சுவாமி விவேகானந்தர் பார்வையில் சமய நல்லிணக்கம்

-பேரா.இரா.ஸ்ரீநிவாசன்

பேராசிரியர்  திரு. இரா. ஸ்ரீநிவாசன்  மதுரையை சொந்த ஊராகக் கொண்டவர்; காந்திய தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்; தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் மேலாண்மைப் புலத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். தற்போது தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக உள்ளார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் இன்று!

“ஒரு சாது ஹிந்துவுக்கு இந்த உலகமே கடன்பட்டிருக்கிறது” என்று கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்.

ஒரு சாதாரண ஹிந்துவின் வாழ்க்கை முறையானது இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்துடனும் எல்லா வகையான உயிரினங்களுடனும் மற்றும் அனைத்து வாழ்க்கை முறைகளோடும் சிக்கல் இல்லாத (Non-conflict) உறவுமுறை கொண்டதாகும். இதற்குத் தான் உலகம் கடன்பட்டுள்ளது என்கிறார் சுவாமி.

அவர் தனது சிகாகோ சொற்பொழிவில்,  “எந்த மதத்தையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு ‘எல்லா மதங்களும் உண்மை’ என்றும் ஏற்றுக்கொள்கிறோம்” என்று கர்ஜிக்கிறார்.

இது தான் சுவாமிஜியின் சமய நல்லிணக்கத்திற்கான அடிப்படை அணுகுமுறையாகும். இத்தகைய உயர்ந்த எண்ணம் சுவாமிஜிக்கு ஏற்பட்டது எப்படி? பழத்தின் மூலமாகத் தான் மரத்தின் பெருமை தெரியும் என்பது உண்மை என்றால், சுவாமிஜி மூலமாகவே இந்த தேசத்தின் பாரம்பரியப் பெருமையை உலகம் உணர்ந்தது என்பதும் உண்மையே.

 ‘வழி’ வகுத்ததா?

லட்சக் கணக்கான பறவைகள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக வானத்தில் பறக்கின்றன; கோடிக் கணக்கான மீன்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக கடலில் நீந்துகின்றன; ஆனால் இவையெல்லாம் எப்படி வானிலும் நீரிலும் ஒரு ‘வழி’யை உருவாக்கவில்லையோ அதைப்போல, ஆயிரக் கணக்கான ஞானிகளும் ரிஷிகளும் கூட இந்து மதத்திற்கு இதுதான் ‘வழி’ என்று தீர்மானம் செய்யவில்லை.

எனவே தான் சுவாமிஜி கீழ்க்கண்ட சுலோகத்தையும் சிகாகோவில் சொல்கிறார்:

“பல்வேறு ஆறுகள் பல்வேறு இடங்களில் தோன்றினாலும், முடிவில் அவை ஒரே கடலில் சென்று கலக்கின்றன. அதுபோல பலவிதமான மனப்பான்மை கொண்டவர்கள் பின்பற்றும் வழிமுறைகள் நேரானவையாகவும் குறுகலானவையாகவும் தோற்றம் அளித்தாலும், இறைவா! முடிவில் அவை உன்னிடமே அழைத்துச் செல்கின்றன”.

       (சிவமஹின ஸ்தோத்திரம்-7)

ரிக்வேதத்தில் ரீங்காரமிடும் அற்புத வாசகம் இதோ…

ஏகம்ஸத் விப்ரா பஹுதா வதந்தி

(உண்மை ஒன்றே; ஞானிகள் பல்வேறு பெயர்களால் அழைக்கிறார்கள்)

 விதி விதித்தது:

“எல்லாச் சமயங்களும் எல்லாவிதமான வாழ்க்கை முறையும் உலக வாழ்வில் உவந்தது தான் என்ற உண்மையை உணரவும் அதை உலகோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்துக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுகிறார் சுவாமிஜி.

எனவே தான் இந்துமதம் பற்றி என்சைக்ளோபீடியாவின் (15-ம் பதிப்பு) விளக்கத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது:

“எல்லா வழிபாட்டு முறைகளையும் இந்துமதம் ஏற்றுக்கொள்கிறது. எல்லாவற்றிலும் உள்ள இறை வெளிப்பாட்டையும் உணர்வதே இந்து மதமாகும். கடவுள் உண்டா, இல்லையா? கடவுள் ஒன்று- பலவா? என்பது கூட இந்து மதத்தின் மையக்கருத்தாக இல்லை. அமைப்பில்லாத, ஆதி அந்தம் இல்லாத, நிறுவனரும் நிர்வகிப்பவரும் இல்லாத ஒரு ஏற்பாடே இந்துமதம்”.

