ஸ்வதந்திர கர்ஜனை- 2(21)

-தஞ்சை வெ.கோபாலன்

பகுதி: 2.20

கோவை என்.ஜி.ராமசாமி

பாகம்-2: பகுதி 21

பற்றி எரிந்தது நாடு


இதென்ன கொடுமை! காங்கிரஸ் மகாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்கள், அதில் ‘இத்தனை ஆண்டுகாலம் இந்த நாட்டைச் சுரண்டிய அன்னியனே நீ வெளியேறு’ என்று குரல் கொடுத்தார்கள்.

முடிந்தால் உடனே கப்பல் ஏறியிருக்க வேண்டும், அல்லது உங்களோடு ஒட்டும் உறவும் வைத்துக்கொண்டு ஆட்சியை உங்களிடம் தந்துவிடுகிறோம் என்று சமாதானமாகப் போயிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் இந்த மண்ணில் வந்து தங்கிக் கொண்டு, இந்த மண்ணின் மைந்தர்களைக் கண்மூடித்தனமாக தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும், சிறையில் அடைத்தும் கொடுமை செய்யும் அளவுக்கு உனக்குத் துணிச்சலா? நாங்கள் பாரதத்தின் மைந்தர்கள், என்று வீறுகொண்டு எழுந்தனர் இந்திய நாட்டு மக்கள்.

இதுநாள் வரை ஒவ்வொரு ஊரிலும் காங்கிரஸ்காரர்கள் தலையில் தொப்பி, மேலே கதராடை, கையில் ராட்டை போட்ட காங்கிரஸ் கொடி இவற்றோடு அணிவகுத்துச் சென்று,  “மகாத்மா காந்திக்கு ஜே!”, “பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு ஜே!”, “வந்தேமாதரம்!” என்றெல்லாம் கோஷமிட்டுக் கொண்டு தெருவோடு போவார்கள்.

எங்காவது கள்ளுக்கடை, அன்னிய துணிக்கடை போன்ற இடங்களில் மறியல் செய்து கைதாகி சிறைக்குச் செல்வார்கள். போலீஸ்காரர்கள் கலைந்து செல்லும்படி சொன்னாலும் போகாமல் அங்கேயே இருந்து அவர்களிடம் தடியடியும், துப்பாக்கிச் சூடும் வாங்கி ரத்தம் சிந்தி உயிரை விடுவார்கள்.

மற்றவர்கள், ஊரிலுள்ள மக்கள் இவற்றைப் பெரும்பாலும் வேடிக்கை பார்த்துவிட்டு,  பாவம் இந்த காங்கிரஸ்காரத் தொண்டர்கள். என்ன அடி, என்ன அடி! போலீசாரின் அடியை எப்படித் தான் தாங்கிக் கொள்கிறார்களோ?  என்ன வேண்டுமாம் இவர்களுக்கு, சுதந்திரமா? இப்போ என்ன கெட்டுப் போய்விட்டது? எதற்கு சுதந்திரம்? இப்படியெல்லாம் அடியும் உதையும் வாங்கி சுதந்திரம் வாங்கி என்ன தான் செய்யப் போகிறார்களாம்? காந்தியும் நேருவும் வெள்ளைக்காரர்கள் மாதிரி இந்த நாட்டை ஆளமுடியுமா? வெள்ளைக்காரன் ரயிலைக் கொண்டு வந்தான், தந்தி கொண்டுவந்தான். சாலைகளையும் பாலங்களையும் கட்டித்தந்தான், அவனை ஏன் போகச் சொல்லவேண்டும்? என்று உபதேசம் செய்த சில பரம தேசபக்தர்களும் அப்போது இருந்தார்கள்.

அப்படிப்பட்ட நிலை இன்று முதன்முறையாக மாறி, யாரைப் பார்த்து இந்த மக்கள் கேலி பேசினார்களோ அந்த காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் அடிபட்டு சிறைபட்டுக் கிடக்கும் நேரத்தில் பொங்கி எழுந்தார்கள்.

