பெருமிதம் கொள்ளச் செய்த மகத்தான உரை

-பேரா. இரா.குப்புசாமி

வரலாற்றுத்துறை பேராசிரியரான திரு. இரா.குப்புசாமி, ஈரோடு, நந்தா கலை, அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர். விவேகானந்தரின் 120- வது சிகாகோ சொற்பொழிவு தினம் மற்றும் பாரதியின் நினைவுதின விழா, 2013, செப். 11-ம் தேதி, திருப்பூர், சின்னக்கரையில் உள்ள  பார்க் கலை கல்லூரியில் நடைபெற்றது. அதில்  ‘பெருமிதம் கொள்ளச் செய்த மகத்தான உரை’ என்ற தலைப்பில்,  ஈரோடு, நந்தா கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் திரு. இரா.குப்புசாமி  ஆற்றிய உரையின் தொகுப்பே இந்தக் கட்டுரை.

சில ஆண்டுகளுக்கு முன்னர், கல்வி ஆராய்ச்சி நிமித்தம் லண்டன் பல்கலைக்கழகத்திற்கு நான் சென்றிருந்தேன்.  அப்பொது  அங்குள்ள ஆவணங்களைப் பார்வையிட்ட பொழுது, லார்ட் மெக்காலேவின் கடிதத்தைப் பார்வையிடும் வாய்ப்பு கிட்டியது. அதில் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி நிலைகொள்ள செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் குறிப்பிட்டிருந்தார். இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அவர் பேசியதன் தொகுப்பும் அங்கு இருந்தது.

மெக்காலே தான் நம் நாட்டில் தற்போது உள்ள ஆங்கிலக் கல்விமுறையை அறிமுகப் படுத்தியவர்.  இந்தியாவை ஆங்கிலேயருக்கு அடிமையாக்கும் பொறுப்பை மேற்கொண்டவர் மெக்காலே. 1835-ஆம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் மெக்காலே பிரபு பேசியது மிகவும் குறிப்பிடத்தக்க வேண்டியதாகும். அவர் கூறியது இதுதான்:

“நான் இந்தியாவை வடக்கிலிருந்து தெற்காகவும் கிழக்கிலிருந்து மேற்காகவும் பலமுறை பயணம் செய்துள்ளேன். ஆனால் எங்கேயும் ஒரு பிச்சைக்காரனையோ திருடனையோ நான் தெருவில் பார்க்கவில்லை. ஆகவே இந்தியர்களை அடிமையாக்குவது மிகவும் கடினம். அவர்களின் பண்பாட்டையும் ஆன்மிகத்தையும் ஆங்கிலக் கல்வியால் மாற்றிவிட்டால் மட்டுமே அவர்களை அடிமையாக்குவது எளிது”.

இந்திய சமூகத்தின் சிறப்பை இந்தப் பேச்சு நமக்கு விளங்கவைக்கிறது.

இதற்குப் பின் 28 ஆண்டுகள் கடந்த பிறகே சுவாமி விவேகானந்தர் தோன்றினார். சில சொற்பொழிவுகள் உலகையே மாற்ற வல்லவையாக அமைகின்றன. அவ்வகையில் சமயத்துறையில் உலக அளவில் பெரும் புரட்சியை உருவாக்குவதாக அமைந்தவை சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள். அமெரிக்காவின் சிகாகோ நகரில், 1893, செப்டம்பர் 11-ல் கூடிய சர்வ சமய பேரவை மாநாட்டில் பாரதத்தின், ஹிந்து சமயத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்ற சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவாற்றினார்.

அவர் உரையை ஆரம்பித்த மறுகணமே அங்கிருந்த அத்தனை பேரும் கரகோஷம் செய்தனர். காரணம் தனது உரையை  ‘அமெரிக்க சகோதர சகோதரிகளே’ என்று அவர் ஆரம்பித்ததே ஆகும்.

“பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம்…. ‘யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன’ என்கிறது பகவத் கீதை…. பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன”

என்று அந்த சபையில் விவேகானந்தர் பேசினார்.

மத ஒற்றுமையைப் பற்றிக் கூற வந்த பாரதியார் தனது பாடலில்,

“தீயினைக் கும்பிடும் பார்ப்பார்-நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்
கோவிற் சிலுவையின் முன்னே-நின்று
கும்பிடும் யேசு மதத்தார்
யாரும் பணிந்திடும் தெய்வம்-பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்.
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று – இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்”

-என்று கூறுகிறார்.

கண்ணதாசன் ‘சுடுகாட்டு எலும்பு’ என்ற தனது கட்டுரையில் ஒற்றுமையை விளக்குகிறார் பின்வருமாறு:

“சுடுகாட்டு எலும்பில் வடநாட்டார் எலும்பு என்றும் தென்னாட்டார் எலும்பு என்றும் ஏதும் இல்லை. அனைத்து மனிதரும் இறுதியில் இங்குதான் வருகின்றனர். அதோ அந்த சுடுகாட்டில் பயங்கர ஜவான்கள்,  ஜார் பரம்பரைகள், லூயி வம்சாவளிகள் அனைவரும் உலவிக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஆலாபனை கவிதைத் தொகுப்பிலுள்ள  ‘ராங் நம்பர்’ என்ற கவிதையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

தற்செயலாக ஒருநாள் தொலைபேசியில் தவறான எண்ணில்
இறைவன் சிக்கிக் கொள்கிறான். கவிக்கோ கேட்கிறார்….

