மகாவித்துவான் சரித்திரம் -2(12)

-உ.வே.சாமிநாதையர்

இரண்டாம் பாகம்

12. இயல்புகளும் புலமைத் திறனும்

தோற்றம்

பிள்ளையவர்களுடைய சரீரம் மாநிறமுடையது. இவர் நல்ல வளர்ச்சியமைந்த தோற்றமுடையவர். இவரைப் பார்த்த மாத்திரத்தில் யாரும் ’சிறந்த தகுதியுடையவர்’ என்று எண்ணுவார்கள். நெற்றியின் அகலமானது இவருடைய அறிவைப் புலப்படுத்தும். கைகள் முழங்கால் வரையில் நீண்டிருக்கும். வலக்கையில் உள்ளங்கையிலிருந்து நடுவிரலின் மத்தியில் ஊடுருவிச் செல்லும் ரேகை ஒன்று உண்டு. அது வித்தியாரேகை யென்றும் அதனை யுடையவர்கள் சிறந்த கவிஞர்களாகவும் நல்ல, ஞாபக சக்தி யுடையவர்களாகவும் இருப்பார்களென்றும் அத்தகையவர்களைக் காண்டல் அரிதென்றும் அறிஞர் கூறுவர்; உள்ளங்கையானது பூவைப்போன்று மிகவும் மென்மை-யுடையதாக இருக்கும்; “எத்தகைய வறுமை நிலையை அடைவதாயிருந்தாலும் ஆகார விஷயத்தில் எந்த இடத்திலும் இவருக்கும் இவரைச் சார்ந்தவர்களுக்கும் யாதொரு குறைவும் வாராது” என்று சாமுத்திரிகா லட்சணம் தெரிந்தோர் கூறுவதுண்டு. நான் பழகிய போது இவர் பருத்த தேகம் உடையவராக இருந்தார். தலையில் சிறிய குடுமி உண்டு. இளமையிலிருந்ததைவிட முதுமையில் பருத்த தேக முடையவராக ஆயினரென்று இவருடன் பழகியவர் சொல்லுவர்.

காட்சிக்கு எளிமையும், பணிவும், சாந்தமும் இவர்பாலுள்ளன வென்பதை இவரைக் கண்டவுடன் அறியலாம். ஆழ்ந்த அறிவும் இணையற்ற கவித்துவமும் வாய்க்கப் பெற்றிருந்தும், அலைகளெல்லாம் அடங்கி ஒலியற்றிருக்கும் ஆழ்ந்த கடலைப்போல் அறிவின் விசித்திர சக்தியெல்லாம் கண்டவுடன் அறிய முடியாவண்ணம் அடங்கியிருக்கும் தோற்றமுடையவராக இவர் இருந்தார்.

இடையில் ஆறுமுழ நீளமும் மூன்றுமுழ அகலமும் உள்ள தூய வெள்ளை உடை, ஆறுமுழ நீளமுள்ள மேலாடை, உதரபந்தனமாக ஒரு சிறிய சவுக்கம் ஆகிய இவ்வளவே இவர் எக்காலத்தும் அணியும் ஆடைகள். உடையை மூலகச்சமாக உடுத்திக்கொள்வார். முன்னும் பின்னும் கெளரிசங்கரமுள்ள ருத்திராட்ச கண்டியைத் தரித்திருப்பார். இவருடைய கையில் ஊன்றிச் செல்வதற்குரிய பிரம்பு, ஒன்று இருக்கும். நடந்து செல்லுங் காலத்தில் வலக்கையால் வஸ்திரத்தின் மூலையைப் பற்றிக்கொண்டு நடப்பார். இடையின் வலப் புறத்தில் நன்றாக வடிக்கட்டிய விபூதி நிறைந்த வெள்ளிச் சம்புடம் ஒன்றும் இடப்புறத்தில் மூக்குத்தூள் ‘டப்பி’ ஒன்றும் இவர் உடையிற் செருகப்பட்டிருக்கும். காலில் ஜோடு போடுவதுண்டு; ஆனால் திருவாவடுதுறையில் மட்டும் இவர் அவற்றை உபயோகிப்பதில்லை. யானை போன்ற அசைந்த மெல்லிய நடையை உடையவர் இவர். அளவாகவும் மென்மையாகவும் நிறுத்தியும் பேசுவார். திடீரென்று அதட்டிப் பேசுதலும் கோபமாக இரைந்து பேசுதலும் இவர்பால் இல்லை.

வழக்கங்கள்

விடிய நான்கு நாழிகைக்கு முன் எழுந்திருப்பது இவர் வழக்கம்; உடனே ஒரு நாழிகைவழித் தூரத்திற்குக் குறையாமல் நடந்து சென்று தந்தசுத்தி முதலியவற்றைச் செய்து அநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு வருவார். அப்பொழுது உடன் செல்பவர்களுடன் தமிழ் நூல்களிலுள்ள செய்யுள் நயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டே நடப்பார். தம்முடன் உறையும் மாணாக்கர்கள் விழித்து எழுந்து வாராவிட்டால், அவர்கள் எழுந்துவரும் வரையில் *1 பழந்தமிழ்ச் செய்யுட்களைச் சொல்லிக்கொண்டே வீட்டு வாயிலில் உலாத்துவார்; அவர்களைத் தாமாக எழுப்புவதில்லை. நான் பழகிவந்த காலத்தில் இவர் பெரும்பாலும் வெந்நீரிலேயே ஸ்நானம் செய்வார். நல்ல புல்தரைகளையும் சோலைகளையும் ஆற்றின் கரைகளையும் பார்ப்பதில் இவருக்கு மனமகிழ்ச்சி உண்டு. கோடைக் காலத்தில் பிற்பகலிற்சென்று ஆறுகளில் ஊற்றுத் தோண்டி இறைப்பித்துச் சுத்தமான அந்த ஊற்றைப் பார்த்தலிலும் அதில் ஆடையைத் துவைக்கச் செய்தலிலும் துவைத்த ஆடைகளைக் கொய்து ஊற்றின் குறுக்கே போடுவித்து ஊறவைத்தலிலும் இவருக்கு விருப்பம் அதிகம். அந்த ஊற்றுக்களைப் பார்த்துக்கொண்டே வழக்கமாகச் செய்யும் செய்யுட்களை இயற்றுவதுமுண்டு. ஒருமுறை நான்கு ஊற்றுக்களைப் போடுவித்து அவற்றைப்பற்றி நான்கு செய்யுட்கள் இயற்றினர்.

வண்டியிற் போவதைவிட நடப்பதில் இவருக்கு விருப்பம் அதிகம். வண்டியிற் பிரயாணம் செய்யும்போது சில சமயங்களில் சில மாணாக்கர்களை வண்டியிலேயே இருக்கச்செய்து தாம் இறங்கிச் சிலருடன் நடந்துவருவார். அப்போது அங்கங்கே உள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு இன்புறுவார்.

உட்கார்ந்து பாடஞ்சொல்லும்பொழுது மடியில் ஒரு திண்டை வைத்து அதன் மேல் கைகளை மடக்கிவைத்துக்கொண்டே சொல்வார். மடத்திலிருந்து பாடஞ்சொல்லும்பொழுது திண்டைவைத்துக் கொள்வதில்லை. கைகளைக் கட்டிக்கொண்டே சொல்வது வழக்கம். ஆறுமணிநேரம் வரையில் காலைப் பெயர்த்துவையாமல் அமர்ந்தபடியே யிருந்து பாடஞ்சொல்வார். எந்த வகையான செய்யுளையும் *2  ஒரே வகையான இசைமுறையிலேதான் சொல்வது இவருடைய வழக்கம்.

உணவு

காலையில் எவ்வித உணவையும் இவர் உட்கொள்ளுவதில்லை. தினம் தோறும் பகலில் பூஜை பண்ணியபின்பே உண்பார். இரண்டு வேளையே உணவு கொள்வார். மிளகு சேர்த்த உணவு வகைகளிலும் கீரை வகைகளிலும் சித்திரான்னங்களிலும் புளி சேர்த்துச் செய்த அரைக்கீரை உணவிலும் நறு நெய்யிலும் மாம்பழத்திலும் தேங்காய் வழுக்கையிலும் இவருக்கு விருப்பம் உண்டு. இரவில் சீனாக்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சிய பாலை உண்டு படுப்பார்; பாலுண்ணுதல் ஒருநாளும் தவறியதே யில்லை; திருவாவடுதுறையிலிருக்கும்பொழுது, இரண்டு சேர் பால் இவருக்கு மடத்திலிருந்து அனுப்பப்படும்; ஒரு சேரைத் தாம் உண்டு மிகுதியை உடன் இருப்பவர்களுக்குக் கொடுத்துவிடுவார்.

குணங்கள்

இவருடைய அரிய குணங்களுள் பொறுமை, திருப்தி, தம்மை வியவாமை, பிறருடைய குற்றத்தைக் கூறாமை, பிறரைப் பாராட்டல், இரக்கம், நன்றியறிவு, சிவபக்தி, மாணாக்கர்பாலுள்ள அன்பு முதலியவற்றைச் சிறப்பாகச் சொல்லலாம்.