இந்திய சுதந்திரப் போர் ‘பிரெஞ்சுப் புரட்சி’யைப் போன்றோ அல்லது ‘ரஷ்யப் புரட்சி’யைப் போன்றோ பலாத்கார வழியில் வரவில்லை. 1942 ஆகஸ்ட் 9-ஆம் தேதி தொடங்கி இந்த புண்ணிய பாரத தேசம் முழுவதும் நடந்த கலவரங்கள், ரத்தம் சிந்தியது இதெல்லாம் ஒரு வெகுஜனப் புரட்சி இல்லையா?

ஆம் ஆகஸ்ட் புரட்சி என்பது காங்கிரஸ் தொண்டர்கள் வழக்கமாகச் செய்யும் அமைதிப் போராட்டமல்ல. மக்கள் களத்தில் இறங்கி தாங்களே முன்னின்று நடத்திய ஒரு யுகப் புரட்சி.

வெள்ளைக்காரர்களுக்கு இந்தப் போராட்டம் தான் புரிந்தது. தங்களால் ஆன மட்டும் இந்தப் புரட்சியைத் தடுத்துவிட எல்லா வழிமுறைகளையும், அடக்குமுறைகளையும் கையாண்டார்கள். புற்றீசல் போல வெகுண்டு எழுந்த இந்திய மக்களின் தேசாவேசத்தை ஆங்கில போலீசாரின் குண்டாந்தடிகளும் துப்பாக்கிகளும் அடக்க முடியவில்லை என்பது இறுதி முடிவு, உலகுக்குப் பறை சாற்றியது.

எங்கெங்கு பார்த்தாலும் ஊர்வலங்கள், கடையடைப்பு, பொதுக்கூட்டங்கள், போலீஸ் அடக்குமுறை. அஞ்சலகங்கள் தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டன. தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டு தொலைதொடர்புகள் துண்டிக்கப்பட்டன. ஆங்காங்கே ரயில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. இதெல்லாம் விளைவுகளை எண்ணி, இது சரியா தவறா என்று சிந்தித்துச் செய்யும் காரியங்களா என்ன? உணர்ச்சிவசப்பட்ட கூட்டத்தின் ஆவேசம் அப்படிப்பட்டது.

காந்திஜியின் நவஜீவன் அச்சகத்தினுள் போலீஸ் நுழைந்து 1933 முதல் வெளியான  ‘ஹரிஜன்’ பத்திரிகைகளின் கட்டுகளைக் கைப்பற்றி தீவைத்துக் கொளுத்தினர். அங்கு இருந்த அச்சு அடிக்கும் இயந்திரங்களை அடித்து நொறுக்கினர்.

இந்தச் செய்தி அறிந்த மக்கள் கொதித்துப் போனார்கள். காந்தியடிகள் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்ய வேண்டும் என்பார். வெறி கொண்ட மக்கள் கூட்டம் இதுமாதிரியான நேரங்களில் பொறுமை காக்குமா என்ன? காந்திஜி சொன்னது சரி தான், ஆனால் இந்த வெள்ளைக்காரர்களுக்கு அவர்கள் பாஷையிலேயே சொன்னால் தானே புரிகிறது? என்றனர் மக்கள்.

அப்போது தேச விடுதலை இயக்கத்தில் இருந்தவர்கள் அனைவருமே அகிம்சாவாதிகள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் காந்தியடிகள் எனும் பெரும் சக்திக்குக் கட்டுப்பட்டுத் தங்கள் கை, கால்களைக் கட்டி வைத்திருந்தனர். அப்படிப்பட்டவர்கள் இந்தச் சூழ்நிலையில் கொதித்து எழுந்தபோது, அவர்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, தான் உண்ணாவிரதம் இருப்பேன், வன்முறை கூடாது என்றெல்லாம் சொல்லி அடக்கி வைக்க காந்தி இல்லையே; சிறையில் அல்லவா தவம் செய்து கொண்டிருக்கிறார்?  அப்புறம் அமைதி எப்படி வெளியே நிலவும்?

