-இளையபெருமாள் சுகதேவ்
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இன்று பிறந்த நாள். அதையொட்டி, எழுத்தாளர் திரு. இளையபெருமாள் சுகதேவ் அவர்களின் முகநூல் பதிவு இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது…

இளையராஜாவின் ரசிகனாக, சென்னை ஜவஹர்லால் நேரு வெளியரங்கத்தில் – கடந்த மே 30-இல் தேதி நடந்த சிம்பொனி இசை நிகழ்ச்சி மற்றும் மே 31-ஆம் தேதி நடந்த அவரது திரையுலகப் பொன்விழா நிகழ்ச்சி – இரண்டையும் நேரில் கண்டேன். இரண்டுமே பேரனுபவம். உணர முடியுமே அன்றி, எழுத்தால் பெரிதாகச் சொல்லிவிடச் சாத்தியமில்லை.
இத்தனைக்கும் பிறகும், சிம்பொனி இசை மேடையில் அவர் “நான் ஒரு பாட்டாளி, பாட்டாளி, பாட்டாளி” என்று பிரகடனப்படுத்திக்கொண்டு “நம்ம ஊரு பாட்டுக்காரன்” என்று முடிக்கிறார். இன்று 83-வது பிறந்தநாள் காணும் இளையராஜா, அந்த வயதுக்குரிய தளர்வின் தடயம் ஏதுமின்றி இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். ஒப்பிட முடியாத அசாத்திய இசைத் தாகம் உள்ளவரால் மட்டுமே இப்படியாக இயங்க முடியும்.
யுவன் இசையில் “Raja’s Playlist” என்ற பெயரில் தயாராகும் படம் பற்றிய அறிவிப்பை சிம்பொனி இசை மேடையில் வெளியிட்டார்கள். இன்றைய இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ் ஆகியோரின் படங்களுக்கு இசையமைக்கிறார். இரண்டாவது சிம்பொனியை எழுதிக் கொண்டிருக்கிறார். சென்னையைத் தொடர்ந்து பெங்களூரில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். ஜூன் மாதம் ஐரோப்பிய நாடுகளில் இசை நிகழ்ச்சிகள். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் அமெரிக்க நகரங்களில். செப்டம்பரில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து. நவம்பரில் சிங்கப்பூர். இப்படியாக இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகள் வரிசை கட்டியிருப்பதாக செய்திகள்.
அவர் வந்தார், இவர் வந்தார், அணிவகுத்து நெரிசலாக வந்தார்கள். திட்டுத் திட்டாக ஆங்காங்கே நிற்கிறார்கள் அல்லது முன்பு நின்ற இடங்களைக் கைகாட்டி அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் குதூகலிக்கிறார்கள். அதுகடந்து ஏதும் செய்வதற்கு இருப்பு இல்லை.
இன்றைய திரைப்படங்களின் கதையோட்டத்துக்கு எப்போதோ போட்ட இளையராஜாவின் பாடல்கள்தான் தேவைப்படுகின்றன. குத்துமதிப்பாக, சமீப ஆண்டுகளில் மட்டும் 20 முதல் 30 படங்களில் இளையராஜா பாத்திரமாக தனது பாடல் வழியாக வந்து செல்கிறார். அந்தப் பழைய பாடலை வைத்து அந்தப் படம் அறியப்படுகிறது.
ஆனாலும், இளையராஜா ஓய்ந்தார் – முடிந்துவிட்டது அவரது காலம் என்று உள்நோக்கத்துடன்கூடிய பிழையான தகவல்களை நெடுங்காலமாக பரப்பி வருகிறார்கள். பழைய பாடல்களுக்கு இப்போது காப்புரிமை கோருகிறார். பண வெறி. அகந்தை, யாரையும் மதிக்க மாட்டார்… உலகில் வேறெங்கும் ஓர் இசை மேதைக்கு எதிராக விதவிதமாக இவ்வளவு கற்களை எறிந்திருக்க மாட்டார்கள். அவர் மீதான அடிப்படையற்ற விமர்சனங்களில் முன்கள முற்போக்கு ஆட்டக்காரர்களும் அடக்கம் என்பது பெருங்கொடுமை.
எந்தச் சலனமுமின்றி, இசைஞானி அவர் பாட்டுக்கு இசையுலகில் தனிப் பெரும் அடையாளத்துடன் கம்பீரமாக நடந்து செல்கிறார்.
இந்த வயதில் எப்படி இவையல்லாம் சாத்தியம் என்ற இன்னும் அடங்காக் காழ்ப்புடன் புதுப்புதுக் கற்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவையெல்லாம், நீண்ட, நெடிய மேற்குத் தொடர்ச்சி மலையின் மீது அடிவாரத்திலிருந்து கல்லெறிந்து யார் அதிக தூரம் எறிகிறார்கள் என்று விளையாடும் சிறுவர்களின் செயலுக்கு ஒப்பானது. அவர்கள் தள்ளிப்போய் விளையாட மாட்டார்கள். கல்லெறிவதற்கு அவர்களைவிட உயரமான, பிரம்மாண்டமான மலை வேண்டும். அவர்கள் பாட்டுக்கு விளையாடட்டும்.
இசைமேதை இளையராஜாவுக்கு 83-வது பிறந்தநாள் வணக்கம். வாழ்த்துகள்.
*
பி.கு: இளையராஜாவின் இரண்டு நாள் இசை நிகழ்ச்சிகளுக்கும் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். இன்றைய தலைமுறை இளைஞர்கள் நிறைய. பலரது இசையைக் கேட்டாலும், அவர்களின் உள்ளார்ந்த தேடல் இளையராஜா இசையில் கால்நீட்டி இளைப்பாறுகிறது. அது இயற்கை.
$$$