-எஸ்.எஸ்.மகாதேவன்

25. ஒழுங்கு, கட்டுப்பாடு வேணும்; எங்கே கிடைக்கும்?
அக்டோபர் 13 அன்று சங்கடஹர சதுர்த்தி வந்து போயிற்று. மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் எங்கள் தெருக்கோடி பிள்ளையார் கோயிலில் தெருவை அடைத்து ஆணும் பெண்ணுமாக பக்தர் கூட்டம். பூஜை படிப்படியாக நடந்தது. அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, நைவேத்தியம், கடைசியில் தீபாராதனை. விபூதி, குங்கும பிரசாத விநியோகம். அதைத் தொடர்ந்து பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை என்று பக்தர்கள் செய்து கொண்டு வந்திருந்த நிவேதனப் பொருட்கள் வினியோகம். இதுவரை பக்தர்களாக அடக்க ஒடுக்கமாக பிள்ளையாரைப் பார்த்தபடி நின்றிருந்த சராசரி 60 வயதினரான ஆணும் பெண்ணும் பிரசாதத்தை வாங்கிக் கொள்ளும் போது முட்டி மோதாத குறையாக சிறுபிள்ளைகளை ஞாபகப்படுத்தினார்கள். விநியோக ஏற்பாடும் பூஜ்யம். இருந்த 50 பேரும் அரைவட்டமாக நிற்காமல் கலைந்து நின்றதனால் பிரசாதம் வைக்கும் தொன்னை எல்லோர் கையிலும் வந்து சேருவதற்கே கால்மணி நேரம் ஆயிற்று. அதற்குள்ளாகவே ஒருபுறம் சுண்டல், மறுபுறம் பொங்கல், இன்னொருபுறம் கொழுக்கட்டை என்று மூன்று பேர் விநியோகம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். ஒன்று வாங்கியவர்கள் இன்னொன்று பெறுவதற்கு முட்டி மோதுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. பாவம் பக்தர்கள், அதைவிட பாவம் கோயில் நிர்வாகிகள்.

பெருமாள் கோயில் என்றால் பிரசாத விநியோக நேரத்தில் வந்திருக்கும் பக்தர்கள் ஒரு பெரிய ‘ப’ வடிவில் அணிவகுத்து நிற்பார்கள். தீர்த்தம், சடாரி, துளசி, குங்குமம் பொங்கல் என்று ஒவ்வொன்றாக கிரமப்படி ஒவ்வொருவருக்கும் வந்து சேரும். ஒருங்கிணைந்த ஹிந்து சமுதாயத்தை இது அடையாளப்படுத்தும்.
பிள்ளையார் கோயில் வாசலில் நின்ற பக்தர்களும் ஹிந்துக்கள்தான், பெருமாள் கோயில் வாசலில் நிற்கும் பக்தர்களும் ஹிந்துக்கள்தான். பரஸ்பரம் கற்றுக்கொள்ள மனம்தான் வேண்டும். பெருமாள் மாமன் என்றால் பிள்ளையார் மருமகன் தானே? எல்லாம் ஒரே குடும்பம். ஹிந்துக்கள் அனைவருமே கூட ஒரே குடும்பம் தானே? வீட்டுக்கு வீடு வாசப்படி டிசைன் வித்தியாசப்படுகிறது, அவ்வளவுதான்!
கோயில் வாசலில் பக்தர்களிடையே ஒழுங்கை பிரதிஷ்டை செய்ய யாராவது ஒருவர் குரல் உயர்த்தினால் போதும். அதிலும் பக்தி அலையடிக்கச் செய்துவிடலாம். “பிள்ளையார் பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்!” என்றோ, “ஜெயகணேச ஜெயகணேச ஜெயகணேச பாஹிமாம்” என்றோ ஒருவர் நாமாவளி தொடங்கிவிட்டால் எல்லார் கவனமும் சகஜமாக அவர் மீது பதியும். அப்போது அவர் பாடியபடியே கையசைப்பின் மூலமே எல்லோரையும் அரை வட்டமாகவோ வரிசையாகவோ நிற்கச் செய்து விடலாம். இதற்கிடையில் இன்னொரு பக்தர் மனதில் எல்லோருக்கும் தொன்னை கொடுக்கலாமே என்று தோன்றிவிடும். அவர் தொன்னை விநியோகம் செய்யும் வேகத்தைப் பின்பற்றி சுண்டல், பொங்கல், கொழுக்கட்டை விநியோகங்கள் அணிவகுக்கும். நாமாவளி பாடியபடியே எல்லோரும் பிரசாதம் பெறுவார்கள்.
