-உ.வே.சாமிநாதையர்
தமிழ்த் தாத்தா என்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும் உ.வே.சாமிநாதையரை உருவாக்கியவர், திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள். அவரது வீட்டில் குருகுலவாசம் இருந்து தமிழ் கற்ற உ.வே.சா. பிற்காலத்தில், தமிழுக்கு அணியாகத் திகழும் பல இலக்கியங்களை கால வெள்ளத்தில் மறையாமல் பதிப்பித்துக் காத்தார். உ.வே.சா. தனது குருநாதரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகவும் தகுந்த ஆதாரங்களுடனும் எழுதிய நூல் இது. “திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான் திரிசரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்” என்பதே ஐயர் அளித்த தலைப்பு. இங்கு நமது வசதிக்காக, ‘மகாவித்துவான் சரித்திரம்’ என்று குறிக்கப்படுகிறது. இந்நூலில் தனது குரு மீதான பக்தியை சீடர் வண்ணமுற வெளிப்படுத்துகிறார். வாழையடிவாழையென வந்துதித்த மரபால் நமது தாய்த் தமிழ் மொழி காக்கப்பட்டு வந்துள்ளது என்பதற்கு மிகச் சரியான சான்றான இந்நூல், நமது தளத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. முதல் பாகம் முடிந்து, இரண்டாம் பாகம் இன்று தொடங்குகிறது...
$$$
ஆதாரம்:
திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்.
இரண்டாம் பாகம்
இது ஷை பிள்ளையவர்கள் மாணாக்கர் மகாமகோபாத்தியாய
தாக்ஷீணாத்ய கலாநிதி டாக்டர் – உ. வே. சாமிநாதையரால் எழுதப்பெற்று,
சென்னபட்டணம் கேஸரி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றது.
ஸ்ரீமுக ஆண்டு மாசி மாதம்
1934
(விலை. ரூபா 2-0-0.)
$$$
இப்புத்தகத்தில் அடங்கியவை
முகவுரை
ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் – இரண்டாம் பாகம்
1. என்னை ஏற்றுக்கொண்டது
2. நான் பாடங்கேட்கத் தொடங்கியது .
3. திருவாவடுதுறை நிகழ்ச்சிகள்
4. பட்டீச்சுரம் போய்வந்தது
5. திருவாவடுதுறைக் குருபூஜை நிகழ்ச்சிகள்
6. திருவாவடுதுறை வாஸம்
7. பட்டீச்சுர நிகழ்ச்சிகள்
8. திருப்பெருந்துறைப் புராண அரங்கேற்றம்
9. பல ஊர்ப் பிரயாணம்
10. தேக அசௌக்கிய நிலை
11. குடும்பத்தின் பிற்கால நிலை
12. இயல்புகளும் புலமைத்திறனும்
அநுபந்தங்கள்
1. வேறுசில வரலாறுகள்
2. தனிச்செய்யுட்கள்
3. பிறர் வரைந்து அனுப்பிய கடிதங்கள்
4. பாராட்டு
செய்யுள் முதற்குறிப்பகராதி
சிறப்புப் பெயர் முதலியவற்றின் அகராதி
பிழையுந் திருத்தமும்.
$$$
இப்புத்தகத்தில் வந்துள்ள சிறப்புப்பெயர் முதலியவற்றின் முதற்குறிப்பகராதி.
ஆறு – பட்டீச்சுரம் ஆறுமுகத்தா பிள்ளை.
கச்சி – கச்சியப்ப முனிவர்.
கம்ப – கம்பராமாயணம்.
கலெ – கலெக்டர்.
சுப் – மேலகரம் சுப்பிரமணிய தேசிகர், சுப்பையா பண்டாரம்.
தியாக – தியாகராஜ சாஸ்திரிகள், தியாகராச செட்டியார்.
திருஞா – திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்.
திருநா – திருநாவுக்கரசு நாயனார்.
திருவிளை – திருவிளையாடற் புராணம்.
தே – தேவாரம்.
நாலடி – நாலடியார்.