பொறுமை


இவர்பால் அமைந்திருந்த சாந்தகுணமே மாணாக்கர்களையும் பிறரையும் இவர்பால் இழுத்தது. பிறர் தம்மை அவமதித்தாலும் பிறரால் தமக்கு இடையூறுகள் நேர்ந்தாலும் பொறுத்துக் கொண்டிருக்கும் இவருடைய இயல்பை அறிந்து வியந்தவர்கள் பலர். தியாகராச செட்டியார் முதலியோர் சில சமயங்களில் இவர் மேற்கொண்ட பொறுமைக்காக இவரைக் குறை கூறியதுமுண்டு. யாரேனும் கடுமையாகப் பேசினால் எதிர்த்து ஒன்றும் கூறாமல் உடனே எழுந்து சென்றுவிடுவார். யாரிடத்தும் விரோதம் பாராட்டக் கூடாதென்பது இவர் கொள்கை. தம் கொள்கைக்கு மாறுபாடுடையவர்களானாலும் தமக்குப் பல இடையூறுகளைச் செய்தவர்களானாலும் அவர்களோடு பழக நேர்ந்தால் எல்லாவற்றையும் மறந்து அன்புடன் பழகுவார்; அவர்களுக்கு உதவியும் செய்வார். இவருடைய வாழ்க்கையில் வறுமையினாலும் பிறருடைய அழுக்காற்றாலும் இவருக்கு நேர்ந்த இடையூறுகள் பல. அவற்றை யெல்லாம் பொறுமையால் வென்று புகழோடு விளங்கினார்.

திருப்தி

பணத்திற்கு அடிமையாக இராமல் பணத்தை இவர் அடிமை யாக்கினார். எவ்வளவு வறிய நிலையில் இருந்தாலும் தம் கொள்கைக்கு விரோதமான எதையும் செய்யாத வீரம் இவர்பால் இருந்தது. வறுமையால் துன்பமுறுகையில் தமது விவேகத்தால் அத்துன்பத்தை இன்பமாக எண்ணி வாழ்ந்துவந்தார். இவரைக்கொண்டு தாம் பொருள் வருவாய் பெறலாமென்றெண்ணிப் பாடசாலை வைக்கலாமென்றும் புஸ்தகங்கள் பதிப்பிக்கலாமென்றும் வேறுவகைகளிற் பொருள் ஈட்டலாமென்றும் பலர் அடிக்கடி வந்து வந்து இவர்பாற் கூறியதுண்டு. அவற்றிற்கு இவர் செவிகொடுக்கவேயில்லை. இவர் நினைத்திருந்தால் எவ்வளவோ செல்வத்தைப் பெற்றுப் பின்னும் சிறந்த நிலையில் இருந்திருக்கலாம். உள்ளதே போதுமென்ற திருப்தியே அத்தகைய முயற்சியில் இவரைச் செலுத்தாமல் இருந்தது. இவர் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இவருக்குத் தெரிந்த பிரபுக்களிற்பலர் இவரைப் பெருஞ்செல்வராகச் செய்திருப்பார்கள். அவர்களிடம் தம் நிலையைக் கூறுதலை இவர் நினைத்தும் அறியார். கல்விச் செல்வத்தையன்றி வேறு செல்வத்தை இவர் மதியார்.

தம்மை வியவாமை

தம்மை வியத்தலென்னும் குற்றம் இவர்பால் ஒருபொழுதும் காணப்படவில்லை. இவர் தமிழ் நூலாசிரியராக இருந்து செய்தற்கரிய பல செயல்களைச் செய்திருந்தாலும் அவற்றைப் பற்றித் தாமே பாராட்டிக் கொண்டதை யாரும் இவர்பால் ஒருபோதும் கண்டிலர்.

பிறருடைய குற்றத்தைக் கூறாமை

பிறருடைய குற்றங்களை இவர் எடுத்துக் கூற மாட்டார். ஒரு நூலாசிரியரிடமோ உரையாசிரியரிடமோ ஏனைப் புலவர்களிடமோ குற்றங்கள் காணப்படின் அவற்றை இவர் பெரும்பாலும் வெளியிடார்; வெளியிட்டாலும் குற்றமென்று பிறர் கருதாதவாறு, பக்குவமாகச் சொல்லுவார்; யாரேனும் குற்றமென்று வலிந்து சொல்வாராயின் சமாதானம் சொல்லிப் பின்பு அவரை அவ்வாறு சொல்லாத வண்ணம் செய்விப்பார்.

பிறரைப் பாராட்டல்

பிறரைப் பாராட்டுதலும் பிற கவிஞர்களுடைய செய்யுட்களைப் போற்றுதலும் தம்பால் வந்தவர்கள் கல்வியறிவிற் குறைவுடையவர்களாக இருந்தாலும் அவர்களுடைய செய்யுட்களைப் பாராட்டி ஆதரித்து ஊக்கமளித்தலுமாகிய இவருடைய நற்குணங்கள் யாவரையும் இவர்பால் இழுத்தன. தமக்குப் புலப்படாத ஒரு கருத்து எவ்வளவு சிறிதாயினும் அதனை யார் கூறினும் அங்ஙனம் கூறியவருடைய நிலையைக் கருதாமல் இவர் மிகவும் பாராட்டுவார். இவரால் அங்ஙனம் பாராட்டப்பெற்ற பின்பு அவர்களுக்கு ஒரு தனி மதிப்பு உண்டாகும்.

இரக்கம்

பிறருடைய துயரைக் கண்டவிடத்து இரங்கும் உள்ளமுடையவர் இவர். தமக்குக் குறைபாடிருப்பினும் பிறருக்குள்ள குறைபாடுகளை நீக்கும் தன்மையினர்; “தம் குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம், வெங்குறை தீர்க்கும்” விழுமியோர் இவர்.

நன்றி மறவாமை

பிறர் செய்த நன்றியை மறவாமற் பாராட்டும் தன்மை இவருடைய குணங்களில் தலைசிறந்து விளங்கியது; “தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர்” என்னும் அருமைத் திருக்குறளுக்கு இலக்கியமாக இவர் இருந்தனர். பிறருடைய உதவியைப் பெற்றவுடன் நன்றியறிவினால் மனங்கசிவதில் இவரை ஒப்பார் யாரும் இல்லையென்றே சொல்லலாம். அந்த உணர்ச்சி அவ்வப்பொழுது உபகாரிகளை இவர் பாராட்டிய செய்யுட்களில் வெளிப்பட்டிருத்தலைக் காணலாம். கொடுத்தாற் புகழ்தலும் கொடாவிடின் இகழ்தலுமாகிய புன்செயல்கள் இவர்பால் இல்லை. மனிதரைப் புகழ்வது பிழையென்று சிலர் கூறுவதுண்டு. ஒன்றை எதிர்பார்த்து ஒருவரைப் புகழ்தலும், எதிர்பார்த்தபடி கிடைக்காவிடின் வெறுத்தலும் பிழையெனவே இவர் கருதிவந்தார்.

ஒவ்வொரு மனிதனும் பிறருடைய உதவிகளால் வாழ்க்கையை நடத்த வேண்டியவனாக இருக்கிறான். பிறருதவியின்றித் தன்னுடைய ஆற்றலொன்றனையே கொண்டு வாழ்வது உலகத்தில் இயலுவதன்று. ஒருவருக்கொருவர் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து இன்புற்று வாழ்வதே அறம். அங்ஙனம் ஒருவர் ஒருவருக்கு உதவிபுரியும் பொழுது அதனை மறவாமல் நினைத்தலும் வாயாரப் புகழ்தலும் இயன்றவரையில் உதவி செய்தவருக்குத் தம்மால் ஆன உதவிகளைப் புரிதலும் வேண்டும். அந்த முறையில் புலமை யுடையவர்கள் தமக்கு உதவி செய்தவர்களை மறவாமல் வாயாரப் புகழ்தல் அவர்களுடைய கடமையாகும். நாவன்மையை அவ்வகையில் உபயோகிப்பது செய்ந்நன்றியறிவின் பயனாகுமேயன்றிப் பிழையாக எண்ணக்கூடியதன்று. சங்கப்புலவர்களும், கம்பர் ஒட்டக்கூத்தர் புகழேந்தி வில்லிபுத்தூரார் முதலிய புலவர் பெருமக்களும் செய்ந்நன்றியறிவு காரணமாகவே தம்மை ஆதரித்த உபகாரிகளின் புகழைப் பாராட்டி உரிய இடங்களில் பல செய்யுட்களில் அமைத்துள்ளார்கள்” என்று இவர் கூறுவதுண்டு.

சிவபக்தி

இவருக்கு இருந்த சிவபக்தி அளவிடற்கரியது. சிவதீட்சைகளை முறையே இவர் பெற்றவர். இவர் நெற்றியில் எப்பொழுதும் திருநீறு விளங்கிக் கொண்டேயிருக்கும். இரவில் சயனித்துக்கொள்ளுமுன் திருநீறு தரித்துக்கொண்டு சிறிதுநேரம் ஈசுவரத்தியானம் செய்துவிட்டு அப்பால்தான் சயனித்துக்கொள்வார். திருநீற்றுச்சம்புடம் தலையணையின் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும். துயிலெழுந்தவுடன் திருநீறு தரித்துக்கொண்டுதான் புறத்தே வருவார். நாள்தோறும் சிவபூஜையை நெடுநேரம் செய்வார். பூஜைக்கு வேண்டிய பத்திரபுஷ்பங்களை அதிகமாகக் காணுமிடந்தோறும் எடுத்தும் எடுப்பித்துக் கொண்டும் வருவதுண்டு.

