-தஞ்சை வெ.கோபாலன்

பாகம்-2 : பகுதி- 18
தனிநபர் சத்தியக்கிரகம்
தனிநபர் சத்தியாக்கிரகத்தைத் தொடங்க காந்திஜி சத்தியாக்கிரகிகளை தானே தேர்ந்தெடுத்தார் என்பதையும், முதல் சத்தியாக்கிரகியாக வினோபாஜியைத் தேர்ந்தெடுத்தார் என்பதையும் பார்த்தோமல்லவா? யார் இந்த வினோபா என்று முதலில் சிறிது பார்க்கலாம்.
சுருக்கச் சொல்வதானால் மகாத்மா காந்தியை முழுமையாகப் புரிந்து கொண்டவர் வினோபாஜி என்று காந்தியே சொன்னார் என்றால் மற்றவற்றைச் சொல்லவா வேண்டும்?
மகாத்மாவினுடைய அகிம்சைக் கொள்கை என்பதும் ‘காந்தியம்’ என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் கொள்கையும் ஒன்றே. ‘பூதான இயக்கம்’ என்ற ஒன்றைத் தொடங்கி மிகையாக நிலம் வைத்திருப்போரிடமிருந்து சிறிது நிலத்தை வாங்கி நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகள் போன்றவர்களிடம் பகிர்ந்து அளிக்கும் திட்டத்தை அமல்படுத்தி அதற்காக நாடு முழுவதும் நடந்தே பயணம் செய்தவர் வினோபா பாவே.
வினோபா, மராட்டிய மாநிலம், கொலாபா மாவட்டம், ககோடா கிராமத்தில் 11-9-1895-இல் பிறந்தவர். இயற்பெயர் விநாயக். கல்லுரியில் படிக்கையில் நாட்டு நிலைமையைக் கவனித்த அவர் கவலையுற்று துறவறம் மேற்கொள்ள காசிக்குச் சென்றார். அங்கு காந்தியின் சொற்பொழிவொன்றைக் கேட்ட பின்னர் சாமியார் ஆவதைத் தவிர்த்து காந்தியின் சீடர் ஆனார். வார்தா ஆசிரமத்தில் தொடங்கி பின்னர் அந்த ஆசிரமத்தின் நிர்வாகப் பொறுப்பை எற்றுக் கொள்ளும் அளவு உயர்ந்தார். 1938-இல் இவரே பெளனார் எனும் ஊரில் ‘பரந்தாம ஆசிரமம்’ எனும் பெயரில் ஒன்றைத் தொடங்கினார். 1925இல் வைக்கம் சத்தியாக்கிரக மேற்பார்வையாளராக காந்தியால் அனுப்பப்பட்டார். அதன் பின்னர்தான் 1940-இல் தனிநபர் சத்தியாக்கிரகத்துக்கு காந்திஜியால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1942-இல் ‘வெள்ளையனே இந்தியாவை விட்டு வெளியேறு’ (Quit India) இயக்கத்தில் ஈடுபட்டு வேலூர் போன்ற சில சிறைகளில் இருந்திருக்கிறார். சிறையில் கைதிகளுக்கு பகவத் கீதை வகுப்புகள் எடுத்திருக்கிறார். சிறையில் இவர் தென் இந்திய மொழிகளைப் பயின்றார். சுதந்திரத்துக்குப் பின்னரும் சர்வோதய சமாஜம், பூதான இயக்கம் இவற்றை முனைந்து செயல்படுத்தினார். அப்படிப்பட்டவர் காந்திஜியால் தனிநபர் சத்தியாக்கிரகத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் வியப்பொன்றும் இல்லை அல்லவா?
