–கவியரசு கண்ணதாசன்
இந்த உலகம் ஆண்- பெண் சேர்க்கையால் தான் வாழ்கிறது. உலகின் நியதியில் இருவரும் சமம். ஆனால், இயல்பில் ஆண் ஆதிக்கமே பெண்னுரிமை பேசும் நாடுகளிலும் கூடத் தொடர்கிறது. இந்த ஆதிக்கத்தை ஏற்காத சமத்துவத்துக்கான குரல்கள், மகாகவி பாரதி முதல் கவியரசு கண்ணதாசன் வரை- ஆண்களாலேயே முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு ஓர் அரிய மாதிரிப் பாடல் தான் இங்கே பதிவாகிறது. 1977-இல்வெளியான ‘அவர்கள்’ (இயக்கம்: கே.பாலசந்தர்), ஆணுக்கும் பெண்ணுக்குமான அன்பின் ஆழத்தை புதிய நாற்கோணத்தில் காட்ட முயன்ற திரைப்படம். விவாகரத்து கொடுத்துவிட்ட சந்தேகப் பிராணியான கணவன், விதிவசத்தால் வாழ்வில் இணைய முடியாத முன்னாள் காதலன், தன்னை மிகவும் நேசிக்கும் மனைவியை இழந்த இளைஞன் ஆகியோர் ஓர் இளம்பெண்ணின் வாழ்வில் குறுக்கிடுகிறார்கள். அவர்களில் யாரைத் தேர்வு செய்கிறாள் அவள்? மீண்டும் அவளது பயணம் யாருடன்? இவர்கள் மூவரையும் ஒதுக்கி, தனிப் பயணம் தொடங்கும் புரட்சிகர மாது இவள்… மகனுடனான உறவை அறுத்து உடன் செல்கிறாள் இவளது முன்னாள் கணவனின் அன்னை. இவர்களது எல்லைகளை சுயநல ஆண்களால் வரையறுக்க இயலாது…

காற்றுக்கென்ன வேலி…கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது…
மங்கை உள்ளம் பொங்கும் போது விலங்குகள் ஏது?
காற்றுக்கென்ன வேலி… கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது…
மங்கை உள்ளம் பொங்கும் போது விலங்குகள் ஏது?
நான் வானிலே…. மேகமாய்… பாடுவேன் பாடல் ஒன்று
நான் பூமியில்… தோகைபோல்…. ஆடுவேன் ஆடல் ஒன்று (2)
கன்றுக்குட்டி துள்ளும்போது, காலில் என்ன கட்டுப்பாடு?
காலம் என்னை வாழ்த்தும்போது, ஆசைக்கென்ன தட்டுப்பாடு?
காற்றுக்கென்ன வேலி… கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது…
மங்கை உள்ளம் பொங்கும் போது விலங்குகள் ஏது?
தேர் கொண்டு வா… தென்றலே… இன்று நான் என்னைக் கண்டேன்!
சீர் கொண்டு வா… சொந்தமே… இன்றுதான் பெண்மை கொண்டேன்! (2)
பிள்ளை பெற்றும் பிள்ளையானேன், பேசிப்பேசிக் கிள்ளையானேன்;
கோவில்விட்டு கோவில் போவேன், குற்றம் என்ன? ஏற்றுக்கொள்வேன்!
காற்றுக்கென்ன வேலி… கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது…
மங்கை உள்ளம் பொங்கும் போது விலங்குகள் ஏது?
.
திரைப்படம்: அவர்கள் (1977) இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியவர்: எஸ்.ஜானகி நடிப்பு: சுஜாதா
$$$