தேசியக் கல்வி – 2

-மகாகவி பாரதி

தேசியக் கல்வி ஏன் அவசியம் என்பதையும் அது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும்  ‘தேசியக் கல்வி’ என்ற கட்டுரையில் எழுதிய மகாகவி பாரதி, அது தொடர்பான சில தனிப்பட்ட குறிப்புகளையும் எழுதி இருக்கிறார், அவை இங்கே  ‘தேசியக் கல்வி- 2’ என்ற தலைப்பில் அளிக்கப்படுகின்றன. கூடவே, தொகுப்பாசிரியர் திரு. பெ.தூரனின் விளக்கமும் இடம் பெறுகிறது…

ஸ்ரீமான் ஜினராஜ தாஸரின் கருத்து

 “கல்வியைப் பற்றிய மூலக் கருத்துக்கள் எல்லா நாடுகளுக்கும் பொது, ஆனால், அந்தக் கொள்கைகளை வெவ்வேறு தேசங்களில் பிரயோகப்படுத்தும்போது இடத்தின் குணங்களுக்கும், ஜனங்களின் குணங்களுக்கும் தக்கபடி கல்வி வழியும் வெவ்வேறாய்ப் பிரிந்து தேசீயமாகி விடுகிறது. இங்கிலாந்தின் கல்வி முறையில் பலவகை விளையாட்டுகளும் சரீரப்பயிற்சி முறைகளும் கட்டாயமாக ஏற்பட்டிருக்கின்றன. இத்தாலியில் அவை புறக்கணிக்கப்படுகின்றன. அங்கு கற்பனா சக்தியும், சிற்பம் முதலிய கலைகளும் தலைமையாகக் கொண்ட கல்வியே பயிற்றப்படுகிறது. இதன் காரணம், இங்கிலாந்தில் பயிர் விளைவு குறைவு; ஆதனால், அநேக ஜனங்கள் வெளித்தேசங்களில் குடியேறி ஜீவனம் செய்தல் அவசியமாகிறது; அதற்குரிய குணங்களை ஆங்கிலக் கல்வி முக்கியமாகக் கருதுகிறது. அமெரிக்காவில், ஜனாதிகாரமே மேலான ராஜ்ய தர்மமென்றும், எத்தனை பெரிய ஏழையும் எத்தனை பெரிய செல்வனும் தம்முள் ஸமமேயன்றி அவர்களில் ஏற்றத்தாழ்வு கிடையாதென்றும், பிறரைச் சார்ந்து நிற்காமல் தன்மதிப்புடன் பிழைக்கத்தகுந்த கூலி தரும் எவ்விதமான கைத்தொழிலிலும் அவமானத்துக்கு இடமில்லையென்றும் பாடசாலைகளில் முக்கிய போதனையாகக் கற்பிக்கிறார்கள். இந்தியாவில் மாத்திரம் சுதேசீயக் கல்வி இல்லை. இந்நாட்டுக் கல்வி முழுதும் பிரிட்டிஷ் குணமுடையதாக இருக்கிறது. ஒரு வாரத்தில் இரண்டு மூன்று மணிநேரம் ஹிந்துதேச சரித்திரமும் தேசபாஷைகளும் கற்றுக்கொடுத்தால் போதாது. அதினின்றும் சுதேசீய ஞானம் ஏற்படாது. சென்னையில் ‘பிரெஸிடென்ஸி காலெஜ்’ என்று சொல்லப்படும் மாகாணக் கலாசாலையின் கட்டடம் நமது தேசமுறையைத் தழுவியதன்று. பழைய இத்தாலி வழியொன்றை அனுஸரித்தது. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்ட் கேம்பிரிட்ஜ் ஸங்கங்களின் கட்டிடம் இத்தாலி முறையிலா கட்டியிருக்கிறார்கள்? அதுபோலவே, பாரததேச முறைமைப்படி கட்டிய கட்டிடங்களில் கற்றுக்கொடுக்காத கல்வி இங்கு சுதேசீயக் கல்வி என்று சொல்லத்தகுந்த யோக்யதை பெறாது.”