சிவஸ்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்வதும், சிவஸ்தல வரலாறுகளை நன்றாகத் தெரிந்துகொள்வதும், சிவபெருமானுடைய புகழைப் பலவகையாகச் சொல்லியும் பாடியும் வரும் வழக்கமும் இவர்பாற் சிறந்து விளங்கின. சைவ சம்பிரதாயங்களுக்கு விரோதமான செயல்களைக் காண இவர் மனம் பொறார். இவருடைய மாணாக்கர்களுள் ஒருவர் தம்பால் பாடங்கேட்கும் ஒரு வீரசைவரைத் தமக்குக் கால் பிடிக்கும்படி சொன்னதுண்டு. அதனை அறிந்த இவர், “சிவலிங்க தாரணம் செய்து கொண்டவரை இங்ஙனம் ஏவுதல் பிழை” என்று சொல்லி வருந்தினார். சிவத்துவேஷமான வார்த்தைகளைக் கேட்டால் வருந்துவார்.

இப்புலவர்பெருமானுடைய சிவபக்தியின் முதிர்வை இவர் நூல்களே நன்கு தெளிவிக்கும். இவர் இறுதிநாள்காறும் சிவபிரானுடைய திருவடிக் கமலத்தையே எண்ணி உருகினார். உலகவாழ்வை நீப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு சுலோகத்தை மொழிபெயர்த்து அதனுடைய ஈற்றடியில், “ஏகநாயகனே தில்லையிலாடும் இறைவனே எம்பெருமானே” என்று அமைத்த செய்தியால் சிவபிரானுடைய திருவடி நினைவில் இவர் மனம் பதிந்திருந்தமை புலப்படுகின்றதல்லவா? இவர் பூத உடம்பை நீத்த அன்று திருவாவடுதுறையில் ஸ்ரீ கோமுத்தீசுவரரது இடபவாகனக் காட்சி விழா அமைந்ததும், திருவாசகத்தில் அடைக்கலப்பத்தை வாசிக்கையில் இவர் பூவுலகை நீத்ததுமாகிய வாய்ப்புக்கள் இவரது சிவபக்தியின் பயனென்றே சொல்ல வேண்டும்.

பிற மதங்களிடத்தில் இவர் அவமதிப்பில்லாதவராகவே யிருந்தார். கும்பகோணத்தில் பெரிய தெருவில் அயலூரிலிருந்துவந்து வாழ்ந்த ஒரு பெருஞ்செல்வர் இருந்தார். ‘முனிசிபாலிடி’ தேர்தலில் அவருக்கு ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாள் கோயிலைச் சார்ந்தவர்கள் தங்கள் வாக்கை வழங்கவில்லை. ஒரு நாள் பிள்ளையவர்கள் அவரோடு பேசிக்கொண்டிருந்த சமயம் திருவிழாக் காலமாதலின் அன்று ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாளது திருத்தேர் அந்த வீதி வழியாக வருகையில் அந்தப் பிரபுவின் வீட்டு வாசலில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. வாக்குப் பெறாத கோபத்தையுடைய அந்தத் தனவான், “இந்தச் சாரங்கபாணி என் வீட்டு வாசலுக்கு முன்னே வந்து ஏன் நிற்கிறான்?” என்று இகழ்ச்சிக் குறிப்போடு சொன்னார். கேட்ட இக்கவிஞர்கோமான் மிகவும் வருந்தி, “தெய்வ தூஷணை பண்ணுகிற இவரோடு பழகுதல் சரியன்று” என்று எண்ணி அன்றுமுதல் அவரது பழக்கத்தை அடியோடே விட்டுவிட்டார்.

மாணாக்கர்பாலிருந்த அன்பு

இவருடைய வாழ்க்கையில் இவர் நூலாசிரியராகவும் போதகாசிரியராகவும் இருந்து செய்த செயல்கள் தமிழறிவை வளப்படுத்தின. அவையே இவர் வாழ்க்கையாக அமைந்தன என்று கூறுதல் மிகையன்று. தமிழ் நூல்களை ஓய்வின்றி முறையாகப் பாடஞ்சொல்லும் திறத்தில் இவர்காலத்தில் இவரைப் போன்றவர் வேறு யாரும் இல்லை. பலரிடம் பல சமயங்களில் அலைந்து முயன்று தாம் படித்து வந்த வருத்தத்தை இவர் நன்றாக அறிந்தவராதலின் தம்பால் வந்த மாணாக்கர்களுக்குக் கஷ்டத்தை உண்டாக்கக் கூடாதென்று கருதி அவர்கள்பால் அளவற்ற அன்பு பூண்டு பாடஞ்சொல்லிக் கொடுக்கும் இயல்புடையவரானார். மாணாக்கர்களிடம் இவர் தாயைப் போன்ற அன்புடையவராக இருந்தனர்; அவர்களோ தந்தையாகவே எண்ணி’ இவரிடம் பயபக்தியோடு ஒழுகினர். அவர்களுடைய குற்றங்களை இவர் மறந்து விடுவார். அவர்களுக்கு எந்த எந்த வகையில் குறைகள் உண்டோ அவற்றை நீக்குதற்காக முயல்வார்; அவர்கள் தெரிந்து கொள்ளாதபடி அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வார். மாணாக்கர்களேயன்றிப் பிறர் சுற்றத்தாரல்லரென்பது இவருடைய வாழ்வின் நோக்கமாக இருந்தது.

தமிழ் படித்தவர் யாரும் இவரிடத்தில் கவலையின்றிப் பழகலாம்; ஏதாவது கேள்வி கேட்பாரென்றேனும், தருக்குற்றிருப்பாரென்றேனும், தங்களுடைய பிழைப்பைக் கெடுத்து விடுவாரென்றேனும் ஒருவருக்கும் இவர்பால் அச்சம் உண்டாவதில்லை.

தம்முடைய மாணாக்கர்களை நல்ல நிலையில் இருக்கச் செய்ய வேண்டுமென்னும் நினைவு இவருக்கு எப்போதும் உண்டு. தம்மைப் பார்க்கவந்த செல்வர் முதலியோர் தம்முடைய அரிய பிரசங்கத்தைக் கேட்டு ஆனந்தித்துக் கொண்டிருக்கையில் தம்முடைய மாணாக்கர்களை அழைத்து இருக்கச்செய்து அவர்களுக்குத் தெரிந்த பாடல்களை இசையோடு சொல்லச் செய்வதும் பொருள் சொல்லிப் பிரசங்கிக்கச் செய்து கேட்பிப்பதும் இவருடைய வழக்கம். அவர்களுக்கு அநுகூலம் உண்டாகும் விஷயத்தில் எத்தகைய உழைப்பையும் மேற்கொள்வார்.

இவர்பாற் படித்த மாணாக்கர்கள் பலவகையினர். சாதி, சமயம், ஆச்சிரமம் முதலியவற்றில் வேறுபாடுடையவர்கள் பலர் படித்தனர். யாவருக்கும் இவர்பாலிருந்த அன்பு ஒருபடித்தானதே. இவரிடம் படித்தவர்கள் நல்லறிவையும் நன்மதிப்பையும் உயர்நிலையையும் அடைந்தார்கள்; சிலர் ஸம்ஸ்தான வித்துவான்களாகவும் கலாசாலைப் பண்டிதர்களாகவும் இருக்கும் பேறு பெற்றனர். தம்பிரான்களிற் சிலர் நல்ல அதிகாரத்தையும் உயர்ந்த நிலையையும் அடைந்தனர்; சிலர் ஆதீனத்தலைவர்களாகவும் ஆயினர். இவரிடம் ஒருவர் சிலகாலம் படித்தாலும் சிறந்த அறிவுடையவராகி விடுவார். இவருடைய மாணாக்கர்க ளென்றாலே அவர்களுக்குத் தனியாக ஒருமதிப்பு உண்டு. இவருடைய கைராசியை யாவரும் புகழ்வார்கள். இவரிடம் புஸ்தகம் பெற்றவர்கள்கூடத் தமிழ்ப் பயிற்சி உடையவர்களாக விளங்கினார்கள். திருவாவடுதுறை மடத்தில் இராயஸவேலை பார்த்துவந்த பொன்னுசாமி செட்டியாரென்பவர் இளமையில் இவரிடம் ‘வாட்போக்கிக் கலம்பகம்’ என்னும் புஸ்தகத்தைப் பெற்றுப் பின் பிறரிடம் முறையே அநேக நூல்களைப் பாடங்கேட்டுத் தமிழ்நூற் பயிற்சியும் செய்யுளியற்றும் வன்மையும் சொல் வன்மையும் உடையவராகிப் புகழோடு விளங்கினர்.

பாடஞ்சொல்லுதல்

பாடஞ் சொல்வதில் இந்நாவலர் பெருந்தகைக்குச் சலிப்பே உண்டாவதில்லை. தமக்குத் தெரிந்தவற்றை யாவரும் அறிந்துகொள்ள வேண்டுமென்னும் உபகார சிந்தையுடையவர். மாணாக்கர்களுடைய தரமறிந்து பாடஞ் சொல்வார். பாடஞ் சொல்லுங் காலத்தில் கையில் புத்தகம் வைத்துக்கொண்டு இவர் சொல்வதை நான் பார்த்ததேயில்லை. பாடஞ்சொல்லும் உரை நடை, செய்யுட்கள் எல்லாம் இவருக்கு மனப்பாடமாகவே இருக்கும். இவர் இன்ன சமயங்களிலேதான் பாடஞ்சொல்லுவது என்ற நியமம் வைத்துக் கொள்ளவில்லை. சமயம் நேரும்பொழுதெல்லாம் பாடஞ் சொல்வதே இவருடைய வழக்கமாக இருந்தது. வண்டியிற் செல்லும்பொழுதும், உண்ணும் பொழுதும் உறங்கத் தொடங்கிய பொழுதும் கூட இவரிடம் பாடம் நடைபெறும்.

