சத்திய சோதனை- 4(36-41)

-மகாத்மா காந்தி

நான்காம் பாகம்

36. பிராயச்சித்தமாகப் பட்டினி

     பையன்களையும், பெண்களையும் சரியான வழியில் வளர்த்து அவர்களுக்குக் கல்வி போதிப்பது எவ்வளவு கஷ்டமானது என்பது நாளுக்கு நாள், மேலும் மேலும் எனக்குத் தெளிவாகிக் கொண்டு வந்தது. அவர்களுக்கு உண்மையான உபாத்தியாயராகவும் பாதுகாப்பாளராகவும் இருக்க வேண்டுமாயின், நான் அவர்களுடைய உள்ளங்களைத் தொட வேண்டும். அவர்களுடைய இன்ப துன்பங்களில் நான் பங்கு கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் நான் உதவி செய்ய வேண்டும். இளமையின் காரணமாக அவர்களுக்கு எழும் அபிலாஷைகளை எல்லாம் சரியான வழிகளில் நான் கொண்டு செலுத்த வேண்டும்.

சிறையிலிருந்து சில சத்தியாக்கிரகிகள் விடுதலையாகவே டால்ஸ்டாய் பண்ணையில் வசிப்பவர்களின் தொகை மிக அதிகமாகிவிட்டது. அங்கேயே இருந்த சிலர் போனிக்ஸைச் சேர்ந்தவர்கள். ஆகவே, அவர்களை நான் அங்கேயே அனுப்பி விட்டேன். இங்கே அதிகக் கஷ்டமான நிலைமையைச் சமாளிக்க வேண்டியதாயிற்று.

     அந்த நாட்களில் நான் ஜோகன்னஸ்பர்க்கிற்கும் போனிக்ஸுக்கும் போய் வந்தவண்ணம் இருக்க வேண்டியதாயிற்று. ஒரு சமயம் நான் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்த போது, ஆசிரமவாசிகளில் இருவர் ஒழுக்கம் தவறி நடந்து விட்டார்கள் என்ற செய்தி எனக்கு எட்டியது. சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஒரு தவறு அல்லது ஒரு தோல்வி போன்ற செய்திகூட எனக்கு அவ்வளவு அதிர்ச்சியை உண்டாக்கியிராது. ஆனால், இச்செய்தியோ, எனக்கு இடி விழுந்தது போல் ஆயிற்று. அன்றே போனிக்ஸுக்குப் போக ரெயிலில் புறப்பட்டேன். ஸ்ரீ கால்லென்பாக்கும் என்னுடன் வருவதாகப் பிடிவாதமாகக் கூறினார். அப்பொழுது நான் எந்த விதமான நிலைமையில் இருந்தேன் என்பதை அவர் கவனித்தார். எனக்கு இவ்வளவு கலக்கத்தை உண்டாக்கிவிட்ட செய்தியைக் கொண்டுவந்தவர் அவரேயாகையால் நான் தனியாக அங்கே போவது என்பதை எண்ணவும் அவரால் முடியவில்லை.

என் கடமை என்ன என்பது பிரயாணத்தின்போது எனக்குத் தெளிவாகத் தோன்றியது. தமது பாதுகாப்பில் இருப்பவர்கள் அல்லது தம்மிடம் மாணவர்களாக இருப்பவர்கள் செய்துவிடும் தவறுக்குப் பாதுகாப்பாளர் அல்லது உபாத்தியாயர், ஓரளவுக்காவது பொறுப்பாளியாவார் என்பதை உணர்ந்தேன். எனவே, சம்பந்தப்பட்ட சம்பவம் சம்பந்தமாக என் பொறுப்பு இன்னதென்பது எனக்குப் பட்டப்பகல் போல் தெளிவாயிற்று. இவ்விஷயத்தில் என் மனைவி எனக்கு முன்பே எச்சரிக்கை செய்திருந்தாள். ஆனால், நான் எல்லோரையும் நம்பிவிடும் சுபாவமுள்ளவனாகையால் அந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்து விட்டேன். குற்றம் செய்துவிட்டவர்கள், என் மனவேதனையையும், தாங்கள் செய்துவிட்டது எவ்வளவு பெரிய குற்றம் என்பதையும் உணரும்படி செய்வதற்குள்ள ஒரே வழி, பிராயச்சித்தத் தவத்தை நான் மேற்கொள்ளுவது தான் என்பதை அறிந்தேன். ஆகையால், ஏழு நாட்களுக்கு உண்ணாவிரதம் இருப்பது, நாலரை மாத காலத்திற்கு தினம் ஒரு வேளையே சாப்பிடுவது என்று விரதம் எடுத்துக் கொண்டேன். நான் இவ்விதம் செய்யாதிருக்கும்படி என் மனத்தை மாற்ற ஸ்ரீ கால்லென்பாக் முயன்றும் பயன்படவில்லை. என்னுடைய இப்பிராயச்சித்தத் தவம் சரியானதே என்பதை அவர் முடிவில் ஒப்புக்கொண்டார். தாமும் அவ் விரதத்தை மேற்கொள்ளப் போவதாகப் பிடிவாதம் செய்தார். அவருடைய தெள்ளத்தெளிவான அன்பை எதிர்க்க என்னால் ஆகவில்லை.

நான் செய்துகொண்ட இத்தீர்மானம் என் மனத்திலிருந்து பெரும் பாரத்தை நீக்கியதால் நான் அதிக மன ஆற்றலை அடைந்தேன். குற்றம் செய்துவிட்டவர்கள் மீது இருந்த கோபம் குறைந்தது. அதற்குப் பதிலாக அவர்கள் மீது எனக்குப் பரிசுத்தமான இரக்கமே உண்டாயிற்று. இவ்வாறு எவ்வளவோ மன ஆறுதல் அடைந்தவனாக நான் போனிக்ஸ் போய்ச் சேர்ந்தேன். அச்சம்பவத்தைக் குறித்து மேற்கொண்டும் விசாரித்தேன். நான் அறிய வேண்டிய மற்றும் பல விவரங்களையும் தெரிந்துகொண்டேன்.

எனது பிராயச்சித்தத் தவம் எல்லோருக்கும் மனக்கஷ்டத்தை உண்டாக்கியது. ஆனால், அதனால் நிலைமை தெளிவடைந்தது. பாவம் செய்துவிடுவது எவ்வளவு பயங்கரமான காரியம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டார்கள். பையன்கள், பெண்கள் ஆகியோருக்கும் எனக்கும் இருந்த பந்தமும் பலமானதாகவும் உண்மையானதாகவும் ஆயிற்று. இச்சம்பவத்தினால் ஏற்பட்ட ஒரு நிலைமையின் காரணமாகக் கொஞ்ச காலத்திற்குப் பிறகு பதினான்கு நாட்கள் உண்ணாவிரதத்தை நான் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. அதன் பலன்கள் நான் எதிர்பார்த்ததையும் விட அதிகமாகவே இருந்தன.

மாணவர்கள் ஏதாவது தகாத காரியத்தைச் செய்துவிட்டால் அதற்காக உண்ணாவிரதம் இருக்க வேண்டியது உபாத்தியாரின் கடமை என்பதை இச்சம்பவங்களிலிருந்து எடுத்துக் காட்டுவது அல்ல என் நோக்கம். என்றாலும், சில சமயங்களில் இவ்விதக் கடுமையான பரிகாரம் அவசியமாகிறது என்று நான் கருதுகிறேன். ஆனால், இப்பரிகாரத்தை மேற்கொள்ளுவதற்குத் தெளிவான நோக்கமும் ஆன்மிகத் தகுதியும் இருக்க வேண்டியது அவசியம். உபாத்தியாயருக்கும் மாணவருக்குமிடையே உண்மையான அன்பு இல்லாதபோது, மாணவர் செய்துவிட்ட தவறைக் குறித்து மனப்பூர்வமான துயரம் உபாத்தியாயருக்கு ஏற்படாத போது, உபவாசம் பொருந்தாது. அது தீமையானதாகவும் ஆகக்கூடும். இத்தகைய விஷயங்களில் உண்ணாவிரதம் இருப்பது என்பது சரிதானா என்பதைச் சந்தேகிக்க இடமிருந்த போதிலும், மாணவர்களின் தவறுக்கு உபாத்தியாயர்கள் பொறுப்பாளிகளாவார்கள் என்பதில் மாத்திரம் சந்தேகமே இல்லை.

