-பத்மன்

தமிழில் எழுந்த பிற்கால (சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்) நீதிநூல்கள், சமுதாயத்தின் தகவமைப்பில் பேரிடம் வகித்துள்ளன. கடந்த நூற்றாண்டின் இறுதி வரை தமிழ்ப் பாடத்தில் இவை கற்பிக்கப்பட்டன. திண்ணைப் பள்ளிக்கூடங்களில் அடிப்படைப் பாடமாக இருந்தவை இந்த நூல்களே. எளிய ஒற்றை வரிகளில் வாழ்க்கைக்கு அடிப்படையான நீதிபோதனையைச் சொல்லிச் செல்வது இந்த நூல்களின் குணம். பிற்காலப் பெண்பாற் புலவரான (சங்க கால ஔவை வேறு) ஔவையார் இயற்றிய ‘கொன்றைவேந்தன்’ அவற்றில் குறிப்பிடத் தக்கது. இந்நூலுக்கு மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன் எழுதிய விளக்கவுரை நமது தளத்தில் வெளியாகிறது...
காண்க: கொன்றைவேந்தன் -மூலம்
கடவுள் வாழ்த்து
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே!
விளக்கம்:
கொன்றைப்பூ மாலையை அணிந்த சிவபெருமானின் செல்வனாகிய பிள்ளையாரை என்றும் போற்றி வணங்குவோம்.
இங்கே பிள்ளையார் என்பது விநாயகரைக் குறிக்கும். அவர்தம் சகோதரரரான முருகப்பெருமானையும் பிள்ளையார் எனப் பழந்தமிழ் இலக்கிய உரைகள் கூறுகின்றன.
இது இடைக்கால ஔவையார் இயற்றியது. சங்ககாலத்தில் விநாயகரைக் குறிக்கும் பாடல் எதுவும் இல்லை எனத் தெரிய வருகிறது. தெற்கிலே விநாயகர் மூத்தவர், கந்தன் இளையவர் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் வடக்கிலே ஸ்கந்தன் மூத்தவர், கணபதி இளையவர்; ஸ்கந்தன்தான் பிரமச்சாரி. கணபதிக்கு சித்தி- புத்தி என இருதேவியர்.
வினைகளை வேரறுக்க இறையருளும் வேண்டும், நமது நுண்ணறிவும் வேண்டும் என்பதே இதன் உட்பொருள்.
கடவுள் வாழ்த்தில் கொன்றைவேந்தன் எனத் தொடங்கியதால் இந்நூல் ‘கொன்றைவேந்தன்’ எனப் பெயர் பெற்றது.
சிவபெருமானுக்கு ஏன் கொன்றைவேந்தன் எனப் பெயர்?
கொன்றை அகண்டபாரதப் பகுதியில் மட்டுமே காணப்படும் அபூர்வப்பூ. சாலையோரங்களில் பூத்துக் குலுங்கும் எளிய பூ.
ஆண்டின் தொடக்கமாகிய சித்திரை மாதத்தில் மஞ்சள் நிறத்தில் கொத்துக்கொத்தாகப் பூக்கத் தொடங்கும்.
மூவா முதல்வன், மங்களகரமானவன், பக்தருக்கு எளியவன் என்பதைக் குறிக்கும் வகையில் சிவபெருமான் கொன்றைப்பூவைச் சூடி கொன்றைமாலை அணிகிறார்.
அக்காலத்தில் பகைவரைக் கொன்று வெற்றியோடு திரும்பும் வீரர்களுக்கு கொன்றைப்பூ தூவியும் சூடியும் வரவேற்பதுண்டு. முத்தீமைகளான திரிபுர அசுரர்களைக் கொன்றவன் என்பதால் சிவனது பூஜையில் கொன்றைப்பூ சிறப்பு பெறுகிறது எனப் பெரியோர் கூறுவர்.
