சைவம் வளர்த்த தமிழ்

-நெல்லைச் சொக்கர்

பத்திரிகையாளரான நெல்லைச் சொக்கர், சைவநெறியில் தோய்ந்தவர். தமிழைச் செழுமைப்படுத்தியதில் சைவத் திருமுறைகளின் பங்களிப்பை இக்கட்டுரையில் பதிவு செய்கிறார் சொக்கர்...

தமிழில் முதன்முதல் தோத்திர இலக்கியங்களாக எழுந்தவை பன்னிரு திருமுறைகள். அவற்றுக்கு முன்னர் தோத்திரங்கள் இருந்தன எனினும், அவை பெருந்தொகையில் எழுதப்படவுமில்லை; தொகுக்கப்படவுமில்லை. பரிபாடல் போல நெடிய செய்யுளாக இல்லாமல், கலிப்பா வகையினதாக, நான்கடி கொண்டதாக, இனிய, எளிய சொற்களால் இயன்ற அந்த தோத்திர இலக்கியங்கள், தமிழக மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன.

தமிழகத்தில் மட்டுமின்றி, கர்நாடக மாநிலத்திலும் திருமுறைகள் தங்கள் செல்வாக்கினைச் செலுத்தின. அறுபத்துமூவரின் வரலாறுகளை அங்கு சரிதமாகவே பாடும் அளவுக்கு, வீரசைவத்தில் தனது தாக்கத்தைச் செலுத்தும் அளவுக்கு, திருமுறைகளின் செல்வாக்கு வளர்ந்திருந்தது.

சமணர்களும் பௌத்தர்களும், நீதிநுால்கள், காப்பியங்களை தங்கள் மதக் கொள்கைகளை பிரசாரம் செய்யும் நோக்கத்தில் படைத்தனரே அன்றி, எளிய மக்களின் அன்றாட வாழ்வில் இடம் பெறும் அளவுக்கு உள்ளத்தைத் தொடும் உன்னதப் பாக்களை அவர்கள் படைக்கவில்லை.

அந்த இடத்தைத் தான் சைவம் பிடித்துக் கொண்டது; அரசியல் செல்வாக்கு கொண்ட சமணத்தை, மக்கள் செல்வாக்குடன் வீழ்த்தியது. இன்றைய ஆய்வாளர்கள் சொல்வது போல, அன்று சைவத்தை சமணம் அடியோடு அழித்து விடவில்லை. சைவர்களும் அவர்களின் கோயில்களும் அன்றும் இருந்தன. ஆனால் மன்னர்கள் ஆதரவு இல்லாததால், பொலிவிழந்து ஆதிக்கமின்றி இருந்தன என்பதை நாம் உணர முடிகிறது.

மக்கள் கூட்டம் கூட்டமாக ஆணும் பெண்ணுமாய் கோயில்களில் சென்று வழிபட்டதையும், திருவிழாக்கள் நடந்ததையும், பல்வேறு சைவப் பிரிவுகளைச் சேர்ந்த அடியார்கள் தமிழகத்தில் வாழ்ந்ததையும் தேவாரப் பதிகங்களில் சமயக் குரவர்கள் பதிவு செய்துள்ளனர். இன்றைய ஆய்வாளர்கள் கூறுவதைப் போன்று, அன்று சமணம், சைவத்தை முற்றிலுமாக அழிக்கவில்லை; அழிக்க முடியவில்லை.

ஆனால் சமணம் அரசியல் செல்வாக்குப் பெற்றிருந்தது உண்மை. மக்களிடையே வணிகர்கள் போன்ற செல்வாக்கு மிக்க குடிகளிடையே சமணம் நின்று நிலவியிருந்தது. எளிய மக்களிடையே சமணம் கடைப்பிடிக்கப்பட வாய்ப்பில்லை. ஏனெனில் அன்று அதன் துறவு நெறிகளே அதிக அளவில் பிரசாரமாக மேற்கொள்ளப்பட்டதால், சமணத் துறவிகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

சமணம் எந்த இசையை வெறுத்ததோ அந்த இசையை அடிப்படையாகக் கொண்டே சமயக் குரவர்கள் சைவத்தை தமிழகம் எங்கனும் பரப்பத் தொடங்கினர். அதனாலேயே சைவம் எளிய மக்களிடையே கால்கொண்டது எனலாம்.

இசையிலேயே தனித்தமிழ் இலக்கியங்களைப் படைக்கத் தொடங்கினர் சமயக் குரவர்கள், ஞானப்பால் உண்டருளிய காழிப் பிள்ளையார் (ஞானசம்பந்தர்), மாலைமாற்று, ஏகபாதம், திருவெழுகூற்றிருக்கை என இன்றைய சித்திரகவிகளுக்கு அன்றே முத்திரையிட்டு தொடங்கி வைத்தார். திருநாவுக்கரசர் ‘தாண்டகம்’ என்ற செய்யுள் வகையை உருவாக்கினார். அவரது நேரிசை, குறுந்தொகையும் தனித்த இலக்கணம் கொண்டவையே. சுந்தரமூர்த்தியாரின் பாடல்கள் அனைத்தும் உரையாடல் தொனியைக் கொண்டவை என்பதால் அவை நாடகத் தமிழுக்கு இலக்கானதாக இருந்தன.