முதல் பிராயச்சித்த விரதம் எங்களில் யாருக்கும் கஷ்டமானதாக இல்லை. என்னுடைய வழக்கமான காரியங்களில் எதையும் நான் நிறுத்தி வைக்கவோ, நிறுத்திவிடவோ நேரவில்லை. இந்தப் பிராயச்சித்தத் தவம் இருந்த காலம் முழுவதும் நான் பழ ஆகாரம் மட்டுமே சாப்பிட்டு வந்தேன் என்பதை நினைவுபடுத்த வேண்டும். இரண்டாவது உபவாச காலத்தின் பிற்பகுதியில் எனக்கு அதிகக் கஷ்டமாகவே இருந்தது. ராம நாமத்தின் அற்புதமான சக்தியை அச்சமயம் நான் முற்றும் அறிந்திருக்கவில்லை. கஷ்டத்தைச் சகித்துக் கொள்ளுவதற்கு வேண்டிய சக்தி, அந்த அளவுக்கு என்னிடம் குறைவாகவே இருந்தது. அதோடு பட்டினி விரதத்தின் முறைகளையும் நான் அப்பொழுது நன்கு அறிந்தவனல்ல. பட்டினிக் காலத்தில் தண்ணீர் குடிப்பது, எவ்வளவுதான் குமட்டலை உண்டாக்குவதாகவும் ருசியற்றதாகவும் இருந்தாலும், நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டியது முக்கியமானது என்பதும் எனக்குத் தெரியாது. மேலும், முதல் உண்ணாவிரதம் எளிதாக இருந்தது, இரண்டாவது உண்ணாவிரத விஷயத்தில் நான் அலட்சியமாக இருக்கும்படி செய்துவிட்டது. முதல் உண்ணாவிரதத்தின் போது டாக்டர் கூனேயின் முறைப்படி நான் தினமும் குளித்து வந்தேன். ஆனால், இரண்டாவது உண்ணாவிரதத்தின் போது, இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு அவ்வாறு குளிப்பதை விட்டுவிட்டேன். தண்ணீர் குடிக்கப் பிடிக்காததனாலும், குடித்தால் குமட்டல் உண்டாவதனாலும் மிகக் குறைவாகவே தண்ணீர் குடித்தேன். இதனால், தொண்டை வறண்டு பலவீனமாயிற்று. கடைசி நாட்களில் மிகவும் மெல்லிய குரலிலேயே என்னால் பேச முடிந்தது. என்றாலும், நான் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து வந்தேன். எழுத வேண்டிய அவசியம் வந்தபோது, நான் சொல்லிப் பிறரை எழுதச் செய்தேன். ராமாயணம் முதலிய சமய நூல்களைப் படிக்கச் சொல்லித் தவறாமல் கேட்டு வந்தேன். அவசரமான காரியங்களைக் குறித்து விவாதிப்பதற்கும் ஆலோசனை கூறுவதற்கும் வேண்டிய பலம் எனக்கு இருந்தது.

$$$

37. கோகலேயைச் சந்திக்க

     தென்னாப்பிரிக்கா பற்றிய நினைவுகள் பலவற்றைக் கூறாமல் விட்டுவிட்டே நான் மேலே செல்ல வேண்டும். 1914-இல் சத்தியாக்கிரகப் போராட்டம் முடிவடைந்த சமயம், லண்டன் வழியாக இந்தியாவுக்குத் திரும்புமாறு கோகலே எனக்கு அறிவித்திருந்தார். ஆகவே, ஜூலையில் நானும் கஸ்தூரிபாயும் கால்லென்பாக்கும் இங்கிலாந்துக்குப் பிரயாணமானோம்.

சத்தியாக்கிரகத்தின்போது மூன்றாம் வகுப்பு வண்டியில் பிரயாணம் செய்ய ஆரம்பித்தேன். ஆகவே, இந்தப் பிராயணத்திற்கும் மூன்றாம் வகுப்பிலேயே ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால், இந்த வழியில் செல்லும் கப்பல்களில் மூன்றாம் வகுப்பில் இருக்கும் வசதிகளுக்கும், இந்தியாவில் கடலோரக் கப்பல்களிலும் ரெயில் வண்டிகளிலும் மூன்றாம் வகுப்பில் இருக்கும் வசதிகளுக்கும் அதிகமான வித்தியாசம் உண்டு. இந்தியாவிலிருக்கும் மூன்றாம் வகுப்பில் தூங்குவதற்கு மாத்திரமல்ல, உட்காருவதற்குக்கூடப் போதுமான இடம் இல்லை. சுத்தமும் கிடையாது. ஆனால், இதற்கு மாறாக லண்டனுக்குச் சென்றபோது, கப்பலில் மூன்றாம் வகுப்பில் போதுமான இடவசதி இருந்ததோடு சுத்தமாகவும் இருந்தது. கப்பல் கம்பெனியாரும் எங்களுக்கு விசேஷ வசதிகளைச் செய்து கொடுத்தனர். கம்பெனியார், எங்களுக்கென்று தனி கக்கூசு வசதியைச் செய்து கொடுத்தனர். நாங்கள் பழ உணவு மாத்திரமே சாப்பிடுகிறவர்களாகையால் பழங்களும் கொட்டைப் பருப்புகளும் மாத்திரம் எங்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர். வழக்கமாக மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளுக்குப் பழமும் கொட்டைகளும் தருவதில்லை. இந்த வசதிகளெல்லாம் இருந்ததால் எங்கள் பதினெட்டு நாள் கப்பல் யாத்திரை சௌகரியமாகவே இருந்தது.

இப்பிரயாணத்தின்போது நடந்த சில சம்பவங்கள் குறிப்பிடத்தக்கவை. தொலைவிலுள்ளதைப் பார்க்க உபயோகிக்கும் ‘பைனாக்குலர்’ என்ற தூரதிருஷ்டிக் கண்ணாடிகளில் ஸ்ரீ கால்லென்பாக்குக்கு விருப்பம் அதிகம். அவர் இரண்டொரு விலையுயர்ந்த தூரதிருஷ்டிக் கண்ணாடிகள் வைத்திருந்தார். இவற்றில் ஒன்றைக் குறித்து நாங்கள் தினமும் விவாதித்து வந்தோம். இவைகளை வைத்துக்கொண்டிருப்பது, நாங்கள் அடைய ஆசைப்பட்டுக் கொண்டிருந்த எளிய வாழ்க்கைக்கு உகந்தது அல்ல என்பதை அவர் உணரும்படி செய்யவேண்டும் என்று நான் முயன்று வந்தேன். ஒரு நாள் நாங்கள் எங்கள் அறையின் காற்றுத் துவாரத்திற்கு அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது இந்த வாதம் உச்சநிலைக்கு வந்து விட்டது. “நமக்குள் இத்தகராறுக்கு இடம் தருவதாக இத்தூர திருஷ்டிக் கண்ணாடிகள் இருந்து வருவதைவிட இவற்றைக் கடலில் எறிந்துவிட்டு அதோடு ஏன் விவகாரத்தை முடித்து விடக் கூடாது?” என்றேன்.

“இந்தச் சனியன்களை எறிந்தே விடுங்கள்” என்றார் ஸ்ரீ கால்லென் பாக்.

“நான் சொல்லுவதும் அதுதான்” என்றேன். “நானும் அதைத்தான் சொல்லுகிறேன்” என்று உடனே பதில் சொன்னார் அவர்.

அதை உடனே கடலில் நான் வீசி எறிந்துவிட்டேன். அக்கண்ணாடியின் பெறுமானம் ஏழு பவுன்தான். ஆனால் ஸ்ரீ கால்லென்பாக்குக்கு அதன்மீது இருந்த மோகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த ஏழு பவுன் மிகக் குறைவான விலை மதிப்புத்தான். என்றாலும் அதை விட்டொழித்த பிறகு அதற்காக அவர் வருத்தப்படவே இல்லை.

ஸ்ரீ கால்லென்பாக்குக்கும் எனக்கும் இடையே ஏற்பட்ட சம்பவங்கள் பலவற்றுள் ஒன்றுதான் இது.

நாங்கள் இருவரும் சத்திய மார்க்கத்தில் செல்ல முயன்று வந்ததால் இவ்விதமாக ஒவ்வொரு நாளும் நாங்கள் ஏதாவது ஒரு புதிய உண்மையை அறிந்து வந்தோம். சத்தியத்தை நாடிச் செல்லும்போது கோபம், சுயநலம், துவேஷம் முதலியன இயற்கையாகவே நீங்கிவிடுகின்றன. ஏனெனில், அவை நீங்காவிட்டால் சத்தியத்தை அடைவது இயலாததாகும். ஒருவர் மிகவும் நல்லவராக இருக்கலாம்; உண்மையே பேசுகிறவராகவும் இருக்கக் கூடும். ஆனால், காமக் குரோத உணர்ச்சிகளுக்கு மாத்திரம் வயப்பட்டவராக அவர் இருந்தாராயின் சத்தியத்தை அவர் காணவே முடியாது. அன்பு- பகை, இன்பம்-துன்பம் ஆகிய இந்த இரண்டு வகையானவைகளிலிருந்தும் முற்றும் விடுபடுவது ஒன்றே சத்தியத்தை வெற்றிகரமான வகையில் தேடுவதாகும்.