வைத்தீஸ்வரனான சிவனுக்கு உகந்த கொன்றைப்பூ, சருமநோய், இதயநோய், மூலம் ஆகிய நோய்களைத் தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டது.
$$$
கொன்றைவேந்தன்- 1
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
விளக்கம்:
தாயும் தந்தையுமே நாம் முதலில் அறியக்கூடிய தெய்வம்.
தெய்வம் என்பது தீ என்ற வேர்ச்சொல்லில் இருந்து உருவானது. தீ ஒளியாக இருக்கிறது, அச்சம் தரக் கூடியது; ஆக்குவதற்கும் அழிப்பதற்கும் பயன்படுகிறது. தெய்வத்தின் தன்மையும் அதுவே. ஒளிதான் அறிவு. வெப்பமே இயக்கம். ஆக்கும்- அழிக்கும் செயலை இறையே செய்கிறது. அன்பே வடிவானாலும் அச்சம் தரக்கூடியதுமாகும். அனைத்தையும் படைத்த அந்த இறையை அறிவது எப்படி?
தெரிந்த ஒன்றைக்கொண்டே தெரியாத ஒன்றைத் தேர முடியும்.
அவ்வகையில் நம்மைப் படைத்த நம் பெற்றோரே நாம் முதலாவதாக அறியக்கூடிய தெய்வம். அவர்கள் நம்மை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தியோடு அறியாத பருவத்தில் நம்மை நன்கு வளர்ப்பதுடன் ஓரளவு அறியத் தொடங்கும்போது நம்மிடம் அன்போடு தேவையான கண்டிப்பையும் காட்டி சரியாக வழிநடத்துகிறார்கள்.
அவர்களைப் போன்றுதான் தெய்வமும். ஆகையால் நாம் முதலில் நன்றிக்கடன் பட்டுள்ள தெய்வம் பெற்றோரே. அவர்கள் தெய்வம் என்பதை முதலில் நாம் அறிந்துகொண்டால் அந்த இறையை அறிவது எளிது.
அதேநேரத்தில் அன்னை என்ற தமிழ்ச் சொல்லோடு பிதா என்ற சம்ஸ்கிருதச் சொல்லையும் ஔவையார் ஒருசேரப் பயன்படுத்தியுள்ளார். ஆகையால் தெய்வத்தை அறிய தமிழும் சம்ஸ்கிருதமும் தேவை. இரண்டுமே இறைமொழிகள், நிறைமொழிகள். தெய்வங்கள் என்று பிரித்துச் சொல்லாமல் தெய்வம் என்று ஒன்றாய் இணைத்துச் சொல்லியிருப்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
$$$
கொன்றைவேந்தன்- 2
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
விளக்கம்:
கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிகவும் நல்லது.
தனக்குள்ளேயே, வீட்டிலேயே இறைவனை வழிபட்டால் போதாதா? ஏன் ஆலயம் சென்று தொழ வேண்டும்?
இறைவனை வணங்குவது நல்லது. ஆலயம் சென்று வணங்குவதோ மிகவும் நல்லது. ஏன்?
ஏனென்றால் தனிமனிதனுக்கு சமுதாய உணர்வு மேலோங்குவதற்காக. ஆன்மிகம் என்பது தனிமனித ஒழுக்கம், உயர்வுக்காக மட்டுமல்ல, சமுதாய மேம்பாட்டுக்காகவும் தான்.
அதனால்தான் மகாகவி பாரதி சொல்கிறார்: “கோவில்எதற்காக? ஜனங்களுக்குள் ஐக்யம் ஏற்படுவதற்காக. ஒன்றுகூடி வணங்குவது ஆன்ம ஒருமையை உணர்வதற்காக. மிருக நிலையில் இருந்து மனிதரை தேவநிலைக்கு உயர்த்தும் தேவப் பள்ளிக்கூடங்களே கோவில்கள்.”
உண்மைதான். கோவிலுக்குச் சென்று இறையை தியானிப்பது மாபெரும் கூட்டத்திலும் தனித்திருப்பதற்கான மனப்பயிற்சி. பிராகாரம் சுற்றுவது நடைப்பயிற்சி. புராணத் தத்துவங்களைக் கேட்பதும், பேசுவதும் மொழி- இலக்கியப் பயிற்சி. பாசுரங்களை, ஸ்லோகங்களைப் பாடுவதுமொழி- இசைப் பயிற்சி.
