வடகிழக்கில் ஹிந்து தேசியம்

-திருநின்றவூர் ரவிகுமார்

ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் வட இந்திய மாநிலங்கள் குறித்த ஞானம் பிற மாநில மக்களுக்கு குறைவாகவே உள்ளது. சவாலான பண்பாட்டுச் சூழலில் தவித்த இம்மாநிலங்களை ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்புகள் மீட்டெடுத்த வரலாற்றின் முதல் பகுதி இது…

2018 இன்  ஆரம்பத்தில் திரிபுராவில் கம்யூனிச ஆட்சியை வீழ்த்தி பாஜக வாகை சூடியது. வெற்றி பெற்றதும் அங்கிருந்த லெனின் சிலை தகர்க்கப்பட்டது. ஊடகங்களில், குறிப்பாக தமிழ் ஊடகங்களில், பலத்த கூக்குரல் எதிரொலித்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது 1999 இல் விஜயபாரதத்தில் வெளியான ஆர்எஸ்எஸ் தலைவர் கு.சி.சுதர்சன் அவர்களின் நேர்காணல் நினைவுக்கு வந்தது.

அந்த நேர்காணலின் முதல் கேள்வியே, ஆர்எஸ்எஸ் காரரான வாஜ்பாய் பிரதமராக உள்ள நிலையில் திரிபுராவில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வங்கதேசத்திற்கு கடத்தப்பட்டதைப் பற்றி இருந்தது. 1999 இல் திரிபுராவில் கம்யூனிச ஆட்சி இருந்தது. ஆர்எஸ்எஸ் இன் மாவட்ட, மாநில மற்றும் கோட்டத் தலைவர்கள் ஆறு பேரை திரிபுரா தேசிய விடுதலை முன்னணி என்ற பிரிவினைவாத அமைப்பினர் வங்கதேசத்திற்கு கடத்திச் சென்று சித்திரவதை செய்து கொன்றனர். அப்போது தேசிய சிந்தனை கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக ஊடகங்கள் அதை அமைதியாகக் கடந்து சென்றன. அடுத்த இருபது ஆண்டுகளில் அங்கு பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது . இன்று பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்களில் ஹிந்து தேசியவாதிகளே ஆட்சியில் உள்ளனர் . இது சாதாரணமாக நிகழவில்லை. இதற்குப் பின்னணியில் கடும் உழைப்பும் தியாகமும் உள்ளன.

மணிப்பூர்

மணிப்பூரின் தலைநகர் இம்பால். அங்கிருந்து 100 கி.மீ.க்கும் குறைவான தூரத்தில் உள்ளது பங்க்டி சீரூ என்ற கிராமம். பசுமையான மலையடிவாரத்தில் உள்ள பல கிராமங்களில் இதுவும் ஒன்று. இந்தப் பகுதி தான் 26 வயதான லீசியின் கர்மபூமி. அவர் ரோங்மோய் என்ற பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவள். குக்கி , மோய்த்தி என்ற இரண்டு பழங்குடி வகுப்பினரின் பெயர்கள் மட்டுமே நமக்குத் தெரியும். அதுவும் அங்கு நடந்த கலவரத்தினால் தான் தெரியும். ஆனால் அந்தச் சிறிய மாநிலத்தில் சுமார் 9 – 10 பழங்குடி வகுப்பினர் உள்ளனர். ஒவ்வொரு குழுவும் மற்றதை ஏற்றுக் கொள்வதில்லை. பூசலிட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு தேசம், அரசாங்கம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். தங்கள் இனக்குழுவின் ஆதிக்கம் தான் பிரதானம்.