முதல் ஏழு திருமுறைகளும் (முதல் திருமுறை- ஞானசம்பந்தர் தேவாரம், 2- 6ஆம் திருமுறைகள்- திருநாவுக்கரசர் தேவாரம், ஏழாம் திருமுறை- சுந்தரர் தேவாரம்) அந்தந்த ஆசிரியன்மார்கள் காலத்திலேயே பண் வரிசைப்படி தொகுக்கப்பட்டன என்பது திருமுறை கண்ட புராணத்தில் இருந்து தெரிகிறது. அந்த புராணத்தின் 24ஆம் செய்யுள்:

பந்தமறு சிவனடியார் கொள்க என்னாப்
   பண்டாரந் திறந்து விட்டான்பரிவு கூர்ந்தான்
இந்தவகைப் பெருங் களிகொள் மன்னன்
   தானும் எழில் முறையை முன்போல வகுக்க எண்ணி
மன்னுதமிழ் விரகரெங்கள் காழிவேந்தர்
   வகுத்தருளால் அமைத்த திருமுறை ஓர்மூன்றும்
அன்னவகை வாகீசர் முறை ஓர்மூன்றும்
   ஆரூரர்உரைத்த திருமுறையதொன்றும்
துன்னவகை ஏழாகத் தொகுத்துச் செய்தான்…

என்கிறது. முன்போல வகுக்க எண்ணி எனக் குறிப்பிட்டதால், திருமுறைகள் முதல் ஏழும் அந்தந்த ஆசிரியன்மார்கள் காலத்திலேயே தொகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று யூகித்தலில் தவறில்லை.

நம்பியாண்டார் நம்பி காலத்துக்குப் பின் 11, 12ஆம் திருமுறைகள் தொகுக்கப்பட்டுள்ளன. 8ஆம் திருமுறையான மாணிக்கவாசகரின் திருக்கோவையார், திருவாசகத்தின் அருமையையும் எளிமையையும் போற்றாதார் இல்லை எனலாம். இன்று திருவாசகம் தமிழகத்தையே ஆட்கொண்டிருக்கிறது என்று சொல்வது மிகையில்லை.

திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருஷோத்தமநம்பி, சேதிராயர் ஆகியோர் இயற்றிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு முதலாய பாடல்கள் 9ஆம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

10ஆம் திருமுறையான திருமூலரின் திருமந்திரம், தமிழகத்தில் நிலவும் சித்தாந்த சைவம் மட்டுமின்றி, வேறு சில சைவ உட்பிரிவுகளின் தத்துவக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டது. அவற்றை முதன்முதலாக தமிழில் தந்த இலக்கியம் என்றும் சொல்லலாம்.

11ஆம் திருமுறை பல்வேறு வகையான செய்யுள் வகைகளைக் கொண்ட இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டது. தேவார மூவர் காலத்திற்கும் முந்தைய தோத்திர இலக்கியமான காரைக்காலம்மையாரின் திருவாலங்காட்டு திருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி ஆகிய பாடல்கள் உள்ளன. திரு ஆலவாயுடையார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீர தேவ நாயனார், கல்லாட தேவ நாயனார், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், இளம்பெருமான் அடிகள், அதிராவடிகள், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி ஆகியோரின் பாடல்களும் இந்தத் திருமுறையில் அடங்கியுள்ளன.

12ஆம் திருமுறையான பெரிய புராணம் தமிழகத்தின் மிகப் பெரிய காப்பியம் மட்டுமின்றி வரலாற்றுச் சான்றும் கூட. அதில் குறிப்பிடப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில்தான் தமிழக வரலாற்றுச் சம்பவங்களின் காலங்கள் கணிக்கப்பட்டுள்ளன எனும்போது பெரிய புராணம் தமிழ் இலக்கியத்திற்கு தந்த பங்களிப்பு சாதாரணமானதல்ல என்று புலப்படுகிறது. அமங்கலச் சொற்களே பயிலாமல் ஒரு காப்பியத்தை இயற்ற முடியும் என்பதற்கு பெரிய புராணம் சான்று.

பன்னிரு திருமுறைகளும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அளித்த பங்களிப்பு அபரிமிதமானது. அவற்றில் இருந்தே பக்தி இலக்கியங்கள் தோன்றுகின்றன; அடுத்தடுத்த கட்டங்களை எட்டி நடையிட்டு கீர்த்தனை வரையில் வளர்கின்றன.

சந்தக் கவிக்கு வித்திட்டவர் ஞானசம்பந்தப் பிள்ளையார் என்றால் அதை தமது திருப்புகழ் பாக்களால் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர் அருணகிரிப் பெருமான். திருவாசகத்தைப் போன்று, குட்டித் திருவாசகம் எனப்படும் வரதுங்க ராம பாண்டியர் இயற்றிய திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி, தாயுமானவரின் பாடல்கள், அதன் தொடர்ச்சியாக வந்த குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள் இவை அனைத்தும் அன்னைத் தமிழுக்குக் கிடைத்த அணிகளல்லவா?

பெரியபுராணத்தைப் போன்று, 20ஆம் நுாற்றாண்டில் சேய்த்தொண்டர் புராணம் எழுந்தது. தேவாரத் திருப்பதி்கங்களைப் போன்று வள்ளல் ராமலிங்கப் பெருமான் எண்ணற்ற பாடல்களைப் பாடினார். அவரைப் போன்று பாம்பன் சுவாமிகளும் பல்லாயிரக்கணக்கான பாடல்களால் முருகப் பெருமானைத் துதித்துள்ளார். பத்துப் பத்தாக பதி்கங்கள் படைக்கும் முறை இன்றும் நிலவி வருகிறது என்றால், தேவாரத் திருப்பதிகங்களின் செல்வாக்கினை அளவிட்டு உணர முடியுமா?

பன்னிரு திருமுறைகளும் தமிழுக்கு அளித்த கொடை அளப்பரியவை. வாழ்நாளில் ஒருமுறையேனும் அவற்றை நாம் ஓதியுணர வேண்டும். ஓதியுணர்ந்தால், சைவத் தமிழ்க் கடல் என்னும் அமுதத்தை மாந்தி அமரராவோம். இது முக்காலும் உண்மை.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s