-இசைக்கவி ரமணன்
‘வாழும் பாரதி’ திரு. இசைக்கவி ரமணன் தனது முகநூலில் எழுதும் ‘மார்கழிப் பனித்துளி’ இசைக் கவிதைகளை இங்கே மீள்பதிவு செய்கிறோம். இங்கே உள்ளவை இரு கவிதைகள்....

.
4.
கயிலை வெண்பா அந்தாதி
உள்ளே மனம்கசியும்; ஊறி வரும் கண்ணீர்
மெள்ள விழியரும்பி மீறிவிழும் – கள்ளேஎன்
கண்ணுக்குக் கண்ணே! கயிலைவாழ் கற்கண்டே!
எண்ணவொன்றும் இல்லை இனி. 1
.
இனிக்கும் தமிழில் ஜனிக்கும் கவிதை
உனக்கும் பிடிக்கும் உணர்ந்தேன் – பனிக்குள்
இருக்கும் கனல்நீ! கனலுள் புனல்நீ!
இருப்பேன் உனக்கே உனக்கு. 2
.
உனக்கொன்று சொல்லவா? உன்னைப்போல் உற்றோன்
எனக்கென்றும் யாருமில்லை எங்கும் – எனக்கென்றே
வெண்மலை விட்டென்றன் வீடுவந்த செம்பொன்னே!
கண்வலையில் வீழ்ந்தேன் கணத்து. 3
.
கணத்தில் பிணக்கைக் களைந்தாய்; மனத்துக்
கணக்கை முடித்தாய் நகைத்தாய் – அணுக்கம்
கொடுத்தாய் கரத்தில் எடுத்தாய் சிரித்தாய்
தடுத்தாய் பிறவித் தடம். 4
.
தடம்புரண்ட நெஞ்சம் திடம்கொண்ட தான(து)
இடம்கவர்ந்த அன்னையின் இச்சை! விடம்நிலைத்த
நீலக் கழுத்தும் நீள்சடையும் கண்டேனே
ஞாலத்தில் நற்பகலில் நான்! 5
.
நான்கண்டேன் உன்னை நமசிவாய! நீகண்டாய்!
தேன்கொண்ட நெஞ்சம் திமிராச்சு! வான்கண்டு
வாயைப் பிளந்தகதை வார்த்தையில் நேருமோ
நோயைப் பிளந்தாய் நுழைந்து. 6
.
நுழைந்தாய், பிறகே அழைத்தேன், உயிர்க்குள்
குழைந்தாய், பிறகே குளிர்ந்தேன் – தழைத்தாய்
பிறகே தணிந்தேன், பிறைசூடி நின்றாய்
பிறகே திறந்தேன் விழி. 7
.
விழிதிறந் துன்னைநான் வீதியில் கண்டேன்
விழிமூடி வெட்ட வெளியில் – பழிதீர்ந்தேன்
பாடும் மொழிதீர்ந்தேன், பாதம் தலைவைத்துச்
சூடும் வழியொன்று சொல். 8
.
சொல்லில் பொருளாவாய் சொல்லா அருளாவாய்
அல்லில் நிலவாவாய் அத்தனே! கல்லில்
கருணைக் கசிவாய், கவியில் விசைப்பாய்
இருப்பாய் இருக்கின்றேன் இங்கு. 9
.
இங்கும்நீ அங்கும்நீ எங்கும்நீ, என்னுயிரில்
பங்கும்நீ, அப்பங்கின் பாங்கும்நீ! அங்கைத்தீ
சற்றுமசை யாமல் சபையினில் ஆடுகின்றாய்
உற்றுப்பார்த் தேன்நகைத்தாய் உள். 10
.
$$$
5.
அகமுக அனுபவம்
அழைத்தால் வருவான் ஆண்டவன் என்றும்,
.அகத்தில் சிரிப்பான் அத்தன் என்றும்,
பிழைக்கும் வழியைப் பேச்சினில் சொல்வான்;
.பின்னும் முன்னும் பிரியா திருப்பான்!
உழவன் வியர்வைத் துளியில் தகிப்பான்!
.உணர்ந்தோர் உயிரின் முனையில் சுகிப்பான்!
விழையும் விதமே விரிவான் என்றெலாம்
.கேட்டுக் கிளர்ந்தேன், கிட்டா தயர்ந்தேன்! 1
.
நம்பிச் சோர்ந்து, நம்பி எழுந்து,
.நம்பிச் சோர்வதே நாளிர வாக,
நம்வாழ் விலிவை நடக்கா தென்றே,
.நம்வே லையினைப் பார்ப்போ மென்றே,
சும்மா ஒருநாள் கதவைத் திறந்தால்
.சுந்தரக் கண்ணன் புன்னகை மயமாய்
ஒன்றும் சொல்லா தொசிந்தெனைப் பார்த்தான்
.உயிர்போய் வந்துயிர் போய்வந் துயிர்போய்! 2
.
நம்பி ஒன்றும் நடப்பது இல்லை;
.நம்பிக் கிடத்தலே நடக்கும் அனுபவம்!
அம்மவோ! ஓர் ஆயச் சிறுவன்
.அண்டமும் பிண்டமும் ஆள்வதைப் பாருமின்!
அம்பலத் தேயவன் அறியா ரகசியம்
.அந்தரங் கத்தில் அவனே அனுபவம்!
எம்பெரு மானை எதேச்சையாய்க் கண்டேன்,
.எனைவிண் டிருந்தேன் எய்தினேன், தீர்ந்தேன்! 3
.
$$$