-தஞ்சை வெ.கோபாலன்

பாகம்-2 :பகுதி 20
வெள்ளையனே! இந்தியாவை விட்டு வெளியேறு!
1942, ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி. பம்பாய் ஆசாத் மைதானம். ஆயிரக் கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் அமைதியாக மகாத்மா காந்தியடிகளின் உரையைக் கேட்டுக் கொண்டிருக் கின்றனர். ‘Quit India’ தீர்மானத்தை முன்மொழிந்து மகாத்மா வாதங்களை முன்வைக்கிறார். ‘ஆகஸ்ட் க்ரந்தி’ என்று இந்தி மொழியில் சொல்லப்படும் இந்தப் போராட்டம் அமைதி வழியில் பிரிட்டிஷாரை இந்த நாட்டைவிட்டுப் போய்விடும்படி கேட்டுக் கொள்ளும் போராட்டம்.
இதற்கு முன் எத்தனையோ போராட்டங்களை காந்திஜியின் தலைமையில் காங்கிரஸ் நடத்தியிருந்தும், இந்தப் போராட்டம் ஒரு இறுதிப் போராட்டம் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அமைதியான வழியில்- ஆங்கிலேயர்கள் எப்படி ஓசையின்றி இந்த நாட்டினுள் காலடி எடுத்து வைத்தார்களோ அதைப் போலவே- இப்போது இந்த நாட்டைவிட்டு அமைதியாக வெளியேறிவிட வேண்டுமென்ற முழக்கத்தை முன்வைத்தது இந்த தீர்மானம்.
1942 ஆகஸ்ட் 8-ஆம் தேதி பம்பாய் ஆசாத் மைதானத்தில் இதற்கான தீர்மானத்தை காந்திஜி முன்மொழிந்தார். நரம்புகளை முறுக்கேற்றும் அவரது உரையில், நாட்டின் அரசியல் சூழ்நிலைகளையும், ஆங்கிலேயர்கள் இந்த யுத்தக் காலத்திலும் நடந்து கொள்ளும் அநாகரிக முறைகளை விவரமாக எடுத்து வைக்கிறார்.
அவருடைய உரையின் இறுதிக்கட்ட வரிகள் தான் இந்த நாட்டின் தலைவிதியை மாற்றி அமைக்கக் காரணமாக இருந்தது. அந்த வரிகள் “செய், அல்லது செத்து மடி!” Do or Die என்பது.
காந்தியடிகள் முன்மொழிந்த அந்த தீர்மானத்தில் கண்டிருந்த செய்திகளின் சுருக்கம் இதோ:
“இந்திய நாட்டில் நாள்தோறும் நிகழும் நிகழ்ச்சிகள், மக்கள் பெற்றுவரும் அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்துவிடவேண்டும் என்ற உறுதியான முடிவுக்கு காங்கிரஸ் வந்துவிட்டது. இந்திய நாட்டின் நன்மையைக் கருதி மட்டுமல்லாமல், உலக நாடுகளின் பாதுகாப்பையும் முன்னிட்டு உலகில் நிலவும் ராணுவ வெறி, நாசிசம், பாசிசம் போன்ற ஏகாதிபத்திய கொடுமைகளை எதிர்த்தும், ஒரு நாடு மற்றொரு நாட்டை ஆக்கிரமித்துப் பிடித்துக் கொள்ளும் வெறிச்செயலை ஒழிக்கவும் இந்தியா சுதந்திரம் பெறவேண்டியது அவசியமாகிறது. உலகப் பெரும்போர் நடந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எந்தவித இடையூறும் தந்துவிடக் கூடாது எனும் நல்ல எண்ணத்தில் காங்கிரஸ் பல விஷயங்களில் ஆட்சியாளர்களுக்கு விட்டுக்கொடுத்தும், அரசின் போக்கு மாறவில்லை. சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் அவர்களுடன் காங்கிரஸ் நடத்திய பேச்சு வார்த்தைகளிலும், அடிப்படையான சில உரிமைகளைத்தான் கேட்டோம். ஆனால் அதற்கு எவ்விதப் பயனும் ஏற்படவில்லை. ஆங்கில ஆட்சியாளர்கள் மீது இதனால் இந்திய மக்களுக்கு வெறுப்பு அதிகரித்து விட்டது. மற்றொரு பக்கம் பிரிட்டன் உள்ளிட்ட நேசநாடுகளுக்கு எதிராக ஜப்பான் பெற்று வரும் வெற்றிகளைக் கண்டு