பாடஞ் சொல்லும்பொழுது கடின பதங்களுக்கு மட்டும் பொருள் சொல்வார். கற்பனைகளை இன்றியமையாத இடங்களில் விளக்கிக் காட்டுவார். இன்ன கருத்துக்களை ஒழுங்காக மனத்தில் வைத்திருக்க வேண்டுமென்று கூறுவார். தேவாரம், திருவாசகம், கல்லாடம், பெரிய புராணம், திருக்குறள், காஞ்சிப் புராணம், கம்ப ராமாயணம் என்பவற்றிலிருந்து மேற்கோள்களை எடுத்துச் சொல்லி மாணாக்கர் மனத்தில் கருத்துக்கள் தெளிவாகப் பதியும்படி செய்வார். பெட்டி நிறையப் பணத்தை நிரப்பிவைத்துக் கொண்டிருக்கும் வண்மையாளன் தடையின்றி எடுத்து வாரி வாரி வழங்குவது போலத் தமது உள்ளக் களஞ்சியத்தில் பல நாட்களாகச் சேமித்து வைத்த பொருள்களை யெல்லாம் பாடஞ்சொல்லுகையில் மாணாக்கர்களுக்கு வழங்கி வரும்பொழுது, “இவ்வளவு நூல்களையும் இவர் எப்படி மனத்திற் பதித்து வைத்துக்கெண்டாரோ!” என்னும் ஆச்சரியம் அயலிலிருப்பவர்களுக்கு உண்டாகும். நடக்கும் புஸ்தகசாலையென்று இவரைக் கூறலாம். பாடஞ்சொல்லும் நூல்களின் உரைகளில் மேற்கோளாக வரும் செய்யுட்களுக்குப் பொருள் கூறுவார். புலவர்களைப் பற்றிய வரலாறுகளை அடிக்கடி சொல்லுவார். அருங்கருத்துக்களைச் சொல்லிவரும்பொழுது அவற்றைத் தாம் அறிந்த வரலாற்றையும் கூறுவதுண்டு. மாணாக்கர்களுக்குச் செய்யுள் இயற்றும் பழக்கம் உண்டாக வேண்டுமென்னும் எண்ணத்தினால் அடிக்கடி சமஸ்யைகளை அவர்களுக்குக் கொடுத்துச் செய்யுள் செய்யச் சொல்வார்.

பண்டைக்காலமுதல் நூல்களில் வழங்கிவந்த சொற்பிரயோகங்களை நாம் மாற்றுதல் பிழையென்று சொல்வார். வடமொழிச்சொற்களைத் திரித்து வழங்கும்பொழுது மனம்போனவாறு திரித்தலை இவர் விரும்பார். எல்லாச் சொற்களையும் திரித்தே வழங்க வேண்டுமென்பது இவருக்கு உடன்பாடன்று; “என் பெயரைத் திரித்து மீனாக்கிசுந்தரமென்று வழங்கினால் நன்றாக இருக்குமா?” என்று கேட்பார். கோகநகம், ஆதவன், மானிடன் என்ற சொற்பிரயோகங்கள் அடிப்பட்ட வழக்காக நூல்களில் அமைந்துவிட்டமையால் அவற்றை வடமொழிப்படியே இருக்க வேண்டுமென்று கருதித் திருத்துதல் நன்றன்று என்பர். சொல்லுக்கு மதிப்பு உண்டாவது, புலவர்களுடைய ஆட்சியில் அது வழங்கி வருவதனால்தான்; ஆதலின் சொல்லின் உருவத்தையும் பிறதொடர்புகளையும் ஆராய்வதினும் ஆன்றோர் ஆட்சியில் உள்ளனவா என்பதை ஆராய்வதே சிறந்ததென்பது இவர் கருத்து.

மனஸ் என்பதை ‘மனது’ என்று வழங்கக் கூடாதென்பது இவர் கொள்கை; “மனஸ் என்ற வடமொழிச்சொல் மனம் என்றுதான் வரும்; சிரஸ் என்பது சிரமென்று வருகிறதேயன்றிச் சிரது என்று வருவதில்லை” என்பார். இத்தகைய செய்திகளையெல்லாம் பாடஞ்சொல்லுகையில் மாணாக்கர்களுக்குக் கூறுவார். “இலக்கண அறிவு ஒருவனுக்கு இன்றியமையாததே. ஆயினும் இலக்கிய பாடங்களை வாசித்த பின்பே இலக்கண நூல்களைக் கற்றல் பயன்விளைக்கும்” என்று இவர் சொல்வதுண்டு.

அயலிடம் சென்றபொழுது யாரேனும் இவரிடம் கடினமான பாடல்களுக்குப் பொருள் கேட்பின் அவர்களுக்கு அவற்றை விளக்கிவிட்டுப் பின்பு வீட்டுக்கு வந்து மாணாக்கர்களுக்கும் அவற்றைக் கூறி விளக்குவது இவரது வழக்கம்.

கல்விப் பெருமை

இவருடைய கல்வி மிகவும் ஆழமும் அகலமும் உடையதாக இருந்தது; “அளக்கலாகா அளவும் பொருளும்” உடைய இவரது அறிவின் திறம் ஒவ்வொருநாளும் புதியதாகவே தோற்றியது; இளமை தொடங்கியே தமிழ் நூல்களை முறையாகப் பயின்று பயின்று உரம் பெற்றதாக இருந்தது. படித்தவர்களாக எண்ணிய யாவரிடமும் பழகி அவரவர்களுக்குத் தெரிந்தவற்றை இவர் இளமை தொடங்கியே கற்றனர். தமிழ் நூலாக எது கிடைப்பினும் அதனை வாசித்து மெய்ப்பொருள் அறிந்தனர். இங்ஙனம் துளிதுளியாகச் சேர்த்த அறிவு பலதுளி பெருவெள்ளமென்பது போல ஒரு பெரிய கடலாகப் பெருகி நின்றது. பிற்காலத்தில் இவர் பாடஞ் சொல்லும்போது நன்றாகத் தெளிந்த அறிவோடு கருத்துக்களை எடுத்துக் கூறும் வன்மையும் பாடஞ்சொல்லும் நூல்களிலுள்ள பொருள்களைத் தம்முடையனவாகக் கொண்டுவிட்ட நிலையும் இவர் இளமைதொடங்கிச் செய்துவந்த முயற்சிகளின் பயனென்றே கூறவேண்டும். சிலரைப் போலக் கல்வி விஷயத்தில் இவருக்குத் திருப்தி பிறக்கவில்லை. எந்த இடத்திற்குப் போனாலும் அங்கே பழைய சுவடி ஏதாவது இருக்கின்றதாவென்று பார்ப்பார். இருந்தால் உடனே வாங்கி ஒருமுறை வாசித்துவிட்டுப் பொருள் சொல்வார்; சில சமயங்களிற் பிரதி செய்துவைத்துக் கொள்வதுமுண்டு. சந்தேகம் நேரிடின் தெரிந்தவர்களைச் சந்திக்கும்பொழுது விசாரித்துத் தீர்த்துக் கொள்ளுவார்.

இப்புலவர்பிரான் பல இடங்களில் பலவகையில் சேகரித்துவைத்திருந்த தம் அறிவைத் தம் மாணவர்களுக்கு வரையாது வழங்கினமையால், பிரபந்தங்கள் உயிர்பெற்றன. அதுகாறும் தெரிவிப்பாரின்றிக் கிடந்த குமரகுருபர சுவாமிகள் பிரபந்தங்களிற்சில, சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தங்களிற் சில, சிவஞான முனிவர் பிரபந்தங்களிற்சில, இன்னும் வேறுசில தமிழ் நாட்டாருடைய கைகளில் விளங்கின. இவர் பாடஞ் சொல்லியதனாலேயே அப்பிரபந்தங்களின் நயங்ளைத் தமிழ்மக்கள் உணரத் தலைப்பட்டனர். கம்பரந்தாதி, முல்லையந்தாதி முதலிய நூல்களுக்கு இவர் சொல்லி எழுதுவித்த உரைகளே பின்பு மதுரை இராமசாமிப் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டன. காஞ்சிப் புராணம், தணிகைப் புராணம், திருவானைக்காப் புராணம் முதலியவற்றிற்கு இவர் பாடஞ்சொன்ன உரையே பிற்காலத்தில் தமிழ்நாட்டில் வழங்குவதாயிற்று.

பலருடைய வேண்டுகோளுக்கு இணங்கி இவர் செவ்வந்திப் புராணம், காஞ்சிப் புராணத்தின் முதற்பாகம், திருவானைக்காப் புராணம், கல்லாட மூலம் முதலியவற்றைப் பதிப்பித்தனர்.

கையெழுத்து

நூல்களைத் தொகுத்து வைப்பதிலும் தாமே எழுதிச் சேர்ப்பதிலும் இவருக்கு அவா மிகுதி. இளமை தொடங்கியே ஏட்டில் எழுதும் வழக்கம் இவருக்கு இருந்தமையின் இவருடைய எழுத்து அழகாக முத்துக்கோத்தாற்போல இருக்கும். ஒவ்வொரு வரியும் கோணாமல் ஒழுங்காக இருக்கும்; எழுத்து ஒன்றுடன் ஒன்று சேராது. இவரால் எழுதப்பெற்ற சுவடிகளுக்குக் கணக்கேயில்லை. கம்ப ராமாயணத்தை மூன்றுமுறை எழுதியிருக்கிறார். மாணாக்கர்களுக்கும் ஏட்டில் எழுதும் பயிற்சியை உண்டாக்கினர்.