இத்தனை வாக்கியங்களில் விளக்குவதற்குத் தான் இவ்வளவு நேரம் ஆகிறதே தவிர செய்யத் தொடங்கினால் நொடியில் முடிந்து போகிறது. இலவச இணைப்பாக, இன்னொரு பக்தர் சாலையின் நடுப் பகுதிவரை இறைந்து கிடக்கும் பக்தர்களின் செருப்புகளை பார்க்கிறார். ‘பக்தன் தானே பகவான்’ என்ற எண்ணத்தில் இரண்டு கைகளாலும் செருப்புகளை எடுத்து கோயில் மதில் சுவரோரம் வரிசையாக வைக்கிறார். மின்விளக்கு வெளிச்சம் படும் இடமாகப் பார்த்து. வீடு செல்லப் புறப்படும் பக்தர்கள் சுலபமாக தங்கள் செருப்பை அணிந்துகொள்ள வசதி ஆகிறது. தங்களை அறியாமல் ‘இதுதான்யா சேவை!’ என்று வியப்பும் மகிழ்ச்சியும் தெரிவிக்காமல், அவர்களால் அங்கிருந்து புறப்பட முடிவதில்லை.
***
குறும்புச் சக்கரவர்த்திகளான வாண்டுகள் நிறைந்த ஒரு தெரு. அங்குள்ள பிள்ளையார் கோயிலில் முதியவர் ஒருவர் தான் பூசாரி. மார்கழி மாதம் வந்துவிட்டாலே அவருக்கு நடுக்கம் வந்துவிடும். காரணம் பனிக்குளிர் அல்ல. அந்த வால்கள் தான். குறுக்கும் நெடுக்கும் ஓடாதே என்று பிள்ளைகளைப் பார்த்து கூப்பாடு போட்டு அவருக்கு தொண்டை கட்டி விடும். பிரசாத விநியோகம் என்றாலே அவருக்கு சிம்மசொப்பனம். வாண்டுகளின் தர்பார் அப்படி. அந்தத் தெருவாசியான ஒரு ஸ்வயம்சேவகர் இதைப் பார்த்தார். பூசாரியின் அதட்டல் கேட்டு தப்பி ஓடும் சிறுவர்களில் ஒரு வாண்டு இவர் கையில் சிக்கினான். அடி நிச்சயம் என்று நினைத்திருந்த அந்தக் குழந்தையை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு “தம்பி, கிருஷ்ணா டிவி தொடரில் வரும் குட்டி கிருஷ்ணன் மாதிரியே இருக்கிறாயே?” என்று தட்டிக்கொடுத்து ஒரு வாக்கியம். அதைத் தொடர்ந்து… உன் பெயர் என்ன? அப்பா என்ன செய்கிறார்? போன்ற எல்லா கேள்விகளுக்கும் ‘வந்தே பாரத்’ விரைவு ரயில் வேகத்தில் பதில் வந்தது. “என் பேரு பக்தவச்சலு. அப்பாவுக்கு கிருஷ்ணாயில் தள்ளுவண்டி வியாபாரம்…”

கோயில் வாசல் நேர்காணல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் போது, சூழ்நிலை மாறியதைக் கவனித்த பாலர் பட்டாளம் இவரை பிரியத்துடன் சூழ்ந்துகொண்டது. எங்களை எல்லாம் யார் கவனிக்கிறார்கள்…? எங்களிடம் யார் பேச்சுக் கொடுக்கிறார்கள்…? என்ற உணர்வு அவர்கள் கண்களில் பளிச்சிட்டது. கோயில் வாசலில் அமைதி நிலவும் அற்புதத்தைக் கவனித்த பூசாரியார் வெளியே வந்து எட்டிப் பார்த்து மனநிறைவு அடைந்தவராக முழு திருப்தியோடு பூஜையை முடித்தார். பிரசாதத்தோடு படி இறங்கி வந்தார். வாசலில் பாலர்களின் பஜனை ஜோராக நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு பிள்ளையின் பிஞ்சுக் கரத்தையும் திறந்து சுண்டலைத் திணிக்க வேண்டியிருந்தது. அவர்கள் கவனம் எல்லாம் இந்த அண்ணா அடுத்தபடியாக என்ன பாட்டு தொடங்கப் போகிறாரோ என்பதிலேயே பதிந்திருந்தது.
இதை வாசிக்கும்போதே, ‘கோயில் வாசல் பிரசாத விநியோக விஷயத்தில் மட்டுமல்ல, பொதுவாகவே ஒவ்வொரு நாளும் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கட்டுக்கோப்பு நிலவினால் எப்படி இருக்கும்!’ என்று உங்கள் மனதில் கற்பனை அரும்பாமல் இருந்தால் தான் ஆச்சரியம். ஒழுங்கும் கட்டுப்பாடும் எல்லோருக்கும் வேண்டியிருக்கிறது. யாராவது ஒருத்தர் வந்து அதில் பயிற்சி கொடுக்க வேண்டியிருப்பது இன்றைய நிலை. சமுதாயம் சதா சுயமாக ஒருங்கிணைந்து இயங்கும் பொற்காலம் வராமலா போகப் போகிறது?