நாங்கள் இந்தக் கப்பல் யாத்திரை புறப்பட்டபோது, நான் உண்ணாவிரதமிருந்து அதிக காலம் ஆகிவிடவில்லை. பழைய பலத்தை நான் இன்னும் அடைந்துவிடவில்லை. எனக்கு நல்ல பசி எடுக்க வேண்டும் என்பதற்காகவும், சாப்பிட்டது ஜீரணமாக வேண்டும் என்பதற்காகவும், தேகாப்பியாசம் இருக்கட்டும் எனக் கருதிக் கப்பலின் மேல் தளத்தில் கொஞ்சம் உலாவி வருவேன். ஆனால், இந்த நடையைக் கூட என் உடல் தாங்கவில்லை. கெண்டைக் கால்களில் வலி ஏற்பட்டுவிடும். ஆகவே, நான் லண்டன் சேர்ந்தபோது என் தேக நிலை நன்றாக இருப்பதற்குப் பதிலாக மோசமாகவே இருந்தது. அங்கே டாக்டர் ஜீவராஜ மேத்தா எனக்கு அறிமுகமானார். எனது உண்ணாவிரதத்தின் சரித்திரத்தையும், அதன் பிறகு எனக்கு ஏற்பட்ட வலியைப் பற்றியும் அவரிடம் கூறினேன். “சில தினங்களுக்கு நீங்கள் முழு ஓய்வு எடுத்துக் கொள்ளாது போனால் உங்கள் கால்கள் முற்றும் பயனற்றவைகளாகி விடக் கூடும்” என்று அவர் சொன்னார். நீண்ட உபவாசம் இருந்து விட்ட பிறகு இழந்த பலத்தைத் திரும்பப் பெற அவசரப்படக் கூடாது, பசியைக்கூடக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை அப்பொழுது தான் நான் அறிந்துகொண்டேன். உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும்போது இருப்பதை விட அதிக எச்சரிக்கையும், கட்டுத் திட்டங்களும் உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்கு வேண்டும்.

எந்த நேரத்திலும் பெரும் போர் மூண்டுவிடக் கூடும் என்று மடீராவில் நாங்கள் கேள்விப்பட்டோம். ஆங்கிலக் கால்வாயில் எங்கள் கப்பல் போய்க் கொண்டிருந்தபோது யுத்தமே மூண்டு விட்டது என்ற செய்தி கிடைத்தது. எங்கள் கப்பல் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆங்கிலக் கால்வாய் நெடுக நீர்மூழ்கிக் கப்பல்கள் கடற்கண்ணிகளைப் போட்டிருந்தன. அவற்றில் மோதி விடாமல் கப்பலை ஓட்டிச் செல்லுவது எளிதான காரியமன்று. ஆகவே, சௌதாம்டன் போய்ச் சேர இரண்டு நாட்களாயின.

யுத்தம் ஆகஸ்டு நான்காம் தேதி பிரகடனமாயிற்று. நாங்கள் ஆறாம் தேதி லண்டன் சேர்ந்தோம்.

$$$

38. போரில் என் பங்கு

     பாரிஸிலிருந்து லண்டனுக்குத் திரும்பி வர முடியாமல் கோகலே சிக்கிக்கொண்டார் என்று நான் லண்டன் போய்ச் சேர்ந்ததும் அறிந்தேன். தேக சுகத்தை முன்னிட்டு அவர் பாரிஸுக்குப் போயிருந்தார். பாரிஸுக்கும் லண்டனுக்கும் இடையே எல்லாப் போக்குவரத்துமே துண்டிக்கப்பட்டு விட்டதால் அவர் எப்பொழுது திரும்புவார் என்பதைப் பற்றியும் எதுவும் தெரியவில்லை. அவரைப் பார்க்காமல் இந்தியாவுக்குத் திரும்ப நான் விரும்பவில்லை. ஆனால், அவர் எப்பொழுது வருவார் என்பதையும் யாரும் சொல்ல முடியவில்லை.

இதற்கு மத்தியில் நான் என்ன செய்வது? போர் சம்பந்தமாக என் கடமை என்ன? என்னுடைய சிறைத் தோழரும் சத்தியாக்கிரகியுமான சோராப்ஜி அடாஜணியா, அப்பொழுது வக்கீல் தொழிலுக்காக லண்டனில் படித்துக்கொண்டிருந்தார். அவர் சிறந்த சத்தியாக்கிரகிகளில் ஒருவராகையால், தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பியதும் என் ஸ்தானத்தை வகிப்பதற்காக அவர் வக்கீல் தொழிலுக்குப் படித்து வர இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டிருந்தார். அவருக்கு ஆகும் செலவுக்கு டாக்டர் பிராண ஜீவன்தாஸ் மேத்தா பணம் கொடுத்து வந்தார். அவருடனும் அவர் மூலமும், இங்கிலாந்தில் அப்பொழுது படித்துக் கொண்டிருந்த டாக்டர் ஜீவராஜ மேத்தாவுடனும் மற்றவர்களுடனும் நான் கலந்து பேசினேன். அவர்களுடன் கலந்து ஆலோசித்து, இங்கிலாந்திலும், அயர்லாந்திலும் இருக்கும் இந்தியரின் கூட்டமொன்று கூட்டப்பட்டது. அக்கூட்டத்தின் முன்பு என் கருத்தைத் தெரிவித்தேன்.

இங்கிலாந்தில் வசித்துவரும் இந்தியர், யுத்தத்திற்குத் தங்களாலான உதவியைச் செய்ய  வேண்டும் என்று நான் கருதினேன். ஆங்கில மாணவர்கள் ராணுவத்தில் சேவை செய்யத் தொண்டர்களாக முன்வந்திருக்கிறார்கள். அவ்வளவாவது இந்தியரும் செய்ய வேண்டும். இவ்விதமான என் வாதத்திற்குப் பலவிதமான ஆட்சேபங்கள் எழுந்தன. இந்தியருக்கும் ஆங்கிலேயருக்கும் எவ்வளவோ பேதம் இருக்கிறது என்றார்கள். நாம் அடிமைகளாக இருக்கிறோம். அவர்களோ எஜமானர்கள் என்றார்கள். எஜமானனுக்குத் தேவைப்படும் நேரம் வந்து விடும்போது மாத்திரம் ஓர் அடிமை எஜமானனுடன் எப்படி ஒத்துழைத்து விட முடியும்? எஜமானனுக்கு ஏற்பட்டிருக்கும் அவசியத்தைத் தனக்கு ஒரு வாய்ப்பாக அடிமை பயன்படுத்திக்கொண்டு சுதந்திரமடையப் பார்ப்பது அடிமையின் கடமையல்லவா? இந்த வாதம் நியாயமானதாக அப்பொழுது எனக்குத் தோன்றவில்லை. இந்தியனுக்கும் ஆங்கிலேயனுக்கும் அந்தஸ்தில் இருக்கும் வித்தியாசத்தை நான் அறிவேன். ஆனால், அடிமை நிலைக்கு நாம் கொண்டு வரப்பட்டு விட்டோம் என்பதை நான் நம்பவில்லை. தவறுகளுக்கெல்லாம் தனிப்பட்ட பிரிட்டிஷ் அதிகாரிகள்தான் காரணமே அன்றி  பிரிட்டிஷ் முறை அல்ல என்றும், அவர்களையும் அன்பினால் மாற்றி விடலாம் என்றும் நான் எண்ணினேன். பிரிட்டிஷாரின் ஒத்துழைப்பினாலும் உதவியினாலுமே நமது அந்தஸ்தை நாம் உயர்த்திக் கொள்ளுவதாக இருந்தால், அவர்களுக்குக் கஷ்டம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் அவர்களுக்குப் பக்கத் துணையாக இருந்து அவர்களுடைய தயவைப் பெற வேண்டியது நமது கடமை. பிரிட்டிஷ் முறையே தவறானதாக இருந்தாலும், அது இன்று எனக்குத் தோன்றுவதுபோல, சகிக்க முடியாததாக அப்பொழுது எனக்குத் தோன்றவில்லை. ஆனால், பிரிட்டிஷ் முறையில் எனக்கு நம்பிக்கை இல்லாது போய் விட்டதால் இன்று நான் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுக்கிறேன் என்றால், பிரிட்டிஷ் ஆட்சி முறையில் மாத்திரமே அன்றி அதன் அதிகாரிகளிடமும் நம்பிக்கையை இழந்துவிட்ட அந்த நண்பர்கள் எப்படி ஒத்துழைப்பார்கள்?