இங்கே என்ன நடக்கிறது என்று பார் !
இதோ உனக்கு வீடுகட்டுவதற்காக
உன் வீட்டை இடிக்கும் மூடர்கள்!
இடிக்கப்படுவதில் நீ இடிக்கப்படுகிறாயா?
கட்டப்படுவதில் நீ கட்டப்படுகிறாயா?

இந்த ராமர் யார்? ரஹீம் யார் !
பெயரில் என்ன இருக்கிறது?
பெயரால் அல்லவா இத்தனைப் பிரச்சனை?
பெயர்களில் நீ இருக்கிறாயா?

நீ அன்பு என்றால் இந்த பகை யார்?
நீ சாந்தி என்றால் இந்த வெறி யார்?
நீ சமத்துவம் என்றால் இந்த துவேஷன் யார்?

நீ ஆனந்தம் என்றால் இந்தத் துயரம் யார்?
நீ உண்மை என்றால் இந்தப் பொய் யார்?
நீ ஒளி என்றால் இந்த இருள் யார்?
எரியும் வீடுகள் உன் தீபாராதனையா?
வெட்டப்படும் வெண்புறாக்கள் உனக்கு அர்ச்சனையா?
சிந்தும் ரத்தம் உனக்கு அபிஷேகமா?
இது எந்த மதம்? எந்த வேதம்?
இவர்களா உன் பக்தர்கள்?

ஆலய மணி ஓசையும், மசூதியின் அழைப்பொலியும்
காற்றில் கரைந்து சங்கமிக்கும் அர்த்தம்
இந்த மூடர்களுக்கு எப்போது புரியும்?

கடைசியாகக் கேட்கிறேன்
நீ இந்துவா? முஸ்லிமா?
அவ்வளவு தான்-
‘ராங் நம்பர்’ என்ற பதிலோடு
இணைப்புத் துண்டிக்கப்படுகிறது.

கடவுளை கட்டடங்களுக்குள்ளும் மத வேலிகளுக்குள்ளும் அடைக்க முயலும் அறிவின்மையையே இப்பதில் உணர்த்துகிறது.

ஒரு ஊரின் கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் கிணற்றுக்கு கடல் தவளை ஒன்று வந்தது. அந்த கடல் தவளையைப் பார்த்து கிணற்றுத் தவளை கேட்டது, ‘உனது கடல் எவ்வளவு பெரியது இருக்கும்?’ என்று. கடல் மிகப் பெரியது’ என்றது கடல் தவளை. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தாவி,  ‘இவ்வளவு பெரியது இருக்குமா?’ என்றது கிணற்றுத் தவளை. ‘இல்லை அது இன்னும் பெரியதாக இருக்கும்’ என்றது கடல் தவளை. ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்குத் தாவி, ‘இவ்வளவு பெரிதிருக்குமா?’ என்றது கிணற்றுத் தவளை. ‘இல்லை, இல்லை கடல் மிக மிக பெரிதாக இருக்கும்’ என்றது கடல் தவளை. ‘இல்லை நீ பொய் கூறுகிறாய். இந்த உலகிலேயே இந்தக் கிணறு தான் மிகப் பெரிய நீர்ப்பரப்பு’ என்றது கிணற்றுத் தவளை.

இந்தக் கிணற்றுத் தவளையைப் போன்று தான் பல மனிதர்கள், தன் மதம் தான் சிறந்தது என்று ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதையே சுவாமி விவேகானந்தர் சிகாகோ உரையில் குறிப்பிட்டார்.

‘யாரேனும் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் அவருக்கு மறு கன்னத்தையும் காட்டு’ என்று இயேசுநாதர் கூறியுள்ளார். காரணம், அவ்வாறு அறையும்போது நீங்கள் மறு கன்னத்தையும் காட்டினீர்களேயானால் அவர்களால் மறுமுறை காரணம் சொல்லாமல் அடிக்க இயலாது என்பதற்காகவே ஆகும் என்றார்.

இஸ்லாமியர்கள் வருடத்திற்கு ஒருமுறை 30 நாட்கள் ஏன் நோன்பு இருக்கின்றனர் என்றால் பணக்காரர்களும் ஏழைகளும் பசியின் கொடுமையை அறிந்து மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு தான். இதனால் மனிதர்களுக்கு ஏற்படும் துன்பங்களை அறிந்து உதவ வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும் என்பதற்காகவே ரம்ஜான் நோன்பு உருவாக்கப்பட்டது.