சிற்பங்கள், சித்திரங்களைக் காணுவது, கலை, நாடகப் பயிற்சி. ஒன்றுகூடுவது கூடிவாழும் பயிற்சி. மரம், பூந்தோட்டம், குளம் உருவாக்கிக் காப்பதோடு ஆலயத்தூய்மை பேணுவது சுற்றுச்சூழல், ஆரோக்கியப் பயிற்சி.
இப்படி பல பயிற்சிகளை நமக்களிக்கும் அற்புதப் பள்ளிக்கூடங்கள் அல்லவோ ஆலயங்கள்?
ஆலயங்கள் அக்காலத்தில் அச்சு அசல் சமுதாய மையங்களாகவே திகழ்ந்தன. கோவில்களில் தானிய சேமிப்புக் கிடங்குகள் இருந்ததோடு பஞ்சக்காலத்தில் அவைமக்களுக்குப் பயன்பட்ட வரலாற்றுச் சான்றுகள் உண்டு. உள்ளூரில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் ஊர்ப் பஞ்சாயத்துகள் கோவில் வளாகங்களிலேயே நடந்தேறின.
பெரிய ஆலயங்கள் போர்க்காலத்தே பாதுகாப்புப் பாசறைகளாகவும் திகழ்ந்தன. இன்றும்கூட குலதெய்வ வழிபாடும் தீர்த்த யாத்திரைகளும் நமது பண்பாட்டு வேர்களைப் பாதுகாப்பதோடு, தேச ஒருமைப்பாட்டையும் வளர்க்கின்றன. கோவில் விழாக்கள் கலை, இலக்கிய, கலாசார வளங்களைப் பேணுகின்றன.மக்களின் மனத்தைச் செம்மைப்படுத்தி உயர்த்த ஆலயங்கள் பல்வேறு வழிகளில் உதவுகின்றன.
ஆகையால் ஆன்மிக, வாழ்வியல் வளர்ச்சிக்கூடங்களான ஆலயங்களில் சென்று தொழுவது மிகுந்த நன்மை தருவதாகும்.
$$$
கொன்றைவேந்தன்- 3
இல்லறம் அல்லது நல்லறம் அன்று
விளக்கம்:
இல்வாழ்க்கை வாழ்வதைவிட மிகச் சிறந்த அறம் வேறொன்றுமில்லை.
இல் அதாவது இல்லம் என்பது வெறும் வீட்டை மாத்திரம் குறிப்பது அல்ல, குடும்பமாக சேர்ந்து வாழ்வதற்கான இடம் என்பதையே குறிப்பாகக் குறிக்கிறது.
இதன் அடிச்சொல்லான ‘இல்’ என்ற சொல், முறையாகத் திருமணம் முடித்து கணவன்- மனைவி, பிள்ளைகள், பெற்றோர் என சேர்ந்து வாழ்வதைக் குறிக்கிறது. மானுட சமுதாயத்தின் அடிப்படையே குடும்ப வாழ்வு முறையாகும். அந்தக் குடும்ப வாழ்க்கை முறையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுவதற்குப் பெயர்தான் இல்லறம்.
அறம் என்றால் அறுக்கப்பட்டது, வரையறை செய்யப்பட்டது என்று பொருள். ஆகையால் இல்லறம் என்பது, இல்வாழ்க்கையை இவ்விதம் வாழ வேண்டும் என்ற குறிக்கோளோடு, நெறிமுறையோடு வாழுகின்ற உயரிய செயலாகும். எனவேதான் இல்லறத்தைவிடச் சிறந்த நல்லறம் வேறு எதுவும் இல்லை என்கிறார் ஔவையார்.