இவர் தம் கையினால் நூல்களைக் காகிதங்களில் எழுதியதில்லை. யாருக்கேனும் கடிதம் எழுத வேண்டுமாயின் காகிதத்தில் உடன் இருப்பவரைக்கொண்டு எழுதுவித்து இறுதியில் ‘தி.மீனாட்சிசுந்தரம்’ என்று கையெழுத்திடுவார்; ‘தி’ என்பது திரிசிரபுரம் என்பதன் முதற் குறிப்பாகும். ஒருவரும் அருகில் இல்லையானால் தாமே எழுதுவார். காகிதத்தில் எழுதும் எழுத்தின் அமைப்புக்கும் ஏட்டுச்சுவடியில் எழுதும் எழுத்தின் அமைப்புக்கும் சிறிது வேறுபாடுண்டு.

தமிழன்பு

தமிழ் நூல்களிடத்தில் இவருக்கு இருந்த அன்பு அளவற்றது. ஒரு நூலைப் படித்து வருகையில் அதில் முழுதும் ஈடுபட்டு, உணவு உறக்கம் முதலியவற்றையும் மறந்துவிடுவார்; தமிழ்நூல் சில சமயங்களில் இவருடைய நோய்க்கு மருந்தாகவும் உதவியிருக்கிறது. நல்ல நூல்களில் உள்ள சிறந்த பகுதிகளைப் படிக்கும்பொழுதும் பாடஞ் சொல்லும்பொழுதும் மனமுருகிக் கண்ணீர் வீழ்த்துவார். தமிழ்ப் புலவர்களுள் கச்சியப்ப முனிவரை இவர் பக்தியோடு வழிபட்டுப் பாராட்டுவார்; “செய்யுள் செய்துவரும்பொழுது தடைப்பட்டால் கச்சியப்ப முனிவரைத் தியானிப்பேன். உடனே விரைவாகக் கருத்துக்களும் சொற்களும் தடையின்றி எழும்” என்று இவர் சொல்லியதைக் கேட்டிருக்கிறேன்.

சேக்கிழார், கம்பர், நெற்குன்றவாண முதலியார், அம்பிகாபதி, கவி வீரராகவ முதலியார், வரதுங்கராமபாண்டியர், அதிவீரராமபாண்டியர், திருவாரூர் இலக்கண விளக்கம் வைத்திய நாததேசிகர், துறைமங்கலம் சிவப்பிரகாசர், சிவஞானமுனிவர் என்பவர்களுடைய நூல்களில் இவருக்கு விருப்பம் அதிகம். கம்பருடைய செய்யுட்களைப் படித்து வருகையில் இடையிடையே அவற்றின் சுவையில் ஈடுபட்டு, “இவையெல்லாம் நினைத்துப் பாடிய செய்யுட்களா?” என்று கூறுவதுண்டு. திருப்புகலூரந்தாதியிலுள்ள திரிபின் அமைப்பை வியப்பார். திருச்சிற்றம்பலக் கோவையாரிலுள்ள செய்யுட்களை அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருப்பார். கல்லாடப் பகுதிகள் இவருக்கு அடிக்கடி ஞாபகத்துக்கு வரும். தேவாரப் பகுதிகளின் கருத்தைச் சில சில சமயங்களில் எடுத்துக் காட்டுவதுண்டு. இலக்கண விளக்கத்தில் இவருக்கு மதிப்பு அதிகம். சைவரால் இயற்றப்பெற்ற நூலென்பதும் அந்நூல் அகத்திணையியலில், திருச்சிற்றம்பலக் கோவையாரிலுள்ள துறைகளை அமைத்துக்கொள்வதற்கு ஏற்ற இலக்கணங்களையும் பொருத்தி, அவற்றிற்கு அக்கோவையாரிலுள்ள செய்யுட்களை இடையிடையே உதாரணமாகக் காட்டியிருப்ப தும் அதற்குரிய காரணங்களாம். அக்காரணங்களை அடிக்கடி கூறி வைத்தியநாத தேசிகரை இவர் பாராட்டுவதுண்டு. சிவஞான முனிவருடைய செய்யுள் நடையிலும் வசன நடையிலும் இவருக்கு உவப்பு அதிகம். கச்சியப்ப முனிவர் நூல்களில் உள்ள அரிய அமைப்புக்களையும் சங்கநூற் பிரயோகங்களையும் பற்றி இவர் அதிகமாகப் புகழ்வார். அவருடைய நூலமைப்பையே இவர் பெரும்பாலும் பின்பற்றிப் பாடுவார்.

கவித்திறன்

இக் கவிஞர்பெருமானது கவித்திறன் இவருடைய வரலாற்றாலும் நூல்களாலும் அறியப்படும். நினைத்ததை நினைத்தவண்ணம் வார்த்தைகளால் சொல்வதே மிகவும் அரிய செயல். மனத்தில் தோன்றிய இனிய கருத்துக்களைச் செய்யுளுருவத்தில் அமைக்கும் கவித்வம் பாராட்டற்குரியதேயாம். கருத்துக்களை நினைக்கலாம்; நினைத்தவற்றைச் சொல்லலாம்; சொல்வதையே அழகுபெறப் பன்னலாம்; அதனையே கவியாக அமைக்கலாம்; ஆனால் நினைத்தவற்றை நினைத்த போதெல்லாம் நினைத்த வழியே தமிழ்ச் சொற்கள் ஏவல்கேட்ப வருத்தமின்றி விளையாட்டாகக் கவிபாடும் திறமை எல்லாக் கவிஞர்களுக்கும் வாய்ப்பதன்று; அத்தகைய திறமையையுடைய கவிஞரை மற்ற  புலவர்களோடு ஒருங்கு எண்ணுதல் தகாது. அவர்கள் பிறப்பிலேயே கவித்வ சக்தியுடன் பிறந்தவர்களாவார்கள். அவ்வகைக் கவிஞர் வரிசையில் சேர்ந்தவரே இந்த மகாகவி. *3 சொற்களை வருந்தித் தேடி அகராதியையும் நிகண்டுகளையும் அடுக்கி வைத்துக்கொண்டு கவிபாடுவதென்பது இவர்பால் ஒருபொழுதும் இல்லை.

சுவையற்ற பாடல்களை உண்டாக்கும் உலைக்கூடமாக இவர் மனம் இராமல், வளம் பெற்ற செய்யுட்களின் விளைநிலமாகவே இருந்தது. செய்யுள் இயற்றுவது இவருக்குத் தண்ணீர்பட்டபாடு. எவ்வளவோ ஆயிரக்கணக்காக இவர் செய்யுட்களை இயற்றினாலும் இவருக்கு முழுத் திருப்தி உண்டாகவில்லை. இவருடைய நாத்தினவு முற்றும் தீரவேயில்லை. இவருடைய ஆற்றலை இயன்றவரையில் பயனுறச்செய்ய வேண்டுமென்னும் நோக்கத்தோடு தக்கவண்ணம் யாரேனும் இவரை ஆதரித்து ஊக்கத்தை அளித்து வந்திருந்தால் இவர் இன்னும் எவ்வளவோ நூல்களை இயற்றியிருப்பார். சிலசில காலங்களில் சிலர் சிலரால் தங்கள் தங்கள் கருத்துக்கு இயைய இன்ன இன்னவகையாகச் செய்ய வேண்டுமென்று தூண்டப்பட்டுச் செய்த நூல்களே இப்பொழுது இருக்கின்றன. இவருடைய புலமைக்கடலிலிருந்து ஊற்றெடுத்த சிறிய ஊற்றுக்கள் என்றே அவற்றைச் சொல்ல வேண்டும். அக் கடல்முழுதும் மடை திறந்திருந்தால் தமிழ்நாடு முழுவதும் இவருடைய பலதுறைப்பட்ட கவிவெள்ளத்தில் முழுகி இன்புற்றிருக்கும்.

செய்யுள் இயற்றுவதெனின் அதற்கென்று தனியிடம், தனிக் காலம், தனியான செளகரியங்கள், ஓய்வு முதலியவற்றை இவர் எதிர்பார்ப்பதே இல்லை. இன்ன காலத்தில் தான் பாடுவது என்ற வரையறையும் இல்லை. பிரபுக்களும் அன்பர்களும் வந்து பேசிக்கொண்டிருக்கையிலேயே அருகிலிருக்கும் ஒரு மாணாக்கரிடம் இவர் ஒரு நூலுக்குரிய செய்யுட்களைச் சொல்லி எழுதுவித்துக்கொண்டே யிருப்பார்.

இவர் பெரும்பாலும் யோசித்துக்கொண்டேயிருக்கும் இயல்புடையவர். பாடவேண்டிய விஷயங்களை ஒருவகையாக மனத்தில் ஒழுங்குபடுத்திக்கொண்டு பின்பு பாட ஆரம்பித்தால் ஒரே மூச்சில் நூற்றுக்கணக்காகப் பாடுவார். செய்யுட்களைச் சொல்லிக்கொண்டே வருகையில் மனப்பாடமான நூல்களில் உள்ள செய்யுட்களைக் கூறுகின்றாரென்று தோற்றுமேயொழியப் புதிய செய்யுட்களை யோசித்துச் சொல்லி வருகிறாரென்று தோற்றாது. மிகவும் அரிய கற்பனைகளை மனத்திலே ஒழுங்குபண்ணிச் சில நிமிஷ நேரங்களிற் சொல்லிவிடுவார். நூல்களுக்கு இடையிடையே அமைந்த எதுகைக் கட்டுள்ள பாடல்களை இளைப்பாற்றுப் பாடல்களென்பார்.