இந்தியர் கோரிக்கைகளைக் குறித்துத் தைரியமாகக் கூறுவதற்கும், இந்தியரின் அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளுவதற்கும் ஏற்ற சமயம் அதுதான் என்று என் யோசனையை எதிர்த்த நண்பர்கள் கூறினார்கள். இங்கிலாந்தின் கஷ்டத்தை நமக்கு ஏற்ற வாய்ப்பாக மாற்றிக் கொண்டுவிடக் கூடாது என்று நான் எண்ணினேன். போர் நடந்துகொண்டிருக்கும் வரையில் நமது கோரிக்கைகளை வற்புறுத்தாமலிருப்பதே அதிக யோக்கியமானது, முன்யோசனையோடு கூடியது என்றும் கருதினேன். ஆகையால், நான் கூறிய யோசனையை வலியுறுத்தித் தொண்டர்களாகச் சேர முன்வருகிறவர்களை வருமாறு அழைத்தேன். அநேகர் முன் வந்தார்கள். அப்படி வந்தவர்களில் எல்லா மாகாணத்தினரும், மதத்தினரும் இருந்தனர்.

இந்த விவரங்களை எல்லாம் எடுத்துக் கூறி லார்டு கிரிவேக்குக் கடிதம் எழுதினேன். எங்கள் சேவையை ஏற்றுக்கொள்ளும் முன்பு நாங்கள் வைத்தியப் படை வேலைகளில் பயிற்சி பெறுவது அவசியம் என்றால் அப்பயிற்சியைப் பெறவும் தயாராக இருக்கிறோம் என்று அதில் அறிவித்தேன். கொஞ்சம் தயக்கத்திற்குப் பிறகு லார்டு கிரிவே எங்கள் சேவையை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தார். நெருக்கடியான அந்த நேரத்தில் சாம்ராஜ்யத்திற்கு எங்கள் சேவையை அளித்ததற்காக நன்றியும் தெரிவித்தார்.

காயம்பட்டவர்களுக்கு முதல் வைத்திய உதவி செய்யும் பயிற்சியை  பிரபலமான டாக்டர் காண்ட்லீயின் ஆதரவில் தொண்டர்கள் பெற்றனர். ஆறு வாரக் குறுகிய காலப் பயிற்சியே அது. ஆனால், முதல் உதவி சம்பந்தமான எல்லாமே அதில் கற்றுக் கொடுக்கப்பட்டது.

எங்கள் வகுப்பில் நாங்கள் எண்பது பேர் இருந்தோம். ஆறு வாரங்களில் எங்களுக்குப் பரீட்சை நடந்து ஒருவர் தவிர மற்றெல்லோரும் தேறி விட்டோம். அவர்களுக்கு ராணுவக் கவாத்து முதலிய பயிற்சிகளுக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்தது. இந்த வேலை கர்னல் பேக்கரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அந்த நாட்களில் பார்ப்பதற்கு லண்டன் அற்புதக் காட்சியாக இருந்தது. மக்களிடையே பீதியே இல்லை. ஆனால், தங்களாலியன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்பதில் எல்லோரும் சுறுசுறுப்பாக இருந்தனர். வயது வந்த திடமான ஆண்களெல்லாம், போரில் சிப்பாய்களாகப் பயிற்சி பெறப் போய்விட்டனர். ஆனால், வயோதிகர்களும், பலவீனர்களும், பெண்களும் என்ன செய்வது? அவர்கள் செய்ய விரும்பினால் அவர்களுக்கும் போதுமான வேலைகள் இருந்தன. துணிகளை வெட்டி ஆடைகள் தயாரிப்பது, காயமடைந்தவர்களுக்குக் கட்டுக் கட்டுவது போன்ற வேலைகளில் அவர்கள் ஈடுபட்டார்கள்.

லைஸியம் என்ற பெண்களின் சங்கம், தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆடைகளைச் சிப்பாய்களுக்குத் தைத்துக் கொடுப்பது என்ற வேலையை ஏற்றுக்கொண்டது. இந்தச் சங்கத்தில் ஸ்ரீமதி சரோஜினி நாயுடு ஓர் உறுப்பினர். இவர் அவ்வேலையில் முழு மனத்துடன் ஈடுபட்டிருந்தார். முதன்முதலாக அப்பொழுது தான் அவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. தைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த ஒரு துணிக் குவியலை அவர் என்னிடம் கொடுத்து அவைகளை எல்லாம் தைத்துக் கொண்டு வந்து தம்மிடம் கொடுக்கும்படி சொன்னார். அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டேன். முதல் உதவிக்கு நான் பயிற்சி பெற்று வந்த காலத்தில் நண்பர்களின் உதவியைக் கொண்டு எவ்வளவு ஆடைகளைத் தைக்க முடியுமோ அவ்வளவையும் தைத்துக் கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன்.

$$$

39. ஓர் ஆன்மிகக் குழப்பம்

     மற்ற இந்தியருடன் என் சேவையை யுத்தத்திற்கு அளிக்க முன்வந்திருக்கிறேன் என்ற செய்தி தென்னாப்பிரிக்காவுக்கு எட்டியதும் எனக்குத் தந்திகள் வந்தன. அதில் ஒன்று ஸ்ரீ போலக்கிடமிருந்து வந்தது. எனது கொள்கையான அகிம்சைக்கும் நான் செய்யும் காரியத்திற்கும் எப்படிப் பொருத்தமாகும் என்று அவர் கேட்டிருந்தார்.

இந்த ஆட்சேபத்தை நான் ஓரளவுக்கு எதிர்பார்த்தே இருந்தேன். இப்பிரச்னையைக் குறித்து ‘ஹிந்த் ஸ்வராஜ்’ (இந்திய சுயராஜ்யம்) என்ற நூலில் விவாதித்திருக்கிறேன். அதல்லாமல் தென் ஆப்பிரிக்காவில் நண்பர்களுடனும் இதைக் குறித்து அடிக்கடி விவாதித்து வந்திருக்கிறேன். யுத்தத்தில் இருக்கும் அதர்மத்தை எல்லோருமே ஒப்புக் கொண்டிருக்கிறோம். என்னைத் தாக்கியவரைக் கைது செய்து வழக்குத் தொடர நான் தயாராக இல்லாத போது, போரில் ஈடுபட்டு இருக்கிறவர்களின் லட்சியம் நியாயமானதா, இல்லையா என்பது பற்றி எனக்கு எதுவுமே தெரியாமல் இருக்கும்போது, யுத்தத்தில் ஈடுபடுவதற்கு நான் தயாராக இருப்பதற்கில்லை. என்றாலும் முன்பு போயர் யுத்தத்தில் நான் சேவை செய்திருக்கிறேன் என்பது நண்பர்களுக்குத் தெரியும். ஆயினும், அதன் பிறகு என் கருத்துக்கள் மாறுதலை அடைந்து இருக்கின்றன என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்கள்.

உண்மையில் போயர் யுத்தத்தில் நான் பங்கு கொள்ளும்படி எந்தவிதமான வாதங்கள் என்னைத் தூண்டினவோ அதே விதமான வாதங்களே இச்சமயமும் என்னை இம்முடிவுக்கு வரும்படி செய்தன. யுத்தத்தில் ஈடுபடுவது அகிம்சைக்குக் கொஞ்சமும் பொருத்தமானதல்ல என்பது எனக்குத் தெளிவாகவே தெரிந்திருந்தது. ஆனால், தன்னுடைய கடமை என்ன என்பதை யாரும் தெளிவாக அறிந்து கொண்டுவிட முடிவதில்லை. அதிலும் சத்தியத்தை நாடுகிறவர் அடிக்கடி இருட்டில் தடவிக் கொண்டிருக்க வேண்டியே வருகிறது.

அகிம்சை என்பது விரிவான பொருள்களைக் கொண்டதோர் கொள்கை. நாமெல்லோரும் இம்சையாகிய தீயில் சிக்கிக் கொண்டு உதவியற்றுத் தவிக்கும் மாந்தரேயாவோம். ஓர் உயிரைத் தின்றே மற்றோர் உயிர் வாழ்கிறது என்று சொல்லப்படுவதில் ஆழ்ந்த பொருள் உண்டு. மனிதன், வெளிப்படையாக இம்சையை அறிந்தோ, அறியாமலோ செய்யாமல் ஒரு கணமும் வாழ முடியாது. வாழ்வது என்ற ஒன்றிலேயே, உண்பது, குடிப்பது, நடமாடுவது ஆகியவைகளில், என்ன தான் மிகச் சிறியதாயிருப்பினும் ஏதாவது இம்சை அல்லது உயிரைக் கொல்லுவது அவசியமாக இருந்துதான் தீருகிறது. ஆகையால், அகிம்சை விரதம் கொண்டவர், அந்தத் தருமப்படி உண்மையோடு நடப்பதாயின், அவருடைய ஒவ்வோர் செயலும் கருணையிலிருந்தே எழுவதாக இருக்க வேண்டும். மிக மிகச் சிறிய உயிரையும் கூடக் கொல்லாமல் தம்மால் முடிந்த வரையில் அதை அவர் காப்பாற்ற வேண்டும். இவ்விதம் இம்சையின் மரணப் பிடியிலிருந்து விடுபடவும் இடைவிடாது முயன்று வர வேண்டும், புலனடக்கத்திலும் கருணையிலும் அவர் இடைவிடாது வளர்ந்து கொண்டும் இருப்பார். ஆனாலும், புற இம்சையிலிருந்து மாத்திரம் அவர் என்றுமே பூரணமாக விடுபட்டு விட முடியாது.