மக்கள் மகிழ்ச்சியும் உத்சாகமும் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது. ஓர் அடிமை வாழ்வில் இருந்து மற்றொரு அடிமை வாழ்வுக்கு அது கொண்டுபோய் விட்டுவிடும். ஆங்கிலேயர்களுக்கு பதில் ஜப்பானியர்களுக்கு நாம் அடிமைகளாக ஆக அது வழிவகுத்துவிடும். மலேயா, சிங்கப்பூர், பர்மா முதலான நாடுகளில் ஏற்பட்ட அனுபவத்தைப் போல இங்கும் ஏற்படுவதைத் தடுக்க காங்கிரஸ் விரும்புகிறது. நமக்கு எந்த அல்லது யாருடைய ஆதிக்கமும் தேவையில்லை. அந்நிய ஆட்சியாளர்கள் நம்மைப் பிரித்தாளும் கொள்கையை நீண்ட நெடுங்காலமாகக் கருணையின்றி கடைபிடித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மக்கள் உறுதியுடனும், மனம் விரும்பியும், நம்மிடம் உள்ள பலத்தை ஒன்று திரட்டியும் அந்நிய சக்திகளின் ஆதிக்கத்தை எதிர்த்து நிற்க வேண்டும். அது தான் இப்போது காங்கிரசின் ஒரே நோக்கம். இந்தியாவிலிருந்து ஆங்கில ஆட்சியாளர்கள் வெளியேறிவிட வேண்டும். இதைச் சொல்லும் அதே நேரத்தில் இங்கிலாந்துக்கோ அல்லது அதோடு இணைந்து போரில் ஈடுபட்டிருக்கும் நேச நாடுகளுக்கோ நாம் எந்தவித இடையூறும் விளைவிக்க விரும்பவில்லை. இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் எல்லோரும் வெளியேறிவிட வேண்டும் என்பதல்ல நமது கோரிக்கை. அவர்களும் நாமும் பரஸ்பர நல்லெண்ணத்துடன் ஆட்சியை மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதே நம் கோரிக்கை. ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிய வேண்டும். இந்தியர்களை இந்தியர்களே ஆண்டுகொள்ளும் சுயாட்சி மலர வேண்டும். இதுவே இந்த மாநாட்டின் உறுதியான கோரிக்கை”.
-அந்தத் தீர்மானத்தின் உட்கருத்து இவை தான். காந்திஜி தன்னுடைய உரையின் நிறைவில் மிக உருக்கமாக ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அது, “நான் ஒரு மந்திரத்தை உங்களுக்கு இப்போது சொல்லுகிறேன். அதை உங்கள் இதயங்களில் பதித்து வைத்திருங்கள். நீங்கள் விடும் மூச்சுக்காற்றிலும் இந்த மந்திரம் ஒலித்துக் கொண்டிருக்கட்டும். அந்த மந்திரம் ‘செய்! அல்லது செத்து மடி!’ Do or Die” என்று குறிப்பிட்டார்.
காந்திஜி சொன்ன இந்த ‘செய் அல்லது செத்து மடி’ என்ற கோஷத்தை அரசாங்கம் தவறாகப் புரிந்து கொண்டது. காந்தியடிகள் மக்களை அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுகிறார் என்று எண்ணியது. இதை அவர்கள் மக்களுக்கும் பிரகடனப் படுத்தி எச்சரித்தனர்.
அதற்கு காந்திஜி ஒரு விளக்கமளித்தார். நான் சொன்ன இந்த கோஷத்தின் பொருள் “ஒன்று, நாங்கள் இந்தியாவை விடுதலை அடையும்படி செய்வோம்; அப்படி இல்லையென்றால் அந்த முயற்சியில் நாங்கள் எங்கள் உயிர்களைத் தியாகம் செய்வோம்” என்று விளக்கமளித்தார்.
இந்த மாநாட்டின் தீர்மானத்தின்படி போராட்டத்தைத் துவக்குவதற்கு முன்பாக தான் வைசிராய்க்கு ஒரு கடிதம் எழுதப் போவதாகவும் காந்தியடிகள் தெரிவித்தார். பிரிட்டிஷ் அரசோ இந்த தீர்மானத்துக்குப் பதில் அளிக்கையில் “காங்கிரஸ் விடுக்கும் சவாலை இந்திய சர்க்கார் எதிர்கொள்வார்கள்” என்றனர்.
