ஸ்வதந்திர கர்ஜனை- 2(19)

-தஞ்சை வெ.கோபாலன்

பகுதி: 2.18

காந்திஜியுடன் ஆங்கில அரசின் தூதர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ்

பாகம்-2 :பகுதி 19

சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் தூது

ஆண்டுதோறும் நடைபெறும் காங்கிரஸ் மாநாடுகள் பெரும்பாலும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும். ஒரு சில நேரங்களில் அவசரமாகக் கூடி முடிவுகள் எடுக்க வேண்டுமானால் மற்ற மாதங்களிலும் கூட காங்கிரஸ் கூடி விவாதித்து முடிவுகளை எடுத்திருக்கிறது. அதைப் போல இரண்டாம் உலக யுத்தம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது, இந்தியர்கள் கிழக்கில் சுதந்திர உதயம் எழுமா என்று ஆவலோடு காத்திருந்த நேரத்தில், 1942-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 13 முதல் 16 வரை காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடியது.

அதே ஆண்டில் வார்தாவில் அகில இந்திய காங்கிரஸ் கூடி முக்கியமான நடவடிக்கைகள் குறித்து விவாதம் நடத்தியது. அபுல்கலாம் ஆசாத் தலைமை வகித்தார்.

அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பாவில் தொடங்கிய யுத்தம், ஜப்பான் அதை அமெரிக்கக் கடற்கரைக்குக் கொண்டுசென்று பேர்ல் ஹார்பரை குறிவைத்துத் தாக்கி அமெரிக்கக் கப்பல்களை உடைத்தெறிந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, ஆசிய நாடுகள் பலவற்றை கபளீகரம் செய்துகொண்டு ஜப்பான் பர்மா மூலமாக இந்திய எல்லையை நெருங்கியிருந்த நேரம்.

ஜப்பான் தாக்குதலுக்கு முன்பாக இந்திய தேசிய ராணுவம் தங்கள் படைவீரர்களை அணிவகுத்து ‘தில்லி சலோ’ என்று நேதாஜி படைகளை வழிநடத்திக் கொண்டு வந்த நேரம்.

இந்த சூழ்நிலையில் இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பாடுபடும் தேசபக்தர்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதையெல்லாம் வழிநடத்த காந்திஜி அவசியம் தேவை என்பதால், அவரை காங்கிரசை வழிநடத்த வரவேண்டுமென்று அறைகூவல் விடுத்தது கட்சி.

காந்திஜியும் நாடு இருக்கும் நிலைமையையும், இந்த இக்கட்டான நேரத்தில் இந்திய சுதந்திரத்தையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய சூழ்நிலையில், சில நிபந்தனைகளுடன், போராட்டத்தை வழிநடத்த ஒப்புக் கொண்டார்.

தனிநபர் சத்தியாக்கிரகம் போர் தொடங்கியதும் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது மூடப்பட்ட காந்திஜியின் பத்திரிகைகள் மீண்டும் வெளிவரத் தொடங்கின.

காங்கிரசுக்கும் காந்திஜிக்கும் மிக நெருக்கமானவரும், இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குத் தனது நன்கொடைகளாலும், காந்திஜிக்குத் தந்து வந்த ஆதரவாலும் சிறந்து விளங்கிய ஜம்னாலால் பஜாஜ் என்பார் இந்த நேரத்தில் காலமானார். காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்து வந்தவர் பஜாஜ்.

அந்தக் காலகட்டத்தில் தேசிய சீனாவின் அதிபராக விளங்கிய சியாங்கே ஷேக்கும் அவரது மனைவியாரும் கல்கத்தா வந்து காந்திஜியைச் சந்தித்து உலக அரசியல் விவகாரம் குறித்து விவாதித்தனர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம் என்னவென்றால், திருமதி சியாங்கே ஷேக் அவர்கள் இந்திய பாணியில் கதரில் நெய்யப்பட்ட புடவை அணிந்து கொண்டு,  இந்துப் பெண்மணி போல நெற்றியில் திலகமிட்டுக் கொண்டு காந்திஜிக்கும் சியாங்கே ஷேக்குக்கும் மொழிபெயர்ப்பாளராக விளங்கியது தான்.

