-ச.சண்முகநாதன்
சனாதனத்தை ஒழிப்போம் என்று, அர்த்தம் புரியாமல் தமிழகத்தில் சிலர் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், சனாதனம் என்பதன் உட்பொருளை வாழ்ந்து காட்டியவன் ஸ்ரீராமன். இதோ கம்பன் காட்டும் ராமகாதை...

சாதீய ஏற்றத்தாழ்வு கொண்டது சனாதன தர்மம் (இந்து மதம்) என்றும், அடித்தட்டு மக்களை செருப்பு கூட போடவிடாமல் அடக்கி வைத்தததற்குக் காரணம் வர்ணம் (நான்கு வர்ணங்கள் என்ற இந்து மத தத்துவம்) மட்டுமே என்றும், நாக்கூசாமல் பொய் பேசி, சினிமா படம் எடுத்து, தமிழகத்தில் சனாதனம் மேல் கருப்பு வர்ணம் பூசிக்கொண்டிருக்கிறது ஒரு கும்பல்.
அடக்குமுறை எந்த ரூபத்தில் இருந்தாலும் அது மனிதகுலத்தின் அசிங்கம்; ஒழித்துக்கட்டப்பட வேண்டிய விஷயம். ஆனால் பழியை சனாதன தர்மத்தில் மேல் போட்டுவிட்டு மதமாற்றத்தில் ஈடுபடும் கேவலமான பிறவிகளை என்னவென்று சொல்வது!
சில யுகங்களுக்கு முன்பு:
மீனவனான குகன், ராமன் கானகத்தில் குடிகொண்டிருக்கிறான் என்று தெரிந்துகொண்டு அன்புடன் ராமனைக் காண வருகிறான். குகனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறான் கம்பன்…
“துடியன், நாயினன், தோற் செருப்பு ஆர்த்த பேர்- அடியன், அல் செறிந்தன்ன நிறத்தினான்”
“துடி என்ற பறையை உடையவனும், வேட்டை நாய்களைக் கொண்டவனும், தோலாலாகிய செருப்பு அணிந்தவனும், கருப்பு நிற மேனியும் கொண்டவன் குகன்” என்று குகனை அறிமுகப்படுத்தி வைக்கிறான் கம்பன்.
“தோற் செருப்பு ஆர்த்த பேர் அடியன்” – கவனிக்க வேண்டிய வரிகள்.
“இன்றும் எங்களை செருப்பு போடவிடாமல் தடுத்தது சனாதன தர்மம்” என்று நீலிக்கண்ணீர் வடிப்பவர்களிடம் சொல்ல வேண்டிய முக்கியமான செய்தி இது. ராமனைப் பார்க்க வந்த பொழுது தோல் செருப்பு அணிந்து ஆஜானுபாகுவாக வந்து நிற்கிறான் குகன்.
நல்லவேளை, கம்பன் இந்த வரிகளை எழுதினான்.
“ஊற்றமே மிக ஊனொடு மீன் நுகர் நாற்றம் மேய நகை இல் முகத்தினான்”
-மீன் போன்ற அசைவ உணவை சாப்பிட்டதால் மேனி எங்கும் அதன் நாற்றம் கொண்டவன். சிரிப்பென்றால் என்னவென்றே தெரியாதவன்.
இப்பேர்ப்பட்ட மனிதன் ராமன் மீது அன்பு கொண்டு அவனைப் பார்க்க வேண்டும் என்று வந்திருக்கிறான்.
ராமன் அவனைப் பார்த்து ‘இருத்தி ஈண்டு’ – உட்கார் நண்பனே என்று குகனை தன்னருகில் உட்காரச் சொல்கிறான்.
ராமனுக்கு அருகில் வந்து “உனக்காக தேனும் மீனும் கொண்டு வந்திருக்கிறேன். சாப்பிடு” என்கிறான் குகன்.
“தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத் திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திரு உளம்?”
குகனின் அன்பினால் மனம் குளிர்ந்த ராமன் “என்மீது அன்பு வைத்து நீ கொண்டு வந்த உணவு எந்த வகையானாலும் அமிர்தம் தானே?” என்று அன்பு மொழி பேசுகிறான்.
“அரிய, தாம் உவப்ப, உள்ளத்து அன்பினால் அமைந்த காதல் தெரிதரக் கொணர்ந்த என்றால், அமிழ்தினும் சீர்த்த அன்றே?”
“உள்ளத்தில் காதலோடு எதைக் கொடுத்தாலும் அது அமிழ்தம் தானே! ஆனால் நான் என் தந்தை சொல்லியபடி தவ வேடம் பூண்டிருக்கிறேன். அதன் பொருட்டு சில dietary restrictions இருக்கிறது” என்று அன்போடும் பரிவோடும் மறுமொழி சொல்கிறான் ராமன்.
பின்னர் சில உதவிகளை குகனிடம் வேண்டிப் பெறுகிறான்.
பிறப்பில் எதுவும் ஏற்றத்தாழ்வில்லை என்று செய்து காட்டியவன் ராமன்.
$$$