ப – பக்கம்.
பசு – பசுபதி பண்டாரம்.
மீ – மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள்.
$$$

திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்
இரண்டாம் பாகம்
முகவுரை
கணபதி துணை
தேவாரம் - திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருச்சிற்றம்பலம் நன்றுடை யானைத் தீயதி லானை நரைவெள்ளே றொன்றுடை யானை யுமையொரு பாக முடையானைச் சென்றடை யாத திருவுடை யானைச் சிராப்பள்ளிக் குன்றுடை யானைக் கூறவென் னுள்ளங் குளிரும்மே. திருச்சிற்றம்பலம்
உடலை வளர்த்தற்குரிய பலவகையான பொருள்களை வழங்கும் அறங்களிலும் உள்ளத்தின் உணர்வு வளர்ச்சிக்குக் காரணமான கல்வியை வழங்கும் வள்ளன்மை சிறந்ததாக ஆன்றோர்களால் எக் காலத்தும் மதிக்கப்படுகின்றது. ‘ஒருமைக்கண் கற்றகல்வி எழுமையும் பயன் தருதலால்’ அதனை வழங்கும் பெரியோர்கள் உலகில் உயர்ந்தவர்களாகவும் பேருபகாரிகளாகவும் எண்ணப்படுகின்றனர். அவர்கள் செய்த பேரறத்தின் பயனாகவே கலைவளம் சிறந்து விளங்குகின்றது. மக்களுடைய மன உணர்வைப் பண்படுத்தும் அப்பெரியோர்கள் செய்த அருஞ்செயல்களும் இயற்றிய நூல்களும் எல்லோராலும் போற்றப்பட்டு வருவது யாவரும் அறிந்ததேயாகும். காலதேச வர்த்தமானங்கள் எங்ஙனம் மாறினும் அத்தகைய புலவர்களுடைய புகழ் குன்றாமல் ஒரே நிலைமையில் நிலவிவருகின்றது. சிலருடைய புகழ் வளர்ச்சியுற்றும் வருகின்றது.
இங்ஙனம் புகழ்பெற்றுத் தமிழ்நாட்டில் விளங்கியவர்களுள் திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்துவானும் என்னுடைய தமிழாசிரியருமாகிய ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்களும் ஒருவராவர். இவர்கள் 19-ஆம் நூற்றாண்டில் 1815- ஆம் வருஷம் முதல் 1876- ஆம் வருஷம் வரையில் இருந்து விளங்கியவர்கள். இவர்களுடைய சரித்திரத்தை
எழுதிப் பதிப்பித்து வந்ததில் நான் பாடங்கேட்கப் போகுமுன் நிகழ்ந்த வரலாறுகள் (1815 முதல் 1870 வரையில் உள்ளவை) சில மாதங்களுக்கு முன்பு முதற் பாகமாக வெளியிடப்பெற்றன. ஏனைய வரலாறுகளே இரண்டாம் பாகமாகிய இப்புத்தகத்தில் உள்ளவை.
தமிழ்ப் புலவர்கள் வரலாற்றின் நிலைமையைப் பற்றி நான் சொல்ல வேண்டிய விஷயங்களையெல்லாம் முதற்பாகத்திற் சொல்லி விட்டமையால் அவற்றை மீட்டும் இங்கே தெரிவிக்கவில்லை.
பிரஜோற்பத்தி வருஷம் – சித்திரை மாதம் (1870 ஏப்ரில்) இப் புலவர்பிரானிடம் நான் பாடங்கேட்க வந்து சேர்ந்தேன். அது முதல் இவர்கள் சிவபதமடைந்தகாலம் வரையில், இடையே சில மாதங்கள் நீங்கலாக, இவர்களுடனே இருக்கும் பெரும் பேறுபெற்றேன்.