இந்தச் சூழ்நிலையில்தான் லீசி அந்த கிராமத்தில் எட்டு பிள்ளைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கிறாள். தனது நான்கு வயது தங்கையைப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு தங்கை அல்ல நான்கு பேர். கடைக்குட்டியின் வயது நான்கு. இது தவிர அவர் வீடு வீடாகச் சென்று விவரங்களை சேகரிப்பாள். ஏனெனில் அவள் வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் முழு நேர ஊழியர். கல்யாண் ஆசிரமம் பழங்குடியினர்களிடையே சேவையாற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு. அது நாடு முழுவதும் சுமார் 50 ஆயிரம் பழங்குடி கிராமங்களில் 18 ஆயிரம் சேவைத் திட்டங்களை செயலாற்றி வருகிறது. இதன் முழு நேர ஊழியர்களுக்கு ரூ. ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை மாத மதிப்பூதியம் வழங்கப்படுகிறது.

லீசி கிராமங்களுக்கு நடந்து செல்வாள். சற்று தூரமாக இருந்தால் இரு சக்கர வாகனத்தில் செல்வாள் . பெரும்பாலான கிராமங்கள் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமங்கள். வீடு வீடாகச் சென்று பிள்ளைகளின் படிப்பு முதல் பாட்டியின் உடல்நிலை என   அன்றாட விஷயங்கள் தொடங்கி எல்லா விஷயங்கள் பற்றியும் அவள் விசாரித்து பேசி வருவாள். பெரும்பாலும் தனியாகச் செல்வாள். சில நேரங்களில் கல்யாண் ஆசிரமத்தின் மூத்த ஊழியர் அவளுடன் கிராமங்களுக்குச் செல்வார் . பல குடும்பத்தினருக்கு, குடும்பத்திற்கு வெளியே உள்ள உறவு லீசி தான்.

வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் 1931 முதல் கிறிஸ்தவம் வேகமாக வளர்ந்தது. விடுதலைக்குப் பிறகு இன்னும் வேகம் எடுத்தது. கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி (2011) நாகலாந்தில் 87.9 சதவீதம் கிறிஸ்தவர்கள் . மிசோரமில் 87.2 சதவீதம். மேகாலயாவில் 74.6 சதவீதம். மணிப்பூரில் 41.3 சதவீதம். அருணாச்சல பிரதேசத்தில் 31 சதவீதம். அஸ்ஸாமில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 34 சதவீதம்; இப்பொழுது 40 சதவீத்தைக் கடந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லீசி சொல்கிறாள் : சில கிறிஸ்தவ கிராமங்களில் மக்கள் என்னை மடக்கி  “நீ எங்களை இந்து மதத்திற்கு மாற்ற வந்திருக்கிறாயா?” என்று சொல்லி மிரட்டுவார்கள். அவர்களெல்லாம் குடித்துவிட்டு என்னை சுற்றி வளைத்து மிரட்டுவார்கள்.  “நான் மதப் பிரசாரம் செய்யவில்லை. என் வேலை பழங்குடி பண்பாடு பற்றியது” என்பேன். கிராமத்தில் உள்ள மற்ற சிலர் எனக்கு ஆதரவாக வந்து என்னை அவர்களிடமிருந்து மீட்டு அனுப்புவார்கள்.

மணிப்பூரில் இப்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. ஆனால் மாற்றத்திற்கான அடித்தளப் பணிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டன. மதுமங்கள் சர்மா  இம்பாலில் பிறந்தவர். மாநில அரசு அதிகாரியாக பணி ஓய்வு பெற்ற இவர் 1985 முதல் 1990 வரை பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்தார். கட்சியை வளர்த்தார். அவருக்கும் முன்பாக 1950களில் ஆர்எஸ்எஸ், விஎச்பி.யின் பணிகள் தொடங்கி விட்டன. மதுமங்கள் சர்மா தினமும் சுமார் 75 கி.மீ. பயணிப்பார். கிராமம் கிராமமாகச் சென்று போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிராகவும் பிரிவினை வாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் எதிராகவும் பிரசாரம் செய்து வந்தார்.