***
தேர் இழுக்க மட்டுமா ஊர் ஒன்றுபடுவது ?

ஆண்டு 2003 டிசம்பர் 7.
திண்டுக்கல் நகரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள தாடிக்கொம்பு என்ற கிராமம். தெலுங்கில் ‘தாடி’ என்றல் பனை. ‘கும்பு’ என்றால் கூட்டம். பனைமரச் செறிவு வாய்ந்த பகுதி என்பதால் தாடிக்கும்பு என்று அழைக்கப்பட்டது அது மருவி ‘தாடிக்கொம்பு’ ஆனது. அங்கு சௌந்தரவல்லி தாயார் சமேதராக சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளியுள்ள திருக்கோயில் பிரசித்தம். வருடாந்தர உற்சவத்தின் ஓர் அங்கமாக லட்சதீபம் ஏற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டது. பிரதான ஆலயம், உள், வெளி பிராகாரங்கள், கர்ப்பக்கிரகத்தைச் சுற்றிலும் உள்ள எல்லா சன்னிதிகள், கோயில் கூரை, கோயிலின் விஸ்தாரமான மதில் சூழ்ந்த வளாகம் என்று எல்லா இடங்களிலும் ஒரு லட்சம் அகல் விளக்கு ஏற்றி வைப்பது லட்ச தீப நிகழ்ச்சி.
சாயரட்சை பூஜை நிறைவடைந்ததும் தீபங்கள் ஏற்றும் பணி தொடங்கியது. திருக்கோயில் வளாகம் முழுவதிலும் அரைமணி நேரத்திற்குள் ஒரு லட்சம் தீபங்கள் சுடர் ஒளி சிந்திப் பிரகாசித்தது கண்கொள்ளாக் காட்சி. நிச்சயம் இது ஒரு அர்ச்சகர், ஒரு ஆலயப் பணியாளர் தனியாளாகச் செய்து முடிக்கக்கூடிய சாதனை அல்ல. ஊரார் நுணுக்கமாக திட்டமிட்டார்கள். பரிபூரணமான அணி உணர்வுடன் செயல்பட்டார்கள். கைங்கர்யம் செய்பவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புரிந்துகொண்டு இயங்கினார்கள். அற்புதமான ஒத்துழைப்பு! அபாரமான ஒருங்கிணைப்பு!! இவை அனைத்துக்கும் மேலாக கைங்கரியத்தில் ஈடுபட்டவர்கள் மனதில் நிறைந்து தளும்பிய பக்தி!!! அனைத்தும் அங்கே கோலோச்சியதை சொல்லியாக வேண்டும்.
முற்றிலும் அறிவியல் பூர்வமாக லக்ஷ தீப பணி திட்டமிடப்பட்டிருந்தது. முதல் கட்டமாக, ஊரில் உள்ள தனியார் மில் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் என நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் ஒரு வார காலம் முன்கூட்டியே பெயர் பதிவு செய்து கொண்டார்கள். நாலாபுறமும் பிராகாரங்களில் அகல் வைப்பதற்கு நேர்கோடுகளை முதலில் வரைந்தார்கள். இதற்கு ஒரு குழு. லக்ஷதீபத்தன்று இன்னொரு டஜன் குழுக்கள் அகல்களில் எண்ணெய் நிரப்பும் பணிக்காக. தன்னார்வலர்கள் 72 மணிநேரம் பாடுபட்டு ஒரு லட்சம் மண் அகல்களை முன்னதாக ஆலயம் நெடுக வரிசை வரிசையாக அமைத்து அவற்றில் திரி போட்டு, எண்ணெய் ஊற்றி ஆயத்த நிலையில் வைத்தார்கள். லட்ச தீப உற்சவம் தொடங்குவதற்கு சரியாக ஒரு மணி நேரம் முன்னதாக அனைவர் கையிலும் ஒவ்வொரு தீப்பெட்டி அளிக்கப்பட்டது. லக்ஷ தீப தரிசனத்துக்காக வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களை தன்னார்வலர்கள் லட்ச தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுத்தி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி, திருக்கோயில் ஒளி வெள்ளத்தில் மிதக்கச் செய்தார்கள்.
மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த அற்புதக் காட்சியை கண்குளிரக் கண்டார்கள், மனம் உருக பெருமாளை வழிபட்டார்கள். (2003 டிசம்பர் 19 தேதியிட்ட ‘த ஹிந்து’ ஆங்கில நாளிதழில் செய்தியாளர் ராஜு எழுதியிருந்த செய்திக் கட்டுரையிலிருந்து).
$$$