இச் சரித்திரத்தை எழுதி வரும்பொழுது என்னுடைய மனம். பழைய காட்சிகளை மீண்டும் கண்டு கனிந்து கொண்டேயிருந்தது. இக்கவிஞர்பிரான் என்பால் வைத்திருந்த பேரன்பு இவர்களுடைய செயல் ஒவ்வொன்றையும் என் நெஞ்சிற் பதித்துவிட்டது. அந்த நினைவே இப்பாகத்திற் காணப்படும் செய்திகளை எழுதுவதற்குத் துணையாக இருந்தது. முதற்பாகத்தின் முகவுரையிற் குறிப்பித்துள்ளபடி பல இடங்களிற் சென்று சென்று தேடிய முயற்சியினாற் கிடைத்த செய்திகளுள் சில இந்தப் பாகத்திற்கும் உதவியாக இருந்தன. இவர்கள் சொல்லச் சொல்ல என்கையினாலே எழுதிய தனிப் பாடல்கள் அளவிறந்தன; அக்காலத்தில் அவற்றைப் பாதுகாக்க வேண்டுமென்னும் நோக்கம் இல்லாமையால் அவற்றை நான் தொகுத்து வைக்கவில்லை. என்னுடைய நினைவிலுள்ளவைகளும் வேறுவகையிற் கிடைத்தவைகளுமான செய்யுட்கள் இதன்கண் அமைந்துள்ளன. அவற்றிற்கு இன்றியமையாத இடங்களில் குறிப்புரைகளும் எழுதப்பட்டிருக்கின்றன.
இந்தப் புத்தகத்தால், இக்கவிஞர் கோமான் திருவாவடுதுறை யாதீனத்து ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரால் நன்கு மதிக்கப்பெற்று விளங்கினமையும், தம்பால் வந்து விரும்பினவர்களுக்குச் செய்யுள் இயற்றிக்கொடுத்துப் பயன்பெறும்படி செய்தமையும், யாரிடத்தும் எளிதிற் பழகி வந்தமையும், மாணாக்கர்களிடத்தில் அளவற்ற அன்பு காட்டிவந்ததும், எந்த வகையிலும் அவர்களை ஆதரித்துப் பாடஞ் சொல்வது இவர்களுடைய பெரு நோக்கமாக இருந்தமையும், இவர்கள் ஒப்புயர்வற்ற குணங்களுடன் சிறப்புற்று விளங்கினதும், இவர்களுடைய காலப்போக்கும், பல செல்வர்கள் இவர்களை அன்போடு ஆதரித்துப் போற்றிய திறமும், பலவகையான உபகாரிகளுடைய தன்மைகளும், அக்காலத்தில் தமிழ் வித்துவான்களிடத்தில் தமிழ் மக்கள் வைத்திருந்த பேரன்பும், வடமொழி தென்மொழி வித்துவான்கள் ஒருவரோடொருவர் மனங்கலந்து பழகியமையும், தமிழ்நாடு இப்புலவர் சிகாமணியால் இன்ன இன்ன வகையில் பயனுற்றதென்பதும், பிறவும் விளங்கும்.
ஸ்ரீ சிவஞான முனிவர் காஞ்சிப் புராணம் அரங்கேற்றிய வரலாறு, ஒரு போலிப் புலவருடைய வரலாறு, ஆவூர்ப் பசுபதி பண்டாரம் முதலியவர்களுக்குப் பாடல் அளித்த செய்தி, ‘உடுக்கையும் பம்பையும் இல்லாததுதான் குறை’, சுப்பையா பண்டாரம் மாம்பழம் வாங்கிவந்தது, சூரியனார் கோயில் அம்பலவாண தேசிகர் தொடுத்த வழக்கு, வண்டானம் முத்துசாமி ஐயரது இயற்கை முதலிய செய்திகளும், இவர்களுடைய பொதுவியல்புகளும், புலமைத்திறமும் அன்பர்களுக்கு இன்பத்தை அளிக்குமென்று நம்புகிறேன்.
இருபத்தெட்டு காப்பியங்களும் நாற்பத்தைந்து பிரபந்தங்களும் இவர்கள் இயற்றியனவாக இப்பொழுது தெரிய வருகின்றன. இவர்கள் இயற்றிய தனிப்பாடல்களோ அளவுகடந்தன. இவ்வளவு மிகுதியான நூல்களை இயற்றியவர்கள் தமிழ்ப்புலவர்களில் வேறு யாருமில்லை.
