-வெ.இறையன்பு, ஐஏஎஸ்
தமிழக அரசின் தற்போதைய தலைமைச் செயலாளரான திரு. வெ.இறையன்பு ஐஏஎஸ், திருப்பூரில் 2014-இல் நிகழ்த்திய உரையின் சுருக்கம் இது...

இந்தியாவில் எல்லாக் கருத்துக்களுக்கும் இடம் உண்டு, அனைத்து சமயங்களுக்கும், மார்க்கங்களும் இங்கே இடம் உண்டு. சொந்த மண்ணில் இருந்து துரத்தப்பட்ட பார்சி இனத்தவர், இந்தியாவிற்குள் வர காஷ்மீர் மன்னரிடம் அனுமதி கேட்டபோது, அவர் குவளையில் பால் நிரப்பி, இங்கே மக்கள் நிரம்பி உள்ளனர் என்பதன் அடையாளமாக பார்சி இனத்தவருக்கு கொடுத்து, அனுமதி இல்லை என்பதைக் குறிப்பால் உணர்த்தினார்.
பார்சி இனத்தின் தலைவர் அதே குவளையில் சர்க்கரையைக் கலந்து, நாங்கள் இந்தியாவுக்குள் வந்தால் சர்க்கரையை போல இனிப்பை கொடுப்போம் என்பதை குறிப்பால் மன்னருக்கு உணர்த்தினர். இங்கே அனைத்து மதத்தினரும் வரலாம்- பாலில் சர்க்கரை போல, பாலைத் திரியச் செய்வதுபோல, பாலில் உப்பு போடுவதற்காக வரக் கூடாது.
உலகில் 2,500 ஆண்டுகளுக்கு முன் இந்தியா செல்வழிச் செழிப்பான நாடாக இருந்தது. ஐரோப்பாவில் மயக்கமருந்து கண்டுபிடிப்பதற்கு முன்பே, இந்தியாவில் அரளி விதையுடன் மூலிகைச் செடிகளை கலந்து மயக்கநிலையை அடையச்செய்து, அறுவைச் சிகிச்சை செய்த நாடு இந்தியா, பிளாஸ்டிக் சர்ஜரியை கண்டுபிடித்தது நம்நாடு தான். போரில் வீரர்கள் மூக்கு அறுபட்ட உடன், அதை சிறுநீரில் கழுவி, தக்க சிகிச்சை மூலம் உடனடியாக ஒட்டவைத்தனர். நமது சரஹரும் சுஸ்ருதரும் முன்னோடி மருத்துவ மேதைகள்.
இன்று உலகில் அராபிய எண்களாகக் கருதப்படுபவை நாம் கண்டுபிடித்த எண்கள் தான். அன்றைய உலகில் இந்திய நாகரிகத்திற்கும், செல்வச் செழிப்புக்கும் ஒப்பிடும் வகையில் இருந்த ஒரே நாடு கிரேக்கம் தான். அப்படிப்பட்ட இந்தியா, தாழ்ந்து நிலைகெட்டு அடிமைப்பட்டதற்கு என்ன காரணம் என்று விவேகானந்தர் சிந்தித்தார்.

சிங்கங்களைப்போல இருக்க வேண்டிய இளைஞர்கள், ஆடுகளைப்போல இருப்பதை உணர்ந்து, இளைஞர்களை தட்டியெழுப்பினார் அவர். இளைஞர்களிடம் ‘எழுமின்’ என்று புறக்கண்களையும் ‘விழிமின்’ என்று அகக்கண்ணையும் திறந்தவர் சுவாமி விவேகானந்தர். இளைஞர்களை தட்டியெழுப்புவது தான் விவேகானந்தரின் அடிநாதமாக இருந்தது.
மாணவர்களே, பொங்கல் பண்டிகையை தொலைக்காட்சியில் பார்க்காதீர்கள். கிராமங்களுக்கு நேரில் சென்று, வயல்களையும், உழவர்களையும் நேரில் கண்டுவாருங்கள், செருப்பு அணியாமல் வயலில் இறங்கிப் பாடுபடும் உழவனின் உழைப்பால் கிடைத்த உற்பத்தியைத் தான், நாம் காலில் செருப்பு அணிந்து கௌரவமாகச் சாப்பிடுகிறோம். உழைப்பாளியின் வியர்வையை, ஏழையின் கண்ணீரைப் புரிந்துகொள்வது தான் உண்மையான வாழ்க்கைப் பாடமாகும். மாணவர்கள் பள்ளிப்பருவத்தில் சிறந்த நண்பர்களைப் பெறாமல் இருக்கக் கூடாது. நட்பு மிகவும் உயர்ந்தது.
இதயத்தை நல்ல எண்ணங்களால் நிரப்பவேண்டும். அறிவு மட்டும் வெற்றிக்கு உதவாது. அத்துடன் உடல் உழைப்புத் தேவை. கிரேக்க நாடு உழைப்பை நிராகரித்ததால் வீழ்ச்சியைச் சந்தித்தது. உழைப்பை நிராகரித்தால் நாமும் வீழ்ச்சியடைந்துவிடுவோம். எனவே, இளைஞர்கள் நேரத்தை வீணடிக்காமல், ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவின் பழம்பெருமைகளை மீட்டெடுக்க இளைஞர்கள் சூளுரையேற்க வேண்டும் என்றார்.
முன்னதாக, ஸ்ரீசக்தி திரையரங்கம் அருகில் இருந்து விவேகானந்தர் 150 ஆவது ஜெயந்தி நிறைவு விழாப் பேரணி புறப்பட்டு, யுனிவர்சல் சாலை, வாலிபாளையம், டி.எம்.எஃப். சாலை, ஊத்துக்குளி சாலை, ரயில்நிலைய சாலை வழியாக விழா அரங்கில் நிறைவடைந்தது. இதில், மாணவர்கள் சுவாமி விவேகானந்தர் வேடம் அணிந்து வந்ததனர். 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பங்கேற்று, மிகச்சிறப்பாக இவ்விழா நிறைவடைந்தது.
குறிப்பு: சுவாமி விவேகானந்தர் 150 ஆவது ஜெயந்தி நிறைவு விழா, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அரங்கில் 12.01.2014- இல் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு அரசு அண்ணா மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவரான வெ.இறையன்பு பேசியதன் சுருக்கம் இது. நன்றி: தினமணி (13.01.2014)
$$$