இவர் இயற்றியவற்றைப் புராணங்கள், பிரபந்தங்கள், தனிப் பாடல்கள், சிறப்புப்பாயிரங்களென நான்கு வகையாகப் பிரிக்கலாம். புராணங்களைக் காப்பிய இலக்கணப்படி அமைக்கும் முறையை மேற்கொண்ட புலவர்களுள் இவரைப்போல அளவிற் பலவாகவுள்ள நூல்களைச் செய்தவர்கள் வேறெவரும் இல்லை. இவருக்கு முன்பிருந்த தமிழ்ப் புலவர்களிற் சிலர், சில புராணங்களை மொழிபெயர்த்துக் காப்பியங்களாகச் செய்திருக்கின்றனர். அவர்களுடைய நூல்களிற் காணப்படும் அமைப்புக்கள் அனைத்தையும் இவருடைய நூல்களிற் காணலாம்.

நூல்களின் இயல்பு

இவருடைய நூல்களிற் பெரும்பான்மையானவை புராணங்களே. இவருடைய வாக்கால் தங்கள் தங்கள் ஊருக்கு ஒரு புராணமேனும் ஒரு பிரபந்தமேனும் பெற வேண்டுமென்று அக்காலத்தில் சிவஸ்தலங்களில் இருந்தவர்கள் விரும்பினார்கள். பழைய புராணம் இருந்தாலும், நாட்டுச் சிறப்பு நகரச் சிறப்பு முதலிய காப்பிய இலக்கண அமைதியுடன் செய்ய வேண்டுமென்னும் கருத்தால் பலர் இவரை மீண்டும் ஒரு புராணம் இயற்றித் தரும்படி வற்புறுத்தி வேண்டுவதுண்டு. இவர் புராணங்கள் இயற்றிய தலங்களில் பெரும்பான்மையானவற்றிற்குப் பழைய புராணங்கள் உண்டு. ஆனாலும் இவருடைய புராணத்திற்கு மதிப்பு அதிகம். இவராற் புராணம் முதலியவை பாடப் பெற்ற தலங்கள் பல சொற்பணிகளும், கற்பணிகளும், பொற்பணிகளும் இயற்றப்பெற்றுப் பலவகையாலும் வளர்ச்சியுற்று விளங்குகின்றன என்பர். திருச்சிராப்பள்ளியில் சிரஸ்தேதாராக இருந்த ராவ்பகதூர் தி.பட்டாபிராம பிள்ளை யென்னும் கனவான் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்குத் தம்முடைய கருத்தை அமைத்து அகவல் வடிவமாக விடுத்த விண்ணப்பமொன்றில் பிள்ளையவர்களை, ‘புராணம் பாடும் புலவன்’ என்று குறித்திருந்தனர்.

ஏறக்குறைய முப்பது வருஷங்களுக்கு முன் நானும் என்னுடைய தம்பியும் சில நண்பர்களும் திரு எவ்வுளூரிலிருந்து திருவெண்பாக்கம் என்னும் சிவஸ்தல தரிசனத்திற்காக நடந்து போய்க் கொண்டிருந்தோம். அப்பொழுது எதிரில் வந்த எழுபது பிராயமுடைய வேளாளரொருவரிடம் திருவெண்பாக்கத்தைப் பற்றிய விஷயங்களை விசாரிக்கத் தொடங்கினேன். அவர் அத்தல சரித்திரங்களைச் சொல்லிக்கொண்டே உடன் வந்தார். பின்பு நான், “இந்த ஸ்தலத்திற்குப் புராணம் உண்டா?” என்றேன். அவர், “புராணம் பாடுவதற்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களா இருக்கிறார்கள்? அந்த மகான் இருந்தால் இதற்கும் ஒரு புராணம் பாடியிருப்பார்” என்றார். அந்தச் சொற்கள் எனது அகக்கண்ணின்முன் பிள்ளையவர்களுடைய திருவுருவத்தையும் செயல்களையும் தோற்றச் செய்தன; நெஞ்சம் உருகியது. வந்த அன்பர்களிடம், “ஜனசஞ்சாரமற்ற இந்தக் காட்டிலே கூடப் பிள்ளையவர்களுடைய புகழ் பரவியிருக்கிறது. பார்த்தீர்களா!” என்று சொன்னேன்.

சில புராணங்கள் முற்றுப் பெறுவதற்கு முன்பே அரங்கேற்றத் தொடங்கப்பெறும்; செய்யுளியற்றுதலும் அரங்கேற்றுதலும் அடுத்தடுத்து நிகழும். உடனிருந்தவர்களால் சிறப்புப்பாயிரம் இயற்றிக் கடவுள் வாழ்த்தின் இறுதியிற் சேர்க்கப்பெறுவது வழக்கம். இங்ஙனம் செய்வித்துச் சேர்ப்பது பண்டைகாலத்து முறையென்று தெரிகிறது.

இவர் இயற்றும் புராணக் காப்பியங்களில் கடவுள் வாழ்த்திலும் அவையடக்கத்திலும், “நூனுதல் பொருளைத் தன்னகத் தடக்கி” என்னும் இலக்கணப்படி நூலில் வரும் செய்திகளை உரிய இடங்களிற் பலவகையாக அமைப்பார். அவையடக்கங்கள் பலவற்றில் இலக்கணச் செய்திகளையும் சாஸ்திரக் கருத்துக்களையும் காணலாம். பெரும்பான்மையான புராணங்களில் கடவுள் வாழ்த்தில் சிவபெருமான் வணக்கத்தில் மடக்கு அமைந்திருக்கும். நாட்டுச் சிறப்பில் இன்னநாடு என்று சொல்லும்பொழுது செய்யுட்களின் இறுதியில் மடக்கை அமைப்பதும் ஐந்திணைகளை வருணிக்கும்பொழுது அவ்வத்திணைகளில் அமைந்துள்ள சிவஸ்தலங்களைக் கூறுவதும் இவர் இயல்பு. இவை பெரிய புராணத்தால் அறிந்தவை. சித்திரகவிகளைத் திருநாகைக்காரோணப் புராணம் அம்பர்ப்புராணம் என்பவற்றில் இவர் அமைத்திருக்கிறார். காஞ்சிப் புராணத்தின் முதற்காண்டத்தில் இத்தகைய அமைப்பு இருக்கிறது. தோத்திரம் வருமிடங்களில் ஒத்தாழிசைக் கலிப்பா முதலியவற்றையும் அமைப்பர்; இது சீகாளத்திப் புராணம் முதலியவற்றிலிருந்து அறிந்து கொண்டது. வரலாறுகளைச் சொல்லும்பொழுது வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை முதலிய சிறு செய்யுட்களாற் கூறுவர்; சில சமயங்களிற் கட்டளைக் கலித்துறையாலும் பாடுவர்.

தேவாரச் சந்தம் இவருடைய நூற்செய்யுட்களில் அமைந்து விளங்குதலை அங்கங்கே காணலாம். சைவசித்தாந்த சாஸ்திரங்களிலுள்ள கருத்துக்களைப் பல வேறு உருவங்களில் இவர் நூல்களில் அமைத்துள்ளார். இவருடைய நூல்களிற் பெரும்பாலனவற்றின் இறுதிச் செய்யுளில் ஸ்ரீ நடராஜப் பெருமான் குஞ்சிதபாதத்தைப் பற்றிய வாழ்த்தைக் காணலாம். எந்த நூலிலேனும் ஒரு புதுக்கருத்தை அறிந்தாராயின் அதனைப் பின்னும் அழகுபடுத்தித் தாம் இயற்றும் நூலில் பொருத்திவிடுவார். தாம் கண்டும் கேட்டும் அநுபவித்தும் அறிந்தவற்றைச் செய்யுட்களில் அங்கங்கே அமைத்துப் பாடுவார். தம்முடைய ஞானாசாரிய ஸ்தானமாகிய திருவாவடுதுறையிலுள்ள மடாலயத்தையும் குருமூர்த்திகளையும் பல இடங்களில் பாராட்டிக் கொண்டே செல்வது இவருடைய வழக்கம்.

இவருடைய பிரபந்தங்களில் அவ்வப்பிரபந்தங்களின் இலக்கணம் நன்றாக அமைந்திருக்கும். பிள்ளைத்தமிழ்களில் இவர் பகழிக் கூத்தரையும் குமரகுருபரரையும் ஒப்பர். கோவைகளில் கற்பனைகளையும் நீதிகளையும் பண்டைப்புலவர் சொற்பொருள்களையும் காணலாம். இவர் இயற்றிய திருவிடைமருதூருலாவுக்கு இணையாக உள்ள ஓருலாவைக் காண்டலரிது. யமகந்திரிபுவகைகளில் வேறெவரும் இயற்றி இராத விசித்திரமான அமைப்புக்களை இவர் வாக்கிற் காணலாம்.

