-திருநின்றவூர் ரவிகுமார்
ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் வட இந்திய மாநிலங்கள் குறித்த ஞானம் பிற மாநில மக்களுக்கு குறைவாகவே உள்ளது. சவாலான பண்பாட்டுச் சூழலில் தவித்த இம்மாநிலங்களை ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்புகள் மீட்டெடுத்த வரலாற்றின் இரண்டாம் பகுதி இது…

மேகாலயா
மேகாலயாவில் 1946இல் ஆர்எஸ்எஸ் ஷாகா ஆரம்பிக்கப்பட்டது . அப்போது அது அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு பகுதியாக இருந்தது. 1972 ஜனவரியில் தனி மாநிலமாக ஆனது. மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் முதல் ஷாகாவை ஆரம்பித்தவர் வசந்த் ராவ் ஓக் . இவர் ஆர்எஸ்எஸ்.ஸின் ஆரம்பகால முழு நேர ஊழியர்களில் ஒருவர். இவரும் தாதாராவ் பரமார்த் , கிருஷ்ண பரஞ்சபே ஆகிய மூத்த தலைவர்களும் இணைந்து, வடகிழக்கு இந்தியாவில் கௌஹாத்தி, திப்ரூகர் , ஷில்லாங்கில் ஆர்எஸ்எஸ் கிளையைத் தொடங்கினார்கள். ஓக் தில்லியில் ஆர்எஸ்எஸ்.ஸை வலுவாக இடம் பெறச் செய்தவர். அதனாலேயே அவரது நண்பர்களால் ‘தில்லீஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டார்.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஆர்எஸ்எஸ் செயல்வீரர்கள் வடகிழக்கு இந்தியப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். மேகாலயா, நாகாலாந்து போன்ற கிறிஸ்தவப் பெரும்பான்மை கொண்ட மாநிலங்களில் உள்ளூர் அளவில் தேசிய சிந்தனை கொண்டவர்களையும் கருத்தியல் உறுதி கொண்ட தலைவர்களையும் உருவாக்குவதே அவர்களின் நோக்கம். மத மோதலில் ஈடுபடாமல் சரியான கலாச்சார பண்புகளை வளர்ப்பது என்பதே அவர்களது செயல் திட்டம். வடகிழக்குப் பகுதியை மைய இந்தியாவுடன் ஒருங்கிணைப்பது மழைக்காலத்தில் ஈர ஆடைகளை உலர வைப்பது போன்ற கடினமான பணி என்பது அவர்களுக்குத் தெரியும்.
வடகிழக்குப் பகுதியில் உள்ள மக்களின் உடல் அமைப்பு சீனர்களைப் போன்ற ‘மங்கோலாயிடு’ அமைப்பைக் கொண்டது; மைய இந்தியப் பகுதியினரின் தோற்றத்திலிருந்து மாறுபட்டது. ஏழு வட கிழக்கு மாநிலங்களும் பல தசாப்தங்களாக எந்த வளர்ச்சியும் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டு வந்தன. அந்தப் பகுதியில் 200 பழங்குடி வகுப்பினரும் 200 மொழிகளும் உள்ளன. இது தவிர 1000க்கும் மேற்பட்ட பேச்சு மொழிகள் இருக்கின்றன என்று 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது.
மேகாலயாவில் உள்ள காசி, ஜெயின்தியா மலைப்பகுதியில் முழு நேர ஊழியராகப் பணி புரிகிறார் பிரதாப் சாம்பிரி. “ஷில்லாங்கில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கும் பெண்களுக்கு நகரம் என்று ஒன்று இருப்பதே தெரியாது. நெற்றியில் சிவப்புத் திலகம் இடுவதையே தொலைக்காட்சி தொடர்களைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டார்கள். யாருக்கும் ஹிந்தி தெரியாது. இப்போது தொலைக்காட்சி, அலைபேசி, இன்டர்நெட் வந்த பிறகு சில பிள்ளைகள் ஹிந்தி பேசத் தொடங்கியுள்ளார்கள்” என்று கூறுகிறார் அவர்.