அவரைப் பற்றி மகாத்மா காந்தியே தனது பத்திரிகையில் அறிமுகம் செய்து வைத்தார். குறிப்பிட்ட பிரச்னைகளை முன்வைத்து காந்திஜியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட இடத்தில் சத்தியாக்கிரகம் செய்வார். அதன்படி வினோபாஜி யுத்த எதிர்ப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கைதானார். இவருக்கு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவருக்கு அடுத்ததாக ஜவஹர்லால் நேருவை காந்திஜி தனிநபர் சத்தியாக்கிரகத்துக்குத் தேர்ந்தெடுத்தார். அவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது. நேருவுக்குப் பிறகு படேல், அவருக்குப் பிறகு இந்தியா முழுவதிலுமிருந்து ஆயிரக் கணக்கானோர் காந்திஜியின் அனுமதி பெற்று சத்தியாக்கிரகம் செய்து சிறைபுகுந்தனர். அபுல் கலாம் ஆசாத் 1940 டிசம்பர் 30-ஆம் தேதி சத்தியாக்கிரகம் செய்து 18 மாத சிறைத்தண்டனை பெற்றார்.
1941-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் கவி ரவீந்திரநாத் தாகூர் காலமானார். யுத்தகளத்தில் ஜெர்மனி வெற்றியைக் குவித்துக் கொண்டிருந்தது. ஐரோப்பா கண்டம் முழுவதும் ஹிட்லரின் கைப்பிடிக்குள் வந்துவிட்டது. இத்தாலியின் பாசிஸ்ட் கட்சி அதிபர் முசோலினி ஆப்பிரிக்க கண்டத்தினுள் புகுந்த வடக்குப் பகுதி நாடுகளைக் கபளீகரம் செய்துவிட்டது. கிழக்காசியாவில் ஜப்பான் எந்த நேரத்திலும் யுத்தத்தினுள் புக ஆயத்த நிலையில் இருந்தது.
ஜெர்மனியின் வெற்றி படிப்படியாகக் கிடைத்துக் கொண்டிருந்த நிலையில் 1941, ஜூன் மாதத்தில் ஜெர்மனி ரஷ்யாவின் மீது படையெடுத்துச் சென்றது. அதுவரை ரஷ்யா ஜெர்மனியோடு ஒரு யுத்தமில்லா அமைதி ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டிருந்தது. ரஷ்யா எதைச் செய்தாலும் ‘ஆமாம்’ சாமி போடும் இந்திய கம்யூனிஸ்டுகளும் இந்த யுத்தத்தை ஏகாதிபத்திய யுத்தம் என்று பறைசாற்றிக் கொண்டிருந்தனர். எந்த நேரத்தில் ஜெர்மனி ரஷ்யா மீது படையெடுத்துச் சென்று தாக்கத் தொடங்கியதோ அப்போது நமது இந்திய கம்யூனிஸ்டுகள் தாங்கள் பாடிவந்த ராகத்தை மாற்றி, யுத்தத்துக்கு “மக்கள் யுத்தம்” என்று செல்லப் பெயரிட்டு அழைக்கலாயினர். ரஷ்யாவின் எதிரியான ஜெர்மனி பிரிட்டனுக்கும் எதிரி என்பதால், ரஷ்யாவுடன் ஜெர்மனியை எதிர்க்கும் பிரிட்டனுக்கு கம்யூனிஸ்டுகள் யுத்த ஆதரவு பிரசாரம் செய்யத் தொடங்கினர்.
1941-ஆம் ஆண்டின் இறுதிவரை சுமார் 23,000-க்கும் மேற்பட்ட தனி நபர்கள் சத்தியாக்கிரகம் செய்து சிறைசென்றிருந்தனர். அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிரிட்டிஷ் சர்க்கார் தாங்கள் சிறைபிடித்திருந்த எல்லா சத்தியாக்கிரகிகளையும் விடுதலை செய்யப்போவதாக அறிவித்தது. தொடர்ந்து அத்தனை சத்தியாக்கிரகிகளும் விடுதலையாகினர்.
அப்போது உலக யுத்த களத்தில் ஒரு பரபரப்பான திருப்பம் நிகழ்ந்தது. அதுவரை போரில் ஈடுபடாமல் இருந்த ஆசிய நாடான ஜப்பான் திடீரென்று 1941, டிசம்பர் 7-ஆம் தேதி அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை துறைமுகமான பெர்ல் துறைமுகத்தில் குண்டுவீசித் தாக்கி பெரியண்ணன் அமெரிக்காவையும் யுத்த களத்திற்குள் இழுத்து வந்துவிட்டது.