இவர் இயற்றிய தனிப்பாடல்கள் பலவகையாகும். சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவண்ணம் சாதுரியமாகப் பாடிய பாடல்கள் அளவிறந்தன. ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு வரலாறு உண்டு. அவற்றையன்றி, நன்றியறிவின் மிகுதியால், தமக்கு உபகாரம் செய்தவர்களை அவ்வப்போது பாடிய செய்யுட்கள் பல. அவை அன்புமிகுதியால் பாடப்பட்டனவாதலின் சில செய்யுட்கள் உயர்வு நவிற்சியாகத் தோற்றும். யாருக்கேனும் கடிதமெழுதுகையில் தலைப்பில் ஒரு பாடலை எழுதுவிப்பது இவருடைய வழக்கம். அங்ஙனம் இவர் எழுதிய பாடல்கள் நூற்றுக்கணக்காக இருக்கும். வடமொழி வித்துவான்கள் அவ்வப்பொழுது கூறும் சுலோகங்களை உடனே மொழிபெயர்த்துச் சொல்லிக்காட்டுவார். அவ்வாறு இயற்றிய செய்யுட்கள் பல. பிறருக்காகப் பாடிக்கொடுத்தவை எத்தனையோ பல.

இவரால் இயற்றப்பெற்ற சிறப்புப்பாயிரங்கள் நூலாசிரியருடைய தகுதிக்கேற்ப அமைந்திருக்கும். இவரிடமிருந்து சிறப்புப்பாயிரம் பெறுவதனால் நூலியற்றுபவர்களுக்கு உயர்ந்த மதிப்பு உண்டாயிற்று. அதனால் நூலியற்றுபவர்கள் பலர் இவருடைய சிறப்புப்பாயிரம் பெறப் பலவகையில் முயல்வார்கள். அகவலாகவும் விருத்தங்களாகவும் தரவு கொச்சகமாகவும் இவர் சிறப்புப் பாயிரங்கள் இயற்றியளிப்பதுண்டு. சிறந்த நூலாயின் அகவலாலும் பல விருத்தங்களாலும் சிறப்புப்பாயிரத்தை அமைப்பார். இல்லையெனின் ஒரு செய்யுளாலேனும், இரண்டு செய்யுளாலேனும் இன்ன நூலை இன்னார் செய்தார் என்னும் பொருள் மட்டும் அமையச் செய்து அளித்துவிடுவார். நூல்களுக்குச் சிறப்புப் பாயிரங்கள் அளிக்கும் முறை இவர் காலத்திலேதான் மிகுதியாக வழங்கலுற்றது.

இயற்றிய நூல்களின் பட்டியல்:

இவர் இயற்றிய நூல்கள் பலவற்றுள் தெரியாதவை சில. தெரிந்தவற்றுள் புராணங்கள் 22; பிற காப்பியங்கள் 6; பிரபந்தங்கள் 45; தனிப்பாடல்கள் அளவிறந்தன.

[$] இக் குறியிடப்பட்டவை பூர்த்தியாகாத உள்ள நூல்கள்.  
[§] இக் குறியிடப்பட்டவை இப்பொழுது கிடைக்கப் பெறாதவை. 
[#] அச்சிடப்படாத நூல்கள்.  
[@] அச்சிடப்பெற்றும் இப்பொழுது கிடைத்தற்கரியன.  

1. தல புராணங்கள் 

(1) [#] அம்பர்ப் புராணம்
(2) [#] ஆற்றூர்ப் புராணம்
(3) [@] உறையூர்ப் புராணம்
(4) [@] கண்டதேவிப் புராணம்
(5) [@] ஸ்ரீ காசிரகசியம்
(6) [@] குறுக்கைப் புராணம்
(7) [@] கோயிலூர்ப் புராணம்
(8) [@] சூரைமாநகர்ப் புராணம்
(9) தனியூர்ப் புராணம்
(10) [$] தியாகராச லீலை
(11) [@] திருக்குடந்தைப் புராணம்
(12) [#] திருத்துருத்திப் புராணம்
(13) [@] திரு நாகைக் காரோணப் புராணம்
(14) [@] திருப்பெருந்துறைப் புராணம்
(15) [$] [§] திருமயிலைப் புராணம்
(16) [$] திருவரன்குளப் புராணம்
(17) [$] பட்டீச்சுரப் புராணம்
(18). மண்ணிப்படிக்கரைப் புராணம்
(19) [@] மாயூரப் புராணம்
(20) [@] வாளொளிபுற்றூர்ப் புராணம்
(21) [#] விளத்தொட்டிப் புராணம்
(22) [@] வீரவனப் புராணம்.

2. சரித்திரம் 

(1) ஆதி குமரகுருபரஸ்வாமிகள் சரித்திரம்
(2) [$] சிவஞான யோகிகள் சரித்திரம்
(3) [§] மயில்ராவணன் சரித்திரம்.

3. மான்மியம் 

குருபூசை மான்மியம்

4. பிற காப்பியங்கள் 

(1) குசேலோ பாக்கியானம்.
(2) சூத சங்கிதை.

5. பதிகம் 

(1) கச்சி விநாயகர் பதிகம்
(2) சுப்பிரமணியசுவாமி பதிகம்
(3) [§] திட்டகுடிப் பதிகம்
(4) மருதவாணர் பதிகம்

6. பதிற்றுப்பத்தந்தாதி 

(1) [§] தண்டபாணி பதிற்றுப் பத்தந்தாதி
(2) திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பதிற்றுப்பத்தந்தாதி
(3) திருவூறைப் பதிற்றுப்பத்தந்தாதி.
(4) பழசைப் பதிற்றுப்பத்தந்தாதி
(5) பாலைவனப் பதிற்றுப்பத்தந்தாதி
(6) பூவாளூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி

7. திரிபந்தாதி 

(1) குடந்தைத் திரிபந்தாதி
(2) திருப்பைஞ்ஞீலித் திரிபந்தாதி
(3) [§] திருவானைக்காத் திரிபந்தாதி
(4) திருவிடைமருதூர்த் திரிபந்தாதி.

8. யமக அந்தாதி 

(1) திருச்சிராமலை யமக அந்தாதி
(2) திருவாவடுதுறை யமக அந்தாதி
(3) தில்லை யமக அந்தாதி.

9. வெண்பா அந்தாதி 

[§] எறும்பீச்சரம் வெண்பா அந்தாதி.

10. மாலை 

(1) அகிலாண்டநாயகி மாலை
(2) கற்குடி மாலை
(3) சிதம்பரேசர் மாலை
(4) சுப்பிரமணிய தேசிகர் மாலை
(5) சச்சிதானந்த தேசிகர் மாலை
(6) சவராயலு நாயகர் மாலை
(7) சித்திரச் சத்திரப் புகழ்ச்சி மாலை.

11. பிள்ளைத்தமிழ் 

(1) அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழ்
(2) காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்
(3) சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
(4) திருவிடைக்கழி முருகர் பிள்ளைத்தமிழ்
(5) திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்
(6) [§] பாகம்பிரியாள் பிள்ளைத்தமிழ்
(7) [§] பிரம்மவித்தியாநாயகி பிள்ளைத்தமிழ்
(8) பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்
(9) மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்
(10) அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்

12. கலம்பகம் 

(1) வாட்போக்கிக் கலம்பகம்
(2) அம்பலவாண தேசிகர் கலம்பகம்.

13. கோவை 

(1) சீகாழிக் கோவை
(2) குளத்தூர்க் கோவை
(3) வியாசைக் கோவை

14. உலா 

திருவிடைமருதூருலா.

15. தூது 

(1) சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது
(2) [§] தானப்பாசாரியார் தசவிடுதூது.

16. குறவஞ்சி 

[+] திருவிடைக்கழிக் குறவஞ்சி.

17. சிலேடை வெண்பா 

[$] [§] திருவாவடுதுறைச் சிலேடை வெண்பா.

18. வேறு 

(1) கப்பற்பாட்டு
(2) குருபரம்பரை அகவல்
(3) திருஞானசம்பந்தமூர்த்தி
(4) பொன்னூசல்
(5) மங்களம்
(6) லாலி நாயனார் ஆனந்தக் களிப்பு
(7) வாழ்த்து

இவற்றையன்றி இவர் வேறு பல நூல்களை இயற்றவேண்டுமென்று எண்ணியிருந்ததுண்டு. குறிஞ்சித்திணை வளங்கள் நிறைந்து விளங்கும் திருக்குற்றாலத்திற்கு ஒரு கோவை பாடவேண்டுமென்று எண்ணியிருந்தனர். அவ்வெண்ணம் என்ன காரணத்தாலோ நிறைவேறவில்லை.

வசனம் எழுதுவதைக் காட்டிலும் செய்யுள் இயற்றுவதிலேதான் இவருக்கு விருப்பம் அதிகம். இவர் எழுதும் கடிதங்கள் எளிய வசன நடையில் சுருக்கமாக அமைந்திருக்கும்.

பேச்சு

இவருடைய பேச்சு யாவருக்கும் விளங்கும்படி இருக்கும். பேச்சிலேயே இவருடைய சாந்த இயல்பு வெளியாகும். புராணப் பிரசங்கம் செய்யும்பொழுது ஒவ்வொரு கருத்தையும் விரிவாக எடுத்துக் கூறிச் செல்வார். விரைவின்றியும் தெளிவாகவும் இடையிடையே மேற்கோள்கள் காட்டியும் பதசாரங்கள் சொல்லியும் பிரசங்கம் செய்வார்.