மேகாலயாவில் உள்ள காசி இன மக்கள் தங்களை மகாபாரதத்தில் வரும் துரோணரின் சீடரான ஏகலைவனின் வாரிசுகள் என்று நம்புகின்றனர். அஸ்ஸாமில் உள்ள போடோ பழங்குடியினர் பிரம்ம தேவரின் வழிவந்தவர்கள் என்றும், அதே அஸ்ஸாமில் உள்ள கார்பீஸ் பழங்குடியினர் தங்களை இராமாயணத்தில் வரும் சுக்ரீவ மகாராஜாவின் வாரிசுகள் என்றும் கூறிக் கொள்கின்றனர்.
நாகாலாந்தின் தலைநகரான திமாப்பூரின் பழைய பெயர் இடும்பப்பூர் என்றும் அது மகாபாரதத்தில் பீமனின் மனைவியான இடும்பியின் ஊர் என்றும் சொல்லப்படுகிறது. திமாப்பூரில் உள்ள ஒரு காட்டில் பெரிய பெரிய உடைந்த சதுரங்க ஆட்ட காய்களைப் பார்க்க முடிகிறது. அந்த வனப் பூங்காவில் பீமன் தன் மகன் கடோத்கஜனுடன் சதுரங்கம் ஆடியதாக அந்த மக்கள் நம்புகின்றனர். அருணாச்சலத்தில் உள்ள ‘ஐடூ மிஸ்மி’ பழங்குடியினர் ஸ்ரீ கிருஷ்ணரின் மனைவியான ருக்மணியின் வழிவந்தவர்கள் என்கிறார்கள். ருக்மணியின் காதலை எதிர்த்த அவளது அண்ணன் ருக்மியை ஸ்ரீ கிருஷ்ணர் கொல்லாமல் தலையை மொட்டை அடித்து விட்டதன் நினைவாக, அவ்வின மக்கள் இன்றும் தங்கள் தலையில் வட்டமாக ஸ்ரீ கிருஷ்ணரின் சக்கராயுதம் போல் இருக்கும்படி சிகை அலங்காரம் செய்து கொள்கின்றனர்.
1992 இல் ஜனாதிபதி தேர்தலில் பாஜகவினரால் முன்னிறுத்தப்பட்ட ஜி.ஜி. ஸ்வெல் என்ற மேகாலயாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரஸின் சங்கர் தயாள் சர்மாவிடம் தோற்றுப் போனார். அதன் பிறகு நடந்த நாடாளுமன்ற விவாதம் ஒன்றில் அவர் பாஜகவின் பசுவதை தடையை எதிர்த்துப் பேசினார். அப்போது, ‘நாங்கள் (மேகாலயாவைச் சேர்ந்தவர்கள்/ வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்) மாட்டிறைச்சியை முக்கிய உணவாகக் கொள்கிறோம். நீங்கள் அதை தடை செய்ய நினைக்கிறீர்கள்’ என்று குற்றம் சாட்டினார். அது பத்திரிகைகளில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
சங்கத்திற்கு இது ஒரு முக்கியமான பிரச்சினை. நாட்டின் பல பகுதிகளில் உள்ள நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்டது இங்குள்ள நிலை. உள்ளூர் உணவு பழக்க வழக்கங்களை சங்கம் ஏற்க மறுப்பதில்லை. ஆற்று நீர் எப்படி கற்களையும் பாறைகளையும் தழுவிப் பயணிக்கிறதோ அது போன்ற சமரசப்போக்கு சங்கத்திற்கு உள்ளது. இங்கு ஷாகாவுக்கு வருகின்றவர்கள் அநேகர் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள். நம்மூரில் காபி, டீ போல அங்கு வீட்டிலேயே ஒரு வகை மது தயாரித்துக் கொடுப்பார்கள் . முழு நேர ஊழியர்கள் அதை மறுக்க முடியாது. பல வீடுகளின் முன்வாசலில் மாட்டுத் தோல் காய்ந்து கொண்டிருக்கும். உள்ளே போனால் டாக்டர் ஜி, குருஜி படம் மாட்டியிருக்கும் . ஸ்ரீ குருஜி கோல்வல்கர், “நாம் உடையால், உணவால் , பழக்க வழக்கத்தால் வேறுபட்டிருந்தாலும் ஒரே வேரிலிருந்து கிளைத்தவர்கள்” என்று சொல்லியுள்ளார்.
