-ஆசிரியர் குழு

இது ஒரு வரலாற்றுப் புத்தகம். செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்களின் வாழ்க்கை வரலாறு சொல்லுகின்ற, இந்திய வரலாற்றோடு பின்னிப்பிணைந்த ஒரு வரலாற்றுக் காவியம்.
பாரத நாட்டின் விடுதலை வேள்வியில் இமயம் முதல் குமரி வரை தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தியாக சீலர்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக தமிழகத்தின் பங்கு ஒப்பற்றது. அத்தகைய தமிழ் உள்ளங்களில் விடுதலை வரலாற்றின் தாழ்வாரங்களில் கம்பீரமாய் ஒலித்துக் கொண்டிருக்கின்ற திருப்பெயர் வ.உ. சிதம்பரனார். புடம்போட்ட தியாகத்தின் தேசியச் சின்னமாய்த் திகழும் ஓங்கிய வடிவம் வ.உ. சிதம்பரனார். ‘கப்பலோட்டியத் தமிழன்’ என்றும், ‘செக்கிழுத்தச் செம்மல்’ என்றும் தமிழர்களால் புகழாரம் சூட்டப்பட்ட மாவீரர்.
மாறி மாறி வீசிய அரசியல் புயல்களில் வளைந்து கொடுக்காத வைரக்குன்றாகத் திகழ்ந்தவர். கொண்ட கொள்கைகளில் பின்னடைவு கொண்டாரில்லை. நட்பும் சுற்றமும் தம்மைவிட்டு ஒதுங்கியபோதும், வறுமை வெள்ளம் ஏந்திய பொழுதிலும் தன் மனச்சான்றுக்கு ஒவ்வாதனவற்றை எதனையும் செய்தாரில்லை.
அரசியலில், பொதுப் பணிகளில் அடி மேல் அடி வீழ்ந்து சித்திரவதைக்கு ஆளான போதெல்லாம், அத்துன்பத்தினை மறக்க, வடிகாலாக தமிழ் இலக்கியத்திலும், ஆன்மிகத்திலும் தம்மை ஆட்படுத்திக் கொண்ட பெருமகனார். இலக்கியமும், ஆன்மிகமும் அவரது துன்பச் சுமையைக் குறைக்க வடிகாலாக இருந்தன.
அரை நூற்றாண்டுக்குத் தன்னை முழுமையாக இந்திய விடுதலை வேள்வியில் அர்ப்பணித்துக்கொண்டு, செல்வங்களை யெல்லாம் தொலைத்து வறுமையிலே வாடிய தமிழன் வ.உ.சிதம்பரனாரை அன்றும் சரி, இன்றும் சரி, தமிழ்நாட்டு மக்களும் – மைய மாநில அரசுகளும் சரியாக கண்டுகொள்ள வில்லை என்பது ஒரு வருத்தமான செய்தி.
இலக்கியம் -இலக்கணம் – ஆன்மிகம் என படைப்புகள் பல தந்தவர். நூறு ஆண்டுகள் கடந்தும் இன்னும் அவரது படைப்புகள் பல அச்சேறாமலேயே இருக்கின்றன. அவரைப்பற்றிய ஒட்டு மொத்தமான பதிவுகளைத் திரட்டி, இயன்றவரை ஒரு நூலாக ஆக்கிட வேண்டும் என்று, அவரது வம்சாவழியில் வந்த முதுபெரும் எழுத்தாளர் திரு.ப.முத்துக்குமாரசுவாமி அவர்கள் முயன்று தொகுத்த புத்தகம் தான் இது.
ஆசிரியர் குறிப்பு:
திரு. ப.முத்துக்குமாரசாமி அவர்கள், திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தி லும், தருமபுரம் பல்கலைக் கல்லூரியிலும் கல்வி பயின்று, உதவி இயக்குநராகப் பணியாற்றி, அரசுப் பணியிலிருந்து 1993-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர் .