இது ஜினராஜதாஸர் சில தினங்களின் முன்பு சென்னைப் பத்திரிகைகளில் பிரசுரம் செய்திருக்கும் ஒரு வ்யாஸத்தின் ஸாரமாம். இதில் கடைசி அம்சம் மிகவும் கவனிக்கத் தகுந்தது. நமது தேசத்து முறைமைப்படி கட்டிய கட்டிடத்திலேயன்றிப் பிறநாட்டு முறை பற்றிக் கட்டிய மனைகளிலேகூட தேசீயக்கல்வி பயிற்றுதல் ஸாத்யமில்லையானால், ஓஹோ, பாஷை விஷயத்தை என்னென்று சொல்வோம்! தமிழ்நாட்டில் தேசீயக்கல்வி கற்பிக்க வேண்டுமானால், அதற்குத் தமிழே தனிக் கருவியாக ஏற்படுத்த வேண்டுமென்பதைச் சொல்லவும் வேண்டுமா?

தமிழ்நாட்டுப் பெண்கள்

தமிழ்நாட்டு ஸ்திரீகளையும் சேர்த்துக் கொண்டு, அவர்களுடைய யோசனைகளையும் தழுவி நடத்தாவிடின் அக்கல்வி சுதேசீயம் ஆக மாட்டாது. தமிழ்க் கல்விக்கும் தமிழ்க் கலைகளுக்கும் தொழில்களுக்கும் தமிழ் ஸ்திரீகளே விளக்குகளாவர். தமிழ்க்கோயில், தமிழரசு, தமிழ்க்கவிதை, தமிழ்த் தொழில் முதலியவற்றுக்கெல்லாம் துணையாகவும் தூண்டுதலாகவும் நிற்பது தமிழ் மாதரன்றோ? இப்போது ஸ்ரீமதி அனிபெஸண்ட் தம்முடன் திலகர் ரவீந்த்ரநாதர் முதலிய மஹான்கள் பலரையும் சேர்த்துக்கொண்டு மீளவும் எழுப்பியிருக்கும் தேசீயக்கல்வி முயற்சியில் ஏற்கெனவே நீதிபதி ஸதாசிவ அய்யர், பத்தினி ஸ்ரீமதி மங்களாம்பாள் முதலிய ஓரிரண்டு ஹிந்து ஸ்த்ரீகள் ஸ்ர்வ கலா ஸங்கத்தின் ஆட்சிமண்டலத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இது போதாது. தேசியக் கல்வியின் தமிழ்நாட்டுக் கிளையென ஒரு கிளை ஏற்பட வேண்டும். அதன் ஆட்சிமண்டலத்தில் பாதி தொகைக்குக் குறையாமல் தமிழ் ஸ்த்ரீகள் கலந்திருக்க வேண்டும். ஒரு பெரிய ஸர்வ கலா ஸங்கத்தின் ஆட்சிமண்டலத்தில் கலந்து தொழில் செய்யத்தக்க கல்விப் பயிற்சியும் லெளகிக ஞானமும் உடைய ஸ்த்ரீகள் இப்போது தமிழ்நாட்டில் பலர் இலர் என ஆக்ஷேபங் கூறுதல் பொருந்தாது. தமிழ்நாடு முழுதுந் தேடிப்பார்த்தால் ஸ்ரீமதி மங்களாம்பாளைப் போல இன்னும் பத்து ஸ்த்ரீகள் அகப்பட மாட்டார்கள் என்று நினைக்க ஹேதுவில்லை. எதற்கும் மேற்படி ஆட்சி மண்டலம் சமைத்து, அதில பத்துப் பெண்களைக் கூட்டி, நடத்த வேண்டிய காரியங்களைப் பச்சைத் தமிழில் அவர்களிடம் கூறினால், அதினின்றும் அவர்கள் பயன்படத்தக்க பல உதவி யோசனைகளையும், ஆண்மக்கள் புத்திக்குப் புலப்பட வழியில்லாத புது ஞானங்களையும் சமைத்துக் கொடுப்பார்கள் என்பதில் ஸந்தேஹமில்லை. முன்பு தமிழ்நாட்டை மங்கம்மா ஆளவில்லையோ? ஒளவையார் உலக முழுவதும் கண்டு வியக்கத்தக்க நீதி நூல்கள் சமைக்கவில்லையோ?

