியிருப்பவை அனைத்துமே தமிழின் செல்வங்கள். அவரது பேச்சே எழுத்துநடை போல சிறப்பாக இருக்கும் என்று சொல்வார்கள். அதற்கு உதாரணம், இங்குள்ள ‘உள்ளொளி’ நூல். வாசகரின் வாசிப்பு வசதியை முன்னிட்டு, இந்த நூல் 4 பகுதிகளாக இங்கு வெளியாகிறது.