ஆன்மிகம், சுயமுன்னேற்றம், திறனாய்வு இலக்கியம், ஒப்பீட்டு இலக்கியம், இதழ் தொகுப்புகள், அறிஞர்களின் வாழ்வில் சரிதை நூல்கள், உலக அறிஞர்களது பொன்மொழித் தொகுப்புகள் என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை தமிழுக்குத் தந்தவர் .
1972இல் ‘கவியரசர் கண்ணதாசன் கவிதைகளில் ஒரு மதிப்பீடுஎன்ற திறனாய்வு நூலுக்கு மாநில அளவில் முதல் பரிசினைப் பெற்றவர் .வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களது வாழ்வியல் சரிதையையும் வேளாண்மைத்துறை ஆய்வுகளையும் விளக்கி படைத்த இவரது நூலுக்கு மேனாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு கே ஆர் நாராயணன் அவர்கள் அணிந்துரை வழங்கி உள்ளார்.
2004ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான முதல் பரிசு, திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் முதல் பரிசும் விருது, 2008ஆம் ஆண்டு சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தில் சிறந்த நூலுக்கான விருது, 2009 ஆம் ஆண்டு சென்னை ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சான்றோர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெயரன். தமிழக அரசு வழங்கிய மறைமலை அடிகளார் விருதும் ஒரு லட்சம் பொற்கிழியும் பெற்றவர்.
கீழ்க்கண்ட அத்தியாயங்களில், கீழ்க்கண்ட தலைப்புகளில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
வாழ்வியல்:
1. வ.உ.சி.யின் வாழ்க்கை நிகழ்ச்சிகள்
2. தோற்றம்
3. சுயசரிதை விடுதலைக்குப் பின்…
4. சிதம்பரச் செம்மல்
5. வீரச் சிதம்பரம் பிள்ளை
6. குணமிகுந்த நாவலோன்
7. சிதம்பரனார் பஞ்சகம்
8. அரசியல் அரிச்சந்திரன்
9. அஞ்சலி
10. சிங்கம் சிதம்பரம்
11. வ.உ.சி.
12. அமரர் வ.உ.சி.
13. வ.உ.சி. மறைந்த பொழுது
14. நேரம் நெருங்கிக் கொண்டிருக்கையில்
15. வ.உ.சி.யின் உயில்
நிகழ்வுகள்:
16. வ.உ.சி.யின் அரசியல் பிரவேசம்
17. வ.உ.சி. உருவாக்கிய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி லிமிடெட்.
18. மாதாவின் கட்டளை சித்திர விளக்கம்
19. பாரதியின் ‘இந்தியா’ இதழ் வசூலித்த சுதேசிக் கப்பல் தரும நிதி
20. “இந்தியா” நாளிதழில் தமிழர் தலைவர் வ.உ.சி.
21. காந்தி சகாப்தத்தில் வ.உ.சி.
22. சுதேசிக் கப்பல் கம்பெனியின் குறிக்கோள்
23. வ.உ.சி. மீதான வழக்கும் பாரதியின் சாட்சியமும்
24. சுதேசி இயக்கத்தில் வ.உ.சி.யும் – பாரதியும் (1905-1908)
25. களத்தில் ‘ஞானச் சூரியன்!’
26. எழுச்சி பற்றி நெல்லை நகர்மன்றம்
நினைவுகளின் பதிவுகள்:
27. சிதம்பரனாரின் வழக்கறிவன்மை
28. வ.உ.சி.யும் பாரதியும்
29. யான் கண்ட இரு பெரியார்
30. கோவையில் என் தந்தை
31. வ.உ.சி. செய்த உதவி
32. நான் கண்ட வ.உ.சி.
33. நியாயவாதி சிதம்பரம் பிள்ளை
34. நானறிந்த சிதம்பரனார்
35. சில சுவையான குறிப்புகள்! வ.உ.சியைப் பற்றி…
36. வ.உ.சிதம்பரம் பிள்ளை
37. வ.உ.சி – சில நினைவுச் சுடர்கள்
38. எங்கள் குடும்பம்
39. தலைவர் வ.உ.சி. பற்றிய நினைவுக் கட்டுரைகள்
40. வ.உ.சி.யின் சில சுவையான நிகழ்ச்சிகள் உணர்ச்சி மிகுந்த சம்பவங்கள்
41. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.