மீர்ஜா ஸமி உல்லா பேக்

முன்பு முகம்மதிய ஸர்வ கலா ஸங்கம் ஸ்தாபிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுந்த முயற்சியில் தலைவர்களில் ஒருவராக உழைத்த மீர்ஜா ஸமி உல்லா பேக், “ஜாதி மத பேதங்களால் சிதைந்து போயிருப்பதால், பாரத தேசத்தார் மேலே எழ மாட்டார்களென்று பிறர் கூறும் அவலச் சொல்லை நீங்கள் கேட்காதிருக்க வேண்டினால், மேலும் ஸ்வராஜ்யத்துக்குத் தகுதியுடையோராக உங்களைக் காட்டிக்கொள்ள விரும்பினால், தேசீயக் கல்விக்குத் துணை செய்யுங்கள். இந்தத் தருணம் தவறினால், இனி வேறு தருணம் இப்படி வாய்க்காது” என்கிறார்.

தேசீயக் கல்வியும் ஸ்வராஜ்யமும் தம்முள்ளே பிரிவு செய்யத் தகாதன என்றும், இவ்விரண்டினுள் ஒன்றன் அவசியத்தை அங்கீகாரம் செய்துகொள்ள வேண்டும் என்றும் அரவிந்த கோஷ் சொல்லியதும் மேற்படி ஸமி உல்லா சொல்வதும் பொருத்தமாகவே காணப்படுகின்றன. எந்த வினைக்கும் காலம் ஒத்து நின்றாலொழிய அதை நிறைவேற்றுதல் மனிதனுக்கு ஸாத்தியமில்லை. விதியின் வலிமை சாலவும் பெரிது. ஆனால் விதி இப்போது தேசீயக்கல்வி முயற்சிக்கு அநுகூலமான காலத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்ற செய்தியை மீர்ஜா ஸமி உல்லா நம் நாட்டாருக்கு நினைப்பூட்டுகிறார். 

‘காளயுக்தி’ என்பது காலயுக்தி; அதாவது காலப் பொருத்தம். காலம் இந்த வர்ஷத் தொடக்கத்தில் எந்தப் பெருஞ் செயலுக்கும் மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது.

பகவத் கீதையில் துர்க்காஸ்துதி முதலிய சில அம்சங்கள் சேர்ந்தும், ஹம்ஸ யோகி என்பவரின் ‘கீதா ரஹஸ்யம்’ என்னும் உரைநூலில் கூறப்பட்டதைத் தழுவி 18 அத்யாயக் கணக்கை 24 அத்யாயமாக மாற்றியும், சென்னை சுத்த தர்ம மண்டலத்தார் ஒரு புதிய பதிப்புப் போட்டிருக்கிறார்கள். 

இதற்கு நீதி நிபுண மணி அய்யர் ஒரு முகவுரை எழுதியிருக்கிறார். அந்த முகவுரையில் சக்தி தர்மத்தை மிகவும் உயர்த்திக் கொண்டாடுகிறார். 

இப்படிப்பட்ட மணி அய்யரும் அனி பெஸண்ட் அம்மையும் கலந்து நடத்தும் தேசீயக்கல்வி முயற்சியில் பெண்களின் ஆதிக்கம் மேன்மேலும் ஓங்கி வளரும் என்பது சொல்லாமலே விளங்கும். 

மேற்பதிப்பின் முதல் ஏட்டின் முதுகுப் புறத்தின் தலைப்பில் ‘ஓம் நம; ஸ்ரீ பாமர்ஷிப்யோ யோகிப்ய: (யோகிகளாகிய தலைமை முனிவரைப் போற்றுகிறோம் ஓம்) என்று அச்சிட்டு, அடியில், 

“ஸ்ரீம்; ஶ்ரைம்; ஶ்ரைம்; ஓம் –தாஸ”:

என்ற மந்திரங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. 

இம்மந்திரங்களின் பொருள் யாதெனில்-

ஸ்ரீம் – லக்ஷ்மியை

(ஸ்ரீ, திரு, என்றவை ஒரு மொழியின் வடிவங்கள்)

ஶ்ரைம் – ஆச்ரயிக்கிறேன், சார்ந்து நிற்கிறேன்;

ஆதலால்,

ஶ்ரைம் – அசைகிறேன்,

ஓம் – ப்ரணவப் = ப்ர+நவம்= மேன்மேலும் புதியநிலை; 

எப்போதும் க்ஷணந்தோறும் புதிய புதிய உயிருடன் என்றும் அழியாத அமிர்த நிலை பெற்று விளங்குவேன். 