பம்பாய் மகாநாட்டில் நேருஜியும் பேசினார். அவர் சொன்னார், “பிரிட்டிஷாருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. அவர்கள் தங்கள் பெட்டி படுக்கைகளைச் சுருட்டிக் கொண்டு தங்கள் நாட்டுக்குக் கப்பல் ஏற வேண்டிய நேரம் இது. அவர்களே அப்படி செய்துவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறி விடுவார்களானால் அது மிகவும் கெளரவமான செயலாக இருக்கும்” என்றார்.
மாநாட்டுப் பிரதிநிதிகளின் உடல்களில் புதிய ரத்தம் பாய்ந்தது போன்ற எழுச்சி இந்தத் தீர்மானத்தைக் கேட்டதும் உருவானது. இது ஒரு நேரடியான கோரிக்கை. இந்த நாட்டை இத்தனை காலம் ஆண்டு, அனுபவித்துச் சுரண்டியது போதாதா, புறப்படுங்கள்- உங்கள் நாட்டுக்கு என்பது, இந்தியர்களின் ஏகோபித்த கோரிக்கை.
உலக நாடுகள் பலவற்றிலும் காலனிகளை அமைத்து அந்த நாடுகளையெல்லாம் சுரண்டி செல்வத்தைக் குவித்த பிரிட்டன் அத்தனை சுலபத்தில் இந்த நாட்டைவிட்டு வெளியேறி விடுவார்களா என்ன? அப்படியொரு தீர்மானத்தைக் காங்கிரஸ் நிறைவேற்றியதும் அவர்கள் கோபம் எல்லை கடந்தது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் காங்கிரசின் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல, இதற்குச் சரியான பதிலடி கொடுக்கவும் தங்களைத் தயார் செய்து கொண்டார்கள்.
காந்திஜி பம்பாயில் பேசி முடித்த ஒருசில மணி நேரத்துக்குள் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு விட்டனர். யுத்தகால சிறைவாசம் என்றால், இன்னார் இன்ன சிறையில் இருக்கிறார் என்பதைக் கூட வெளியிட மாட்டார்கள். யாரும் அவர்களைச் சென்று பார்த்துவிட முடியாது. இந்திய பிரிட்டிஷ் சர்க்காரின் இந்த அடக்குமுறையை அதிகப்படியான இந்தியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட வைஸ்ராயின் சபையும் அங்கீகரித்தது.
கொடுமை என்னவென்றால், இந்திய முஸ்லிம்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சமஸ்தானாதிபதிகள், பிரிட்டிஷ் அரசில் பணிபுரியும் காவல்துறை, இந்திய ராணுவம், இந்திய சிவில் சர்வீஸ்- இவர்கள் அத்தனை பேரும் அரசாங்கத்தின் இந்த அடாவடி அராஜகத்தை ஆதரித்தார்கள்.
யுத்த காலமாதலால் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்பட்டன. அதை கள்ள மார்க்கெட்டில் விற்று பெரு வியாபாரிகள் கொழுத்த லாபம் சம்பாதித்தனர். ஆகவே இந்த அபூர்வமான சந்தர்ப்பத்தை கள்ள மார்க்கெட் வியாபாரிகள் இழக்கத் தயாரில்லை, ஆகவே அவர்களும் பிரிட்டிஷ் அரசின் நடவடிக்கைகளை ஆதரித்தார்கள்.
இளைஞர்களும் இந்திய மாணவர்களும் தங்கள் கவனத்தை இந்திய தேசிய ராணுவத்தின் மீதும் அதன் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் மீதும் திருப்பியிருந்ததால், காங்கிரசின் இந்தத் தீர்மானம் அவர்களை அதிகம் ஈர்க்கவில்லை.
ஆனால் எதிர்பாராத ஓரிடத்திலிருந்து இந்தப் போராட்டத்தை ஆதரித்து ஒரு குரல் ஒலித்தது. அது தான் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டின் குரல். அவர் பிரிட்டிஷ் பிரதம மந்திரியை, இந்தியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியிருந்தார்.