இல்லறத்தில் தான் எல்லாவகையான அறங்களையும் பேணுவது இயல்பாக நிகழ்ந்தேறுகிறது. இதனைத்தான் தென்புலத்தார் எனப்படும் முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன் குடும்பத்தினர் என ஐவகையினருக்கும் உரிய கடமைகளை நிறைவேற்றுவது தலையாயது என்று கூறி, இல்லறத்தின் முக்கியத்துவத்தை நிலைநாட்டுகிறார் திருவள்ளுவர் (திருக்குறள்- 43).
இல்லறத்தின் பெருமையைப் பறைசாற்றுவதில் மகாகவி பாரதியின் ‘பகவத்கீதை – முன்னுரை’ மிகச் சிறந்த மணிமகுடம் ஆகும். பகவத்கீதையின் மையக்கருத்து கர்மயோகமே என்பதைச் சிறப்பாக எடுத்துரைக்கும் பாரதி, அதற்கு அடிநாதமாக இருப்பது இல்லறமே என்பதைத் தெளிவுபட நிறுவுகிறார்.
“பௌத்தம் ஜீவகாருண்யம், சர்வஜன சமத்துவம் ஆகியவற்றை ஊன்றச் செய்தபோதிலும், ஜகத்தின் ஒளிபோன்ற பத்தினியைத் துறந்தவர்களே மேலோர் என்று வைத்து உலகம் பொய்மயம், துக்கமயம் என்று கூறி, மனித நாகரிகத்தை நாசம் செய்ய முயன்றது” என்றும் குற்றம் சாட்டுகிறார். வேதகாலத்திலே ரிஷிகள் பத்தினிகளோடுதான் வாழ்ந்தார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
இறைத்தொண்டு, சமுதாய சேவைக்காக இல்லறத்தைத் துறந்து துறவறம் பூணுவது என்பது வேறு; உழைக்கச் சோம்பல்பட்டு, வாழ்க்கை இடர்களுக்கு பயந்து துறவுக்கோலம் கொள்வது வேறு. அவ்வகை துறவைத்தான் பாரதி சாடுகிறார்.
எல்லோருமே சாமியாராகப் போய்விட்டால் வாழ்க்கைக்குத் தேவையான இதர செயல்களைச் செய்வது யார்? நல்ல துறவிகளைக் காப்பாற்றவும், சேவையாற்றவும்கூட இல்லறத்தார் தேவை. இதுஒருபுறம்.
தற்காலத்திலே குடும்பச்சுமைகள் என்ற கற்பனை அச்சங்களால் தனித்து வாழ்வோரும், வெறும் உடல்சுகந்தானே இல்வாழ்க்கை எனக் கருதி, முறையான இல்வாழ்க்கையின்றி கூடிவாழ்வோரும் அதிகரித்து வருவது மறுபுறம். அக்காலத்திலும் உடன்போக்கு என்ற பெயரில் இது இருந்திருக்கிறது. இதனை அறமன்று எனச் சான்றோர்கள் கருதியதால் வதுவைமுறை வந்தது.
எனவே, இல்வாழ்க்கை இல்லாத தனிவாழ்க்கையோ, இணைவாழ்க்கையோ அறமாகாது, சிறப்புடையதாகாது என்பதையும் உணர்த்தும் வகையில்தான் இல்லறமல்லது நல்லறமன்று என மொழிந்துள்ளார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 4
ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
விளக்கம்:
பிறருக்கு உதவாத கருமி சேர்த்துவைத்திருக்கும் செல்வத்தை தீயவர்கள் அபகரித்துக் கொள்வர்.
‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்கிறார் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் நக்கீரர்.
‘சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான் பெற்றதால் பெற்ற பயன்’ என்று வலியுறுத்துகிறார் திருவள்ளுவர். நம்மிடம் செல்வம் சேர்ந்திருப்பது நமது சுற்றத்தார், நண்பர்கள், வறிய நிலையில் உள்ள பிறர் ஆகியோருக்கு உதவுவதற்காக என வாழ்வது மிகச் சிறப்புடடையது. எனவே, அவ்வாறு இல்லாமல், பூதம் காத்த புதையல் போல் பயனின்றிச் செல்வத்தைச் சேர்த்துவைத்தால் அச்செல்வம் தீயவர்கள் கவர்ந்துசெல்லவே துணைநிற்கும் என எச்சரிக்கிறார் ஔவையார்.