42. வ.உ.சி. கனவு நனவாயிற்று
படைப்புலகப் பதிவுகள்:
43. திருக்குறள் – அறப்பால்
44. திருக்குறள் – உரைப்பாயிரம்
45. வ.உ.சிதம்பரனார் கட்டுரைகள்
46. வ.உ.சி.யின் மேடைப்பேச்சு
47. கல்வி முறையும் பெண்கள் சீர்திருத்தமும்
48. வ.உ.சி.யும் தனித் தமிழும்
49. வ.உ.சி.யின் இலக்கணப் பதிப்புப் பணி
50. தமிழ் (மொழி, புலவர், நாடு)
51. பாரதி – வ.உ.சி. விவாதம்
52. ஞானபாநு, செப்டம்பர் 1915 இதழில் வெளிவந்த வ.உ.சி.யின் மறுப்புரை
53. ஞானபாநு, அக்டோபர் 1915 இதழில் வெளியான பாரதியின் மறுப்புரை
54. வ.உ.சிதம்பரனாரின் சிவஞான போத உரை
55. வ.உ.சி. கண்ட மெய்ப்பொருள்
56. வ.உ.சி.யும் சைவ சித்தாந்தமும்.
57. சிதம்பரனாரின் செந்தமிழ்ப் பணிகள்
58. வ.உ.சி.யின் இதழியல் அனுபவங்கள் -சில சிந்தனைகள்
59. வ.உ.சி. கடிதங்கள்
60.’சிவநேசனுக்குக்’ கடிதம்
61. பாண்டித்துரை தேவர் வ.உ.சி-க்கு எழுதிய கடிதம்
62. வ.உ.சி. குறித்து கண்ணனூர் சிறை அதிகாரிக்கு ‘அமிர்தபஜார்’ பத்திரிகை கோஷ் எழுதிய கடிதம்
63. வ.உ.சி. மணிவிழாவுக்கு ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் எழுதிய வாழ்த்துக் கடிதம்
64. திருமண வாழ்த்திலும் தேசம் குறித்து எழுதும் வ.உ.சி.
65. வ.உ.சி. நூல்கள்
அரசியல் அறிஞர்கள் பார்வையில்:
66. சிதம்பரனார் வாழ்க!
67. பரிசுத்த வள்ளல் – தியாகி – வ.உ.சி!
68. வ.உ.சி. சுயசரிதை -ஒரு பார்வை
69. வ.உ.சி.யின் மறக்க முடியாத தொண்டு!
70. கலைஞர் – முதல்வர் கண்ட கப்பலோட்டிய தமிழர்
71. நான் கண்ட வ.உ.சி.
72. தேச பக்தர் சிதம்பரனார்
73. வீர வணக்கம்
74. கன்னாட் பிளேஸ் ஏக் ஆத்மி!
75. சுதந்திர அஸ்திவாரம்
76. நினைத்துப் பாருங்கள்
77. கப்பலோட்டிய தமிழன்
78. நோக்கம் நிறைவேறிவிட்டது
தமிழறிஞர்கள் பார்வையில்:
79. தமிழர் தந்தை வ.உ.சிதம்பரனார்
80. வாழ்நாளுக்கும் பிறகு வரலாற்று நாயகன்
81. வாழ்க்கையால் மேலோர் வளர்தமிழ் நூலோர் வ.உ.சிதம்பரனார் (1872-1936)
82. கப்பலோட்டி சிதம்பரனார்
83. கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை
84. வ.உ.சிதம்பரம் பிள்ளை
85. தருக்கி நின்ற தமிழன்
86. தென்னாட்டுத் திலகர்.
87. செய்ந்நன்றி மறவாச் செம்மல்.
88. கவிராய வாணிப வள்ளல்
89. ஒரு பழைய காலத்து மனிதர்
90. பிள்ளையவர்களின் சமய சித்தாந்தம்
91. கப்பல் ஏறுவாயோ?
92. உலகத்தை ஆள…!