ஐரோப்பாவில் ‘மின்னல்வேகத் தாக்குதல்’களை நடத்திக் கொண்டு ஜெர்மனி முன்னேறிக் கொண்டிருந்தது. ஜெர்மனியின் இந்த அதிவேகத் தாக்குதலைக் குறித்து புதிதாக ஒரு சொல் உருவானது. அதுதான் பிளிட்ஸ்கிரெக் (Blitzkrieg) என்பது.

போலந்து ஜெர்மனியிடம் விழுந்த அடுத்த கணம்,  ஜெர்மானியப் படைகள் மேற்கு நோக்கித் திரும்பத் தொடங்கியது. அப்போது அவர்களது படைகள் முன்னேறிய வேகத்துக்கு இணையாக இந்த யுத்தத்துக்கு முன்பும் இல்லை, பின்பும் இல்லை. இன்று வரை இந்த Blitzkrieg சொல் அகராதியில் இடம்பிடித்து விட்டது.

ஜப்பான் பர்மாவில் ரங்கூன் நகரையும் கைப்பற்றி விட்டது, அடுத்ததாக இந்தியா தான். தூரக்கிழக்கு ஆசியா முழுவதிலும் காலனிகளை அமைத்திருந்த பிரிட்டன், பிரான்ஸ் முதலான நாடுகள் தங்கள் காலனிகளை இழந்து வந்தன. பிரிட்டன் எல்லா காலனிகளையும் ஜப்பானிடம் தோற்றுவிட்டு கடைசிப் புகலிடமாக இந்தியாவினுள் முடங்கியது.

ரங்கூனைப் பிடித்துவிட்ட ஜப்பான் அடுத்த சில நாட்களில் இந்தியாவினுள் நுழைந்துவிடும்;  அப்போது இந்திய மக்கள் எக்கேடு கெட்டால் என்ன என்று பிரிட்டிஷார் தப்பிப் பிழைத்து இங்கிலாந்துக்குச் சென்றுவிடுவர். இந்திய நாட்டு மக்களின் தலையெழுத்து என்னவாகும்?

ஐரோப்பாவை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்ட ஜெர்மனி கிழக்கு நோக்கி திரும்பி இந்தியாவிற்கும் வரலாம். கிழக்கிலிருந்து ஜப்பான் பர்மாவை விழுங்கி விட்டு இந்தியாவை அமுக்கிவிட வரலாம். இந்த நிலைமையை எப்படி சமாளிப்பது என்ற கவலை இந்தியத் தலைவர்களுக்கு ஏற்பட்டது.

இனியும் ஆங்கிலேயர்கள் இந்திய மக்களைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்க முடியாது. யுத்தத்தின் போக்கு மாறுமானால் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ‘துண்டைக் காணோம், துணியைக் காணொமென்று’ அவர்கள் நாட்டை நோக்கி ஓட்டம் பிடித்துவிடுவார்கள். அப்போது மாட்டிக் கொள்பவர்கள் நாமல்லவா?

நம்மை அதாவது இந்தியர்களை, நாட்டைக் காக்கும் வகையில் ஆங்கிலேயர்கள் பழக்கி வைத்திருக்கவில்லை. இந்திய தேசியப் படையை வழிநடத்தும் நேதாஜி இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் தான் என்றாலும், ஜப்பான் செய்துவரும் உதவிகளால் அவர்களுக்கு ஏற்புடையவராகத் தானே இருப்பார்? அவர்களை நேதாஜியால் விரோதித்துக் கொள்ள முடியுமா? அல்லது ஜப்பானியர்கள் தான் இந்தியர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கத் தயாராக இருப்பார்களா?