இப் பெரியாருடைய சரித்திரத்தில் அங்கங்கே எழுதப்படாமல் விடுபட்ட சில வரலாறுகளும், இவர்கள் அவ்வப்பொழுது பாடிய கடவுள் வணக்கங்கள் அன்பர்களைப் பாராட்டிய செய்யுட்கள் முதலிய தனிச் செய்யுட்களும், இவர்களுக்குப் பிறர் வரைந்து அனுப்பிய சில கடிதங்களும், சிலவற்றின் பகுதிகளும், மாணாக்கர்கள் முதலியவர்கள் இவர்களுடைய நூல்களுக்கு அளித்த சிறப்புப் பாயிரங்களின் பகுதிகளும் முறையே இப்புத்தகத்தின் அநுபந்தங்களாகச் சேர்க்கப்பெற்றுள்ளன.
இவர்களைப்பற்றிய வேறு செய்திகள் எவற்றையேனும் தெரிந்தவர்கள் அன்புகூர்ந்து தெரிவிப்பின் அவற்றை அடுத்த பதிப்பில் சேர்த்துக்கொள்வேன்.
“இம்மகாகவியினுடைய உருவப்படம் எடுக்கப்படவில்லை யென் பதை முதற்பாகத்தின் முகவுரையிலேயே தெரிவித்திருக்கிறேன். கடிதங்களில் இவர்கள் போடும் கையெழுத்தின் மாதிரியும் இவர்கள் எழுதிய ஏட்டுச்சுவடிகளுள் ஓர் ஏட்டின் ஒரு பக்கத்தின் படமும் அன்பர்கள் அறிந்துகொள்ளுமாறு இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவர்களுடைய புலமையை அறிந்து ஆதரித்தவரும் இவர்களைப் போலவே என்னிடம் அளவற்ற அன்பு பூண்டவரும் இந்தப் பாகத்தில் உள்ள வரலாறுகளிற் பல இடங்களில் கூறப்படுபவரும் திருவாவடுதுறையில் 16 – ஆம் பட்டத்தில் வீற்றிருந்தவருமாகிய மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்களுடைய படம் இப்புத்தகத்தின் முதலில் சேர்க்கப்பெற்றுள்ளது.
இந்த வரலாற்றை எழுதுவதற்குக் கடிதங்கள், நூல்கள், ஏட்டுச்சுவடிகள் முதலியவற்றை அளித்தும் தமக்குத் தெரிந்த செய்திகளைச் சொல்லியும் எனக்கு உதவிபுரிந்த அன்பர்களை நான் ஒரு போதும் மறவேன்.
இச்சரித்திரத் தலைவர்களாகிய கவிஞர் கோமானைப்பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் இவர்களுடைய தளர்ந்த வடிவமும், மாணாக்கர் கூட்டத்திற்கு இடையில் வீற்றிருந்து தமிழ்ப்பாடஞ் சொல்லுங் காட்சியும், தமிழ்ச் செய்யுட்களை எளிதிற்புனையும் தோற்றமும் என் அகத்தே தோன்றுகின்றன. இனி அத்தகைய காட்சிகளையும், இவர்களைப் போல அருங்குணமும் பெரும்புலமையும் வாய்ந்தவரையும் எங்கே பார்க்கப் போகிறோமென்ற ஆராமை மீதூருகின்றது. ‘இவர்கள்பாற் கல்விபயின்ற காலத்திலேயே இன்னும் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கலாமே!’ என்றும் இரங்குகின்றேன். காலத்தின் போக்கை நோக்கும்போது இவர்களுடைய பெருமை மேன்மேலும் உயர்ந்து தோன்றிக்கொண்டே இருக்கிறது.