மேலும், எல்லா ஜீவராசிகளின் ஒருமைப்பாடே அகிம்சையின் அடிப்படையாகையால், ஒன்றின் தவறு மற்றெல்லாவற்றையும் பாதிக்காமல் இருக்க முடியாது. ஆகவே, மனிதன் இம்சையிலிருந்து முற்றும் விடுபட்டு விட இயலாது. ஒரு சமூகத்தைச் சேர்ந்தவராக ஒருவர் இருந்து கொண்டிருக்கும் வரையில், அச் சமூகத் தொடக்கத்திலிருந்தே ஏற்படுவதான இம்சையில் அவரும் கலந்துகொண்டு விடாமல் இருப்பதற்கில்லை. இரு நாட்டினர் போராடிக் கொண்டிருக்கும்போது, யுத்தத்தை நிறுத்துவதே அகிம்சைவாதியின் பொறுப்பு. அப் பொறுப்பை நிறைவேற்ற இயலாதவர், யுத்தத்தை எதிர்ப்பதற்கான சக்தி இல்லாதவர்; யுத்தத்தை எதிர்ப்பதற்கு வேண்டிய தகுதியை அடையாதவர் இவர்களும் அப்போரில் ஈடுபடக் கூடும். அப்படிப் போரில் ஈடுபட்டாலும் தம்மையும் தம் நாட்டையும் உலகத்தையும் போரிலிருந்து மீட்க முழு மனத்துடன் முயற்சி செய்ய வேண்டும்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மூலமே என் அந்தஸ்தையும், என் நாட்டு மக்களின் அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்ளலாம் என்று நான் நம்பியிருந்தேன். இங்கிலாந்தில் நான் இருந்தபோது பிரிட்டிஷ் கடற்படையின் பாதுகாப்பை நான் அனுபவித்து வந்தேன். பிரிட்டனின் ஆயுத பலத்தின் கீழ் நான் பத்திரமாகவும் இருந்து வந்தேன். நான் இவ்விதம் இருந்ததன் மூலம் அதனுடைய பலாத்கார சக்தியில் நான் நேரடியாகப் பங்குகொண்டு வருகிறேன். ஆகையால், சாம்ராஜ்யத்துடன் எனக்கு இருக்கும் தொடர்பை வைத்துக்கொண்டு அதன் கொடியின் கீழ் வாழ நான் விரும்பினால், நான்கு காரியங்களில் ஏதாவது ஒன்றின்படியே நான் நடக்க வேண்டும். யுத்தத்திற்கு என்னுடைய பகிரங்கமான எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். சத்தியாக்கிரக விதிகளின்படி சாம்ராஜ்யம் அதன் ராணுவக் கொள்கையை மாற்றிக் கொள்ளும்வரை அதைப் பகிஷ்கரித்து விடலாம்; அல்லது மீறுவதற்கு ஏற்றவையான அதன் சட்டங்களை மீறுவதன் மூலம் சட்ட மறுப்பைச் செய்து சிறைப்பட முற்படலாம்; இல்லாவிட்டால், சாம்ராஜ்யத்தின் சார்பில் யுத்தத்தில் ஈடுபட்டு அதன் மூலம் யுத்த பலாத்காரத்தை எதிர்ப்பதற்கு வேண்டிய பலத்தையும் தகுதியையும் பெறலாம். இத்தகைய ஆற்றலும் தகுதியும் எனக்கு இல்லை. ஆகவே, அவற்றை அடைவதற்கு யுத்தத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று எண்ணினேன்.

அகிம்சை நோக்குடன் கவனித்தால், போர்ச் சேவையில் ஈடுபட்டிருக்கிறவர்களில் போர்க்களத்தில் போராடும் சிப்பாய்களுக்கும் மற்றவர்களுக்கும் வேற்றுமையை நான் காணவில்லை. கொள்ளைக்காரர்களுக்கு மூட்டை தூக்கவோ, அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் போது காவல் இருக்கவோ, அவர்கள் காயமடையும்போது அவர்களுக்குப் பணி விடை செய்யவோ ஒப்புக்கொள்ளுகிறவனும், கொள்ளைக்காரர்களைப் போல் கொள்ளைக் குற்றம் செய்தவனேயாவான். அதே போலப் போரில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை செய்வதோடு மாத்திரம் இருந்து விடுகிறவர்களும் போர்க் குற்றத்திலிருந்து விடுபட்டவர்கள் ஆக முடியாது.

போலக்கிடமிருந்து தந்தி வருவதற்கு முன்னாலேயே இந்த வகையில் இதையெல்லாம் குறித்து என்னுள்ளேயே நான் விவாதித்துக் கொண்டேன். அத்தந்தி வந்த பிறகும் இதைக் குறித்துப் பல நண்பர்களுடன் விவாதித்தேன். போரில் சேவை செய்ய முன்வருவது என் கடமை என்ற முடிவுக்கே வந்தேன். பிரிட்டிஷ் உறவுக்குச் சாதகமாக நான் அப்பொழுது கொண்டிருந்த கருத்தைக் கொண்டு கவனிக்கும்போது, அந்த விதமான விவாதப் போக்கில் எந்தத் தவறும் இருப்பதாக இன்றும் நான் கருதவில்லை. அப்பொழுது நான் செய்ததற்காக வருத்தப்படவும் இல்லை.

என் நிலைமை சரியானதே என்பதை என் நண்பர்கள் எல்லோருமே ஒப்புக்கொள்ளும்படி செய்ய என்னால் அப்பொழுதும் முடியவில்லை என்பதை  அறிவேன். இப்பிரச்னை மிகவும் நுட்பமானது. இதில் கருத்து வேற்றுமை இருந்துதான் தீரும். ஆகையால், அகிம்சையில் நம்பிக்கையுள்ளவர்களுக்கும், வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் அதை அனுசரிக்கத் தீவிரமாக முயன்று வருகிறவர்களுக்கும் என்னால் இயன்ற அளவு தெளிவாக என்னுடைய வாதங்களை எடுத்துக் கூறினேன். சத்தியத்தின் பக்தர், சம்பிரதாயம் என்பதற்காக எதையும் செய்துவிட முடியாது. தாம் திருத்தப்படுவதற்கு அவர் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். தாம் செய்தது தவறானது என்பதைக் கண்டுகொள்ளும் போது, என்ன நேருவதாயினும் பொருட்படுத்தாது, அதை ஒப்புக்கொண்டு அதற்குப் பரிகாரம் தேட வேண்டும்.

$$$

40. குட்டிச் சத்தியாக்கிரகம்

     இவ்விதம் கடமை என்று கருதியதனால் போரில் நான் கலந்து கொண்டேன். ஆயினும், அதில் நான் நேரடியாக ஈடுபட முடியாது போயிற்று. அத்தோடு அந்த நெருக்கடியான நிலைமையிலும் கூட ஒரு குட்டிச் சத்தியாக்கிரகம் என்று சொல்லக் கூடியதையும் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது.

எங்கள் பெயர்கள் அங்கீகரிக்கப்பட்டுப் பதிவானவுடன் எங்களுக்குப் பயிற்சியளிப்பதைக் கவனிப்பதற்காக ஓர் அதிகாரியும் நியமிக்கப்பட்டார் என்று நான் முன்பே கூறியிருக்கிறேன். இந்த அதிகாரி, பயிற்சி சம்பந்தமான விஷயங்களில் மட்டுமே எங்களுக்குத் தலைவர் என்றும், மற்ற விஷயங்களிலெல்லாம் அப்படைக்கு நானே தலைவன் என்றும் அதனுடைய உள் கட்டுத் திட்டங்களைப் பொறுத்த வரை எனக்கே நேரடியான பொறுப்பு உண்டு என்றும் நாங்கள் எல்லோரும் எண்ணியிருந்தோம். அதாவது, அந்த அதிகாரி இப்படை விஷயத்தில் என் மூலமே எதையும் செய்ய வேண்டும் என்று கருதினோம். ஆனால், இந்தப் பிரமை இருந்து வர அந்த அதிகாரி ஆரம்பத்திலிருந்தே விட்டுவைக்கவில்லை.

