-திருநின்றவூர் ரவிகுமார்

‘மாயி’ என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சி. நடிகர் சரத்குமாரும் வடிவேலுவும் திருமணத்திற்காக பெண் பார்க்கப் போவார்கள். பெண்ணின் தந்தை மணப்பெண்ணை அழைக்க,
“மாமா மயில்சாமி வந்திருக்கா....க.... மச்சான் மொக்கச்சாமி வந்திருக்கா....க.... மற்றுமுள்ள நம் உறவினர்கள் எல்லாம் வந்திருக்கா....க… வாம்மா மின்னல்….”
என்று சொல்ல அந்தப் பெண் மின்னல் போல சடக்கென்று இந்தப் பக்கம் இருந்து அந்தப் பக்கம் போய் விடுவாள். யாராலும் பார்க்க முடியாததால் மீண்டும் கூப்பிடக் கேட்பார்கள். மீண்டும் அந்த பெண்ணின் அப்பா மின்னலை அழைப்பார். மின்னல் பொல்லவே அந்தப் பெண் மீண்டும் வந்து போவாள். அப்போது வடிவேலுவின் ரியேக்ஷன் பட்டையைக் கிளப்பும். வடிவேலு நகைச்சுவைக் காட்சியில் இந்தக் காட்சி மறக்க முடியாத ஒன்று.
இதில் மயில்சாமி என்ற பெயர் மயிலை வாகனமாகக் கொண்ட முருகக் கடவுளின் பெயர் என்பதை அனைவரும் அறிவர். ஆனால் மொக்கசாமி… அது என்ன சாமி?
சிவலிங்கத்தின் தோற்றத்தைக் கொண்டு இந்த பெயர் வந்திருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் உண்மை என்ன என்பதை திருவாசகம் தெளிவாக்குகிறது.
மதுரை மாவட்டத்தில் ஒரு சிற்றூர். அதில் ஒரு சிவநேசர். அவர் லிங்க மூர்த்தியை தரிசிக்காமல் உணவு உட்கொள்வதில்லை என்ற பழக்கம் உள்ளவர். அவருக்கு திருமணம் நடந்த சில நாட்களில் மச்சினன் வீட்டிற்கு விருந்திற்காக வேறொரு கிராமத்திற்குச் செல்கிறார். அந்த ஊரில் சிவலிங்கத்தை தரிசித்து வழிபட முடியவில்லை. எனவே உணவு சாப்பிட முடியாதென மறுத்து விடுகிறார். எவ்வளவு வற்புறுத்தியும் தன் பழக்கத்தில் உறுதியாக நின்று விடுகிறார்.
மச்சினன் வெளியே சென்று, கொஞ்சம் நேரம் கழித்து வீட்டிற்கு வந்து, ‘சிவலிங்கம் நம் ஊரிலேயே இருக்கிறது வா காட்டுகிறேன்’ என்று மாபிள்ளையை வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்தார். ‘அதோ அந்த மரத்தடியில் பார், சிவலிங்கம் தெரிகிறதா?’ என்று காட்டினார்.
மாப்பிள்ளை அதை நோக்கிப் போக, அவரைத் தடுத்து ‘மதிய உணவுக்கு நேரமாகிவிட்டது, இங்கிருந்தே கும்பிட்டுக் கொள்’ என்றார் மச்சினன். சரியென்று மாபிள்ளையும் தூரத்திலிருந்தே வணங்கி, திருப்தியுடன் வீட்டுக்குள் சென்று விருந்துண்டார்.
விருந்தெல்லாம் முடிந்த பிறகு மச்சினன், ‘நீ பார்த்தது லிங்கமூர்த்தி இல்லை. உன் பழக்கமெல்லாம் இன்றோடு மாறி விட்டது; என்று கேலி செய்தான். மாப்பிள்ளை கோபத்தோடு ‘வா பார்க்கலாம்’ என்று வீட்டை விட்டு வெளியே வந்து அந்த மரத்தடியை நோக்கிப் போனார்.
அங்கு குதிரைக்கு கொள்ளு வைத்து அதன் முகத்தில் கட்டிவிடப் பயன்படுத்தும் தோலினால் செய்த பை – அதை ‘மொக்கணி’ என்று சொல்வார்கள் – முடிச்சிட்டிருந்தது.
‘நான் இதற்குள் கல்லையும் மண்ணையும் போட்டு கட்டி வைத்திருக்கிறேன். இதை தூரத்திலிருந்து பார்த்து நீ சிவலிங்கம் என நினைத்துக் கொண்டாய்’ என்று மச்சினன் கேலியாக கூறினான்.
கோபத்துடன் மாப்பிள்ளை அந்த மொக்கணியை (கொள்ளு வைக்கும் பையை) அவிழ்த்துக் கொட்ட, கல்லும் மண்ணும் கொட்டவில்லை. மாறாக சப்தத்துடன் ஒளி பொருந்திய சிவலிங்கம் வெளிப்பட்டது.
மச்சினன் திகைக்க, மாப்பிள்ளை மகிழ, மொக்கணியிலிருந்து வெளிப்பட்ட ஈசன் ‘மொக்கணீசன்’ என்று வணங்கப் பட்டார்.
ஈசன் என்பது சாமியாகவும், மொக்கணீசன் என்பது மறுவி மொக்கசாமியாகவும் வழக்கத்தில் உள்ளது.
மதுரை மாவட்டத்தில் பலருக்கும் இப்பெயர் இன்றும் இருப்பதற்கு, அந்த சிவநேசரும் அவருக்காக சிவபெருமான் நடத்திய இந்த்த் திருவிளையாடலுமே காரணம்.
இதை நமக்கு விளக்கும் அந்த திருவாசகப் பதிகம்:-
“தர்பணம் அதினில் சாந்தம் புத்தூர் வில் பொரு வேடற்கு ஈந்த விளைவும் மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும் அரியோடு பிரமற்கு அளவு அறிஒண்ணா…” -கீர்த்தி திருஅகவல், பாடல்: 7
இந்தப் பாடலில் உள்ள சாந்தம்புத்தூர் என்ற ஊர் இன்று எங்கு இருக்கிறது என்று தெரியாமல் மறைந்துவிட்டது. தேவார, திருவாசகத்தில் குறிப்பிடப் பட்டுள்ள பல ஊர்களின் பெயர்கள் இன்று வழக்கில் இல்லாமல் போய் விட்டதால், இந்த மொக்கணீசனையும் நாம் தரிசிக்க முடியவில்லை. இதுவும் ஈசனின் விளையாடல் தானோ?
$$$