-இசைக்கவி ரமணன்
‘வாழும் பாரதி’ திரு. இசைக்கவி ரமணன் தனது முகநூலில் எழுதும் ‘மார்கழிப் பனித்துளி’ இசைக் கவிதைகளை இங்கே மீள்பதிவு செய்கிறோம். இங்கே உள்ளவை 6 கவிதைகள்....

8
புத்தாண்டு வாழ்த்துகள்!
தூரே இருக்கும் இலக்கை என்னுயிர்
தொட்டுக்கொண்டே இருக்கிறது, அது
தொலைவில் ஒருகணம் அருகில் ஒருகணம்
தோற்றம் காட்டிச் சிரிக்கிறது.
.
யாரே பாதையைக் கோரச் சொன்னார்
அதுதான் தொலைவாய் விரிகிறது
பாதை வந்ததும் பயணம் வாதை
பலப்பல வாகத் தொடர்கிறது.
.
இலக்கை மறவா திருக்க வேண்டும்;
இதுவே தவத்தின் கருவாகும்.
இதுவே ஸ்ருதியாய், எல்லாம் இசையாய்,
இதுதான் வாழ்க்கை முறையாகும்.
.
கலக்கம் மயக்கம் தெளிவென் பதெலாம்
கவிதையின் பற்பல வடிவாகும்.
காலம் ஒருநாள் கனியும், அந்தக்
கணத்தில் எல்லாம் தெளிவாகும்.
.
பாதை வளைவும் மேடும் பள்ளமும்
பயணத் திற்கோர் இனிமைதரும்.
பருவ மாற்றம் இருந்தால் தானே
பாரில் வாழ்க்கை வளமாகும்?
.
காதல் கலவிக் களரியி லேவரும்
களைப்பே அதிலே சுகமாகும்.
கவலை மட்டுமா? களிப்பும் வானில்
காற்றில் பறக்கும் முகிலாகும்.
.
ஏதோ ஒருநாள் ஓர்மரத் தடியில்
தளர்ந்த முதுகு சாய்ந்திருக்கும்.
இளைப்பில் விளையும் இன்பக் களைப்பில்
இதயம் புதிதோர் முனையைத் தொடும்.
.
தோதாய் ஒருமலர் தோளில் வீழும்;
தொட்டுச் சொல்லும் ஒரு சேதி.
தொலைவும் அண்மையும் குலவும் இசையே
தொடரும் இதயத் துடிப்பாகும்!
.
$$$
.
9.
ஓம் நமோ நாராயணா!
உள்ளக் கதவை மெள்ளத் திறந்தாய்
ஓம் நமோ நாராயணா!
ஊரைப் பார்க்க உலவச் சென்றாய்
ஓம் நமோ நாராயணா!
கள்ளப் புலன்கள் கவரிகள் வீசும்
காற்றே வேதவொலி, அதி
காலைப் பொழுதில் வேலை முடிந்த
களைப்பில் இன்பவலி!
.
உற்சவனாக நீ ஊருள் நுழைந்தால்
உள்ளே இருபபது யார்?
உள்ளே இருப்பதும் ஊரில் நடப்பதும்
ஒன்றெனில் ஏதுன் பேர்?
கற்சிலை, கவிதை, காதல் யாவுமுன்
கருணையின் கடைவிரிப்பு – மனக்
கவலையும் தந்து கதவும் திறக்குமுன்
கனிவுபோல் எதுசிறப்பு?
.
எங்கும் நீயே இருப்பதால் நீதான்
என்னிலும் இருக்கின்றாய்.
எல்லாம் நீயாய் இருப்பதால் நீதான்
நானாய் இருக்கின்றாய்.
நீயும் நானும் வேறென்பதுபோல்
நீதான் நடிக்கின்றாய், ஒரு
நிலையில் ராதையின் காதலில் திரையை
நீயே விலக்குகிறாய்!
.
எத்தனை ஆட்டம் போடுகி றாயடா
என்னுயிர் நாராயணா!
ஏற்றம் இறக்கம் மயக்கம் தெளிவென
எதற்கோ நாராயணா! என்
சித்தத் தினிலோர் சிறுவைகுந்தம்
திறந்தேன் நாராயணா!