ஸ்ரீ சோராப்ஜி அடாஜணியா மிக்க புத்திக் கூர்மை உள்ளவர். அவர் என்னை எச்சரிக்கை செய்தார்: “அந்த ஆசாமி விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருங்கள். நம் மீது ஆதிக்கம் செலுத்த அவர் விரும்புகிறார் என்று தோன்றுகிறது. அவர் கட்டளையை ஏற்று நடக்க நாங்கள் தயாராயில்லை. நமக்குப் போதிப்பவர் என்று அவரை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார். ஆனால், நமக்குப் போதிப்பதற்கென்று அவர் நியமித்திருக்கும் இளைஞர்கள் கூட, நமக்குத் தாங்கள் எஜமானர்களாக வந்திருப்பதாக எண்ணிக் கொள்ளுகின்றனர்” என்றார்.

அந்த இளைஞர்கள் ஆக்ஸ்போர்டு மாணவர்கள். எங்களுக்குச் சொல்லிக் கொடுக்க வந்திருந்தனர். அந்தத் தலைமை அதிகாரி, அவர்களை எங்கள் படைப்பிரிவின் தலைவர்களாக நியமித்தார்.

தலைமை அதிகாரியின் மிதமிஞ்சிய செய்கைகளை நானும் கவனிக்காமலில்லை. என்றாலும், அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாமென்று சோராப்ஜியிடம் கூறி அவரைச் சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால், அவர் எளிதில் சமாதானமடைந்து விடுகிறவர் அல்ல.

“நீங்கள் எல்லோரையும் நம்பிவிடுகிறீர்கள். இவர்கள் பசப்புப் பேச்சினால் உங்களை ஏமாற்றி விடுவார்கள். ஏமாற்றி விட்டார்கள் என்பது கடைசியாக உங்களுக்குத் தெரியும்போது சத்தியாக்கிரகம் செய்யும்படி எங்களிடம் கூறுவீர்கள். இவ்விதம் நீங்கள் துன்பப்படுவதோடு உங்களோடு சேர்ந்து நாங்கள் எல்லோரும் துன்பப்பட நேரும்” என்று அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.

“நீங்கள் என்னுடன் சேர்ந்துவிட்ட பிறகு துன்பத்தைத் தவிர வேறு எதை எதிர்பார்க்கிறீர்கள்? சத்தியாக்கிரகி ஏமாற்றப்படவே பிறந்திருக்கிறான். இப்பிரதம அதிகாரி நம்மை ஏமாற்றட்டும். ‘ஏய்ப்பவனே முடிவில் ஏமாற்றப்படுகிறான்’ என்று உங்களுக்கு எத்தனையோ முறை நான் சொல்லவில்லையா?” என்றேன்.

சோராப்ஜி உடனே உரக்கச் சிரித்தார். “அப்படியானால் சரி, தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வாருங்கள். என்றாவது ஒரு நாள் நீங்கள் சத்தியாக்கிரகத்திலேயே மரணமடைவீர்கள். அப்பொழுது எங்களைப் போன்ற அப்பாவிகளையும் உங்களுக்குப் பின்னால் இழுத்துக் கொண்டு போவீர்கள்” என்றார்.

இந்தச் சொற்கள், ஒத்துழையாமையைக் குறித்து  குமாரி எமிலி ஹாப்ஹவுஸ் எனக்கு எழுதியதை என் நினைவிற்குக் கொண்டு வருகின்றன. “சத்தியத்திற்காக என்றாவது ஒரு நாள் நீங்கள் தூக்குமேடைக்குப் போக நேர்ந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். கடவுள் உங்களுக்குச் சரியான வழியைக் காட்டிப் பாதுகாப்பாராக” என்று அவர் எழுதினார்.

தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டவுடனேயே எனக்கும் சோராப்ஜிக்கும் இடையே மேற்கண்ட பேச்சு நடந்தது. சில தினங்களுக்கெல்லாம் அவருடன் எங்களுக்கிருந்த சம்பந்தம் துண்டித்துப் போய்விடும் கட்டம் ஏற்பட்டது. பதினான்கு நாள் உண்ணாவிரதத்தில் இழந்த பலத்தை நான் இன்னும் பெற்றுவிடவில்லை. எனினும் கவாத்தில் நான் பங்கெடுத்துக் கொண்டதோடு நான் குடியிருந்த இடத்திலிருந்து அதற்கென குறிப்பிட்டிருந்த இடத்திற்கு இரண்டு மைல் தூரம் நடந்தே போவேன். இதனால் நுரையீரலில் புண் ஏற்பட்டு நான் நோய்வாய்ப்பட்டேன். இந்த நிலைமையில் வாரக் கடைசியில் நடக்கும் முகாம்களுக்கும் போக வேண்டியிருந்தது. மற்றவர்கள் அங்கேயே தங்கிவிடுவார்கள்; நான் மட்டும் வீடு திரும்புவேன். இங்கேதான் சத்தியாக்கிரகத்திற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது.

தலைமை அதிகாரி தம்முடைய அதிகாரத்தைக் கண்டபடி எல்லாம் பிரயோகிக்க ஆரம்பித்தார். ராணுவ சம்பந்தமானது, ராணுவ சம்பந்தமில்லாதது ஆகிய எல்லா விஷயங்களிலும் அவரே எங்களுக்குத் தலைவர் என்று நாங்கள் அறிந்து கொள்ளும்படி அவர் செய்ததோடு, தமது அதிகாரம் எப்படி இருக்கும் என்பதையும் எங்களுக்குக் காட்டத் தொடங்கிவிட்டார். உடனே சோராப்ஜி என்னிடம் வந்தார். அந்த அதிகாரியின் எதேச்சாதிகாரத்திற்கு உடன்பட்டுவிட அவர் கொஞ்சங்கூடத் தயாராயில்லை. அவர் சொன்னதாவது: “எங்களுக்கு வரும் உத்தரவுகள் எல்லாம் உங்கள் மூலமே வர வேண்டும். நாங்கள் இன்னும் பயிற்சி முகாமிலேயே இருக்கிறோம். இப்பொழுதே எங்களுக்கு எல்லாவித அபத்தமான உத்தரவுகள் எல்லாம் இடப்படுகின்றன. நமக்கும், நமக்கு இடையே சொல்லிக் கொடுப்பதற்கென்று நியமிக்கப்பட்டிருக்கும் அந்த இளைஞர்களுக்கும், எரிச்சலை மூட்டும் பாரபட்சமான வேற்றுமைகளெல்லாம் காட்டப்படுகின்றன. இதைக் குறித்து  தலைமை அதிகாரி உடன் பேசி ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். இல்லையானால் எங்களால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது. நம் படையில் சேர்ந்திருக்கும் இந்திய மாணவர்களும் மற்றவர்களும், அபத்தமான உத்தரவுகளுக்கெல்லாம் கீழ்ப்படியப் போவதில்லை. சுயமரியாதையை முன்னிட்டு மேற்கொண்டிருக்கும் ஒரு கடமையில் சுயமரியாதையை இழப்பது என்பதைச் சகித்துக் கொண்டிருக்கவே முடியாது.”

தலைமை அதிகாரியிடம் போனேன். எனக்கு வந்திருக்கும் புகார்களைக் குறித்து அவரிடம் கூறினேன். இப்புகார்களை எழுத்து மூலம் தமக்குத் தெரிவிக்கும்படி அவர் சொன்னார். அதோடு, “இப்பொழுது நியமிக்கப்பட்டிருக்கும் படைப் பகுதித் தலைவர்கள் மூலம் புகார்களைத் தெரிவிக்க வேண்டும். அவர்கள் அவற்றை எனக்கு அறிவிப்பார்கள். இதுதான் புகார்களை அனுப்புவதற்கான சரியான வழி என்பதைப் புகார் கூறுவோர் அறியச் செய்யுங்கள்” என்றும் அவர் எனக்குக் கூறினார்.

இதற்கு நான், “எனக்கு அதிகாரம் எதுவும் இருப்பதாக நான் உரிமை கொண்டாடவில்லை. ராணுவ ரீதியில் மற்றவர்களைப் போலவே நானும். ஆயினும், இத்தொண்டர் படையின் தலைவன் என்ற முறையில் அவர்கள் பிரதிநிதியாக நடந்துகொள்ள உத்தியோகச் சார்பற்ற முறையில் நான் அனுமதிக்கப்படுவேன் என்று நம்பி வந்தேன்” என்று சொன்னேன். என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட குறைகளையும் கோரிக்கைகளையும் எடுத்துக் கூறினேன். படையைச் சேர்ந்தவர்களின் உணர்ச்சியைச் சிறிதும் மதிக்காமலேயே படைப் பகுதித் தலைவர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களை எடுத்துவிட்டு தலைமை அதிகாரியின் அங்கீகாரத்திற்கு உட்பட்டுப் படையினரே படைப்பிரிவுத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும் என்பவையே அந்தக் குறைகளும் கோரிக்கைகளும்.

