-வெ.இன்சுவை
கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் திருமதி. வெ.இன்சுவை. பல்வேறு இதழ்களில் கட்டுரை எழுதுகிறார். சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியின்போது இவர் எழுதிய கட்டுரை இது...

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய முக்கிய மூன்று ஆசைகளைத் துறந்தவர்களையே ‘துறவிகள்’ என்று நாம் கூறுகிறோம். காடு ஏகி தவம் புரிந்து வரம் பெற்று வாழ்ந்தவர்கள் அக்கால முனிவர்கள். இன்றும், நாடு, வீடு இரண்டையும் துறந்து ஏகாந்தியாகத் திரியும் சாமியார்களை நாம் காண்கிறோம். அவர்கள் பற்றற்றவர்கள்; எதிலும் பிடிப்பு இல்லாதவாகள்.
ஆனால் இந்த நாட்டின் மீது எல்லையற்ற பற்றுக் கொண்ட துறவி ஒருவர் இருந்தார்.
“என் இந்தியா ஏழை நாடாகவே இருக்கிறதே, எப்போது என் நாடு முன்னேறும்? இங்கே சாதியின் பெயரால் கீழ் மக்கள் துன்புறுத்தப்படுவது எப்போது ஓயும்? ஆட்டு மந்தைகளாக இருக்கும் மக்கள் எப்போது திருந்துவார்கள்? தன் அடிமைத்தனத்தை அவர்கள் எப்போது உணர்வார்கள்? கோழைகளாக இருக்கின்ற என் நாட்டு இளைஞர்கள் வீரர்களாக மாறுவது எப்போது? எல்லையற்ற தைரியத்தோடும், வெல்ல முடியாத மன வலிமையோடும் கர்மயோகம் செய்வதில் எப்போது மக்கள் ஈடுபடப் போகிறார்கள்?
…அன்பு, நேர்மை, பொறுமை ஆகிய நற்குணங்கள் நம்மிடம் வளர்வது எப்போது? பரந்த இதயம் படைத்த நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் வாழ்க்கையின் ஆடம்பரங்களையும், எல்லா இன்பங்களையும் துறந்துவிட்டு, ஆதரவற்ற நிலை, அறியாமை என்னும் நீர்ச்சுழலில் சிறிது சிறிதாக மிகக் கீழ்நிலைக்கு மூழ்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டு கோடானு கோடி மக்களின் நல்வாழ்விற்காக வருந்தி, தங்கள் முழு ஆற்றலையும் செலுத்தி உழைக்க எப்போது முன் வருவார்களோ?
…தீண்டாமைப் பேய் என்று நம் நாட்டை விட்டு ஒழியும்? துன்பம் என்ற தீயில் எரிந்து பொசுங்கிக் கொண்டிருக்கின்ற இந்த உலகம் உய்வது எப்போது? வறுமையிலும், அறியாமையிலும் ஆழ்ந்திருக்கும் கோடிக் கணக்கான ஏழை மக்களுக்காக யார் அனுதாபம் காட்டுவார்கள்? பெண்களின் நிலை உயர்வது எப்போது? தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு தோள்களைக் கொடுக்கவும், சுயநலத்தை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யவும் வீர இளைஞர்கள் விழித்தெழுவது எப்போது?”
– இப்படி ஆயிரமாயிரம் கேள்விகளைக் கேட்டு, அதற்கான தீர்வுகளையும் நமக்குச் சொன்னவர் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர். தன் தேசத்தையும், தன் மக்களையும் வாழ்நாள் முழுவதும் நேசித்தவர் அவர். வறுமையிலும், அஞ்ஞானத்தில் மூழ்கிக் கிடந்த மக்களின் நிலை கண்டு கண்ணீர் விட்டவர் அவர்.
‘‘எனது பாரதம் அமர பாரதம்” என முழங்கியவர் அவர்; “நாடு முழுவதையும் ஆன்மிகச் சிந்தனைகளால் நிறையுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். இந்தியப் பாரம்பரியங்களுக்கு ஊறு விளைவிக்காத வளர்ச்சியையே அவர் விரும்பினார். சமுதாய அநீதிகளை எதிர்த்தார். துறவி ஆனாலும், மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்த ஆவேசம் கொண்டார்.
“முதலில் பெண்களை முன்னேற்றியாக வேண்டும்.பெண்களுக்குத் தர வேண்டிய முறையான மதிப்பைக் கொடுத்ததாலேயே எல்லா இனங்களும் மகத்தான நிலையை அடைந்துள்ளன. எந்த நாடு, எந்த இனம் பெண்களை மதிக்கவில்லையோ, அவை ஒரு போதும் சிறந்த நிலையை அடைந்ததில்லை; அடையவும் முடியாது”
-என்றவர் சுவாமிஜி.
