-மகாகவி பாரதி
பாண்டவர்க்கும் கௌரவர்க்கும் பாட்டனாரான பீஷ்மர் பாஞ்சாலியின் கேள்விக்கு பதில் அளிக்கிறார். “முன்னாளில் ஆணும் பெண்ணும் சமம் என்று இருந்த நிலை மாறிவிட்டது. இப்போது மனைவியை அடிமையாக விற்கலாம் என்ற நிலை தோன்றிவிட்டது. உன்னை சூதில் பணயம் வைத்து உன் கணவன் தருமன் தோற்றுவிட்டான். நான் என்ன செவது?” என்கிறார் அவர். “தீங்கு தடுக்குந் திறமிலேன்’ என்றந்த மேலோன் தலைகவிழ்ந்தான்” என்கிறார் மகாகவி பாரதி...

இரண்டாம் பாகம்
2.3. சபதச் சருக்கம்
2.3.4. வீட்டுமாசாரியன் சொல்வது
சூதாடி நின்னை யுதிட்டிரனே தோற்றுவிட்டான்.
வாதாடி நீயவன்றன் செய்கை மறுக்கின்றாய்.
சூதிலே வல்லான் சகுனி. தொழில்வலியால்,
மாதரசே, நின்னுடைய மன்னவனை வீழ்த்திவிட்டான்.
மற்றிதனி லுன்னையொரு பந்தயமா வைத்ததே
குற்றமென்று சொல்லுகிறாய். கோமகளே, பண்டையுக
வேதமுனிவர் விதிப்படி, நீ சொல்லுவது
நீதமெனக் கூடும்; நெடுங்காலச் செய்தியது!
ஆணொடுபெண் முற்றும் நிகரெனவே அந்நாளில்
பேணிவந்தார். பின்னாளில் இஃது பெயர்ந்துபோய்,
இப்பொழுதை நூல்களினை யெண்ணுங்கால், ஆடவருக்
கொப்பில்லை மாதர். ஒருவன்தன் தாரத்தை
விற்றிடலாம்; தானமென வேற்றுவர்க்குத் தந்திடலாம்.
முற்றும் விலங்கு முறைமையன்றி வேறில்லை.
தன்னை யடிமையென விற்றபின் னுந்தருமன்
நின்னை யடிமையெனக் கொள்வதற்கு நீதியுண்டு.
செல்லு நெறியறியார் செய்கையிங்குப் பார்த்திடிலோ,
கல்லும் நடுங்கும், விலங்குகளும் கண்புதைக்கும்,
செய்கை அநீதியென்று தேர்ந்தாலும், சாத்திரந்தான்
வைகு நெறியும் வழக்கமும்நீ கேட்பதனால்,
ஆங்கவையும் நின்சார்பி லாகா வகையுரைத்தேன்.
தீங்கு தடுக்குந் திறமிலேன்’ என்றந்த
மேலோன் தலைகவிழ்ந்தான். மெல்லியளுஞ் சொல்லுகிறாள்:-
$$$