மணிப்பூரில் குறிப்பாக இம்பாலில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பிரிவினைவாதிகளின் வலைப்பின்னலில் முக்கிய பங்கு இருந்தது. அவர்கள் ஊடுருவும் தீவிரவாதிகளைப் பாதுகாத்தனர். அவர்களுக்கு உளவு கூறினர். மதுமங்கள் சர்மா 1995 பிப்ரவரி மாதம் ஒரு பிரிவினைவாதக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். சர்மாவின் கொலை தனியானது அல்ல. மாவட்ட, மாநில அளவிலான ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், அபாயங்களைப் பற்றி கவலைப்படாமல் ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் பாஜக ஆட்சி இல்லாத போதும் களப்பணி ஆற்றினர்.  “பாஜக ஆட்சி வருவதற்கு முன்பு தினமும் எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது” என்கிறார் ஒரு ஆர்எஸ்எஸ் தலைவர். இன்று மணிப்பூரில் மட்டும் 120 ஆர்எஸ்எஸ் ஷாகாக்கள் உள்ளன. 1995 இல் ஆர்எஸ்எஸ் நடத்திய பள்ளிக்கூடங்கள் 650 ஆக இருந்தன. இன்று 6,000 ஆக அதிகரித்துள்ளன. ஆர்எஸ்எஸ் நடத்தும் ஒராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கல்வியின் மூலமாக பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி தேசிய சிந்தனையை வலுப்படுத்தி வருகிறது ஆர் எஸ் எஸ்.

***

சடு – சீரு கிராமத்துக்குள் லீசி நுழைந்ததும் அங்குள்ள ஒரு கிறிஸ்தவக் குடும்பம் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றது. அந்த வீட்டின் மூத்த பாட்டி ஒரு நாற்காலியில் வெயிலில் உட்கார்ந்து இருந்தார். லீசியைப் பார்த்ததும் அவரது முகம் மலர்ந்தது. கையை அசைத்து அவளை அருகே அழைத்தார். அவருக்கு இதயக் கோளாறு. அந்தக் குடும்பத்தின் மாத வருமானம் ரூ. 15 ஆயிரம் . சிகிச்சைக்கு ரூ. 1.7 லட்சம் தேவைப்பட்டது. லீசி கல்யாண் ஆசிரமத்தின் மேலிடத் தலைவர்களிடம்  பேசினார்.

அவர் முன்பு இரண்டு பிரச்சினைகள் இருந்தன. மிக அவசரமான பிரச்சினை சிகிச்சை. பிரதமர் மோடியின் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் இருந்த பெரிய தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் பேசி மருத்துவக் கட்டணத்தைக்  குறைத்தனர், கல்யாண ஆசிரமத்தில் மாநில பொறுப்பாளர்கள். சிகிச்சை பெற்றவரின் குடும்பம் மட்டுமல்ல, அந்த கிராமமே மகிழ்ச்சி அடைந்தது. வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் அருமையைப் புரிந்து கொண்டது.

இரண்டாவது பிரச்சினை, பிரதம மோடியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் தனியார் மருத்துவமனை தான் இணைக்கப்பட்டிருந்தது. அங்குள்ள பெரிய அரசு மருத்துவமனை இணைக்கப்படவில்லை. மாநிலப் பொறுப்பாளர்கள் மேலிடத்திற்கு விஷயத்தை எடுத்துச் சென்றார்கள். அவர்கள் மூலம் மத்திய அரசுக்கு செய்தி போனது. இப்போது பலரும் பலனடையும்படி அரசு மருத்துவமனைக்கும் ஆயுஷ்மான் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது.

சீரூ பழங்குடி கிராமத்திற்கு மற்றொரு வரப்பிரசாதமாக அமைந்தது பிரதமரின் கிராம சாலை திட்டம். அதன்மூலம் அருகில் உள்ள அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. அந்த சாலை ஓரத்தில் உள்ளூர் இளைஞர்களும் யுவதிகளும் வீட்டில் தயாரித்த அன்னாசி பழச்சாறு, உள்ளூரில் விளையும் மாதுளை போன்ற மற்ற பழங்களின் சாறுகளை விற்கத் தொடங்கினர். வருவாய் அதிகரித்தது. தங்கள் வீட்டை ஒட்டிய இடங்களில் அவர்கள் விளைவித்த வெங்காயம் நேரடியாக நல்ல விலை போனது.