இங்கு பெண்களுக்குத் தான் சொத்துரிமை உள்ளது. எண்பது சதவீதம் சொத்துக்கள் பெண்கள் பெயரில் இருக்கின்றன. குடும்பச் சொத்து வீட்டின் கடைசிப் பெண்ணுக்குத் தான் சேரும். அவள்தான் பெற்றோரைப் பார்த்துக்கொள்ள கடமைப்பட்டவள் . குடும்பப் பிணைப்பு மிகவும் உறுதியாக உள்ளது இங்கு. எந்த வகையிலும் குடும்பக் கட்டுப்பாடு இங்கு பின்பற்றப்படுவதில்லை. குழந்தைகள் இறைவனின் வரம் என்று இம்மக்கள் நம்புகிறார்கள்.
***
ஆரம்பத்தில் ஷில்லாங்கில் தொடங்கிய ஆர்எஸ எஸ் கிளை இன்று மேகாலயா மாநிலத்தில் எல்லா பகுதிகளுக்கும் பரவியுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சேவா பாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம், விஎச்பி, ஏபிவிபி , பூர்வ சைனிக் சேவா பரிஷத் போன்ற ஆர்எஸ்எஸ் குடும்ப அமைப்புகள் மூலம் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. பல்வேறு சேவை திட்டங்கள் மாநிலம் முழுக்கவும் நடத்தப்படுகின்றன. கிறிஸ்தவ மதத் தலைவர்கள் சங்கத்துடன் கருத்தியல் ரீதியாக முரண்பட்டாலும், சங்கத்தின் சேவைத் திட்டங்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அண்மையில் சங்க நிகழ்ச்சி ஒன்றை உள்ளூர் பாதிரியார் காவிக் கொடியேற்றி தொடங்கி வைத்தார். ‘உள்ளூர் கிறிஸ்தவத் தலைவர்கள் நம்முடைய நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். பல நிகழ்ச்சிகளில் காவிக் கொடியேற்றி தொடங்கி வைப்பதே அவர்கள்தான். இது அவர்களுக்கும் நமக்குமிடையே கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுக்கிறது’ என்கிறார் பிரதாம் சாம்பிரி.
மேகாலயாவில் எழுந்த மிகப்பெரிய சவால், அங்கு கொண்டாடக் கூடிய தேசியத் தலைவர்கள் யாரும் இல்லாததுதான். அந்தப் பழங்குடியின அரசர்கள், தலைவர்கள் ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராடி உள்ளார்கள். அவர்களது வீரமும் தேசபக்தியும் அம்மக்களிடையே வாய்மொழி வரலாறாகவே நீடித்தது. ஆவணப்படுத்தப்படவில்லை. இது ஆதிக்க சக்திகளுக்கும் மதமாற்ற சக்திகளுக்கும் எளிதாக ஆயிற்று. அவர்கள் அந்த வரலாற்றை சுலபமாக அழித்துவிட்டார்கள். அதன் மூலமாக அம்மக்களின் அடையாளமும் பெருமையும் துடைத்தெறியப்பட்டது.