ஒருநாள் முகமது நபி அவர்களைக் காண கிறிஸ்தவ நண்பர் ஒருவர் மசூதிக்கு வந்திருந்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு கிறிஸ்தவ நண்பர் ‘ஜெபம் செய்யவேண்டும்’ என்று கூறிக் கிளம்பினார். அப்போது நபிகள் ‘இந்த மதிய வெயிலில் எப்படிச் செல்வீர்கள், நீங்கள் இங்கேயே ஜெபம் செய்யலாமே?’ என்றார். நண்பரும் சரி’ என்று கூறி மசூதியிலேயே ஒரு இடத்தில் தனது ஜெபத்தை முடித்துக்கொண்டு மாலை வேளையில் கிளம்பிச் சென்றார். அப்போது மசூதியில் இருந்தவர்கள் நபி அவர்களிடம், ‘நீங்கள் செய்தது சரியா? இந்த இடத்தின் புனிதத்தை கெடுத்துவிட்டீர்கள்’ என்று கூறினார்கள். அப்போது நபிகள் கூறினார், “நாம் வணங்கும் கடவுளும் அவர் வணங்கும் கடவுளும் ஒருவர்தான்” என்று கூறினார்.

ஒருநாள் சுவாமி விவேகானந்தர் ஆற்றங்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே சில இளைஞர்கள் மது  அருந்திவிட்டு  அந்த பாட்டில்களை ஆற்றில் வீசி அதனை சுட முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்களால் ஒரு பாட்டிலைக் கூடச் சுட முடியவில்லை. இதனை பார்த்துக் கொண்டிருந்த சுவாமி விவேகானந்தர் சிரித்தார்.

அதற்கு ஒரு இளைஞன் ‘ஏன் சிரிக்கிறீர்கள? உங்களால் சுட முடியுமா?’ என்று திருப்பிக் கேட்டான். உடனே விவேகானந்தர் முடியும்’ என்றார். ஒரு இளைஞன் விவேகானந்தரிடம் கைத்துப்பாக்கியைக் கொடுத்தான். மது பாட்டில்களை நதியில் வீச ஆரம்பித்தனர். அதை ஒன்றுகூட விடாமல் சுட்டுத்தள்ளினார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த இளைஞன் ‘நீங்கள் பயிற்சி பெற்றிருப்பீர்கள்’ என்றான். அதற்கு விவேகானந்தர் ‘நான் இப்போது தான் முதல்முறையாக துப்பாக்கியைத் தொடுகிறேன்’ என்றார். மன ஒருமைப்பாடு இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்பதற்கு இந்நிகழ்ச்சி ஓர் உதாரணம்.

இந்த இடத்தில் ‘விவேகானந்தரைப் பற்றி விவேகானந்தர்’ என்ற நூலில் தானே தன் அனுபவமாகக் கூறியுள்ளதை இங்கே நினைவு கூர்வது பொருத்தமானது. “மன ஒருமைப்பாட்டின் மூலமாக எதையும் சாதிக்க முடியும். மலைகளைக் கூட அணு அணுவாக உடைத்தெறிய முடியும்” என்ற நம்பிக்கையை சுவாமிஜி பதிவு செய்துள்ளார்.

‘உங்களை நாடி வரும் ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். இது நற்கர்மம். இதன் பலனாக உங்கள் இதயம் தூய்மை பெறும். எல்லோரிலும் உறைகின்ற சிவபெருமான் வெளிப்பட்டுத் தோன்றுவார். சுயநலம் கொண்டவன் எல்லாக் கோயில்களையும் வழிபட்டிருந்தாலும், புண்ணியத்தலங்கள் அனைத்தையும் பார்த்திருந்தாலும், சிறுத்தையைப் போல தன் உடம்பு முழுவதிலும் மதச் சின்னங்களைத் தீட்டிக் கொண்டிருந்தாலும் அவன் சிவபெருமானிடம் இருந்து விலகியே இருக்கிறான்’ என்ற சுவாமியின் கூற்றை நிருபிக்கும் வகையாக திருமூலரின் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

“படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே”

          (திருமந்திரம் – 1857)

தன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுளுக்கு ஒரு பொருளைக் காணிக்கையாக அளித்தால் அது நடமாடும் கோயிலான மனிதனுக்குச் சென்று பயன்தராது. ஆனால் நடமாடக் கோயிலான பசித்த மனிதனுக்கு ஒன்று ஈந்தால் அது இறைவனுக்குச் சென்று சேரும் என்று கூறுவார் திருமூலப் பெருந்தகை.

இதையே தான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தன்னுடைய ‘பெய்யெனப் பெய்யும் மழை’ என்ற கவிதைத் தொகுப்பில் ‘ஊழிக்காற்று ஒரே பக்கம் வீசியது’ என்றக் கவிதையில் குறிப்பிடுகிறார்.

எனவே, மாணவர்கள் அனைவரும் நம் வீரத்துறவி வழிநின்று,  சமய நல்லிணக்கம் பேணி, நாட்டுப்பற்று மிக்கவர்களாக வளர்ந்து, வலிமையான பாரதம் படைக்க வேண்டும்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s