பாஞ்சாலி சபதம் – 2.3.3

-மகாகவி பாரதி

குலைந்த நிலையில் இருந்தாலும், அழுது அரற்றினாலும், துருபதன் மகள்  பாஞ்சாலியின் தீரம் குறையவில்லை. அம்மி மிதித்து, அருந்ததி காட்டி, வேள்வித்தீ முன்னர் கைத்தலம் பற்றிய தனது கணவர்களைப் பார்த்து இதற்காகவா உங்களை மனம் செய்தேன்? என்று அவையில் வினவுகிறாள் பாஞ்சாலி. இதனை “பாண்டவரை மின்செய் கதிர்விழியால் வெந்நோக்கு நோக்கினாள்.” என்று மகாகவி பாரதி குறிப்பிடுகிறார். அதாவது சுடும் பார்வை. அவளை தாதியென்று  துச்சன் ஏச, கர்ணனும் சகுனியும் சிரிக்கிறார்கள்.  “சபையினோர்? வீற்றிருந்தார்!”  என்கிறார் மகாகவி. அதாவது மனிதம் மறந்து மரத்துக் கிடந்தது அந்த அவை. 

இரண்டாம் பாகம்

2.3. சபதச் சருக்கம்

2.3.3. சபையில் திரௌபதி நீதி கேட்டழுதல்

விம்மியழுதாள்:- ‘விதியோ கணவரே,
அம்மி மிதித்தே அருந்ததியைக் காட்டியெனை
வேதச் சுடர்த்தீமுன் வேண்டி மணஞ்செய்து,
பாதகர்முன் இந்நாள் பரிசழிதல் காண்பீரோ?’
என்றாள். விஜயனுடன் ஏறுதிறல் வீமனுமே
குன்றா மணித்தோள் குறிப்புடனே நோக்கினார்.
தருமனும் மற்றாங்கே தலைகுனிந்து நின்றிட்டான்.
பொருமியவள் பின்னும் புலம்புவாள்:- ‘வான்சபையில்
கேள்வி பலவுடையோர், கேடிலா நல்லிசையோர்,
வேள்வி தவங்கள் மிகப்புரிந்த வேதியர்கள்,
மேலோரிருக்கின்றீர். வெஞ்சினமேன் கொள்கிலரோ?
வேலோ ரெனையுடைய வேந்தர் பிணிப்புண்டார்.
இங்கிவர்மேற் குற்றம் இயம்ப வழியில்லை.
மங்கியதோர் புன்மதியாய்! மன்னர் சபைதனிலே
என்னைப் பிடித்திழுத்தே ஏச்சுக்கள் சொல்கிறாய்.
நின்னை யெவரும் “நிறுத்தடா” என்பதிலர்.
என் செய்கேன்?’ என்றே இரைந்தழுதாள். பாண்டவரை
மின்செய் கதிர்விழியால் வெந்நோக்கு நோக்கினாள்.
மற்றவர் தாம்முன்போல் வாயிழந்து சீர்குன்றிப்
பற்றைகள்போல் நிற்பதனைப் பார்த்து, வெறிகொண்டு்
‘தாதியடி தாதி!’ யெனத் துச்சாதனன் அவளைத்
தீதுரைகள் கூறினான். கர்ணன் சிரித்திட்டான்.
சகுனி புகழ்ந்தான். சபையினோர்? வீற்றிருந்தார்!
தகுதியுயர் வீட்டுமனுஞ் சொல்கின்றான்: ‘தையலே,

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s