தாஸ:=அடியேன்.

இப்பொருளுடைய மந்திரங்களை துர்க்காஸ்துதி சேர்ந்த கீதைப் பதிப்புடன் ஆரம்பத்திலே போட்டது மிகவும் பொருத்த முடைய செய்கையேயாம். 

மஹா சக்தியே தாய் அல்லது மனைவி வடிவத்தில் மனிதன் உயிருக்குத் துணைபுரிகிறாள். ஆதலால் பெண்ணை ஆச்ரயித்த வாழ்க்கையே தேவவாழ்க்கை. “வந்தே மாதரம்” என்பதும், “ஓம் ஸ்ரீம்” என்பனவும் நம்முடைய தேசக் கல்விச் சாலைகளின் வாயிற்கதவுகளிலும் கொடிகளிலும் பொறிக்கத்தக்க மந்திரங்களாம்.

மேலும் அந்த பதிப்பின் மூன்றாம் ஏட்டின் முதுகுப் புறத்தைத் திருப்பினால், அதில், நான்கு குதிரைகள் பூட்டிய தேரைக் கண்ணன் நடத்த, அதில் அர்ஜுனன் வீற்றிருப்பதைப் போல் சித்திரம் வரையப்பட்டிருக்கிறது; இஃது ஆண் மக்கள் ஒருவருக்கொருவர் நட்புச் செலுத்த வேண்டிய நெறியைக் காட்டுவது. 

ஆண்மக்கள் இருவர் பரஸ்பரம் எங்ஙனம் *பாவனை* செய்ய வேண்டும்? நர நாராயணரைப்போலே, நீ உனது மித்திரனைக் கண்ணனாகவும், உன்னைப் பார்த்தனாகவும், அவன் உன்னைக் கண்ணனாகவும், தன்னைப் பார்த்தனாகவும் உணர்ந்து கொள்ள வேண்டிய நெறி மேற்படி மந்திரங்களாலும் சித்திரத்தாலும் குறிக்கப்படுவது. 

இந்த நெறி தேசியக் கல்விச் சாலைகளில் கற்பிக்கும் விஷயங்களுள் ஒன்றாகக் கற்பிக்கப்பட வேண்டும்.

ஹிந்து முஹம்மதிய ஸமரஸம்             

தேசியக் கல்வியின் முஹம்மதியர் எத்தனைக்கெத்தனை சேர்ந்துழைக்கிறார்களோ, அத்தனைக் கத்தனை அம் முயற்சி அதிகப் பயன் அடையும். மத பேதங்களை வ்யாஜமாகக் காட்டி ஹிந்து முஹம்மதியர் ராஜரீக முதலிய பொது விஷயங்களிலும் கூடியுழைக்காமல் தடுக்க வேண்டும் என்று ஆங்கிலோ- இந்திய பத்திராதிபர் முதலிய பொதுச் சத்துருக்கள் செய்த தீய முயற்சிகளெல்லாம் விழலாய்விட்டன. மஹான் முஹம்மது ஆலி, அவர் அண்ணன் ஷெளகத் ஆலி, ஸேட் யாகுப் ஹுஸேன், பெரிய ஜினா, மஹமதாபாத் ராஜா முதலிய மேலோர்களின் ப்ரயத்னத்தால் ஹிந்து முஹம்மதியர் அண்ணன் தம்பிகளென்பது தென் அமெரிக்காக் கண்டத்தாருக்குக்கூட ஸம்சயம் ஏற்பட இடமில்லாமல் பசுமரத்தில் அடிக்கப்பட்ட ஆணி போல் நிலைநிறுத்தப்பட்டு விட்டது. 