மணிப்பூர் மாநிலத்தில் மாற்றத்திற்கு வித்திட்டவர்களின் முக்கியமானவர் சங்கர் தின்கர் கானே. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இவர் 1971 தனது ஆசிரியர் பணியை விடுத்து இம்பால் வந்தார். பிறகு தூஷோம் பகுதியில் நிரந்தரமாகத் தங்கி பணியாற்றத் தொடங்கினார். அடுத்த 15 ஆண்டுகளில், 500க்கும் மேற்பட்ட மணிப்பூர் மாணவர்களை மகாராஷ்டிராவில் உள்ள ஆதரவான குடும்பங்களில் தங்க வைத்து கல்வி கற்க ஏற்பாடு செய்தார். அவர்கள் படித்து திரும்பி வந்தபோது அவரது நோக்கம் நிறைவேறியது மட்டுமல்ல, அவரது பணியும் சுலபமானது. அவர் காலமான போது அவரது மாணவர்கள்  ‘ஓஜா சங்கர் வித்யாலயா’ என்ற பள்ளிக்கூடத்தை அவர் நினைவாகத் தொடங்கினர். அந்தப் பள்ளி மியான்மர் எல்லையில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது.

அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் சுதந்திர தினத்தன்று கூட தேசியக் கொடியை ஏற்ற முடியாது. பிரிவினைவாத அமைப்பினர் அதற்கு தடை விதித்திருந்தனர். ஆர்எஸ்எஸ் சார்புடைய அமைப்புகளின் பணியினால் இன்று சூழ்நிலை மாறியுள்ளது. தேசியக் கொடிஏற்றப்படுவதுடன், தேசிய கீதமும் அந்தப் பகுதியில் பாடப்படுகிறது. சர்ச் நடத்தும் பள்ளிகளிலும் தேசிய பாடல்கள், தேசிய சின்னங்கள், விழாக்கள் ஆகியவற்றை அவர்களது பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளனர். கூடவே பண்பாட்டை மீட்டெடுக்கும் பணியும் தொடங்கப்பட்டது.

கிறிஸ்தவ மிஷனரிகள் உள்ளூர் கலாச்சாரத்தை தீயது என்று புறமொதுக்கி அதில் வெற்றியும் பெற்றனர். வனவாசி கல்யாண் ஆசிரமம் ஒரு குழுவை ஏற்படுத்தியது. அந்தக் குழு கோம், மோயோன், மாரிங், தாங்குல் போன்ற பழங்குடியினர் இடையே எழுபது வயதிற்கும் மேற்பட்ட மூத்தவர்கள் பலரிடம் பேசி மறைந்து போன பழங்குடியினரின் சொற்களை, பழமொழிகளை, வாய்மொழி வரலாற்றை மீட்டெடுத்து ஆவணப்படுத்தினர் . அவர்களது பழங்குடிப் பாடல்களை – சுமார் 300 பாடல்களை – தொகுத்து ஒரு இசைத் தட்டில் பதிவு செய்து மக்களுக்கு இலவசமாக வழங்கினர்.

கலாச்சார மீட்டெடுப்பு அத்துடன் நிறவில்லை. ஒன்பது பழங்குடி வகுப்பினரது பாரம்பரிய விளையாட்டுக்கள் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டன. அந்த விளையாட்டுக்கள் சுவாரசியமானவை மட்டுமல்ல, ஆழமான சமூக பிணைப்பை ஏற்படுத்துபவை.

எடுத்துக்காட்டாக , மாஓ பழங்குடியினர் விளையாடும்  ‘ஓசு காகா’ விளையாட்டு. இது அறுவடைக் காலங்களில் விளையாடப்படுகிறது. பயிர் அறுவடை செய்யும் போது இடையே கிடைக்கும் இடைவேளையில் விளையாடப்படுகிறது. அதில்  திருமணம் ஆகாதவர்கள் திருமணம் ஆனவர்களை சவாலுக்கு அழைப்பார்கள். அதே பழங்குடி சமூகத்தினர் விளையாடும் இன்னொரு விளையாட்டு  ‘லீரீ கைபிச் சோ’ . அது ஒரு பண்டிகைக் காலத்தில் விளையாடப்படுகிறது. ஈட்டிகளைக் கொண்டு விளையாடப்படும் அந்த விளையாட்டு பழங்காலப் போர்களை நினைவூட்டுவதாக உள்ளது.