முதல் உலகப் போரின் போது ஐரோப்பிய நாடுகள் அனைத்துக்கும் யுத்த ஆயுதங்களை விற்று கொழுத்த பணக்கார நாடாக ஆன அமெரிக்கா இந்த யுத்தத்திலும் அதே சாமர்த்தியத்தைக் கடைபிடிக்க முயன்றபோதும், ஜப்பான் அமெரிக்காவை வளைக்குள் புகுந்து இழுத்து வந்து சண்டைக் களத்தில் நிறுத்தி விட்டது. ‘சபாஷ் சரியான போட்டி’ என்று உலகம் பார்த்து பயத்துடன் வியந்து போனது.
ஜப்பானின் ராணுவம் ஜெனரல் டோஜோ என்பார் தலைமையில் சீனாவின் ஷாங்காய் துறைமுகத்தையும், தாய்லாந்தையும் கைப்பற்றி ஜீரணித்துவிட்டு மலாயா (மலேயா) நாட்டினுள் காலடி எடுத்து வைத்தது. ஜப்பான் படைகள் வந்த வேகத்தில் ‘ரிப்பல்ஸ்’, ‘பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்’ என்ற பெயருடைய இரண்டு கப்பல்களை மூழ்கடித்துவிட்டது. மலாய் தீபகற்பத்திலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து சிங்கப்பூர், பர்மா என்று ஜப்பான் படைகள் நுழைந்துவிட்டால் அடுத்தது இந்தியாதான். அதற்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், இந்திய தேசிய ராணுவம் ஒன்றை உருவாக்கி இந்தியாவுக்கு சுதந்திர அரசு ஒன்றை பிரகடனப்படுத்தி விட்டு இந்திய தாயகம் விடுதலையாகும் நாளுக்காக காத்துக் கொண்டிருக்கலாயிற்று.
1939-இல் தொடங்கிய இரண்டாம் உலக யுத்தம் கடுமையான நிலைமையை அடையத் தொடங்கியது. உலக நாடுகள் இரு பிரிவாகப் பிரிந்து ‘நேச நாடுகள்’ என்றும், ஹிட்லர், முசோலினி தலைமையில் ‘அச்சு நாடுகள்’ என்றும் நின்று போர் புரிந்தன.
இதில் ஜப்பானும் சேர்ந்து கொண்டு எட்ட நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டும், சண்டை போடுபவர்களுக்கு ஆயுதங்களை விற்று பெரும் பணக்கார நாடாக ஆன அமெரிக்காவை யுத்தத்தில் இழுத்துவிட்டு விட்டது. இப்போது எல்லா நாடுகளைப் போலவே யுத்தம் என்பது என்ன அதன் விளைவுகள் என்ன என்பதை அமெரிக்கா தானே நேரடியாகக் காணத் தொடங்கியது.
ஹிட்லரின் படையெடுப்பை ‘மின்னல் வேகத் தாக்குதல்’ என பெயரிட்டு அழைத்தனர். அதே வழியில் ஜப்பானியர்களும் எறும்புக் கூட்டம் போல விமானங்களும், படைவீரர்களும் கூட்டம் கூட்டமாக எதிர்களின் மேல் விழுந்து வெற்றியைத் தொடர்ந்து பெற்று வந்தார்கள். இப்படி உலக நாடுகள் ஒரு பக்கம் யுத்தத்திலும், இந்திய அரசு பிரிட்டன் செய்யும் போரில் உதவிக் கொண்டும், இந்திய மக்கள் தங்கள் சுதந்திரத்தை எண்ணி போராட்டங்களையும் நடத்தி வந்தார்கள்.
இப்படியே கேட்டுக் கொண்டிருந்தால் நகரமாட்டார்கள் என்று 1942 ,ஆகஸ்ட் 7, 8 ஆகிய தேதிகளில் பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். அந்தத் தீர்மானம் தான் ‘வெள்ளையனே இந்தியாவை விட்டு வெளியேறு’ என்பது. ஆங்கிலத்தில் “Quit India” அப்படியென்றால் இந்தியாவைவிட்டு வெளியேறு எனும் கோஷம் எழும்பியது.
அந்த விவரங்களை இதன் அடுத்த பகுதியில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
$$$
2 thoughts on “ஸ்வதந்திர கர்ஜனை- 2(18)”