மேலும் இந்தியாவிலுள்ள முஸல்மான்களில் பலர் ஹிந்து ஸந்ததியார். அவர்களுடைய நெஞ்சில் ஹிந்து ரத்தம் புடைக்கிறது. இங்ஙன மில்லாமல் வெறும் *பிரட்டாணிய* அராபிய பாரஸீக மொகாலய ஸந்ததியாக இருப்போரும் இந்த தேசத்தில் ஆயிர வருஷங்களுக்கு மேலாக வாழ்வதால், ஹிந்து ஜாதியாராகவே கருதத்தக்கவர் ஆவர். எங்ஙனமெனில், ஜப்பானில் பிறந்தவன் ஜப்பானியன்; சீனத்தில் பிறந்தவன் சீனன். ஹிந்து தேசத்தில் பிறந்தவன் ஹிந்து; இதர தேசங்களில் தேச எல்லையே ஜாதி எல்லையாகக் காணப்படுகிறது; இந்த நாட்டிலும் அதே மாதிரி ஏன் செய்யக்கூடாது?

இந்தியா, இந்து, ஹிந்து மூன்றும் ஒரே சொல்லின் திரிபுகள். இந்தியாவில் பிறந்தவன் இந்திய ஜாதி அல்லது ஹிந்துஜாதி. 

(2) கிறிஸ்தவர்

தேசீயக் கல்வி முயற்சிகளில் சேரக்கூடாதென்று ஒரு சில மூடப் பாதிரிகள் சொல்லக்கூடும். அதை ஹிந்துக் கிறிஸ்தவர் கவனிக்கக் கூடாது. தேசீயக் கல்வியில்,  ரிக்வேதமும், குரானும், பைபிலும் ஸமானம். கிறிஸ்து, கிருஷ்ணன் என்பது பர்யாய நாமங்கள். வங்காளத்தில் ஹிந்துக்கள் கிருஷ்ணதாஸ பாலன் என்று சொல்வதற்குக் கிறிஸ்தோதாஸ் பால் என்று சொல்கிறார்கள். 

(3) மனுஷ்யத்தன்மை

ஆங்கிலேயர், பிராமணர், ஆஸ்திரேலியாவில் முந்தி வேட்டைகளில் அழிக்கப்பட்ட புதர்ச்சாதியார் (Bushmen) – எல்லாரும் பொதுவில் ‘மனிதர் ஆதாம் ஏவாவழியில் பிறந்தவர்கள்’ என்று கூறி, முஹம்மதியக் கிறிஸ்தவ வேதங்கள் ‘மனிதர் எல்லோரும் ஒன்று’ என்பதை உணர்த்துகின்றன. மஹாபாரதத்தில், மனிதர் தேவர், புட்கள், பாம்புகள் எல்லோருமே காச்யப ப்ராஜபதியின் மக்களாதலால் ஒரே குலத்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

வேதாந்த சாஸ்த்ரமோ, பிராமணர், நாயர், முதலை, கரடி, வெங்காயப்பூண்டு முதலிய ஸகல ஜீவன்களும் பரமாத்மாவின் அம்சங்களே யன்றி வேறல்ல என்று பல நூற்றாண்டுகளாகப் பறையறைந்துகொண்டு வருகிறது. 

ஆதலால், தேசீயக்கல்வி முயற்சியில் ஜாதிமத வர்ணபேதங்களை கவனிக்கக் கூடாதென்று அரவிந்த கோஷ், திலக், அனி பெஸண்ட் முதலியவர்கள் சொல்லுவதை இந்த நாட்டில் எந்த ஜாதியாரும், எந்த மதஸ்தரும், எந்த நிறத்தையுடையவரும் மறுக்க மாட்டார்களென்று நம்புகிறேன். 

அனாவசியமான தண்டத்திற்கெல்லாம் தமிழர் பணத்தை வாரி இறைக்கிறார்கள். கான்பரன்ஸ் என்றும், மீட்டிங் என்றும் கூட்டங்கள் கூடி விடிய விடிய வார்த்தை சொல்லுகிறார்கள். கிராமங்கள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போடுவதற்கு யாதொரு வழியும் செய்யாமல் இருக்கிறார்களே! படிப்பில்லாத ஜனங்கள் மிருகங்களுக்குச் சமானமென்று திருவள்ளுவர் பச்சைத் தமிழிலே சொல்லுகிறார். நமக்குள் எத்தனையோ புத்திமான்கள் இருந்தும், நம்மிலே முக்காற் பங்குக்கு மேலே மிருகங்களாக இருக்கும் அவமானத்தைத் தீர்க்க ஒருவழி பிறக்கவில்லையே! ஏன்? எதனாலே? காரணந்தான் என்ன?