திறந்ததும் நீயே! நுழைந்ததும் நீயே!
தீர்ந்தேன் நாராயணா!
.
$$$
.
10
ஊரெல்லாம் ஒளிவிரிப்போம்
‘ஓர் மரத்து இலைகள் நாம்
ஒரு கடலின் அலைகள் நாம்’
ஓர் உயிர்தான் உளது! அதனால்
யார் மனமும் நம் மனமே!
.
உச்சத்தில் ஒரு கதிரோன்
ஊரெங்கும் ஒளிமயம்தான்
ஒருவீட்டில் முற்றத்தில்
ஒருகாட்டில் இலைநடுவில்
ஒருபாட்டில் சொல்லிடையில்
ஒருகூட்டில் முட்டையினுள்
ஓலையிடை ஒளிக் கசிவாய்
உள்ளத்தில் புதுத்தெம்பாய்
பாலையிலே படுநரகாய்
பனிநடுவே பரிவுகளாய்
வேலையிலே விசைப்புகளாய்
வெற்றியிலே வியர்வைகளாய்
சோலையிலே மலர்விளிம்பில்
சொக்கவைக்கும் பரநிலையாய்
உச்சமென்றும் தாழ்வென்றும்
ஒருபேதம் இல்லாத
ஒளிமயத்தின் அங்கம்நாம்
உயிரெல்லாம் தங்கம்தான்.
.
உயிர்முனையில் ஒடுங்குங்கால்
ஊரெல்லாம் ஒளிவிரிப்போம்
உணர்விழப்போம் உயிராவோம்
ஓரிலையில் முகம்சிரிப்போம்
ஓரலையில் நுரைகுமிழ்ப்போம்
.
$$$
.
11
பேதைப் பறவை நான்…
ஆசைக ளைத்தான் அனுதினம் தொழுதேன்;
அவைதான் அவனென நம்பிக் கொண்டேன்.
ஆணவத் திற்கொரு கோயிலும் எழுப்பி
அதனைத் திறக்க அவனையே அழைத்தேன்!
மாசுகள் மண்டி மலினப் பட்டேன்;
மறுப்பெது மின்றி மரித்துக் கிடக்கிறேன்.
மன்னவனே! ஒரு மழைத்துளி வீழ்ந்து
மறுபடி மூங்கிற் தளிர்முளைக்காதா?
.
இறைவன் எதற்கெனில் இலக்கியம் எதற்கு?
இலக்கியம் எதற்கெனில் இம்மூச் செதற்கு?
இன்பமோ துன்பமோ, இரவோ பகலோ
எதையும் நினைக்கவும் எடுத்துச் சொல்லவும்
கறைகளைக் கழுவும் கண்ணீர் சிந்தவும்
கன்னித் தமிழ்போல் கடவுளோர் தேவை!
தலையை அசைத்துத் தமிழ்கேட் பவனே!
தருணம் ஈதெனத் தழுவலா காதா?
.
பாறை நடுவிலும் ஈரம் வைத்தாய்
பார்த்தும் பாரா தெப்படி இருக்கிறாய்?
பண்ணும் கூத்தும் பண்ணிக் கொடுத்தாய்
பனிநடு வேஏன் தனிமையில் அமர்ந்தாய்?
ஏறி இறங்கும் பயணமே இனிமை;
ஏக்கமில் லாமல் இனிக்காது காதல்.
இதனைச் சொல்லவா இப்படி வதைக்கிறாய்?
இப்படித் தவித்துமா இமையா திருப்பாய்??
.
கணம்தொறும் தேயும் உடம்பைக் கொடுத்தாய்;
கணக்கிலா தெண்ணும் மனத்தையும் கொடுத்தாய்;
காலம் வெளியெனும் கண்கட் டமைத்தாய்;
தருக்கிடும் நானெனும் தனித்துவம் கொடுத்தாய்!
பிணம்விழும் போதெலாம் பெம்மைகள் பெயர்ந்துபோய்
பித்தா! உனது பெருமையை நாட்டினாய்;
பேதம் செய்வது காதலில் நீதியோ?