இது தலைமை அதிகாரிக்குப் பிடிக்கவில்லை. படையினரே படைப் பகுதித் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுவது என்பது எல்லாவித ராணுவக் கட்டுத் திட்டங்களுக்கும் விரோதமானது என்றார். நியமிக்கப்பட்டு விட்டவர்களை நீக்கிவிட வேண்டும் என்று கேட்பது எல்லாக் கட்டுத் திட்டங்களையும் கவிழ்ப்பதாகும் என்றும் சொன்னார்.

எனவே, நாங்கள் ஒரு கூட்டம் போட்டுப் படையிலிருந்து விலகிக்கொண்டு விடுவது என்று தீர்மானித்தோம். சத்தியாக்கிரகத்தினால் ஏற்படக் கூடிய மோசமான விளைவுகளைக் குறித்து எல்லோருக்கும் எடுத்துக் கூறினேன். ஆயினும் மிகப் பெரும் பகுதியினர் தீர்மானத்தை ஆதரித்தார்கள். இதுவரையில் நியமிக்கப்பட்டிருக்கும் கார்ப்பொரல்களை நீக்காவிடில், தங்கள் சொந்த கார்ப்பொரல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள படையினருக்குச் சந்தர்ப்பம் அளிக்காது போனால், இதைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டும் கவாத்துக்களுக்கும், வாரக் கடைசி முகாம்களுக்கும் போகாமல் இருக்கவே நேரும் என்று தீர்மானம் கூறியது.

பிறகு, நான் தலைமை அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதினேன். என் யோசனையை நிராகரித்து அவர் எழுதியது எவ்வளவு பெரிய ஏமாற்றத்தை உண்டாக்கிவிட்டது என்பதை அதில் கூறினேன். அதிகாரம் செலுத்த வேண்டும் என்னும் ஆசை எதுவும் எனக்கு இல்லை என்றும், சேவை செய்ய வேண்டும் என்றே நான் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவருக்கு உறுதி கூறினேன். என் யோசனையைப் போல் முன்னால் நடந்தது ஒன்றையும் அவருக்கு எடுத்துக் காட்டினேன். போயர் யுத்தத்தின் போது தென்னாப்பிரிக்க இந்திய வைத்தியப் படையில் உத்தியோக ஸ்தானம் எதையும் நான் வகிக்காதிருந்தாலும், கர்னல் கால்வேக்கும் படைக்கும் எந்த விதமான தகாராறுமே இருந்ததில்லை என்றும், படையினரின் கருத்தைத் தெரிந்து கொள்ளுவதற்காக என்னைக் கலந்து ஆலோசிக்காமல் அக் கர்னல் எதுவுமே செய்ததில்லை என்றும் குறிப்பிட்டேன். முந்திய நாள் மாலையில் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தின் பிரதி ஒன்றையும் அக்கடிதத்தோடு அனுப்பினேன்.

அந்த அதிகாரியின் விஷயத்தில் இக்கடிதம் எந்த நல்ல பலனையும் உண்டாக்கவில்லை. கூட்டம் போட்டதும், தீர்மானம் செய்ததும் கட்டுத் திட்டங்களை மீறிய பெருங் குற்றங்கள் என்று அவர் கருதினார்.

அதன்பேரில் இந்திய மந்திரிக்கு ஒரு கடிதம் எழுதினேன். எல்லா விவரங்களையும் அவருக்குத் தெரிவித்ததோடு தீர்மானத்தின் பிரதி ஒன்றையும் அனுப்பினேன். அவர் எனக்கு எழுதிய பதிலில், தென்னாப்பிரிக்காவில் நிலைமை வேறு என்று விளக்கியிருந்தார். விதிகளின்படி, படைப்பிரிவுத் தலைவர்கள் தலைமை அதிகாரிகளினாலேயே நியமிக்கப்படுகின்றனர் என்பதை என் கவனத்திற்குக் கொண்டு வந்தார். ஆனால், இப்பிரிவுத் தலைவர்களை இனி நியமிக்கும்போது தலைமை அதிகாரி என் சிபாரிசைக் கவனிப்பார் என்றும் எனக்கு உறுதி கூறினார்.

இதற்குப் பிறகு எங்களுக்கிடையே கடிதப் போக்குவரத்து ஏராளமாக நடந்தது. ஆனால், கசப்பான இக்கதையை நீட்டிக்கொண்டு போக நான் விரும்பவில்லை. இந்தியாவில் தினந்தோறும் நான் அடைந்துவரும் அனுபவத்தை ஒத்ததாகவே அங்கே எனக்கு ஏற்பட்ட அனுபவமும் இருந்தது என்று சொல்லுவதே போதும். மிரட்டல்களினாலும் சாதுர்யத்தினாலும் தலைமை அதிகாரி எங்கள் படையைச் சேர்ந்தவர்களிடையே பிளவை உண்டாக்கி விட்டார். தீர்மானத்திற்குச் சாதகமாக வோட்டு செய்திருந்தவர்களில் சிலர், தலைமை அதிகாரியின் மிரட்டல்களுக்கு அல்லது வற்புறுத்தல்களுக்கு உடன்பட்டுப் போய் தங்கள் வாக்குறுதியையே மீறிவிட்டனர்.

அந்தச் சமயத்தில், எதிர்பாராதவிதமாக காயமடைந்த சிப்பாய்கள் ஏராளமாக நெட்லி வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்குப் பணிவிடை செய்ய எங்கள் படையின் சேவை கோரப்பட்டது. தலைமை அதிகாரியின் வற்புறுத்தலுக்கு உடன்பட்டவர்கள் நெட்லிக்குப் போனார்கள். மற்றவர்கள் போக மறுத்துவிட்டனர். அப்பொழுது நான் படுத்த படுக்கையாக இருந்தேன். என்றாலும், அப்படையைச் சேர்ந்தவர்களுடன் கடிதத் தொடர்பு வைத்துக்கொண்டு இருந்தேன். உதவி இந்திய மந்திரி ஸ்ரீ ராபர்ட்ஸ், அந்த நாட்களில் பன்முறை என்னைப் பார்க்க வந்து எனக்குக் கௌரவம் அளித்தார். மற்றவர்களையும் சேவை செய்யப் போகுமாறு நான் தூண்ட வேண்டும் என்று வற்புறுத்தினார். அவர் ஒரு யோசனையும் கூறினார். நாங்கள் ஒரு தனிப்படையாக இருக்க வேண்டும் என்றும், நெட்லி வைத்தியசாலையில் இப்படை அங்கிருக்கும் தலைமை அதிகாரிக்கு மாத்திரமே பொறுப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றும் சொன்னார். அப்படிச் செய்வதால் சுயமரியாதையை இழப்பதென்பதும் இல்லை. அரசாங்கத்தையும் சமாதானப்படுத்தியதாகும்; ஆஸ்பத்திரிக்கு வரும் காயமடைந்த ஏராளமானவர்களுக்கு உதவியான சேவை செய்வதாகவும் ஆகும் என்பதே அவர் கூறிய யோசனை. இந்த யோசனை எனக்கும் என் தோழர்களுக்கும் பிடித்திருந்தது. இதன் பலனாக நெட்லிக்குப் போகாமல் இருந்து விட்டவர்களும் அங்கே சென்றனர்.

நான் மாத்திரம் போகவில்லை. படுத்த படுக்கையாக இருந்து கொண்டு என்னால் ஆனதைச் செய்துவந்தேன்.

$$$

41. கோகலேயின் தாராளம்

     இங்கிலாந்தில் எனக்கு நுரையீரலுக்குப் பக்கத்தில் ரணமாகி நான் நோயுற்றிருந்ததைக் குறித்து முன்பே கூறியிருக்கிறேன். சில நாட்களுக்கெல்லாம் கோகலே லண்டனுக்குத் திரும்பிவிட்டார். கால்லென்பாக்கும் நானும் தவறாமல் அவரைப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தோம். பெரும்பாலும் யுத்தத்தைக் குறித்தே பேசுவோம். கால்லென்பாக், ஜெர்மனியின் நாட்டு அமைப்பு முழுவதையும் வெகு நன்றாக அறிந்திருந்தாலும் ஐரோப்பாவில் அதிகமாகச் சுற்றுப்பிரயாணம் செய்து இருந்தாலும், யுத்தம் சம்பந்தப்பட்ட பல இடங்களையும் பூகோளப் படத்தில் கோகலேக்குக் காட்டுவது வழக்கம்.