பெயர் சொல்லக்கூடிய எந்தத் தலைவராலும் தொண்டர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் எங்கெங்கோ கண்காணாத சிறைகளில் அடைக்கப்பட்டு விட்டனர். இவற்றையெல்லாம் சிறையில் இருந்த காந்தியடிகள் பார்த்தார். 14-8-1942, அதாவது அவர் கைதான ஐந்தாம் நாள் கவர்னர் ஜெனரல் லார்டு லின்லித்கோவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில் அவர்,   “நாங்கள் தீர்மானம் மட்டுமே நிறைவேற்றியிருக்கிறோம். அதை நடைமுறைப்படுத்த என்ன செய்யலாம், எப்போது எப்படி செய்யலாம் என்பதெல்லாம் முடிவாகாத நிலையில் நீங்கள் அவசரப்பட்டு அடக்குமுறையில் இறங்கிவிட்டீர்கள். அப்படியில்லாமல் எங்களுக்குச் சிறிது அவகாசம் கொடுத்திருப்பீர்களானால் இதுபோன்றதொரு நிலைமை வராமல் தடுத்திருக்க முடியும்”  என்று சொல்லியிருந்தார்.

காந்திஜி இப்படிச் சொன்ன வழியில் ஆங்கிலேயர்கள் பொறுத்திருந்து நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்றதொரு கட்டுப்பாடற்ற கலகம் நிகழ்ந்திருக்காது. சுதந்திரமும் வேகமாக வந்திருக்காது என கருதுவோரும் உண்டு.

ஆக, ஒரு வகையில் ஆங்கில அரசின் அவசரமும், ஆத்திரமும், இந்தியர்களை அடக்கி ஆண்டுவிடலாம் என்ற ஆணவமும் அடக்குமுறையும் சுதந்திரத்தை விரைவு படுத்திவிட்டது என்பது தான் உண்மை.

1919-இல் தொடங்கி 1942 வரை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காந்திஜியின் குரலைக் கேட்டார்கள்; ஜவஹர்லால் நேருவின் குரலைக் கேட்டார்கள்; ராஜாஜி, ஆசாத், படேல், ராஜன் பாபு ஆகியோரின் குரல்களைக் கேட்டார்கள். ஆனால் சாதாரண இந்தியக் குடிமகனின் குரலைக் கேட்டதில்லை. அப்படிக் கேட்கும் வாய்ப்பு அவர்களுக்கு 1942 ஆகஸ்ட்டில் கிடைத்தது.

தவறின் மேல் தவறாக ஆங்கிலேயர்களின் அரசு தில்லியில் செய்துகொண்டிருக்கும் நிலையில் இங்கு நடக்கும் தவறுகளைக் கண்டு உலக மாந்தர்கள் பிரிட்டிஷாரின் நேர்மையைப் பற்றியும், சட்டத்திற்கு உட்பட்ட ஆட்சி பற்றியும் தவறாக எண்ணி விடுவார்களோ எனும் அச்சத்தில் லண்டனில் இருந்த இந்தியா மந்திரி அமெரி என்பார் இங்கிலாந்தின் பி.பி.சி. வானொலி மூலம் ஒரு உரையை ஆற்றினார்.

போதாதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் பிரிட்டிஷ் அரசுக்கு ஓர் அறிவுரை கூறியிருந்தார். இந்தியர்களை அடக்குமுறைக்கு ஆளாக்கிவைப்பது நல்லதல்ல என்பது அவரது கருத்து. அவரை சமாதானப்படுத்தும் விதமாக இந்தியா மந்திரி அமெரி ஒரு ரேடியோ உரையாற்றினார்.

அந்த உரையில் அவர் சொன்ன விஷயங்கள் தான் விசித்திரமானவை. அவர் சொன்னார்:  “காங்கிரஸ் முன்பே திட்டமிட்டிருந்தபடி சதி வேலை, நாச வேலைகளில் ஈடுபடுகின்றனர். அவர்களது திட்டம் பிரிட்டிஷ் அரசின் உளவுத் துறைமூலம் எங்களுக்குக் கிடைத்துவிட்டது. தந்திக் கம்பிகளை அறுப்பது, தொலைபேசிக் கம்பிகளை வெட்டுவது, ரயில் தண்டவாளங்களைப் பெயர்ப்பது, அரசாங்க அலுவலகங்களுக்குத் தீயிடுவது- குறிப்பாக போலீஸ், அஞ்சல் நிலையங்களை தீயிட்டு அழிப்பது போன்ற செயல் திட்டங்கள் அதில் அடங்கியுள்ளன.”