‘எல்லாம் கூடிக்கூடியும்’ என்னும் தொடர் இவருடைய பேச்சில் அடிக்கடி வரும். ‘ஊக்கம்’ என்னும் சொல்லை இடையிடையே இவரோடு பேசிவருகையில் கேட்கலாம். மாணாக்கர்களிடம் ஏதாவது சொல்வதானால், ‘என்னப்பா’ என்றாவது ‘அப்பா’ என்றாவது சொல்லிவிட்டுத்தான் செய்திகளைச் சொல்லத்தொடங்குவார். கல்வியின் இயல்பை அறியாமல் கௌரவத்திற்காக மட்டும் யாரேனும் ஒருவர்
உதாரகுணமுடையவராகத் தோற்றினால் அவர்பால் தம்முடைய மாணாக்கர்களேனும் வேறு யாரேனும் சென்று உதவி பெறலாமென்றெண்ணுவதுண்டு. அவர்களிடம், “அவரிடம் போய்த் தமிழ்ப் பாட்டைச் சொல்லிவிட வேண்டாம். அவர் காதுக்கு அது நாராசம் போல இருக்கும். மற்ற ஆடம்பரங்களுக்குக் குறைவில்லாமற் சென்றாற் போதும்” என்பார். கல்வியறிவில்லாதவர்கள் செய்யும் உபசாரத்தை, ‘பெறுவான் தவம்’ என்று குறிப்பாகக் கூறுவார்; “அறிவிலா னெஞ்சுவந் தீதல் பிறிதியாதும், இல்லை பெறுவான் றவம்” என்னும் திருக்குறளில் உள்ள தொடர் அது.

புகழ்

அருங்குணமும் நிறைந்த புலமையும் தளரா நாவன்மையும் அமைந்த இப்பெரியாருடைய கீர்த்தி இவருடைய காலத்திலேயே தமிழ் நாட்டிலும் பிற இடங்களிலும் பரவியிருந்தது. திருவாவடுதுறை மடத்தில் ஆதீன வித்துவானாக அமர்ந்த பின்னர்த் திருக்கூட்டத்தாருடைய பழக்கமும் ஆசிரியர்களின் திருவருளும் சிவ பூஜையும் மாணாக்கர்களுக்கு அதிகமாகப் பாடஞ் சொல்லுதலும் அவ்வப்போது நூல் இயற்றுதலுமாகிய இவற்றோடு இவர் மனம் அமைதியுற்றிருந்தது. வேறு எவ்வகையான நிலையையும் இவர் விரும்பவில்லை. ஆயினும் இவருடைய புகழ் நாளுக்குநாள் பரவிக் கொண்டேயிருந்தது. சைவ மடாதிபதிகள் எல்லோருடைய நன்மதிப்பையும் இவர் நன்கு பெற்றிருந்தனர். சைவர்கள் இவரை, “சைவப்பயிர் தழையத் தழையும் புயல்” என்றே கருதி வந்தனர். அன்னம் அளித்து, புஸ்தகம் வாங்கிக் கொடுத்து அன்போடு படிப்பிப்பவர் இவரென்ற பெரும்புகழ் எங்கும் பரவியது. கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி என்ற பெயரையுடையோர்கள் பண்டைக்காலத்தில் ஒவ்வொருவரே இருந்தனர்; ஆதலின் அவர்களுடைய பெயர்கள் மற்றவர்களைச் சாராமலே தனிச் சிறப்புற்றார்கள். இவருடைய பெயரை உடையவர்கள் பலரிருந்தும் ‘மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்’ என்று கூறின் இவரையே குறிக்கும் பெருமையை இவர் அடைந்திருந்தனர். தமிழ் வித்துவான்களில், “பிள்ளையவர்கள்” என்றே வழங்கும் பெரிய கெளரவம் இவருக்குத்தான் அக்காலத்தில் அமைந்திருந்தது. சமீபகாலத்தில் இத்தகையோர் இருந்ததில்லை.

ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் இவருடைய புகழைப் பற்றிச் சொல்லும் பொழுது, “நம்மிடம் வரும் தமிழ்வித்துவான்கள் யாராயினும் பிள்ளையவர்களிடம் பாடங்கேட்டவரென்றேனும் அவர்களுக்குப் பாடஞ் சொன்னவரென்றேனும் அவர்களுக்கு ஐயம் தீர்த்தவரென்றேனும் அவர்களை ஜயித்தவரென்றேனும் தம்மைச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். வருபவர்கள் தங்கள் தங்கள் புகழை வெளியிட எண்ணி அங்ஙனம் கூறுகிறார்கள். நமக்கோ அவர்கள் கூறக்கூறப் பிள்ளையவர்களுடைய புகழ்தான் உரம் பெற்று மிகுதியாகத் தோற்றிக் கொண்டே இருக்கிறது” என்று கூறுவார்.

இவரிடம் பாடம் கேட்கவேண்டுமென்று விரும்பியும் தங்களுக்குச் செவ்வி வாயாமையால் வருந்தினோர் பலர். வேறு யாராலும் தீர்க்கமுடியாத சந்தேகங்களை இவரைப் பார்க்கும் சமயம் நேருமாயின் அப்பொழுது இவர்பால் கேட்டுத் தீர்த்துக்கொள்ளலாமென்னும் கருத்துடைய பலர் அங்கங்கே இருந்தனர். செங்கணம் சின்னப்பண்ணை நாட்டாராகிய விருத்தாசல ரெட்டியாரென்பவர் தாம் படித்துக்கொண்டுவரும் ஒவ்வொரு நூலிலும் உண்டாகும் ஐயங்களை இவர்பால் தெரிவித்து மாற்றிக்கொள்ள வேண்டுமென்று ஐயப்பகுதிகளை ஒரு குறிப்புப் புத்தகத்தில் பதிந்து கொண்டே வந்ததை நான் பார்த்திருக்கிறேன்.

இவரால் தமிழ்நாட்டிற்கு உண்டான பயன்

இப்புலவர்பிரானால் தமிழ்மக்கள் பெற்ற பயன் மிகப் பெரிதாகும். புதிய புதிய நூல்களை இயற்றித் தமிழ் நயங்களை அமைத்துக் காட்டிய இவருடைய செய்யுளால் பலவகைச் சுவைகளை அறியும் பயனைத் தமிழ்மக்கள் பெறுகின்றனர். புது நூல்களை இயற்றியதோடு நில்லாமல் தாம் வருந்தித்தேடிய பழைய நூல்களை விளக்கிவைத்த இவருடைய செயல் தமிழ் நாட்டாரால் என்றைக்கும் நினைக்கத்தக்கதாகும். தமிழ்ப் பாடஞ் சொல்லிச் சொல்லி மாணாக்கர் கூட்டத்தை வளர்த்து அவர்கள் மூலமாகத் தமிழறிவைத் தமிழ் மக்களுக்குப் பயன்படச் செய்த வள்ளல் இவர். எங்கெங்கே தமிழ் நூல்களை முறையாகப் படித்தறியும் உணர்வும் பழைய புராணங்கள் பிரபந்தங்கள் முதலியவற்றைப் பயின்று இன்புறும் இயல்பும் திகழ்கின்றனவோ அங்கெல்லாம் இவருடைய தொடர்பேனும் இவர்பாற் பாடங்கேட்டவர்களுடைய தொடர்பேனும் பெரும்பாலும் இருக்கும். இன்றளவும் ஓரளவில் புலவர்களுடைய நூல்களுக்கு உள்ள மதிப்புக்கு மூலகாரணம் இவரென்றே சொல்லலாம். தமிழ்த் தெய்வத்தின் திருத்தொண்டர்களாகித் தமிழகத்தைத் தமிழன்பில் ஈடுபடுத்திய பெரியார்களுடைய வரிசையில் இவரும் ஒருவர். தமிழ்நூற் கோவைகளில் இவருடைய நூல்களும் முத்துக்களைப்போல் விளங்குகின்றன. இனியும் அவை தமிழ்மக்கள் உள்ளத்தில் இன்பத்தை உண்டாக்கிக்கொண்டே என்றும் குன்றா இளமையோடு விளங்கும். அவற்றை ஊன்றிப் படிப்பவர்கள் பிள்ளையவர்களின் புலமை உருவத்தை உணர்ந்து மகிழலாம். தமிழ் உள்ள்ளவும் இவருடைய பெரும்புகழ் நின்று நிலவுமென்பது திண்ணம்.

(ஆசிரிய விருத்தம்)

சுத்தமலி துறைசையிற்சுப் பிரமணிய தேசிகமெய்த் தூயோன் றன்பால்
வைத்தமலி தருமன்பின் வாழ்ந்தினிய செந்தமிழை வளர்த்தென் போல்வார்க்
கத்தமலி நூல்கணவின் மீனாட்சி சுந்தரப்பேர் அண்ண லேநின்
புத்தமுத வாக்கினையு மன்பினையு மறவேனெப் போது மன்னோ.

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

1.  இங்ஙனம் சொல்லும் செய்யுட்களில் திருச்சிற்றம்பலக் கோவையாரிலுள்ள ‘சிலம்பணிகொண்ட’ என்பதும், புகலூரந்தாதியிலுள்ள ‘தொழுந்துதிக்கைக்கு’ என்பதும் எனக்கு ஞாபகத்திலிருக்கின்றன.
2.  அவ்வகையான இசையைத் திருச்சிராப்பள்ளியிலும், அந்நகரைச் சார்ந்த இடங்களிலும் பெரும்பாலோரிடத்தில் அக்காலத்திற் கேட்கலாம். தியாகராச செட்டியார் பிள்ளையவர்களைப்போல அந்த இசையோடுதான் செய்யுட்களைச் சொல்லுவார்.
3.  இப் புத்தகம் 255- ஆம் பக்கத்திலுள்ள, “எனைவைத்தி எனை வைத்தி” என்னும் செய்யுளைப் பார்க்க.


$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s