‘காள யுக்தி’

காளயுக்தி என்பது கால யுக்தி; அதாவது, காலத்தின் பொருத்தம்; காலம் இந்த வருஷத்தின் ஆரம்பத்தில் எந்தப் பெருஞ் செயல்களுக்கும் மிகவும் பொருத்தமாகச் சமைந்திருக்கிறது.

தேசீயக் கல்வி, மனுஷ்யஜாதியின் விடுதலை, இவ்விரண்டு பெருங் காரியங்களைத் தொடங்குவதற்கும் இப்போது காலம் மிகவும் பொருத்தமாக வாய்த்திருக்கிறது.

இவற்றுள் மனுஷ்யஜாதியின் விடுதலை நிறவேற வேண்டுமாயின் அதற்கு பாரத தேசத்தின் விடுதலை இன்றியமையாத மூலாதாரமாகும். 

இங்ஙனம் பாரத தேசம் விடுதலை பெற வேண்டுமாயின் அதற்கு தேசீயக் கல்வியே ஆதாரம்.

“அ….. ன்”

மேலே காட்டிய குறியின் பொருள் யாது?

தமிழ்நாட்டில் தேசீயக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா வ்யவஹாரங்களும் தமிழ் பாஷையில் நடத்த வேண்டும் என்பது பொருள்.

ஆரம்ப விளம்பரம் தமிழில் ப்ரசுரம் செய்ய வேண்டும். பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டால், அங்கு நூல்களெல்லாம் தமிழ் மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும்; ‘ஸ்லேட்’ ‘பென்ஸில்’ என்று சொல்லக் கூடாது.

$$$

பாரதியின் தேசீயக் கல்வி சிந்தனை

-ம.ப.பெரியசாமித் தூரன்

தேசீயக்கல்வி கட்டுரைகளைத் தொகுத்து அளித்த தொகுப்பாசிரியர் திரு. ம.ப.பெ.தூரன் அவர்களின் விளக்கக் குறிப்பு:

இக்கட்டுரை ஐந்து பகுதிகளாக 1920 மே மாதம் 13, 18, 20, 21, 28  என்ற தேதிகளில், சுதேசமித்திரனில் வெளியாகியுள்ளது. இவற்றைத் தொகுத்து ஒரே கட்டுரையாக சமூகம் என்ற பகுதியில் பாரதி பிரசுராலயத்தார் வெளியிட்டுள்ளார்கள். ஸ்ரீமான் ஜினராஜ தாஸரின் கருத்தையும், வேறு சில பகுதிகளையும் இக்கட்டுரையின் இரண்டாம் பாகமாகவும் தந்துள்ளார்கள். இதில் ஒரு சிலவற்றைப் பொருந்தாத முறையிலும் பதிப்பித்துள்ளனர். ஒரு பகுதியை மட்டும் நீக்கிவிட்டு, அப்படியே இங்கு சேர்த்துள்ளேன்.

ஆனால், சுதேசமித்திரனில் வெளியானதைவிட, இதில் சற்று விரிவாகவே இருக்கிறது.

தேசீயக்கல்வி (2) என்ற பகுதியும் புதிதாகச் சேர்ந்துள்ளது. என்ன காரணம் பற்றி இதைச் சேர்த்தார்கள் என்பதை அறிய வழியில்லை. 

பாரதியார் புதுச்சேரியை விட்டு மீண்டும் அன்றைய தமிழகத்திற்கு வந்துவிட்டார். ஆனால் 1920ஆம் ஆண்டு நவம்பர் மாத மத்தியில்தான் மித்திரனில் இரண்டாம் முறையாகச் சேர்ந்தார் என்று ஊஹிக்க முடிகிறது. தேதி திட்டமாகத் தெரியவில்லை.

