-மகாகவி பாரதி
பாஞ்சாலி சபதத்தில் மகாகவி பாரதி கோபத்தின் உச்சிக்குச் செல்லுமிடம் இக்கவிதை தான். தனது கணவரின் தாயாதியானாலும், துச்சனை தம்பி என்றே அழைக்கிறாள் பாஞ்சாலி. அவனுக்கு பல புத்திமதியும் கூறுகிறாள். “தேவர் புவிமிசைப் பாண்டவர்; - அவர் தேவி, துருபதன் கன்னிநான்” என்று எச்சரிக்கிறாள் ஆனால், அதைக் கேட்கும் நிலையில் அவன் இல்லை. ‘ஆடி விலைப்பட்ட தாதி நீ; - உன்னை ஆள்பவன் அண்ணன் சுயோதனன்’ என்று கூறி அவளது மொய்ங்குழல் பற்றி இழுத்துச் செல்கிறான். இந்தக் கொடுமையைத் தட்டிக் கேட்க ஆளே இல்லாமல் மக்கள் பரிதாபமாக வேடிக்கை பார்த்ததை நெஞ்சு கொதிக்க கவிதையாகத் தீட்டுகிறார் மகாகவி. “ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ? வீரமிலா நாய்கள்....” என்று கூறும் அவர், “நெட்டை மரங்களென நின்று புலம்பினார். பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?” என்று ஆவேசம் கொள்கிறார்...

இரண்டாம் பாகம்
2.3. சபதச் சருக்கம்
2.3.2. திரௌபதிக்கும் துச்சாதனனுக்கும் சம்வாதம்
‘தேவர் புவிமிசைப் பாண்டவர்; – அவர்
தேவி, துருபதன் கன்னிநான்; – இதை
யாவரும் இற்றை வரையினும், – தம்பி,
என்முன் மறந்தவரில்லைகாண். – தம்பி
காவ லிழந்த மதிகொண்டாய்; – இங்குக்
கட்டுத் தவறி மொழிகிறாய். – தம்பி,
நீவந்த செய்தி விரைவிலே – சொல்லி
நீங்குக’ என்றனள் பெண்கொடி. 64
‘பாண்டவர் தேவியு மல்லைநீ; – புகழ்ப்
பாஞ்சாலத் தான்மக ளல்லைநீ; – புவி
யாண்டருள் வேந்தர் தலைவனாம் – எங்கள்
அண்ணனுக் கேயடி மைச்சிநீ. – மன்னர்
நீண்ட சபைதனிற் சூதிலே – எங்கள்
நேசச் சகுனியோ டாடியங்கு – உன்னைத்
தூண்டும் பணய மெனவைத்தான் – இன்று
தோற்றுவிட்டான் தருமேந்திரன். 65
‘ஆடி விலைப்பட்ட தாதி நீ; – உன்னை
ஆள்பவன் அண்ணன் சுயோதனன். – “மன்னர்
கூடி யிருக்குஞ் சபையிலே – உன்னைக்
கூட்டி வரு”கென்று மன்னவன் – சொல்ல
ஓடிவந் தேனிது செய்திகாண். – இனி
ஒன்றுஞ்சொலா தென்னொ டேகுவாய். – அந்தப்
பேடி மகனொரு பாகன்பாற் – சொன்ன
பேச்சுக்கள் வேண்டிலன் கேட்கவே.’ 66
வேறு
துச்சா தனனிதனைச் சொல்லினான். பாஞ்சாலி:-
‘அச்சா, கேள். மாதவிலக் காதலா லோராடை
தன்னி லிருக்கிறேன். தார்வேந்தர் பொற்சபைமுன்
என்னை யழைத்தல் இயல்பில்லை. அன்றியுமே,
சோதரர்தந் தேவிதனைச் சூதில் வசமாக்கி,
ஆதரவு நீக்கி, அருமை குலைத்திடுதல்,
மன்னர் குலத்து மரபோகாண்? அண்ணன்பால்
என்னிலைமை கூறிடுவாய், ஏகுகநீ’ என்றிட்டாள்.
கக்கக் கவென்று கனைத்தே பெருமூடன்
பக்கத்தில் வந்தேயப் பாஞ்சாலி கூந்தலினைக்
கையினாற் பற்றிக் கரகரெனத் தானிழுத்தான்.
‘ஐயகோ’ வென்றே யலறி யுணர்வற்றுப்
பாண்டவர்தந் தேவியவள் பாதியுயிர் கொண்டுவர,
நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி
முன்னிழுத்துச் சென்றான். வழிநெடுக, மொய்த்தவராய்,
‘என்ன கொடுமையிது’வென்று பார்த்திருந்தார்.
ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ?
வீரமிலா நாய்கள். விலங்காம் இளவரசன்
தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே,
பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல்,
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்.
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
பேரழகு கொண்ட பெருந்தவத்து நாயகியைச்
சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோய்க்
கேடுற்ற மன்னரறங் கெட்ட சபைதனிலே
கூடுதலும் அங்கேபோய்க் ‘கோ’வென் றலறினாள்.
$$$