காந்தியடிகளின் ஆதரவும் ஆசியும் இல்லாமலா இத்தனை விஷயங்களும் நடக்கின்றன என்று தன் மேலான கருத்தை வெளியிட்டார்.

அதுவரை இந்திய மக்கள் எப்படிப் போராடுவது, என்னென்ன வேலைகளைச் செய்தால் பிரிட்டிஷ் அரசு முடங்கிப் போகும் என்பதெல்லாம் தெரியாமல் இருந்தவர்களுக்கு, இந்தியா மந்திரி அமெரி பாடம் எடுத்துவிட்டார். ஓகோ! இப்படியெல்லாம் தான் போராட வேண்டுமென்று காந்திஜியே திட்டம் செய்திருக்கிறாரா? இதுவரை தெரியவில்லையே! இந்த இந்தியா மந்திரி அமெரி சொல்லித் தானே இத்தனை விஷயங்களும் தெரிய வருகின்றன. வாருங்கள் அந்த அழிவுகளையெல்லாம் அரங்கேற்றம் செய்துவிடுவோம் என்று இளைஞர்கள் போரில் குதித்துவிட்டார்கள்.

‘சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி’ என்பார்கள். வழிதெரியாமல் திணறிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு எப்படிப் போராட வேண்டுமென்ற பாடம் எடுத்துவிட்டார் அமெரி. நல்ல புத்திசாலி!

காந்திஜி இந்திய அரசின் உள்துறை அமைச்சர் சர் ரெஜினால்டு மாக்ஸ்வெல் என்பாருக்குத் தெரிவித்த கருத்து இது தான்- அமைதியாகப் போயிருக்க வேண்டிய இந்தப் போராட்டத்தை திசை திருப்பி வன்முறைக்குத் திருப்பிவிட அரசாங்கமே திட்டமிட்டதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது என்பது தான்.

1942 ஆகஸ்ட் புரட்சியைப் பற்றி ஐயப்பாடு எழுப்பியவர்களுக்கு இதைப் பற்றிய சரியான விளக்கங்களை நமது எழுத்தாளர்கள் பலர், குறிப்பாக கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, அகிலன்,  ரா.சு.நல்லபெருமாள் ஆகியோர் விரிவாக விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் மகாத்மாவைக் கடுமையாகப் பின்பற்றும் தேசபக்தர்கள் சிலர் வன்முறையாளர்கள் செய்வது தவறு என்று சுட்டிக்காட்டி அமைதிவழியில் போராடி சிறை சென்றார்கள். அப்படி சிறை சென்றவர்களைக் காட்டிலும் வன்முறை வெறியாட்டம் ஆடி சிறை சென்றவர்களே அதிகம்.

அப்படி நாடு முழுதும் நடந்தவற்றை விவரிக்க இங்கு இடம் போதாது, தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஓரிரு சம்பவத்தை இங்கு நினைவு படுத்தி ‘ஆகஸ்ட் புரட்சி’யின் வீரியத்தை விளக்க விரும்புகிறேன்.

முதலில் கோயம்புத்தூரில் தொடங்குவோம். அங்கு ஒண்டிப்புதூரை அடுத்த கொக்கக்காளித் தோட்டம் எனுமிடத்தில் 1942 ஆகஸ்ட் 12-ஆம் தேதி இரவு ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் கலந்துகொள்ள நிறையப் பேர் வந்தாலும், கூட்டம் ரகசியம் என்பதால் ஒருசிலர் மட்டுமே கலந்து ஆலோசிக்கப்பட்டனர்.