மன் பழங்குடியினர் விளையாடும் ‘நாக்கின்ஜி –  நாக்கின்ஜி’ என்ற விளையாட்டு. அதில் பாட்டுப் போட்டி உள்ளது. மணிப்பூரில் போலோ (குதிரை மீதேறி விளையாடும் பந்தாட்டம்) விளையாட்டைப் போன்றதொரு விளையாட்டு உள்ளது. அதன் பெயர்  ‘சகோல் காங்ஜியீ’.  பொதுயுகம் 33இல் மணிப்பூரை ஆண்ட நாங்டா லைலென் போக்காங்பா என்ற மன்னர் தன் நண்பர்களுக்கும் இதர பழங்குடித் தலைவர்களுக்கும் சகோல் காங்ஜியீ விளையாட்டில் சிறந்தவரான லைசனாவை பெருமையுடன் அறிமுகப்படுத்துவார் என்று தொன்மையான ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

மறைந்து போன / மறந்து போன பழங்குடியினர் இசைக்கருவிகளை வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் குழு மீட்டெடுத்துள்ளது.  ‘டாங் டங், ரோசெம், சராங்தார்’ என்று அந்த மூன்று இசைக்கருவிகளுக்கு பெயர். ரோசெம் என்பது பேக் பைப்பர் போல் உள்ளது. மூங்கிலால் செய்யப்பட்டது. சராங்தாரைச்  செய்ய குதிரைவால் பயன்படுத்தப்படுகிறது.

தாவரவியல் குறித்து உள்ளூர் பாரம்பரிய ஞானம் மீட்டெடுக்கப் பட்டுள்ளது. பல்லுயிர்ப் பாதுகாப்பு மட்டுமின்றி, மண்ணைச் சாகடிக்காத பாரம்பரிய விவசாய முறைகள், சிறு காடுகள், சதுப்பு நிலப்பகுதி, உள்ளூர் மீன் வகைகள் என சூழலியல் அழிவிலிருந்து அந்தப் பகுதியைப் பாதுகாக்கும் அம்சங்கள் கண்டறியப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றன. உள்ளூர் தட்பவெப்பத்திற்கு ஏற்ப முன்பு பயன்பாட்டில் இருந்த பயிர் விதைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

உள்ளூர்ப் பாரம்பரியத்தை மீட்கும் அதே வேளையில் மியான்மர், வங்கதேசத்திலிருந்து வரும் ஊடுருவலையும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கண்காணித்து வருகின்றன. பாஜக அரசு வந்த பிறகு மாநிலத்துக்குள் பயணம் செய்ய  ‘இன்னர் லைன் பர்மிட்’ என்ற அடையாளம் / அனுமதி திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம் இந்திய குடிமக்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு குறுகிய காலம் சென்று வர முடியும். இது சட்ட விரோதமாக ஊடுருவி  குடியமர்பவர்களைத் தடுக்கவும் பயன்படுகிறது. மோய்த்தி பழங்குடியினருக்கு பழங்குடியினர் அந்தஸ்தையும் சலுகைகளையும் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஆர்எஸ்எஸ் ஆதரித்து வருகிறது.

மியான்மரில் இருந்து ஊடுருவும் ரோஹிங்கியா முஸ்லிம்கள், ஜிரிபாம் , லீலாங் போன்ற நகர் பகுதிகளில் அதிகமாக குடியேறி வருவதை கவலையுடன் சுட்டிக் காட்டுகின்றன ஆர்எஸ்எஸ் குடும்ப அமைப்புகள். உள்ளூர் வாசிகளின் துணையுடன் ஹிந்து பண்பாட்டு தேசியவாதிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்வதில் உறுதியாக உள்ளார்கள்.

(தொடர்கிறது)

$$$

Leave a comment