-மகாகவி பாரதி
சூதாட்டம் உச்சத்தை எட்டிவிட்டது. நாட்டையும் செல்வங்களையும் சகோதரர்களையும் சூதில் இழந்த தருமன், இறுதியாக தன்னையே பணயம் வைக்கிறான்... தோற்கிறான். “இவன் தன்னை மறந்தவ னாதலால் - தன்னைத் தான் பணயமென வைத்தனன்” என்கிறார் மகாகவி பாரதி, தருமனின் கையறு நிலை கண்டு.

இரண்டாம் பாகம்
2.1. அடிமைச் சருக்கம்
2.1.11. தருமன் தன்னைத்தானே பணயம் வைத்திழத்தல்
மன்னவர், தம்மை மறந்துபோய், – வெறி
வாய்ந்த திருடரை யொத்தனர். – அங்கு
சின்னச் சகுனி சிரிப்புடன் – இன்னும்
‘செப்புக பந்தயம்வே’றென்றான். – இவன்
தன்னை மறந்தவ னாதலால் – தன்னைத்
தான் பணயமென வைத்தனன் – பின்பு
முன்னைக் கதையன்றி வேறுண்டோ? – அந்த
மோசச் சகுனி கெலித்தனன். 34
$$$