தேசீயக்கல்வி என்ற கட்டுரையோ மே மாதத்தில் வெளியாகியுள்ளது. அது சமயம் பாரதியார் கடயத்திலிருந்துகொண்டு பலவித முயற்சிகள் செய்கின்றார். தமது நூல்களை வெளியிடுவதற்குப் பெரியதொரு திட்டம் வகுக்கிறார். அமிர்தம் என்ற பெயரில் ஒரு பத்திரிகை நடத்தவும் விரும்புகிறார். ஆனால் அவருக்குப் பொருள் உதவி செய்ய மக்கள் முன்வரவில்லை என்பது வருந்தத்தக்கது.

ஆனால், பாரதியார் தமது எழுத்துப் பணியை நிறுத்தவில்லை; சோர்வடையவில்லை.

இந்த நேரத்தில் எழுதியதே இக்கட்டுரை என்று கருதலாம். 

இக்கட்டுரை சிந்தித்தற்குரியது. தேசீயக் கல்வி எவ்வாறு அமைய வேண்டும் என்று பாரதியார் விரும்பினார் என்பதை இதில் அறிகிறோம். 

முதலாவது தேசீயக் கல்வியென்றால் அது தாய்மொழியில் அமைய வேண்டும். 

அப்படியில்லாவிட்டால் அது தேசீயக் கல்வியாக மாட்டாது.

ஸ்லேட், பென்சில் என்பவற்றிற்குக்கூடத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்பது அவர் எண்ணம். இக்காலத்தில் உருவாகிப் பழக்கத்திற்கு வந்துள்ள கலைச்சொற்கள் அன்றி இருந்திருந்தால் நிச்சயம் அவற்றையே கையாண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.

ஆசிரியருக்குக் குறைந்தது 30 ரூபாய் சம்பளம் என்று அவர் கூறுவது அக்காலத்திற்குப் பொருந்தியதேயன்றி, எக்காலத்திற்கும் அவர் சம்பளம் நிர்ணயம் செய்யவில்லை.

இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் இக்கல்வித்திட்டத்தை முழுமனதுடன் ஆதரிக்க வேண்டும் என்று பாரதியார் விழைகின்றார். அவர்களுக்குத் தனியாக அவரவர் மதம் போதிக்கப்படும் என்று உறுதி கூறுகிறார். இதில் எவ்விதமான குழப்பமும் உண்டாக நியாயமில்லை. அவர் எழுதியுள்ளதைக் கவனியுங்கள் – முக்கியமான குறிப்பு:- ஹிந்துக்களல்லாத பிள்ளைகள் இப்பாடசாலைகளில் சேர்ந்தால், அவரவர் மதக் கொள்கைகளை அன்னியமத தூஷணையின்றி பெருந்தன்மையாகக் கற்றுக் கொடுப்பதற்குரியன செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறியிருந்தாலும், மற்ற சமயத்தவர்களுக்குத் தேசீயப் பாடத்திட்டத்தில் ஹிந்து சமயத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. 

இதை அடிப்படையாகக்கொண்டு பலருக்கும் ஏற்றவாறு பாடத்திட்டத்தை உருவாக்க முடியும். பாரதியார் வழங்கியுள்ள தேசீயக் கல்வித்திட்டம் ஆழ்ந்து கவனத்தில் கொள்ளத்தக்கது. இந்தியப் பண்பாட்டை நன்குணர வழிசெய்வது. தேசீய ஒருமைப்பாட்டை உண்டாக்கவல்லது. “தேசீயக் கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தை தேசமென்று சொல்லுதல் தகாது. அது  மனிதப் பிசாசுகள் கூடி வாழும் விஸ்தாரமான சுடுகாடேயாம்” எவ்வளவு அழுத்தமாகப் பாரதியார் கூறியுள்ளார் பார்த்தீர்களா!

இவருடைய கல்வித்திட்டம் மாற்றத்திற்குரியதேயாகும். யாரும் என்றைக்கும் பொருந்திய திட்டத்தை வகுக்க முடியாது. இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமே முக்கியம். எளிய தமிழில் சொல்லித் தரவேண்டும், இயன்ற இடத்திலெல்லாம் தமிழ்ப்பெயர்களை வழங்கவேண்டும், என்றும் அவர் கூறியுள்ளதை நன்கு மனத்திற் கொள்ளவேண்டும். அன்று பாரதியாருக்குக் கிடைத்த சொற்களைப் பயன்படுத்தியுள்ளதையும் நோக்க வேண்டும்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s