இந்த சூழ்நிலையில், காங்கிரசின் எண்ணம்தான் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள அப்போது 1942 மார்ச் மாதம் 7-ஆம் தேதி வல்லபபாய் படேல் பேசிய பேச்சைக் காணலாம். அவர் சொல்கிறார்:

“பாரதத் தாயின் புதல்வர்களே! நீங்கள் அனைவருமே மகாபாரத யுத்தத்தைப் பற்றி அறிந்திருப்பீர்கள். அந்த குருக்ஷேத்திர யுத்தம் மிகப் பிரம்மாண்டமான யுத்தம் என்பதையும் அறிந்திருப்பீர்கள். ஆனால் இன்று நடைபெறுகின்ற உலக யுத்தத்தோடு ஒப்பிடும்போது அது ஒன்றுமே இல்லை என்று சொல்லலாம்.

அந்தக் காலத்தில் ஒரு யுத்தம் நடக்கிறது என்று சொன்னால், அது நடக்கவேண்டிய அரங்கைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். யுத்தம் அந்த இடத்தினுள் தான் நடக்க வேண்டும். அதன் எல்லையைத் தாண்டாமல் யுத்தம் நடத்தி, அது முடிந்து வெற்றி தோல்விகளை முடிவு செய்து கொள்வார்கள்.

ஆனால் இன்றைய யுத்தம் இருக்கிறதே அது இந்த யுத்தத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இருக்குமிடத்திற்கும் அப்பால் வெகு தூரத்துக்குப் பரந்து விரிந்து நடந்து கொண்டிருக்கிறது. யுத்தம் முந்தைய காலங்களைப் போல தரையில் மட்டுமல்லாமல், வானவெளியிலும், கடலுக்கு அடியிலும் கூட பயங்கரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த யுத்தத்தினால் விளந்தவை எவை? எத்தனை அழிவுகள்? இவைப ற்றியெல்லாம் யுத்தம் செய்து கொண்டிருப்பவர்களுக்கே தெரியாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், இந்த யுத்தத்தின் வீச்சு எப்படிப்பட்டது என்பதை.

யுத்தம் செய்யும் இரு கட்சியாருமே யோக்கியர்கள் அல்ல. இறைவன் பெயரால் நடக்கும் யுத்தம் என்று இரு தரப்பாருமே பிரகடனப் படுத்திக் கொள்கிறார்கள். இரு சாராரும் ஏசு கிறிஸ்துவை வழிபடுவதாக வேறு சொல்லிக் கொள்கிறார்கள். என்ன வேடிக்கை பாருங்கள்!

இந்த யுத்தத்தில் ஈடுபட்டிருப்போர் தங்களை முன்னேற்றமடைந்தவர்களாகவும், நாகரிகம் தெரிந்தவர்களாகவும், மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் தகுதி படைத்தவர்களாகவும் கூறிக் கொள்கிறார்களே தவிர, பிந்நாளில் இவர்களைப் பற்றி எழுதப் போகும் வரலாற்றாசிரியர்கள் இவர்களை மிருகங்களினும் கேடு கெட்டவர்கள் என்று தான் எழுதப் போகிறார்கள்.

உலகத்தையே அழித்தொழிக்கும் பயங்கரமான யுத்தம் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் தன் உள்ளத் திண்மையால் மனவுறுதியுடன் நின்றுகொண்டு, ‘வாள் எடுத்தவன் வாளாலேயே அழிவான்’ என்றும், வன்முறையாளன் வன்முறையாலேயே கொல்லப்படுவான் என்றும் உரக்கக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் காந்திஜி.

இந்த யுத்தம் முடிந்து தெளிவு பிறக்கும்போது தான் உலகில் மிக உயர்ந்த தர்மம் அகிம்சை என்பதை மக்கள் உணரப் போகிறார்கள். இந்தியா இப்போது இருக்கும் சூழ்நிலையில் நாம் நம்மை இறைவனிடம் ஒப்படைத்து விட்டோமாதலின், நம்மைவிட இந்த உலகில் மகிழ்ச்சியடையப் போவது யார் இருக்க முடியும்?

