பகவத் கீதை- பதினைந்தாம் அத்தியாயம்

-மகாகவி பாரதி

அநாதியான இந்த பிரபஞ்சம் இயற்கையின் பேருரு. இங்கு வாழும் அனைத்தும் ஆன்மாவின் பேருரு. இவ்விரண்டும் தானாக நிற்பவன் கடவுள். அவனே புருஷோத்தமன். இந்தப் பேருண்மையை அறிந்தவனே என்னை அறிந்தவன் என்கிறான் இந்த அத்தியாயத்தில், பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் பரந்தாமனின் அவதாரமான பார்த்தசாரதி…

பதினைந்தாம் அத்தியாயம்: புருஷோத்தம யோகம்

பிரகிருதி, ஆத்மா இவ்விரண்டையும் தன் வசப்படுத்திக் கொண்டு நிற்கும் கடவுள் எவ்விதத்திலும் இவைகளைவிட மேலானவர். ஆகையால் புருஷோத்தமனென்று பெயர் பெற்றிருக்கிறார். அரசம் வித்து முளையாகவும் கன்றாகவும் பிறகு பெரிய மரமாகவும் மாறி வானளாவி யிருப்பதுபோல் பிரகிருதியும் ஆத்மாவுடன் சேர்ந்து மகத்து, அகங்காரம், இந்திரியங்கள், ஐந்து பூதங்கள் என்பனவாக மாறிப் பிறகு தேவ மனுஷ்ய யக்ஷ ராக்ஷதாதி ரூபங்களுடன் எங்கும் பரவியிருக்கின்றது. இந்த பிரகிருதியாகிய மரத்தை  பற்றில்லாமை என்ற கோடரியால் முதலில் வெட்டி முறிக்க வேண்டும். பிறகு அயர்வு நீங்கும் பொருட்டு கடவுளை சரணம் புகுந்து யோகத்திலிறங்க வேண்டும். சம்சாரி, முக்தன் என்று ஆத்மாக்கள் இரண்டு வகைப் பட்டவர்கள்; கடவுளோ இவ்விரண்டு வித ஆத்மாக்களைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டவர். அவரே உலகத்தில் மறைந்து நின்று உலகத்தைத் தாங்கி நிற்பவர்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்:

1. *1 அவ்யக்தம் மேலே வேர்களும் கீழே கிளைகளுமுடையதோர் அரச மரத்தைப் போன்றது என்பர், அதன் இலைகளே வேதங்கள்; அதை அறிவோனே வேதமறிவோன்.

2. அதன் கிளைகள் குணங்களால் ஓங்கி விஷயத் தளிர்களுடன் கீழும் மேலும் பரந்து கிடக்கின்றன. அதன் வேர்கள் கீழ் நோக்கிப் பல்கி மனித உலகத்தில் கர்மத் தொடுப்புகளாகின்றன.

3. ஆதலால் இவ்வுலகத்தில் இதற்கு வடிவங் காணப்படுவதில்லை; முடிவும், ஆதியும், நிலைக்களனும் புலப்படுவதில்லை. நான்கு ஊன்றிய வேருடைய இந்த அரச மரத்தைப் பற்றின்மையென்னும் வலிய வாளால் வெட்டியெறிந்துவிட்டு,

4. அப்பால் ஒருவன் புகுந்தோர் மீள்வதற்ற பதவியைப் பெறலாம். (அப் பதமுடையோனாகிய) எவனிடமிருந்து ஆதித் தொழில் பொழிவுற்றதோ, அந்த ஆதி புருஷனைச் சார்ந்து நிற்கிறான்.

5. செருக்கும் மயக்கமு மற்றோர், சார்புக் குற்றங்களையெல்லாம் வென்றோர், ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிற்போர், விருப்பங்களினின்றும் நீங்கியோர், சுக துக்கக் குறிப்புக்களையுடைய இரட்டைகளினின்றும் விடுபட்டோர், மடமையற்றோர் – இன்னோர் அந்த நாசமற்ற பதத்தை எய்துகின்றனர்.

6. அதற்கு சூரியனும் சந்திரனும் தீயும் ஒளியேற்றுவதில்லை. எதனை யெய்தினோர் மீள்வதில்லையோ அதுவே என் பரமபதம்.

7. எனது அம்சமே ஜீவலோகத்தில் என்றுமுள்ள ஜீவனாகி, இயற்கையிலுள்ளனவாகிய மனதுட்பட்ட ஆறு இந்திரியங்களையும் கவர்கிறது.

8. கந்தங்களைக் காற்று தோய்வினால் பற்றிச் செல்வது போல் ஈசுவரன் யாதேனுமோருடலை எய்துங் காலத்தும் விடுங்காலத்தும், இந்த இந்திரியங்களைப் பற்றிச் செல்லுகிறான்.

9. கேட்டல், காண்டல், தீண்டுதல், சுவை, மோப்பு, மனம் – இவற்றில் நிலைகொண்டு ஜீவன் விஷயங்களைத் தொடர்ந்து நடக்கிறான்.

10. அவன் புறப்படுகையிலும், நிற்கையிலும், உண்ணுகையிலும், குணங்களைச் சார்ந்திருக்கையிலும், அவனை மூடர் காண்பதில்லை. ஞான விழியுடையோர் காண்கின்றனர்.

11. முயற்சியுடைய யோகிகள் இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர். முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் சமைக்காத அஞ்ஞானிகள் இவனைக் காண்கிலர்.

12. சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும், சந்திரனிடத்துள்ளதும், தீயிலுள்ளதும் – அவ்வொளி யெல்லாம் என்னுடையதே யென்றுணர்.

13. நான் பூமியினுட் புகுந்து உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்; ரச வடிவமுள்ள சோமமாகிப் பூண்டுகளையெல்லாம் வளர்க்கிறேன்.

14. நானே *2 வைசுவாநரனாய், உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன். பிராணன், அபானன் என்ற வாயுக்களுடன் கூட நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்.

15. எல்லாருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன். நிலைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் – என்னிடமிருந்து பிறக்கின்றன. எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் யான்; வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேதமுணர்ந்தோன் யானே.

16. உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர், *3 அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையும் குறிக்கும்; கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

17. இவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன். அவன் மூன்று உலகுகளினுட் புகுந்து அவற்றைத் தரிக்கிற கேடற்ற ஈசுவரன்.

18. நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும் வேதங்களாலும் புருஷோத்தமனென்று கூறப்படுகிறேன்.

19. மடமை தீர்ந்தவனாய், எவன் யானே புருஷோத்தமனென்பதை அறிவானோ, அவனே எல்லா மறிந்தோன். அவன் என்னை எல்லாத் தன்மையாலும் வழிபடுகிறான்.

20. குற்றமற்றோய்! இங்ஙனம் மிகவும் ரகசியமான இந்த சாஸ்திரத்தை உனக்கு உரைத்தேன். பாரதா! இதையுணர்ந்தோன் புத்திமானாவான்; அவனே செய்யத் தக்கது செய்தான்.

அடிக் குறிப்புகள்:

*1. அவ்யக்தம் = ஜகத்தின் தெளிவுபடாத உள்நிலை

*2. வைசுவாநரன் = எல்லா நரரிடத்துமுள்ள கடவுள்

*3. க்ஷரம் = அழிவது; அக்ஷரம் = அழியாதது; கூடஸ்தன் = சிகரத்திலுள்ளோன், மாறுதலற்றோன்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s