பேதைப் பறவைநான் சிறகுன் விழிகளே!
.
$$$
.
12
தோளில் விழுந்த மலர்…
அன்பு மிகவும் ஆழ மானது
ஆண்டவ னுக்கும் அவசிய மாவது
என்பும் தோலும் எண்ணமும் மனிதனா?
நேயமே மானிட நியதியாய்க் கண்டோம்!
அன்பினால் செய்யப் பட்டதே அகிலம்;
அன்பினால் சமைக்கப் பட்டன உயிர்கள்!
அன்பின் விளைவே அண்டமும் பிண்டமும்
அன்பினால் அன்பினை அறிவதே வாழ்க்கையே!
.
துளித்துளி யாக இழையிழை யாகத்
தொடர்ந்து பொழியும் மழைத் துளிகளிலோர்
உளிக்கரம் விதையின் உயிரைக் குலாவி
உலகில் விரிக்கும் உதவி எதற்கு?
நம்மைத் தாங்கி நமக்குண வீந்து
நாளிர வென்று நமக்காய்ச் சுழன்று
இம்மைக் களனாய் மறுமை வாயிலாய்
இரண்டும் கடந்த இறுதி நிலையாய்
.
எல்லாம் செய்தும் ஏதும் கோராது
இருக்கும் புவியின் இயல்புதான் என்னே!
வல்லான் இறங்கி வருவதற் குகந்த
மானிடத் தாயக மண்போல் உண்டோ!
இயற்கையில் அன்பே இயல்பெனக் கண்டோம்;
இறைக்கது வொன்றே இயல்பெனக் கொண்டோம்;
முயற்சி இலாமல் மூளுமிவ் வன்புதான்
முக்தி என்பதும் முழுதாய் அறிந்தோம்!
.
மரத்தடி யொன்றில் அமர்ந்திருந் தேன்நான்;
மனத் தடியிலோர் கனம் வெடித்திட
மழைத்துளி போலக் கனற்துளி கள்சில
மண்டி விழிகள் மங்கும் வேளையில்
கரம்தெரி யாத ஒருவிரல் என்றன்
கன்னம் துடைத்தது; சுவாசம் உணர்ந்தேன்;
காற்றில் ஒருமலர் தோளில் விழுந்தது,
கடவுளின் திருமுகம் என்னுள் சிலிர்த்தது!
.
$$$
.
13
திருவாதிரை
ஆதிரைத் திருநாள் பிறந்தது;
அத்தனைத் துயரும் பறந்தது!
பாதி நிலாவுடன் பனித்த சடையுடன்
பாம்பணி களுடன் பரகங் கையுடன்
சோதிப் பிழம்பாய் என் சொக்கத் தங்கம்
சொல்லா துயிரைப் பறித்தது! அதைச்
சொல்லிச் சொல்லிச் சிரித்தது!
.
கத்தும் கடலும் களைக்கலாம், அந்த
ககன வெளியும் இளைக்கலாம்.
முத்தும் பவளமும் முகிழ்த்த சிரிப்பும்
முழுவெண் ணீறும் மூளும் உருவும்
எத்தனை முறையென் எதிர்வந்தாலும்
இதயம் முழுதும் கவர்ந்தது! இன்பம்
இன்னும் இன்னும் வளர்ந்தது!
.
இறைவன் எனக்கு மிகநிசம், யாம்
இருவரும் ஒருவர்க் குயிர்வசம்
மறையோ திடலாம், மௌனம் பழகலாம்
மலர்தூ விடலாம், மணிக ளுருட்டலாம்
மறையா அழகில் மனம்பறி கொடுத்து
மாறா தனுதினம் ஏங்கினேன், அவனும்
மகவாய் என்னைத் தாங்கினான்!
.
ஒருமுறை அவனை உயிருடன் அழைப்பீர்!
ஒருமுறை அவனை உள்ளே காண்பீர்!
ஒருகணம் அவனை உணர்ந்து கலப்பீர்!
ஒருயுகம் அதிலே ஊறித் திளைப்பீர், இனி
வருநா ளெல்லாம் திருநாளே! என்
வாழ்வில் தினமும் ஆதிரையே!
.
$$$