“கீழை நாட்டுப் பெண்களை மேலை நாட்டு அளவு கோலால் மதிப்பிடுவது சரியல்ல. மேலை நாட்டில் பெண் என்றால் மனைவி; கீழை நாட்டிலோ அவள் தாய், இந்தியாவில் பெண்களைத் தெய்வ வடிவங்களாகவே கருதுகிறோம்” என்றார்.
அவருடைய வார்த்தைகளை நாம் மதிக்காததால் தான், இன்று நம் நாட்டில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. பெண்ணை ஒரு மனுஷியாகப் பார்க்காமல் வெறும் உடலாகத் தான் பார்க்கிறார்கள். பொருள்களை சந்தைப்படுத்த அவள் உடல் காட்சிப் பொருளாக்கப்படுகிறது; ‘பெண்மை’ கொச்சைப்படுத்தப்படுகிறது; தன் சுயம் தன் இலக்கு என்று எதுவும் இல்லாமல், பெண் இன்று ஆணின் போகப் பொருளாகப் போய்விட்டாள்.
சிறுமிக்குக் கூட இந்த மண்ணில் பாதுகாப்பு இல்லை. தன் சதையைத் தானே கடித்துத் தின்னும் கொடுமையைப் போல, நமது பெண்களை நாமே சிதைத்து சின்னாபின்னப்படுத்துவதா? தெய்வ நம்பிக்கை நிறைந்த ஒரு நாட்டில், சக்தியை வழிபடுகிற ஒரு நாட்டில், கற்பு நெறியை ஒரு தவமாகப் போற்றும் ஒரு நாட்டில் பெண்களுக்குப் பாலியல் கொடுமைகள் நடக்கின்றன. பிற பெண்களைத் தாயாக மதிக்க வேண்டும் என்ற நம் தர்மத்தை நாம் மறந்து மிருகங்களாகி வருகிறோம்.
பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் இன்று உள்ளது. இந்த அவல நிலை மாற வேண்டுமென்றால், சுவாமிஜி பெண்களைப் பற்றிக் கூறிய கருத்துக்கள் மக்களைச் சென்று சேர வேண்டும். சமுதாயம் பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
பெண்களின் நிலை உயர வேண்டுமென்றால் அவர்களுக்குக் கல்வி அவசியம் என்று திரும்பத் திரும்ப அவர் சொன்னார். பெண்கள் கல்வி பெற்றால் அவர்களின் பிரச்னைகளை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள் என்று நம்பினார். பெண்களுக்குத் தற்காப்பு முறைகளைக் கற்பிக்க வேண்டும் என்றார் அந்தத் தீர்க்கதரிசி.
சுவாமிஜி வாழ்ந்த காலத்தில், பெண்களை இழிந்தவர்கள், தாழ்ந்தவர்கள், வெறுக்கத் தக்கவர்கள், தூய்மையற்றவர்கள் என்றெல்லாம் வசைபாடடிய மக்கள் இருந்தார்கள். இந்நிலையை மாற்ற விவேகானந்தர் விரும்பினார்.
“எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், யாராக இருந்தாலும், பெண்களைத் தெய்வமாகக் கொண்டாட வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் பெண்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். பெண் கல்வி மூலம் நாடு மேன்மையுறும்; கல்வி, ஞானம், ஆற்றல் பக்தி ஆகியவற்றில் எழுச்சி ஓங்கும்”
-என்றார் அவர்.
பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு, இன்னொன்றையும் அவர் வலியுறுத்தினார். அது கற்பு நெறி. ‘‘மற்ற எல்லாவற்றையும் விடக் கற்பு தான் தலை சிறந்ததுஎன்ற லட்சியத்தை பெண்களின் இதயத்தில் ஆழமாக வேரூன்றி நிலைபெறச் செய்யுங்கள்” என்றார். இந்தியப் பெண்மணிகள் சீதையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றியே வளர்ந்து வளம் பெற வேண்டும் என்பது அவரது வாதம்.
சுவாமிஜி ஆசைப்பட்டது போலவே பெண்கள் இன்று கல்வி அறிவு பெற்றுள்ளார்கள். பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆண்களும் வியந்து போற்றும் அளவுக்கு பெண்கள் முன்னேறி உள்ளார்கள். ஆனால் கற்பு நிலை? தன் கற்பு நிலையில் இருந்து சில பெண்கள் பிறழ்வதாலேயே நாட்டில் ஒழுக்கம் சீர்கெட்டு வருகிறது.