ஹிந்துத்துவ அமைப்பினர் மிகவும் சிரமப்பட்டு, பெரும் வீரர்கள் மூன்று பேரின் வரலாற்றை ஜனசமூகத்திலிருந்து அகழ்ந்தெடுத்தனர். ‘யூ கியாங் நாங்பா, யூ தைரோட் சின் சையீம்’ என்ற காசி இன தலைவர்கள் இருவர். மற்றொருவர் ‘பா தோகன் சங்மா’ என்ற காரோ இனத்தலைவர். இம்மூவரின் வாழ்க்கையை, விடுதலைப் போராட்டத்தை ஆவணப்படுத்தினார்கள். அது அம்மக்களிடையே பெருமித உணர்வை ஏற்படுத்தியது. அவர்கள் அந்தத் தலைவர்களின் தியாகத்தைப் புரிந்து கொண்டு போற்றத் தொடங்கினர். சங்கப் பணியிலும் பல தியாகிகள் உருவாகினர்.
காசி இன மக்களிடையே கலாச்சார மறுமலர்ச்சிக்காகத் தொடங்கப்பட்டது ‘செங்காசி’ என்று அமைப்பு. அது அம்மக்களின் மரபை , பாரம்பரிய சமயத்தை மீட்டெடுக்கத் தொடங்கப்பட்டது. அந்தப் பெயரில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும், காசி, ஜெயின்தியா மலைப் பகுதி மக்களை மதமாற்றம் செய்த கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிராகவும் ஓர் இயக்கம் முன்பு நடந்தது. அது இப்பொழுது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. ரைஜோய் சின் கோங்சா என்ற ஆர்எஸ்எஸ்காரர் அதை உயிர்ப்பித்து, துடிப்புடன் நடத்தினார்; உள்ளூர் மக்களிடையே பிரபலமானார். பிரிவினைவாதிகளிடமிருத்து அச்சுறுத்தல் வந்தது. 2001 மார்ச் மாதம் அவரை கடத்திச் சென்று கொன்று விட்டார்கள் . கண்டன ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது. கடைசி வரை அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.
அவரது கொலை பலரை ஆர்எஸ்எஸ் பக்கம் இழுத்து வந்தது. அப்படி வந்தவர்தான் பாவ்னாம் சிசா கோங்சோய். “நான் மூன்றாவது படிக்கும்போது முதன்முதலில் ரைஜோவைச் சந்தித்தேன். சலிப்படையாமல் கிராமம் கிராமமாகச் சென்று பழங்குடி மக்களுக்கு அவர் பணியாற்றியதைப் பார்த்தேன். அவரால் தான் இன்று காசி மலைப்பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒரு காரியகர்த்தா உருவாகியுள்ளார்” என்கிறார் பாவ்னாம் சிசா.
உள்ளூர் இளைஞர்களும் யுவதிகளும் பிரதமர் மோடியைப் புகழ்கிறார்கள். “வங்கதேசத்தின் எல்லைக்கு ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள எங்கள் திங்ரியாங் கிராமத்திற்கு மின்சாரம் , சாலை, கழிப்பிடம் ஆகியவை எல்லாம் கிடைக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை. மோடி பிரதமரானதும் இவையெல்லாம் வெகு விரைவாக எங்களுக்குக் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார்கள். புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக துல்லியத் தாக்குதலை நடத்திய பிரதமர் மோடியை கிறிஸ்தவ இளைஞர்கள் வெகுவாகப் புகழ்கிறார்கள். பாஜகவில் இணைகிறார்கள். உள்ளூர் வட்டச் செயலாளர்களாக பல கிறிஸ்தவ இளைஞர்கள் இருக்கிறார்கள்.