நாம் யாரிடமிருந்தும் எதையும் பறித்துக் கொள்ளவில்லை எனும்போது எதை இழந்துவிடப் போகிறோம்? ஒன்றும் இல்லை. ஆனால், நாம் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். உலக யுத்த குழப்பம் எவ்வளவு இருந்த போதும் நாம் மிருகங்களைப் போல ஏன் சாக வேண்டுமென்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

காந்தியடிகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது பயமின்மை என்பதைத்தான். இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பு இனி எந்தப் பிறவியிலும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். பீரங்கிகள் வெடிக்கும் போதும், துப்பாக்கிகள் அலறும்போதும் மார்பைத் திறந்து காட்டும் தைரியம் வராமல் போனாலும், கோழைகளாக மாறி களத்தைவிட்டு ஓடிவிடும் கேவலத் தன்மையாவது ஏற்படாமல் இருக்க வேண்டும்.

நீங்கள் தாக்கப்படும்போது அகிம்சையினாலோ, தேவைப்பட்டால் பலாத்காரத்தின் மூலமாகவோ எதிரிகளைத் துணிந்து எதிர்க்கும் துணிவைக் கற்றுக் கொள்ள வேண்டும்.”

-இப்படியொரு உரையை நிகழ்த்தி வல்லபபாய் படேல் மக்களை விழித்தெழச் செய்தார். இப்படி உலக யுத்தம் இந்த பூமியின் எல்லா பகுதி மக்களையும் அச்சத்தில் உறைய வைத்திருந்தது.

பூமிப் பந்தின் மேற்புறமெங்கும் யுத்தம் அல்லோலப் பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் இந்திய மக்கள் எங்கோ எண்ணெய் மழை பெய்வது போலவும், நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள் எதிலும் அக்கறை இல்லாதவர்கள் போலவும் அலட்சிய பாவத்துடன் காணப்படுவதைக் கண்டு அமெரிக்கா அதிர்ச்சி அடைந்தது. இந்தியர்களின் இந்த மனப்போக்குக்கு என்ன காரணம் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

இந்த நிலைமையை இப்படியே விட்டுவிட அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டுக்கு மனம் இல்லை. அவர் இங்கிலாந்து தலைவர்களுடன் இது பற்றி விவாதித்தார். அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டே இதுபற்றி கவலை தெரிவிக்கும் போது தாம் சும்மாயிருந்தால் சரியில்லை என்பதனாலோ என்னவோ, இந்தியாவைப் பற்றி அதிகம் கவலைப்படாத சர் வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு முடிவுக்கு வந்தார். இந்தியாவுக்கு சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் என்பவரை தூதராக அனுப்பி அங்குள்ள நிலைமையை ஆராயப் பணித்தார்.

1942, மார்ச் மாதத்தில் சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் இந்தியா வந்தார். இந்தியா வந்து இறங்கியதுமே அவர் தன் பணியைத் துவங்கிவிட்டார். காந்திஜியைச் சந்தித்து இங்கிலாந்து இந்திய மக்களுக்குக் கொடுக்க விரும்பும் சில கவைக்குதவாத சீர்திருத்தங்களைப் பற்றி எடுத்துரைத்தார். இதை பொறுமையாகக் கேட்டுக் கொண்ட காந்திஜி சொன்னார், “நீங்கள் இப்போது சொன்னவை தான் அதிகபட்சமாகக் கொடுக்ககூடிய சலுகைகள் என்றால், இதற்காக நீங்கள் சிரமப்பட்டு இத்தனை தூரம் பயணம் செய்து இங்கு வந்திருக்க வேண்டியதில்லையே. இதற்கு மேல் உங்களிடம் எந்த சலுகைகளும் கொடுப்பதற்கு இல்லையென்றால், நீங்கள் அடுத்த விமானத்திலேயே இங்கிலாந்துக்குப் புறப்பட்டு விடலாமே!” என்றார்.

