-மகாகவி பாரதி
பாஞ்சாலி சபதத்தின் இரண்டாம் பாகத்தில், சபதச் சருக்கம் தொடங்குகிறது. அண்ணன் துரியோதனனின் ஆணையைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் செல்கிறான் துச்சாதனன். அவனை மகாகவி பாரதி “இவன் தீமையில் அண்ணனை வென்றவன்” என்று வர்ணிக்கிறார். பாஞ்சாலி இருப்பிடம் சென்று அவளை இழுத்து வர முயல்கிறான் துச்சன்.

இரண்டாம் பாகம்
2.3. சபதச் சருக்கம்
2.3.1. துச்சாதனன் திரௌபதியைச் சபைக்குக் கொணர்தல்
இவ்வுரை கேட்டதுச் சாதனன் – அண்ணன்
இச்சையை மெச்சி எழுந்தனன். – இவன்
செவ்வி சிறிது புகலுவோம். – இவன்
தீமையில் அண்ணனை வென்றவன்; – கல்வி
எவ்வள வேனுமி லாதவன்; – கள்ளும்
ஈரக் கறியும் விரும்புவோன்; – பிற
தெவ்வர் இவன்றனை அஞ்சுவார்; – தன்னைச்
சேர்ந்தவர் பேயென் றொதுங்குவார்; 60
புத்தி விவேகமில் லாதவன்; – புலி
போல உடல்வலி கொண்டவன்; – கரை
தத்தி வழியுஞ் செருக்கினால் – கள்ளின்
சார்பின்றி யேவெறி சான்றவன்; – அவ
சக்தி வழிபற்றி நின்றவன்; – சிவ
சக்தி நெறிஉண ராதவன்; – இன்பம்
நத்தி மறங்கள் இழைப்பவன்; – என்றும்
நல்லவர் கேண்மை விலக்கினோன்; 61
அண்ண னொருவனை யன்றியே – புவி
அத்தனைக் குந்தலை யாயினோம் – என்னும்
எண்ணந் தனதிடைக் கொண்டவன்; – அண்ணன்
ஏது சொன்னாலும் மறுத்திடான்; – அருட்
கண்ணழி வெய்திய பாதகன் – ‘அந்தக்
காரிகை தன்னை அழைத்துவா’ என்றவ்
வண்ண னுரைத்திடல் கேட்டனன்; – நல்ல
தாமென் றுறுமி எழுந்தனன். 62
பாண்டவர் தேவி யிருந்ததோர் – மணிப்
பைங்கதிர் மாளிகை சார்ந்தனன்; – அங்கு
நீண்ட துயரில் குலைந்துபோய் – நின்ற
நேரிழை மாதினைக் கண்டனன்; – அவள்
தீண்டலை யெண்ணி ஒதுங்கினாள்; – ‘அடி,
செல்வ தெங்கே’யென் றிரைந்திட்டான். – ‘இவன்
ஆண்டகை யற்ற புலைய’னென்று – அவள்
அச்ச மிலாதெதிர் நோக்கியே, 63
$$$