கோவையில் என்.ஜி.ராமசாமி என்பார் ஒரு தொழிற்சங்கத் தலைவர். அவர் தலைமையில் கோயம்புத்தூர் மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர் பலர் அங்கு கூடி விவாதித்தனர். அந்தக் கூட்டத்தில் என்.ஜி.ராமசாமி அன்றைய நிலைமையை தொண்டர்களுக்கு நன்கு விளக்கினார். தலைவர்கள் சிறையில் இருக்கிறார்களா அல்லது வேறு அயல்நாடு எதற்கும் அனுப்பப்பட்டு விட்டார்களா என்பதுகூடத் தெரியாத நிலை என்றார்.

இதற்கிடையில் இந்தியா மந்திரி அமெரி சொல்வது உண்மையானால், அப்படிப்பட்ட போராட்டத்தை நாம் செய்தாக வேண்டும். ஆனால் இது மிகவும் ஆபத்தானது என்றெல்லாம் எச்சரித்தார். பலரும் பலவிதமான  கருத்துக்களைச் சொல்லி, போராடலாம் என்றனர்.

கடைசியில் அவரவர்க்கு சரியென்று தோன்றும் வழியில் போராடிக் கொள்ளுங்கள், ஆனால் யாரும் யாரையும் காட்டிக் கொடுக்கக் கூடாது. எத்தனை துன்பங்கள் இழைத்தாலும் ஒரு வார்த்தை கூட மற்றவர்களைக் காட்டிக் கொடுக்கும்படி பேசக் கூடாது என்று எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

எது எப்படியிருந்தாலும் யாரையும் துன்பப்படுத்துவதோ, கொலை செய்வதோ, தனிமனித சொத்து எதற்கும் சேதம் விளைவிப்பதோ கூடாது என்று சத்தியப் பிரமாணம் செய்துவிட்டுப் பிரிந்தனர்.

மறுநாள் காலை தலைவர் என்.ஜி.ராமசாமி கைது செய்யப்பட்டார். அன்று இரவு அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையிலிருந்து புறப்பட்டு, போத்தனூர் வழியாக வரும் ஒரு வெடிமருந்து ஏற்றிய கூட்ஸ் ரயிலை கவிழ்க்க சிலர் ஒன்று திரண்டனர். போத்தனூர்- சிங்காநல்லூர் இடையில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. இரவு நேரத்தில் வெடிமருந்துகளை ஏற்றிக் கொண்டு வந்த அந்த கூட்ஸ் ரயில் அந்த இடம் வந்ததும் நிலை தடுமாறி பெட்டிகள் கவிழ்ந்தன. பெட்டிகள் உடைந்தன, பொருட்கள் சேதமாயின. இந்தச் செயலைச் செய்தது யார்? போலீசார் குழம்பிப் போயினர். ஆனால் இந்த நிகழ்ச்சி பிரிட்டிஷ் அரசுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கியது.

அடுத்ததாக 1942 ஆகஸ்ட் 26ஆம் தேதி இரவு சூலூர் விமான தளம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. முன்னர் அமைதியாகச் சென்று மறியல் செய்த கள்ளுக்கடைகள் வாசலில் தொண்டர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டார்கள் அல்லவா, அங்கெல்லாம் அந்த கடைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இந்தப் போராட்டத்தை போலீசார் எப்படி எதிர் கொண்டனர் என்பதுதான் முக்கியமானது.

சிறையில் அடைக்கப்பட்ட தொண்டர்களை மலம் தோய்ந்த செருப்பால் அடித்தனர் பொள்ளாச்சி சிறையில். போராடி சிறையில் இருக்கும் தொண்டர்களின் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று அங்கு கண்ணில் பட்டவர்களையெல்லாம் தடிகொண்டு தாக்கினர். ஆண்களின் மீசையைக் கையால் பிடித்து இழுத்தும், தீ வைத்துப் பொசுக்கியும் துன்புறுத்தினர். இத்தனை துன்பங்களையும் தாங்கிக் கொண்ட அந்தப் பெயர் தெரியாத தேசபக்தர்களின் பாதங்களைப் பணிந்து போற்றுவோம்.

(கர்ஜனை தொடர்கிறது)

$$$

2 thoughts on “ஸ்வதந்திர கர்ஜனை- 2(21)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s