இயற்பியலில் முதுகலை பட்டதாரியான பாவ்னாம், ஆரம்பத்தில் ஆசிரியராக இருந்தார் . அவர் ஆர்எஸ்எஸ் மற்றும் செங்காசி அமைப்பின் உதவியால் பள்ளியைத் தொடங்கினார். இன்று அது மேல்நிலைப் பள்ளியாக வளர்ந்துள்ளது. “பள்ளி மாணவர்கள் மேற்படிப்புக்காக தில்லி, மகாராஷ்டிரா, அஸ்ஸாமிற்கு அனுப்பப்பட்டனர். வெளிமாநிலத் தொடர்பு அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது படித்த, வசதியான காசி இனப் பெண்ணை மணந்து கொள்ளும் ஒரு கிறிஸ்தவப் பையன் தானாகவே கிறிஸ்தவத்தை விட்டுவிட்டு தாய் மதம் திரும்புவது சகஜமாகிவிட்டது” என்கிறார் பாவ்னாம்.
நாங்கள் யாரையும் தாய் மதம் திரும்பும்படி வற்புறுத்துவதில்லை. ஆனால் கிறிஸ்தவப் பாதிரிகளால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு சர்ச் மூலமாக பாரம்பரிய பூசாரிகளை கொண்டு சடங்குகளை செய்கிறார்கள். அதற்காக பாரம்பரிய சமய பூசாரிகளை அணுகுகிறார்கள். தங்களது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை நோக்கித் திரும்பும் பயணத்தை அம்மக்கள் அங்கிருந்து தொடங்குகிறார்கள். இப்படி பல நூறு குடும்பங்கள் தாய் மதம் திரும்பி உள்ளனர், என்கிறார் பா என்ஜிஸ்டர். இவர் பாவ்னாவுக்கு உதவியாக இருக்கும் செயல்வீரர்.
“நான் பெங்களூரில் எம்பிஏ முடித்தேன். அப்போது தான் நான் இந்தியாவைப் புரிந்து கொண்டேன். காப்பீட்டுத் துறையில் வேலை செய்கிறேன். நான் கிறிஸ்தவனாக இருந்தாலும் பாஜக பற்றி எனக்கு வேறு பார்வை இருக்கிறது” என்கிறார் 35 வயதான பிலைலேடு காங்கியாங் . இவர் அங்குள்ள கத்தோலிக்க சர்ச்சின் தலைவர். கிராம சபைக்கு பொறுப்பாளர்.
“இந்த மாநில மக்களுக்கும் சரி, எனது பழங்குடியினருக்கும் சரி, வெளியுலகம் பற்றி ஒன்றும் தெரியவில்லை. தங்களுக்கு உண்மையில் எது பிரச்சினை என்றும் கூட அவர்களுக்குத் தெரியவில்லை. உண்மையான முன்னேற்றத்தையும் பாராட்டத் தெரியவில்லை. இவர்களுக்கு எல்லாமே இலவசமாக வேண்டும் என்று நினைக்கிறார்கள்” என்கிறார் அவர். பாஜகவில் வேலை செய்ய பிரச்சினையாக இல்லையா என்று கேட்டபோது, “எதிர்ப்பு இருக்கிறது. ஆனாலும் வேலை செய்ய முடிகிறது . என்னுடைய பிரச்சினை பாஜக எனக்கு பயணப்படியை ஒழுங்காகத் தருவதில்லை என்பதுதான்” என்கிறார். பணத்திற்காக பாஜகவில் சேர்ந்தீர்களா? என்றதற்கு, “ஐந்து ரூபாய் பணம் கட்டி கட்சியில் சேர்ந்தவன் நான்” என்று குரலை உயர்த்துகிறார் காங்கியாங்.
மோடி அரசு வந்த பிறகு மக்கள் மாறி வருகிறார்கள். பக்கத்து நாட்டில் இருந்து சட்ட விரோதமாகக் குடியேறும் முஸ்லிம்கள் பிரச்சினை வளர்ந்து வருகிறது. சர்சுகளும் இப்போது அந்த பிரச்சினையைப் பேசத் தொடங்கியுள்ளன. தேசபக்தி வளர்த்து வருகிறது. இந்துத்துவம் வளர்ந்து வருகிறது மேகாலயாவில். இது தெளிவாகத் தெரிகிறது.
(தொடர்கிறது)
$$$