93. செயற்கரிய செய்த பெரியார்
94. காலம் தாழ்த்திப் புகழ்பெற்ற அறிஞர்
95. திருநெல்வேலிக் கலகம் 1908
96. நாடகத்தில் சிதம்பரனார்
97. தியாகச்சுடர் சிதம்பரம் பிள்ளை
98. வ.உ.சி.
99. மூன்றெழுத்துச் செம்மல்
100. தியாகவுரு
101. முழு நிறை மனிதர் வ.உ.சி.
102. வீர சிதம்பரனார்
103. ‘அபாயகரமான ஆள்!’
104. புகழ் மணக்கும் வாழ்க்கை
105. வ.உ.சி.யைப் பற்றி…
106. கப்பலோட்டிய தமிழர் – வாழ்வும் வாக்கும்
107. வ.உ.சி. ஒரு பதிப்பாசிரியர்
108. கப்பலோட்டிய தமிழன்
109. இதோ இலக்கணம்
110. நாவாயாண்ட சிதம்பரனார்.
"வேளாண் சிறைபுகுந்தான் தமிழகத்தார்
மன்னனென மீண்டான் என்றே
கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ
வருந்தலை என் கேண்மைக்கோவே."
-மகாகவி பாரதி.
வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தமிழகத்தின் முதற்பெரும் தேச பக்தர். விடுதலை வேள்விக்கு வித்திட்ட நாயகர். ஓங்குபுகழ் சைவத்தையும் தமிழையும் உயிர்மூச்சாய் சுவாசித்து வாழ்ந்த தவநெறியாளர். பாரதியின் விடுதலை வேட்கையையும், திலகரின் விடுதலைப் போராட்ட விழைவையும், காந்தியாரின் சுதந்திர தாகத்தையும் விஞ்சுகின்ற வண்ணம், இந்தியத் திருநாட்டின் விடுதலைக்குத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட கர்ம வீரர். சுதேசி இயக்கத்தை வார்த்தைகளால் வாயாடாது – செயல் வடிவில் செய்து காட்டிய செயல் வீரர்.
“நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ?” என்று வெள்ளையனைப் பார்த்து கண் சிவக்க இடி முழக்கம் செய்த போராளி வ.உ.சி. விடுதலை வேட்கை அவரது வாழ்வியல் கோட்பாடுகளின் உச்சம். அதனால்தான் பெரும் பணக்காரராய் வாழ்ந்து வந்த சீமான் சிதம்பரம், தமது சொத்துகளையெல்லாம் இழந்து, வறுமையில் வாடி வதங்கினார். தொழிலாளர் இயக்கத்தில் பங்குகொண்டு ஏழைகளின் வாழ்வினை மலர வைக்க பாடுபட்ட மனிதநேயக் காவலர், சிறந்த ஆன்மிகச் செம்மல், பைந்தமிழில் கரை கண்டவர், சிறந்த உரையாசிரியர், இதழாசிரியர், தமிழ்ப் பொழிவாளர், கட்டுரையாசிரியர், வழக்குரைஞர், திறமையான நிர்வாகி, நூலாசிரியர் என பன்முகப் பார்வையில் வ.உ.சி., ஓர் இமயம்.
முடிந்தவரை வ.உ.சிதம்பரனாரின் வாழ்வியல் நிகழ்வுகள், நினைவலைகள், படைப்புலகம் போன்ற அரிய செய்திகளுக்குரிய தமிழ்ச்சான்றோர்களது கட்டுரைகள், இதழியல் செய்திகள் என முழுமையாகத் தொகுத்து அளித்திருக்கிறார் செம்மல் வழிவந்த நம்மில் வாழ்ந்த ப.முத்து குமாரசாமி அவர்கள். அனைவரது இல்லங்களிலும் இருக்க வேண்டிய நூல் இது.
***
நூல் குறிப்பு:
இந்திய வரலாற்றில் வ.உ.சி.
ஆசிரியர்: ப .முத்துகுமாரசுவாமி.
முதல் பதிப்பு: 2008.
பக்கங்கள்: 820 ; விலை: ரூ.450.
வெளியீடு: நோபல் பப்ளிகேஷன்ஸ், சென்னை.
$$$