அனுபவமே; அடையாளமல்ல (Experience; not Identity):

இத்தகைய கோட்பாடுகளின்படி பரிணாம வளர்ச்சி பெற்ற கருத்துக்கள் என்பதால் தான் இந்து மதம் எப்போதுமே ஓர் அனுபவமாகவே இருந்து வந்துள்ளது. அதை ஓர் அடையாளமாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது.

அதனால் தான் இந்த நாட்டின் சாதாரண மனிதன் கூட,

“ஹரியும் சிவனும் ஒண்ணு – இதை
அறியாதவன் வாயில் மண்ணு” என்று நினைக்கிறான்.

“மூர்த்தி பேதம் பாவம்” என்ற ஆதிசங்கரரின் கருத்தும் சாதாரண மனிதனின் கருத்தும் ஒன்றாகவே இருப்பதை உணரலாம்.

 எதிர்ப்பல்ல; ஏற்றுக்கொள்ளல் (Not oppose; but accept):

எந்தவொரு மத நம்பிக்கையையும் இந்த நாட்டின் பாரம்பரியம் எதிர்த்ததாக வரலாறு இல்லை. ஒரு மதம் இன்னொரு மதத்தை மறுதலிக்கும் என்பதே இந்த நாட்டிற்கு அந்நியமான கருத்தாகும். பஞ்சாபை ஆண்ட ரஞ்சித் சிங் ஒரு முஸ்லிம் ஞானியிடம் கூறுகிறான்:

“கடவுள் ஏன் என்னுடைய ஒரு கண்ணிலிருந்து ஒளியை எடுத்துக் கொண்டான் தெரியுமா? எல்லா மதங்களையும் நான் ஒரே கண்ணால் பார்க்க வேண்டும் என்பதால் தான்.”

என்ன ஒரு ஆழமான பார்வை? சமய நல்லிணக்கம் என்பது ஞானிகளின் வழிமட்டுமல்ல, மன்னர்களின் மகாத்மியமும் ஆகும்.

 சகிப்பதல்ல; மதிப்பது (Not Toleration ; but respects):

மற்றைய நம்பிக்கை முறைகளை ஏதோ இந்துமதம் அனுமதித்துச் சகித்தது என்பதல்ல சரித்திரம். எல்லா நம்பிக்கைகளையும் ஆதரித்து மதித்தது என்பது தான் உண்மை.

தஞ்சமடைந்த இஸ்ரேல் மக்களை மனதார ஏற்றுக்கொண்டாவர்கள் நாங்கள் என்றும், ஜொராஷ்டிரியர்களுக்கு அடைக்கலம் அளித்து இன்றும் பாதுகாத்து வருகிற ஒரு மதத்தைச் சார்ந்தவன் நான் என்றும் சுவாமி பெருமைப்படுகிறார்.

புவியோர் விரட்டிடப் புகலிடம் தேடி
தவித்தவர் வந்தது பாரதம் நாடி
சேய் போல கலங்கினர் பாய்மரத்தோடு  
போய் வரவேற்றாள் தாய் மனத்தோடு.
ஆஹா ஆஹா, அன்னை அவள்தான்
ஆறுதல் தந்திடும் சங்கரி உமை தான்.

-என்று ஒரு புதுக்கவிஞன் இதைப் பதிவு செய்திருக்கிறான்.

கணிதச் சமமல்ல; புனிதச் சமம்  (Not Ariithmetical equality):

ரோஜாவும் மல்லிகையும் சமம் இல்லை. அவற்றின் நிறம், மணம், பயன்பாடு ஆகியவை முற்றிலும் வேறுபடுபவையாகும். எனவே அவை ‘தனித்தன்மை’ கொண்டவை தானே தவிர,  ‘சமத்தன்மை’ என்று கூறிவிட முடியாதவை தான்.