அதிகாரங்களின் பல கரங்கள் இந்தப் போராட்டத்தை நசுக்க வேண்டிய ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் உணர்ச்சிவசப்பட்ட அடிமட்ட காங்கிரஸ் தொண்டர்களும், திரைமறைவில் இருந்து கொண்டு பெரும் போராட்டத்தைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்த சில அரசியல்வாதிகளும் இந்த ஆகஸ்ட் புரட்சியை ஒரு ரத்தப் புரட்சியாக ஆக்கிக் கொண்டிருந்தார்கள்.
இப்படிப்பட்ட வன்முறைப் போராட்டம் காங்கிரசின் போராட்டமல்ல, பொதுமக்களும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட வீரர்களும் இணைந்து நடத்திய செயல். ஆகவே இந்த வன்முறைகளுக்குக் குற்றம் சாட்டப்பட வேண்டியவர் காந்திஜி அல்ல; அவர் மீது அடக்குமுறையை ஏவிவிட்டு, காங்கிரசின் குரல்வளையை நசுக்கி கட்சியைத் தடைசெய்து, வங்கிக் கணக்குகளை முடக்கி, தொண்டர்களை சிறையிலிட்ட இந்திய அரசே அத்தனைக்கும் காரணம் என்பதை அடித்துக் கூற முடியும்.
பிரிட்டிஷ் அரசு உலகப் போர் நடந்து கொண்டிருக்கும் போது இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிப்பது எனும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதியாக நின்றது. யுத்தம் முடியட்டும், அப்போது யோசிப்போம் என்பது அவர்கள் பதில்.
நாடெங்கும் அராஜகம் வன்முறை வெறியாட்டம். ஆயிரமாயிரம் தொண்டர்கள் கைது. சிறையில் அடைப்பு. இந்தப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்படவில்லை. ஆங்காங்கே அவரவர்க்குத் தோன்றியபடி போராடினதன் விளைவு, போராட்டம் தோல்வியில் முடிந்தது. ஆனால் அதற்குள் நிகழ்ந்தவை வடுக்களாக நிலைத்து நிற்கும்.
இந்தப் போராட்டத்தின் விளைவாக, பிரிட்டிஷ் அரசும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்துவிட்டது. இனியும் நாம் இந்தியாவில் இருந்து ஆட்சி செய்யமுடியாது எனும் உண்மையை அவர்கள் புரிந்து கொண்டிருந்தார்கள்.
ஆகஸ்ட் 8-ஆம் தேதி, காந்திஜி மாநாட்டுப் பந்தலில் இருந்து தன் தங்குமிடம் செல்வதற்குள் கைது செய்யப்பட்டு எங்கோ கொண்டு செல்லப்பட்டு விட்டார். நேருவும், படேலும், அபுல்கலாம் ஆசாதும் கைதாகினர். உடல்நலம் சரியில்லாமல் பாட்னாவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பாபு ராஜேந்திர பிரசாத்தும் கைது செய்யப்பட்டார். தமிழ்நாட்டுத் தலைவர்கள் தீரர் சத்தியமூர்த்தி ரயிலில் சென்னை திரும்பிக் கொண்டிருந்த வழியில் ஆந்திராவில் கைதுசெய்யப்பட்டு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் விடுதலை ஆகாமலே சிறைவாசத்தின் போதே தன் இன்னுயிரையும் நீத்து அமரர் ஆனார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த பெருந்தலைவர் காமராஜ் மட்டும் தான் கைது செய்யப்படலாம் என்பதாலும், சிறை செல்வதற்கு முன்பு வெளியில் போராட்டம் குறித்த சில தகவல்களை காங்கிரசாருக்குத் தெரிவிக்க வேண்டியிருந்ததாலும், தன்னை ஒரு கிராமத்து விவசாயி போல தலையில் முண்டாசும், தன் உடைமைகளை ஒரு மூட்டையாகக் கட்டி அதைத் தலையில் தாங்கிக் கொண்டும் பம்பாயிலிருந்து சென்னை வரும் வழியில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இறங்கி மற்ற பயணிகளைப் போல நடந்து சென்று நிலையத்துக்கு வெளியே வந்தார்.
அப்போது அரக்கோணம் கடைத்தெருவில் காபி ஓட்டல் நடத்தி வந்த தியாகி தேவராஜ ஐயங்காரை ரகசியமாகச் சந்தித்தார். பின்னர் அவருடன் கிளம்பி ராணிப்பேட்டைக்குச் சென்று அங்கு தீனபந்து ஆசிரமம் நடத்திக் கொண்டிருந்த கல்யாணராம ஐயரைப் போய் பார்த்து அவரிடம் சில செய்திகளைச் சொல்லி மற்றவர்களுக்கும் சொல்லச் செய்தார்.