ஈயார் என்பதை இப்படியும் பார்க்கலாம். நம்மிடம் உள்ள அறிவுச்செல்வத்தை நம் சந்ததியினருக்கு ஈயாமல் வைத்திருந்தால் அதனைத் தீயவர்கள் களவாடியும் அபகரித்தும் தமக்கு உரிமை ஆக்கிக்கொள்வார்கள். திரித்துப் பொருள்கூறி நம்மையே ஏமாற்றுவார்கள்.
வேதம், இதிகாசங்கள், சங்க இலக்கியங்கள், தமிழ்ப்பாசுரங்கள், சித்த- ஆயுர்வேத மருத்துவ முறைகள் போன்றவற்றை மரபுவழியே சரியாக ஈயாததன் பலனை இப்போது நாம் அனுபவித்து வருகிறோம். ஆகையால் ஈதலே எவ்வகையிலும் இன்பம்.
$$$
கொன்றைவேந்தன்- 5
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
விளக்கம்:
உணவை அளவோடு உட்கொள்ளுதல் பெண்களுக்கு அழகு சேர்க்கும்.
பெண்களுக்கு உடல்பருமனால்தான் பல வியாதிகள் வருகின்றன. இதனைத் தடுக்க பெண்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவைச் சுருக்க வேண்டும் என்கிறார். இதைக் கேட்டவுடன், என்ன இது, ஆணாதிக்க மனோபாவம் எனக் குதிக்க வேண்டாம். இதனைச் சொன்னவர் பெண்பாற் புலவரான ஔவையார்.
பெண்கள் சாப்பிடவே கூடாது, மிகக் குறைவாகவே உண்ண வேண்டும் என அவர் கூறவில்லை. ‘உண்டி சுருங்குதல்’ என்பதன் உட்பொருள் உணவுக் கட்டுப்பாடு. இதனைத்தான் இன்றைய மருத்துவம் ‘டயட் மேனேஜ்மென்ட்’ என்கிறது. இயல்பாக நடக்க வேண்டிய உண்டி சுருங்குதல் இல்லாததால், ஊருக்கு ஊர் ஸ்லிம் சென்டர்கள் பெருகிவிட்டன. உணவைச் சுருக்குதல் என்றால் உடல்எடையை, அளவைப் பெருக்கக்கூடிய கொழுப்பு உணவுவகைகளைத் தவிர்த்துவிட்டு, அளவில் சிறிதாகவும் வலுவில் பெரிதாகவும் இருக்கும் ஊட்டச்சத்து உணவுவகைகளை பெண்கள் உட்கொள்ள வேண்டும் என்பதே பொருள். அழகாகத்தானே உரைத்திருக்கிறார் ஔவையார்!
இதிலே மற்றொரு மாற்றுக் கருத்தும் சொல்லப்படுகிறது. ‘உண்டி சுருங்குதல் பண்டிக்கு அழகு’ என்றுதான் ஒவையார் சொல்லியிருக்கிறார். அதுவே பெண்டிர்க்கு அழகு எனத் திரிந்துள்ளது – என்ற கருத்தே அது. பண்டி என்றால் வயிறு என்று பொருள். அதிக உணவைப் போட்டு அடைத்துக் கொள்ளாமல் சுருக்கமாக, மிதமாக உணவு உட்கொள்வது தொப்பை போடாமல் வயிற்றை அழகாக வைத்திருக்கும் அல்லவா?
ஆக, ஔவையார் கூறியதை உண்டி சுருங்குதல் பண்டிக்கு அழகு என எடுத்துக்கொண்டால், இருபாலருக்கும் அது பொருந்துமன்றோ!
$$$
2 thoughts on “கொன்றைவேந்தன் (1-5)”