ஆகவே தான் பாரம்பரிய பாரத ஞானம் எல்லா மதங்களும் சம அளவில் உண்மையானவை என்று கூறுகிறது. எல்லாமே சம அளவில் புனிதத்தன்மை கொண்டவை என்றும் ஏற்கப்பட்டுள்ளது. எனவே சமய நல்லிணக்கத்தில் கணிதச் சமன்பாட்டுக்கு இடமில்லை என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

 கொண்டாட்டமே;  திண்டாட்டமில்லை  (Celebrating the diversity):

சமூக வாழ்விலும் சமய வாழ்விலும் உள்ள வேற்றுமைகளை நமது பாரம்பரியம் கொண்டாடும் அதே வேளையில் மற்ற நாகரிகங்கள் அத்தகைய வேற்றுமைகளைக் கையாள்வதில் திண்டாடுகிறது (Celebrating the diversity).

இதைத் தான் தாயுமானவர் பாடுகிறார்:

வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின்,
விளங்குபரம் பொருளே! நின் விளையாட்டு அல்லால்
மாறுபடும் கருத்து இல்லை; முடிவுஇல் மோன
வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற்று அம்மா!

இந்தியாவில் ஒற்றுமை தான் (Unity) முக்கியம்; ஒரே மாதிரி (Uniformity) இருப்பதல்ல.

 இது ஒன்றே அல்ல; இதுவும் தான்  (Not only; but also):

இறைவனை உணர்வதில் முடிந்த முடிவு என்று ஏதுமில்லை. “இது ஒன்றே” என்ற மனோபாவமும் நம்பிக்கையும் மத அடிப்படைவாதத்தை வளர்க்கும். “இதுவும் தான்” இறைவனை அடையும் வழி என்ற நம்பிக்கையே சமய நல்லிணக்கத்தை வளர்க்கும் உபாயமாகும்.

வள்ளலார் பாடுகிறார்:

பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்
புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எல்லாம்
செய்யவல்ல கடவுளே தேவ தேவே!

    - திருவருட்பா 3-ம் திருமுறை

இதையும் மீறி மதங்களுக்குள் என்னுடையது மட்டும் ‘நன்று’ மற்ற மதங்கள் ‘தீது’ என்று உரைப்பவர்களை திருமூலரின் வரிகளில் பார்ப்போம். அவர்களை குன்றைப் பார்த்து குரைக்கும் நாய்களாக வருணிக்கிறார்:

ஒன்றது பேரூர் வழி அதற்குள்
என்றதுபோல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயை ஒத்தார்களே!

     - திருமந்திரம்

 உலக மதமல்ல;  மதங்களின் உலகம்  (Not World Religion but world of religions):

உலகம் முழுவதும் வெல்ல நினைத்த மதங்களால் உலக அமைதி பலியானது. வேற்றுமைகளே இல்லாத பன்மியத்தை பறிகொடுத்த ஒரு உலக மதம் (World Religion) உருவாக முடியாது. வரலாறு சொல்லும் பாடமும் அது தான்.

ஆனால் பல்வேறு சமயங்கள், புதுப்புது வழிபாட்டு முறைகள், அனுபவ அடிப்படையிலான ஆன்மிகம், வேற்றுமையும் பன்மையும் பரிணாமம் பெற்ற மதங்களின் உலகமாக (World of Religion) இவ்வையகம் வாழ முடியும் என்பதே நமது நம்பிக்கை.

 சத்தியம் சாத்தியமே:

பேரா.இரா.ஸ்ரீநிவாசன்

*  ‘சமயங்கள் இறைவனை அடையும் பாதையின் குறியீடுகள் மட்டுமே’ (Pointers of the Truth) என்கிறார் மகாத்மா காந்தி.

* ‘ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ ?’ (திருவாசகம்) என்கிறார் மாணிக்கவாசகர்.

*   இத்தகைய கருத்தோட்டங்களால் கனிந்து நிற்கும் ஒரே நாடு பாரதம் மாத்திரமே; மக்களைச் சமரசப்படுத்த முற்படின் மதங்களுக்குள்ளும் சமரசம் அவசியமே. அது விவேகானந்தரின் வழியில் தான் அமைய முடியும்.

*  இன்று உலகில் உள்ள எல்லா மதங்களும் இந்தியாவில் வாழ்கின்றன; அவை தங்களின் எண்ணிக்கை பலத்தால் வாழவில்லை. பெரும்பாலான இந்து சமுதாயத்தின் பரந்த மனப்பான்மை என்ற எண்ணத்தின் பலத்தில் வாழ்கின்றன. இத்தகைய சத்தியத்தைச் சாத்தியமாக்கியது இந்த பாரம்பரியம் மட்டுமே என்பதில் சுவாமிஜிக்கு மட்டுமல்ல, நமக்கும் பெருமை தான்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s