பின்னர் இவர்கள் ராணிப்பேட்டையில் ஒரு தோட்டத்தில் வசித்துவந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் இல்லம் சென்றனர். ஒரு முஸ்லிம், அவர் இல்லத்தில் காமராஜ் தங்கியிருந்து பின் மறுநாள் வேலூர் சென்று அங்கிருந்த காங்கிரஸ்காரர்களை ஒரு ரகசியக் கூட்டத்தில் சந்தித்துவிட்டு ஊர் திரும்பும் வழியில் திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கும் சென்றபின் விருதுநகர் திரும்பினார்.
ஊர் திரும்பிய அன்று காலை வீட்டில் குளித்து உணவு அருந்தியபின் ஒரு நண்பரை அனுப்பி விருதுநகர் காவல் நிலையத்துக்குச் செய்தி சொல்லி அனுப்பினார். தான் ஊர் திரும்பிவிட்டதாகவும், தன்னை கைது செய்து கொள்ளலாம் என்றும் செய்தி அனுப்ப, அந்த இன்ஸ்பெக்டர் வந்து காமராஜரைத் தேடி போலீஸ் வேலூர் சென்றிருப்பதாகவும், திரும்பி வருவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும். அதுவரை தலைவர் ஓய்வெடுத்துக் கொண்டு வீட்டில் இருக்கலாம் என்று சொல்லியும் கேட்காமல், காமராஜ் அன்றே கைதானார். பின்னர் சிறை சென்றார்.
மாநாட்டுப் பந்தலிலும், பிரதிநிதிகள் தங்கும் முகாம்களிலுமிருந்து அகில இந்திய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, எங்கு கொண்டு செல்கிறோம் என்றுகூட சொல்லாமல் எங்கெங்கோ கொண்டு செல்லப்பட்டார்கள். ஒவ்வொரு மாகாண பிரதிநிதிகளிலும் பெயர் சொல்லக்கூடிய தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் உட்பட பலரும் கைது செய்யப்பட்டு ஆங்காங்கே பல சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இத்தனை களேபரங்கள் நடந்து கொண்டிருக்கையில், ஆகஸ்ட் 15-ஆம் தேதி மகாத்மா காந்தியடிகளின் செயலாளராக இருந்த மகாதேவ தேசாய், ஆகாகான் மாளிகையில் உயிரிழந்தார். காந்திஜி அவரது உடலைத் தானே குளிப்பாட்டி அந்த அரண்மனை வளாகத்தின் ஒரு பகுதியில் சிதை அடுக்கி அவரை தகனம் செய்தார்.
அப்போது காந்திஜி முணுமுணுத்த வரிகள்: “மகாதேவ்! மகாதேவ்! எனக்குப் பின் என்னுடைய சரித்திரத்தை எழுத நீ இருப்பாய் என்று எண்ணியிருந்தேன். ஆனால் உன்னுடைய சரித்திரத்தை என்ன எழுதவைத்துவிட்டு நீ மறைந்து சென்றனையே!” என்று புலம்பினார்.
தென்னாப்பிரிக்காவைவி ட்டு இந்தியா வந்து சேர்ந்து இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்ட நாளிலிருந்து மகாதேவ தேசாய் காந்திஜியைப் பிரியாமல் உடன் இருந்தவர். குஜராத்தைச் சேர்ந்த இவர் ஒரு எம்.ஏ. பட்டதாரி. சிறந்த எழுத்தாளர். மிக உயர்ந்த சிந்தனை படைத்தவர். எளிய, உயர்வான ஆங்கில நடை அவருடையது.
காந்திஜி, புனா ஆகாகான் மாளிகையிலும், மற்ற தலைவர்கள் நேரு உட்பட அனைவரும் அகமத்நகர் கோட்டையிலும் சிறைவைக்கப்பட்டனர். காந்திஜியும் மற்ற தலைவர்களும் சிறைப்பட்ட அந்த ஆகஸ்ட் 8 இரவுக்குள் எத்தனையெத்தனை கைதுகள், சிறைச்சாலைக்கு அனுப்புதல் அன்று நாடே அமளி துமளிப் பட்டது.