எனக்கு இந்த நோய் வந்த பிறகு இதைக் குறித்துத் தினந்தோறும் பேசுவோம். எனது உணவுப் பரிசோதனைகள் அப்பொழுதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்தன. அப்பொழுது நான் மற்றவைகளுடன் நிலக்கடலை, பழுத்த, பழுக்காத வாழைப்பழங்கள், எலுமிச்சம்பழம், ஆலிவ் எண்ணெய், தக்காளி, திராட்சைப் பழங்கள் ஆகியவைகளையும் சாப்பிட்டு வந்தேன். பால், தானியங்கள், பருப்பு வகைகள் முதலியவைகளை அடியோடு தள்ளிவிட்டேன்.

டாக்டர் ஜீவராஜ மேத்தா எனக்கு வைத்தியம் செய்து வந்தார். பாலும் தானியங்களும் சாப்பிடும்படி என்னை அவர் வற்புறுத்தி வந்தார். ஆனால், அதற்குச் சம்மதிக்கப் பிடிவாதமாக மறுத்து வந்தேன். இவ்விஷயம் கோகலேயின் காதுக்கு எட்டியது. பழ உணவுதான் சிறந்தது என்று நான் கொண்டு இருந்த கொள்கையில் அவருக்கு அவ்வளவாக மதிப்பில்லை. என் தேக நிலைக்குச் சரியானது என்று டாக்டர் என்ன சொல்லுகிறாரோ அதை நான் சாப்பிட வேண்டும் என்றார் கோகலே.

கோகலேயின் வற்புறுத்தலுக்கு நான் இணங்காமல் இருப்பதென்பது எனக்கு அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நான் மறுதலிப்பதை அவர் ஒப்புக்கொள்ளாத போது அவ் விஷயத்தைப் பற்றிச் சிந்திக்க எனக்கு இருபத்து நான்கு மணி நேர அவகாசம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். அன்று மாலை நானும் கால்லென்பாக்கும் வீடு திரும்பிய போது என் கடமை என்ன என்பதைக் குறித்து விவாதித்தோம். என்னுடைய சோதனைகளில் அவரும் என்னுடன் ஈடுபட்டு வந்தார். அதில் அவருக்குப் பிரியமும் இருந்தது. ஆனால், என் தேக நிலைமைக்கு அவசியம் என்றிருந்தால் உணவுச் சோதனையைக் கைவிடுவது அவருக்கும் சம்மதமே என்பதைக் கண்டேன். ஆகவே, என் அந்தராத்மா இடும் ஆணைக்கு ஏற்ப இதில் எனக்கு நானே முடிவு செய்து கொள்ள வேண்டியிருந்தது.

இரவெல்லாம் இந்த விஷயத்தைக் குறித்தே சிந்தித்தேன். உணவுச் சோதனையைக் கைவிடுவது என்றால் அத்துறையில் எனக்குள்ள கருத்துக்களை யெல்லாம் கைவிட வேண்டி வரும். ஆனால், அந்தச் சோதனைகளில் எந்தக் குறைபாடுகளையும் நான் காணவில்லை. இப்பொழுது பிரச்னையெல்லாம், கோகலேயின் அன்பான வற்புறுத்தல்களுக்கு எந்த அளவுக்கு நான் உடன்படுவது; என் தேக நிலையின் நன்மையை முன்னிட்டு என்னுடைய சோதனைகளை எந்த அளவுக்கு மாற்றிக் கொள்ளுவது என்பதே. கடைசியாக இதில் ஒரு முடிவுக்கு வந்தேன். முக்கியமாக ஆன்மிகத்தையே நோக்கமாகக் கொண்டு நான் கைக்கொண்ட உணவுச் சோதனைகளை மட்டும் பின்பற்றி வருவது; வேறு நோக்கம் கொண்டதான உணவுச் சோதனைகளை வைத்தியரின் ஆலோசனையின்படி விட்டு விடுவது என்பதே நான் செய்து கொண்ட முடிவு. பால் சாப்பிடுவதை விட்டதற்கு மிக முக்கியமான நோக்கம் ஆன்மிகமானதேயாகும். பசுக்கள், எருமைகளின் மடிகளிலிருந்து கடைசிச் சொட்டு வரையிலும் பாலைக் கறந்து விடுவதற்கு கல்கத்தாவில் மாட்டுக்காரர்கள் அனுசரித்த கொடிய முறைகள் என் மனக் கண்முன் காட்சியளித்தன. மாமிசம் எவ்விதம் மனிதனின் உணவல்லவோ, அதேபோல மிருகங்களின் பாலும் மனிதனின் உணவாக இருப்பதற்கில்லை என்ற ஓர் எண்ணமும் எனக்கு இருந்துவந்தது. ஆகையால், பால் சாப்பிடுவதில்லை என்ற என் தீர்மானத்தில் உறுதியுடன் இருந்துவருவது என்ற முடிவுடனேயே காலையில் படுக்கையிலிருந்து எழுந்தேன். இது என் மனத்திற்கும் அதிக ஆறுதலாக இருந்தது. கோகலேயிடம் போவதற்கே எனக்குப் பயமாக இருந்தது. ஆனால், என் தீர்மானத்தை அவர் மதிப்பார் என்று நம்பினேன்.

மாலையில் கால்லென்பாக்கும் நானும் நாஷனல் லிபரல் கிளப்புக்குப் போய்க் கோகலேயைப் பார்த்தோம். அவர் கேட்ட முதல் கேள்வி, “டாக்டரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வது என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்டீர்களா?” என்பதே.

மரியாதையோடு, ஆனால் உறுதியோடு, நான் கூறியதாவது: “ஒன்றைத் தவிர மற்றவைகளிலெல்லாம் இணங்கிவிட நான் தயாராக இருக்கிறேன். அந்த ஒன்றைப்பற்றி மாத்திரம் என்னை வற்புறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுகிறேன். பாலையும், பாலிலிருந்து தயாரானவைகளையும், மாமிசத்தையும் மாத்திரம் நான் சாப்பிட மாட்டேன். இவைகளைச் சாப்பிடாததனால் நான் சாக நேருமாயின், அதற்கும் தயாராவது நல்லதே என்று கருதுகிறேன்.”

“இதுவே உங்கள் முடிவான தீர்மானமா?” என்று கோகலே கேட்டார்.

“வேறுவிதமான முடிவுக்கு நான் வருவதற்கில்லை என்றே அஞ்சுகிறேன். என்னுடைய இத்தீர்மானம் தங்களுக்கு மன வருத்தத்தை உண்டாக்கும் என்பதை அறிவேன் அதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன்” என்றேன்.

கொஞ்சம் மனவருத்தத்துடன், ஆனால் மிகுந்த அன்போடும் கோகலே கூறியதாவது: “உங்கள் தீர்மானம் சரி என்று நான் ஒப்புக் கொள்ளுவதற்கில்லை. இதில் ஆன்மிக அவசியம் எதுவும் இருப்பதாகவும் நான் கருதவில்லை. ஆனால், மேற்கொண்டும் நான் உங்களை வற்புறுத்த மாட்டேன்.” இவ்விதம் என்னிடம் கூறிவிட்டு, டாக்டர் ஜீவராஜ மேத்தாவைப் பார்த்து அவர் சொன்னதாவது: “தயவுசெய்து இனி அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள். அவர் தமக்கென வகுத்துக் கொண்டிருக்கும் வரம்புக்கு உட்பட்டு அவருக்கு உணவைப் பற்றிய ஏதாவது யோசனை கூறுங்கள்.”

என் தீர்மானத்தைத் தாம் ஒப்புக் கொள்ளுவதற்கில்லை என்றார், டாக்டர். என்றாலும், அவர் வேறு எதுவும் செய்வதற்கில்லை. பச்சைப் பயற்றுச் சூப்பில் கொஞ்சம் பெருங்காயம் போட்டுச் சாப்பிடும்படி அவர் எனக்கு யோசனை கூறினார். இதற்கு நான் சம்மதித்தேன். இரண்டொரு நாள் அதைச் சாப்பிட்டேன். ஆனால், எனக்கிருந்த வலி அதிகமாயிற்று. அது எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்பதைக் கண்டதும், திரும்பவும் பழங்களையும் கொட்டைகளையும் சாப்பிட ஆரம்பித்தேன். மேலுக்குச் செய்து வந்த சிகிச்சையை டாக்டர் தொடர்ந்து செய்துவந்தார். இதனால், வலி கொஞ்சம் குறைந்தது. ஆனால், என்னுடைய கட்டுப்பாடுகள் இடையூறாக இருந்தன என்று அவர் எண்ணினார். இதற்கிடையில் லண்டனில் அக்டோபர் மாத மூடுபனியைச் சகிக்க முடியாததனால் கோகலே தாய்நாட்டுக்குத் திரும்பினார்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s