‘பிறன் மனை நோக்காப் பேராண்மை’ இல்லாத ஆண்களின் கற்பு மலிவுச் சரக்காகி விட்டது. ‘தாய்மை’ என்பது அறுதித் தத்துவம் என்பார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். பெண்மை தாய்மையை நோக்கியே வளர வேண்டும். தாய்மை தான் அதன் நிறைவு. இதை இக்காலப் பெண்கள் புரிந்து நடந்து கொண்டால் பல பிரச்னைகள் தீரும். இந்தத் ‘தாய்மை’ உணர்வு அனைத்துப் பெண்களிடமும் இருந்தால், உலகம் அன்புமயமான ஒன்றாக மாறிவிடும்.
மேலைநாட்டுப் பெண்களின் நிலையையும், நம் நாட்டுப் பெண்களின் நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்து மனம் கலங்கினார் சுவாமிஜி. நம் பெண்களின் நிலை உயர்த்தப்பட வேண்டும் என்று அவர் தீவிரமாக வலியுறுத்தினார்:
“எந்த மகா மாயையின் புறத்தோற்றம் மனிதனின் உணர்ச்சிகளைத் தூண்டி அவனைப் பைத்தியமாக்குகிறதோ, எந்தத் தேவியின் அக வெளிப்பாடுகளாக ஞானம், பக்தி, விவேகம், வைராக்கியம் முதலியவை மனிதனை எல்லாம் அறிந்தவனாக, நினைப்பது நிறைவேறப் பெறுபவனாக, பிரம்ம ஞானியாக ஆக்குகிறதோ, அந்த அன்னையின் வடிவங்களான பெண்களை வழிபடுவதை நான் ஒருபோதும் எதிர்த்தில்லை. ‘ஸைஷா ப்ரஸன்னா வரதா ந்ருணாம் பவதி முக்தயே‘ – அவள் மகிழும் போது நலம் செய்பவளாகிறாள்; மனிதனின் முக்திக்கும் காரணமாகிறாள்”

இதை நாம் உணர்ந்து நடந்தாலே போதும், நம் பெண்களின் நிலை உயர்ந்து விடும். இதற்கு சுவாமிஜியின் கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும். அந்தத் தெய்வ மகன் நம்முடன் வாழும் தீய உள்ளங்களின் கசடுகளைப் போக்க வேண்டும். அப் பெருமகனின் திருவுருவப் படத்தைப் பார்த்தவுடன் அவர்களின் கயமைத் தன்மை பகலவனைக் கண்ட பனி போல அவர்களை விட்டு நீங்க வேண்டும்.
சட்டங்களால் செய்ய முடியாததை, சாஸ்திரங்களால் செய்ய முடியாததை தெய்வம் நினைத்தால் செய்ய முடியும். இம்மண்ணில் பிறக்கும் அத்தனை உயிர்களிலும், திருமகனே நீ வாசம் செய்ய வேண்டும்.
எம் ஆன்மிகத் தந்தையே! இந்தியா இழந்துள்ள ஆன்ம சக்தியை மீட்டுத் தா! அன்று துரியோதனன் சபையில் பாஞ்சாலியைக் காக்க வந்த கிருஷ்ணனைப் போல, இன்று அபயக்குரல் எழுப்பும் அபலைப் பெண்களைக் காக்க வா!
“இந்தியாவை ஆன்மிக மயமாக்க ஐநூறு ஆண்கள் முயன்றால் அதற்கு ஐம்பது வருடங்கள் ஆகலாம்; அதையே ஐநூறு பெண்கள் முயன்றால் ஒரு சில வாரங்களிலேயே சாதித்து விடலாம்”
-என்ற உங்கள் நம்பிக்கை பொய்க்கலாமா?
மழைக்காகவே காத்திருக்கின்ற சிப்பி, மழைத்துளி தன்னுள் விழுந்ததும் வாயை மூடிக்கொண்டு கடலின் அடி ஆழத்துக்குச் சென்று அந்த மழைத்துளியை முத்தாக்கும் முயற்சியில் ஈடுபடும். அதேபோல உன் பக்தர்கள் உன் அருளுக்காகக் காத்திருக்கிறோம்.
இந்த தேசமெங்கும் உங்கள் அலை பரவட்டும். உம் அருள் அனைவருக்கும் கிட்டட்டும். மக்கள் மாறட்டும். எம் மன இருள் அகலட்டும். பாரதம் பல துறைகளிலும் ஒளிரட்டும்!
காத்திருக்கிறோம். மீண்டும் அவதாரம் எடுத்து வாருங்கள் சுவாமி!
சென்ற முறை உங்களைப் பிடித்து வைத்துக்கொள்ளத் தவறி விட்டோம். இம்முறை சிக்கெனப் பிடித்துக்கொள்வோம். கோட்டை விட மாட்டோம்.
$$$