மறுநாள் பொழுது விடிந்தது. காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்ட செய்தி நாடு முழுவதும் பரவியது. ஆங்காங்கே மக்கள் பொங்கி எழுந்தனர். நாட்டின் பெரு நகரங்கள், சிறு ஊர்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் கூட்டமாக அவரவர்க்குத் தோன்றிய முறைகளில் எல்லாம் போராடத் தொடங்கினர்.
இந்தப் போராட்டங்களுக்கும், பம்பாய் காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்படியொரு தீர்மானத்தின் விவரங்கள் கூட பொதுமக்களுக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை. இது மக்கள் தாங்களாகவே தலைவர்களின் கைதை எதிர்த்துத் தொடங்கிய போர். அவர்களுக்கு வழிகாட்ட தலைவர்கள் எவரும் வெளியில் இல்லை. பெயர் சொல்லக்கூடிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சிறை கொட்டடியில். பொதுமக்கள் கேப்டன் இல்லாத கப்பல் சிப்பந்திகளைப் போல அவரவர் மனதுக்குத் தோன்றியபடி போராட்டம் நடத்தத் தொடங்கினர்.
இது காங்கிரஸ் கட்சி நடத்திய போர் அல்ல. பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டு தாங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொண்ட போர். நாட்டில் பல பகுதிகளிலும் தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன. ரயில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. ‘மகாத்மா காந்தியை விடுதலை செய். மகாத்மா காந்திக்கு ஜே!’ என்றெல்லாம் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பொதுமக்களின் வாழ்க்கை ஸ்தம்பித்து நின்றது. நாடு மட்டுமல்ல உலகமே இந்தியாவில் நடக்கும் இந்த வெகுஜனப் போரை வேடிக்கை பார்க்கத் தொடங்கியது.
காங்கிரஸ் கட்சியோ ஆகஸ்ட் புரட்சியில் நடந்தவைக்கு பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது, காரணம் தீர்மானம்தான் போட்டார்களே தவிர அவர்கள் போராட்டம் எங்கு, எப்படி, எந்த வகையில் நடக்கும் என்ற முடிவுகள் எதையும் அறிவிக்காத நிலையில், அடக்குமுறைகளை எதிர்கொள்ள ஆங்காங்கே வன்முறை போராட்டங்களை நடத்தத் தொடங்கிவிட்டனர். ஆகவே இது ஒரு பொதுஜனப் புரட்சி.
நடந்த வன்முறைகளுக்குத் தாங்கள் காரணமல்ல என்பதால், அந்த காலகட்டத்தில் நடந்த பல வன்முறைகளை காந்தியவாதிகள் எழுதுவதில்லை. ஆனால் நடந்தவை நடந்தவையே! அதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது அல்லவா?
அப்படி இந்திய நாடு முழுவதும் நடந்த வன்முறை வெறியாட்டங்களை எழுதினால் பக்கங்கள் போதாது என்பதால், தமிழ்நாட்டில் நடந்த ஒருசில நிகழ்வுகளை விவரமாக இனி வரும் தொடர்களில் பார்க்கலாம்.
அந்த வன்முறை சரியென்பது நமது வாதமல்ல. ஆனால் தவறான வழிகளில் நாடு பிடித்து, வன்முறையே வரலாறாய் ஆட்சி புரிந்து அடக்குமுறைகளை அவிழ்த்துவிட்டு அடிமைத் தளையில் நம்மை வைத்திருந்த அன்னிய ஆட்சியாளர்களுக்கு அந்த வன்முறை தான் புரிந்தது என்பதை எடுத்துக்காட்டவே இந்த விவரங்கள்.
அதுமட்டுமல்ல, இந்த நாட்டின் மீது கொண்ட பக்தியால் அல்லவோ ஆயிரமாயிரம் மாரதவீ ரர்கள் தாய்நாட்டுக்காகத் தங்கள் நல்லுயிர் ஈந்தனர்?
அந்தப் போராட்டத்தை வன்முறை என்று ஒதுக்கிவிட்டால், அவர்களது தியாகம் மறைக்கப்படுவதாகாதா? அதனால் தான் ஒருசில வரலாற்று நிகழ்ச்சிகளையும், அந்த வரலாற்று நாயகர்களையும் இனி பார்ப்போம்.
$$$
One thought on “ஸ்வதந்திர கர்ஜனை- 2(20)”