அப்போது காந்திஜி சொன்ன சொற்றொடர் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. அவர் சொன்னார்: “கிரிப்சின் திட்டம் பின் தேதியிட்ட காசோலை”.

அப்படி என்ன தான் திட்டத்தை கிரிப்ஸ் வெளியிட்டார்? இந்தியாவை நிர்வாக ரீதியில் பல பாகங்களாகப் பிரிக்க ஒரு திட்டம். இப்படியொரு திட்டத்தை இந்த நாட்டில் எந்த கட்சியும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. வேறு வழி? கிரிப்ஸ் அடுத்த மாதமே இங்கிலாந்துக்கு விமானம் ஏறினார். அவருடைய தூது தோல்வியில் முடிந்தது.

காந்திஜி இந்த மக்களின் போராட்ட உணர்வைத் தூண்டும் விதத்தில் தன் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்தார். அமெரிக்க பத்திரிகையாளர்கள் சிலர் அவரை பேட்டி கண்டபோது, அவர் சொன்ன சில கருத்துக்கள்:-

“இந்தியாவை கடவுளின் கையில் ஒப்படைத்துவிட்டு ஆங்கிலேயர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறி விடட்டும். புரியும்படியாகச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவை குழப்ப நிலையிலும், அராஜகங்களுக்கிடையிலும் விட்டுவிட்டு அவர்கள் வெளியேறிச் செல்லட்டும். அப்போது நிலவும் குழப்பங்களிலிருந்து ஒரு உண்மையான வலிமைமிக்க நாடு உருவாகும். இப்போதிருக்கும் பொய்யான போலியான இந்தியாவின் அடையாளம் மறையும்”.

இந்திய சுதந்திரப் போரில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது 1942-இல் நடந்த’Quit India’ இயக்கம். இதன் நேரடி தமிழாக்கம் “இந்தியாவைவிட்டு வெளியேறு” என்பது தான். நாம் யாரை இந்தியாவை விட்டு வெளியேறச் சொல்கிறோம், ஆங்கிலேயர்களை என்பதால் அது மொழியாக்கம் செய்யப்படும்போது “வெள்ளையனே வெளியேறு” போராட்டம் என்று அறிவித்து விட்டார்கள். அதுவும் சரி தான்.

இந்தப் போராட்டம் எப்படி, எங்கு ஆரம்பிக்கப்பட்டது, அது நடந்த விதம், அதன் விளைவுகள் பற்றி சிறிது பார்ப்போம். இந்த கட்டுரைத் தொடரின் தலைப்பில் காணப்படுவது போல இந்தப் போராட்டம் தான் இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்கள் எழுப்பிய “சுதந்திர கர்ஜனை” என்று சொல்லலாம்.

1942-ஆம் ஆண்டு. ஆம்! நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின்னால், இந்தியாவை ஆணி அடித்தது போல நின்று நிதானித்து ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷார் இந்த நாட்டைவிட்டு பெட்டி படுக்கைகளுடன் புறப்பட வைக்கும் ஓர் இறுதிக்கட்டப் போராட்டம் தொடங்கப்படும் நேரம் நெருங்கிவிட்டது. அந்தப் போராட்டத்துக்குப் பச்சைக்கொடி காட்டப்போகும் காங்கிரஸ் மாநாடு, பம்பாய், ஆசாத் மைதானத்தில் 1942, ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி நடைபெற்றது.

அப்போதுதான் நாடே அதிரும் வண்ணம் “Quit India” – “வெள்ளையனே இந்தியாவை விட்டு வெளியேறு” எனும் கோஷம் பிறந்தது. அந்த விவரங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(கர்ஜனை தொடர்கிறது)

$$$

2 thoughts on “ஸ்வதந்திர கர்ஜனை- 2(19)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s