பெருங்கவிஞராகிய இவருடைய புலமைத்திறத்தை நாம் அறிந்து மகிழ வேண்டுமென்றால் இவர்களுடைய நூல்களைப் படிக்க வேண்டும். பழம்புலவர்களுடைய வரலாற்றை அறிந்து, “அவர்கள் பெருங் கவிஞர்கள்” என்று பாராட்டும் அளவிலே நின்றுவிடாமல் அத்தகையவர்களுடைய நூல்களைப் படித்தலும், படிப்பித்தலுமே அவர்கள் திறத்திற்செய்யும் கைம்மாறாகும். இவர்களுடைய நூல்களிற் பல அச்சிடப்படவில்லை. சில அச்சிடப்பட்டும் இப்போது கிடைக்கவில்லை. ஆதலால் அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக அச்சிட்டு வெளிவரச்செய்தல் தமிழ்மக்களின் கடமையாகும்.
தமிழ்மொழியறிவின் வளர்ச்சியைக் குறித்துப் பலவேறுவகையில் தம் உடல், பொருள், ஆவியனைத்தையும் ஈடுபடுத்திப் புகழுடம்புடன் விளங்குகின்ற இக்கவிச்சக்கரவர்த்தியின் திருநாளைத் தஞ்சையில் சில அன்பர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் முதன்முதலாக இவ்வருஷம் கொண்டாட எண்ணியிருக்கிறார்களென்று தெரிகிறது. அத்திருநாளுக்கு முன்பே இவ்விரண்டாம் பாகமும் வெளிவந்தது பற்றி மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
முதற்பாகத்தை எழுதும்பொழுதும் பதிப்பிக்கும்பொழுதும் உடனிருந்து எழுதுதல் முதலிய உதவிகளைப் புரிந்த சென்னை, கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் சிரஞ்சீவி வித்துவான் வி.மு.சுப்பிரமணிய ஐயரும், கலைமகள் துணையாசிரியர் சிரஞ்சீவி வித்துவான் கி.வா.ஜகந்நாதையரும் இந்தப் பாகத்திற்கும் அங்ஙனமே உதவி புரிந்தார்கள். அவர்களுக்கு எல்லா நலங்களையும் அளித்தருளும் வண்ணம் தமிழ்த் தெய்வத்தைப் பிரார்த்திக்கின்றேன்.

என்னுடைய அயர்ச்சி மறதி முதலியன காரணமாக இப்பதிப்பிற் காணப்படும் பிழைகளைப் பொறுத்துக்கொள்ளும்படி அறிஞர்களை வேண்டுகின்றேன்.
தமிழ்மகளின் திருவழகைச் காவியங்களாகிய ஓவியங்களில் அமைத்து மகிழ்ந்த வித்தகரும், மாணாக்கருடைய அறிவாகிய நிலத்தில் அன்பு நீர் பாய்ச்சித் தமிழாகிய வித்திட்டுத் தமிழ்ப்பெரும் பயிரைவளர்த்த சொல்லேருழவரும், காலம் இடம் நிகழ்ச்சி என்பவற்றால் வரும் துன்பங்களால் சோர்வுறாமலும் தம்முடைய மானமும் பெருமையும் குறையாமலும் நின்ற குணமலையும் ஆகிய பிள்ளையவர்களுடைய பெரும் புகழும், அரிய நூல்களும் தமிழ்மக்களால் நன்கு உணரப் பெற்று மேன்மேலும் விளக்கமுற்று வாழ்வனவாக!
சங்ககாலம் முதல் தமிழ்மொழியை வளம்படுத்திய புலவர் பெருமக்களின் வரலாறுகளை முறையாக வெளியிட வேண்டுமென்னும் எண்ணம் நெடுங்காலமாக எனக்குண்டு. இச்சரித்திரத்தை நிறைவேற்றி வைத்த இறைவன் திருவருள் அவ்வெண்ணத்தையும், நிறைவுறச் செய்யுமென்று நம்புகின்றேன்.
இங்ஙனம்,
வே. சாமிநாதையர்.
‘தியாகராஜ விலாசம்’
திருவேட்டீசுவரன்பேட்டை, – 24-2-1934.
$$$